அத்தியாயம் 10
காலையில் இருந்து தன் கடமையை செய்து கொண்டிருந்த கதிரவனுக்கு ஓய்வு கொடுத்து ஆழியெனும் மெத்தையில் உறங்க வைத்து விட்டு நிலவுமகள் நட்சத்திரங்கள் புடைசூழ ஆகாய அரியணையில் அமர்ந்து தன் ஆட்சியை ஆரம்பித்த இரவு நேரம்.
காலையில் இருந்து சடங்கு சம்பிரதாயங்கள் என செய்து மாப்பிள்ளை பொண்ணு இருவரும் டயர்டாகி ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர். இரவு நல்ல நேரம் ஆரம்பித்தவுடன் மதியைக் கிளப்பி வெற்றியின் அறைக்கு அனுப்பி வைத்தனர்.
மல்லிகை மலர்களும் ரோஜா இதழ்களும் கட்டிலை அலங்கரிக்க பொருத்தி வைத்திருந்த ஊதுபத்தியின் ஜவ்வாது வாசனை நாசியைத் துளைக்க மனதை மயக்கும் படி இருந்தது. ஆனால் கட்டிலில் அமர்ந்திருந்தவனுக்கோ அதிலெல்லாம் மனம் லயிக்கவில்லை. ‘நடந்து முடிந்த தன் திருமணத்திலும் இதற்கு பின் தன் வாழ்க்கை எப்படிப் போகும்’ என்றவாறு யோசனையில் இருந்தான்.
வெளியே கேட்ட சலசலப்பில் கதவை நோக்கி திரும்பியவன் அங்கே அன்ன மயிலென கையில் பால் செம்புடன் வந்து நின்றவளைக் கண்டு ஆவென பார்த்து ‘அல்லிராணி இம்புட்டு அழகா!. சேலை கட்டுனா கொஞ்சம் அடக்கமாத் தான் தெரியுறா’ என்று நினைத்துக் கொண்டிருக்கையிலே கதவைத் தாளிட்டு விட்டு வெடுக்கு வெடுக்கென நடந்து வந்து பால் சொம்பை பால் வெளியில் தெறிக்கும் அளவிற்கு பட்டென டேபிளில் வைத்து விட்டு கட்டிலில் அமர்ந்து கொண்டாள்.
அவள் செயலில் ‘இப்ப இங்க என்ன நடந்தது?’ என்று நினைத்து விட்டு “ஏன்டி உனக்கு இந்த அச்சம் மடம் நாணம் அந்த மாதிரிலாம் இருக்குறது தெரியுமா தெரியாதா?” என்றான்.
” தெரிஞ்சு” என்று புருவம் சுருக்கி விட்டு “இல்லை தெரிஞ்சு என்ன பண்ணனும்?. அப்படியே தலையைக் குனிஞ்சுக் கிட்டே வந்து என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க மாமான்னு உன் காலுல விழனுமாடா காட்டான். அதெல்லாம் என்னால பண்ண முடியாது. நான் இப்படி தான். ஏதோ வாழ்க்கை குடுக்குறவன் மாதிரி கல்யாணம் பண்ணேல அனுபவி” என்றாள்.
” ஆமா உன்னை மாதிரி அல்லிராணிக்கு வாழ்க்கை குடுக்கனும்னு காத்துக் கிடந்தேன் பாரு நானு. உங்கிட்ட வெட்கத்தையெல்லாம் எதிர்பார்க்குறது தப்பு தான். எல்லாம் என் தலையெழுத்து” என்று அவன் புலம்பிக் கொண்டிருக்கையிலே ” காலையில் இருந்து சடங்கு சம்பிரதாயம் அது இதுனு செஞ்சு ஒரே டயர்டு. எனக்குத் தூக்கம் வருது. அதுனால நான் தூங்கப் போறேன். நீ கீழே படுக்கனும்னாலும் ஒன்னும் பிரச்சனை இல்லை. கீழே பாய் இருந்தா விரிச்சு படு. அப்புறம் இன்னொரு விஷயம் தாலி கட்டிட்டோம்னு உரிமையில் கை கால் ஏதாவது மேல பட்டுச்சு” என்று எச்சரித்து விட்டு “எனக்கு கராத்தேலாம் தெரியும். அப்புறம் புருஷனுக்கூட பார்க்க மாட்டேன் பாத்துக்க” என்று கைநீட்டி எச்சரித்தாள்.
