

அத்தியாயம் 8
இதுவரை நெஞ்சில் இருக்கும்
சில துன்பங்களை நாம் மறப்போம்
கடிகார முள் துளைத்து
தொடு வானம் வரை
போய் வருவோம்
அடைமழை வாசல் வந்தால்
கையில் குடையின்றி வா நனைவோம்
அடையாளம் தான் துறப்போம்
எல்லா தேசத்திலும் போய் வசிப்போம்
என்ன கொண்டு வந்தோம்
நாம் என்ன கொண்டு போவோம்
அட இந்த நொடி போதும்
வா வேறு என்ன வேண்டும் வேண்டும்
படுக்கையில் படுத்தவாறு சிரிப்புடன் கைப்பேசியில் வந்திருந்த இந்தக் குறுஞ்செய்தியைப் பார்த்துக் கொண்டிருந்தான் அர்ஜூன்.
‘என்ன படப் பாட்டு இது? தினமும் இப்படி ஏதாவது பாட்டு அனுப்பிடுறா? அது என்னனு கண்டுபிடிக்கிறதுக்குள்ளேயே மூளை ஒரு வழியாகிடுது’ தனக்குள்ளேயே புலம்பியவனாய் கூகுளில் தேடினான் அர்ஜூன்.
அர்ஜூனைப் பார்த்த நாளிலிருந்து அன்றாடம் இரவு இப்படி ஏதேனும் நேர்மறை எண்ணங்களை விதைக்கும் பாடல் வரிகளை அவனுக்கு அனுப்பிடுவாள் அர்ச்சனா.
இன்றுடன் அவனை அவள் பார்த்து முப்பது நாட்கள் ஆகிறது.
அன்று ஹோட்டலில் அவனைப் பார்த்து விட்டு சென்ற பிறகு இப்படி குறுஞ்செய்தி மட்டுமே அவளிடமிருந்து வந்து கொண்டிருக்கிறது அவனுக்கு.
இந்தக் குறுஞ்செய்திகளின் மூலம் அன்றாடம் இரவு அவனது நினைவில் சென்று ஒட்டிக் கொள்வாள் அர்ச்சனா. அதன் பிறகு உறங்கும் வரை அர்ச்சனாவின் நினைவு மட்டுமே அவனிடம் இருக்கும்.
பாடலைப் பற்றி கூகுளில் தேடியவன், “ஓ அயன் படத்துல வர்ற பளபளக்குற பகலா நீ பாட்டா இது! எங்கிருந்துலாம் வரிகளை பிடிக்கிறா இந்தப் பொண்ணு? இந்தப் பாட்டுல இவ்வளோ துத்துவமான வரிகள் இருக்கும்னு இவ்ளோ நாள் தெரியாம போச்சே” என்று தனக்குத் தானே பேசிக் கொண்டவனாய் அந்தப் பாட்டைத் தரவிறக்கம் செய்து கேட்டுக் கொண்டே அர்ச்சனாவின் நினைவினுடனே உறங்கிப் போனான் அர்ஜூன்.
மறுநாள் காலை ஹோட்டலில் தனது அறையில் அமர்ந்தவனாய் கோபத்துடன் பேசிக் கொண்டிருந்தான் அர்ஜூன்.
“உங்களுக்கு வேலை அசைன் செய்ற நாளுலலாம் சொல்லாம கொள்ளாம லீவ் எடுத்துட்டு போய்டீங்கனா உங்க வேலையை இங்கே யாரு செய்வாங்கனு கொஞ்சமாச்சும் யோசிச்சீங்களா பிரியா! உங்களால இங்கே ஜீவா தான் அடிக்கடி திண்டாடிப் போய்டுறாரு. இனி ஒரு தடவை இப்படி நடந்தாலும் உங்களை வேலையைத் விட்டு தூக்கிடுவேன் பிரியா. பார்த்து நடந்துக்கோங்க. This is the last warning for you Priya” குரலில் காரம் தெறிக்க அதட்டலாய் உரைத்தவன்,
கணினியில் பார்வையைப் பதித்தவனாய், “யூ கேன் லீவ் நௌ” என்றான்.
இத்தனை நேரமாகக் கோபத்தைக் கொப்பளித்த அவன் கண்கள் கணினியில் தெரிந்த அந்த நட்சத்திர உணவக விடுதியின் வரவேற்பறையின் நேரலைக் காணொளியைக் கண்டு மென்மையாகிப் போனது.
மெல்லிய புன்னகையுடன் வரவேற்பறையிலிருந்த கேமராவின் மூலமாக அங்கு நடப்பவைகளை இங்கே கணினியில் காணொளியாகப் பார்த்துக் கொண்டிருந்த அர்ஜூனின் முகம் மலர்ந்து போனது.
