

அத்தியாயம் 9
“அர்ஜூனா பெங்களூருல நம்ம தூரத்து சொந்தகாரங்க இருக்காங்கல. எனக்கு ஒன்னு விட்ட அண்ணா முறை வருமேடா. அவரோட பையனுக்கு அடுத்த மாசம் கல்யாணமாம். இன்னிக்கு நம்ம வீட்டுக்கு வந்து பத்திரிக்கை வச்சிட்டு போனாரு. அப்பாக்கும் எனக்கும் அன்னிக்குக் காலேஜ் லீவ் இல்லடா. நீ அங்கே தானே இருக்க. ஒரு எட்டு அந்தக் கல்யாணத்துக்குப் போய்ட்டு வந்துடுடா” அர்ஜூனின் அன்னை சித்ரா அவனிடம் கைப்பேசியில் உரைத்திருந்தார்.
இரவு வேளையில் தனது அறையில் கட்டிலில் படுத்திருந்தவனாய் அன்னையின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த அர்ஜூன், “அதெல்லாம் முடியாதுமா. நான் எங்கேயும் போறதா இல்லை” என்றான்.
“ஏன்டா இப்படிச் சொல்ற! அவங்க உன்னோட கல்யாணத்துக்கு வந்து மொய் வச்சிட்டு போனாங்கடா. நாம திரும்ப மொய் செய்யனும்ல” என்றவர் சொல்லவும் கோபம் கொண்டவனாய், “ம்மாஅஅ புரிஞ்சி தான் பேசுறியா நீ? அந்தக் கல்யாணம் தான் இல்லைனு ஆகிப் போச்சே! அதுக்கு எதுக்கு இப்ப நான் தேடிப் போய் மொய் செய்யனும்” ஆத்திரத்துடன் உரைத்தான்.
“யாரு கண்ணு பட்டுச்சோ! உன் வாழ்க்கை இப்படி ஆகிப் போச்சு. அதுக்காக அவங்க மொய் செஞ்சது இல்லனு ஆகிடுமாடா. இன்னிக்கு அவங்க பத்திரிக்கை வைக்கும் போது கூட உன் வாழ்க்கைப் பத்தி தான் கரிசனத்தோட பேசினாங்க தெரியுமா! எல்லாம் அந்தச் சிறுக்கி மயிலால வந்துச்சு. இப்படியும் பொண்ணு இருக்குமா உலகத்துலனு அவளை நல்லா திட்டுட்டு தான் போனாங்க” என்றவர் பேசிக் கொண்டே போகவும்,
“ம்மாஅஅஅ நிறுத்திறியா கொஞ்சம். மயிலை இப்படிலாம் பேசாதனு உன்கிட்ட எத்தனை தடவை சொல்றதுமா. நான் தான் இந்தக் கல்யாணம் வேண்டாம்னு முடிவு செஞ்சி டிவோர்ஸ் வாங்கினேன். அவளை எதுக்குத் தேவையில்லாம இதுல இழுக்கிற நீ! இதுல போற வரவங்ககிட்டலாம் அவளைப் பத்தி குறைச் சொல்லிட்டு வேற இருக்கியா? இப்படிலாம் உன் பேச்சைக் கேட்க முடியாம தானேமா பெங்களூருக்கு வேலை வாங்கிட்டு வந்தேன். இன்னுமா உன் வாய் அடங்கலை” பொரிந்து தள்ளினான் அர்ஜூன்.
“அடங்குடா! உன்னைப் பத்தி எனக்குத் தெரியாதா? இவன் வேண்டாம்னு டிவோர்ஸ் கொடுத்துட்டானாம். யாரு காதுல பூ சுத்த பார்க்கிற? உனக்கு அந்தப் பொண்ணை எவ்ளோ பிடிக்கும்னு எனக்கு நல்லாவே தெரியும். நீங்க ஏன் பிரிஞ்சீங்கனு எங்களுக்குக் காரணம் தெரியாம வேணா இருக்கலாம். ஆனா இந்த முடிவை முழுக்க முழுக்க அவளுக்காகத் தான் நீ எடுத்தனு எனக்கு நல்லாவே தெரியும்.
நல்லா இருந்த குடும்பத்தை இப்படி நாசாமாக்கிட்டு போய்ட்டாளேனு நான் வயிறு கொதிச்சு போய் இருக்கேன். வந்துட்டான் பெரிசா அவளுக்கு சப்போர்ட் செஞ்சிட்டு! நீ இன்னொரு கல்யாணம் செய்ற வரைக்கும் இப்படித் தான்டா நான் பேசுவேன். என்னடா செய்வ” கண்கள் கலங்க படபடவென மனத்தின் குமுறல்களைக் கொட்டியிருந்தார் சித்ரா.
