Loading

அத்தியாயம் 27

 

“என்னடா இது, வடிகாலா ஆபாச வீடியோ பார்க்காதீங்க, சுய இன்பம் செய்யாதீங்கனும் சொல்றீங்க, அப்படிச் செய்யாம இருந்தாலும் அது டிப்ரெஷனைக் கொடுக்கும்னு சொல்றீங்க. அப்ப நாங்க என்ன தான் செய்றதுனு கேள்வி வருது இல்ல” என்று கேட்டுச் சிரித்தாள் இளமயில்.

 

மாணாக்கர்களும் கூட சிரித்தனர்.

 

“இங்கே தான் நீங்க புத்திசாலித்தனமா உங்க மூளையைப் பயன்படுத்தனும்.

 

கெட்டதுனு ஒன்னு இருந்தா நல்லதுனு ஒன்னு இருக்கும் தானே. கெட்ட வழில அந்த உணர்வை மடை மாற்றம் செய்றதுக்கு பதிலா நல்ல வழில அதை செய்யலாம் தானே.

 

ஆக இங்கே வடிகாலா, மடை மாற்றமா யோகா, தியானம் போன்ற பயிற்சியை அன்றாட பழக்கமா வாழ்வியல் முறையாக நீங்க கொண்டு வரனும். இதன் மூலமா காம உணர்வினால் தடுமாறும் மனசை ஒருநிலைப்படுத்த முடியும்.

 

விளையாட்டு, நீச்சல், பாட்டு, பரதம், நாட்டியம், வரைதல்னு உங்க மனசை ஒருமுகப்படுத்துற மாதிரி எதுலயாவது உங்களை நீங்களே ஆட்படுத்திக்கனும். அப்படி செய்யும் போது உங்க கவனம் ஒரு முகப்படும். அந்த உணர்வை விட்டு வெளியே வந்துடுவீங்க‌. திரும்பவும் அந்த உணர்வு ஆட்கொள்ளும் போதெல்லாம் அதை அழகா கையாண்டு வெளியே வந்திடுவீங்க”

 

“என்னைக் கேட்டா கல்யாணம்னு ஒன்னு நடக்கப் போகுதுன்ற சூழ்நிலை வருகிற வரைக்கும், அது எந்த வயசா இருந்தாலும், இருபத்தஞ்சு வயசானாலும் சரி முப்பது வயசானாலும் சரி, உங்க வாழ்க்கைல கல்யாணம்னு ஒன்னு முடிவாகுற வரைக்கும் செக்ஸ் எப்படி வச்சிக்கிறதுனு பத்தி தெரிஞ்சிக்காதீங்க. தெரியாத விஷயத்தைப் பத்தி தெரிஞ்சிக்க ஆர்வம் வரும் தான். ஆனா அதை நான் தெரிஞ்சிக்க வேண்டிய வயசு வரலை அல்லது காலம் வரலைனு தள்ளிப் போட்டுருங்க. அதையும் தாண்டி நம்முடைய சுற்றம் சூழல்னால அது உங்களுக்கு தானா தெரிய வந்தாலும் அதை ஒரு information ஆக தெரிஞ்சிக்கோங்க.

 

அப்படி இன்பர்மேஷனா தெரிய வந்து அதுக்குள்ள மூழ்கிப் போகுற மாதிரி மனநிலை போகுதுனா இரண்டு மூனு நாளில் அதிலிருந்து வெளியே வர பாருங்க.

 

இதுல என்ன தப்பு இருக்குனு நீங்க நினைச்சிட்டீங்கனா அதுலருந்து வெளில வர முடியாது.

 

இது தப்பு கிடையாது ஆனா இதை நான் அனுபவிக்கவோ தெரிஞ்சிக்க வேண்டிய வயசோ காலமோ இது கிடையாதுனு மனசுல பதிய வச்சீங்கனா, தானா நீங்களே உங்களை மடை மாற்றி வெளியே வந்துடுவீங்க.

 

என்னுடைய கணவன் அல்லது மனைவியுடன் மட்டும் தான் உடலுறவு வைத்துக் கொள்வேன்னு உங்களுக்கு நீங்களே உறுதிமொழி எடுத்துக்கோங்க.  உங்களோட உடலையும் மனசையும் எப்பவும் உங்க கட்டுப்பாட்டுக்குள்ள வச்சிக்கோங்க. அதோட கட்டுப்பாட்டுக்குள்ள நீங்க போய்டாதீங்க.

 

உங்களுக்கு ஓர் ஆரோக்கியமான நற்சிந்தனைக் கொண்ட சுயஒழுக்கம் கொண்ட சந்ததி உருவாகனும் அப்படியான குழந்தை பிறக்கனும்னா நீங்க இதை கடைப்பிடிச்சே ஆகனும். கூடவே உங்களோட மனசையும் உடலையும் ஆரோக்கியமா வச்சிக்கவும் இதை நீங்க கடைப்பிடிக்கனும்.

