Loading

அத்தியாயம் – 31

 தேவ செழியனின் முதல் இதழ் அணைப்பில் அவனின் மூச்சுக்காற்றை சுவாசித்துக் கொண்டிருந்த இசைஆராதனா கிறங்கி நிற்க, தேவா சுற்றுப்புறம் மறந்து, வண்டுபோல் அவள் மலர் இதழ்களை மொய்த்துக் கொண்டிருந்தான்.

சில நொடிகளுக்குப் பிறகு, தன்னவளின் அதரங்களுக்கு விடுதலை தந்தவன், முத்தத்தின் விளைவால் நடுங்கிக் கொண்டிருந்த அவள் கரங்களைப் பற்றி, 

“இசை” என்று பேருக்குக் கூட வலிக்குமோ என்றெண்ணி மென்மையாக அழைக்க, அவளோ கண்ணைத் திறக்கவே இல்லை.

அவளைப் பார்த்து, ரசனைப் புன்னகை பூத்தவன், “ஏய்! மியூசிக் டப்பா, ரொம்ப பேசுறன்னு கிஸ் குடுத்தா…! இப்போ பேசவே மாட்டுற? பேசவைக்க ஒரு கிஸ் தரவா?” என்று குறும்பாகக் கேட்டு அவளருகில் வர, அவள் அப்போது தான் சுயநினைவு பெற்று, சுற்றி முற்றி பார்த்து விட்டு, “டேய்… என்னடா பண்ணி வச்சுருக்க? யாராவது பார்த்தா என்ன ஆகும்? அதுவும் ரோட்டுல நின்னு…” என்று அவன் முகத்தைப் பாராமல் சிணுங்க,

“ம்ம்! ரோட்டுல நின்னு? என்ன பண்ணேன் மியூசிக் டப்பா?” என்று பாவம்போல் முகத்தை வைத்துக் கேட்க, அதில் அவனை முறைத்தவள், அவன் குறும்பு பார்வையில் அதற்கு மேல் முறைக்க இயலாமல்,  வேகமாக காருக்கு ஓடினாள். அதனைப் பார்த்துச் சிரித்தவன், அவள் பின்னே போக, காரினுள் ‘பசி பசி’ என்று அனைவரும் கத்திக் கொண்டிருந்ததில், உணவகத்திற்கு அழைத்துச் சென்றாள்.

அனைவரும் ஏசி ஹாலில் சென்று அமர்ந்து ஆர்டர் செய்ய, ஆருவோ வாயே திறக்கவில்லை. தேவாவும் எதையும் உணராமல், அவளுக்குக் கொடுத்த முத்தத்திலேயே தொலைந்து அவளை மட்டுமே பார்த்திருக்க, விஷ்வா தான், “ஆரு நீ அமைதியா இருக்கிறதை பார்த்தா… எங்களை இன்னும் வச்சு செய்வ போலயே!” என்று மிரண்டான்.

அவள் அமைதியின் சிகரமாக ‘திருட்டுப்பயலே பண்றதையும் பண்ணிட்டு, எப்படி லுக்கு விடுறான் பாரு…’ என்று தேவாவை மனதில் திட்டிக் கொள்ள, அம்மு, அவளை உலுக்கி “ஏய் என்னடி ஆச்சு! ஏன் இப்டி பேயறைஞ்ச மாதிரி இருக்க?” என்க, அவள் திருதிருவென விழித்தாள்.

நிஷாந்த் யோசனையாக, “தேவா அவளை அடிச்சியா…” எனக் கேட்டான், மறுபடியும் எதுவும் பிரச்சனையோ என நினைத்து. தேவா பொங்கிய சிரிப்பை அடக்கிக் கொண்டு, “ஆமா அடிச்சேன்.” என்று தோளைக் குலுக்கி கூற, ஆரு பல்லைக் கடித்தாள்.

அவ்வளவு தான், பெண்கள் மூவரும் பொங்கி விட்டனர். இதில் அமைதியாய் இருக்க சொன்ன விஷ்வாவையும், அருணையும் வேறு திட்டி, வந்த பிரியாணியையும் சாப்பிட விடாமல், சண்டை இட ஆரம்பித்தனர்.

அம்மு, “எதுக்கு அவளை அடிச்சண்ணா… இப்போ என்ன பிரச்சனை உனக்கு? என்று கடுங்கோபத்துடன் கேட்க, 

அவன் பிரியாணியையும் ஃபுல்லாக சாப்பிட்டு விட்டு, “ஏன் அடிச்சேன்! எப்படி அடிச்சேன்னு உன் ப்ரெண்ட்கிட்டயே கேட்டுக்கோ” என்று விட்டு, வாஷ்ரூம் சென்றான்.

ஆருவோ “அடப்பாவி… நல்லாருப்பியா நீ?” என்று நொந்து கொண்டு மற்றவர்களைப் பார்க்க, தமியும் வைஷுவும் நடந்ததைக் கேட்டுக் குடைந்து எடுக்க, 

ஆரு தலையில் அடித்து, “ஐயோ! அவன் சும்மா சொல்லிட்டு போறான்… நீங்களும் அவன் சொல்றதை கேட்டுட்டு இருக்கீங்க.” என்று சமாளிக்க முயன்றாள்.

அம்மு “இல்லை நீ நார்மலாவே இல்ல. அவன் என்ன சொன்னான்னு சொல்லு… இல்ல நான் அவனை இன்னைக்கு உண்டில்லைன்னு ஆக்கிடுவேன். அவன் ஏன் உன்னை அடிச்சான்…?” என்று பிடிவாதமாகக் கேட்க, 

அவள் கடுப்பாகி அம்மு காதில் முணுமுணுத்து விட்டு, “போதுமா போங்கடி பேசாம…” என்று அங்கிருந்து தப்பித்து வெளியே சென்றிட, 

பேந்த பேந்த  விழித்த அம்மு “ஈஈ, என்ன விஷ்வா நீ இன்னும் சாப்பிடலையா…? சூடு ஆறுரதுக்குள்ள சாப்பிடு.” என்று நல்ல பிள்ளையாக அவள் இலையில் கவனமானாள்.

விஷ்வாவோ, “எது சூடு ஆறுறதுக்குள்ளயா… பிரியாணி ஆறி அளந்து, ஐஸ் பிரியாணி ஆகிடுச்சு” என்று கடுப்பாக, 

அருண் “என்ன ஆச்சு” என்று வினவியதில், அவளோ அதற்குப் பதில் சொல்லாமல், 

“உங்க பிரெண்டை பாருங்க இவ்ளோ பிரச்சனையிலையும் பிரியாணியை சாப்பிட்டு தான் போயிருக்கான். பொழைக்க தெரியாத புள்ளைங்கடா நீங்க…!” என்றிட, மூன்று பேரும் அவளை வெறியாய் முறைத்தனர். பின், அவளை நச்சரித்த தோழிகளிடம் விஷயத்தைக் கூற, அவர்கள் நமுட்டு சிரிப்பு சிரித்தனர்.

வெளியில் நின்றிருந்த தேவாவிடம் வந்த ஆரு “அடேய் உனக்குக் கொஞ்சமாவது அறிவிருக்கா? அதுங்க கிட்ட போய் என்னை மாட்டி விட்டுட்டு வந்துட்ட!” என்று முறைக்க, 

தேவா “மேடம்க்கு, இப்போ தான் என் கிட்ட பேசணும்னு தோணுச்சா?” என்றான் புருவத்தை உயர்த்தி.

“என்மேல உனக்கு என்ன கோபம் இசை? நீ என்கிட்ட பேசி ஒரு வாரம் ஆகுது. உன்னை எவ்ளோ மிஸ் பண்றேன் தெரியுமா?” என்று பாவமாகக் கூற, 

“நீ ஏன் அப்படி பண்ணுன தேவ். கொலையும் பண்ணிட்டு, ஏதோ ரொம்ப காஸுவலா சொல்ற?” என்றிட,

“இதைப் பத்தி நம்ம அன்னைக்கே பேசிட்டோம்னு நினைக்கிறன். உன்னைக் கஷ்டப்படுத்தணும்னு நினைச்சா யாரா இருந்தாலும், இதான் என்னோட தண்டனை! இதுல பாவம் புண்ணியம்லாம் என்னால பார்க்க முடியாது.” என்றான் கடுமையாக.

அவள் “உங்கிட்ட பேசுறது வேஸ்ட்… என்னம்மோ பண்ணு!” என்னும் போதே மற்றவர்கள் வந்து விட, எங்கும் போக மனமற்று வீட்டிற்கே சென்று விட்டனர். 

விறுவிறுவென அறைக்குச் சென்ற ஆரு, கோபமாகக் கட்டிலில் அமர, அவளைப் பின் தொடர்ந்து வந்த தேவா, அவள் அருகில் அமர்ந்து பேச வர, அவனைத் தடுத்தவள் 

 

“இதைப் பத்தி நான் இனிமே பேசல. உன் இஷ்டம்! என்ன பண்ணணுமோ பண்ணிக்கோ… யாரை வேணா போய்க் கொல்லு!” என்றவளுக்கு அவன் கோபத்தை கண்டு நீர்த்துளி ஒன்று கண்ணில் உதயமாக, அவனுக்கு முகம் காட்டாமல் திரும்பிக் கொண்டாள்.

தேவா, அவள் முன் சென்று முட்டிப் போட்டு அமர்ந்து, அவள் முகத்தை அவனை நோக்கித் திருப்ப, அவள் கலங்கிய கண்கள் கண்டு பெருமூச்சு விட்டவன், “சாரி இசை. இனிமே இப்படி பண்ண மாட்டேன். என்ன கோபம்னாலும் யாரையும் ஹர்ட் பண்ண மாட்டேன். ப்ராமிஸ்” என்றான் அவன்மேல் கை வைத்து.

அவள் அவன் கையை எடுத்து அவள் தலையில் வைத்து, “என் மேல ப்ராமிஸ் பண்ணு…!” என்க, “அது அது அதான் ப்ராமிஸ் பண்ணிட்டேன்ல… இனிமே அப்படி பண்ண மாட்டேன்” என்று சட்டெனக் கையை எடுத்தவனை, இழுத்து கொண்டு வெளியில் சென்றவள், விஷ்வா அறைக்கதவை தட்டினாள்.

தேவா “இசை என்ன பண்ற…? அவங்களை ஏன் டிஸ்டர்ப் பண்ற?” என்றதற்கு பதில் கூறாமல், கதவைத் தட்டிட,   அப்போது தான் அம்மு, தேவா இசை பற்றி மகிழ்ச்சியாகச் சொல்லிக் கொண்டிருந்தாள். 

அதில் விஷ்வாவும் மகிழ்ந்து, “வாவ்! அப்போ நல்லாவே மாறிட்டானா? ஆரு கிரேட்ல…!” என வியந்து அவளைக் கட்டியணைத்து தன் சந்தோசத்தை வெளிப்படுத்தியவன் கதவைத் தட்டும் சத்தம் கேட்டு வெளியில் வர, இந்தச் சத்தத்தில் மற்ற நால்வரும் வந்துவிட்டனர்.

ஆரு தேவாவின் கையை எடுத்து விஷ்வா தலையின் மேல் வைத்து “இவன் மேல ப்ராமிஸ் பண்ணு…!” என்றதும், தேவா திகைத்தான். 

 

விஷ்வாவோ, ‘இப்போத்தானே உன்னைப் பத்தி பெருமையா பேசுனேன். அதுக்குள்ள இவன் கிட்ட ப்ராமிஸ் கேட்டு, என்னைப் போட்டு தள்ளப் பாக்குற!’ என்று நொந்து கொள்ள, அம்முவுக்கோ என்ன நடக்கிறதென்றே புரியவில்லை.

