Loading

திருப்பம்-22

 

 

இரு வாரம் இனிதே ஓடியிருந்தது. இந்த இரு வாரத்தில் சங்கமித்ரா தன்மீதான அவ்வீட்டாரின் அபிப்ராயங்களையும், அவர்களது குணநலன்களையும் ஓரளவு கண்டுகொண்டாள். அதிலும் தெய்வநாயகிக்கும், திரிபுராவிற்கும், தன்மீது பிடித்தமென்பது துளியும் இல்லை என்பதையும், வளவனின் வாழ்க்கை தன்னால் சிறக்க வேண்டிய கட்டாயம் ஒன்றிர்காக மட்டுமே தன்னை ஏற்றுள்ளனர் என்பதையும் புரிந்துகொண்டாள்.

 

அதில் பெருமளவு வருத்தம் ஏற்பட்ட போதும் கூட, காலப்போக்கில் அவர்களின் எண்ணம் மாற்றம் பெறலாம் என்ற ஒரு தைரியத்தோடு வளைய வரத் துவங்கியிருந்தாள். இன்னமும் அவளை சமையல் வேலைகளில் தெய்வநாயகி சேர்த்துக் கொள்ளவில்லை என்றாலும், சுற்று காரியங்களைக் கொடுத்து செய்ய வைத்தார்.

 

கார்த்திகா திருமணம் முடிந்து கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் ஆகவுள்ள நிலையில் இன்னும் சமையலறையின் பொருப்பை அவளுக்கே கொடுத்திராதவர், வாரம் முன்பு வந்த அவளிடமா கொடுத்துவிடுவார்?

 

சுயம்புலிங்கம் மீது முன்பே நன்மதிப்புக் கொண்டிருந்த சங்கமித்ராவிற்கு, அவரது பாசமான பேச்சும், அனுசரணையான குணமும் மேலும் மரியாதையையும் அன்பையும் கொடுத்தது.

 

கார்த்திகா அவளுக்கு மூத்தவளாய் இருந்து, அவளை வழிநடத்தத் துணையாக இருக்க, அவ்வப்போது வந்துபோகும் தீபிகாவும் பாசத்துடனே நடந்து கொண்டாள்.

 

திருவிக்ரமன் மற்றும் மகாதேவன் கூட அவளிடம் உரிமையுடன் பேசி சிரிக்குமளவு முன்னேரியிருக்க, தனம் மிக நெருக்கமான தோழியாய் அவளுடன் ஒட்டிக் கொண்டாள்.

 

அதிலும் ஆர்வத்துடன் சென்று அவளது காதல் கதைகளைக் கேட்பதில் சங்கமித்ராவிற்கு தனிப் பிரியம் உருவாகிட, அவளின் ஆர்வத்தில் தனலட்சுமியும் உற்றாகம் பெற்றுப் பேசத் துவங்கியிருந்தாள்.

 

திருமாவளவனுக்கும் அவளுக்குமான உறவிலும் நல்ல முன்னேற்றம் உருவாகியிருந்தது. அவ்வப்போது அவனுடன் சின்னச் சின்ன சண்டைகள் கூட போடத்துவங்கி, சமரசம் அடையும் அழகிய நெருக்கங்களையும் பழகத் துவங்கியிருந்தாள்.

 

இரவு, திருமாவளவனுக்குப் பிடித்ததைப் போல் காய்கள் நறுக்காததால் தான் அவன் ஒழுங்காக உண்ணவில்லை என்று தெய்வா திட்டியிருந்த கோபத்தில் சங்கமித்ரா வந்து சண்டை பிடித்து கோபித்துக் கொண்டபடியே உறங்கியிருக்க, காலை ஆழ்ந்த உறக்கத்திலிருந்து கண் விழித்தத் திருமாவளவன் தன்னைக் கட்டிக் கொண்டு உறங்கும் மனையாளைக் கண்டு அழகாய் புன்னகைத்தான்.

 

‘ஏங்க நீங்க வடிவேலண்ணேகூட வெளிய சாப்டு வந்ததாலதான் இங்க ஒழுங்கா சாப்பிடலைனு அத்தைட்ட சொல்ல வேண்டியது தானே? சாம்பாருக்கு நான் வித்தியாசமா காய் நறுக்கிட்டேனாம். அது உங்களுக்கு பிடிக்காததால தான் நீங்க சாப்பிடலைனு எனக்கு வேலை செய்ய தெரியலைனு திட்றாங்க’ என்று எல்லார் முன்பும் திட்டு வாங்கியதில் வருந்தி கண்கலங்க அவள் கூறியிருக்க,

 

‘வெளிய சாப்ட்டேன்னா வைவாவனு சொல்லலைடி. உன்னைய இப்புடி அறுப்புவாவனு நான் என்னத்தடி கண்டேம்?’ என்றான்.