 

நான் சொன்ன குட் டச் பேட் டச் நினைவுல இருக்குல. யாரையும் உங்களைத் தொட விடாதீங்க. தவறான தொடுகையா அது தோணுச்சுனா உடனே பேரண்ட்ஸ் இல்லனா வெல் விஷ்ஷர்ஸ்னு யார்கிட்டயாவது சொல்லிடுங்க. உங்களுக்குள்ளேயே வச்சிக்காதீங்க. இதுக்காக உங்க ஸ்கூல்ல தனியா டாக்டர் கமிட்டி கூட வச்சிருக்காங்கனு கேள்விப்பட்டேன். அவங்ககிட்ட கூட நீங்க ஷேர் செய்யலாம்”

 

“இவ்வளவு நேரம் என்னுடைய உரையை பொறுமையா கேட்டுட்டு இருந்த உங்க எல்லாருக்கும் நன்றி. என்னுடைய பேச்சு உங்க யாரோட வாழ்க்கைலயாவது ஒரு சதவீதமாவது மாற்றத்தைக் கொண்டு வந்துச்சுனா அது தான் என்னுடைய பேச்சுக்கான வெற்றியா நினைப்பேன்”

 

மேலும் சில நிமிடங்கள் பேசிவிட்டு வாய்ப்பளித்தவர்களுக்கு நன்றியுரைத்து அவள் உரையை நிறைவு செய்த போது அரங்கம் அதிர கைத்தட்டியிருந்தனர் அனைவரும்.

 

அடுத்த சில நிமிடங்களில் மாணாக்கர்கள் அனைவரும் அரங்கை விட்டு வெளியேறிய நேரம், இளமயிலிடம் வந்து நின்றாள் நிவேதா.

 

ஒன்பதாம் வகுப்பு மாணவியெனத் தன்னை அறிமுகம் செய்து கொண்ட நிவேதா, இளமயில் கூறியவற்றில் தனக்கு சில சந்தேகங்கள் இருப்பதாகக் கூறி அதனைக் கேட்டாள்.

 

“ரெண்டு பேர் மனசுலயும் ட்ரூ லவ் இருக்கும் போது எப்படியும் அவங்க ரெண்டு பேர் தான் கல்யாணம் செஞ்சி கணவன் மனைவியா வாழப் போறாங்கனும் போது ஏன் அவங்க கல்யாணத்துக்கு முன்னாடி செக்ஸ் வச்சிக்கக் கூடாதுனு சொல்றீங்க” எனக் கேட்டாள் நிவேதா.

 

மெல்லிய புன்னகையுடன் அவளைப் பார்த்த இளமயில்,

 

“உன்னுடைய அம்மா அப்பா இதை பத்திரமா பார்த்துக்க வேண்டியது உன்னுடைய பொறுப்புனு சொல்லி ஒரு பொருளை உன்கிட்ட கொடுத்தாங்கனா என்ன செய்வ நிவேதா?” எனக் கேட்டாள் இளமயில்.

 

“பத்திரமா பார்த்துப்பேன் மேம்” என்றாள்.

 

“அந்தப் பொருளுக்கு உரியவங்க வரும் போது, அவங்க நிஜமாவே அந்தப் பொருளுக்கு உரியவங்களானு ஆராய்ஞ்சி பார்த்துட்டு தான் அந்தப் பொருளை அதுக்கு உரியவங்கக்கிட்ட கொடுக்கனும், உன்னுடைய மனசையே மாத்தி அந்தப் பொருளைப் பறிக்க முயற்சி செஞ்சாலும் கொடுக்கக் கூடாதுனு சொன்னா என்ன செய்வ நிவேதா” எனக் கேட்டாள் இளமயில்.

 

“அந்தப் பொருள் என்னோட ரெஸ்பான்சிபிலிட்டினு வந்த பிறகு, அதை பொறுப்பா பாதுகாத்து உரியவங்ககிட்ட கொண்டு போய் சேர்ப்பேன் மேம். ஆனா நான் கேட்ட கேள்விக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?” எனக் கேட்டாள் நிவேதா.

 

“நான் இங்கே பொருள்னு சொன்னது உன்னோட உடம்பு தான் நிவேதா.

 

அம்மாவோட வயித்துலருந்து நீ வெளிய வரும் போது உடம்போட சேர்ந்து தானே உன்னுடைய உயிர் வெளியே வந்துச்சு.

 

அப்படி அம்மாக்குள்ள வளர்ந்து அம்மாவோட அரவணைப்பும் பாதுகாப்போட வந்த இந்த உடலை எந்த தீய பழக்க வழக்கங்கள்னாலும் கெடுத்துக்காம ஆரோக்கியமா பாதுகாக்க வேண்டியது உன்னுடைய பொறுப்பு தானே.