“உன்னைத் தான் சொல்றேன் தேவ். அவன் மேல ப்ராமிஸ் பண்ணு…” என்று அழுத்திச் சொல்ல, அவன் அசையாமல் நின்றான். “சோ, சும்மா வாய் வார்த்தையா தான் சொன்ன அப்படித்தான…” என முறைக்க, விஷ்வா ‘என்னடா நடக்குது இங்க’ என்ற ரீதியில் தேவாவை பார்த்தான்.

அவன் சலித்துக் கொண்டு, “ப்ச் நான் யாரையும் ஹர்ட் பண்ணக் கூடாதாம்… மர்டர் பண்ண கூடாதாம்…!” என்றிட, 

அருண் தான் அசட்டையாக, “கசாப்பு கடைக்காரனிடம் கறி வெட்டக்கூடாதென்று சொல்வது போல் இருக்கிறது… எதிர்க்கட்சி காரனின் கூற்று” என்று நகைத்திட, ஆரு அவனைத் தீயாக முறைத்தாள்.

மற்ற மூன்று பெண்களுமோ, ‘என்னது மர்டரா?’ என்று அதிர, அருணும் நிஷாந்தும், ‘யாம் பெற்ற துன்பம் நாங்களும் பெறணும்னு இப்படி கோர்த்து விட்டுட்டியேடா…’ என்று பாவமாக தேவாவை பார்த்திட, தேவா கமுக்கமாகச் சிரித்துக் கொண்டு, “இசை, நான் இனிமே இப்படி பண்ணமாட்டேன். நீ வா முதல்ல!” என்று இழுத்தான்.

அவள் “நீ  அவன் மேல ப்ராமிஸ் பண்ணு. அப்போ தான் நான் நீ சொல்றதை நம்புவேன்…” என்று அடம்பிடிக்க, “சரிடி பண்ணி தொலையுறேன்…” என்றவன் விஷ்வா தலையில் அடித்து சத்தியம் செய்ய, ஆரு மெலிதாகச் சிரித்துக் கொண்டாள். 

“தட்ஸ் குட். வா போலாம்!” என்று சிரிப்புடன் செல்லப் போக, மற்ற மூவரும் “அவன் மட்டும் ப்ராமிஸ் பண்ணிருக்கான். நீங்களும் பண்ணுங்க!” என்று மற்றவர்களைக் கூறினர்.

அருண் “நான் வேணா உன் மேல ப்ராமிஸ் பண்ணவா யது?” என நக்கலாகக் கேட்க, அவள் “ஹைய்ய… அப்படியே நீ பிராமிஸ காப்பாத்தி கிழுச்சுடுவ” என்றதும், வைஷு “ஆமா நீங்க மூணு பேரும் தேவாண்ணா மேல ப்ராமிஸ் பண்ணுங்க…” என்றிட, மூவரும் திருதிருவென விழித்தனர்.

அம்மு, விஷ்வா கையைக் கிள்ளி, “இப்போ சத்தியம் பண்ண போறியா, இல்லையா?” என்று மிரட்ட, அவனோ, “ஃபீவர்க்கு பாப்போம் பத்தியம்! டிடெக்டிவ் கிட்டயே கேட்கலாமா சத்தியம்!” என்று நொந்திட, பின் வேறு வழி இல்லாமல் சத்தியம் செய்தனர். நல்லவேளையாக இவர்கள் அடிக்கும் கூத்தின்போது வீட்டினர் வெளியில் சென்றிருந்ததால், ஒரு விளக்குமாறு தப்பிக்கப்பட்டது.

பின், மீண்டும் அவரவர் அறைக்குச் சென்று விட, தேவா “இப்போ சந்தோசமா உனக்கு?” என்று கேட்டான். அவள் “ம்ம் ரொம்ம்பப” எனச் சிரிக்க, அதில் அவனுக்கும் தன்னிச்சையாகப் புன்னகை மலர்ந்தது.

பின், ” இந்த விஷயம்,  வீட்ல யாருக்கும் தெரிய வேணாம். அந்த சிவன் வெளிநாட்டுக்கு ஓடுனதாவே இருக்கட்டும். முக்கியமா கண்மணி அம்மாவுக்குத் தெரியவே கூடாது!” என்றதை அவளும் ஆமோதித்தாள். அப்போது, அவர்களைப் பார்க்க மற்ற சொந்தம் வந்திட, அடுத்து அவர்களும் வேலையாகி போகினர்.

பின்,  அவள்  சொன்னது  போல், மதுரையை  சுற்றிக் காட்டி, அவள் சொன்ன சாப்பாட்டு வகைகள் எல்லாவற்றையும் அவர்களை சாப்பிட வைத்து, அடுத்த நாள் அனைவரும் பெங்களூருக்கு கிளம்பினர். ஊருக்கு வரும்போதே சென்னையில் இருந்த பொருட்களை பெங்களூர்க்கு அனுப்பி விட்டதால், இவர்கள் மட்டும் அங்குச் சென்று இறங்கினர்.

அங்கே பொருட்களைச் சரி செய்து, அவர்களின் அலுவகத்திற்கு தங்கள் துணைகளை அழைத்துச் சென்று அனைவருக்கும் அறிமுகப்படுத்தி, பெண்களுக்கும் அங்கு வேலை ‘செட்’ ஆக என்று நாட்கள் கடகடவென ஓடியது. இவ்வளவு வேலைகளுக்கிடையேயும் அவர்களின் காதலும், குறும்பு பேச்சும், விளையாட்டுத்தனமும் மாறாமல் பார்த்துக் கொண்டனர்.

தெளிந்த நீரோடையாய் நாட்கள் செல்ல, தேவா மட்டும் இரவு தாமதமாகத் தான் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தான். அவனுக்கு ஏதாவது வேலையாக இருக்கும் என்று முதலில் கண்டுகொள்ளாமல் இருந்த ஆரு, மற்றவர்கள் வீட்டிற்கு வந்தபின், இவனுக்கு மட்டும் என்ன வேலை? என்று குழம்பிட, அதனை அவனிடமே கேட்டு விட்டாள்.

“அது ஒண்ணும் இல்ல மியூசிக் டப்பா… ஒரு புது ப்ராஜெக்ட். அதான், கொஞ்சம் ஒர்க் அவுட் பண்ண வேண்டியதா இருந்துச்சு. கொஞ்ச நாள் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ. அதுக்கு அப்பறம் சீக்கிரம் வந்துடுவேன்.” என்றவன்  பேச்சை,  அவள் நம்பவில்லை என்றாலும், அப்போதைக்கு எதுவும் கேட்கவில்லை. அமைதியாக உறங்கி விட்டவளை பார்த்தவன், “இந்த கை சூப்புற பழக்கத்தை எப்போ தான் விடப் போறாளோ?” என்று திட்டிக் கொண்டு, மிளகாய் தூளை அவள் விரலில் தடவி விட, அவள் காரம் தாங்க முடியாமல் கத்திக் கொண்டு எழுந்தாள்.

அவன் ஒன்றும் தெரியாதவன் போல் “என்ன ஆச்சு மியூசிக் டப்பா?” என்று கேட்க,   “என் வாய் எரியுது… ஆ உரைக்குது!” என்று தண்ணீரைக் குடித்தாள். “தூக்கத்துல எப்படிடி வாய் உரைக்கும்…?” என்று சிரிப்பை அடக்கிக் கொண்டு கேட்டவனின், குறும்பைக் கண்டு கொண்டவள், “நீ தான் ஏதோ பண்ணிருக்க. என்னடா பண்ண…”? என்றாள் முறைப்பாக. “ஒண்ணுமே பண்ணலை டி… லேசா மிளகா தூள் தான் வச்சேன். அதுக்கு போய் இப்படி கத்துற?” என்று கண் சிமிட்டியவனை, “அடப்பாவி இது லேசாவா? இவ்ளோ காரமா இருக்கு…” என்று நாக்கை வெளியில் நீட்டி, காரத்தை குறைக்க முயன்றாள்.

தேவா, “இனிமே நீ வாயில விரல் வச்சு தூங்குனா, நான் இதைத் தான் பண்ணுவேன்…!” என்று கேலி செய்ய, “ச்சி ப்பே” என்றவள் தண்ணீரை குடித்துக் கொண்டே இருக்க, “ரொம்ப உரைக்குதா இசை…!” என்று கேட்டுக் கொண்டே அவளருகில் வந்தவன், அவளின் சிவந்த இதழ்களை ரசனையாகப் பார்க்க, அவள் அவன் பார்வையில் திணறி, கண்ணை இறுக்கி மூடிக் கொள்ள, அவளையே சில நொடிகள் பார்த்தவன், அவள் இதழில் மென்மையாக இதழ் ஒற்றி விட்டு, “நான் சுகர் எடுத்துட்டு வரேன்…” என்று விட்டு வெளியில் சென்றான்.

அவன் சென்று விட்டான் என்றதை உணரவே அவளுக்குச் சில நிமிடம் பிடித்தது. சென்னையில் இருந்தது போல் அவனின் ஆதரவான முத்தங்களும் நெருக்கங்களும் கூடக் குறைந்து விட்டதோ?! என்ற எண்ணம் தோன்றி மனதில் ஏக்கத்தை விதைக்க, அவன் வரும் வரையிலும் கூட அப்படியே தான் நின்றிருந்தாள்.

அவள் யோசனையாக நிற்பதை கண்டு தவித்தவன், “இசை, இந்த சர்க்கரையை சாப்பிடு!” என்று கொடுக்க, “காரம் குறைஞ்சுருச்சு…” என்றவள் கட்டிலில் சென்று படுத்துக் கொண்டாள்.  அவனிடம் அவள் எதுவும் எதிர்ப்பார்க்கவில்லை தான். ஆனால் ‘தன்னிடமிருந்து விலகுகிறானோ, ஒருவேளை என் நெருக்கம் அவனுக்குப் பிடிக்கவில்லையோ…? பிடிக்கவில்லை என்றாலும் முன்பு போல் என்னிடம் பேசலாமே… என் மடியில் படுத்துக் கொள்ளலாமே!’ என்று பல உணர்ச்சிப் பிடியில் சிக்கித் தவித்தவளுக்கு, கண்ணோரம் நீர் கசிய, அருகில், அவன் வந்து  படுக்கும் அரவம் கேட்டது.

அவளைப் பின்னிருந்து அணைத்துக் கொண்டவன், அவள் தோளில் முகம் புதைத்து, “என்மேல கோபமா இசை?” எனக் கேட்டான். அவனின் குரல் ஏதோ செய்ய, உடனே தன்னை சரி செய்தவள், அவன் புறம் திரும்பி, “என் திருட்டுப்பையன் மேல எனக்கு என்ன கோபம்… ம்ம்?” என்றதும், அவன் அவள் கரங்களை அவன் கன்னத்தில் வைத்துக் கொண்டு “எனக்குப் பயமா இருக்கு” என்றான்.

அவள் புரியாமல், “என்ன ஆச்சு டா? ஏன் பயமா இருக்கு…?” என்று பதட்டமாகக் கேட்க, அவன் அமைதியாக “உன்னைக் கஷ்டப்படுத்திடுவேனோன்னு பயமா இருக்கு இசை…” என்றான் பாவமாக.

