Loading

 

அங்கு மல்லிகா அர்ச்சனாவிடம் கேள்விக் கேட்டிருந்த அதே நேரம் இங்கு ராதிகா பேலஸ் ஐந்து நட்சத்திர விடுதியில் தனது அறையில் அமர்ந்து படு பிசியாக வேலைச் செய்து கொண்டிருந்தான் அர்ஜூன்.

 

அர்ஜூனும் அன்று காலை சற்றுத் தாமதமாகவே தான் எழுந்தான். எழுந்ததும் கைப்பேசியை எடுத்து அர்ச்சனா தனக்கு அழைத்திருக்கிறாளா என்று தான் பார்த்தான்.

 

அவள் அழைக்கவில்லை என்றதும் சுணங்கிப் போனது அவன் மனம்.

 

அவளுக்கு அழைத்துப் பேசவும் தயக்கமாக இருக்க, அன்று வேலைக்கு விரைவாகச் செல்ல வேண்டிய நிலையில் வேறு இருந்ததால் எழுந்து குளித்துக் கிளம்பத் தொடங்கினான்.

 

கிளம்பும் நேரம் முழுவதும் அவனின் கண்கள் கைப்பேசித் திரையையே அவ்வப்போது பார்த்த வண்ணம் இருந்தன. அர்ச்சனாவின் அழைப்பை வெகுவாய் எதிர்பார்த்தது அவன் மனம்.

 

அன்று அந்த ஐந்து நட்சத்திர விடுதியில் முக்கிய அரசியல் கட்சியின் நிர்வாகிகள் குழுக் கூட்டம் ஏற்பாடாகி இருந்ததால் ஓட்டலுக்குச் சென்றதும் அவனது அலுவலில் முழுவதுமாய் மூழ்கிப் போனான் அர்ஜூன்.

 

அன்றைய நாள் முழுவதும் அந்த அரசியல்வாதி உடன் இருந்து அனைத்தையும் சரிபார்த்துச் செய்து கொடுத்துக் கவனிப்பதிலேயே அவனுக்கு நேரம் கடந்திருக்க, மாலை ஆறு மணியளவில் நிகழ்ச்சி முடிந்து அனைவரும் கிளம்பிய பிறகே அவனால் நிம்மதியாக மூச்சு விடவே முடிந்தது.

 

பெருமூச்சுடன் அயர்வாய் தனது இருக்கையில் கண்களை மூடி பின்னோக்கித் தலையைச் சாய்த்திருந்தவனின் கண்களுக்குள் வந்து நின்றாள் அர்ச்சனா.

 

‘நேத்து நைட் ஏன் அச்சுமா போன் செய்யலை?’ என்று யோசித்தவனுக்கு முன்தினம் அவளது பிறந்தநாள் என்பதே மறந்து விட்டிருந்தது.

 

கைப்பேசியை எடுத்தவன் அவளுக்கு அழைத்தான்.

 

அவனின் அழைப்பு எதுவும் அவளின் எண்ணிற்குப் போகாமலே இருக்கவும் குழப்பம் அடைந்தவனாய் அமர்ந்திருந்த நேரம், அவனின் அறைக்குள் வந்தான் ஜீவா.

 

உள்ளே வந்தவனிடம், “ஜீவா அர்ச்சனா நம்பருக்கு போன் பண்ணுங்க” என்றான் அர்ஜூன்.

 

திடீரென அர்ஜூன் இவ்வாறு கூறியதும் கேள்வியாய் அவனைப் பார்த்தவனாய்,

 

“அர்ச்சனா நம்பருக்கா? ஏன் சார்? கான்சர்ட் எதுக்கும் புக் செய்யனுமா? என்கிட்ட அவங்க ட்ரூப் நம்பரே இருக்கு சார். அவங்களுக்கு கால் செய்யவா? மொத்தமா ட்ரூப்பையே புக் செஞ்சிடலாம்” என்றான் ஜீவா.

 

அவனை முறைத்தவனாய், “சொல்றதை மட்டும் செய்யுங்க ஜீவா” சலிப்புடன் உரைத்தான்.

 

பணிவுடன்,”ஓகே சார்” என்றவன் அவளுக்கு அழைத்துப் பார்த்து விட்டு, “கால் எடுக்கலை சார்” என்றான்.

 

“ரிங் போச்சா ஜீவா? எனக்கு ரிங்கே போகலையே” தாடையில் தடவியவனாய் கேட்டான்.

 

“நீங்க போன் செஞ்சப்ப ரீச்சபுள்லா இருந்திருக்க மாட்டாங்களா இருக்கும் சார். எனக்கு ரிங் போச்சு சார். ஆனா அவங்க தான் எடுக்கலை” என்றான்.