வரவேற்பறையில் ஆளுயரக் கண்ணாடியின் முன் பிளைன் பச்சை நிற ஷிபான் புடவையை ஒற்றை முந்தானையாய் விட்டு கொண்டு ஒய்யாரமாய் நின்றவளாய் தன்னைப் சரி பார்த்துக் கொண்டிருந்தாள் அர்ச்சனா.
முதுகு வரை இருந்த சுருள் கேசத்தை இழுத்துப் பின்னலிட்டிருந்தாள். நெற்றியில் பச்சை நிறத்தில் வட்டப் பொட்டும் அதன் கீழே குங்குமமும் அவளின் அழகை மேலும் மெருகேற்றிக் காட்ட, அங்கே காணொளியில் தன்னை மீறி அவளை அவன் ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்த அதே நேரம், இங்கே கண்ணாடியில் தன்னைப் பார்த்தவளாய், ‘அஜூ கண்டிப்பா உன் அழகுல கவுந்து அவரே பிரபோஸ் செஞ்சிடப் போறாரு பாரு’ வெட்க முறுவலுடன் தனக்குத் தானே கூறிக் கொண்டாள்.
கனிந்த முகத்துடன் அந்தக் காணொளியில் அவளைப் பார்த்துக் கொண்டிருந்த அர்ஜூனுக்கு உடனே அவளை நேரில் பார்க்க வேண்டுமென்ற ஆசை துளிர்த்து நெஞ்சம் பரபரக்க, வரவேற்பாளினிக்கு அழைத்து அவளை உள்ளே அனுப்புமாறு உத்தரவிட்டான்.
அடுத்த சில நிமிடங்களில், “ஹாய் அர்ஜூன்” குதூகலமான குரலில் உரைத்தவளாய் அவன் முன் வந்து நின்றாள் அர்ச்சனா.
அர்ஜூனின் உள்ளம் அவளின் குரலில் குதூகலித்த போதும் முகத்தில் பிரதிபலிக்காமல் உணர்வற்ற பாவத்துடன் அவளைப் பார்த்த அர்ஜூன், “யெஸ் மேடம். ஹௌ கேன் ஐ ஹெல்ப் யூ?” எனக் கேட்டான்
அவனது கண்களையே பார்த்தவாறு அவன் முன்னே அமர்ந்த அர்ச்சனா, “வாவ் அர்ஜூன் உங்க கண்ணுல லேசா உற்சாகம் தெரியுதே! குட் கோயிங் அர்ஜூன். இப்படியே இந்தக் கண்ணுல கொஞ்சமா தெரியுற அந்த வலியையும் முழுசா உங்ககிட்ட இருந்து விரட்டிட்டா போதும் எனக்கு. ஐ வில் பி வெரி ஹேப்பி!” என்றாள்.
தன்னை இந்தளவிற்கு அவள் கண்டு கொண்டதில் உள்ளம் நெகிழ்ந்து போக அவனின் புருவங்கள் வியப்பில் வளைந்து முகம் கனிந்து போனது. ஆனாலும் நொடியில் அதை மறைத்தவனாய் முகத்தில் எவ்வித உணர்வையும் காட்டாது அமைதியாக அவளைப் பார்த்திருந்தவன், “இப்ப எதுக்காக இங்கே வந்திருக்கீங்க மேடம்?” எனக் கேட்டான்.
“அர்ச்சனானு சொல்லுங்க! அப்ப தான் சொல்லுவேன்” அடமாய் அவள் உரைத்திட, இப்பொழுது நழுவும் நெஞ்சை இழுத்துப் பிடிக்காது மெல்ல புன்னகைத்தவனாய், “சொல்லுங்க அர்ச்சனா. என்ன வேணும்?” எனக் கேட்டான்.
“நீங்க தான் வேணும் அர்ஜூன்” பட்டெனச் சொல்லி கண்களைச் சிமிட்டினாள் அர்ச்சனா.
“வாட்?” கூவலாய் கூறியவனின் கண்கள் அதிர்ந்து விழிக்க,
“வாட் எ லவ்லி ஐஸ்” அந்தக் கண்கள் காட்டும் பாவனையில் தன்னை தொலைத்தவளாய் அவனின் கண்களை ரசிப்புடன் ஆழ்ந்து நோக்கியவாறு உரைத்திருந்தாள் அர்ச்சனா.
அவளின் ரசித்தலில் இவனின் முகத்தில் தானாய் வெட்கம் படரத் தொடங்கவும் அதனை மறைத்துக் கட்டுக்குள் கொண்டு வந்தவனாய் கோபமாய் முகத்தை வைத்துக் கொண்டவன், “நீங்க என்ன பேசுறீங்கனு புரிஞ்சி தான் பேசுறீங்களா அர்ச்சனா?” எனக் கேட்டான்.