“நீ என்னை கிஸ் பண்ணா, உங்கிட்ட இருந்து நான் வேற ஏதாவது எக்ஸ்பெக்ட் பண்ணுவேன்னு நினைச்சு என்னை அவாய்ட் பண்றியா தேவ்…?” என்று நேரடியாகக் கேட்டவளை திகைத்துப் பார்த்தவன், 

உண்மையில் அப்படிதான் நினைத்தான். அவளை சீண்டி விட்டு, ஆசை காட்டி, இறுதியில் எப்போதும் போல் நடுக்கம் வந்து அவளை விட்டு விலக நேரிட்டால், தன்னால் தாங்க முடியாது என்றெண்ணியவன், அவளிடம் நெருங்கிப் பழக ஆசை இருந்தாலும் சற்று விலகியே இருந்தான். மதுரையில் அவளுக்கு முத்தம் கொடுக்கும் போதே, அன்று முழுதும் அவள் பேயறைந்ததை போல் இருந்ததையும், தன்னை காணும் போதெல்லாம் சிவந்ததையும் தான், அவன் கண்கூடாகக் கண்டானே.

அதில்  இருந்தே, அவனுக்குப் பயம் தான். ஒருவேளை தன்னால் அவளுக்குக் கணவனாக இருக்க முடியவில்லை என்றால்? என்ற கேள்வி அவனை வண்டாகக் குடைய, கௌன்சிலிங்கில், மருத்துவர் சொன்ன அறிவுரையையும் அவன் மனம் ஏற்கவே இல்லை.

அவனின் கசங்கிய முகத்தில் அவன் எண்ணப்போக்கை அறிந்தவள், அவன் நெஞ்சில் சென்று படுத்துக் கொண்டு, “என்னை கிஸ் பண்றது, ஹக் பண்றதுலாம் உனக்குக் கஷ்டமா இருக்கா?” எனக் கேட்டாள் மென்மையாக.

“சே சே,  எனக்கு  ரொம்ப ரிலாக்ஸ்ட் ஆ  இருக்கு…” என உடனே பதிலளித்ததும், சிறிதாய் சிரித்தவள், “நான் பண்ணும் போது” என்று கேள்வி எழுப்ப, “அப்பவும் ரொம்ப ரொம்ப பிடிச்சுருக்கு…” என்றான் இயல்பாக.

“இங்க பாரு தேவ்… சில உணர்வுகள் எல்லாம்,  நமக்குத் தானா வரணும். ஃபார் எக்ஸ்சாம்பில், நமக்கு ஒருத்தரை திட்டணும்னா அவங்க மேல நமக்குக் கோபம் நமக்குள்ள இருந்து வரணும். அவங்க   கிட்ட பேசணும்னா, நமக்கு ஆசை   வரணும். இப்படி ரொம்ப சின்ன சின்ன பீலிங்ஸ் கூட, நமக்குள்ள இருந்து வந்தா தான்,  அத நம்ம சரியா எக்ஸ்போஸ் பண்ண முடியும். இப்போ உனக்கு பீசா பிடிக்காது. எனக்குப் பிடிக்கும்ன்றதுக்காக நீ அதைச் சாப்பிடலாம். ஆனால் அத சாப்பிடும்போது, ஜஸ்ட் எனக்காகன்னு கடமைக்காகத் தான் சாப்பிடுவ… மத்தபடி அதை ர சிச்சு சாப்பிட மாட்ட.

எல்லா  உணர்வுகளும் அப்படிதான் தேவ். நீ கிஸ் பண்ணா, நான் டெம்ப்ட் ஆவேன். சோ   எனக்காக, என் கூட நெருங்கனும்னு நீ நினைச்சா, அது ஜஸ்ட் கடமை. எனக்கு அது வேணாம் தேவ். 

அஃப்கோர்ஸ் நீ கிஸ் பண்ணா எனக்கு வெட்கம் வரும் தான். அது ஸ்பெஷலா இருக்கும் தான். அது ரொம்ப இயல்பு தேவ். ஆனால், அதுக்காக,  நான்    உங்கிட்ட இருந்து  வெறும் செ…” என்று ஆரம்பித்தவள், “அதை மட்டும் எக்ஸ்பெக்ட் பண்ணு வேன்னு, நீ எப்படி நினைக்கலாம்?” என்றவளின் குரலில் என்ன இருந்தது என்று பிரித்தறிய முடியாது அதிர்ந்தவன் பதறி,

“ஹே நான், நான் அப்டி நினைக்கல இசை. சத்தியமா நான் அப்படி நினைக்கல… எங்க, என்ன மீறி,  உன்னைக் காயப்படுத்தி… அப்டித்தான்…” என்று பேச முடியாமல் தவித்தவன், “சாரி இசை” என்றான் தவறு செய்து விட்ட ரீதியில்.

அவள் சிறு சிரிப்புடன் “எனக்குப் புரியுதுடா… நான் உன்னை ப்ளேம் பண்ணல. நான் ஆரம்பத்துலயே உனக்குச் சொன்னது தான்.  உனக்கு அந்த ரிலேஷன்ஷிப் பிடிக்கலைன்னா, எனக்கும் பிடிக்காது…” என்றவள் வாயை மூடியவன் பாவமாக,

“எனக்குப் பிடிச்சுருக்கே! உன்கூட வாழணும்னு ஆசையா இருக்குடி! உன்னை மாதிரியே துறுதுறுன்னு குழந்தை பெத்துக்கணும்னு ஆசையா இருக்குடி…! உன் கூட இருக்கும் போது என்னாலயே என்னைக் கண்ட்ரோல் பண்ண முடியல. ஆனா, ஆனா நான் முழுசா அதுல இருந்து வெளிய வந்துட்டேனான்னு தெரியலடி.

டாக்டர் கூட, நான் பெர்ஃபக்ட்லி ஆல்ரைட்ன்னு தான் சொன்னாரு… வீக்லி ஒன்ஸ் வரச்சொல்லிட்டு இருந்தவரு, இப்போ மன்த்லி ஒன்ஸ் வந்தா போதும்ன்னு கூடச் சொல்லிட்டாரு. ஆனால், எனக்குத் தான் என்னை நினைச்சே பயமா இருக்கு இசை. எனக்கு எப்படி சொல்லன்னு தெரியல. பட் ஐ லவ் யூ டி…! ஐ லவ் யூ அ லாட்…! ஐ லவ் யூ ன்றது ரொம்ப சின்ன வார்த்தை தான். 

நான் உன் மேல வச்சுருக்குற காதல என்னால டிஸ்க்ரைப் பண்ணவே முடியாதுடி. அவ்ளோ பிடிக்கும் உன்னை…” என்று திணறியவனை வியப்பாகப் பார்த்தாள்.

அவன் பெங்களூர் வந்த பின்னும் அங்கிருக்கும் மருத்துவ மனைக்கு கௌன்சிலிங் செல்வது தெரியும். ஆனால் அவன் டக்கென்று காதலைச் சொன்னதும், “ப்ப்பா… இப்போ தான் சாருக்கு ப்ரொபோஸ் பண்ணனும்னு தோணுச்சாக்கும்…” என்று நக்கலுடன் கூடிய குறும்புடன் கேட்க, “ஏண்டி! ப்ரொபோஸ் பண்ணாதான், நான் உன்னை லவ் பண்றேன்னு அர்த்தமா?” என்று முறைத்தான்.

அதில் மேலும் சிரித்தவள், எக்கி அவன் நெற்றியில் முத்தமிட்டு, “நீ ரொம்ப யோசிக்காத தேவ். சில விஷயங்கள் தானா தான் நடக்கணும். நம்ம கண்டிப்பா நடத்தியே தீரணும்னு ப்ரெஸ்ஸர் பண்ணக் கூடாது. அதே மாதிரி என்னை ஹர்ட் பண்ணிடுவியோன்னு நீ கவலைப்படவேண்டிய அவசியமும் இல்ல. நீ என்ன பண்ணாலும் நான் ஹர்ட் ஆக மாட்டேன். சோ, எதையும்  போட்டுக்  குழப்பிக்காம பிரீயா இரு. எல்லாமே தானா நடக்கும்…! ம்ம்?” என்றவளை காதலாகப் பார்த்தவன்,

“என்னைவிட என்னைப் பத்தி, நீ தாண்டி நல்லா புரிஞ்சு வச்சுருக்க… எப்படிடி நான் சொல்லாமையே என் குழப்பத்தை எல்லாம் தீர்த்துடுற…?” என்று வியப்புடன் கூடிய ஆர்வத்துடன் கேட்க,

“என் உணர்வுகளை நினைச்சு, சின்ன விஷயத்தையும் நீ பார்த்துப் பார்த்துச்  செய்யும்  போது, உன் உணர்வுகளை என்னால புரிஞ்சுக்க முடியாதா? சில விஷங்களை அனுபவிக்கனும், இப்படி ஆராயக் கூடாது…” என்று அவன் கன்னத்தைக் கிள்ளியவள், அவனையும் உறங்க வைத்து, தானும் உறங்கிப் போனாள்.

 

அத்தியாயம் – 32

 அன்று எப்போதும் போல் வேலை முடிந்து வந்த அம்மு, டைனிங் டேபிளில் அமர்ந்து காய் நறுக்கிக் கொண்டிருக்க, அவ்வப்போது பின்னந்தலையை பிடித்து அமுக்கிக் கொண்டிருந்தாள். வைஷு வந்தவள், “ஏன் அம்மு தலையை புடிச்சுட்டு உட்காந்துருக்க.” என்று கேட்க, “தலைவலி” என்றாள். 

அப்போது அவரவர் கணவன்மார்களும் வந்து விட, ஆரு “உனக்கு தான் பெங்களூர் குளிர்லையும் தலை எல்லாம் வேர்த்து நீர் கோர்க்குமே… ஹேர் கட் பண்ண வேண்டியது தான எப்போயும் போல, ஏன் இவ்ளோ முடி வளர்த்து வச்சுருக்க?” என்னும் போதே, தேவா அழைக்கும் சத்தம் கேட்டதில் அவள் அங்கு செல்ல, தமி போனை நோண்டிக்கொண்டிருந்தாள் வெகு தீவிரமாக. 

அருண், ‘நம்மள கொஞ்சமாவது கண்டுக்கிறாளா?’ என்று அவளையே நொந்து பார்க்க, வைஷு அம்முவை ரெஸ்ட் எடுக்கச் சொல்லி அனுப்பிட, அவளும் அறைக்கு வந்தாள். 

அவளைப் பின் தொடர்ந்து வந்த விஷ்வா “வா” என அவளை பிடித்து இழுக்க, “எங்க பேபி” எனக் கேட்டாள் புரியாமல். “ஹேர் கட் பண்ணத்தான். தலைவலிக்குதுன்னு சொல்றீல, இப்படியே வச்சா இன்னும் வலிக்கும் வா!” என்றிட, “ப்ச் அதுவே செட் ஆகிடும் விஷ்வா… ஏன் லாங் ஹேர் நல்லா இல்லையா? உனக்கு பிடிக்கலையா?” எனக் கேட்டாள் முகத்தை சுருக்கி. 

அவனுக்கு புரிந்து விட்டது, அவனுக்குப் பிடிக்கும் என்பதனால் வளர்க்கிறாள் என. சிறு சிரிப்புடன் அவள் கூந்தலில் முகம் புதைத்தவன், அதன் நறுமணத்தை முகர்ந்து கொண்டு, 

“எனக்கு நீ எப்படி இருந்தாலும் பிடிக்கும் அம்மு. நீ ஏன் கஷ்டப்பட்டு முடி வளர்க்கணும்? அதான் உன்னோடது என்கிட்டயே இருக்கே!” என்று குறும்பாக கூற, அவள் என்ன வென்று பார்த்தாள். 