 

“சரி ஜீவா! நீங்க என்ன கேட்க வந்தீங்க?” என்று கேட்டவன் அடுத்தடுத்த வேலையினில் மூழ்கிப் போனான்.

 

திருச்செந்தூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த இரவுப் பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்தாள் அர்ச்சனா.

 

அவளது தாயும் தந்தையும் வேறோர் இருக்கையில் அமர்ந்திருக்க, இவள் அவர்களின் பின்னே வேறொரு பெண்ணின் அருகே இருந்த இருக்கையில் அமர்ந்திருந்தாள்.

 

மாலை இசைக் கச்சேரி முடிந்ததும் அவசர அவசரமாகக் கிளம்பி வீட்டிற்குச் சென்று துணிகளை எடுத்து வைத்து பயணப் பொதியைத் தயார் செய்து கிளம்பி பேருந்திற்குள் ஏறுவது வரை பரபரப்பாகவே நேரம் சென்றிருக்க, இப்பொழுது ஓய்வாய் அமர்ந்ததும் அர்ஜூனின் நினைவில் மூழ்கியது அவளின் மனம்.

 

‘இன்னிக்கு என் நினைப்பு இருந்திருக்குமா அவருக்கு? ஏன் நான் போன் செய்யலைனு யோசிச்சிருப்பாரா? என்னோட கோபத்தைப் புரிஞ்சிருப்பாரா?’ என்றெல்லாம் சிந்தித்தவாறு அமர்ந்திருந்தவளுக்கு காலை அவளின் தாய் மல்லிகா அவளிடம் அர்ஜூன் குறித்துப் பேசியது நினைவினில் வந்து போனது.

 

“நானும் பார்த்துட்டு தான் இருக்கேன். கொஞ்ச நாளா நீ ஆளே சரியில்லாம தான் சுத்திட்டு இருக்க! அந்த அர்ஜூன்கிட்ட எதுவும் பேசிக்கிட்டு இருக்கியா என்ன? இல்ல புதுசா யாரையும் லவ் பண்றியா?” கடுமையான குரலில் மல்லிகா கேட்கவும்,

 

“அப்படிலாம் எதுவும் இல்லமா. நான் யாரையாவது லவ் பண்ணா உன்கிட்ட சொல்லாம இருப்பேனாமா?” என்றாள் அர்ச்சனா.

 

“எதுவும் இல்லாம இருந்தா சரி தான். ரெண்டாந்தாரமா தான் வாக்கப்பட்டு போவேன்னு ஏதாவது ஏடாகூடமா செஞ்சிட்டு இருந்தீனா உன் அம்மாவை மறந்திடு. நான் உன் கல்யாணத்துக்குலாம் வந்து நிக்க மாட்டேன் சொல்லிட்டேன்” என்று கடுமையாக முறைத்தவாறே உரைத்தார்.

 

தாயின் பேச்சில் உள்ளுக்குள் கிலிப் பிடித்தாலும், “அர்ஜூன் மேல ஏன்மா உனக்கு இவ்ளோ கோவம்?” எனக் கேட்டாள்.

 

“அந்தப் பையன் மேல எனக்கென்ன கோவம்? நீ மூளை கெட்டு போய் அந்தப் பையனைத் தான் கல்யாணம் செஞ்சிப்பேன்னு வந்து நிக்கக் கூடாதேனு தான் சொல்லிட்டு இருக்கேன்” என்றார் மல்லிகா.

 

“அதெல்லாம் உன் பேச்சை மீறி நான் நடப்பேனா” என்று மல்லிகாவின் மனம் குளிரும் வண்ணம் பேசி விட்டு தான் கிளம்பிப் போனாள் அர்ச்சனா.

 

தாயிடம் இயல்பாகப் பேசி விட்டாலும் அதன் பிறகு அவளின் மனம் நிலைக் கொள்ளாமல் தவிக்க, இசைக்குழுவினரின் அலுவலகத்திற்குச் சென்றதும் முதல் வேலையாக தந்தையின் கைப்பேசிக்கு அழைத்து தாய் கூறியனவற்றை உரைத்தாள்.

 

“பயமாயிருக்குப்பா! ஐ லவ் அர்ஜூன்ப்பா. எனக்கு அவரை ரொம்பப் பிடிச்சிருக்கு. அவர் ரொம்ப நல்லவருப்பா. அம்மா ஏன் இப்படிச் சொல்றாங்க?” என்று புலம்பினாள்.

 

“உங்க அம்மா சொல்றதுல என்ன தப்பு இருக்கு அச்சுமா” எனக் கேட்டார் கோவிந்தராஜன்.