” ஓஓ கை கால் பட்டா என்னடி பண்ணுவ?” என்று அவளை நெருங்கினான்.
” இங்க பாரு வெற்றி. இப்டிலாம் பக்கத்துல வராத. தள்ளிப்போ” என்றாள்.
“போகலனா?” என்று புருவம் உயர்த்தி விட்டு அவளை நெருங்கி “என்ன சொன்னேங்க மேடம்?” என்றான்.
அவ்வளவு தான் இவ்வளவு நேரம் தைரியமாக வாயடித்துக் கொண்டிருந்தவள் அமைதியின் சொரூபமாக மாறி மூச்சடைத்து நின்று விட்டாள். மிக நெருக்கத்தில் அவன் முகம், முறுக்கி விட்ட மீசை, அனல் தெறிக்கும் மூச்சுக்காற்று முகத்தில் பட அவன் குரல், குறும்பு ததும்பும் விழிகள், குறுநகை புரியும் உதடுகள் என அவனையே ரசித்துக் கொண்டிருந்ததில் அவன் கேள்வி செவியை அடையவில்லை.
இரு விழிகளும் மௌனமொழி பேசியது. அவனோ அவள் விழி வழியே அவள் இதயத்தை முற்றுகையிட்டு தன் நேசத்தை உட்புகுத்தும் முயற்சியில் இறங்கிக் கொண்டிருந்தான். அவள் விழியசைவும், தலையில் வைத்திருந்த மல்லிகை மலருக்குப் போட்டியாக மலர்ந்த முகமும், அவள் கலரை இன்னும் தூக்கிக் காட்டும் சிவப்பு வண்ண புடவையும் இதுவரை அறையின் அலங்கரிப்பில் வராத உணர்வுகள் இப்போது உள்ளே வெடித்துக் கொண்டிருந்தது. இதற்கு மேல் நின்றால் தன்னையே நம்ப முடியாது என்று எண்ணி,
“என்ன நின்னுக்கிட்டே கனவுக்கு போயிட்டியா?” என்று சொடுக்கிய பிறகே தன்னிலை அடைந்து தன் மனதை அவளே துப்பி விட்டு ” தள்ளி நில்லுடா காட்டான்” என்று நெஞ்சில் கை வைத்து தள்ளினாள்.
” என்னாது!!! டாவா” என்று முழித்தான்.
” ஆமா நீ மட்டும் டி சொல்றேல. நானும் அப்படி தான் சொல்வேன்”.
” எங்க அப்பத்தா முன்னாடி சொல்லி பாரு. உன்னைக் குமட்டிலே இடிக்கும்”.
” பார்க்கலாம் பார்க்கலாம்” என்று உதட்டை சுழித்து விட்டு “எனக்கு தூக்கம் வருது. அப்புறம் நான் சொன்னது ஞாபகம் இருக்கட்டும்” என்று கட்டிலில் ஏறி படுத்துக் கொண்டாள்.
” ஆமா இவ பெரிய உலக அழகி. இவ மேல பாஞ்சுறுறேன் நானு. சரி தான் போடி” என்று விட்டு ” அப்புறம் என்ன சொன்ன?. இது என் ரூம் மேடம். என் ரூம்ல நானே கீழே படுக்கனுமா?. உனக்கு கொழுப்பு ரொம்ப தான்டி இருக்குது” என்று அவனும் கட்டிலிலே படுத்துக் கொண்டான்.