ஒரு வருடம் முன்பு, அவள் எறிந்து விட்டு போன சவுரி முடியை எடுத்துக் காட்டியவன், “இதான்” என்றிட, “அடப்பாவி இதை இன்னும் வச்சுருக்கியா?” என விழி விரித்தாள். அவன் சிரிப்புடன் “ம்ம்… இதை கீழ போட மனசே வரல!” என்றதும், “ஓ சாருக்கு அப்போ இருந்தே, எங்க மேல க்ரஷ் ஆ… சே! இது தெரியாம உன்னை தப்பா நினைச்சுட்டேன்.” என்றாள் வருத்தமாக. 

விஷ்வா “ஹே, உன் இடத்துல யாரா இருந்தாலும் இதான் பண்ணிருப்பாங்க. அதோட அப்போவே எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சுருந்துச்சு. ஒரு கேஸ் விஷயமா தான் நாங்க மதுரைக்கு வந்துருந்தோம். ஆனால் எப்போ மதுரை பேரை சொன்னாலும் உன் முகம் தான் ஞாபகம் வரும்” என்று ரசனையுடன் கூறியவன், “உனக்கு ஷார்ட் ஹேர் தான் நல்லாருக்கு… எனக்கு இது பிடிக்கல வா ஹேர் கட் பண்ணலாம்.” என்று அழைக்க, அவன் முயற்சி புரிந்தவள், கையை நீட்டினாள். 

அவனும் சிரிப்புடன் அவள்  கையை பிடித்து வெளிய செல்ல முயல, அவள் “ப்ச்” என்று கையை உதறிவிட்டு, மீண்டும் கையை நீட்ட, விஷ்வா ஒரு நொடி புரியாமல் பார்த்து விட்டு, பின் குறுஞ்சிரிப்புடன், அன்று அவளுக்கு வாங்கியிருந்த பச்சை நிற கண்ணாடி வளையலை அவன் கப்போர்டில் இருந்து எடுத்து, அவளை பார்வையால் பருகிக் கொண்டே போட்டு விட்டான். 

 

போட்டு விட்ட நொடியில் அவளை தனக்குள் அடக்கியவன், “இந்த வளையலை நானே உனக்கு போட்டு விடுவேன்னு வாங்கும் போது நினைக்கவே இல்லை. அம்மு! நான் இதை வச்சுருப்பேன்னு உனக்கு எப்படி தெரியும்…?” என்று வினவ, 

“வானத்தை போல விஜயகாந்த் மாதிரி ‘காதல் வெண்ணிலா கையில் சேருமா’ன்னு நீ பேக்ரௌண்ட் மியூசிக் போட்டது கூடவா எனக்கு தெரியாம போகும்” என்று நக்கலடித்தவளை முறைத்தவன் பேசும் இதழ்களுக்கு தக்க தண்டனை அளித்தான்.

தன் காதருகே தன்னவனின் மூச்சுக்காற்றை உணர்ந்த வைஷு, “ஷான் தள்ளிப்போ யாராவது வந்துடப் போறாங்க!” என்று அதட்ட, “எல்லாரும் அவன் அவன் ஆளோட பிசி…! என்ன ஆனாலும் வரமாட்டானுங்க” என்றதில், “ஐயோ டைனிங் டேபிள்ல தான் அருணும் தமியும் இருக்காங்க…” என்று அவனைத் தள்ளினாள். 

நிஷாந்த், “இதுங்க ரூம்க்கு போகாம இங்க என்ன பண்ணுதுங்க? மனுஷனை கொஞ்ச நேரம் ரொமான்ஸ் பண்ண விடுதுங்களா…” என்றிட, வைஷு கிளுக்கென சிரித்து விட்டு, “மாமா, அவங்கல்லாம் தெளிவாத்தான் இருக்காங்க. நீதான் டியூப் லைட்டா இருக்க…” என்றதும், அவன் திருதிருவென விழித்தான். 

அவளோ மேலும், “அவங்களை ரூம்க்கு போக சொல்றதுக்கு நீயே ரூம்க்கு கூட்டிட்டு போகாம வெட்டியா பேசிகிட்டு” என்னும் போதே அவளை தூக்கி இருந்தவன், “ஏய் மாமன் பொண்ணே! போனாப்போகுது,  ஏதோ    வேலை    பார்க்குறியேன்னு அமைதியா இருந்தா? என்னை டியூப்லைட்டுன்னு சொல்றியா?” என்று வெளியில் செல்ல போக, “அச்ச்சோ! ஹால்ல ரெண்டு பேரு இருக்காங்க. இறக்கி விடுடா” என்று கத்த, அவன் காதிலேயே வாங்கவில்லை.

“தேவ் எதுக்கு கூப்பிட்ட” என்று கேட்டுக் கொண்டே ஆரு அறைக்குள் வர, அவன் இடுப்பில் கை வைத்து அவளை போலியாய் முறைத்தான். அதன் பிறகே “ஸ்ஸ் சாரிஈ…” என்று அவனருகில் வந்தவள் அவன் நெற்றியிலும் கன்னத்திலும் இதழ் பதிக்க, 

“ஒண்ணும் வேணாம் போ… நான் வந்ததும் நீ என்னை பார்க்க வரவே இல்லை” என்று சிறு குழந்தையாய் சண்டையிட்டான். 

“இல்ல தேவ் டார்லு, நீ வந்ததும் ரூம்க்கு தான் வரப் போனேன்… அம்மு தலைவலிக்குதுன்னு சொன்னாளா. அதான் என்னன்னு கேட்டுட்டு இருந்தேன். அதுக்குள்ள நீ கூப்புட்டுட்ட” என்றிட, “போடி” என்று செல்லமாய் வைது விட்டு, அவளை அணைத்துக் கொண்டு நின்றான். 

காலையில் கிளம்பும்போதும், வீட்டிற்கு வந்ததும் தாயை கண்ட சேயாய், அவள் முகத்தை பார்த்து, முத்தமிட்டு தான் அடுத்த வேலை பார்க்கவேண்டும் என்பது அவனின் எழுதப் படாத விதி. ஒவ்வொன்றிற்கும் அவளிடமே அடம்பிடித்து, அவளிடமே ஆறுதல் தேடி, தன் சிறு சிறு ஆசைகளையும் அவளிடமே கேட்டுப் பெறுவதில், அவளின் குழந்தையாகவே மாறி விட்டான்.   அவ்வப்போது காதலுடன், அவளை சீண்டவும் தவறவில்லை. இப்போது அவனின் மனதும் கூட தெளிவாக இருந்ததில், முழு மனதுடன் தன்னிஷ்டம் போல் அவளை காதல் செய்து, அன்பால் திணறடித்தான். 

அவளோ,  தினம் தினம் இவனின் சேட்டையிலும், குறும்பிலும் தன்னை இழந்து, அவனை வெகுவாய் ரசித்தாள். தேவாவின் அணைப்பு, முத்தத்துடன் மேலும் தொடர்ந்து கொண்டிருக்க, இங்கு தமி போனை பார்த்துக் கொண்டே, “டேய் டிவி” என்று விஷ்வா அறைக்கதவை தட்டப் போனாள்.

உடனே, அருண் அவளை தடுத்து, “எதுக்கு அவன் பேரை ஏலம் போட்டுட்டு இருக்க?” என்று முறைக்க, 

அவள் “ப்ச் நான் அவன்ட்ட ஒரு பன்ச் கேட்கணும் தள்ளு” என்றதும், “அறிவிருக்கா, இந்த நேரத்துல போய் கதவ தட்டுற…?” என்றான். அவள் “மணி 7 தான் ஆகுது. இதுக்காக நல்ல நேரம் பார்த்தா பன்ச் கேட்க முடியும்…?” என்று நக்கலடிக்க, அவளை தீயாக முறைத்தான். 

“உனக்கு பன்ச் தான வேணும், வா சொல்றேன்” என்று இழுத்திட, “சே சே நீ சொல்றது மொக்கையா இருக்கும். அவன் தான் நல்லா சொல்லுவான், எனக்கு பன்ச் வேணும்.” என்று நின்றாள். 

அவளின் தம்பி போனில் சாட் செய்து கொண்டிருக்க, அவன் ஏதோ கிண்டலடித்ததில் அவனை திருப்பி கிண்டலடிக்க டயலாக் தெரியாமல், இந்த கூத்தை அடித்துக் கொண்டிருந்தாள். 

அருண், ‘இவள் வாய்ல சொன்னா கேட்க மாட்டா’ என்றெண்ணி அலேக்காக தூக்கிக் கொண்டு, அறைக்குச் செல்ல, அவன்  தொடுகையில் திகைத்தவள், கீழே விழுந்து விடுவோமோ என பயந்து, அவன் கழுத்தை இறுக்கி கட்டிக் கொண்டாள். 

அவளை கீழே இறக்கி விடாமல், அவள் நெருக்கத்தில் தன்னிலை மறந்தவன்,  அவள்  மூக்கோடு  மூக்கை உரசி, “இப்போ பன்ச் வேணுமா? இல்ல” என்று கிசுகிசுப்பாக கேட்க, அவளோ அவன் தூக்கும் போதே, போனை கீழே போட்டிருந்தாள். அவன் இதழ்கள் அவள் முகம் எங்கும் ஊர்வலம் சென்று, இதழ் நோக்கிப் பயணிக்க, அப்போது சட்டென கண் விழித்த தமி “அய்யயோ” என்று கத்தினாள். 

 

அவள் திடீரென கத்தியதில் அவளை டொம்மென கீழே போட்டிட, நல்லவேளையாக மெத்தைக்கு அருகில் நின்றிருந்ததால் அவள் கட்டிலில் விழுந்தாள். 

அப்படியும், அவன் கீழே போட்ட அதிர்வில் “ஐயையோ” என்று மீண்டும்  கத்தியதில், ‘இவளோட பெரிய இம்சை’ என்று வேறு ஒரு உலகத்தில் மிதந்து கொண்டிருந்த, மூன்று ஜோடிகளும் அங்கு விரைய, அருண் தான் ‘நம்ம என்ன பண்ணிட்டோம்னு இப்படி கத்துறா?’ என்று பேந்த பேந்த விழித்தான். 

அவனை கண்டு தோளை தட்டிய நிஷாந்த் “என்னடா ஆச்சு? எதுக்குடா கத்துனா அவள்?” என்று கேட்க, அவனுக்கே தெரிந்தால் தானே, பதில் சொல்லுவான். தேவா கடுப்பாகி “டேய் என்னடா பண்ணுன? வாயை திறந்து சொல்லு!” என்றதற்கு, “நான் தான், கல்யாணம் ஆனதுல இருந்து ஒண்ணுமே பண்ணலையேடா…” என்று குழப்பத்தில் உளறியதில், விஷ்வா, “சோ சேட் மச்சான்.” என்று சிரிக்க, மற்ற இருவரும் தலையில் அடித்தனர். 

ஆரு, “அடியேய் எதுக்கு இந்த கத்து கத்துன…” என்று கேட்க,

தமி, அவர்கள் மூவரையும் தனியாக அழைத்து, ரகசியமாக ஏதோ பேச, அதில் உருகிய ஆரு தான் “லூசாடி நீ? அப்போ நீ காலைல இருந்து சாப்பிடலையா அறிவிருக்கா?” என்று சத்தமாகத் திட்ட, ஆண்கள் நால்வரும் புரியாமல் பார்த்தனர். 

அன்று ஆஸ்ரமத்தில் ஆருவும் தேவாவும் சீக்கிரமாக சேர வேண்டும் என்று மனதினுள் வேண்டிக் கொண்டவள், இப்போது அவர்கள் சரியானதை உணர்ந்து, காலையில் இருந்து வேண்டுதலைத் தொடங்கி இருந்தாள். 