 

“என்னப்பா நீங்களும் அம்மா மாதிரி பேசுறீங்க?” அதிருப்தியான குரலில் அவள் கேட்கவும்,

 

“நான் அர்ஜூன் பத்தி விசாரிச்சேன்டா. நல்ல பையன் தான். மூனு மாசம் தான் முதல்ல கல்யாணம் செய்த பொண்ணு கூட வாழ்ந்திருக்கான். அதுக்குப் பிறகு மியூசுவல் டிவோர்ஸ் அப்ளை செஞ்சி ஒன் இயர்ல டிவோர்ஸ் ஆகியிருக்கு. ஆனா முதல் கல்யாணம் டிவோர்ஸ் ஆனதுக்கான காரணம் வெளிப்படையா யாருக்கும் தெரியலைமா! அது தெரியாம எப்படி கல்யாணத்தைப் பத்தி யோசிக்க முடியும் சொல்லு” என்றார்.

 

“அது தான் உங்கப் பிரச்சனைனா அதை நான் அவர்கிட்ட கேட்டுச் சொல்றேன். ஆனா நீங்க அம்மாவை எப்படியாவது இந்தக் கல்யாணத்துக்கு ஒத்துக்க வைங்கப்பா ப்ளீஸ்! என்னால அர்ஜூனைத் தவிர வேற யாரையும் கல்யாணம் செஞ்சிக்க முடியும்னு தோணலைப்பா” என்றாள் அர்ச்சனா.

 

“மொதல்ல அர்ஜூனோட டிவோர்ஸ்க்கான காரணம் நியாயமானதா இருந்தா மட்டும் தான் நானே இந்தக் கல்யாணத்துக்கு ஒத்துப்பேன் அச்சுமா. அதுக்குப் பிறகு தான் உங்கம்மாவைப் பத்தி யோசிக்கனும்” என்று திட்டவட்டமாக உரைத்த கோவிந்தராஜன்,

 

“ஆமா மொதல்ல அர்ஜூன்கிட்ட உன் லவ்வைச் சொல்லிட்டியா?” என்று கேட்டார்.

 

“இல்லப்பா! அவர் யாரையும் கல்யாணம் செஞ்சிக்கிற ஐடியாலேயே இல்ல. ஃப்ரண்ட்டா தான் என்கிட்ட பேசிட்டு இருக்காரு” என்றாள்.

 

“என்னமா நீ! அவரே கல்யாணத்துல இன்ட்ரஸ்ட் இல்லாம இருக்கும் போது அவரைத் தான் கல்யாணம் செஞ்சிப்பேன்னு அடம் பிடிக்கிறியே! இது வாழ்க்கைப் பிரச்சினைடா அச்சுமா. எடுத்தோம் கவுத்தோம்னு முடிவு எடுக்காதடா” கவலைத் தோய்ந்த குரலில் தந்தையாய் அறிவுறுத்தினார்.

 

தந்தையின் கலக்கம் புரிய, “அப்பா நான் அவசரகதில எடுத்த முடிவு இல்லப்பா இது. மூனு மாசமா அவர்கிட்ட பேசிட்டு இருக்கேன். ஜென்டில்மேன்ப்பா அவரு. எனக்கு நம்பிக்கை இருக்கு. அவரோட டிவோர்ஸ்க்குப் பின்னாடி கண்டிப்பா ஏதோ நியாயமான காரணம் இருக்கும். நீங்க எப்படி அம்மாவைச் சமாதானம் செஞ்சி அவரை எனக்கு கட்டி வைக்கிறதுனு மட்டும் யோசிங்க. அவரை இந்தக் கல்யாணத்துக்கு ஒத்துக்க வைக்க வேண்டியது என்னோட பொறுப்புப்பா” என்றாள்.

 

ஹ்ம்ம் என்று பெருமூச்சு விட்டவராய், “உனக்கு இப்ப மாப்பிள்ளை பார்த்தா கூட, நீ நான்னு போட்டிப் போட்டுட்டு பசங்க வருவாங்கமா. அப்படி என்ன தான் இந்தப் பையன்கிட்ட இருக்குனு இப்படி அடம் பிடிக்கிறியோ தெரியலை” இது வரை மகளின் விருப்பத்திற்கு எதிராக நடந்து கொள்ளாத தந்தை என்பதால் தனது ஆற்றாமையை இவ்வாறாய் உரைத்திருந்தார்.

 

“என்னப்பா அப்படி என்ன இருக்குனு கேட்டுட்டீங்க! உங்களை மாதிரியே கண்ணு இருக்கே அவர்கிட்ட! அதைப் பார்த்துத் தானே தொபுக்கடீர்னு அவர்கிட்ட விழுந்துட்டேன்” என்று கேலியாய் அர்ச்சனா கூறவும் வாய்விட்டுச் சிரித்தார் கோவிந்தராஜன்.

