
அத்தியாயம் 26
இளமயில் கூறியதைக் கேட்டு அர்ச்சனா அதிர்ந்து நின்றிருந்த நேரம், “அம்மா ஸ்கூலுக்கு டைம் ஆகிடுச்சு. வர்றியாமா போலாம்?” என்றவாறு அங்கு வந்து நின்றாள் நிவேதா.
இளமயில் அவளைப் பார்த்துப் புன்னகைக்க, நிவேதாவோ இளமயிலைக் கண்டு கொள்ளாது நின்றாள்.
‘செக்ஸ்ஸைப் பத்திப் பேசுற வயசாடி இது!’ என்று நிவேதாவை அடித்து நொறுக்கும் கோபத்துடன் பார்த்த அர்ச்சனா, “நீ போ நான் வரேன்” என்று கடுமையான குரலில் உரைத்தாள்.
நிவேதா அங்கிருந்து நகர்ந்ததும், கோபமும் ஆற்றாமையுமாய் இளமயிலை அர்ச்சனா பார்க்க, அர்ச்சனாவின் உணர்வுகளைப் புரிந்து கொண்ட இளமயில்,
“நிவேதாவை எதுவும் திட்டாதீங்க அர்ச்சனா. அவ அப்படிக் கேட்டதுல ஒன்னும் தப்பில்லை. ஏஐ மூலமா எதுனாலும் தெரிஞ்சிக்க முடியும்ங்கிற காலத்துல வாழுறோம். அப்படி இருக்கும் போது அவ ஏஐகிட்ட கேட்காம என்கிட்ட கேட்கனும்னு நினைச்சதுக்கே நாம பாராட்டனும். அதுவும் நான் செக்ஸ் பத்தி செமினார் எடுத்தனால தான் இதை கேட்டா! ‘இது அந்தந்த வயசுல வர்ற இயல்பான உணர்வுகள், அதுக்காக கில்டியா ஃபீல் செய்ய தேவையில்ல அதை எப்படி மடைமாற்றி நல்லவிதமான ஆற்றலா மாத்துறதுனு பார்க்கனும்னு’ நான் செமினார்ல சொன்னேன். அதை தெளிவுப்படுத்திக்கத் தான் நிவேதா அப்படிக் கேட்டாளே தவிர தப்பு செய்றதுக்காக அவ அப்படிக் கேட்கலை. நம்ம பிள்ளைகளை நாமளே குற்றவாளியா தவறானவங்களா பார்க்கக் கூடாது அர்ச்சனா. எது சரி தப்புனு நிவேதாவுக்கு நல்லாவே தெரியும். அப்பவே அவளுக்குத் தேவையான விளக்கத்தைக் கொடுத்துத் தெளிவுப்படுத்திட்டேன். அப்ப தான் அவளோட காதல் பத்தியும் சொன்னா. இந்த வயசுல காதலிக்கிறது தப்புனு சொன்னேன். அவளால அதை ஏத்துக்க முடியலை. நான் அதுக்கு மேல அதைப் பத்தி பேசலை. ஆனா சொல்ற விதத்துல எடுத்துச் சொன்னா புரிஞ்சிப்பா” என்று விளக்கமளித்தாள்.
“இந்த வயசுல காதலிக்கிற மாதிரி செக்ஸ் வச்சிக்கிறதும் நார்மல் தான், தப்பில்லைனு நினைக்கிறாளோனு நினைச்சு பதறிட்டேன் மயிலு” என்றாள் அர்ச்சனா.
“உங்களோட வளர்ப்பும் அவளோட மனசாட்சியும் அவகிட்ட அதை தப்புனு சொல்லுது அர்ச்சனா. ஆனா கூட இருக்க ஃப்ரண்ட்ஸ் அண்ட் சூழல் அதை தப்பில்லைனு அவகிட்ட சொல்லும் போது குழம்பிப் போய்டுறா! அதான் நாம ஏன் அதை தப்புனு சொல்றோம்னு விளக்கம் கேட்குறா! இப்படி அவளை யோசிக்க வைக்கிறது இந்த சொசைட்டி தான் அர்ச்சனா.
வயசுக்கு வந்துட்டாலே செக்ஸ் வச்சிக்கலாம் தப்பில்லைனு எல்லா கெட்டதையும் சரினு சொல்லி நார்மலைஸ் செஞ்சிட்டு இருக்க உலகத்துல வளர்ற பிள்ளைகளுக்கு நாம தான் எடுத்துச் சொல்லி புரிய வைக்கனும் அர்ச்சனா” என்றாள் இளமயில்.