அதனாலேயே அருண் முத்தம் கொடுக்க வருகையில் கத்தி விட்டாள். இதனை அறிந்த மற்றவர்களும் அவளை பரிவாக பார்க்க, அருண் அவளை ரசனையாகப் பார்த்து கொண்டிருந்தான். ஆரு மேலும் திட்டிட, அவள் “ப்ச் வேண்டிக் கிட்டதை செய்யலைன்னா சாமி குத்தம் ஆகிடும்… நாளு நாள்ல வேண்டுதல் முடிஞ்சுடும், எல்லாரும் போங்க” என்றதும், அனைவரும் வெளியில் சென்றிட, தமி அருணிடம் தயங்கிக் கொண்டு “சாரி அருண்… நான் முன்னாடியே உங்கிட்ட சொல்லிருக்கணும்.” என்க, “நீ காலைல இருந்து சாப்பிடலையா?” எனக் கேட்டான் மென்மையாக. 

அவள் ‘இல்லை’ எனத் தலையாட்ட, “நீ ரெஸ்ட் எடு…” என்று பால்கனியில் சென்று நின்று கொண்டான். அவன் கோபமாக இருக்கிறானோ…? என்று சிறிது நேரம் அங்கயே நடந்து கொண்டிருந்தவள், “அருண் டைம் ஆச்சு. சாப்பிட வா” என்றழைக்க, “வேணாம்…” என்றான். 

அவள் “என்மேல கோபம்ன்னா அதை ஏன் சாப்பாடு மேல காட்டுற?” என்று கமறிய குரலில் கூறிட, அதில் பதறி அவளருகில் வந்தவன் “ஏய் லூசு! நான் எப்போடி உன் மேல கோபம்ன்னு சொன்னேன். நீ சாப்பிடாம இருக்கும் போது நான் மட்டும் எப்படி சாப்பிடுவேன். நானும் நாளு நாள் விரதம்.” என்றதும் திகைத்து விட்டாள்.

“ஹே நான் மட்டும் தான் வேண்டிகிட்டேன் நீ ஏன்…” என்று பேசும் முன், “அப்போ நான் வேற, நீ வேறையா?” என்று அவன் கேட்ட கேள்வியில் சிலையாகி நின்றவள், 

“நீ சரிப்பட்டு வர மாட்ட… நான் தேவாண்ணா கிட்ட சொல்லி உன்னை சாப்பிட வைக்கிறேன்.” என்று கோபமாக வெளியில் போக, அங்கோ, ஆண்கள் மூவரும் படுக்கையை எடுத்துக் கொண்டு, மொட்டை மாடிக்குக் கிளம்பினர். 

அவள் புரியாமல் அவர்களை பார்த்து, “நீங்கலாம் சாப்பிடாம எங்க போறீங்க.” என்று கேட்க, ஆரு அங்கு வந்து “நீ சாப்பிடாம இருக்கும்போது நாங்க மட்டும் எப்படி சாப்பிடுவோம்? எல்லாருமே விரதம் இருக்கலாம்.” என்றிட, 

அவள் அதிர்ந்து அவள் காதருகில் “என்னடி பேசுற? இப்போ தான் தேவாண்ணா சரி ஆகிருக்கான் இந்த நேரத்துல போய்” என்று அதட்ட, அவள் “அதெல்லாம் முடியாது… நாங்களும் விரதம் தான்…” என்று அவளின் தோழிகள் பிடிவாதம் பிடிக்க, அவள் தான் நொந்து விட்டாள். 

அறையில் இருந்தால் விரதத்தை தாங்களே கலைத்து விடுவோமோ? என அஞ்சி அவர்களின் கணவன்மார்களும் மொட்டைமாடிக்கு படையெடுத்து விட்டனர். “இதுங்க எல்லாத்துக்கும் லூசு தான் புடிச்சிருக்கு… அருண் நீயாவது வந்து பிரெண்ட்ஸ்ட்ட பேசுடா” என்று அறைக்கு வர,  அவனுக்கு ஏற்கனவே தெரியும், அவனின் நண்பர்கள் இதைத் தான் செய்வார்கள் என்று. 

அதனால் கேலி சிரிப்புடன், “நானும் மொட்டை மாடிக்கு போறேன். குட் நைட் யது…” என வெளியில் சென்றான்.

அடுத்து வந்த நாட்களும், கேலி கிண்டலுடன் விரதத்தில் கழிய, தன்னவளின் முத்தம் கூட இல்லாமல் தேவா தான் ஏங்கிப் போய்விட்டான். அதோடு, “இசை, உனக்கும் சேர்த்து நான் விரதம் இருக்கேன். நீ சாப்பிடாம இருக்க மாட்ட… கொஞ்சம் சாப்பிடுடி!” என்று அவள் பசியில் வாடுவது பொறுக்காமல் கூற, “இன்னும் ஒரு நாள் தான தேவ்… அப்பறம் எனக்கு கில்டியா இருக்கும். என்னால அவ பட்டினி இருக்குறது.” என்று முகத்தைச் சுருக்க, அவளை உணர்ந்தவன் சிறு சிரிப்புடன் நகர்ந்து விட்டான்.  

இப்படியாக நான்கு நாள்களும் கழிய, நான்காம் நாள், அங்கபிரதட்சணம் செய்யப் போகிறேன் என்று கோவிலுக்கு சென்றவள், வேண்டியது போல் 108 தேங்காய் உடைத்து, அங்கபிரதட்சணம் செய்கையில், வைஷு வெகு சிரத்தையாய் இதையெல்லாம் கடைபிடிக்க, ஆருவும் அம்முவும் தான், ‘இன்னும் என்ன என்ன வேண்டுதலை வச்சாலோ தெரியல மகராசி…?’ என்று நொந்து விட்டனர். 

ஆண்களோ, கன்னத்தில் கை வைத்து அவர்களை பார்க்க, ஒருவழியாக விரதத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர். இதில் விஷ்வா சும்மா இல்லாமல், “டிடி உன் வேண்டுதல் லிஸ்ட் அவ்ளோ தானா? இல்லை இந்த அலகு  குத்துறது, காவடி தூக்குறது, அந்த மாதிரி எதுவும் வேண்டிக்கிட்டு, மறந்து எதுவும் போகலையே?” என்று கேட்டிட,  அதில் தமி “ஐயையோ…!, இதை மறந்துட்டேன் பாரேன்… அருணுக்கு மொட்டை அடிச்சு, காது குத்துறதா வேண்டிருந்தேன்.” என்று தலையில் கை வைக்க, அருணுக்கு விழி பிதுங்கி விட்டது. 

அவள் பொய் சொல்கிறாள் என்று உணர்ந்த மற்றவர்கள் வெடிச் சிரிப்பை சிந்த, விஷ்வா தான், “உனக்காக இருந்தான் விரதம்! உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டது அவனோட கிரகம்!” என்று கிண்டலடிக்க, அவள் உடைத்த தேங்காய் சில்லை அவன் மேல ஏறிய என குதூகலமாக வீட்டிற்கு வந்த மூன்று ஜோடிக் கண்களிலும் காதலும் ஏக்கமும் போட்டி போட, அவர்கள் இல்வாழ்க்கையை சிறப்பாக தொடங்க அடியெடுத்து வைத்தனர். 

தேவா ஆருவையே பார்க்க, அவளோ,  அவன் கையை பிடித்துக் கொண்டு ஏதேதோ பேசிட, அப்போது மழை வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தது. ஆராதனா “ஹே மழை பெய்து தேவ்…” என்று பால்கனிக்கு விரைய, பால்கனியிலேயே நன்றாக சாரல் அடிக்க ஆரம்பித்தது. 

அங்கு நின்ற சில நொடிகளிலேயே அவள் தொப்பலாக நனைந்து விட தேவா, “ஏற்கனவே பனியா இருக்கு! இதுல மழைல வேற நனஞ்சுருக்க… உள்ள வா!” என்று அதட்ட, 

அவள் அவனை இழுத்து சாரலில் நனைய வைத்தாள். அவளை ரசித்துக் கொண்டே, அந்த பூமழை சாரலில் தன்னை நனைத்தவனுக்கு ஏதேதோ உணர்வுகள் ஆட்டிப் படைக்க, அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் பார்வை அவள் உயிர் வரை சென்று ஊடுருவ, அவனைக் காண இயலாமல் உள்ளே வந்து விட்டவளின், பின்னே வந்தவன் அவளை தன் கை வளைவுக்குள் கொண்டு வந்தான். 

அவனின் கூர் பார்வையுடன் சேர்த்து, ஈர உடையும், அவள் மேனியை நடுங்கச் செய்ய… தேவா தன்னை மறந்து  இசையின் எழிலில் ரசனையுடன் அவளை நெருங்கி, அவள் கன்னங்களில் கோலமிட, அவள் கண்கள் தன்னாலேயே மூடிக்கொண்டது. 

குளிரில் துடித்துக் கொண்டிருந்த அவள் அதரங்களை விரல்களால்  வருடியவன், தாபத்துடன் அதனை சிறைபிடிக்க, அவன் விரல்கள் அவளின் நெளிவுகளில் வலம் வந்தது. அதில் மொத்தமாக கிறங்கிப் போனவள், அவன் சட்டையை இறுக்கிப் பிடிக்க, அவனோ அவளுள் புதைந்து போனான்.  அவர்களின் இதழ் அணைப்பு நீண்டு கொண்டே செல்ல, அவனுக்கு திடீரென ஏற்பட்ட நடுக்கத்தில் சட்டென விலகிட, அவனின் தீண்டலில் மயங்கி நின்றிருந்தவள், அவனின் விலகலில் பேந்த பேந்த விழித்திட,  அவன்தான் தன்னையே நொந்து கொண்டான். 

“சா..சாரி இசை. எனக்கு பிடிச்சு தான்… நான் நான் உன்னை ஹர்ட் பண்ணிட்டேனா? நான் வேணும்னு விலகலடி” என்று ஏதேதோ திணறியவன் இறுதியில்

“எனக்கு நீ வேணும் இசை… ஐ நீட் யூ மேட்லி” என்று அழுத்தத்துடன் கூடிய தவிப்பில் கூறியவனுக்கு, தான் விலகியதால் தவறாக நினைப்பாளோ என்ற எண்ணம் வேறு இம்சை செய்தது.  அவனின் நிலையை உணர்ந்து கொண்டவள்,  கையை நீட்டி “வா” எனக் கண்ணை மூடித் திறந்து மென்மையாக அழைக்க, மீண்டும் சென்று அவளினுள் புதைந்து கொண்டான்.

தயக்கமும், அவ்வப்பொழுது தோன்றிய நடுக்கமுமாக, அவளை ஆக்கிரமித்தவன் தடுமாறிய கணங்களில், அவளின் அரவணைப்பிலும் மெல்லிய முத்தங்களிலும் தன்னை சமன்படுத்தி, அவளை அவனவள் ஆக்கிக் கொண்டான்.

அந்த நேரத்திலும், ஏற்பட்ட வெட்கத்தையும் மறைத்துக் கொண்டு, அவனுடன் இயல்பாக ஒன்றியவளை, காதலாகப் பார்த்தவன், அவள் நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டு, “தேங்க்ஸ் டி!” என்று எதில் இருந்தோ விடுபட்ட உணர்வுடன் கூடிய குரலில் கூறியவன், அவள் நெஞ்சிலே படுத்துக் கொண்டு, 

“ரொம்ப ரிலீஃபா இருக்கு இசை. எவ்ளோ அழகான பீலிங்ஸ்ல… அதுவும் என் மியூசிக் டப்பா செம்ம அழகுடி!” என்று அவள் கன்னத்தில் முத்தமிட்டு அவளையே ரசித்தான்.