 

‘ஆமா நீங்க பச்ச புள்ள. வெளிய சாப்டா திட்டப்போறாங்கனு பயப்பட. ஏற்கனவே பாத்திரத்துக்குலாம் புதுசு புதுசா பேரு வச்சு தெரியலைனா அதுக்கும் திட்டுறாங்கனு பாத்தா இப்ப இதுக்கும்’ என்று கோபம் பாதி, சோர்வு மீதியாய் கூறியவள், ‘ப்ச்.. போங்க’ என்று கடுப்போடு சென்று படுத்துவிட, என்ன செய்து சமாளிப்பதென்று அறியாது தானும் படுத்துக் கொண்டான்.

 

‘நைட்டு அந்த கத்து கத்திப்டு இப்பத எப்புடி படுத்துருக்கா பாரு’ என்று சிரித்துக் கொண்டவன், அவள் நெற்றியில் அழுத்தமாய் முத்தமிட, அவன் தாடி மீசையின் உரசலில் முகம் சுருக்கிப் பிரண்டுப் படுத்தாள்.

 

அதில் இன்னும் அழகாய் சிரித்துக் கொண்டவன், அவள் கன்னத்தில் முத்தமிட, “ப்ச்” என்றபடி மீண்டும் பிரண்டுப் படுத்தாள்.

 

மீண்டும் முத்தம், மீண்டும் சிணுங்கல். முத்தத்திற்கும் சிணுங்கலுக்கும் இடையே நடந்த தொடர் போரில் தூக்கம் தொலைந்துபோக, கோபமாய் “என்னப்பா?” என்றபடி விழித்தாள்.

 

“குட் மார்னிங் மேடம்” என்று குறும்புடன் அவன் கூற,

 

தூக்கக் கலக்கத்தில் அவன் கழுத்தடியில் முகம் புதைத்துப் படுத்துக் கொண்டவள், தன்னை இதமாய் அணைத்துக் கொண்டவன் ஸ்பரிசத்தில் சுயம் மீண்டு, திடுக்கிட்டு எழுந்தாள்‌.

 

முகம் சிவக்க அவனை முறைத்தவள் சிவப்பிற்குப் பின்னிருப்பது கோபமா, வெட்கமா என்பது அவளுக்கே வெளிச்சம்.

 

முகத்தைத் திருப்பிக் கொண்டு எழுந்தவள், அவனது அலமாரியில் சேர்ந்துகொண்ட தனது உடைகளிலிருந்து ஒரு சுடிதாரை எடுத்துக் கொண்டு குளியலறை நோக்கி செல்ல, “ஓய்” என்றபடி அவள் முன் வந்து நின்றான்.

 

கோபத்துடன் அவள் நகர எத்தனிக்க, “இந்தாடி. நீ ஒட்டிகிட்டு படுத்ததுல கோபமெல்லாம் போச்சுது போலனு பாத்தாக்க முகத்த வெட்டிகிட்டு போறவ?” என்று கேட்டான்.

 

அவனை ஏற இறங்கப் பார்த்தவள், மேஜையின் அருகே சென்று கடிதம் ஒன்றை எடுத்து அவனிடம் நீட்ட, “இத எப்ப மித்ரா எழுதின?” என்றபடி வாங்கினான்.

 

பதில் கூறாமல் அவள் குளிக்கச் செல்ல, ‘யம்மா.. ரொம்பத்தான்’ என்றபடி பால்கனிக்கு சென்றவன் அங்கு செடிகளுக்கு தண்ணீர் இறைப்பதற்காக வைத்திருந்த தண்ணீர் குழாயிலிருந்து முகம் கழுவிக் கொண்டு செடிகளில் நீர் பாய்ச்சிவிட்டு கடிதத்தைப் பிரித்தான்.