 

“நிஜமாவே அந்த பையனோட கண்ணு என்னை மாதிரி இருக்குமா அச்சுமா?” என்று சந்தேகத்துடன் அவர் கேட்க,

 

“நீங்க நம்பினாலும் நம்பலைனாலும் அது தான்ப்பா நிஜம்” என்றவளின் பேச்சில் சிரித்திருந்தார் கோவிந்தராஜன்.

 

தாய் தந்தையிடம் காலைப் பேசியதை நினைத்தவாறு பேருந்தில் பயணித்திருந்தவள், நேரம் ஒன்பதரை ஆகவும் கைப்பேசியைப் பார்த்தாள்.

 

‘இன்னிக்காவது அவரே போன் செய்றாரா இல்லையானு பார்ப்போம்’ என்று மனத்தோடு நினைத்தவளாய் அவனது எண்ணை அன்பிளாக் செய்தாள்.

 

அவள் அன்பிளாக் செய்த மறுநொடி அவனிடமிருந்து அழைப்பு வரவும், ‘கால் டிரை செஞ்சிட்டே இருந்திருப்பாரோ’ என்று சிந்தித்தவளாய் தனக்கு முன்னே இருக்கையில் அமர்ந்திருந்த தாய் தந்தையரை எட்டிப் பார்த்தாள்‌.

 

இருவரும் உறங்குவதற்காக கண்களை மூடியிருந்தாலும் அவர்களிடம் சிறு அசைவு தெரிய, ‘இப்ப நான் போன் எடுத்துப் பேசினா செத்தேன்’ மனத்தோடு நினைத்தவளாய் அவனது அழைப்பைத் துண்டித்தாள்.

 

அர்ச்சனா இங்கு அழைப்பை அவ்வாறு துண்டித்ததும் அங்கு அவளுக்குத் தொடர்ந்து அழைப்புவிடுக்க முயன்று கொண்டிருந்த அர்ஜூன், ‘ஏன் கால் எடுக்க மாட்டேங்கிறா?’ என்று யோசித்தவனாய் அவளுக்குக் குறுஞ்செய்தி அனுப்பினான்.

“ஹாய் அச்சுமா! ஆர் யூ ஃபைன்? எனி பிராப்ளம்?” என அனுப்பினான்.

 

அவனது குறுஞ்செய்தியைப் பார்த்ததும் மனம் மகிழ்வில் துள்ளிய போதும், “நான் கோபமா இருக்கேன்” என்று அனுப்பினாள்.

 

“கோபமா? ஏன்? எதுக்கு? ஓ அதான் நேத்து போன் செய்யலையா?” என்று அனுப்பினான் அர்ஜூன்.

 

அவனது குறுஞ்செய்தியைப் பார்த்ததும் அடங்கியிருந்த கோபம் பொங்கிக் கொண்டு வர, “உங்களுக்கு என் ஞாபகமே வரலைத் தானே! ஆசை ஆசையா பர்த்டே பத்தி சொன்னாளே அவளுக்கு போன் செஞ்சி விஷ் செய்வோம்னு உங்களுக்குத் தோணவே இல்லை தானே! நான் தான் பைத்தியக்காரி மாதிரி உங்களை மனசார ஃப்ரண்ட்டா நினைச்சிட்டு இருந்திருக்கேன். ஆனா நீங்க மூனு மாசம் பழகியும் என்னை ஃப்ரண்ட்டா நினைக்கலை. டைம் பாஸூக்குத் தானே என்கிட்ட பேசிட்டு இருந்திருக்கீங்க” என்று அனுப்பினாள்.

 

அதைப் படித்தவனுக்கு கோபம் தலைக்கேற, “ஜஸ்ட் ஸ்டாப் இட் அர்ச்சனா! டைம் பாஸூக்கு பொண்ணுங்ககிட்ட பேசி கடலைப் போடுற ஆளு மாதிரி என்னைத் தெரியுதா? அப்படி நினைச்சு தான் இது வரைக்கும் நீ என்கிட்ட பேசிட்டு இருக்கேனா, இதோட நம்ம பேச்சை நிறுத்திப்போம்” என்று அனுப்பினான்.

 

அவனது குறுஞ்செய்தியைப் படித்தவள் அய்யய்யோ என்று பதறிப் போனாள்.

 

அவன் தனக்கு அழைத்து வாழ்த்துத் தெரிவிக்காதது, அவன் மீது தான் கோபமாக இருந்தது என அனைத்தையும் மறந்தவளாக உடனே அவனுக்கு அழைப்பு விடுத்தாள்.

 

கைப்பேசி அழைப்பை அவன் எடுத்ததும் ஹஸ்கி குரலில், “இப்ப என்னாச்சுனு பேசுறதை நிறுத்திடுவேன்னு பிளாக் மெயில் செஞ்சிட்டு இருக்கீங்க அஜூப்பா” என்று கோபமான குரலில் கேட்டாள் அர்ச்சனா.