அவன் பார்வை வீரியம் தாங்காமல் அவன் கண்களை மூடிய இசை, “போடா வெட்கமா இருக்கு…!” என்று சிணுங்க,  குறு நகையுடன் மீண்டும் அவள் நெஞ்சில் சாய்ந்து கொண்டவன்,

“எனக்கு, இப்போ எப்படி இருக்குன்னே சொல்ல தெரியலடி… நான் வெறுத்த தொடுதல் கூட எனக்கு இவ்ளோ ஆறுதலையும், மன நிறைவையும் குடுக்கும்ன்னு நினைக்கவே இல்லை. எவ்ளோ அழகான விஷயமல்ல… அதை ஏன் இசை இப்படி கொச்சப் படுத்துறாங்க?” என்று சிறுவன் போல் கேட்க, 

அவள், அவன் காதை திருகி, “மழையில நனைஞ்சுட்டு இருந்தவளை, கூட்டிட்டு வந்து திருட்டுத்தனம் பண்ணிட்டு, பச்சை மண்ணு மாதிரி கேள்வி கேட்குறீயா… திருட்டு பயலே!” என்றாள் அவனை வேறு பக்கம் திருப்பும் முயற்சியில். 

அதனை உணர்ந்து கொண்டவன், “நான் என்னடி திருட்டு தனம் பண்ணேன். நீ தான் என் மனசை திருடுன, இப்போ என்னையவே திருடிட்ட…! நீ தாண்டி கேடி!” என அவள் காது மடல்களை சிவக்க வைக்க, அவள் தான் கிறங்கிப் போனாள். 

அவனிடம் ஒட்டி இருந்த சிறிய பயத்தையும், தயக்கத்தையும் கூட துடைத்தெறிந்து, முழுக்க முழுக்க தன்னவனாக மாற்றி விட்ட திருப்தி அவளுள். அதே மன நிம்மதியுடன் அவனை கட்டிக் கொண்டு உறங்கி விட்டவள், மறுநாள் அவன் முகத்தில் தான் கண் விழித்தாள். 

ஒரு கையால் அவள் உள்ளங்கையை பிடித்து கொண்டு, மற்றொரு கரத்தால் அவள் தோள்களை அணைத்திருந்தவன் உறக்கத்தில் கூட, அவளை விலக மனமில்லாது, எங்கே விட்டாள் சென்று விடுவாளோ என்ற அழுத்தம் அவன் கரங்களில். 

அதில் மெலிதான புன்னகை பூத்த இசை ஆராதனா, “மூஞ்சியை அப்பாவி மாதிரி வச்சுக்கிட்டு… செய்றதை எல்லாம் பாரு, திருட்டுப்பயலே” என்று முந்தைய நாள் நினைவில் வெட்கத்துடன் சிரித்தவள், அவனுக்கு மென்மையாக முத்தம் ஒன்றை கொடுத்து விலகப் போக, அப்போது தான், அவன் உடலில் இருந்த காயங்களைக் கண்டாள். 

 

அவன் நெஞ்சில், வயிற்றில், முதுகில் என அனைத்து இடங்களும் சூடு பட்ட தழும்பு இருக்க, சில தழும்புகள் அவன் உடலுடன் ஒட்டிக்கொண்டது போல் இருந்தது. அதனையே சிறிது நேரம் பார்த்திருந்தவள், அவனிடம் அசைவு தெரியவும் விருட்டென எழுந்து குளியலறைக்குள் புகுந்து கொண்டாள். 

சிறிது நேரத்தில் குளித்து முடித்து உடை மாற்றி, கண்ணாடி முன் நின்று தலையை துவட்டியவளை, போர்வையில் தன்னை சுருட்டிய படி, பின்னிருந்து அணைத்தான் தேவா. அவள் சிறு சிரிப்புடன் “குட் மார்னிங்” என்றிட, “ஸ்வீட் மார்னிங் மியூசிக் டப்பா… ஏன் எந்திரிச்சுட்ட? நான் கண்ணு முழிச்சதும் உன்னை காணோம்னு தேடுனேன் தெரியுமா?” என்று ஏக்கத்துடன் அவள் கழுத்தில் வாசம் பிடிக்க, அதில் சிலிர்த்தவள், 

“சும்மா இருடா… நீ தூங்கிட்டு இருந்த. அதோட ஆபிஸ்ல இருந்து போன் வந்துகிட்டே இருந்துச்சா அதான் எந்திரிச்சுட்டேன்.” என்றாள். “நீ ஆபிஸ் போகணுமா இன்னைக்கு கண்டிப்பா” என்று ‘போகாதே’ என்ற குரலில் கூற, 

“கொஞ்சம் ஒர்க் தான் தேவ். முடிச்சுட்டு சீக்கிரம் வந்துடுறேன்… நீ போய் குளிச்சுட்டு வா” என்றவள் அவனை குளியலறைக்குள் தள்ளி விட்டு, அடுக்களையில் வந்து தேநீர் தயாரித்து கொண்டு செல்ல, இன்னும் மற்ற யாரும் எழும்பவே இல்லை. குளித்து முடித்து வந்தவனின் கையில் தேநீரை  கொடுத்தவள், மீண்டும் கண்ணாடி முன் நின்று தலையை துவட்ட, அவளையே அமைதியாக பார்த்தவன், அவள் முன் வந்து நின்று, “ஏதோ சம்திங் மிஸ்ஸிங்” என்றான். 

அவள் புரியாமல் பார்க்க, “இந்த முகத்துல ஏதோ மிஸ் ஆகுதே, என்ன அது இசை?” எனக் கேட்டு விட்டு, அங்கிருந்த பொட்டை எடுத்து, அவளுக்கு வைத்து விட்டவன், குங்குமத்தை நெற்றி வகுட்டில் வைக்க, அவள் புன்னகையுடன் அவனைப் பார்த்தாள். 

தலையை ஆட்டி, “ம்ம்ஹும், இன்னும் ஏதோ மிஸ்ஸிங்!” என்றவன், அவள் கழட்டி வைத்திருந்த தோடை எடுத்து போட்டு விட, “இப்போ ஓகே வா” எனக் கேட்டாள். அவன் மறுப்பாக தலையாட்டி, “என் இசை முகத்துல இன்னைக்கு என்ன மிஸ் ஆகுது…?” என்று யோசித்துக் கொண்டே, அவள் கண்களுக்கு மையிட்டு, உதட்டு சாயம் பூச வந்தவன், “ச்சு! இது இல்லாமயே உன் லிப்ஸ் சிவப்பாக்க என்னால முடியும்.”  என்றவன், அவள் உணர்வதற்குள் அவள் இதழ்களை வதைத்து, சிவக்க வைத்தான். 

அதில், ரத்தமென அவள் இதழ்கள் சிவந்திட, “நான் சொல்லல” என்று குறும்பாக சிரித்தவனை கூச்சத்துடன் தள்ளி விட்டு, “போடா…” என்று சிரித்தவளை அமைதியாக பார்த்து “இன்னும் ஏதோ மிஸ்ஸிங்” என்றான். அவனை முறைத்தவள், “என்ன மிஸ்ஸிங் மிஸ்ஸிங்ன்னு சொல்லிட்டு இருக்க… நான் நல்லாத்தான் இருக்கேன்” என்று அலுவலகத்திற்கு ரெடி ஆக, அவளை இழுத்து தன் மடியில் அமர வைத்தவன், அவள் தோளில் சாய்ந்து, “இசை” என்று மென்மையாய் அழைக்க, “ம்ம்?” என்றாள். 

அவன்  தயங்கி  கொண்டு, “உனக்கு பிடிச்சு  இருந்துச்சா? நான்   நான் உன்ன சாடிஸ்ஃபை”  என்று பேசுவதற்கு முன் அவன் வாயை மூடியவள் அவனை தீயாக முறைத்து, “என்ன கேள்வி கேட்குற தேவ்…? லூசா நீ? ஒரு விஷயம் புரிஞ்சுக்கோ, ஆண்மைங்கிறது ஒரு பொண்ணை உடலளவில சந்தோசப்படுத்துறது இல்ல. மனசளவுல அவளை ராணி மாதிரி உணர வைக்கிறது. உன்கூட இருக்குற ஒவ்வொரு நிமிஷமும் நான் அப்படி தான் ஃபீல் பண்ணுவேன். இன்னொரு தடவை முட்டாள் தனமா கேள்வி கேட்ட, நான் மனுசியாவே இருக்க மாட்டேன்…” என்று மிரட்டியவளின் ,பேச்சில் புன்னகைத்தவன், “இப்போ மட்டும் என்ன? நீ ராட்சசி தான?” என்று கேலி செய்ததில், “நான் ராட்சசியா உன்னை!!!” என்று அடிக்க ஆரம்பித்திட, அவன் அவளை அடக்க ஆரம்பித்தான். 

அங்கு இனிய இல்லறம் அரங்கேற, அவனிடம் மயங்கி கிறங்கி இருந்தவள்… சில நிமிடங்களில் “நான் ஆபிஸ் போகனும்டா… திருட்டுப்பயலே!” என்று செல்லமாக நெஞ்சில் குத்த, அவன் “நானா போக வேணாம்னு சொன்னேன்.” என்று நகைத்தான். 

பின் மீண்டும், குளித்து கிளம்பியவளை தன்னருகில் இழுத்தவன் “இன்னும் சம்திங் மிஸ்ஸிங்” என்றான். அதில் தடுமாறி விட்டு, “உனக்கு தான் அப்படி தெரியுது தேவ்…” என்றவள் பதில் பேசாமல் காரை எடுத்துக் கொண்டு சென்று விட, ஏதோ யோசித்தவன் விறுவிறுவென வெளியில் வந்து, அம்முவை, பார்வையால் சீண்டிக் கொண்டிருந்த, விஷ்வாவிடம் “காரை எடு” என்று வெளியில் செல்ல, அவன் அடித்து பிடித்து காரை ஸ்டார்ட் செய்தான். 

 

“எங்கடா  போற?” என்று கேட்க, தேவா “அந்த  காரை    ஃபாலோ பண்ணு!” என்றான். விஷ்வா எதிரில் பார்த்து திகைத்து, “டேய், அது ஆருவோட கார்டா” என்றிட, ‘அது எனக்கு தெரியாதா’ என்ற ரீதியில் அவனை முறைத்தான். 

விஷ்வா, “என்னதான் டிடெக்டிவ் ஆ இருந்தாலும், பொண்டாட்டியை  ஃபாலோ பண்றது எல்லாம்” என்று பேச வர, அவன் மேலும் முறைத்ததில் தன்னை நொந்து அவளின் காரை ஃபாலோ செய்தான். ஒரு சிக்னலை தாண்டி, ஆள் அரவமற்ற சாலையில் ஒரு ஓரமாக அவள் கார் நிறுத்தப்பட, விஷ்வா “என்னடா காரை இங்க நிறுத்திருக்கா?” என்று கேட்டதற்கு  பதில் சொல்லாமல், “நீ கிளம்பு” என்றவன், காரை விட்டு இறங்கி, அவள் காரை நோக்கிச் சென்றான். 

விஷ்வா தான் குழப்பத்துடன் வீட்டிற்கு வந்ததில், அம்மு, என்னவென புருவத்தை உயர்த்தி கேட்க, அதில் மற்றது மறந்தவன், அவளை ‘சைட்’ அடிக்கும் வேலையை செவ்வனே செய்தான். 

காரை நிறுத்திய ஆராதனா, காரினுள் அமர்ந்து அழுது கரைந்தாள். இவ்வளவு நாளும், இவ்வளவு நேரமும், அடக்கப்பட்ட அழுகையை கொட்டி தீர்த்தவள், தேவாவின் போன் அழைப்பு வரவும், கண்ணை அழுந்த துடைத்து, போனை காதில் வைக்க, அவன் “கார் கதவை திற” என்றான். 