 

உரைக்குள் இருந்த சங்கப்பூவைப் பார்த்து சின்னதாய் சிரித்தவன் மடலைப் பிரிக்க,

 

‘அன்புள்ள திருமாலுக்கு,

 

நல்லா கோபம் வருது. ஆனா என்ன செய்ய? உங்களையும் குத்தம் சொல்ல முடியாதே? அவங்க திட்டினதுக்கு நீங்க என்ன பண்ணுவீங்க? ஆனாலும் என் கோபத்தைப் போக்க உங்களவிட்டா வேற யாரு இருக்கா? இப்பக்கூட பாருங்க. நேர்ல உங்கக்கூட சண்டைப்போட கஷ்டப்பட்டுட்டு நீங்க தூங்கினதும் லெட்டர் எழுதிட்டு இருக்கேன். ஏன் அத்தைக்கு என்னைக் கண்டாலே ஆக மாட்டேங்குதுனு வருத்தமாருக்கு. கல்யாணம் ஆகி ரெண்டு வாரம் தான் ஆகுது. அதுக்குள்ள இப்படி நான் புலம்புவேன்னு எதிர்ப்பார்க்கலை’ என்று வாசித்தவன் முகத்திலிருந்த புன்னகை மறைந்து வருத்தம் அப்பிக் கொண்டது.

 

‘உடனே பியூஸ் போன பல்ப் மாதிரி உங்க முகத்தை வச்சுக்காதீங்க. இதுல நீங்களோ நானோ பண்றதுக்கு ஒன்னுமில்ல. இருந்தாலும்… எனக்கு எப்படி சொல்லனு தெரியலை. எங்கம்மா என்னை ஒரு விஷயத்தை மாத்திக்க சொல்லி அடிக்கடி திட்டுவாங்க. சட்டுனு கோவப்பட்டுக் கத்தினா எனக்கு அழுக வந்துடும். எனக்கு புரியும். அது அக்கறைக்கான கோபமா இருந்தாகூட சட்டுனு அதட்டி பேசிட்டா கண்ணு கலங்கிடும். அதை மாத்திக்கோனு சொல்லுவாங்க. ஏனோ என்னால அதை கண்டிரோல் பண்ண முடியலை. ஆனா அத்தை சட்டுனு அதட்டும்போது ஆட்டோமேட்டிக்கா என் கண்ணு கலங்கிடுதா, அப்ப அவங்க அதுக்கும் சத்தம்போடும்போதுதான் அம்மா ஏன் இதை மாத்திக்கச் சொன்னாங்கனு புரியுது. சும்மா சும்மா அழுதா யாருக்குத்தான் கோபம் வராம இருக்கும்? அப்படியிருக்க, அத்தைக்கு நான் அழுறதுல கோபம் வர்றதும் நியாயம் தானே? எனக்கு பழகிக்க நேரமெடுக்குதுங்க. நான் இப்படித்தான். ஆனா முயற்சி பண்ணாம இல்ல. எனக்கு இதெல்லாம் உங்கக்கிட்ட சொல்லனும் தான். ஆனா நீங்க வருத்தப்படுவீங்கனு தான் உங்கள பாத்து சொல்ல முடியல. ஆனா நமக்குத் துணையா நம்ம உணர்வைக் கடத்தத் தான் இந்த கடிதம் இருக்கே. நிஜமா சொல்லவா. இதை எழுதும்போதே உங்கக்கிட்ட சொல்லிட்ட திருப்தி வந்துடுது. பொதுவாவே பொண்ணுங்களுக்கு அவங்க கஷ்டத்தை யார்கிட்டயாது சொல்லிடனும். அதுனால பெருசா எந்த மாற்றமுமே வரலைனாகூட சொல்லிட்டா ஒரு திருப்தி வந்துடும். எனக்கு உங்களைத்தவிர இதை யார்கிட்டயும் சொல்லத் தோன்றலை. உங்களைப் பார்த்து சொல்லும்போது நீங்க ஃபீல் பண்ணிட்டா எனக்கு அடுத்த முறை பேச சங்கடமாகிப்போகும்ல? அதான் லெட்டர்ல எழுதிட்டேன். நான் எப்பவாச்சும் இப்படி அத்தை மேல உள்ள கோபத்தை உங்க மேல காட்டிட்டா சகிச்சுக்கோங்க. என்னடா இப்படி சொல்றானு நினைக்காதீங்க. உங்ககிட்ட கோவப்படத்தானே எனக்கு உரிமை இருக்கு? பெருசா ஒன்னும் பண்ணிட மாட்டேன். இப்படி கொஞ்சம் புலம்பி கத்திட்டு ஆஃப் ஆயிடுவேன். என் கோவமெல்லாம் அம்புட்டுத்தான். எல்லாரையும் நானே விசாரிச்சுப்பேன். அதனால நீங்க விசாரிக்க வேணாம். பிகாஸ் நான் இப்ப மிஸஸ் திருமால்’ என்பதோடு அக்கடிதம் முடிவடைந்திருக்க, பலவகையான உணர்வுகளின் பிடியில் அக்கடிதத்தைப் பார்த்தபடி சாய்ந்து அமர்ந்தான்.

