Loading

 

“நான் என்ன ரேபிட் ஃபயர் ரவுண்ட்டா நடத்திட்டு இருக்கேன். ஒரு வார்த்தைல பதில் சொல்லிட்டு இருக்கீங்க” என்றவள் கேட்டதும் சிரித்தவன்,

 

“எனக்கு உன்னை மாதிரி நீட்டி முழக்கி பேசத் தெரியாது அச்சுமா” என்றான்.

 

“சரி அப்ப நான் கேட்குறதுக்குலாம் பதில் சொல்லிட்டே வாங்க” என்றவள்,

 

“காலைல எத்தனை மணிக்கு எழுந்திரிச்சீங்க?” எனக் கேட்டாள்.

 

அதற்கு அவன் பதில் உரைத்ததும்,

 

“அப்புறம் என்ன சாப்பிட்டீங்க? ஆபிஸ்க்கு எத்தனை மணிக்குப் போனீங்க?” எனக் கேட்டாள்.

 

அதற்கும் அவன் பதில் உரைத்ததும்,

 

“ஆபிஸ்ல என்னலாம் செஞ்சீங்க? அங்க யாரெல்லாம் உங்கக் கூட வேலைச் செய்றாங்க” என்று அடுக்கடுக்காய் கேள்விகளைக் கேட்டு அவனின் அன்றாடங்களையும் அவனது பணியிடப் பணியாளர்கள் பற்றியும் அறிந்து கொண்டாள்.

 

தன்னுடைய அன்றாடங்களையும் தங்களது இசைக்குழுவில் உடன் பணி செய்பவர்கள் பற்றியும் அவனுடன் பகிர்ந்து கொண்டவளாய் ஒரு மணி நேரத்திற்கு மேல் தொடர்ந்து பேசியவளுக்கு அடுத்து என்ன பேசுவது என்று யோசனை கிடைக்காது போக, நினைவு வந்தவளாய்,

 

“நேத்து அந்த மேரேஜ் ரிசப்ஷனுக்கு நீங்க வர்றீங்கனு தெரிஞ்சி தான் நான் வந்தேன்” என்று குறும்புச் சிரிப்புடன் உரைத்தாள்.

 

“அப்படியா?” நம்பாத குரலில் கேட்டான்.

 

“நிஜமாஅஅஅஅ” என்று அவள் ராகமாய் கூறவும் அவள் விளையாடுவதாய் அவனுக்குத் தோன்ற,

 

“ஹேய் கேடி பொய் சொல்றியா?” என்று சிரிப்புடன் கேட்டான்.

 

“இல்லை அஜூ! பிராமிஸா சொல்றேன்” சிறுபிள்ளைப் போன்ற அவளின் பேச்சில்,

 

“கிரேசி கேர்ள்” என்று சிரித்தான்.

 

‘ஆமா ஆமா உங்க மேல தான் கிரேசியாகிச் சுத்துறேன்’ மனத்திற்குள் கூறிக் கொண்டவள்,

 

“உங்களுக்காகத் தான் நேத்து ரிசப்ஷன்ல பாட வந்தேன். நேத்து எனக்கு உடம்பு சரியில்ல. எனக்கு பதிலா வேற பாடகியைத் தான் கேட்கச் சொல்லிருந்தேன். அப்ப தான் பேச்சு வாக்குல உங்க அப்பா தான் இந்த ரிசப்ஷனுக்கு எங்க ட்ரூப்பை ரெஃபர் செஞ்சதா சுபாஷ் அண்ணா சொன்னாரு. உங்களோட ரிலேடிவ் மேரேஜ் இதுனு தெரிஞ்சிது. நீங்க வருவீங்கனு மனசுல தோணுச்சு. அதான் உடம்பு சரியில்லனாலும் பரவாயில்லனு வந்தேன்” என்று விளக்கமளித்தாள்.