அதில் திகைத்தவள் திரும்பிப் பார்க்க, தேவா கார் கண்ணாடி வழியே கை கட்டி இவளை பார்த்துக் கொண்டிருந்தான். செய்வதறியாமல் கார் கதவை திறந்து தலையை குனிந்து கொண்டு அமர்ந்திருந்தவள்,  எதுவும் பேசாமல் இருக்க, “ஏண்டி நீ மனசு விட்டு அழக் கூட, என் நெஞ்சுல இடம் இல்லைன்னு நினைச்சுட்டியா?” என்று கேள்வியெழுப்பியதில் சட்டென நிமிர்ந்தவள், அவன் மடியில் படுத்துக் கொண்டு, தேம்பி தேம்பி அழுதாள். 

தான் அவனுக்காக அழுதால் அவன் வருத்தப்படுவான் என்றெண்ணி அவன் பழையதை பேசி அழும்போதும் அழுகையை கட்டுப்படுத்தியவள், இன்று, அவன் காயங்களை கண்டதும், தன்னால் அடக்க இயலாது, இங்கு வந்து அழுது தீர்த்தாள். அவள் ஏன் அழுகிறாள் என்று புரிந்து கொண்டவன், “இசை, போதும்டி அழுதது!” என்று வருத்தமாகச் சொல்ல, “உனக்கு ரொம்ப வலிச்சுருக்கும்ல தேவ்…” என்று அழுது கொண்டே, அவள் கேட்டதில் உருகியவன், “இசை  எந்திரியேன்! என்னை  பாருடி…!” என்று  எழுப்பினான். அவள் எழுந்து அவன் நெஞ்சில் புதைந்து கொண்டு, “எனக்கு ரொம்ப வலிக்குதுடா… இவ்ளோ காயத்தை எப்படிடா தாங்குன? உடம்பெல்லாம் அவ்ளோ தழும்பு…” என்று பேச முடியாமல், மேலும் கதறி அழுதாள். 

தேவா “இசை என்னடா இது? இதெல்லாம் எப்போயோ நடந்தது டா… எனக்கு இப்போ எந்த வலியும் இல்லை” சமன்படுத்த முயல, அவள் அழுகையை நிறுத்தவே இல்லை. 

அவள் முகத்தைப் பிடித்து நிமிர்த்தியவன், “என்   வாழ்க்கையில நீ வரணும்கிறதுக்காகத் தான் இவ்ளோ காயம் பட்டுருக்கேன்னா!? நீ என் வாழ்க்கை முழுக்க இருக்குறதுக்கு இன்னும் எவ்ளோ வேணும்னாலும் காயப்படுவேன்…” என்றவனை தவிப்பாகப் பார்த்தவள், அவன் முகம் எங்கும் முத்தமிட ஆரம்பித்தாள். அதே முத்தத்தை அவனும் அவளிடம் தொடர என்று இருவரும் அங்கு ஒரு காதல் காவியம் அரங்கேற்றினர்.  இப்படியே அவர்களின் நாட்கள் அழகாக நகர, வேலை விஷயமாக சென்னை செல்ல வேண்டும் என்ற ஆண்கள் நால்வரும் அவர்களையும் விடுமுறை எடுத்து வரச்சொல்ல, அனைவரும் சென்னை கிளம்பினர். 

ஆனால் நேராக கார், அவர்களின் காதலை வளர வைத்த காட்டினுள் நுழைய, பெண்கள் நால்வரும் “வாவ்! நம்ம காட்டுக்குப் போறோமா?” என்று துள்ளிக் குதித்தனர். ஆரு எப்போதும் ரசிக்கும், அந்தச் சிறு ஓடையும், அந்த ஓங்கி உயர்ந்த மரங்களும், குளிர் தட்ப நிலையும், கூடவே அவளவனின் அருகாமையும் மேலும் அவளிற்கு அந்த இடத்தை அழகாகக் காட்டியது. விஷ்வா அம்முவை பார்த்துக்கொண்டே இருக்க, அவளும் அவனைத் தான் பார்த்துக் கொண்டே, மரத்திற்கு இடையே நடக்க, தமி “அய்யோயோ” என்று கத்தினாள். அதில் நிஷாந்த் கடுப்பாகி, “இங்க இருந்தோம்ன்னா நம்மள ஹனிமூன் கூட நிம்மதியா கொண்டாட விடாதுங்க. வா நம்ம தனியா போய்டலாம்.” என்று வைஷுவை வேறு புறம் கூட்டி சென்று காதல் செய்திட,

அருண் “என்ன தாண்டி உன் பிரச்சனை?” என்று முறைத்தான். அவளோ, “அம்மு, நீ யார் கூடையோ டூயட் ஆடுற மாதிரி கனவு கண்டேன்ல, அது இந்த இடம் தான். இப்போதான் ஞாபகம் வருது…ஆனால் அது டிவி மாதிரி தெரியல…” என்று யோசனையுடன் கூறியதில் மிரண்ட விஷ்வா, “ஏன்? இல்லை ஏன்னு கேட்குறேன்…? ஹனிமூன் வந்த இடத்துல டைவர்ஸ் வாங்கி குடுத்துட்டு போயிடாத” என்றவன், அருணிடம் “டேய் கூட்டிட்டுப் போடா இவளை… இல்ல இல்ல வேணாம் நாங்களே போறோம்.” என்று சிரித்துக் கொண்டிருந்த அம்முவை இழுத்துக் கொண்டு ஓடியே விட்டான்.

தெளிந்த நீரோடையில் கையை நனைத்து, அந்தத் தண்ணீரை தேவாவின் மேல் தெளித்துக் கொண்டிருந்த இசை, “செம்ம பிளேஸ்ல… இங்க வந்தாலே நீங்க கடத்தி, அதுக்கு நாங்க அடிச்ச கூத்து தான் ஞாபகம் வரும்.” என்று இனிமையான தருணங்களை நினைவுப்படுத்த, அவன் “ம்ம் அதுவும் முதல் முதல்ல, அந்தச் சரிவுல தான நம்ம உருண்டு புரண்டோம்.” என்று ஒரு இடத்தைக் கைக்காட்டியதில் சிவந்தவள், “நான் என்ன பேசுறேன்… நீ என்னடா பேசுற?” என்று வெட்கத்துடன் சிரித்துக் கொள்ள, அவன் “நடந்ததை தானடி சொன்னேன்…” என்றான் குறும்பாக. “அதுவும், நீ வந்த அன்னைக்கு சாம்பார் கேட்டியே… என்னையவே சிரிக்க வச்சு, ரசிக்க வச்சு, உன்ன காதலிக்க வச்சு, கடைசில இங்கயே என்னை ஹனிமூனும் கூட்டிட்டு வர வச்சுட்டடி… யூ ஆர் மை லக்கி சார்ம் மியூசிக் டப்பா!” என்று அவள் கன்னத்தைக் கிள்ளினான்.

அவளோ “அயோ! உங்ககிட்ட சாம்பார் கேட்டதுக்கு போட்டீங்க பாருங்க, ஒரு சாப்பாடு! சப்பா, வாழ்க்கையில அப்டி ஒரு கேவலமான சாப்பாடு நான் சாப்பிட்டதே இல்லை…”  என்று நக்கலடிக்க, அவன் “அடிங்க” என்று துரத்திட, அவள் அவனுக்குப் போக்கு காட்டி ஓடினாள். 

பின் மேலும் இரு நாட்கள் அங்கேயே நான்கு ஜோடிகளும் கொஞ்சி, சீண்டி, தீண்டித் தங்களின் நாட்களைக் கவிதையாகக் கடத்தி விட்டு, ஆஸ்ரமம் சென்றனர்.

அங்குச் சென்ற ஆண்கள், உள்ளே செல்லாமல் வெளியிலேயே திகைத்து நின்றனர். அவர்களின் வெகுநாள் கனவு, ஒன்று அங்கே அரங்கேறிக் கொண்டிருந்தது. அவர்களின் வரவுக்கேற்ப, ஆஸ்ரமத்திற்கு ஒவ்வொன்றாய் பல மாற்றங்கள் செய்திருந்தாலும், அங்கிருந்த குழந்தைகளைச் சரியாகப் பார்த்துக் கொள்ளும் பொருட்டு, முதியோர் இல்லத்தில் பாசத்திற்க்காக ஏங்கும், வயதானவர்களை இங்கு இணைத்து, ஒரு குடும்ப சூழ்நிலையைக் கொடுக்க வேண்டும் என்பது அவர்களின் பல நாள் திட்டம்.

ஆனால், அதற்கு இன்னும் இடம் நிறைய தேவைப் படுவதோடு, நிறைய பணமும், அதோடு அரசாங்கத்தின் அனுமதியும் தேவைப்பட, இதனைச் செய்ய முடியாமல் தவித்தனர். இன்று அவர்கள் ஆசைபோல், அங்கிருந்த சிறுவர் சிறுமியருக்கு வயதானவர்களின் அரவணைப்பும், அவர்களுக்கும் சிறுகுழந்தைகைளின் அன்பும் கிடைத்திட அதோடு, பக்கத்துக்கு நிலங்களிலும் அவர்களின் ஆஸ்ரமம் பரந்து  விரிந்திருக்க, அவ்விடமே அன்புமயமாய் காட்சியளித்தது. ஆரு “அட! என்ன இப்டி ஃபிரீஸ் ஆகி நிக்கிறீங்க. வாங்க உள்ள போகலாம்” என்று அழைக்க, தேவா அவள் கையைப் பிடித்து, அவள் கண்ணைப் பார்த்தான் ஆழமாக.

அவள் “உன் கனவு! எப்போவோ என் கனவாகிடுச்சு!” என்று தலை சாய்த்துச் சொல்ல, மற்ற மூன்று பெண்களும், “அடடா! இன்னைக்கு விருந்து ஏற்பாடு பண்ணிருக்கோம்… இப்படி சாப்பிட போக விடாம சென்டியா லுக்கு விட்டுட்டு இருக்கீங்க … வாங்க போலாம்” என்று உள்ளே செல்ல, அவர்கள் தான் தத்தம் மனைவியர் கொடுத்த இன்ப அதிர்ச்சியில் பேச்சிழந்து நின்றிருந்தனர்.

இந்த சந்தோசத்தை தந்த தத்தம் மனைவியரை தனியாக அழைத்துச் சென்ற மூவரும், அவர்களிடம் தன் சந்தோசத்தை பகிர, நிஷாந்த், “நீ தான் இதை ஆரம்புச்சு விட்டியா?” என்று கேட்டவன், “தேங்க்ஸ் நவி” என்று வாஞ்சையாக அணைத்துக் கொண்டான். அவளிடம் அவன் கூறி இருக்கிறான். 

இப்படி எல்லாம் செய்ய வேண்டும் என்று. அதனை எதேற்றையாக அவள் மற்ற தோழிகளிடம் கூற, ஆரு அதனை முழு மூச்சாக முடித்தே விட்டாள்.

தேவாவை இழுத்துக் கொண்டு, திலகன் முன் நிறுத்தியவர், “சார் என் புருஷன உங்க முன்னாடி கொண்டு வந்து நிறுத்திட்டேன்… இப்போ சந்தோசமா?” என்று வெற்றிப் பார்வையுடன் கேட்க, தேவா அவர் முன் நெளிந்து கொண்டு, “கையை விடுடி!” என்றான்.