சித்ரா பேசப் பேச மனத்தினுள் பொங்கிக் கொண்டு வந்த கோபத்தை அடக்கியவனாய் பெருமூச்சு விட்டவன், “இப்ப என்ன உனக்கு? நான் அந்தக் கல்யாணத்துக்குப் போகனும். அவ்ளோ தானே! அட்ரஸ்ஸை அனுப்பி வை” என்றவனாய் இணைப்பைத் துண்டித்திருந்தான் அர்ஜூன்.
அழைப்புத் துண்டிக்கப் பட்டதும், “ஹப்பா அவனை ஒத்துக்க வைக்கிறதுக்குள்ள என் தொண்டைத் தண்ணி வத்திப் போய்டுச்சுங்க. சீக்கிரம் இவனுக்கு ஒரு பொண்ணைப் பார்த்துக் கட்டி வைக்கனும். அதுக்காக இவன்கிட்ட இன்னும் நான் என்ன வாய்ஜாலம்லாம் காட்ட வேண்டியது இருக்குமோ தெரியலை” தனது கணவரிடம் அலுப்புடன் புலம்பலாய் உரைத்திருந்தார் சித்ரா.
“எல்லாம் என் தப்பு தான் சித்து. நான் தானே அந்தப் பொண்ணைப் பார்த்து அவனுக்குக் கட்டி வச்சேன். நானே என் பிள்ளை வாழ்க்கையைக் கெடுத்துட்டேன்” என்று கவலையுடன் உரைத்தார் செந்தமிழன்.
“ம்ப்ச் நீங்க எதுக்கு உங்க மேல பழியைத் தூக்கிப் போட்டுக்குறீங்க. எல்லாத்துக்கும் காரணம் அந்த மயிலு மட்டும் தான். அவளை நான் என்னிக்கும் மன்னிக்க மாட்டேன்” ஆங்காரத்துடன் உரைத்த சித்ரா, “சீக்கிரம் அவனுக்கு வேற பொண்ணைப் பார்ப்போம்ங்க” என்றார்.
இங்கே அறையில் படுத்திருந்த அர்ஜூனுக்கு அன்னையின் பேச்சை எண்ணிக் கடுங்கோபம் உண்டானது.
கண்களை மூடி உறங்க முயன்றவனின் கண்களுக்குள் இளமயில் வந்து நின்றாள்.
அவனின் முதல் காதல் அவள்.
அவளின் நினைவு வந்த நொடி, நிறைவேறாக் காதலின் வேதனையில் நெஞ்சில் விண்ணென வலி தோன்றி மறைய, தனது மார்பைத் தடவி கொண்டான்.
‘நீ எங்க இருந்தாலும் நல்லா இருக்கனும் மயிலு’ மனத்தோடு கூறிக் கொண்டவனின் கண்களை நிறைத்தது கண்ணீர்.
நெடு நாள்களுக்குப் பிறகு அன்று அர்ச்சனாவை மறந்து ஒரு தலைக் காதலின் வலியை அனுபவித்தவனாய் உறங்கிப் போனான் அர்ஜூன்.
அடுத்து வந்த நாள்களில் தனது அலுவலில் கவனத்தைச் செலுத்தியவனுக்கு அர்ச்சனாவின் நினைவு அவனை விட்டு மெல்ல நீங்க ஆரம்பித்திருந்தது.
அன்று அவனது அன்னை கூறிய அந்தத் திருமணத்தின் வரவேற்புக்குச் சென்றிருந்தான் அர்ஜூன்.
நீல நிற ஜீன்ஸூம் மஞ்சள் டீ சர்ட்டும் அணிந்து அழகனாய் தோற்றமளித்தவனைப் பலரின் கண்கள் வட்டமிட்டன.
இன்னுமே மணமக்கள் மேடைக்கு வராது இருக்க, ‘சொன்னா சொன்ன டைமுக்கு வர மாட்டாங்களா? என்ன ஈவண்ட் மேனேஜ்மெண்ட் செய்றாங்க இவங்க’ என்று மனத்தோடு புலம்பியவனாய் அந்த விழா இடத்தினில் இருந்த நாற்காலியில் அமர்ந்திருந்தான் அர்ஜூன்.
மெல்லிசைக் கச்சேரிக்கான ஆயத்தப் பணிகள் ஓரமாய் மற்றொரு சிறிய மேடையில் நடைபெறுவதைப் பார்த்து விட்டு தனது கைப்பேசியில் மூழ்கிப் போயிருந்தவனைக் கலைத்தது அவளின் குரல்.