 

அவனுக்கும் புரிந்தது. தெய்வநாயகி தன் மனக்குமுறலை அவளிடம் இறக்கி வைக்கின்றேன் என்ற போர்வையில் காரணம் கிடைக்கும்போதெல்லாம் திட்டத்தான் செய்கின்றார்.

 

கார்த்திகாவால் வருத்தப்படதத்தான் முடிந்ததே தவிர எதிர்த்தெல்லாம் பேச இயலவில்லை. தனம் எது பேசினாலும், சிறு பெண் என்று எடுபாடாது போய்விட, விக்ரமனோ, சுயம்புலிங்கமோ, வளவனோ பார்த்து எதிர்த்து பேசினால் தான் அடங்குவார். அதுவும் சிறு முகத்திருப்பலுடன் சென்று, அவர்கள் களைந்த பின்பு துவங்குவார்.

 

என்ன செய்தும் அவரிடமிருந்து இதில் மாற்றத்தைக் கொண்டு வர முடியாமல் அனைவருமே காலத்தின் கையில்தான் இதை கொடுத்துள்ளனர்.

 

தன்னவள் தினம் மனம் வருந்தும்படி தாய் நடந்துகொள்வதை தடுக்க இயலாமல் அவனும் திண்டாடித்தான் போகின்றான். திருமணம் முடிந்தால் ஒரு பெண்ணுக்கு புகுந்த வீட்டில் என்னற்ற இன்னல்கள் வருவதைப் போல் ஆண்களுக்கும் இன்னல்கள் வரத்தான் செய்கிறது. 

 

அம்மாவிற்கும், உடன் பிறந்தவர்களுக்கும், மனைவிக்கும் இடையே பூசல்கள் நேர்கையில் எப்பக்கமும் மணம் கோணாமல் முடிவெடுப்பதில் ஆண்கள் தடுமாறவே செய்கின்றனர்.

 

புதிதாக வந்தவளுக்காக என்னைக் கீழாக பார்க்கின்றாயா? என்று அன்னையோ, அனைத்தையும் துறந்து வந்த என்னை மதிக்கமாட்டாயா? என்று தாரமோ கேட்க நேரிடும் சந்தர்ப்பத்தை தவிர்க்கவே அவர்களும் பெரும்பாடு படுகின்றனர்.

 

திருமணம் என்ற பந்தம் பல இன்பங்களைக் கொடுப்பதைப் போல், பல சிக்கல்களையும் கொடுக்கத்தானே செய்யும்? எந்த சுகம் தான் சுலபமாய் கிடைத்திடுகிறது இவ்வுலகில்?

 

 

இவ்வாறான யோசனையோடு அவன் அமர்ந்திருக்க, குளியலறைக் கதவைத் திறந்துக் கொண்டு பெண்ணவள் வந்தாள்.

 

புடவையை குளியலறைக்குள் கட்டும் பழக்கம் இல்லை, ஆனால் சுடிதாரை உள்ளேயே உடுத்திப் பழக்கமுள்ளதால் அவ்வாறே உடுத்திக் கொண்டு வந்திருந்தாள்.

 

அவள் அரவத்தில் நிமிர்ந்தவன் சென்று புத்துணர்ச்சிப் பெற்று வெளியே வர, தனது அளவான சிகையில் எண்ணைத் தேய்த்து பின்னலிடத் துவங்கியிருந்தாள்.

 

அவள் முன் வந்து நின்றவன், “மித்ரா” என்க,

 

“ஹும்” என்று முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

 

விளையாட்டு தான் என்று புரிந்தது. அதில் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டவன், “கோவம் போவ என்ன செய்யனும்?” என்று கேட்க,

 

“ஒன்னும் வேணாம் போங்க” என்றாள்.

 

அவள் இருபக்கமும் இடையைச் சுற்றிக் கரமிட்டு அணைத்துக் கொண்டு தன்னை நோக்கி அவளை இழுத்துக் கொண்டவன், “பாவமாச்சே என் மித்ரா. எதாது செஞ்சுதேம் சமாதானம் செய்யனும்” என்று யோசனை போல் கூறி, “என்ன செய்யலாம்?” என்க,

 

“என்ன? விளையாட்டா? எனக்கு நேரமாகுது விடுங்க” என்று நெழிந்தபடியே கூறினாள்.

 

“மிண்டாத(பேசாத) நீ. யோசிக்கேம்ல நானு?” என்றவன், “கோவம் போவுமா போவாதா இப்ப?” என்று கேட்க,

 

“போகாது போகாது போகாது” என்றாள்.