அவர் மகிழ்வுடன், “எனக்கு…” என்று பேச வர, அவள் உடனே “எனக்கு முன்னாடியே தெரியும் மா. நீ இவனை மாத்திடுவன்னு அப்படினு டயலாக் அடிக்காதீங்க.” என்று நக்கலடித்தாள்.

 

அவர் விழித்து விட்டு, “பாவம் தேவா நீ!” என்று அவளை கேலி செய்ய, தேவா “ரொம்ப பாவம் சார்…” என்றான் அவருடன் சேர்ந்து கொண்டு. அதில் அவனைக் கிள்ளிட, திலகன் புன்னகைத்துக் கொண்டு வெளியில் சென்றார்.

அவர் சென்றதும் தன்னவளை இறுக்கி அணைத்துக் கொண்டவன், “லவ் யூ டி மியூசிக் டப்பா! ஐ ஆம் சோ ஹேப்பி!” என்றவனின் முகத்தில் தெரிந்த மலர்ச்சியை கண்டவளின் முகமும் பூவாய் மலர்த்திருக்க, அவள் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டு, அவளின் காதருகில் “உன்னை மறுபடியும் கடத்தப்போறேன் இசை…” என்று கிசுகிசுத்தவன், அவள் உணரும் முன் அவளைக் கையில் அள்ளிக்கொண்டு, யாரும் அறியாமல் காரினுள் கிடத்தி, அவர்களின் காதல் வனக் காட்டை நோக்கிப் பயணித்தான் இரண்டாம் தேனிலவிற்கு.

நாட்களும், வருடங்களும் கடந்திட…

“டிஸ்யூம் டிஸ்யூம்…” என்ற ஐந்து வயது பையனின் குரல், அந்த வீடெங்கும் ஒலிக்க, அவன் கையில் இருந்த பொம்மை துப்பாக்கியில், விஷ்வா, நிஷாந்த், அருணை நோக்கிச் சுட அவர்கள் மயங்கி விழுவது போல் நடித்தனர். 

“நான்  உங்களை சுடுறேன்ல,  ஏன் இன்னும் சாகாம இருக்கீங்க? சீக்கிரம் சாகுங்க…!” என்று மீண்டும் அவன் வயதில் இருந்த மற்ற மூன்று வாண்டுகளை நோக்கிச் சுட,  அவர்களோ “நாங்க செத்தது போதும். இப்போ நீ சாகு” என்று துப்பாக்கியைப் பிடுங்கிட என்று அந்த இடமே போர்க்களம் ஆகியது.

 

 தன் அண்ணன் மகள் கருவுற்றபோதே கண்மணி இங்கு வந்து இவர்களுடன் இருந்து விட்டார். புது மகன்களும், பேரன் பேத்திகளும் அவருக்கு புது வாழ்க்கையை தந்திட, இப்போது அவர்கள் செய்த சேட்டையை சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார். 

அப்போது தான், வேலை முடிந்து வந்த பெண்கள் நால்வரும் அவர்களை தடுக்க, ஆரு அவனின் அருமை மகன் தீரனிடம், “தீரா எதுக்கு சண்டை போட்டுட்டு இருக்க?” என்று முறைக்க, அவன் “அம்மா இவள் தான் துப்பாக்கியை பிடுங்குறா?” என்று விஷ்வாவின் பெண் சுனைனாவை கை காட்டினான். 

சுனைனாவோ “இவன்தான் என்னை அடிச்சான் அத்தை…” என்று உதட்டைப் பிதுக்கிட, நிஷாந்தின் மகன் நவீனும் அருணின் பெண் இனியாவும் “அத்தை தீரா எங்களை சாகச் சொன்னான்…” என்றிட அவள் மேலும் அவளின் மகனை முறைத்தாள். 

அவன் பாவமாக முகத்தை வைத்து,  “நான் சாகச் சொன்னா இவங்க சாக மாட்டுறாங்க…” என்றிட அவள் திகைத்து விட்டு, ஆண்கள் மூவரையும் முறைத்தாள். அம்மு, “உங்களை புள்ளைங்களை ஸ்கூல்ல இருந்து கூட்டிட்டு வரச் சொன்னா, இப்படி கண்டதை சொல்லிக் குடுத்துருக்கீங்க” என்று முறைக்க, 

தமியும் வைஷுவும், “இதுல துப்பாக்கி வேற, அதை நாலு பேருக்கும் வாங்கிக் குடுக்காம… சண்டை இழுத்து விட்டு வேடிக்கை பார்த்துட்டு இருக்கீங்க” என்று கடிந்து கொள்ள,  

தினமும் இந்த வாண்டுகளால் வாங்கும் திட்டு தான என்று தன்னை நொந்து நின்றிருந்தனர். 

மற்றவர்களை அறைக்கு அனுப்பியவள், தீரனின் காதை திருகி, “என்ன பழக்கம்டா இது?  சாகுன்ற வார்த்தையெல்லாம் எங்க கத்துகிட்ட நீ…? இன்னொரு தடவை அப்படிப் பேசுன, வாயிலேயே அடிப்பேன்!” என்று அதட்ட, அவன் உதட்டை பிதுக்கிக் கொண்டு நின்றான். 

தேவா அவசரமாக உள்ளே வந்து, “ஏண்டி இவனை அதட்டிட்டு இருக்க…?” என்று அவன் பையனை தூக்க, தீரன் அவ்வளவு நேரம் அடக்கி வைத்த அழுகையை, ஏதோ அவள் அடித்து போட்ட ரீதியில் கண்ணீராக ஊற்ற, ஆரு “அடப்பாவி, என்னம்மா நடிக்கிறான்” என்று முறைத்தாள்.  

தேவா, “ஓகே! ஓகே டா… நம்ம  அம்மாவை அடிச்சுடலாம் அழக்கூடாது!” என்று ஆராதனாவை முறைத்துக் கொண்டே அவனை சமன்படுத்த, அவள் “ப்ச், முதல்ல அவன் என்ன பேசுனான்னு கேளு தேவ்” என்று நடந்ததை கூற, அவன் திருதிருவென விழித்து, “சின்ன பையன் தான விடு இசை…” என்று அங்கிருந்து நகர போக,  அவனின் மகனோ, “அப்பா கூட அன்னைக்கு…” என்று ஆரம்பிக்க, அவன், அவசரமாக தீரனின் வாயை மூடினான்.  ஆரு கூர்மையாக பார்த்து, தேவாவிடம் இருந்து அவனை வாங்கி, அங்கிருந்து தப்பித்து போகப் பார்த்த தேவாவின் சட்டையை பிடித்து நிறுத்திக்கொண்டே, “அப்பா என்னடா பண்ணாரு?” என்று கேட்க,  

“அப்பா கூட அன்னைக்கு ஒருத்தரை டிஸ்யூம் டிஸ்யூம்ன்னு ஷூட் பண்ணாரு. அவன் சாகாம ஏதோ பேசுனானா, அப்போ அப்பா அவனை சாக சொன்னாரு” என்று ஒன்று விடாமல் ஒப்பித்து விட்டு ஓட, அதில் நெற்றிக்கண்ணை திறந்திருந்தவள், மொட்டை மாடிக்குச் சென்று நின்றாள். தேவா ‘ஐயோ செத்தோம்’ என்று நொந்து, “இசை” என அழைக்க,  அவள், “உனக்கு அறிவிருக்கா? சின்ன பையனப் போய் இதெல்லாம் பார்க்க வச்சுருக்க! அவன் முன்னாடி ஷூட் பண்ணிருக்க, அவன் வீட்ல இருக்குறவங்ககிட்டயே எப்படி பேசுறான்னு பார்த்தியா…? “ என்று திட்ட, தேவா “ஐயோ நான் ஒண்ணும் அவன் முன்னாடி வேணும்னு சுடல… நேத்து அவன் ஸ்கூல்ல இருந்து வரலைன்னு நீ ரொம்ப தேடிட்டு இருந்தீல?” என்று கேட்டிட, அவள் “ம்ம், நீ தான அவனை கடைக்கு கூட்டிட்டு போயிருந்தேன்னு சொன்ன” என்க, அவனோ “இல்ல. நான் அவனை எங்கயும் கூட்டிட்டு போகல, என் மேல இருந்த பகையில, ஒருத்தன் நேத்து அவனை கடத்திட்டான்.” என்றதும் திடுக்கிட்டு நின்றாள். 

 

“என் பையனை கடத்தி கொலை பண்ணனும்னு நினைச்சவனை என்னால அப்படியே விட்டுட்டு வரமுடியல…,  தீரா பக்கத்துல இருந்ததை உணராம அவனை ஷூட் பண்ணிட்டேன். நான் கொஞ்சம் விட்ருந்தாலும் அவன் நம்ம பையனை கொன்னுடுப்பான். அது பரவாயில்லையா உனக்கு?” என்றிட, அவள் “அவனுக்கு ஒண்ணும் ஆகலைல? ஏன் என்கிட்ட சொல்லல தேவ்… யார் அந்த நாசமா போனவன்?” என்று மனம் பதறினாள்.  “ஹே, அவன் நம்ம முன்னாடி நல்லாத்தான் இருக்கான் இசை. என்னை மீறி உங்க ரெண்டு பேரோட சுண்டு விரலைக் கூட யாரும் தொட முடியாது” என்றிட, “சாரிடா… நடந்தது தெரியாம நான் உன்மேல கோபப்பட்டுட்டேன்” என்று முகத்தை சுருக்கிச் சொல்ல, 

அவன் “அதுவும் நல்லது தான்… அப்போதான் என்மேல பாசமாக நிறைய கிஸ் தருவ!” என்று குறும்பாக கூறி அவளை நெருங்க, 

அவனை செல்லமாக முறைத்தவள், “ப்ச், நான் வேற உன்னை விஷ்வா மேல ப்ராமிஸ் பண்ண வச்சுட்டேன்… ப்ராமிஸ் பலிக்காதுல?” என்று பாவமாக கேட்டிட, “அவன் என்மேல ப்ராமிஸ் பண்ணுனான். நான் அவன் மேல ப்ராமிஸ் பண்ணுனேன். சோ ப்ராமிஸ் ப்ராமிஸ் கேன்சல் ஆகிடுச்சு” என்று கண்ணடித்ததில் ‘அடப்பாவி’ என்று சரமாரியாக அடிக்க, அவள் கையை பிடித்து தடுத்தவன், அவள் சிவந்த இதழ்களை சிறை செய்ய போனான். 

அப்போது “ம்ம்மாஆ” என்று தீரனின் குரலில் சட்டென இருவரும் விலகிட, அன்னையின்  ஷாலை பிடித்து இழுத்த தீரன், “ஸ்கூல் முடிச்சு வந்து இவ்ளோ நேரம் ஆச்சே, எனக்கு சோறு போடணும்னு தோணுச்சா உனக்கு… வா பசிக்குது!” என்றான்.  

அதில் அவள் தலையில் அடித்து, “இப்போதான் இவனை திட்டினேன்… கொஞ்சமாவது சொரணை இருக்கா பாரேன்?” என்றிட,  

தேவா சிரித்து கொண்டு, “உன் புள்ளைல வேற எப்படி இருப்பான்…? நேத்து கடத்தி வச்சு, இவனை காப்பாத்த போனா, ‘அப்பா வந்தது தான் வந்த, ஸ்னாக்ஸ் வாங்கிட்டு வரலையா’ன்னு கேட்குறான்… வாயி வாயி அப்படியே உன்னை மாதிரி…” என்றதும், அவள் விழுந்து விழுந்து சிரிக்க, அந்த இடைவெளியில், தீரனை உள்ளே அனுப்பி இருந்த தேவா, சிரித்த இசையின் இதழ்களில் கவி பாட ஆரம்பித்தான்.

முற்றும்!

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
6
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்