தங்கள் வாழ்க்கையை பற்றிப் பேச இருவருக்கும் நிறைய இருந்தது. இருந்தும் இன்றைக்கே இதைப்பற்றி பேச வேண்டாம். அதுவும் போக காலையில் சீக்கிரமே இருவரும் எழுந்தது மற்றும் வரிசையாக சடங்குகள், புகைப்படம் எடுத்தல் என்று பாடாய் படுத்தியதில் சோர்வு வேறு வந்துத் தாக்க நாளை இதுபற்றி பேசிக் கொள்ளலாம் என்று இருவரும் கண்ணயர்ந்தனர்.
வெற்றியின் வீட்டில் சாந்தி முகூர்த்தம் சம்பிரதாயங்கள் ஏற்பாடு செய்ததால் மதியின் நண்பர்கள் அருண் மற்றும் வைஷூ இருவரும் மதியின் தாய் லதாவுடன் அவர்கள் வீட்டிற்குப் புறப்பட்டனர். தங்கள் உடமைகளை எடுத்துக் கொண்டு காரில் ஏறிக் கொண்டிருக்கும் போது “டேய் அருண் என்னோட சார்ஜர் வச்சுட்டு வந்துட்டேன். இரு எடுத்துட்டு வந்துடுறேன்” என்று உள்ளே சென்றாள் வைஷாலி.
” சரி சீக்கிரம் போயிட்டு வா. நான் கார்லயே வெயிட் பண்றேன்” என்றான் அருண்.
உள்ளே அறையில் அவள் சார்ஜரை எடுத்துக் கொண்டு வெளியே வரும் போது ” ஹாய் ” என்ற குரலில் திரும்பிப் பார்க்கவும் அங்கே குமார் நின்று கொண்டிருந்தான்.
‘ இவன் அவன் இல்லை!’ என்று அன்று பெண் பார்க்கும் நிகழ்வன்று நடந்ததை நினைத்துக் கொண்டு பதிலுக்கு ” ஹலோ ” என்றதோடு சிரித்து விட்டு நகன்றாள் அங்கிருந்து.
” ஹலோ ஹலோ ஒரு நிமிஷம் நில்லுங்க. உங்க பேர் என்னனு சொல்லிட்டு போங்க”.
அவன் பெயர் கேட்கவும் இடுப்பில் கைவைத்து முறைத்தவள் ” ஹலோ என்ன நினைச்சுட்டு இருக்கேங்க?. அன்னைக்கு என்னனா முழுங்குற மாதிரி பாக்குறேங்க. இன்னைக்கு நீங்க பாட்டுக்கு வந்தேங்க பேர் என்னனு கேட்குறேங்க. ரவி அங்கிள் கிட்ட சொல்லி கம்ப்ளைன்ட் பண்ணவா? ” என்று படபடவென பட்டாசாக வெடித்தாள்.
” ஏங்க பேரைக் கேட்டது ஒரு குத்தமா?. எங்க அண்ணியோட ப்ரண்ட்னு தெரிஞ்சுக்கலாமேனு கேட்டேன். இதுக்குலாம் கம்ப்ளைன்ட் பண்ணுவேனு சொல்றேங்க. நீங்க சொல்லவே வேண்டாம் கிளம்புங்க” என்று கையைக் கூப்பி தலைக்கு மேல் ஒரு கும்பிடு போட்டான்.
” அந்த பயம் இருக்கட்டும்” என்று அவள் முறைத்து விட்டு கிளம்பி விட்டாள்.
‘ சரியான லம்பாடிப் புள்ளையா இருப்பா போல. இதுக்கு அண்ணியாரே பரவாயில்லை போலயே’ என்று நினைத்துக் கொண்டு அவனும் அங்கிருந்து கிளம்பினான்.
காரில் சென்று கொண்டிருக்கும் போது ‘கொஞ்சம் அதிகமா பேசிட்டோமோ?. பேரு தான கேட்டான். அதுக்கு நீ பேசினது ஓவர் தான் என்றது அவள் மனசாட்சி. பாத்துக்கலாம் விடு வைஷூ. நாம பாக்காததா.’ என்று அவளே அவளை சமாதானமும் செய்து கொண்டாள்.