 

“பெங்களூர்ல உனக்குத் தெரிஞ்ச மியூசிக் ட்ரூப் ஏதாவது இருந்தா சொல்லுனு ஒரு மாசத்துக்கு முன்னாடி அம்மா என்கிட்ட கேட்டாங்க. நான் தான் ராகமாலிகா இசைக்குழு நல்லா இருக்கும்னு சொன்னேன். ஆனா இந்த ரிசப்ஷனுக்கு சொல்ல தான் அம்மா கேட்டாங்கனு எனக்குத் தெரியாது” என்றவன்,

 

“உடம்பு சரியில்லனு தான் நேத்து சீக்கிரம் கிளம்பிட்டியா? இப்ப உடம்பு பரவாயில்லையா?” எனக் கேட்டான்.

 

“ஹ்ம்ம் ஜலதோஷம் தான். இப்ப சரியாகிடுச்சு” என்றவளுக்கு அடுத்து என்ன பேசுவதென்று தோன்றாமல் போக, “உங்ககிட்ட பேசிக்கிட்டே இருக்கனும்னு தான் தோணுது. ஆனா என்ன பேசனு தெரியலை. அதனால இப்ப வைக்கிறேன். நாளைக்கு ஒன்பதரை மணிக்கு உங்களோட அச்சுமா பேச வருவேன். காத்திருங்க! குட் நைட்! ஸ்வீட் ட்ரீம்ஸ்” என்றவளாய் இணைப்பைத் துண்டித்தாள்.

 

அகமும் முகமும் மலர்ந்து விகசிக்கப் படுத்திருந்த அர்ஜூனுக்கு நெடுநாளைக்குப் பிறகான மனத்தின் உற்சாகத்தில் உறக்கம் கண்களைத் தீண்டாது ஆட்டம் காண்பித்தது. சிறிது நேரம் அர்ச்சனாவுடன் பேசியதை நினைத்துப் பார்த்தவனாய் படுத்திருந்தவன் அவளின் நினைவுகளுடனேயே உறங்கிப் போனான்.

 

அடுத்து வந்த நாள்களில் இருவருமே இரவு ஒன்பதரை மணிக்காக ஆவலுடன் காத்திருக்கத் தொடங்கினர்.

 

ஓர் ஆண் மகனுக்கு தனது நலனை விரும்பும் அன்பான தோழி கிடைப்பது வரமல்லவா!

 

அத்தகைய வரமான தோழியாய் தான் அவளை நினைத்தான் அர்ஜூன்.

 

தனக்கு நல்லதொரு தோழியாய் வாழ்நாளுக்கும் அவள் தன்னுடன் பயணிக்க வேண்டுமென எண்ணினானே தவிர அவளை மணம் புரிந்து கொள்ளவோ காதலிக்கவோ நினைக்கவே இல்லை அவன்.

 

இத்தகைய அன்பான பெண்ணுக்கு இரண்டாம் தாரமாய் தன்னுடன் திருமணம் வேண்டவே வேண்டாம் என்று தான் நினைத்தான்.

 

அவள் நல்லதொரு மணாளனை மணந்து மகிழ்வுடன் வாழ வேண்டுமென அவ்வப்போது இறைவனை வேண்டிக் கொள்வான்.

 

மூன்று மாதங்கள் கடந்திருந்த நிலையில் ஒரு நாள் இரவு அர்ச்சனா அர்ஜூனுடன் கைப்பேசியில் பேசிக் கொண்டிருந்த போது,

 

“நாளைக்கு எனக்கு பர்த்டே அஜூ” என்றாள்.

 

“அப்படியா? அட்வான்ஸ் ஹேப்பி பர்த்டே அச்சுமா” என்று மகிழ்வுடன் வாழ்த்தியவன்,

 

“பர்த்டேக்கு என்ன ஸ்பெஷல்?” எனக் கேட்டான்.

 

“பெரிசா எதுவும் இல்ல. அப்பா அம்மா கூட கோவிலுக்குப் போய்ட்டு வருவேன். எங்க வீட்டுல கேக் கட் செய்ற பழக்கம்லாம் இல்ல” என்றாள்.