“யெஸ். ஐ’ம்” அழுத்தமாய் வந்தன அவளின் வார்த்தைகள்.
ஆழ்ந்து மூச்சிழுத்து விட்டவனாய் அவளைப் பார்த்தவன், “ஐ’ம் மேரீட் அர்ச்சனா. உங்ககிட்ட நான் முன்னாடியே இதை சொல்லிட்டேன்” என்றான்.
“உங்களுக்கு டிவோர்ஸூம் ஆகிடுச்சுனு எனக்குத் தெரியும் அர்ஜூன்” அசால்ட்டாய் உரைத்திருந்தாள் அர்ச்சனா.
“சரி இப்ப அதுக்கு என்ன?” புருவம் நெரியக் கேட்டான் அர்ஜூன்.
“டிவோர்ஸ் தான் ஆகிடுச்சே! என்னை நீங்க கல்யாணம் செஞ்சிக்கலாம் தானே அர்ஜூன்” எனக் கேட்டாள்.
“ஓ எனக்கு டிவோர்ஸ் ஆகிட்டனால எனக்கு வாழ்க்கை கொடுக்க வந்துட்டீங்கனு உங்களோட பிரபோசலை ஏத்துக்கிட்டு உங்களை நான் கல்யாணம் செஞ்சிக்கனுமா?” நெறித்த புருவத்துடன் பார்த்தவாறு கேட்டான்.
“உங்களுக்கு வாழ்க்கை கொடுக்கிறேன்னு நான் சொல்லலையே அர்ஜூன்! உங்களைப் பிடிச்சி தான் நான்…” என்று அவள் பேசிக் கொண்டிருக்கும் போதே இடையில் புகுந்தவனாய்,
“எனக்கும் உங்களைப் பிடிக்கனும் தானே அர்ச்சனா? நான் என்னோட முன்னாள் மனைவியை நினைச்சிக்கிட்டு அவளோட நினைவோடயே வாழ்ந்துடுறதா முடிவு எடுத்திருந்தா என்ன செய்வீங்க? எதுக்கு இப்படித் தேவையில்லாம ஆசையை வளர்த்துக்கிறீங்க?” அழுத்தமான குரலில் கேட்டிருந்தவனின் கண்களில் கோபக்கனல்.
அவனது கண்களில் தெரிந்த கோபத்தில் விளையாட்டை கை விட்டவளாய், “உங்க முன்னாள் மனைவிக்கும் உங்களுக்கும் ஒத்து வரலைன்னு தான் டிவோர்ஸ் வாங்கியிருக்கீங்க அர்ஜூன். உங்க டிவோர்ஸ் பத்தின விவரங்களை விசாரிச்சு தெரிஞ்சிக்கிட்டேன். இரண்டு பேரும் விருப்பப்பட்டு பிரிஞ்சிருக்கீங்க. மூனு மாசம் தான் உங்க மனைவி உங்க கூட இருந்திருக்காங்க. உங்களுக்குள்ள என்ன பிரச்சனை இருந்துச்சு என்ன ஏதுனுலாம் எனக்குத் தெரியாது அர்ஜூன். ஆனா இந்த டிவோர்ஸ் உங்க மனைவியோட நல்வாழ்க்கைக்காக நீங்க கொடுத்ததுனு தெரிஞ்சிக்கிட்டேன். அதுக்கு பின்னாடி இருக்க காரணங்கள்லாம் எனக்கு தெரியாது. நீங்க நல்லவர்னு மட்டும் தெரியும். நீங்க இந்த டிவோர்ஸ்னால மனசளவுல பாதிக்கப்பட்டிருக்கீங்கனு தெரியும். அது தான் உங்க கண்ணுல எப்பவும் நிரந்தர வலியா தேங்கி நிக்குதுனும் தெரியும். என்கிட்ட வந்துடுங்க அர்ஜூன். உங்க வலி எல்லாத்தையும் போக்கிச் சந்தோஷமான வாழ்க்கையை உங்களுக்கு நான் தரேன்” மென்மையான குரலில் உரைத்தாள்.
“நான் கேட்டேனா? எனக்கு வாழ்க்கை கொடுங்கனு உங்களை நான் கேட்டேனா? நீங்க போடுற இந்த வாழ்க்கைப் பிச்சை எனக்கு வேண்டாம் அர்ச்சனா” கோபத்துடன் கத்தியிருந்தான் அர்ஜூன்.
“என்ன பிச்சை அது இதுனு சொல்றீங்க?