“கரெக்ட் தான் மயிலு! அவ ஃப்ரண்ட்ஸ் யாரோ தான் அவளைக் குழப்பி விட்டிருக்கனும். சென்னை வந்த பிறகு அவளோட ஃப்ரண்ட்ஸ் பத்திலாம் அஜூ எதுவும் கேட்டுக்கிட்டது இல்ல. என்கிட்ட எப்பவுமே இதை பத்திலாம் அவ ஷேர் செஞ்சிக்க மாட்டா! அவ எல்லாத்தையும் அவங்க அப்பாகிட்ட தான் சொல்லுவா” என்று பெருமூச்சு விட்ட அர்ச்சனா,
“இப்ப நான் நிவேதா ஸ்கூலுக்குத் தான் போறேன். என் கூட வர்றீங்களா? அந்த வருணை எனக்கு அறிமுகம் செஞ்சி வைக்கிறதா நிவி சொன்னா! எனக்கு இப்ப இருக்க கோபத்துல அந்தப் பையனைப் பார்த்ததும் என்ன செய்வேன்னு எனக்கே தெரியலை” கோபமான குரலில் உரைத்தாள்.
தனது கைக்கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்த இளமயில், “சரி அர்ச்சனா. நீங்க உங்க காருல முன்னாடி போங்க. நான் என் கார்ல பின்னாடி வர்றேன்” என்று அவளை அனுப்பி வைத்தாள்.
அர்ச்சனா தனது மகிழுந்தை நோக்கிச் செல்ல, தனது மகிழுந்தில் ஏறிய இளமயில் தான் பேராசிரியராகப் பணிபுரியும் மருத்துவக் கல்லூரிக்கு அழைத்து ஒரு மணி நேரம் தாமதமாக வருவதாய் கூறி விட்டு இளங்குமரனுக்கு அழைத்து நடந்ததை உரைத்தாள்.
“ஆமா மயிலம்மா அர்ஜூன் நம்பர்லருந்து காலைல எனக்கு மிஸ்டு கால் வந்திருக்கு. நான் டாக்டர்ஸ் கூட கான்பெரன்ஸ் வேலையா இருந்ததுல கவனிக்கலை. மீட்டிங் முடிச்சிட்டு நான் அவர்கிட்ட பேசுறேன்” என்றான்.
சரி என்றவாறு இணைப்பைத் துண்டித்த இளமயில் அர்ச்சனாவின் மகிழுந்தை பின் தொடர்ந்தாள்.
அர்ச்சனா மகிழுந்தை ஓட்டியவளாய், “நிவி மயிலுக்கிட்ட என்ன கேட்ட நீ?” எனக் கோபத்துடன் கேட்டாள்.
“என்ன கேட்டேன்? நான் தான் இப்ப அவங்ககிட்ட பேசவே இல்லையே” புரியாது நிவேதா கேட்க,
“ம்ப்ச் இப்ப இல்லடி! அவங்களை ஃபர்ஸ்ட் டைம் பார்த்தப்ப என்ன கேட்ட?” பற்களைக் கடித்தவளாய் கேட்டாள் அர்ச்சனா.
“அதுவா.. அதையும் உன்கிட்ட போட்டுக் கொடுத்துட்டாங்களா?” என்று கடுப்புடன் கேட்ட நிவேதா,
“மேரேஜூக்கு முன்னாடி செக்ஸ் வச்சிக்கிறதை ஏன் தப்புன்னு சொல்றாங்கனு கேட்டேன்” என்று வெகு இயல்பாகக் கூறினாள்.
அவள் அப்படிக் கூறியதும் அர்ச்சனாவிற்குக் கோபம் பொங்கிக் கொண்டு வந்தது.
“லவ் பண்ண பொண்ணாவே இருந்தாலும், அதிலும் தனக்கு நிச்சயம் செஞ்ச பொண்ணாவே இருந்தாலும் மேரேஜூக்கு முன்னாடி லிமிட்டைத் தாண்டிடக் கூடாதுனு மேரேஜ் வரைக்கும் என்னைத் தனியா மீட் செய்றதையே தவிர்த்தாங்க உங்க அப்பா தெரியுமா! இப்ப நீ இப்படிலாம் பேசுறது அவருக்கு மட்டும் தெரிஞ்சிது” என்று அர்ச்சனா கோபமாய் உரைக்க,
“அம்மா டோன்ட் ஓவர் ரியாக்ட் மா!
