Loading

அத்தியாயம் 18

கதிரவன் மெல்ல மெல்ல மேகக்கூட்டங்களை விலக்கிக் கொண்டு தன் ஒளிக்கதிர்களால் உலகத்தை மெல்ல மெல்ல இருளிலிருந்து வெளியே கொண்டு வரும் காலை நேரம்…

மக்காச்சோளங்கள் விளைந்து காய்ந்து அறுவடைக்கு வந்தாயிற்று. தன் புது மெஷினை சாமி கும்பிட்டு தன் தோட்டத்திற்கு எடுத்து வந்தான் வெற்றி. குவித்து வைத்திருந்த காய்ந்த மக்காச்சோளங்களை மெஷினில் போட்டு அரைத்து முடித்து களைப்பாய் அமர்ந்து விட்டான் வெற்றி. பின்னே மூன்று ஏக்கர் மக்காச்சோளங்களை அரைப்பதென்றால் சுலபமா?. ஏதோ சொந்த மெஷின் என்பதால் பரவாயில்லை. இல்லை அடுத்தவர் என்றால் அவர்கள் படுத்தும் அவசரத்திற்கு மூச்சு விடக் கூட நேரமில்லாமல் மக்காச்சோளங்களை மெஷினின் வேகத்திற்கேற்ப அள்ளி அள்ளி மெஷினில் போட வேண்டும்.

இப்போதெல்லாம் மதிக்கு விவசாயத்தின் மீது அவன் கொண்டுள்ள பாசத்தையும் அவன் அறிவையும் கண்டவளுக்கு வெற்றியின் மீது மரியாதை கூடியது என்றே சொல்லலாம். அவனிடம் எதற்கெடுத்தாலும் மல்லுக்கு நிற்பதில்லை. அவன் இல்லாத நேரம் அவள் அத்தையுடன் ஐக்கியாமகிக் கொள்வாள். அவருக்கும் மதியின் பேச்சும் குறும்பும் பிடித்துப் போனதில் இருவரும் நண்பர்கள் போல் பழக ஆரம்பித்து விட்டனர்.

முகம் தலை என உடம்பு முழுக்க மக்காச்சோளம் அரைத்ததில் தூசி ஒட்டியிருக்க முகத்தில் சோர்வு மேலோங்க மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க வியர்வை வடிய மரத்தடி நிழலில் கண்மூடி அமர்ந்திருந்தான்.

கனிமொழியுடன் நீர் மோர் கொண்டு வந்ததை எடுத்து வந்து “வெற்றி இந்தா இதைக் குடி” என்று எடுத்து வந்துக் கொடுத்தாள்.

அவள் அழைப்பில் விழி திறந்தவன் எதிரில் நிற்பவளைப் பார்த்து சோர்வையும் மீறி சின்னச் சிரிப்பை உதிர்த்து அவளிடம் மோரை வாங்கி விட்டு “என்னடி இப்போல்லாம் அக்மார்க் கிராமத்துக்காரி மாதிரி சேலையை அள்ளி சொருகிட்டு அலையுற?. பார்க்கவே செமயா இருக்க போ” என்றான் குறும்பாகக் கண்ணடித்து.

அவன் சொன்ன பிறகே கீழே குனிந்து தன்னை ஆராய்ந்தாள். கனிமொழிக்கு உதவியதால் தூக்கி சொருகிய சேலையில் அவள் பாலிடை தெரிய நின்று கொண்டிருந்தாள். “ம்ம்” என்று அவனை முறைத்து விட்டு அமர்ந்து கொண்டாள்.

“இந்தத் தமிழு பய எப்போ சோளம் அரைக்கப் போறானோ?. அவனுக்கு மெஷின் கிடைக்கலனா நம்ம மெஷின் அனுப்பி வை வெற்றி” என்றார் சிவகுரு.

“அப்பா நானா போய் அவன்கிட்ட கேட்க மாட்டேன். அவன் உங்க கிட்ட கேட்டானா மெஷின் மட்டும் அனுப்பி வைங்க. நான் போக மாட்டேன். அவனைப் பத்தி என் கிட்ட எதுவும் கேட்காதிங்க” என்று கோவமாக எழுந்து சென்று விட்டான்.