காலைக் கதிரவன் ஜன்னல் வழியே தன் கதிர்களைப் பரப்பி தூங்கிக் கொண்டிருந்தவளின் முகத்தில் பட்டு கண்ணைக் கூசச் செய்ய கைகளை வைத்து கண்ணை மறைத்துக் கொண்டு கண்ணை சுருக்கிக் கொண்டு மெதுவாக எழுந்தாள்.
அப்போது தான் வெற்றி குளித்து முடித்து தலையை துவட்டிக் கொண்டே வெளியே வந்தான். அவள் தூக்கக் கலக்கத்தில் அமர்ந்திருப்பதைப் பார்த்து ” என்ன அல்லிராணி. இன்னும் எழுந்திரிக்க மனசு வரலயா?. சீக்கிரம் கொஞ்சம் கிளம்பி வந்தேனா கீழே போலாம். இன்னைக்கு மொத நாளுங்குறதால அப்பத்தா ஒன்னும் சொல்லாது. இல்லை வெத்தலைக்குப் பதிலா உன்னை தான் இடிக்கும். எப்படி வசதி?” என்று புருவம் உயர்த்திக் கேட்டான்.
அதுவரை ‘நாம இப்போ எங்கே இருக்கிறோம்’ என்று தூங்கி வழிந்து கொண்டே யோசித்தவள் அவனின் குரலில் தன் கழுத்தில் தொங்கிய ஈரம் காயாத மஞ்சள் கயிறின் ஞாபகம் வந்து மெதுவாக அதைத் தொட்டுப் பார்த்துக் கொண்டாள். அதன் பின்னே ‘ நம்ம வீடு மாதிரிலாம் எல்லாமே உன் கைக்கு வராது. சீக்கிரம் எழுந்து உன் அத்தைக்கு கூடமாட உதவி பண்ணனும்’ என்று தன் அன்னை சொன்னது ஞாபகம் வந்தது. ‘அய்யயோ இது வேறயா இனிமே’ என்று நொந்து கொண்டு உதட்டை சுழித்து விட்டு அவள் உடை இருந்த பெட்டியைத் திறந்தாள்.
பெட்டியைத் திறந்தவள் அப்படியே ஷாக்காகி நின்றாள்.
‘ பெட்டி மாறிடுச்சா?. ஏன் இவ்வளவு ஷாக் ஆகுறா?’ என்று எட்டி பெட்டியைப் பார்த்த வெற்றி ‘இவ பெட்டினு தானே உள்ள கொண்டு வந்து வச்சாங்க’ என்று நினைத்துக் கொண்டிருக்கையிலே மதி கோவமாக அவனைக் கடந்து சென்று மொபைலை எடுத்துத் தன் அன்னைக்குக் அழைத்தாள்.
கீழே விருந்திற்கு அழைக்க ரவியும் லதாவும் வந்தவர்கள் இவள் அழைப்பு வரவும் ‘ என்ன இவ கூப்டுறா?. இன்னும் கீழே வராம என்ன பண்றா?’ என்ற யோசனையோடு ” ஏய் என்னடி இன்னும் எழும்பாம இருக்க. சீக்கிரம் கிளம்பி கீழே வா நாங்க மருவீட்டுக்கு அழைச்சுட்டு போக வந்துருக்கோம்” என்றார் லதா.
” அய்யோ அம்மா. என்னோட பெட்டில புல்லா சேரியா இருக்கு. சுடிதார்லாம் எங்கமா?. ரெண்டு நாளா சேரி கட்டிட்டு இருக்க முடியலை. இன்னைக்கு சுடிதார் தான் போடுவேன்” என்றாள் கடுப்பாக.
” நான் தான்டி சேலை வச்சேன். கல்யாணம் ஆச்சுனா சேலை தான். அதுவும் கல்யாணம் ஆன மறுநாளே சுடிலாம் இல்லை. கொஞ்ச நாள் சேலை கட்டு. அப்புறம் வேனா சுடிதார் போட்டுக்கோ” என்றார்.