மயில் போலப் பொண்ணு ஒன்னு
கிளி போலப் பேச்சு ஒன்னு
காதினில் இப்பாடலின் குரல் ஒலித்த நொடி, ‘அர்ச்சனா’ அவன் வாய் உச்சரிக்கத் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தான் அர்ஜூன்.
குயில் போலப் பாட்டு ஒன்னு கேட்டு நின்னு
மனசு போன இடம் தெரியல
அந்த மயக்கம் எனக்கு இன்னும் தெளியல
அவனின் கண்களுக்குள் ஊடுருவிப் பார்த்தவளாய்,
மனசு போன இடம் தெரியல
அந்த மயக்கம் எனக்கு இன்னும் தெளியல
இவ்வரிகளை மீண்டுமாய் பாடியிருந்தாள் அர்ச்சனா.
அவனது மனத்தை இதமாய் வருடியது அவளது குரல்.
எப்பொழுதும் மயிலை நினைவுப்படுத்தும் இப்பாடல் முதல் முறையாக மயிலைத் தாண்டி வேறொரு பெண்ணைத் தனக்கு நினைவுப்படுத்தியதில் தன்னைக் குறித்தே ஆச்சரியம் கொண்டான் அர்ஜூன்.
அதன் பிறகு அர்ச்சனாவின் மீதான தனது பார்வையைத் திருப்பிக் கொள்ளவே இல்லை அவன்.
அவளும் பாடும் போதெல்லாம் அவனைப் பார்த்தவாறே தான் பாடினாள்.
மணமக்கள் வந்த பின்னரும் மேடைக்குச் செல்ல வேண்டுமென்ற எண்ணமே இல்லாமல் அங்கேயே அமர்ந்திருந்தான் அர்ஜூன்.
ஏனோ அவனின் மனம் பெருத்த அமைதியை உணர்ந்தது அந்நொடியினில். தன் மீதான அவளின் ஆர்வமான ஆசையான பார்வையில் மனத்தின் சஞ்சலங்கள் எல்லாம் எங்கோ ஓடி ஒளிந்து கொண்டது போன்று உணர்ந்தான். அவ்வுணர்வை கலைக்க விரும்பாதவனாக அப்படியே அமர்ந்திருந்தான் அர்ஜூன்.

இசைக்கச்சேரி முடிவுறவும் அக்குழுவின் தலைவரான சுபாஷ் இவனை நோக்கி வந்து இவனிடம் ஓரிரு வார்த்தைகள் பேசினார்.
சுபாஷிடம் பேசி முடித்து விட்டு சொன்றதும், அவன் மேடையைப் பார்க்க அங்கே அர்ச்சனா இருக்கவில்லை. அந்த இடத்தைச் சுற்றியும் துழாவிய அவனது பார்வையில் அவள் அகப்படவேயில்லை.
ஒரு தூணின் மறைவில் நின்று கொண்டு வாயினுள் சிரிப்பினை அடக்கியவளாய் அவனைப் பார்த்திருந்தாள் அர்ச்சனா.
‘தேடுறீங்களா… தேடுங்க.. தேடுங்க. நல்லா தேடுங்க. நீங்க இங்கே வருவீங்கனு தெரிஞ்சி தானே நான் வந்தேன்’ மனத்தினுள் நினைத்துக் கொண்டவளாய் அவனின் பார்வையில் விழாமலேயே அங்கிருந்து கிளம்பினாள் அர்ச்சனா.
மனத்தினுள் திடீரென வெறுமையை உணர்ந்தான் அர்ஜூன்.
எதையோ எதிர்பார்த்து ஏமாந்து போனது போல் உணர்ந்தான்.
தான் என்ன எதிர்பார்க்கிறோம் என்று தனக்கே புரியாமல் குழம்பியவனாய் அவளைக் காணாது சோர்ந்த மனத்துடன் அங்கிருந்த மணமக்களை நோக்கிச் சென்று பரிசைக் கொடுத்து விட்டு அந்தத் தூரத்துச் சொந்தங்களிடம் பேசி விட்டுக் கிளம்பினான் அர்ஜூன்.
இரவு வீட்டிற்குச் சென்று பெற்றோருக்கு அழைத்துப் பேசி விட்டு வெறுமையான மனத்துடன் படுத்திருந்தான்.
தேடிக் கிடைப்பதில்லை
என்று தெரிந்த ஒரு பொருளை
தேடிப் பார்ப்பதென்று
மெய்த்தேடல் தொடங்கியதே
வாழ்ந்த வாழ்வெனக்கும்
வாழும் நாட்களுக்கும்
பொருளே நீதான்
உயிரே வாராய்
கைப்பேசியில் அர்ச்சனாவின் எண்ணிலிருந்து வந்த இந்தக் குறுஞ்செய்தியைப் பார்த்ததும் சோர்ந்திருந்த அவனது மனம் துள்ளிக் குதிக்கக் கண்கள் பொலிவுற்றன.