 

“ஓ அப்ப நாளைக்கு ஈவ்னிங் நம்ம ஹோட்டலுக்கு வா அச்சுமா. செலிபிரேட் செஞ்சிடலாம்” என்றான் அர்ஜூன்.

 

“இல்ல அஜூ! எனக்கு நாளைக்கு ஈவ்னிங் ஒரு ரிசார்ட்ல லைட் மியூசிக் கச்சேரி இருக்கு” என்றாள்.

 

“ஹோ சரி” என்றவன் சில நிமிடங்கள் பேசிவிட்டு இணைப்பைத் துண்டித்தான்.

 

இந்த வருடப் பிறந்தநாளின் முதல் வாழ்த்து அவனுடையதாய் இருக்க வேண்டுமென மிகவும் ஆசைப்பட்டாள் அர்ச்சனா. அதனால் தான் அவளே தன்னுடைய பிறந்தநாளைப் பற்றி அவனிடம் உரைத்தாள்.

 

நேரம் நள்ளிரவு பன்னிரண்டை நெருங்கும் போது முதல் ஆளாக அவன் தனக்கு வாழ்த்துத் தெரிவிப்பானா என்ற எதிர்பார்ப்புடன் ஆவலும் ஆசையுமாய் கைப்பேசியைப் பார்த்தவாறே படுத்திருந்தாள் அர்ச்சனா.

 

நேரம் பன்னிரண்டானதும், கைப்பேசியையே பார்த்துக் கொண்டிருந்தவளின் அறைக்கு வந்து அவளை வாழ்த்தி விட்டுச் சென்றனர் அவளின் பெற்றோர். சிரித்த முகத்துடன் அவர்களின் வாழ்த்தை ஏற்றுக் கொண்டு அனுப்பி வைத்தவளின் மனத்தில் பெருத்த ஏமாற்றம்.

 

‘விடு அச்சு! நடுராத்திரி விஷ் செய்றதுலாம் அவருக்குப் பழக்கம் இருக்காதா இருக்கும்’ என்று தன்னைத் தானே சமாதானம் செய்தவளாய் உறங்கிப் போனாள் அர்ச்சனா.

 

மறுநாள் காலை புடவை அணிந்து தன்னை அலங்கரித்தவளாய் மகிழ்வான மனநிலையில் பெற்றோருடன் கோவிலுக்குச் சென்று விட்டு வந்த போதும் கூட அவனின் அழைப்புக்காகவும் வாழ்த்துக்காகவும் ஆவலுடன் காத்திருந்தாள்.

 

ஆனால் மதியம் வரையில் அவனிடம் இருந்து அழைப்பு வரவேயில்லை.

 

இதுநாள் வரையில் அன்றாடம் அவள் தான் அவனுக்கு அழைத்துப் பேசியிருக்கிறாளேயன்றி அவனாக அழைத்துப் பேசியதே இல்லை.

 

தானே அழைத்துப் பேசத் தயங்கி அழைக்காமல் இருக்கிறானோ என்று நினைத்தவளுக்கு அவன் மீது கோபம் பொங்கிக் கொண்டு வந்தது.

 

‘இனி அவரா போன் செய்யாம நானா போய் அவர்கிட்டப் பேச மாட்டேன்’ என்று மனத்தோடு அவள் புலம்பியிருந்த போது,

 

“Happy Birthday Archana” என்று குறுஞ்செய்தி அனுப்பியிருந்தான் அர்ஜூன்.

 

முதல் வாழ்த்தாய் எதிர்பார்த்திருந்த அவனுடைய உணர்பூர்வமான வாழ்த்து இப்படி மதிய வேளையில் யாரோ ஒருவருக்கு அனுப்புவது போல் தன்னை வந்து சேர்ந்ததில்,

 

வெறித்த பார்வையுடன் அதைப் பார்த்தவளுக்கு, ‘என்ன இது உப்பு சப்பு இல்லாத ஒரு வாழ்த்து’ என்று தான் தோன்றியது.