உங்க மொத பொண்டாட்டி இப்படி எதுவும் சொல்லி உங்களை காயப்படுத்தினாங்களா? நான் அவங்கள மாதிரிலாம் உங்களை கஷ்டப்படுத்த மாட்டேன் அர்ஜூன். என்னை நம்புங்க” என்று இவள் மேலும் பேசிக் கொண்டே போகவும்,
இவனின் முகம் ரௌத்திரமாக மாற, “மயிலு என்னை கஷ்டப்படுத்தினானு உனக்குத் தெரியுமா? என் வாழ்க்கையைப் பத்தி என்ன தெரியும் உனக்கு? யாரு எவருனு தெரியாதவங்க மேல பழிப்போட்டு பேசுற நீ எல்லாம் என்ன பொண்ணு? என்ன தெரியும் உனக்கு மயிலைப் பத்தி?” பல்லைக் கடித்துக் கொண்டு கோபத்துடன் அவன் பேசியதில் சற்று பயத்துடன் அவனைப் பார்த்த அர்ச்சனா,
“இல்ல உங்களை வேண்டாம்னு வேற ஒருத்தரைக் கட்டிக்கிட்டு போனவங்க எப்படி நல்லவங்களா இருக்க முடியும்?” தட்டுத் தடுமாறி உள்ளே போன குரலில் கேட்டாள்.
“ஜஸ்ட் கெட் அவுட் ஃப்ரம் மை சைட் (என் கண்ணு முன்னாடி நிக்காம வெளியே போ)” என்று கத்தியிருந்தான் அர்ஜூன்.
“இதுக்கு மேல ஒரு வார்த்தை மயிலு பத்தி உன் வாயில வந்துச்சு அவ்ளோ தான் சொல்லிட்டேன். திஸ் ஸ் த லிமிட்” இருக்கையில் இருந்து எழுந்து நின்று கர்ஜித்தவன், “ஜீவா” என்று கத்தினான்.
அவனது குரலில் அவளது உடல் நடுங்கி கண்களில் கண்ணீர் தேங்கியது. இப்படியொரு கோபத்தை அவனிடம் அவள் எதிர்பார்க்கவே இல்லை.
ஜீவா பதறியடித்து உள்ளே வரவும், “இவங்களை இங்க இருந்து போக சொல்லுங்க ஜீவா! இனி என் கண்ணு முன்னாடி இவங்க வரவே கூடாது” என்று கூறி விட்டு அந்த அறையை விட்டு வெளியே சென்றிருந்தான் அர்ஜூன்.
அவன் வெளியே சென்றதும் கண்களைத் துடைத்தவளாய் அங்கிருந்து கிளம்பியிருந்தாள் அர்ச்சனா.
அடுத்த வந்த நாள்களில் அன்றாடம் இரவுகளில் அவள் அனுப்பும் குறுஞ்செய்திகள் வராமல் நின்று போயின.
அவளின் இந்த ஒதுக்கத்தில் அர்ஜூன் திண்டாடிப் போனான். அன்றாடம் இரவு மனம் அவளை எண்ணித் தவித்துப் போனது. அவளது குறுஞ்செய்திக்காக ஏங்கிப் போனது. மனத்தில் வெறுமையையும் பெரும் வேதனையையும் உணர்ந்தான்.
‘அன்னிக்கு ரொம்ப ஓவரா பேசிட்டோமோ! எப்பவும் ஜாலியா சுத்துற பொண்ணு அன்னிக்கு கண்ணு கலங்கிப் போய் பயத்தோட என்னைப் பார்த்துச்சு. அப்படி என்ன கோபம் எனக்கு’ என்று அன்றாடம் தன்னைத் தானே திட்டிக் கொண்டான்.
‘ஆனாலும் நான் செஞ்சது சரி தான். என்னை மறந்தா தான் அவ வாழ்க்கை நல்லா இருக்கும். இனி அவளை என்னிக்கும் பார்த்துடவே கூடாது’ என்று இப்படியும் நினைத்துக் கொண்டான்.
அன்றாடம் இரவு அவனின் நினைவுகளை ஆக்ரமிக்கத் தொடங்கிய அர்ச்சனா, அவனது உறக்கத்தையும் களவாடி அவனது மனத்தில் சிம்மாசனமிட்டு அமர்ந்து அவனைத் தன்னை நோக்கி இழுத்திருந்தாள்.
ஆயினும் அவளது நல்வாழ்வுக்கென எண்ணி, அவனது ஹோட்டலில் நடைபெற்ற இசை நிகழ்ச்சிக்காக அவள் வந்த போது கூட அவளைப் பார்க்காது தவிர்த்தான் அர்ஜூன்.
இப்படியே அர்ஜூன் அவளிடம் ஒதுங்கிச் சென்றிருந்த வேளையில், அவளை நோக்கி அவனை வர வைத்திருந்தாள் அர்ச்சனா.