உங்க காலம் வேற! எங்க காலம் வேற! இந்த விஷயத்துல மயிலு ஆன்ட்டியைப் பாராட்டியே ஆகனும். அவங்க உன்னை மாதிரி கோபமெல்லாம் படாம எனக்குப் புரியுற மாதிரி அழகா விளக்கம் கொடுத்தாங்க” என்றாள்.
‘மயிலு எப்படி இதை விளக்கிச் சொல்லிருப்பாங்க?’ என்று யோசித்தவளாய்,
“என்னனு சொன்னாங்க?” எனக் கேட்டாள்.
“என்னுடைய பாதுகாப்புக்காகனு சொன்னாங்கமா” என்றவள் அன்றைய நாளின் நினைவுகளுக்குள் சென்றாள்.
இளமயில் கல்லூரி ஒன்றில் செக்ஸ் குறித்த விழிப்புணர்வைப் பற்றிப் பேசியதைக் கேட்ட நிவேதாவின் பள்ளித் தாளாளர் அவரின் பள்ளியிலும் இளமயில் இதனைக் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
அதன் பொருட்டு அப்பள்ளியில் பதின் பருவ வயதுடையவர்களுக்கு செக்ஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தார்.
அன்று இளமயில் அக்கருத்தரங்கில் ஆண் பெண் இனப்பெருக்க உறுப்புகளைப் பற்றியும் காமம் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணம் விளக்கிப் பேசியிருந்தாள்.
அந்த அரங்கத்திலுள்ளோர் பேரமைதியுடன் அவளின் பேச்சைக் கேட்டிருக்க, அரங்கமெங்கும் ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்தது அவளின் குரல்.
“ஒரு பொருளை வடிகட்டினா நமக்கு ஒரு கழிவும் ஒரு தெளிவும் கிடைக்கும்.
இப்ப டீத்தூளை வடிகட்டினா கீழே தெளிவான டீயும் வடிகட்டில அதோட தூள் கழிவாகவும் கிடைக்கும் இல்லையா.
அது மாதிரி தான் நாம சாப்பிடுற உணவு வாய்க்குள்ள கூழாகி வயித்துக்குள்ள போகும் போது ஏழு தடவை வடிக்கட்டப்பட்டு கழிவுகளா வெளியேறுது.
எப்பவும் ஒன்னை வடிக்கட்டினா கழிவும் தெளிவும் கிடைக்கும்னு சொன்னேனே.
இப்ப கழிவு வெளியாகிடுச்சு. ஆனா இந்த உணவுக்கிட்ட இருந்து ஏழு தடவை வடிக்கட்டினதுல சுத்தமான தெளிவு ஒன்னும் வந்திருக்கனுமே! அது என்னனு கேள்வி வருது தானே!
அப்படி ஏழு முறை வடிக்கட்டின பிறகு வருகிற தெளிவு தான் ஆண்களோட விந்து!”
மாணாக்கர் அனைவரும் ஆச்சரியத்துடன் அப்படியா என்பது போல் அவளைப் பார்த்திருக்க,
“வாய்க்குள் கூழாகி அங்கேயே வடிகட்டுதல் தொடங்கிடுது. வாய்க்குள் வடிகட்டிப்பட்ட தெளிவு ரத்தத்தில் கலந்து அங்கே இரண்டாவது தடவை வடிகட்டுதல் நடந்து தசைக்குள் போகுது, தசைலருந்து மூன்றாவது வடிகட்டுதல் நடந்து அதுல கிடைக்கிற தெளிவு, கொழுப்பு ஆகுது. அந்தக் கொழுப்பை நான்காவது முறை வடிகட்டினதுல வந்த தெளிவு எலும்புக்குப் போகுது. எலும்புல ஐந்தாவது வடிகட்டுதல் நடந்து அதுல கிடைக்கிற தெளிவு மஜ்ஜைக்கு போகுது. அந்த மஜ்ஜைலருந்து ஏழாவதாக வடிகட்டப்பட்டு கிடைக்கிற தெளிவு தான் விந்தாக மாறுது.
இப்படி ஏழு முறை வடிக்கட்டும் போதும் ஒவ்வொரு இடத்திலும் கிடைக்கிற கழிவு தான் நகம், தலைமுடி, கண்ணுல அழுக்குனு உருவாகுது.
அப்பழுக்கற்ற நல்ல சக்தியுடைய ஆரோக்கியமான அடுத்த சந்ததியை உருவாக்க இப்படி அதிதூய்மையான வடிகட்டுதல்ல கிடைக்கும் சத்துக்களிலிருந்து விந்து உருவாகுற மாதிரி இயற்கையே இந்த உடலை தயார்படுத்திருக்கு.