‘அடிப்பாவி! நான் தேடுறதைப் பார்த்துட்டு தான் இருந்தாளா?’ சிரிப்புடன் தனக்குள்ளேயே பேசிக் கொண்டான் அர்ஜூன்.
மறுநொடி அவனின் கைப்பேசி ஒலிக்க, ‘எடுக்கலாமா? வேண்டாமா?’ என்ற யோசனையுடனேயே பார்த்தான் அர்ஜூன்.
அவன் அழைப்பை ஏற்க முனைந்த நொடி கைப்பேசி ஒலி அடங்கி நின்றது.
‘அய்யோ நின்னுப் போச்சே’ என்று வருந்தினான் இப்போது.
மீண்டுமாய் அவளின் எண்ணிலிருந்து அழைப்பு வரவும், எதையும் யோசிக்காது படபடத்த நெஞ்சத்துடன் மறுநொடி அழைப்பை ஏற்றிருந்தான் அர்ஜூன்.
“ஹலோ” அவனின் இதயத்துடிப்பு அவனுக்கே கேட்டது. அத்தனை படபடப்புடன் அந்த ஹலோவை உரைத்திருந்தான்.
“ஹலோ அர்ஜூன். எப்படி இருக்கீங்க?” துள்ளலான குரலில் கேட்டாள் அர்ச்சனா.
“நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க மேடம்” என்றவன் சொன்ன நொடி,
“மேடம்னு சொன்னீங்க பல்லைப் பேத்துடுவேன் பார்த்துக்கோங்க” என்று கோபத்துடன் அவள் உரைக்கவும்,
“என்னது? பல்லை உடைப்பியா?” என்று ஒரு நொடி அதிர்ந்து போய் உரைத்தவன் மறுநொடி வாய்விட்டுச் சிரித்திருந்தான்.
“சரிங்க அர்ச்சனா மேடம். சொல்லுங்க அர்ச்சனா மேடம். எதுக்கு ஃபோன் செஞ்சீங்க அர்ச்சனா மேடம்?” வேண்டுமென்றே அவளை வம்பிழுக்க வார்த்தைக்கு வார்த்தை மேடம் போட்டு கேலிச் செய்து பேசியவனுக்குத் தன்னைக் குறித்தே ஆச்சரியமாய் இருந்தது.
தான் இப்படி ஒருவரிடம் கேலிச் செய்து சிரித்துப் பேசி மாமாங்கம் ஆனது போன்று உணர்ந்தான்.
“திரும்பவும் மேடமா?” சிணுங்கல் குரலில் உரைத்தவள், “நோ மேடம். ஒன்லி அர்ச்சனா. அச்சுமானு கூப்பிட்டீங்கனா கூட எனக்கு ஓகே தான்” என்றாள்.
“சொல்லுங்க அச்சுமா மேடம்” மேலும் அவளை அவன் வம்பிழுக்க,
“அச்சுமானு சொன்னதால அந்த மேடத்தைச் சகிச்சிக்கிறேன்” என்று சிரித்தாள்.
அவளின் சிரிப்பொலியை ரசித்துக் கேட்டவனாய் அமைதியாக இருந்தான் அர்ஜூன்.
இந்த அமைதியைக் கிழித்துக் கொண்டு அவனது காதை இதமாய் நனைத்தது அவளின் குரல்.
மயில் போலப் பொண்ணு ஒன்னு என்று பாடியிருந்தாள் அர்ச்சனா.
அவன் முகத்தில் வீற்றிருந்த புன்னகை பல்கிப் பெருக அவளின் குரலை ரசித்துக் கேட்டிருந்தான்.
பாடி முடித்தவள், “இன்னிக்கு நான் வந்தப்ப உங்க கண்ணுல வெறுமை இருந்துச்சு. ஆனா என்னைப் பார்த்த பிறகு என் பாட்டைக் கேட்ட பிறகு உங்க கண்ணுல நான் பார்த்த அந்தச் சந்தோஷம் உற்சாகம், நான் எப்டி ஃபீல் பண்ணேன் தெரியுமா அஜூ. யெஸ் ஐ மேட் இட்னு (Yes I Made It) குதிக்கனும் போல இருந்துச்சு. திரும்பவும் அந்தக் கண்ணுல வலியையும் வெறுமையும் பார்த்துடக் கூடாதுனு மனசு கிடந்து தவிச்சிது. அதான் ஃபோன் செஞ்சேன். ஆர் யூ ஓகே அஜூ?” என்று கேட்டு நிறுத்தினாள் அர்ச்சனா.