 

அவள் முகத்தைத் தன் கரங்களுக்குள் பொத்திக் கெண்டவன், “இப்பப் போவும் பாரேம்” என்றபடி அழுங்காமல் அவள் இதழில் இதழ் புதைத்தான்.

 

 

முதல் இதழ் தீண்டல்… அவ்வப்போது சோகமான தருணங்களில் நெற்றி முத்தமும், குறும்பு செய்யும் நேரங்களில் கன்னத்திலும் என அவன் வழங்கியதுண்டு.

 

தற்போது புதிதாய் கிடைக்கும் இத்தீண்டலில் அதிர்ந்து, விழித்தவள் மெல்ல கண்களை மூடிக் கொள்ள, பொய் கோபம் கூட இருந்த இடம் தெரியாமல் மறைந்தே போனது.

 

கையில் வைத்திருந்த சீப்பைத் தவறவிட்டவள், அவன் புஜத்தினைப் பற்றிக் கொள்ள, விளையாட்டாய் செய்த செயல் கொடுத்த உவகையில் ஆடவனும், அவளில் ஆழப்புதைந்தான்.

 

நிமிடங்களின் இனிமையில் இதழ்கள் கரைய, மெல்ல அவளிலிருந்து பிரிந்தவன், அவள் முகத்தைத் தன் மாரோடு அணைத்துக் கொண்டான்.

 

மூச்சுக்காற்றின் ஓசை மட்டுமே அவ்விடம் ஆட்சி புரியும் அரசனாய்…

 

அவளுக்கான அவகாசத்தைக் கொடுத்து முடித்தவன், “கோவம் போச்சுதா?” என்க,

 

சட்டென அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

 

அவன் கண்களை நேர்கொண்ட நொடி, நாணம் வந்து அணைத்துக் கொள்ள, “வி..விடுங்க. நேரமாகுது” என்று தடுமாறினாள்.

 

“கோவம் போச்சுதுனு சொல்லு போவேம். இல்லனா மறுபடியும் கோவத்த போக்கிடுவோம்’’ என்று அவன் குனிய,

 

அவன் மார்பில் கரம் வைத்துத் தடுத்தவள், “போச்சு போச்சு” என்றாள்.

 

“என்னது போச்சு?” என்று சிரிப்பாய் அவன் கேட்க,

 

“கோவந்தான் போச்சுங்க. போங்களேன்” என்றாள்.

 

“எங்கப் போவனும்?” என்று மீண்டும் அவன் வம்பு செய்ய, ‘ப்ச்.. எனக்கு ஷையாருக்குனு வேணும்னே வம்பு பண்றாரு’ என்று மனதோடு சிணுங்கினாள்.

 

அவள் அகம் படித்ததைப் போல் சிரித்தவன் அவள் கன்னம் கிள்ளித் தன் விரல்களுக்கு முத்தம் கொடுத்துக் கொண்டு, “மாமா குளிச்சுட்டு வாரேம்” என்றுவிட்டுச் செல்ல, செல்பவனைக் கண்டு கட்டுப்படுத்த இயலாமல் புன்னகைத்துக் கொண்டு கண்ணாடி பார்த்தாள்.

 

‘அச்சோ’ என்று தன் முகம் மூடி வெட்கம் கொண்டவள், “இப்பத நேரமாவலையாக்கும்? வெக்கப்பட்டதெல்லாம் போதுமுங்க மேடம்” என்றவன் குரலில் சட்டென நிமிர்ந்து, குறும்புடன் கண்சிமிட்டிச் செல்பவன் பார்த்து முறைக்க முயன்று தோற்றவளாய் சிரித்தாள்.

 

இருவரும் தயாராகிக் கீழே வர, பரபரப்பாய் வேலைகளிலும் கொஞ்சம் உதவி செய்து, தனக்கான உணவையும், தனத்திற்கான உணவையும் கட்டி முடித்தாள்.

 

“என்ன மைணி மொகம் பல்ப் மாதிரி மின்னுது காலையிலயே பெரிய ரோமான்ஸோ?” என்று விளையாட்டாய் தனம் வந்து கேட்க,

 

‘இவளுக்கு எப்படித் தெரிஞ்சுது?’ என்பதைப் போல் அவளைத் திடுக்கிட்டுப் பார்த்தாள்.