 

அத்தியாயம் 15

 

“இப்ப என்னாச்சுனு பேசுறதை நிறுத்திடுவேன்னு பிளாக் மெயில் செஞ்சிட்டு இருக்கீங்க அஜூப்பா” ஹஸ்கி குரலில் கேட்டாள் அர்ச்சனா.

“எப்படி உன்னை ஃபோன் செய்ய வச்சேன் பார்த்தியா?” என்று சிரித்தான் அர்ஜூன்.

“அப்ப நீங்க நிஜமான கோபத்துல அந்த மெசேஜ் அனுப்பலையா? நான் எவ்ளோ பதறிப் போய்ட்டேன் தெரியுமா! இனி இப்படிப் பேச மாட்டேன்னுலாம் சொல்லாதீங்க அஜூப்பா. மனசு கஷ்டமாயிருக்கு” என்றாள்.

“அப்ப நீ என்னை பிளாக் செஞ்சப்ப எனக்கு எப்படி இருந்திருக்கும். ஏன் அப்படிச் செஞ்ச அச்சுமா?” ஆதங்கமான குரலில் கேட்டான்.

‘ஆஹா பிளாக் செஞ்சது தெரிஞ்சிடுச்சா?’ என்று மனத்திற்குள் நினைத்தவளாய்,

“நான் எவ்ளோ ஆசை ஆசையா உங்க போன் காலுக்காக நேத்துக் காத்துட்டு இருந்தேன் தெரியுமா. ஆனா நீங்க என்னை ஏமாத்திட்டீங்க” வருத்தமான குரலில் உரைத்தாள்.

“அதுக்காக பிளாக் செய்வியா? என்ன பழக்கம் இது? எனக்கு மனசுக்கு எவ்ளோ கஷ்டமா இருந்துச்சு தெரியுமா? நீ எனக்கு போன் செஞ்சி நாலு திட்டு திட்டியிருந்தா கூட இவ்ளோ கஷ்டமா இருந்திருக்காது! இப்ப மட்டும் நீ அன்பிளாக் செய்யாம விட்டிருந்தீனா கண்டிப்பாக உன்கிட்ட பேசியிருக்கவே மாட்டேன்” கடுமையான குரலில் உரைத்தான்.

அவனது உணர்வைப் புரிந்தவளுக்கு தான் செய்த தவறு விளங்க மெல்லிய குரலில், “சாரி” என்றாள்.

அவனிடம் இருந்து பதில் ஏதும் வராது போக, “என் செல்ல அஜூப்பால, என் பட்டு அஜூப்பால, இந்த ஒரு தடவை உங்க அச்சுமாவை மன்னிச்சிடுவீங்களாம்” கெஞ்சும் குரலில் உரைத்தாள்.

 

அவளின் கெஞ்சல் கொஞ்சல் மொழியினில் அவனின் மனம் பாகாய் உருகிப் போனது.

 

“சரி விடு அச்சுமா! இனி இப்படிச் செய்யாத” என்றவன்,

 

“ஆமா ஏன் இப்படி ஹஸ்கி வாய்ஸ்ல பேசுற நீ” என்று சிரிப்புடன் கேட்டான்.

 

“பஸ்ல டிராவல் பண்ணிட்டு இருக்கேன்” என்றாள்.

 

“என்னது டிராவலா? எங்கே போற? பெங்களூர்ல இல்லையா நீ? அதான் நேத்து எனக்கு போன் செய்யலையா?” எனக் கேட்டான்.

 

“பெங்களூருலருந்து திருச்செந்தூருக்கு பஸ்ல போய்ட்டு இருக்கோம். எங்க குலத்தெய்வக் கோவிலுக்குப் போறோம்” என்றவள்,

 

“நேத்து ஏன் எனக்குப் போன் பண்ணி விஷ் செய்யலை நீங்க?” எனக் கேட்டாள்.

 

“சாரிடா அச்சுமா. நேத்து கொஞ்சம் ஆபிஸ் வேலைல பிசியா இருந்தனால மறந்துட்டேன்” என்றான்.

 

“இன்னும் நான் உங்க மேல கோபமா தான் இருக்கேன்” குரலில் துளியும் கோபமில்லாது இருக்க, சிணுங்கல் குரலில் உரைத்தாள்.

 

“அப்படியா சரி” வாய்க்குள் சிரிப்பை ஒழித்துக் கொண்டு அவன் கூற,

 

“என்னது சரியா? போங்க நான் கோபமா போனை வைக்கிறேன்” என்று விளையாடினாள்‌.

 

“ஹே ஏஏஏ போனை வச்சிடாத! அப்புறம் எப்படா போன் வரும்னு மனசு கிடந்து தவிக்கும்” என்று அலறினான் அர்ஜூன்.