 

‘கொஞ்சம் ஸ்பெஷலா வாழ்த்துச் சொல்ற அளவுக்குக் கூட அவர் மனசை நான் நெருங்கலையா’ காதல் கொண்ட மனம் வலித்தது.

 

எதையோ எதிர்பார்த்து ஏமாந்து போன வலியை உணர்ந்தாள்.

 

அவனிடமிருந்து மனத்தை முயன்று திசைத் திருப்பியவளாய் மாலை நடக்கவிருந்த இசை நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டாள்.

 

மாலை இசைக் கச்சேரியில் மூழ்கிப் போனவளுக்கு அவனைப் பற்றிய எண்ணங்கள் எல்லாம் பின்னுக்குச் சென்றிருந்தன.

 

அந்த இசைக் கச்சேரியிலேயே அவளின் குழுவினர் அவளது பிறந்தநாளைப் பற்றி அறிவித்துப் பாட்டுப் பாடி கேக் வெட்டிக் கொண்டாடினர்.

 

முகம் நிறைந்த புன்னகையுடன் கொண்டாடி மகிழ்ந்தவள் அந்த மகிழ்வுடனேயே இரவு வீட்டிற்குச் சென்றாள்.

 

நேரம் இரவு ஒன்பதரையை நெருங்க நெருங்க, குடிகாரனுக்குக் குடியைப் பார்த்ததும் கைகள் நடுங்குவது போல் அவனுக்கு அழைக்க வேண்டுமென பரபரத்தது அவள் உள்ளம்.

 

அவளின் கை விரல்கள் கைப்பேசியில் அவனது எண்ணிலேயே போய் நின்றன.

 

‘ஒரு போன் செஞ்சி விஷ் பண்ணாத ஆளுக்கு நான் ஏன் கால் செய்யனும். இப்பவாவது அவரே போன் செஞ்சி விஷ் செய்றாரானு பார்ப்போம்’ என்று மனத்தைக் கட்டுப்படுத்தியவளாய் அவனது அழைப்புக்காகக் காத்திருந்தாள்.

 

ஆனால் அவனோ அன்றைய நாள் முழுவதும் கடும் பணியில் சிக்கிக் கொண்டதனால் அவளுக்கு அழைக்காமல் இருந்தவன், இரவு வழமைப்போல் அவளாகவே தனக்கு அழைப்பாள் என்று காத்திருந்தான்.

 

இரவு பத்து மணி வரையில் அவளிடம் இருந்து அழைப்பு வராது போக, தானாகச் சென்று அவளுக்கு அழைக்கப் பெரும் தயக்கமாக இருந்தது அவனுக்கு.

 

இன்னும் சில மணி நேரம் பார்த்து விட்டு அவளுக்கு அழைக்கலாம் என்று எண்ணியிருந்தவன் அன்றைய நாளின் பணியினால் ஏற்பட்ட சோர்வினால் அப்படியே உறங்கிப் போனான்.

 

ஆனால் அவளோ அவனது அழைப்பை எதிர்பார்த்துக் காத்திருந்து ஏமாந்தவளாய் கண்ணீருடன் உறங்கிப் போனாள்.

 

இரவு தாமதமாக உறங்கியவள் மறுநாள் காலை தாமதமாக எட்டு மணியளவில் தான் முழித்தாள்.

 

காலை எழுந்ததும் முதல் வேலையாக கைப்பேசியில் அவனிடமிருந்து தவறிய அழைப்புகள் ஏதேனும் வந்திருக்கிறதா என்று தான் பார்த்தாள். அவனிடம் இருந்து அழைப்பு வராதிருப்பதைப்‌ பார்த்தவளுக்குக் கட்டற்ற கோபம் வர, கண்ணீருடன் அவனது எண்ணை பிளாக் செய்தவளாய் படுக்கையை விட்டு எழுந்தாள்.