 

“என்ன மைணி ஷாக்காவுற? நான் சும்மா சொன்னேமுனு பாத்தா நெசத்துக்குமே ஏதோ பலமா நடந்துருக்கு போலியே?” என்று தனம் கேட்க,

 

“ஷ்ஷ் தனம். போ அந்தபக்கம்” என்றபடி டப்பாவை அவளிடம் கொடுத்து நகர முற்பட, நல்லெண்ணை வைத்திருக்கும் சின்னக் கண்டாடி கின்னம் தட்டி அவள் காலில் விழுந்து தரையில் உருண்டது.

 

சற்றே கனமான கின்னம் என்பதாலும், அவள் காலில் விழுந்து தான் கீழே உருண்டது என்பதாலும் கின்னம் உடையவில்லை, எனினும் பெரிய விரிசல் ஒன்று விழுந்தது.

 

சப்தம் கேட்டு தெய்வநாயகி வர,

 

“ஸ்ஸ் ஆ..” என்று பெண்ணவள் தன் காலைப் பிடித்தாள்.

 

“அய்யோ மைணி பாத்து” என்று தனம் கீழே குனிந்து அவள் காலை ஆராய, “ஏ தனம் எழுந்திரி” என்று நிமிர்த்தினாள்.

 

அங்கு வந்த தெய்வநாயகி, கீழே சிந்திக் கிடக்கும் எண்ணை மற்றும் விரிசல் விட்டக் கின்னத்தைப் பார்த்து, “சரியாபோச்சுடி. வெள்ளிக்கெழமையும் அதுவுமா கண்ணாடிய போட்டு ஒடச்சா குடும்பம் வெளங்குமா?” என்று கத்த,

 

“அம்மா அது ஒடையலமா. மைணி காலு” என்று பேச வந்த மகளையும் நிறுத்தினார்.

 

“கின்னத்துல இந்த பெரிய கோடு தெரியாதளவு ஒங்கம்மைக்கு கண்ணு அவிஞ்சு போயிடல” என்று அவர் கத்த, மற்றவர்களும் வந்துவிட்டனர்.

 

“என்னத்த வளத்தாங்களோ? நாலும் பொழுதுமா இப்படித்தேம் கண்ணாடிய ஒடைச்சுபோடுவா போல? வீடு வெளங்கின கணக்காதான்” என்று அவர் கத்த,

 

“அம்மா தேவையில்லாத பேசாதம்மா” என்று தனம் கூறினாள்.

 

அவள் தோளை அழுத்திப் பிடித்த சங்கமித்ரா, ‘வேண்டாம்’ எனும்விதமாய் தலையசைத்து கின்னத்தை எடுத்தாள்.

 

“ஏட்டி கின்னந்தான? ஒடஞ்சா போச்சு? அப்படியே போனாதான் போட்டுமே? இந்த வீட்டுல கின்னத்துக்கு பஞ்சமாவி போச்சுதா? சும்மா அந்த புள்ளைய என்னமாது அறுப்பாதிருக்க மாட்டியா?” என்று சுயம்புலிங்கம் கடிய,

 

“என்னாச்சு தனம்?” என்று வளவன் கேட்டான்.

 

“டப்பால கின்னந்தட்டி மைணி கால்ல விழுந்து போச்சுது” என்று தனம் கூற,

 

“ஏ கால்ல விழுந்துச்சா?” என்றபடி வளவன் அருகே சென்று பார்த்தான்.

 

கனமான கின்னம் என்பதால் கால் சிவந்து போயிருந்தது.

 

“ஆத்தே செவந்துபோச்சுது புள்ள. அப்படி ஒக்காரு நான் உப்ப வறுத்து கட்டிக்கொண்டாரேம்” என்று கார்த்திகா ஓடினாள்.

 

இதில் அனைவரும் தெய்வநாயகியை மறந்தே போக, அதில் எரிச்சல் கொண்டு புசுபுசுவென மூச்சுவிட்டபடி உள்ளே சென்றுவிட்டார்.

 

“ஒன்னுமில்லபா” என்று அவள் வளவனை நகர்த்த முற்பட,

 

“ஏம்பா கன்னி போனதாட்டம் செவந்துகெடக்கு ஒன்னுல்லங்குற?” என்று விக்ரமன் கேட்டான்.

 

“டேய் புள்ளைய அந்த முக்காலில ஒக்காத்த வையுவடா” என்று சுயம்புலிங்கம் கூற,

 

அவளை அருகே இருந்த முக்காலியில் அமர்த்தினர்‌.

 

“மைணி நல்ல அடியோ? செவந்து தெரியுதே?” என்று தனம் வருத்தமாய் கேட்க,

 

“லேசா கடுக்குது தனம் வேற ஒன்னுமில்ல” என்றாள்.