 

அவன் அவ்வாறு கூறியது அவளின் மனத்தில் பூமழைச் சாரலைப் பொழிய,

 

“அஜூப்பா ஐ மிஸ்டு யூ. நேத்து நானும் அப்படித் தான் உங்க காலுக்காக காத்திருந்து தவிச்சு போனேன். உங்ககிட்ட பேசாம அழுகை அழுகையா வந்துச்சு தெரியுமா” மனத்தின் பரிதவிப்பினை உரைத்தாள்.

 

தன்னைப் போலவே அவளும் உணர்ந்ததை எண்ணி நெஞ்சுருகிப் போக,

 

“சாரிடா! இனி இப்படி ஆகாம பார்த்துக்கிறேன். நேத்து ஆபிஸ்ல பிசி வேலைனால கொஞ்சம் டயர்ட் ஆகிட்டேன். வீட்டுக்கு வந்த உடனே தூங்கிட்டேன். இல்லனா உனக்கு நேத்து நானே போன் செஞ்சிருப்பேன்” என்றான்.

 

அவளின் முன்னால் இருக்கையில் அமர்ந்திருந்த மல்லிகாவிடம் லேசாய் அசைவு தெரியவும்,

 

சில நொடிகள் ஏதும் பேசாமல் அமைதியாக இருந்தாள் அர்ச்சனா.

அவர் ஆழ்ந்து உறங்குவதை உறுதிச் செய்திக் கொண்டவளாய் மீண்டும் பேச வாயைத் திறப்பதற்குள் அங்கு அர்ஜூன் பலமுறை ‘ஹலோ ஹலோ.. லைன்ல இருக்கியா அச்சுமா’ என்றிருந்தான்.

 

“ஹ்ம்ம் இருக்கேன் இருக்கேன்ப்பா” மெல்லிய குரலில் உரைத்தவள்,

 

“மூனு நாளைக்கு என்னால உங்ககிட்ட பேச முடியாது அஜூப்பா. நான் திரும்ப பெங்களூர் வந்ததும் தான் பேச முடியும்” என்றாள்.

“என்னது மூனு நாளா?” அதிர்ச்சியுடன் கேட்டவன், “சரி பேச வேண்டாம். மெசேஜ் செய்ய முடியுமா?” எனக் கேட்டான்.

 

“இல்ல அஜூப்பா. அங்கே எல்லாரும் ஒரே ரூம்ல தான் படுப்போம். நைட் போன் யூஸ் செய்யவே முடியாது. பகல்ல கோவில் சொந்தக்காரங்க வீடுனு சுத்திட்டு இருப்போம். பெங்களூர் வந்த பிறகு நானே கால் செய்றேன்” என்றவள், “இப்ப போனை வைக்கிறேன்ப்பா” என்றாள்.

 

“ஏன்? ஏன்? ஏன் அதுக்குள்ள வைக்கிறேன்னு சொல்ற?” வைத்து விடுவாளோ என்ற படபடப்புடன் கேட்டான் அர்ஜூன்.

 

“இங்கே எல்லாரும் பஸ்ல தூங்குறாங்கப்பா. நாம பேசுறது அவங்களுக்கு டிஸ்டர்பென்ஸ்ஸா இருக்கும்” மெல்லிய குரலில் உரைத்தாள்.

 

“ஓ சரிடா” குரலில் சுரத்தே இல்லாமல் உரைத்தான்.

 

அவளோ இணைப்பைத் துண்டிக்காமல் அவனின் மூச்சொலியைக் கேட்டுக் கொண்டிருந்தாள்.

 

சில நொடிகள் கழித்து, “என்ன வைக்கலையா?” எனக் கேட்டான் அர்ஜூன்.

 

“நீங்க கட் பண்ண வேண்டியது தானே! நான் தான் வைக்கனுமா?” உள்ளே போன குரலில் கேட்டாள் அர்ச்சனா.

 

“நீ தானே வைக்கிறேன்னு சொன்ன! நானா சொன்னேன்? உனக்கு வேணும்னா நீயே கட் பண்ணு” என்று சிரித்தான் அர்ஜூன்.

 

“ம்ப்ச் அஜூப்பா” என்று சிணுங்கினாள்‌.

 

“உங்களை ரொம்ப ரொம்ப மிஸ் பண்ணுவேன்‌. மூனு நாள் என் தொந்தரவு இல்லாம சந்தோஷமா இருங்க. குட் நைட்!” என்று இணைப்பைத் துண்டித்ததும்,

 

‘லவ் யூ அஜூப்பா’ என்று மனத்தோடு கூறிக் கொண்டவளின் கண்களில் இருந்து சரசரவெனப் பொங்கி வழிந்தது கண்ணீர்.