சிவத்திற்கும் கனிமொழிக்கும் சங்கடமாகி விட்டது. ‘அவனும் என்ன தான் செய்வான்?. தாங்கள் சொன்னதற்காக எவ்வளவோப் பொறுத்துப் போய் விட்டான். எதையும் யோசிக்காமல் தாம் தூம் என்று குதித்தால் என்ன செய்வது அவனை?’ என்று ஒருபுறம் தமிழை நினைத்துக் கவலையாக இருந்தாலும் மறுபுறம் கோவமாக வந்தது.

அவர்களை உரையாடலைக் கேட்ட மதிக்கு ‘எவன்டா அது தமிழு?. நம்மக் காட்டானையே கடுப்பாக்குறானா பார்த்தே ஆகனுமே?. குழலிக்கிட்ட விசாரிப்போம்’ என்று நினைத்துக் கொண்டாள்.

அதன்பிறகு அரைத்த சோளங்களைக் காய வைத்து விட்டு வீட்டிற்குச் சென்றனர்.

இதுவரை தன் வாழ்க்கையில் அடுத்து என்ன என்பதைச் சிறிதும் யோசிக்காதவன் முதன் முறை குழலி தன் வாழ்வில் வந்தால்?… என்று யோசிக்க ஆரம்பித்தான். அவள் துடுக்கான பேச்சிலும் குறும்பிலும் அவன் மனதைக் கொள்ளை கொண்டு விட்டாள். இவன் தான் அனைத்தும் மறந்து அவள் நினைவில் வாடிக் கொண்டிருந்தான். அவள் கல்லூரி செல்லும் பேருந்து நிறுத்தத்தில் தோட்டத்தில் என்று அவள் இருக்கும் இடமெல்லாம் தினமும் ஒரு முறையேனும் பார்க்கச் சொல்லி மனம் கூக்குரலிட்டது.

முதலில் சாதாரணமாக இருந்த குழலி போகப்போக ‘இந்த சிடுமூஞ்சி மாம்ஸ் என்ன அடிக்கடி நம்ம பக்கம் கிராஸ் பண்ற மாதிரி இருக்கே?. தற்செயலா நடக்குதா? இல்லை இவன் செயலால் நடக்குதா?’ என்று முதல்முறை அவளின் பார்வை அவன் மேல் வித்தியாசமாக படர்ந்தது. யார் சொல்வதையும் கேட்க மாட்டேன் என்ற திமிர் பார்வை, முறுக்கி விட்ட அடர்த்தியான மீசை, சிறுவயதில் இருந்து வேலை செய்து முறுக்கேறிய உடல், கூர்ப்பார்வை, அழுத்தமான உதடுகள் என்று அவனை அளந்தவள் ‘ பெரிய இவன்னு மனசுல நினைப்பு. சண்டியர் மாதிரி நிக்குறதைப் பாரு. உன்னலாம் அடக்க ஒருத்தி வருவா. அவ கிட்ட வாலை சுருட்டிக்கிட்டு இருக்கப் போற பாரு’ என்று மனதிற்குள்ளே கல்லூரிப் பேருந்து கிளம்பும் வரை அவனை வசைபாடினாள்.

மக்காச்சோளம் மற்றும் வெங்காயம் அறுவடை நடந்து முடிந்து விட்டது. ஆனால் அதைப் போடுவதற்கு சந்தை தான் கிடைக்கவில்லை. இங்கு இல்லை என்றால் என்ன தமிழ்நாட்டில் மற்ற சந்தைகள் இருக்கிறது என்று சிறிது அசால்டாக இருந்தவனுக்கு இங்கிருந்து தமிழ்நாட்டில் உள்ள மொத்த வியாபாரிகளும் கூட்டு தான் என்பது தெரிந்தது. முதலிலே விலைபேசி வைத்துக் கொண்டு குறைந்த விலைக்கு வாங்கிப் பதுக்கி வைக்கும் கூட்டம் என்று தாமதமாகத் தெரிந்தது. சரி இங்கு இல்லை என்றால் என்ன வேறு மாநிலங்களுக்கு அனுப்பலாம் என்று முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பித்தான். ஏனென்றால் சோளம் கூட பரவாயில்லை வெங்காயத்தை அதற்கேற்ற சரியான வசதிகள் இல்லாமல் அதிக நாள் வைத்திருக்க முடியாது. வெப்பத்தில் வெந்து அழுகிப் போய் விடும்.

