

மயில் போலப் பொண்ணு ஒன்னு
கிளி போலப் பேச்சு ஒன்னு
மகிழுந்தில் பாடல் ஒலிக்கவும், அர்ஜூனைப் பார்வையால் எரித்தாள் அர்ச்சனா.
கண்களில் அணிந்திருந்த குளிர்க் கண்ணாடியின் வழியாக அவளின் எரிக்கும் பார்வையைப் பார்த்தவனுக்கு உள்ளுக்குள் கிலி பிடித்தாலும் அதனை மறைத்தவனாய் புன்சிரிப்புடன் அவளைப் பார்த்தவன், “நீ என்னை இம்ப்ரஸ் செய்றதுக்காக மொத மொதலா பாடின பாட்டு இது அச்சுமா. என் மனசுல இந்தப் பாட்டு அப்படித் தான் பதிஞ்சி இருக்கு அச்சுமா” அழுத்தமான குரலில் உரைத்தான்.
“ஆனா மொத மொதலா நான் பாடின இந்தப் பாட்டு உங்களுக்கு உங்க முன்னாள் மனைவியை தானே ஞாபகப்படுத்துச்சு” கோபத்துடன் உரைத்தவளாய் முகத்தைத் திருப்பினாள் அர்ச்சனா.
அவளின் பேச்சில் அதீத கோபம் கொண்டவனாய் மகிழுந்தைச் சட்டென ஓரங்கட்டி நிறுத்தியவன், “என்னடி பேச்சு இது?” என்று கத்தினான்.
“நானும் ரெண்டு நாளா பார்த்துட்டு இருக்கேன். முன்னாள் மனைவி.. முன்னாள் மனைவினு சொல்லிட்டு இருக்க! என்னோட மனைவினு சொல்ல கூடப் பிடிக்காம தானே மயிலு என்னை விட்டுப் போனா! அது உனக்கும் நல்லாவே தெரியும் தானே. என் மேல இருக்க கோபத்துல என்னை நீ அசிங்கபடுத்துறதா நினைச்சி உன்னை நீயே தாழ்த்திக்கிறடி” முழு வெறுப்புடன் வெளி வந்த அவன் வார்த்தைகளில் இவளின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடியது.
“இளமயில்! டாக்டர் இளங்குமரனோட மனைவி. இரண்டு குழந்தைங்களுக்கு அம்மா! என்னோட முன்னாள் மனைவிங்கிற அடையாளத்தை முழுசா துடைச்சுட்டு இளங்குமரனோட காதல் மனைவியா பத்து வருஷத்துக்கும் மேல வாழ்ந்துட்டு இருக்கிறவளைப் போய் என்னோட முன்னாள் மனைவினு சொல்றியே, உனக்கு மனசாட்சி இல்லயா?” என்று கத்தியிருந்தான்.
அவனின் சத்தத்தில் அவளின் உடல் ஒரு நொடி அதிர்ந்தடங்கியது.
அவள் உடலின் நடுக்கத்தில் தன்னை நிதானப்படுத்தியவனாய் குரலைத் தாழ்த்தியவன்,
“ஒரு காலத்துல மயிலு சந்தோஷமா வாழுறதைப் பார்க்கனும்னு சொல்லி நான் எவ்ளோ ஏங்கினேன்னு உனக்கே நல்லா தெரியுமே அச்சுமா. மயிலு எனக்கு டிவோர்ஸ் கொடுத்துட்டு குமரனைக் கல்யாணம் செஞ்சிக்காம தனிச்சு வாழுறதைக் கேள்விப்பட்டு நான் எவ்ளோ கவலைப்பட்டேன்னு உனக்கு நல்லா தெரியுமே. நமக்கு கல்யாணம் ஆன பிறகும் மயிலு கல்யாணம் செய்யாம இருக்கிறதைத் தெரிஞ்சி வருத்தப்பட்ட எனக்கு ஆறுதல் சொல்லி என்னைத் தேத்தினவளே நீ தானடி!”
“என்னை நீ கல்யாண செஞ்சப்ப கூட மயிலு பத்தி இப்படிலாம் பேசலையேடி! நம்ம கல்யாணத்துக்கு வந்திருந்த மயிலுக்கிட்ட கூட உங்களால தான் எனக்கு அர்ஜூன் கிடைச்சாருனு அவ்ளோ அன்பா பேசுனியே! இப்ப என்னாச்சு உனக்கு?