 

அங்கே அர்ஜூனின் வாயோ, ‘மிஸ் யூடா அச்சுமா’ என்று புலம்ப கண்களோ கைப்பேசியையே வெறித்துப் பார்த்திருந்தன.

 

இருவரின் மனங்களும் பிரிவின் வாதையை உணர்ந்தன‌.

 

அடுத்த மூன்று நாள்கள் பேச முடியாததை எண்ணி மனம் பாரமாகிப் போனது இருவருக்கும்.

 

இருவருக்குமே அவ்விரவு தூங்கா இரவாகிப் போனது.

 

மறுநாள் காலை வழமைப்போல் அலுவலுக்குச் சென்று விட்டு வந்தவனின் நினைவுகள் அர்ச்சனாவையே சுற்றிச் சுழன்றிருக்க இரவு ஒன்பதரை மணியாகவும் கைப்பேசியையே வெறித்தவாறு அமர்ந்திருந்தான் அர்ஜூன்.

 

அவளிடம் பேசத் தொடங்குவதற்கு முன்பாக மனத்தினில் எத்தகைய தனிமையை வெறுமையை உணர்ந்தானோ அதை அப்படியே இன்று மீண்டுமாய் உணர்ந்தான் அர்ஜூன்.

 

அவள் இந்த மூன்று மாதங்களில் தன்னை எந்தளவிற்கு உயிர்ப்புடனும் மகிழ்வுடனும் வைத்திருந்திருக்கிறாள் என்பதை உணர்ந்தான்.

 

அவள் தன் வாழ்விற்குள் வந்த பிறகு தனக்குள்ளே ஏற்பட்டிருக்கும் நேர்மறையான மனத்தின் மாற்றங்களைப் பற்றி நினைத்துப் பார்த்தவனுக்கு அவளின் மீது அன்பு பெருகியது‌.

 

அர்ச்சனா பற்றிய சிந்தனையுடனேயே படுத்தவனாய் நெடு நேரம் கழித்தே உறங்கினான் அர்ஜூன்.

 

அங்கே ஊர்ச்சுற்றிக் கொண்டே இருந்தாலும் அர்ச்சனா எதையோ தொலைத்தவள் போலவே உலவிக் கொண்டிருந்தாள்.

 

இவனிடம் பேசாதது அவளின் மனத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இரவு ஒன்பதரை மணியாகும் போதெல்லாம் அவளின் மனம் அவனைத் தேடியது. அவன் தன்னைப் பற்றி இப்போது சிந்தித்திருப்பானா, இப்போது என்ன செய்து கொண்டிருப்பான் என்றெல்லாம் அவனைப் பற்றிச் சிந்தித்தவளாய் அங்கே இருப்பவர்களுடன் பேசிக் கொண்டிருந்தாள் அர்ச்சனா.

 

இப்படியே இருவருக்கும் இருவரின் நினைவுகளுடனேயே மூன்று நாள்கள் கழிய, நான்காம் நாள் காலை ஏழு மணியளவில் பெங்களூரில் தங்களது வீட்டுக்கு வந்தவுடன் தனது அறைக்குச் சென்றவள் மறு நொடி அவனுக்கு அழைப்பு விடுத்திருந்தாள்.

 

அப்பொழுது தான் குளிப்பதற்காக எழுந்தமர்ந்தவன் அர்ச்சனாவிடம் இருந்து வந்த அழைப்பைப் பார்த்து இன்ப அதிர்ச்சி அடைந்தவனாய் அழைப்பையேற்று மகிழ்வும் நெகிழ்வுமாய், “அச்சுமா” என்றிருந்தான்.

 

அவன் குரலைக் கேட்ட மறுநொடி கண்களில் கண்ணீர் பெருக, “மிஸ்டு யூ சோ மச் அஜூப்பா” என்றாள் அர்ச்சனா.

 

“நானும்டா! ஊர்லருந்து எப்ப வந்த? இப்ப நீ போன் செய்வனு எதிர்பார்க்கவே இல்ல” பூரித்த குரலில் உரைத்தான்.

 

“நாம கல்யாணம் செஞ்சிக்கலாமா அஜூப்பா” எனக் கேட்டாள் அர்ச்சனா.

 

திடீரென்ற எதிர்பாரா அவளின் இக்கேள்வியில் பேரதிர்வுக்குள்ளானவனாய், “அச்சுமா! விளையாடுறியா?” அவன் குரலில் இருந்த மகிழ்வு நெகிழ்வு எல்லாம் மறைந்து போக அதட்டலாய் கேட்டான்.