அன்று இரவு அறையில் மாற்றி மாற்றி டென்ஷனாக யாருக்கோ பேசிக்கொண்டே இருந்தான் வெற்றி.

அவன் பேசி முடிக்கும் வரை அமைதியாக இருந்தவள் அவன் அழைப்பை துண்டித்து விட்டு யோசனையுடன் அறையில் இருந்த சேரில் அமர்ந்திருப்பதைப் பார்த்து விட்டு “என்னாச்சு வெற்றி. என்ன பிரச்சனை?. மூனு நாளாக எங்க போற எப்போ வீட்டுக்கு வர்ற, சாப்பிடுறியா இல்லையா? எதுவுமே தெரியல. என்ன தான் பிரச்சனை?” என்றாள் மதி.

“தமிழ்நாட்டுல எந்த இடத்துலயும் விற்க முடியாம பண்றாங்கடி. எல்லா வியாபாரிகளும் கூட்டு தான் போல. அதான் ஆந்திராவுக்கு அனுப்பலானு அங்க இருக்குற ஒரு வியாபாரிக் கிட்ட கேட்டேன். அவங்களும் சரினு சொல்றாங்க. ஆனால் ரேட் ரொம்ப கம்மியா கேட்குறாங்க. இங்கிருந்து டிரான்ஸ்போர்ட் செலவும் நம்மளே பாத்துக்கனுமா. எல்லா செலவும் போக கைக்கு வர்றது கூலி குடுக்க கூட வராதுடி. சே” என்று‌ தலையைப் பிடித்து அமர்ந்து விட்டான்.

“இந்த இம்போர்ட் எக்ஸ்போர்ட்னு வார்த்தை எல்லாம் கேள்வி பட்டுருக்கியா காட்டான்” என்றாள்.

“ஹான்” என்று முழித்தான்.

அவன் முழிப்பதைப் பார்த்து “ஏன்டா காட்டான்.. நீ நிஜமாவே காலேஜ் போய் படிச்சியா இல்லை எருமைமாடு மேய்ச்சியா?” என்றாள் நக்கலாக.

“ஏய் இந்த டா போட்டு திமிறா பேசிட்டு இருந்த இருக்குற கோவத்துல பல்லத் தட்டிடுவேன்டி”.

“ஆமா நீ பல்லைக் தட்டந்தண்டிக்கும் நான் பல்லக் காட்டிட்டு இருக்கேன் உன்கிட்ட. அவன் கிட்டே எகிறாம இங்கே என்கிட்ட வந்து குதிக்குற. படிக்காத அவனுக்கே அவ்வளவு மூளை வேலை செய்யும் போது படிச்ச உனக்கு ஏன் வேலை செய்ய மாட்டேங்குது. அதுவும் கூட இத்தனை பேர் உதவிக்கு வச்சிக்கிட்டு அவனை எதிர்த்துப் போராட முடியல. சும்மா தான் காட்டான் மாதிரி மீசைய முறுக்கி விட்டு கிட்டு அலைய வேண்டியது” என்றாள் திமிராக.

“உனக்கு கொழுப்பு கூடி போச்சுடி அல்லிராணி. இப்போ என்ன தான்டி பண்ணனுங்குற?”.

” FIEO னு ஒரு ஆர்கனிஷேசன் இருக்கு. உனக்குத் தெரியுமா?”.

அவன் இல்லை என்று தலையாட்டினான்.

அவள் அவனுக்கு விளக்க ஆரம்பித்தாள். “FIEO(Federation of Indian Export Organisations) அமைப்பு ஏற்றுமதி இறக்குமதி தொழில் ஆரம்பிக்குறவங்களுக்கு கிளாஸ் எடுக்குறாங்க. காய்கறி, பழங்கள் அப்புறம் மசாலாப் பொருட்கள்னு ஏற்றுமதி பண்ற தொழில்ல நல்ல லாபம் கிடைக்கும். விவசாயிக்கிட்ட இருந்து கம்மியா வாங்கி காய்கறியெல்லாம் அதிக விலைக்கு இந்த மாதிரி தான் விற்குறாங்க. எப்படி ஆரம்பிக்கனும் என்னென்ன பண்ணனும் என்னென்ன லைசன்ஸ் வாங்கனும்னு அவங்களே சொல்லித் தருவாங்க. அதற்காக அரசே நிதி உதவி லோன் மாதிரி தர்றாங்க” என்று முடித்தாள்.