 

கல்லுப்பை வறுத்துத் துணியில் கட்டிக் கொண்டு வந்த கார்த்திகா லேசாக அவள் காலில் வைக்க, “ஸ்ஸ் அக்கா” என்று அலறிவிட்டாள்.

 

“சூடு பொறுக்கத்தான் இருக்குது புள்ள. செத்த இரு. நாலு அமுக்கு அமுக்கியெடுத்தாதேம் வீங்கிப்போவாது” என்று கூறிய கார்த்திகா, மெல்ல மெல்ல வைத்து எடுக்க, அஸ் உஸ் என்று கத்திக் கொண்டே ஒத்தடம் வைத்துக் கொண்டாள்.

 

“ஏன்டி பாத்து எடுக்கக் கூடாதா?” என்று பொறுக்க மாட்டாது அதட்டிய வளவன், அவளை வாகாய் பிடித்துக் கொள்ள,

 

விழும்பொழுது தெரியாத வலி தற்போதுதான் உரைக்கப்பெற, கார்த்திகா கொடுக்கும் ஒத்தடம் வேறு இன்னும் வலி கொடுத்ததாய் உணர்ந்தாள்.

 

“அக்கா போதும் க்கா விடுங்க” என்று அவள் கூற,

 

“வீங்கிபோவும் சங்கு. செத்தப் பொரு. சூட்டோட சூட்டா வச்சு எடுத்துடுறேம்” என்று கூறினாள்.

 

மீண்டும் மறுக்க வந்தவளைக் கண்டு வளவன் முறைக்க அடுத்த நொடியே கப்சிப் ஆனாள்‌.

 

அவளது கலங்கிய விழிகளைக் கண்டு “ஏ மக்கா ரொம்ப வலி இருந்தா ஓரெட்டு டாக்டர பாத்துபோட்டு வாயேம்” என்று சுயம்புலிங்கம் கூற,

 

“அச்சோ இல்ல மாமா. அவ்ளோ வலி இல்ல” என்றாள்.

 

கார்த்திகா ஒத்தடம் கொடுத்து முடிக்க, ஒரு வலி நிவாரணி களிம்பைக் கொண்டு வந்த விக்ரம், “லேசா போட்டதும் காந்தும். பொறவு சரியாபோவும்த்தா” என்றான்.

 

அவனிடமிருந்து களிம்பை வாங்கிய வளவன், அவள் காலில் தேய்க்க, 

 

“ப்பா வேணாம். கொடுங்க நான் தேச்சுக்குறேன்” என்று மெல்லிய குரலில் கூறினாள்.

 

“மித்ரா என்னைய உசுப்பேத்தாத. பொறவு எனக்குக் கெட்டக்கோவம் வந்துபுடும்” என்று கோபத்தைக் கட்டுப்படுத்தி அமைதியாகவும், அழுத்தமாகவும் கூறியவன் களிம்பைப் போட்டு முடித்துவிட்டு எழுந்தான்.

 

அனைவரும் மாறி மாறி அவள் நலன் விசாரிக்க, “அதேம் ஒன்னுமில்லங்கால? மாறி மாறி கேட்டாப்ல ஆமாங்க போறாளா? வந்து வரிசைக்கா பசியாற ஒக்காருங்க. அவிய அவியளுக்கு சோலி கெடுக்குல?” என்று தெய்வநாயகிக் கூறினார்‌.

 

மனைவியை முறைத்த சுயம்புலிங்கம் பார்வையில், ‘ஒரு வார்த்தை அந்த பிள்ளையை விசாரிக்கக் கூடாதா நீயு?’ என்ற கண்டிப்பு தெரிந்தது. அது புரிந்தும் கேட்க மனமில்லாது அவர் நிற்க, கோபத்துடன் தன் துண்டை உதறிக் கொண்டவர், “விக்ரம். நான் வயலுக்கு போறேம். பொறவு நீ சாப்பிட்டுபோட்டு எனக்குக் கொண்டா” என்றுவிட்டுச் சென்றார்.

 

“சரியாபோச்சு. பசி தாங்காத மனுஷன். அலப்பறைய கூட்டி அவிய நேரத்த ஓச்சுபுட்டா” என்று முனகியபடி தெய்வநாயகி சமையலறைக்குள் சென்றிட, காயத்தை விட அவர் பேசிய வார்த்தைகள் தான் அதிகம் வலித்தது.

 

அவள் தோளை ஆதரவாய் பற்றிய கார்த்திகா, “விடுபுள்ள. நீ மதியத்துக்கு கட்டிகிட்டல்ல? நான் காலைலைக்குக் கொண்டு வரேம். உங்கிட்டு ஓன் வேலைய பாத்து போ” என்று கூறிச் செல்ல,

 

“வலியிருந்தா சொல்லுமா. ரொம்ப வேதனையாருந்தா லீவு போட்டுகிடு” என்று விக்ரமும் நகர்ந்தான்.