 

“இல்ல அஜூப்பா! உங்கக்கிட்ட பேசாம இருந்த இந்த மூனு நாள் எனக்கு பைத்தியம் பிடிச்சா மாதிரி ஆகிடுச்சு. என்னால எதுலயுமே கவனம் செலுத்த முடியலை. நீங்க இல்லாம என்னால இருக்கவே முடியாதுனு மட்டும் நல்லா புரிஞ்சிக்கிட்டேன். ஐ நீட் யூ பேட்லி இன் மை ஃலைப். ப்ளீஸ் என்கிட்ட வந்துடுங்க அஜூப்பா” கண்ணீர் நிறைந்த கண்களுடன் தவிப்பான கரகரத்த குரலில் உரைத்தாள்.

 

அவளின் தவிப்பும் தன் மீதான அவளின் அன்பும் அவன் மனத்தை பிசைய, “அச்சுமா என்னடா?” என்றான்.

 

“லவ் யூ அஜூப்பா! மேட்லி டீப்லி ஐம் இன் லவ் வித் யூ! இந்த மூனு நாள்ல உங்க மேல எனக்கிருக்க பித்து தெளியவே தெளியாதுனு புரிஞ்சி போச்சு. நாம கல்யாணம் செஞ்சிக்கலாம் அஜூப்பா” என்றாள்.

 

அர்ஜூனின் இதயம் வெகு பலமாய் துடித்திருந்தது. தனது வாழ்வில் மற்றொரு திருமணமா? அதற்கு வாய்ப்பே இல்லை என்று நினைத்தவன் அவளைச் சமாதானம் செய்யும் பொருட்டு,

 

“அச்சுமா! இதை பத்தி நாம அப்புறமா பேசுவோம். இப்ப நீ போய் ரெஸ்ட் எடு. நான் அப்புறமா கூப்பிடுறேன்” என்றவன் உடனே இணைப்பைத் துண்டித்திருந்தான்.

 

அவன் இவ்வாறு கூறி இணைப்பைத் துண்டித்தது அவளுக்குக் கோபத்தைக் கிளப்ப மீண்டுமாய் அவனுக்கு அழைத்தவள், “நீங்க சொல்லுங்க! இந்த மூனு நாள் என்னை நீங்க நினைச்சீங்களா இல்லையா? என் நினைப்பே உங்களுக்கு வரலையா? சொல்லுங்க அஜூப்பா” சற்று கோபமாகவே கேட்டாள் அர்ச்சனா.

 

“அச்சுமா! எப்படிடா உன்னை நினைக்காம இருப்பேன். தினமும் ஒன்பதரை மணி ஆனதும் உன் நினைப்பு தான் வந்துச்சு. ஆனா அதுக்காக காதல் கல்யாணம்னு நம்ம நட்பை நான் கொண்டு போக விரும்பலைடா. நீ நல்லா இருக்கனும்டா” என்னை புரிந்து கொள்ளேன் என்பது போன்ற குரலில் அவன் கூற,

 

“அப்ப நான் உங்க மனசுல எந்த பாதிப்பையும் ஏற்படுத்தலையா அஜூப்பா?” அழுகையும் தேம்பலுமான குரலில் கேட்டாள் அர்ச்சனா.

 

அவளின் அழுகையும் வருத்தமும் அவன் மனத்தை வலிக்கச் செய்ய, “அச்சுமா நாம இதைப் பத்தி இப்ப எதுவும் பேச வேண்டாம். நீ ரொம்ப இமோஷ்னலா இருக்க. நாம அப்புறமா பேசலாம்டா” என்றான்.

 

“இல்ல எனக்கு இப்பவே தெரிஞ்சாகனும். என்னை கல்யாணம் செஞ்சிக்க முடியுமா முடியாதா? சே யெஸ் ஆர் நோ” தீர்க்கமான குரலில் கேட்டாள் அர்ச்சனா.

 

“முடியாது அச்சுமா. உனக்கு இன்னும் கல்யாணமே ஆகலை. இரண்டாம் தாரமா என்னை ஏன்?…” அதற்கு மேல் அவன் பேசுவதை கேட்க அவள் இணைப்பில் இல்லை. நொறுங்கிப் போனது அவள் மனம்.

 

கோபத்துடன் அவன் இணைப்பைத் துண்டித்தவள் உடனே அவன் எண்ணை பிளாக் செய்தாள்.

 

அவனது பதில் அவளுக்கு பெரிய ஏமாற்றத்தை அளித்திருக்க, நொறுங்கிப் போனாள் அர்ச்சனா.

 

“என்னை நீங்க விரும்பவே இல்லையா அஜூப்பா? நான் இல்லாம உங்களால வாழ முடியமா” என்று தனக்குத் தானே புலம்பியவளாய் அப்படியே தரையில் மடங்கி அமர்ந்தவள் குலுங்கி அழுதாள்.

 

அங்கே அவளின் எண்ணிற்கு மீண்டும் மீண்டுமாய் முயற்சித்துத் தோற்ற அர்ஜூன் மனம் நொந்து போனான்.

Click on a star to rate it!

Rating 3.3 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்