(விந்தணு (Sperm) என்பது ஆண் இனப்பெருக்க உயிரணு (male reproductive cell) ஆகும், இது விந்தணுக்களில் (testes) உற்பத்தி செய்யப்பட்டு, பெண்ணின் அண்டத்தை (egg) கருத்தரிக்க உதவுகிறது; இது விந்து (semen) எனப்படும் வெள்ளை திரவத்தின் ஒரு பகுதியாகும், மேலும் விந்துவில் புரதம், ஃப்ரக்டோஸ் போன்ற சத்துக்கள் மற்றும் விந்தணுக்கள் கலந்து இருக்கும். விந்தணுவுக்கு ஒரு வால் போன்ற அமைப்பு (flagellum) இருக்கும், இது முட்டையை நோக்கி நீந்திச் செல்ல உதவுகிறது)
ஒரு உயிரையே உருவாக்கக் கூடிய சக்தி பொருந்திய, ஆசிட் பவருக்கு நிகரான அந்த விந்துவை நாம வீண் செய்யலாமா?
ஆசிட்டை கீழே ஊத்தினா லேசா கை கால்ல பட்டாலும் பொசுங்கிடும் தானே. அப்படியான ஆசிட் பவர் கொண்ட உயிர் உருவாக்கும் சக்தி கொண்ட விந்துவை தான் சுயஇன்பம்ன்ற பேருல வீணடிக்கிறாங்க இன்றைய இளைஞர்கள்.
அப்புறம் கல்யாணம் செய்யும் போது எப்டி நல்ல ஆரோக்கியமான சந்ததியை பெறுவதற்கான விந்து அவங்ககிட்ட இருக்கும்?
“இதுல என்ன தப்பு இருக்குனு நீங்க நினைக்கலாம். ஆனால் இயற்கைக்கு புறம்பாக செய்ற எதுவுமே அழிவை மட்டும் தான் தரும்.
இந்த வயசுல வர்ற உணர்வு இயற்கை தானே! பருவ வயதில் ஏற்படும் உடல் உருவ மாற்றங்கள் அப்படியான ஆசையைத் தூண்டுவது இயற்கை தானே! அதுக்கு வடிகாலாக சுயஇன்பம் அனுபவிக்கிறதும் இயற்கை தானேனு நீங்க நினைக்கலாம். ஆனால் உங்களுக்குள்ள காம உணர்வு வருவதே இயற்கை இல்லை தெரியுமா!” என்றாள் இளமயில்.
“இந்த வயசுல வர்ற உணர்வு இயல்பு தான்னு சொன்னாலும் இது எக்ஸ்டர்னல் ஃபேக்டர்ஸ்னால தூண்டப்படாம உங்களுக்குள்ள வராதுன்னு நீங்க புரிஞ்சிக்கனும்” என்றவள் மேலும் தொடர்ந்து பேசினாள்.
“அம்மாவோட வயித்துல இருந்து நாம குழந்தையாகப் பிறக்கும்போதே பிற்காலத்துல நாம உணரக்கூடிய விதவிதமான அத்தனை உணர்வுகளும் சேர்ந்தே பிறக்குது. ஆனால் குழந்தையாக இருக்கும்போது நம்மால அந்த உணர்வுகளை உணர முடிறது இல்லை.
அன்பு, காதல், ஆசை, இரக்கம், கோபம், வெறுப்பு, பகை, காமம்னு எல்லா உணர்வுகளோடும் தான் நாம பூமில பிறக்கிறோம்.
நாம் மனதளவிலும், உடலளவிலும் கொஞ்சம் கொஞ்சமாக வளர வளர நமக்குள் உறங்கிக்கிட்டு இருக்க உணர்வுகள் வயசுக்கு ஏத்த மாதிரி ஒவ்வொன்னா கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்பட ஆரம்பிக்குது.
மத்த உணர்வுகள் முன்னாடியே வெளிப்பட ஆரம்பிச்சிட்டாலும் அதில் காம உணர்வு மட்டும் நம்முடைய உடல் பருவமடைந்த பிறகு தான் வெளியே வர ஆரம்பிக்குது.
அப்படிப் பருவமடைந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ எல்லா நேரத்திலும் அந்த உணர்வு இருக்குமா என்றால் இல்லை.
அந்த உணர்வு சம்பந்தமான தாக்கம் வெளியிலிருந்து நமக்கு ஏற்படாத வரை நம்முடைய உடல் அதை உணராது. அதாவது தூண்டிவிடப்படாத வரை நம்முடைய உடலுக்கே இப்படி ஓர் உணர்வு இருக்குனு தெரியாது. நம்முடைய உடலே அந்த உணர்வை உற்பத்திச் செய்யாது.