 

“மைணி” என்று தனம் அழைக்க,

 

“ஒன்னுமில்ல தனம். நீ போய் ரெடியாகு. உன் வண்டி சர்விஸ் குடுத்திருக்கல்ல. உன்ன பஸ் ஸ்டான்ட்ல விட்டுட்டு நான் அப்படியே கிளம்புறேன்” என்று அவளை அனுப்பி வைத்தாள்.

 

அனைவரும் போனதும் அவ்விடத்தில் அவளும், அவளவனும் மட்டுமே எஞ்சியிருக்க,

 

அவனை நிமிர்ந்து பார்த்து, “முறைக்குற வேலையெல்லாம் வச்சுக்காதீங்க. எனக்கும் முறைக்க வரும். நானும் கோவப்படுவேன்” என்று கண்களில் கண்ணீருடன் பல்லைக் கடித்துக் கொண்டு மிரட்டலாய் கூறினாள்.

 

அந்தக் கண்ணீர் தன் அன்னையின் குற்றச்சாட்டால் என்பது புரிந்து வருத்தம் மேலிட, அதை வெளிக்காட்டி அவளை சங்கடப்படுத்தாமல், “இஞ்சார்ரா. கோவம் வருமாமுல? காலையிலதேம் பாத்தேனே அம்மணி கோவத்த. ஒங்க கோவமும் தெரியும். அத எப்படி அணைக்கோனுமுனும் தெரியும்” என்று கூறி கண்ணடித்தான்.

 

அதில் பதில் கொடுக்க இயலாது தடுமாறி அவள் முகம் திருப்ப, கார்த்திகா உணவுடன் வந்தாள்.

 

தட்டை வாங்கிய திருமாவளவன், அவளுக்கு ஊட்டுவதற்காக நீட்ட,

 

“கொழுந்தரே அடி காலுலதான?” என்று கார்த்திகா கேலி செய்தாள்.

 

அதில் இதழ் மடித்துச் சிரித்துக் கொண்டவன், “ஏம் மைணி?” என்க,

 

“ம்ம்.. நீங்க நடத்துங்க கொழுந்தரே. நடத்துங்க” என்றுவிட்டு சென்றாள்.

 

அவன் உணவை நீட்ட, வாய் திறந்து வாங்கிக் கொண்டாள்.

 

நாலு இட்லி உண்டதும், “போதுங்க” என்று அவள் கூற,

 

“இன்னும் ஒன்னிருக்குடி” என்றான்.

 

“வயிறு ஃபுல். நாலு சாப்டேனே. எங்க வீட்டு இட்லி குட்டியாருக்கும். அதுவே நான் நாலுதான் சாப்டுவேன். இங்க எல்லாம் குண்டு குண்டா இருக்கு. இதுக்கு மேல சத்தியமா முடியாது. அத மட்டும் நீங்க சாப்டுடுங்களேன்” என்று அவள் கெஞ்சலாய் கூற,

 

இட்லியை பிட்டு தன் வாயில் வைத்தவன் முகம் அஷ்டகோனலானது.

 

“ஏட்டி சப்புனில்லியா?” என்று அவன் கேட்க,

 

“நீங்க இந்த காரம் சாப்டுறதால தான் அந்த கோவம் வருது போல” என்று முனகியவள், “எனக்கு சரியா இருக்கு” என்றாள்.

 

அவள் முனகியதையும் நன்கு கேட்கப் பெற்றவன், சின்ன சிரிப்புடன் இட்லியை மென்று விழுங்கிவிட்டு கைகளைக் கழுவிக் கொண்டு வந்து அவள் வாய் துடைத்துவிட்டு நீர் கொடுத்தான்.

 

தனமும் தயாராகி வர, “பாத்து போயிடுவியாடி?” என்று கேட்டான்.

 

“அதெல்லாம் போயிடுவேங்க. ரொம்பலாம் வலி இல்ல” என்றவள் உள்ளே கார்த்திகாவிடமும் தெய்வாவிடமும் கூறிக் கொண்டு புறப்பட்டாள்.

 

செல்பவளையே பார்த்து நின்றவன், ஒருமுடிவோடு தன் அன்னையிடம் சென்றான்.

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
6
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. வளவன் தன் அம்மாவுக்கு புரிய வைத்தாலும் அந்தம்மா திருந்துற மாதிரி தோணல