“அதெல்லாம் சரி தான்டி. அதுக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம்?”.

“இதுக்கு தான் காலேஜ்ல எருமை மாடு மேய்ச்சியானு கேட்டேன்” என்று முறைத்து விட்டு “நம்ம ஏன் நாம் விளைவிச்சதை மத்தவன் விலை நிர்ணயம் பண்ற மாதிரி வைக்கனும். நம்ம பொருளுக்கு நாமளே விலை நிர்ணயம் பண்ணலாம். நம்ம நாட்டு மக்கள் இப்போ உலக நாடுகள்ல எல்லா இடத்துலயும் இருக்காங்க. அதுனால வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி பண்ணலாம்”.

“நம்ம நாட்டுல இருக்குறவங்களுக்கு இல்லாம இப்படி வெளிநாட்டுக்கு விக்குறது தப்பில்லையா?”.

“எப்பா நல்லவனே நம்ம நாட்டுத் தேவைக்குப் போக மீதத்தை நாமளே ஏற்றுமதி பண்ணலாம் வெளிநாடுகளுக்கு. உனக்குத் தெரிந்த விவசாயிங்க கிட்ட இருந்து காய்கறிகள் வாங்கி எக்ஸ்போர்ட் பண்ணலாம். நாம ஒரு எக்ஸ்போர்ட் கம்பெனி ஆரம்பிக்கலாம் எப்படி?” என்று அவன் முகம் நோக்கினாள்.

“எல்லாம் சரி தான். ஆனால் நாம அதை எடுத்து பண்ண முடியுமா?” என்றான் எங்கு தெரியாத காரியத்தில் இறங்கி தான் மட்டுமல்லாமல் தன்னை நம்பியவர்களும் கஷ்டப்படுவார்களோ என்று.

“எம்எஸ்சி படிச்சிட்டு நீயே பயந்தா மத்தவங்கலாம் எப்படி இதை பண்ணுவாங்க?” என்றாள் புருவம் உயர்த்தி.

அவள் கொடுத்த தைரியத்தில் “ம் நான் முயற்சி பண்றேன். தேங்கஸ் அல்லிராணி” என்று புன்னகைத்தான்.

“ம்ம் பரவாயில்லை. நீ அதுக்கான ஏற்பாட்டை பண்ற வரைக்கும் இப்போ விளைஞ்சதெல்லாம் நீ கஷ்டப்பட்டு வித்து தான் ஆகனும். பிரச்சனை பண்றவங்களுக்கு முடிவு கட்ட நான் அப்பா கிட்ட ஏதாவது உதவி கேட்க முடிதானு பார்க்குறேன்”.

“ம் சரி” என்று தலையாட்டினான். மனதில் பல குழப்பங்கள் இருந்தாலும் தன் தாரத்தின் மீதும் நம்பிக்கை இருந்ததால் அதற்கான அடுத்த கட்ட ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.

ஒருத்தன் இவனுக்கு இத்தனை பிரச்சனையைக் கொடுத்துட்டு லவ் மோடுல சுத்திட்டு இருக்கான். நடந்த பிரச்சனையும் கூட அவனுக்கு அப்போதைக்கு ஞாபகமும் இல்லை அந்த அளவு அவன் நினைவை குழலி ஆக்கிரமித்திருந்தாள்.

அன்று ஞாயிற்றுக் கிழமை, தன் தந்தைக்கு சாப்பாடுக் கொடுத்து விட்டு கூடையைத் தூக்கிக் கொண்டு வீட்டிற்கு நடந்து கொண்டிருந்தாள்.  சுற்றி சோளக்காடுகளும் சேனைகளும் மிளகாய்த் தோட்டமும் பச்சைப் பசேல் என இருந்தாலும் கதிரவனின் வெப்பத்தின் தாக்கத்தால் அனல் செருப்புக்கு மேலே கால் வரை தகித்தது. அதனால் வெயில் அதிகமாக இருந்ததால் வழியில் இருந்த மஞ்சனத்தி மரத்து நிழலில் சிறிது நேரம் நின்றாள். ‘ஷப்பா என்ன வெயில்.. நம்ம என்ர்ஜியெல்லாம் ஸ்ட்ரா போட்டு உறிஞ்சுடுவாரு போல இந்த சூரிய பகவான்’ என்று தாவணி நுனியை எடுத்து முகத்தைத் துடைத்துக் கொண்டிருந்தாள்.