 

இப்ப இந்த உடம்பு உன்னோட ரெஸ்பான்சிபிலிட்டில இருக்கு. இந்த உடம்பை யாரு தொடனும் தொடக் கூடாதுனு அனுமதிக் கொடுக்கிறதும் உன்கிட்ட தான் இருக்கு.

 

கல்யாணத்துக்குப் பிறகுனாலும் சரி, கல்யாணத்துக்கு முன்னாடினாலும் சரி

செக்ஸ்னால முதல்ல சிதைஞ்சி போகப் போறது, வலியையும் வேதனையையும் அனுபவிக்கப் போறது பொண்ணோட உடல் தான் நிவேதா” என்ற இளமயில்,

 

“இப்ப உனக்கு உடம்பு முடியலைனா உன்னை யாரு பார்த்துப்பாங்க?” எனக் கேட்டாள்.

 

“அம்மா அப்பா தாத்தா பாட்டி எல்லாரும் பார்த்துப்பாங்க” என்றாள்.

 

“உன்னுடைய உடம்புக்கு தேவையான சத்தான உணவை சமைச்சிக் கொடுத்து மாத்திரை மருந்துலாம் வாங்கிக் கொடுத்துப் பார்த்துக்கிறது யாரு?” எனக் கேட்டாள்.

 

“என்னுடைய அப்பா அம்மா தான்” என்றாள்.

 

“உன் உடம்பு உன்னுடைய பொறுப்புனாலும், அந்த உடம்பை கவனிச்சிக்க சரியான சுற்றமும் சூழலும் உன்னைச் சுத்தி இருக்கனும் இல்லையா. அதை உனக்கு உன் அப்பா அம்மா ஏற்படுத்திக் கொடுத்திருக்காங்க.

 

இதே மாதிரி செக்ஸ்னால சிதைஞ்சி போகப் போற உன்னுடைய உடம்பை, அன்பா பாதுகாப்பா பார்த்துக்கிற ஒரு பையனை கண்டுபிடிச்சி அவன்கிட்ட உன்னையும் உன் உடம்பையும் ஒப்படைச்ச பிறகு செக்ஸ் வச்சிட்டீனா, அதாவது உன் உடம்பை தொடுற உரிமையை நீ கொடுத்தீனா, இதனால உன் உடலுக்கு ஏற்படுற பாதிப்பையும் வலியையும் அந்த பையன் அதாவது உன்னுடைய கணவன் கவனிச்சிப்பான். அதுக்கேத்த சுற்றமும் சூழலும் உனக்கு அமைச்சி கொடுத்து உன்னை நல்லபடியா பார்த்துப்பான்.

 

இப்படி இவளுக்கும் இவளோட உடல் உயிர் எல்லாத்துக்கும் வாழ்நாள் பூராவும் நான் பாதுகாப்பா இருந்து கவனிச்சிப்பேன்னு அந்த பையன் கொடுக்கிற உறுதிமொழி தான் கல்யாணம்.

 

அந்த உறுதிமொழி இல்லாம உன் உடம்பை அவனுக்குக் கொடுக்கும் போது அவனுக்கு அது ஜஸ்ட் பிளஷரா (இன்பம்) தான் தெரியுமே தவிர, பொறுப்பா தெரியாது. இவளும் இவளோட உடம்பும் உயிரும் என்னுடைய பாதுகாப்புல இருக்கு. நான் பார்த்துக்கனும்ன்ற எண்ணம் வராது. ஜஸ்ட் என்ஜாய் பண்ணிட்டு போய்டுவான்‌. இதனால சிதைஞ்சி போகப் போற உடம்பையும் அதோட வலியையும் நீ தான் அப்புறம் தனியா சமாளிக்கனும்.

 

ஒரு பொண்ணோட உடல் பிசிகலா மட்டுமே ஒரு பையனை ஏத்துக்காது. மனசும் இணங்கினா தான் உடல் உடன்படும். உடலுறவுனால பெண்ணின் மனசு அந்த ஆணோட இன்னுமே நெருக்கமாகும் நிவேதா. Emotional bonding (உணர்வு ரீதியான பிணைப்பு) உருவாகும். ஒருத்தர்கிட்ட நமக்கு உணர்வுரீதியான பிணைப்பு உண்டாகிடுச்சுனாலே கண்டிப்பா அதனால மன உளைச்சல் உண்டாகும்.  காதலே மன வலியையும் மன உளைச்சலையும் கொடுக்காம விடாது இதுல காதலும் காமமும் சேரும் போது மன வலியும் வேதனையும் அதிகமாகும்.