மயிலை நீ விரோதமா எதிரியா பார்க்கிறதும், மயிலை வச்சி நீ என்கிட்ட சண்டைப் போடுறதும் என் நெஞ்சை நொறுக்கிப் போடுது அச்சுமா” வலியும் வேதனையும் நிறைந்த குரலில் உரைத்தவனை கண்ணீரும் வலியும் நிறைந்த பார்வையுடன் பார்த்திருந்தாள் அர்ச்சனா.
முகத்தைத் திருப்பிக் கொண்டு ஜன்னல் வழியாக வெளியே பார்த்தவன் பெருமூச்சுடன் மகிழுந்தை ஓட்டத் தொடங்கினான்.
‘அவன் கூறுவது உண்மை தானே! என்னாயிற்று எனக்கு? அர்ஜூனை மணம் செய்த போது கூட மயில் குறித்து தான் பொறாமைப்பட்டது இல்லையே! அர்ஜூனுக்கு இளமயிலை எந்தளவிற்குப் பிடிக்குமென அவன் வாயாலேயே திருமணத்திற்கு முன்பு கேட்டப் போதும் கூட தான் கோபப்படவில்லையே! ஆனால் ஏன் தாம் இவ்வாறு நடந்து கொள்கிறோம்’ தன்னைக் குறித்தே சிந்தித்தவளாய் முகத்தை ஜன்னலை நோக்கித் திருப்பிக் கொண்டாள் அர்ச்சனா.
அவளையும் சாலையையும் மாறி மாறிப் பார்த்தவனாய் வண்டியை ஓட்டிக் கொண்டிருந்த அர்ஜூன் சில நிமிட அமைதிக்குப் பிறகு தனது கோபத்தைக் குறைத்து தன்னைக் கட்டுக்குள் கொண்டு வந்தவனாய், “நீ இப்படி அழுறதைப் பார்க்கும் போது மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்குடா. உன்கிட்ட கோபமா பேசுறது கூட எனக்கு கஷ்டமா இருக்கு அச்சுமா. ஆனா நீ இப்பலாம் என்னை ரொம்ப வார்த்தையால கொல்றடா! அதனால என்னை மீறி நான் பேசிடுறேன். சாரிடா அச்சுமா”
வாஞ்சையுடன் அவளின் கரத்தினைப் பற்றியவனாய் கூறினான் அர்ஜூன்.
நனைந்து ஈரமாகியிருந்த விழிகளுடன் அமைதியாய் திரும்பி உணர்வற்ற பாவனையில் அவன் முகத்தைப் பார்த்தவள், மெல்ல தனது கரத்தை அவனிடமிருந்து உருவிக் கொண்டு முகத்தை வெளியே திருப்பிக் கொண்டாள்.
‘என்னாச்சு எனக்கு? நான் ஏன் இப்படி இருக்கேன்? நான் இப்படிக் கிடையாதே’ அவனின் பேச்சுகள் ஒவ்வொன்றும் பெருந்தவறு செய்தது போன்ற குற்றவுணர்வுக்குள் அவளை ஆழ்த்தியது. மெல்ல அவளின் தேகம் கூட இதனால் நடுங்கியது.
நல்குணவதியாய் மகிழ்வானவளாய் எப்பொழுது இருக்க வேண்டுமென்ற கொள்கையுடன் வாழ்பவளுக்கு அவனின் இந்தப் பேச்சும் குற்றச்சாட்டும் அவளைக் குறுகிப் போக வைத்திருந்தது.
ஏனோ மனத்தினோரம் அர்ஜூன் மீதான கோபம் அப்படியே தான் இருந்தது அவளுக்கு. எதனால் இந்தக் கோபம் என்று கூட அவளுக்குப் புரியவில்லை.
அதன் பிறகு அர்ஜூன் எதுவும் அவளிடம் பேசவில்லை. அமைதியாகவே சென்றிருந்தது அவர்களின் பயணம்.
சென்னை ஈசிஆர் கடற்கரைச் சாலையில் இருந்த அருஞ்சுனை கேளிக்கை விடுதிக்குள் (ரெசார்ட்) சென்றது அவர்களின் மகிழுந்து.
உள்ளே செயற்கை நீரூற்றுடன் பரந்து விரிந்த பூந்தோட்டத்தினைக் கடந்து ஒரு கிலோமீட்டர் தொலைவு பயணித்தவனாய் வண்டியை தனக்கான பிரத்யேகத் தரிப்பிடத்தில் நிறுத்தினான் அர்ஜூன்.