அதைக் கண்டுக்காமலேயே விட்டுட்டா வீட்டுல உபயோகமில்லாம கிடக்குற டேபிள் சேரை போல அதுவும் நம்முடைய உடலில் பாய் போட்டு தூங்கிடும்.
ஆனால் இப்ப இருக்கிற சமூகச் சூழல்ல சினிமா, பாடல், விளம்பரம், டிவி ஷோனு பார்த்து வளரும் ஆணுக்கோ பெண்ணுக்கோ அது போல் காமத்தின் உணர்வுகள் ஒன்னும் செய்யாமல் பாய் போட்டு தூங்கிக்கிட்டிருக்குமானு கேட்டால் நிச்சயம் இருக்காது.
காரணம் இன்றைய சமூகம் ஒரு மனிதன் உடல்ரீதியாகக் காமத்தின் உணர்வுகளை உணர தயார் படுத்துவதற்கு முன்னாடியே மனதளவில் அவனைத் தயார்படுத்திடுது. அது தான் ஆபாச வீடியோ பார்க்குமளவுக்கு தூண்டி விட்டு அது தவறு இல்லைனும் நம்ப வச்சிருக்கு. அதனால் தான் சமூகம் உங்களுக்குள்ள அந்த உணர்வுகளைத் தூண்டிவிடும் ஆனால் நீங்க கட்டுப்பாட்டுக்குள்ள இருக்கனும்னு பெற்றோர்கள் சொல்லி வளர்க்கிறாங்க.
இயற்கையா நமக்குள்ள உற்பத்தியாகும் போது தான் அது நம் உடலுக்கும் மனதுக்கும் நன்மையை செய்யும். அதுவே செயற்கையா தூண்டிவிடப்பட்டு வரும் போது அது உடலுக்கும் மனதுக்கும் நன்மையை செய்யாது.
அதிலும் உங்க உடல் அதுக்காக தயாராகுறதுக்கு முன்னாடியே மனசு தயாராகிடுது.
அதனால தான் கட்டுப்படுத்தனும்னு சொல்லி மனசைக் கட்டுப்பாடா வச்சிக்கனும்னு அறிவுறுத்துறாங்க.
இப்படி வெளி சமூகச் சூழலால் தூண்டப்படும் உணர்வைச் சரியாகக் கையாளனும். அதுக்கு வடிகாலாக ஆபாச வீடியோக்கள் பார்க்கிறது, செக்ஸ் கதைகள் படிக்கிறது எல்லாமே தவறு தான். அது மேலும் உங்களோட மூளை வளர்ச்சியை சிதைஞ்சி, மூளையை மழுங்கடிச்சி, சிந்திக்கும் திறனை குறைஞ்சிடும். கவனச் சிதறல் ஏற்பட்டு உங்களுடைய குறிக்கோளை அடைய விடாம செஞ்சிடும். குடிப் பழக்கம், சிகரெட் பழக்கம் அளவுக்கு போதை கொடுக்கக் கூடியது காமம். காமத்தை கையாளக் கூடிய வயசு இது இல்ல. அது உங்களோட ஆற்றலையும் சக்தியையும் வீணடிச்சிடும்.
சரி செக்ஸ் உணர்வு தூண்டப் பட்டு உங்களுக்குள்ள வருது, மனக்கட்டுப்பாட்டோட நீங்க செக்ஸ் வீடியோ பார்க்காம, ஆபாசமான கதைகள் படிக்காம இருக்கீங்க. இப்ப
அதுக்கான வடிகாலா மடை மாற்றமா எதுவுமே நீங்க செய்யாம இருக்கும் போதும் உங்களை ஆக்ரமிச்ச அந்த உணர்வு உங்களை ஸ்டெரஸ் ஆக்கி கவனச்சிதறலை ஏற்படுத்தவும் வாய்ப்பிருக்கு.
என்னடா இது, வடிகாலா ஆபாச வீடியோ பார்க்காதீங்க, சுய இன்பம் செய்யாதீங்கனும் சொல்றீங்க, அப்படிச் செய்யாம இருந்தாலும் அது டிப்ரெஷனைக் கொடுக்கும்னு சொல்றீங்க. அப்ப நாங்க என்ன தான் செய்றதுனு கேள்வி வருது இல்ல” என்று கேட்டுச் சிரித்தாள் இளமயில்.
மாணாக்கர்களும் கூட சிரித்தனர்.