 

கல்யாணம் ஆகாம இதெல்லாம் நடக்கும் போது தனியா இந்த வலியையும் வேதனையையும் அனுபவிக்கனும். இதுவே கல்யாணம் ஆகிடுச்சுனா இன்பம் துன்பம் எல்லாத்துலயும் அந்தக் கணவன் கூடவே இருப்பான். அப்ப ஏதாவது பொண்ணுக்குப் பிரச்சனை வந்து அந்த கணவன் கவனிக்காம விட்டாலும் பெரியவங்கலாம் சேர்ந்து அந்தக் கணவனை கேள்வி கேட்பாங்க. இதுவே மேரேஜ் ஆகலைனா யாரும் அவனைக் கேள்வி கேட்க முடியாது.

 

கல்யாணம்ங்கிறது உனக்கு நான், எனக்கு நீனு, இனி இரண்டு பேரும் இரண்டு பேரோட இன்ப துன்பத்துலயும் பங்கெடுத்து ஒற்றுமையா இணைஞ்சி வாழ்வோம்னு எடுத்துக்கிற உறுதிமொழி.

 

சுற்றம் சூழ இருவரும் அந்த உறுதிமொழியைக் கொடுத்த பிறகு நடக்குற உடல் பரிமாற்றம் தான் பெண்ணுக்குப் பாதுகாப்பானதாக இருக்கும் நிவேதா.

 

இப்ப சொல்லு உன்னுடைய பொறுப்புல இருக்க உன் உடம்பை தன்னுடைய பொறுப்பா எடுத்துக்கிட்டு பாதுகாப்பா அன்பா பார்த்துக்கிறவனை கண்டுபிடிச்சி அவன்கிட்ட கல்யாணம்ங்கிற உறுதிமொழி வாங்கி கொடுக்கப் போறியா?

 

இல்ல எந்தப் பொறுப்பையும் எடுத்துகாம ஜஸ்ட் என்ஜாய் செஞ்சிட்டு மட்டும் போக போறவன்கிட்ட கொடுக்கப் போறியா?

 

அப்படிக் கொடுத்தீனா அது நீ உன் உடம்புக்குச் செய்ற நம்பிக்கைத் துரோகம் ஆகிடும். உன்னோட பொறுப்புல தானே நான் இருக்கேன், என்னைத் தொட ஏன் இப்படிப் பொறுப்பில்லாதவனுக்கு அனுமதி கொடுத்தனு நாளைப் பின்ன அந்த உடம்பு நோவும் போது உன்னைத் தான் திட்டும்” என்று சிரித்தாள் இளமயில்.

 

சுருங்கிய நெற்றியுடன் இளமயில் கூறியதைப் பற்றிச் சிந்தித்தாள் நிவேதா.

 

“ஒரு பொண்ணு பிறக்கும் போது அவளுக்கான கணவன் ஏற்கனவே பிறந்திருப்பான்னு ஒரு பழமொழி இருக்கு நிவேதா.

 

அப்படி உனக்காகப் பிறந்த கணவனை கண்டுபிடிச்சி அவன்கிட்ட உன்னுடைய உடம்பை கொண்டு போய் சேர்த்து அது மூலமா குழந்தையைப் பெத்துக்கும் போது, அதனால சிதைப்படுற உன் உடம்புக்கான பொறுப்பையும் உன் குழந்தைக்கான பொறுப்பையும் அவன் ஏத்துக்கிட்டு உன்னை நல்லா பார்த்துப்பான்.

 

உன்னோட குழந்தை நல்ல சூழ்நிலைல வளர்றதுக்கும் நல்ல ஆரோக்கியமான குழந்தையா வளர்றதுக்கும் நீ உன்னோட உடம்பை யார்கிட்ட எந்த சூழ்நிலைல கொடுக்கப் போறன்றது ரொம்ப முக்கியம் நிவேதா.

 

உன்னோட அப்பா அம்மா உன்னை பாதுகாப்பா பார்த்துக்கிட்ட மாதிரியே உன்னை பார்த்துக்கிற பையன்கிட்ட கல்யாணம்ங்கிற பிராமிஸ் வாங்கிட்டு அந்த உரிமையை நீ கொடுக்கும் போது உன் உடம்பு உனக்கு நன்றி சொல்லும்” என்றாள் இளமயில்.

 

“ஆனா கடைசி வரைக்கும் ஒன்னா சேர்ந்து வாழ்வோம்ன்ற நம்பிக்கைல‌ தானே லவ் பண்றோம்” என்று கேட்டாள் நிவேதா.

 

அவளின் இந்தக் கேள்வியிலேயே அவள் யாரையோ காதலிக்கிறாள் என்று புரிந்து கொண்ட இளமயில் அவள் கேள்விக்கான பதிலை உரைத்தாள்.

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
2
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்