அர்ஜூன் நிறுத்திய மறுநொடி வண்டியிலிருந்து இறங்கிய அர்ச்சனா திரும்பியும் பார்க்காது விறுவிறுவென உள்ளே சென்றிருந்தாள்.
எப்பொழுதுமே அவனுக்காகக் காத்திருந்து அவனுடன் பேசியவாறு உள்ளே செல்பவள் இன்று அவனைத் தவிர்த்து விட்டுச் செல்வதை பெருமூச்சுடன் பார்த்தவனாய் இறங்கிய அர்ஜூன், உள்ளே சென்று வரவேற்பாளினியிடம் பேசி விட்டு, அந்த பிரமாண்ட விடுதிக்குப் பின்னே கடற்கரையை ஒட்டி அமைக்கப்பட்டிருந்த அவர்களது அறையை நோக்கிச் சென்றான்.
பெரிய கண்ணாடி மாளிகைப் போன்றிருந்த அந்த அறைக்குள் அர்ஜூன் சென்ற போது, அந்த அறையைச் சுற்றியிருந்த கண்ணாடிச்சுவற்றின் வழியாக கடலலைகளைப் பார்த்தவாறு நின்றிருந்தாள் அர்ச்சனா.
அர்ஜூன் அவளைப் பார்த்தும் பாராதவனாய் தனது இருக்கைக்கு சென்று அமர்ந்த நேரம் கதவைத் தட்டிக் கொண்டு உள்ளே வந்தான் ஜீவா.
முன்பு பெங்களூரில் அர்ஜூனுடன் வேலைப் பார்த்த அதே ஜீவா தான் இவன். அர்ஜூனுக்கு குடும்ப நண்பன் போன்றவன் தான் ஜீவா. ஆனால் ஜீவா எப்பொழுதும் தன்னுடைய மேலாளர் என்ற நிலையில் மரியாதையுடன் தான் அர்ஜூனிடம் பேசுவான்.
தன்னுடன் பெங்களூரில் பல வருடங்களாக வேலைப் பார்த்துக் கொண்டிருந்தவனை தனது விடுதிக்கு மேலாளராக நியமித்திருந்தான் அர்ஜூன்.
ஜீவா உள்ளே வருவதைப் பார்த்ததும் அவனைப் பார்த்து மென்னகைப் புரிந்தவளாய் தனது இருக்கைக்குச் சென்று அமர்ந்து கொண்டாள் அர்ச்சனா.
உள்ளே வந்த ஜீவா, அர்ஜூன் மற்றும் அர்ச்சனாவிடம் முகமென் கூறிவிட்டு அர்ச்சனா இருக்கைக்கு அருகே சென்றான்.
“மார்னிங் ஸ்டாப் மீட்டிங் முடிஞ்சிதா? எனி ஃபீட்பேக்?” எனக் கேட்டாள் அர்ச்சனா.
அன்றாடம் காலை விடுதிப் பணியாளர்கள் அனைவரிடமும் மீட்டிங் வைத்து அன்றைய நாளுக்கான நிகழ்வுகளைத் திட்டமிட்டுக் கூறிடுவான் ஜீவா. விடுதியில் பணிபுரியும் வரவேற்பாளினி, சமையல்காரர், தோட்டக்காரர், சுகாதாரப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவலாளிகள் என அங்கு சின்ன வேலையிலிருந்து பெரிய வேலை வரை செய்யும் அனைத்து பணியாளர்களும் அந்த மீட்டிங்கில் கலந்து கொள்வார்கள்.
முந்தைய நாள் நிகழ்வில் நடந்த பிழைகள் குளறுபடிகள், அதை எப்படி வருங்காலத்தில் எதிர்கொண்டு சரி செய்வது மற்றும் அன்றைய நாளுக்கு தேவையான திட்டமிடல்கள் என அந்த மீட்டிங்கில் இவர்களின் உரையாடல்கள் இருக்கும்.
மொத்தத்தில் அந்தக் கேளிக்கை விடுதியில் உள்ள பல்வேறு துறை சார்ந்த பணியாளர்கள் அனைவரையும் கட்டி மேய்க்கும் பணி அவனுடையது.
இவனை மேய்க்கும் பணி அர்ச்சனாவினுடையது.
விடுதிக்கு நேரடியாக வர முடியாத நாள்களில் காணொளி அழைப்பின் வாயிலாக ஜீவாவிடம் பேசி நிலவரத்தைத் தெரிந்து கொள்வாள். பணியாளர்களின் நிர்வாகத்தை அர்ச்சனாவின் பொறுப்பில் ஒப்படைத்திருந்தான் அர்ஜூன்.