” எம்மாவ் ஏம்மா எல்லாத்துக்கும் கடுப்பேத்துறேங்க. சே என்று விட்டு அப்போ கிளம்பி மதியம் தான் கீழே வருவேன். அது வரைக்கும் உட்கார்ந்துட்டு இருங்க” என்று அழைப்பை அணைத்து விட்டாள்.
‘ஓஓ அல்லிராணி இதுக்கு தான் இவ்வளவு கடுப்பா’ என்று மனதில் நினைத்து விட்டு “சேலைல தான் நீ பார்க்க கொஞ்சம் பொண்ணு மாதிரி இருக்குற. அதுனால சேலையேக் கட்டிட்டு மெதுவா வா. நான் கீழ இருக்கேன்” என்று அதற்கு மேல் நிற்காமல் வேகமாக கீழே சென்று விட்டான். ஏற்கனவே கடுப்பில் இருக்கா அப்புறம் இதுக்கும் சேர்த்து என்ன பண்ணுவா என்று தெரிந்ததால் ஓடி விட்டான்.
கீழே சென்று அவன் அத்தை மாமாவிடம் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருக்கையில் அவன் மனையாள் சேலையின் மடிப்பை எடுத்து விட்டுக் கொண்டே அறையில் இருந்து வெளியில் வந்தாள்.
” இந்தக் காலத்து புள்ளைங்க ஒரு சேலையை சுத்திட்டு வர்றதுக்கு இம்புட்டு நேரம் ஆக்குதுங்க. எங்க காலத்துலலாம் இந்த நேரத்துக்கு எந்திரிச்சு பாதி வேலையே முடிச்சுருப்போம்” என்றார் முத்தம்மாள் பாட்டி.
அவர் பேச்சில் லதாவிற்கு சங்கடமாக உணர்ந்தாலும் ‘ எப்படி தன் மகள் இங்கு சமாளிக்க போகிறாளோ?. பெரியவர்களை எடுத்தெறிந்து பேசாமல் கடந்து சென்றாளே போதும். பிரச்சனை இல்லாமல் வாழ வேண்டும்’ என்று கடவுளிடம் ஒரு வேண்டுதலை வைத்தார்.
” நம்ம காலத்து மாதிரியா இப்போ இருக்கு அத்தை. அதுஅது அங்கங்க அப்படி அப்படி இருந்தா தான் ஊரும் உறவும் மதிக்குறாங்க. அதுக்கேத்த மாதிரி என் மருமக கிளம்பி வர வேண்டாமா?” என்று தன் மாமியாரையும் குறை சொல்லாமல் தன் மருமகளுக்கும் ஆதரவாக நின்று ” நீ வாடா மதி விளக்கேத்திட்டு காலை சாப்பாடு சாப்பிட்டு விட்டு நல்ல நேரத்துல உங்க வீட்டுக்கு விருந்துக்கு கிளம்புங்க” என்றார் கனிமொழி.
பிறகு வெற்றி மதி இருவரும் விளக்கேத்தி சாமி கும்பிட்டு விட்டு காலை உணவு முடித்து விட்டு நல்ல நேரம் இன்னும் வரவில்லை என்று சிறிது நேரம் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். சிவகுரு, ரவி மற்றும் லதா வெளியே அமர்ந்து முத்தம்மாள் பாட்டியிடம் உரையாடிக் கொண்டிருந்தார்கள். வெற்றி ஒரு வேலை இருக்குது வந்துடுறேன் என்று வெளியில் சென்று விட்டான்.