அவளை அங்குப் பார்த்த தமிழ் எவ்வளவு நாள் தான் மனசுக்குள்ளயே வச்சுட்டு இருக்குறது. இவ கிட்ட பேசிடலாம் என்று அவளை நோக்கி நடை போட்டான். அவன் வருவதைப் பார்த்த அவள் அங்கிருந்து நகர ஆரம்பித்தாள்.

தன்னால் தான் கிளம்புகிறாள் என்றுணர்ந்தவன், “ஏ புள்ள பூவு நில்லு” என்றான் தயக்கமாக.

‘என்னாது பூவா!. இந்த மாதிரி யாரும் நம்மளைக் கூப்டதில்லையே?. அதுவும் புலி பம்முது பாயுறதுக்கோ?’ என்று மனதில் நினைத்துக் கொண்டு “என்னை எதுக்கு கூப்புடேக” என்றாள் துடுக்காக.

அவளின் துடுக்குத்தனத்தில் அவன் குணம் தலைதூக்க “ஏன்? எதுக்குன்னு சொன்னா தான் நிப்பேகளோ?. நானும் மாமன் முறை தான் உனக்கு” என்றான்.

“அதுக்கு என்ன பண்ணனுமுங்கேக. சொல்ல வேண்டியதை சொல்லுங்க எனக்கு டைமாச்சு கிளம்பனும்”.

“ம் என்னை கல்யாணம் பண்ணிக்கோ” என்றான் பட்டென்று.

“என்னாது!” என்று கண்கள் வெளியே வந்து குதித்து விடும் அளவிற்கு முழித்தாள்.

“உன்னை எப்போ எப்படி எதுக்கு புடுச்சதுனுலாம் தெரியலை. ஆனால் உன்னைக் கல்யாணம் பண்ணிக் கிட்டா வாழ்க்கை நல்லா இருக்கும்னு நினைக்கிறேன். இந்த கிரீட்டிங் கார்டு வாங்கி முட்டி போட்டு பூக் கொடுத்து காதலைச் சொல்லலாம் எனக்குத் தெரியாது. உனக்கு புடிச்சதுனா புடிச்சுருக்குனு சொல்லு. இல்லயா புடிக்கலனு பட்டுனு சொல்லிடு” என்று தன் காதலை சொல்லி விட்டு அவள் பதிலுக்காக காத்திருந்தான்.

அவள் இன்னமும் திருதிருவென முழித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து “என்ன படிக்காதவன். இவன் எப்படி நம்மள வச்சுப் பாத்துப்பானு நினைக்கிறியா?. உங்க வீட்ல இருந்ததை விட நூறு மடங்கு நான் உன்னை சந்தோஷமா வச்சுருப்பேன். நீ உடனே சொல்லனும்னு இல்லை. யோசிச்சு சொல்லு” என்று விட்டு தன் மனதில் உள்ள பாரத்தை இறக்கி வைத்த திருப்தியில் அங்கிருந்து சென்றுவிட்டான்.

அவள் தான் ‘என்ன திடுதிடுப்புனு வந்தான். லவ்வை சொன்னான். அவன் பாட்டுக்கு போயிட்டான். இவனுக்குலாம் லவ் வருமா?. எனக்கும் இவனுக்கும் ஆகவே ஆகாதே எப்படி என் மேல லவ்?’ என்று பலவாறு யோசித்துக் கொண்டே எப்படியோ வீடு வந்து சேர்ந்து விட்டாள்.

தொடரும்..

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
12
+1
1
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments

    1. Poovu aadu vandhu wanted ah thalaiya kudukkudhu vutradha ama tamizh ah vetri kuda prb ellam solve panni sethu vakka idhu dha better choice enna podu pora madhi super

    2. கதை மாந்தர்கள் மனதை கொள்ளை கொண்டு விட்டனர். மனதிற்கு பிடித்தமான குடும்பக் கதை. நகைச்சுவையும், அழுத்தமும் கொண்ட சிறப்பான எழுத்து நடை. மேலும் படைப்புகளை தொடர வாழ்த்துகள்.