ஜீவாவிடம் அன்றைய நாளுக்கான திட்டமிடலைக் குறித்துப் பேசி முடித்தவள் தனது இடத்தில் இருந்து எழுந்தாள்.
‘அஜூ நான் ரவுண்ட்ஸ் போய்ட்டு வரேன்’ என்று எப்பொழுதும் அர்ஜூனிடம் ஒரு வார்த்தை கூறி விட்டு செல்பவள் இன்று அவனைக் கண்டு கொள்ளாது ஜீவாவுடன் வெளியே சென்றாள்.
எப்பொழுதும் காலை விடுதிக்கு வந்த பிறகு ஜீவாவுடன் இணைந்து அந்த விடுதி முழுவதும் மேற்பார்வை செய்வாள். அனைத்தும் சுத்தமாய் அழகாய் பராமரிக்கப்படுகின்றதா என்று பார்ப்பாள். ஏதேனும் குற்றம் குறை இருப்பின் அதை சீர்படுத்தச் செய்திடுவாள்.
விடுதியை மேற்பார்வையிட தன்னிடம் சொல்லாமல் வெளியே செல்லும் மனைவியைப் பார்த்த அர்ஜூன், ‘கொஞ்ச நாளா இவளுக்கு என்னாச்சுனே தெரியலை! இவளைப் புரிஞ்சிக்கவே முடியலையே’ என்று தனக்குள்ளாகவே புலம்பியிருந்தான்.
அதன் பிறகு தனது கவனத்தை அலுவலில் செலுத்தினான்.
இணையத்தில் விடுதி அறையை முன்பதிவு செய்திருந்த வாடிக்கையாளர்களின் விவரங்களைப் பார்வையிட்டான்.
மாலை ஏதேனும் நிகழ்ச்சி நடந்தால் அதன் ஏற்பாடுகளைப் பார்வையிடுவது அந்தத் திட்டமிடலைச் செய்வது அவனது வேலை. இதற்கென்று தனியாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு மேலாளரை நியமித்திருந்தான்.
அந்த மேலாளரை அழைத்து அவருடன் பேசியவனாய் வேலையில் மூழ்கிப் போனான் அர்ஜூன்.
இங்குக் காலைப் பள்ளியில் இருந்து கிளம்பிய இளங்குமரனின் மகிழுந்து இளமயிலின் கல்லூரியை நோக்கிச் சென்று கொண்டிருந்தது.
“அர்ச்சனாவுக்கு ஏதோ மெண்டல் ஸ்டெரெஸ் இருக்குமோனு தோணுது இளா மச்சான். ஷீ இஸ் நாட் நார்மல்” தீவிரமான குரலில் உரைத்தாள்
“எதை வச்சி சொல்ற?” நெற்றிச் சுருங்கக் கேட்டிருந்தான் இளங்குமரன்.
“இப்படி இருக்கிறது அவங்க நேச்சரே இல்லை இளா மச்சான். செம்ம கலகலனு பேசுற டைப். அவங்க இருக்க இடமே அப்படித் தான் இருக்கும். யாரு மனசையும் கஷ்டப்படுத்துற மாதிரிலாம் பேச மாட்டாங்க. ஆனா இன்னிக்கு” என்றவள் யோசனையுடன் அமைதியாகவும்,
சற்றுப் பதறியவனாய், “உன்னை ஹர்ட் செய்ற மாதிரி எதுவும் பேசிட்டாங்களா மயிலம்மா?” எனக் கேட்டான்.
அவனின் கேள்வியில் சிரித்தவளாய், “சின்ன சின்ன விஷயத்துக்கும் ஹர்ட் ஆகுற வயசைக் கடந்தாச்சு இளா மச்சான். அதுவுமில்லாம சைக்காலஜி படிச்சிருக்கேனே, அதனால மனித மனங்களை புரிஞ்சிக்க தான் முயற்சி செய்றேனே தவிர கோபமோ வருத்தமோலாம் இப்ப வரது இல்லை” என்றாள்.
“ஹ்ம்ம் என் பொண்டாட்டி தேறிட்டா” என்று சிரித்தான் இளங்குமரன்.