 

அன்று‌ நடக்கவிருந்த இசைக் கச்சேரிக்கான ஒத்திகைக்குச் செல்ல காலை குளித்து முடித்து கிளம்பியவளாய் உணவு மேஜைக்குச் சென்று அமர்ந்தவள், “அப்பா ஆபிஸூக்கு போய்ட்டாங்களாமா?” என அன்னையிடம் கேட்டாள்.

 

மகளுக்கு காலை உணவைப் பரிமாறியவராய் மல்லிகா, “ஆமா எப்பவும் போல எட்டு மணிக்கே கிளம்பிட்டாங்க. உனக்கு இன்னிக்கு கச்சேரி எதுவும் இருக்கா அர்ச்சனா? இன்னிக்கு நைட் பத்து மணிக்கு பஸ் புக் செஞ்சிருக்காங்க உங்க அப்பா. அதுக்குள்ள வந்துடுவ தானே” என்று கேட்டார்.

 

அர்ஜூனின் நினைவிலேயே உழன்றவளாய் இருந்தவளுக்கு தாயின் கேள்வி புரியாது போக, “பஸ்ஸா? எந்த பஸ்ஸூ? அப்பா எதுவும் ஆபிஸ் விஷயமா வெளியூர் போறாங்களாமா?” எனக் கேட்டாள்.

 

“என்னடி இப்படிக் கேட்குற? போன மாசம் உன்னைக் கேட்டு தானே பஸ் புக் செஞ்சாங்க உங்க அப்பா. திருச்செந்தூர்ல நம்ம குலதெய்வக் கோவிலுக்குப் போறதா பேசியிருந்தோமே மறந்துட்டியா?” எனக் கேட்டார்.

 

நெற்றியில் கை வைத்தவளாய், ‘அய்யோ இந்த அர்ஜூனால எல்லாத்தையும் மறந்து சுத்துறேனே’ என்று தனக்குத் தானே புலம்பிக் கொண்டவள்,

 

“சாரிமா! கச்சேரி பிசில மறந்தே போய்ட்டேன்” என்றாள்.

 

“என்னது மறந்துட்டியா? அடியேய் அடுத்த மூனு நாளைக்கு கச்சேரி எதுக்கும் அட்வான்ஸ் வாங்கலை தானே. நீ பாட்டுக்கு மறந்துட்டு ஏதாவது கச்சேரிக்கு ஒத்துக்கிட்டு இருக்க போற?” எனக் கேட்டார்.

 

‘மூனு நாளுக்கும் கச்சேரி ஓகே செஞ்சி வச்சிருக்கேனே. வேற சிங்கர் யாரையாவது மாத்த சொல்லிப் பேசனும்’ குழப்பமான முகப் பாவனையுடன் தனக்குள்ளேயே பேசிக் கொண்ட மகளைப் பார்த்த மல்லிகா,

 

“என்னடி மூனு நாளுக்கும் கச்சேரி ஒத்துக்கிட்டு இருக்கியா?” மகளின் முகப் பாவனையில் கண்டு கொண்டவராய் கேட்டிருந்தார்.

 

“அது ஒன்னும் பிரச்சனை இல்லமா. வேற சிங்கர் யாரையாவது மாத்திக்க சொல்றேன்” என்று அவள் சொல்லவும்,

 

அவளை முறைத்துப் பார்த்த மல்லிகா, “எப்பவும் ஊருக்குப் போறோம்னா அவ்ளோ சந்தோஷமா அதுக்காகவே காத்திருந்து கிளம்புறவ இந்தத் தடவை டிக்கெட் புக் செஞ்சதையே மறந்துட்டு நிக்கிற!

 

நானும் பார்த்துட்டு தான் இருக்கேன். கொஞ்ச நாளா நீ ஆளே சரியில்லாம தான் சுத்திட்டு இருக்க. அந்த அர்ஜூன்கிட்ட எதுவும் பேசிக்கிட்டு இருக்கியா என்ன? இல்ல புதுசா யாரையும் லவ் பண்றியா?” கடுமையான குரலில் கேட்டார்.

Click on a star to rate it!

Rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்