மதி தன் அத்தையிடம் உரையாடினாள். அவர் பேசியதில் முக்கால் வாசி வெற்றியைப் பற்றியே இருந்தது. ‘அந்தக் காட்டானுக்கு எல்லாரும் ஓவரா தான் பில்டப் குடுக்குறாங்க’ என்று நினைத்துக் கொண்டாள். பின் கனிமொழி அவர்களின் குடும்ப ஆல்பம் ஒன்றை எடுத்துக் கொடுத்து குடும்ப உறவுகளைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்தார். பின் நேரமாகவும் ” அத்தை நான் இந்த ஆல்பத்தை வீட்டுக்கு எடுத்துட்டு போய் பார்த்துக்குறேன்” என்று அவள் கையோடு எடுத்துச் சென்று விட்டாள்.
அதே ஊரில் இருந்த மதியின் வீட்டில் விருந்து முடித்து விட்டு, மதியின் அப்பா ரவிக்கு அந்த வழக்கு விஷயமாக வேலை இருப்பதால் அவர்கள் இரண்டு நாளில் சென்னை செல்ல இருப்பதால், தான் இருந்தால் மதியால் அவர்களுடன் நேரம் செலவிட முடியாது என்று எண்ணி அவளை அவளின் நண்பர்கள் மற்றும் தாயுடன் நேரம் செலவிட சொல்லி விட்டு “எனக்கு தோட்டத்தில் கொஞ்சம் வேலை இருக்கிறது” என்று சொல்லி விட்டு கிளம்பி விட்டான் வெற்றி.
அருணும் வைஷாலியும் மதியை ஓட்டியே சாகடித்து விட்டனர்.
“ஏய் போங்கடா அங்கட்டு. சரி வாங்க வெற்றியோட பேமிலி ஆல்பம் இருக்கு பார்க்கலாம்” என்று அவள் கொண்டு வந்த ஆல்பத்தை எடுத்துக் கொண்டு வெளியில் திண்ணையில் அமர்ந்தனர்.
அவள் அத்தை சொல்லி கொடுத்த ஞாபகம் இருந்த சில உறவுகளை மட்டும் சொல்லி விட்டு ஒரு இடத்தில் வெற்றி கல்லூரி சென்ற போது எடுத்த புகைப்படம் இருந்தது. அதைப் பார்த்தவுடன் ‘அய்யயோ இந்த போட்டோவைப் பார்த்தா கண்டுபிடிச்சுருவாளே இவ’ என்று வேகமாக அடுத்த பக்கத்தை புரட்டவும் “ஏய் இருடி இருடி” என்று அந்தப் பக்கத்தில் இருந்த வெற்றியின் போட்டோவை பார்த்தவள் ஆச்சர்யத்தில் கண்களை விரித்தாள். “டி இது அவன் இல்லை!. காலேஜ் கல்சுரல்ஸ்ல ஓடி ஓடி சைட் அடிச்சியே அவன் தான” என்று மதியையும் போட்டோவையும் மாறி மாறி பார்த்தாள்.
‘ அய்யோ கண்டுபிடிச்சுட்டாளே!’ என்று திருதிருவென முழித்துக் கொண்டிருந்தாள் மதி.
” அப்போ இந்த போட்டோல இருக்குறது வெற்றியா?!. அதான் அன்னைக்கே நினைச்சேன்டி. இவரை எங்கயோ பார்த்த மாதிரி இருக்கேனு. அப்போ உனக்கு அப்பவே தெரிஞ்சுருக்கு. எங்கிட்ட மறச்சுருக்க கல்பிரிட்” என்றாள் வைஷூ கோவமாக.
“அப்போ மதிக்கு லவ் மேரேஜ்ஆஆஆ!. சொல்லவே இல்லை… ” என்று கத்தினான் அருண்.
தொடரும்..
Interesting sis nice ud super madhi erkanave vetri ah pathu irukala super
Enakum sollala da Arun nu… Aana enaku munnadiye doubt irunthathu… Super ud sis
கதை மாந்தர்கள் மனதை கொள்ளை கொண்டு விட்டனர். மனதிற்கு பிடித்தமான குடும்பக் கதை. நகைச்சுவையும், அழுத்தமும் கொண்ட சிறப்பான எழுத்து நடை. மேலும் படைப்புகளை தொடர வாழ்த்துகள்.