மெல்ல சிரித்தவளாய், “அர்ச்சனா ஏதோ இன்செக்யூர்டா ஃபீல் செய்றாங்களோனு தோணுது இளா மச்சான். நானும் இதை கடந்து வந்திருக்கேன் தானே! அதனால என்னால அவங்களோட பேச்சை வச்சே அவங்க மனசை நல்லா புரிஞ்சிக்க முடியுது. இந்த ஃபீலிங்னால அவங்க தன்னோட நேச்சரையே இழந்து இப்படி ரியாக்ட் செய்றாங்களோனு தோணுது” என்றாள்.
“நீ சைக்காலஜில பிஎச்டி செஞ்சங்கிறதுக்காக இப்படிப் போக வரவங்ககிட்டலாம் உன்னோட சைக்காலஜி மூளைய வச்சே பார்க்காதே மயிலம்மா” என்று சிரித்தான் இளங்குமரன்.
“மச்சான்” என்று அவனை முறைத்தவள், “கண்டிப்பா இவங்களை நாம டின்னருக்கு கூப்பிட்டே ஆகனும்” தீவிர சிந்தனையுடன் உரைத்திருந்தாள் இளமயில்.
“ஒரு வாரம் போகட்டும். எப்படியாவது அவங்களை டின்னருக்கு வர வைக்கிறேன்” என்றான் இளங்குமரன்.
எப்பொழுதும் காலை அர்ஜூனுடன் வரும் அர்ச்சனா மதியம் இரண்டு மணியளவிலேயே அலுவலக மகிழுந்தில் வீட்டிற்குக் கிளம்பி விடுவாள். செல்லும் வழியில் சிவகணேசனின் பள்ளிக்குச் சென்று அவனையும் அழைத்துக் கொண்டு சென்றிடுவாள்.
அர்ஜூன் இரவு வரை இருந்து அன்றைய நாளுக்கான கணக்கு வழக்குகளை பார்த்து விட்டு தான் வீட்டிற்குக் கிளம்புவான்.
மாலை வேளைகளில் ஏதேனும் நிகழ்ச்சி இருந்தால் முடியும் வரை இருந்து விட்டு தாமதமாக வீட்டிற்குச் செல்வான்.
மாலை அலுவலக மகிழுந்தில் வீட்டிற்கு வரும் போது சிவகணேசனையும் பள்ளியிலிருந்து தன்னுடன் அழைத்து வந்திடுவாள் அர்ச்சனா.
அதன் பிறகு மகன் மற்றும் மகளுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பதிலேயே நேரம் விரைந்தோடிச் செல்லும்.
பெரும்பாலும் அனைவரும் ஒன்றாய் இணைந்து இரவுணவை உண்ணும் நேரம் தான் அர்ஜூன் வீட்டிற்கு வருவான். மாலை நிகழ்ச்சி ஏதேனும் இருந்தால் அதையும் தாண்டி தாமதமாகத் தான் வருவான்.
இன்று சீக்கிரமாகவே வீட்டிற்கு வந்த அர்ஜூன் இவர்களுடன் இணைந்து இரவுணவை உண்டான்.
அர்ச்சனா இன்னுமே அவனிடம் பேசாது தான் சுற்றினாள்.
மகன் மற்றும் மகளுடன் பேசியவாறே உண்டான் அர்ஜூன்.
இரவு மனைவியிடம் பேசி சமாதானம் செய்யலாம் என்று நினைத்தான். ஆனால் அன்று அவள் படுத்ததும் ஆழ்ந்து உறங்கிப் போனாள்.
மகள் மற்றும் மகனின் அறைக்கு சென்று அவர்களுடன் சிறிது நேரம் செலவழித்து விட்டு அறைக்கு வந்தவன் உறங்கும் மனைவியைக் கண்டு பெருமூச்சு விட்டவனாய், “என்னை கஷ்டப்படுத்துற உன்கிட்டயே தான் ஆறுதல் தேடி அலையுதுடி இந்த மனசு” வாய் விட்டே கூறியவன் அவளின் நெற்றியில் முத்தமிட்டு விட்டு அவளருகில் அணைத்தவாறு படுத்துக் கொண்டான்.
கண்களை மூடியவனுக்கு காலையில் இருந்து நடந்த நிகழ்வுகள் யாவும் மனத்தினுள் ஊர்வலம் போக, மயில் போல பொண்ணு ஒன்னு பாடலைப் பற்றி திருமணத்திற்கு முன்பு அர்ச்சனாவிடம் பேசிய நினைவுகள் கண்களுக்குள் படமாய் விரிந்தன.

