

சென்னை அண்ணாநகரில் இரு புறங்களிலும் உயரமாய் நின்றிருந்த மரங்கள் கிளைப்பரப்பி அச்சாலையில் நிழலைப் பரப்பியிருக்க, எங்குக் காணினும் பங்களா வீடுகளாக நிறைந்திருந்த அத்தெருவில் ஒரு பங்களா வீட்டின் முன் சென்று வண்டியை நிறுத்தினான் அர்ஜூன்.
மருத்துவமனையிலிருந்து மகிழுந்தில் வீட்டை நோக்கிய பயணத்திலும் முன்னிருக்கையில் கோப முகத்துடனேயே பயணித்திருந்த மனைவியை ஓரக்கண்ணால் பார்த்தவாறே வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தான் அர்ஜூன். பின்னிருக்கையில் அமர்ந்து ஜன்னல் வழியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டு வந்திருந்தான் சிவகணேசன்.
‘ஆக்சுவலா இவ பேசினதுக்கு நான் தானே கோபப்படனும். இவ என்னடானா மூஞ்சைத் தூக்கி வச்சிக்கிட்டு வர்றா’ என்று மனத்தோடு புலம்பியவாறே வண்டியை ஓட்டியிருந்தான் அர்ஜூன்.
வழியில் ஒரு கடையில் வண்டியை நிறுத்தியவனாய் இறங்கி கடைக்குள் சென்று நெகிழிப்பை நிறைய ஐஸ்க்ரீம்களை வாங்கி வந்தவன் மகனிடம் பையைக் கொடுத்து விட்டு மனைவிக்குப் பிடித்த மேக்னம் ஐஸ்க்ரீமை அவளிடம் கொடுத்தான்.
அவள் கோபப்படும் சமயங்களில் எல்லாம் ஐஸ்க்ரீம் வாங்கிக் கொடுத்து அவளைக் குளிரச் செய்திடுவான் அர்ஜூன்.
அவன் தனது கோபத்தை மதித்து தன்னைக் குளிர்விக்க எடுக்கும் இந்த முயற்சிக்காகவே கோபமாகவே இருந்தாலும் ஐஸ்கிரீமை வாங்கிக் கொள்வாள். பின்பு கோபம் முற்றிலுமாகத் தணிந்ததும் உண்பாள்.
ஆனால் இன்று அவள் வாங்காமல் முகத்தைத் திருப்பிக் கொள்ள, “வாங்கிக்கோடி கண்ணம்மா?” என்று மென்மையாய் உரைத்தான் அர்ஜூன்.
அவன் கண்ணம்மா என்று அழைத்தாலே உருகிவிடும் அவளின் உள்ளம்.
அவனின் கண்ணம்மா அழைப்பில் இவளுக்குக் கண்கள் சட்டெனப் பொங்கி கண்ணீர் வந்துவிட, வேண்டாம் எனத் தலையசைத்துக் கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள் அர்ச்சனா.
“என்னதான்டி பிரச்சனை உனக்கு?” என்று கோபத்துடன் கேட்டவனாய் பெருமூச்சை விட்டவன், மகனிடம் ஐஸ்க்ரீமைக் கொடுத்தான்.
இதையெல்லாம் நினைத்தவாறே வீட்டுக் காவலாளி திறந்த இரும்புக் கதவின் வழியாக வண்டியை ஓட்டிச் சென்று மகிழுந்தைத் தரிப்பிடத்தில் நிறுத்தினான்.
அவன் வண்டியை நிறுத்திய மறுநொடி அர்ச்சனா சட்டென இறங்கி வீட்டிற்குள் சென்றிருந்தாள். சிறுவன் சிவகணேசனும் இறங்கி அவள் பின்னேயே சென்றான்.
தரை தளத்தில் பெரிய வரவேற்பறையும், சமையலறையும், தாய் தந்தையருக்கென ஓரறையும், இரண்டு விருந்தினர் அறைகளும் இருக்க, வரவேற்பறை உள்ளேயே ஓரமாய் வளைந்து நெளிந்து சென்ற படிக்கட்டு வழியாய் மேலறைக்குச் சென்றாள் அர்ச்சனா.
மாடியில் இரண்டு பெரிய படுக்கையறைகள் இருந்தன. அர்ஜூனுக்கும் இவளுக்குமென பால்கனியுடன் கூடிய ஓரறையும், மகள் மகனுக்கெனப் பிரத்யேகமாகக் கட்டப்பட்ட ஓரறையும் அர்ச்சனா விருப்பத்திற்கேற்ப கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்டிருந்தன.
வீட்டின் பின்னேயே பல வண்ண நிறங்களில் மலர்கள் கொண்ட செடி கொடிகளுடன் பூந்தோட்டமும் காய்கறித் தோட்டமும் இருந்தன. இதனை பராமரிக்கவென்றே இரண்டு வேலையாள்களும், வீட்டைச் சுத்தப்படுத்திப் பராமரிக்கவும் சமையல் வேலைச் செய்யவும் இரண்டு வேலையாள்களும் வைக்கப்பட்டிருந்தனர்.
அர்ஜூனின் தந்தை செந்தமிழனும் அன்னை சித்ராவும் தரை தளத்தில் அவர்களுக்குரிய அறையில் வசித்திருந்தனர்.
மகிழுந்து தரப்பிடத்தில் நிறுத்தப்படும் சத்தத்திலேயே மகன் வந்து விட்டதை உணர்ந்த சித்ரா அறையிலிருந்து வெளியே வரும் போது, கோபமாய் அர்ச்சனா மாடிக்குச் செல்வதைப் பார்த்தார்.
அர்ஜூன் வாங்கிக் கொடுத்திருந்த ஐஸ்க்ரீமை சாப்பிட்டவாறு வரவேற்பறை சோஃபாவில் அமர்ந்திருந்த பேரன் சிவகணேசனிடம் வந்த சித்ரா, “என்ன சொன்னாங்க டாக்டர்?” அவனின் உள்ளங்கையைப் பார்வையிட்டவாறு கேட்டார்.
“அந்த டாக்டர் அங்கிள் ரொம்ப நல்ல அங்கிள் பாட்டி. நான் ஊசி வேணாம்னு சொன்னதும் அவரும் வேணாம்னு விட்டுட்டாரு தெரியுமா” என்று கண்கள் மின்ன மகிழ்வுடன் கூறியவனாய் ஐஸ்க்ரீமை உண்டு கொண்டிருந்த சிவகணேசனைப் பார்த்து வாஞ்சையுடன் சிரித்தார்.
அந்நேரம் வீட்டிற்குள் வந்த அர்ஜூன், “அப்பா எங்கேமா? அவரோட காரை காணோம்?” எனக் கேட்டான்.
“சொல்லிக் கொடுக்கிறதை நிறுத்தினாலும் அவர் படிக்கிறதை நிறுத்துற மாதிரி இல்லடா அர்ஜூனா! நேரம் போக மாட்டேங்குதுனு சொல்லி லைப்ரரிக்கு போய்ருக்காரு” என்றார்.
“ஆமா காலேஜ்ல தமிழ் புரொபசரா இருந்து ரிடையர் ஆனதுலருந்து அவருக்கு நேரம் போகாம தானே இருக்கு. பேசாம அப்பாக்காக தமிழ் டியூசன் சென்டர் ஆரம்பிச்சி கொடுக்கலாம்னு நினைக்கிறேன்மா” என்றான் அர்ஜூன்.
“ஏன்டா! இப்ப தான் அவர் என் கூட கொஞ்சம் நேரம் செலவு பண்ணுறாரு. அது பொறுக்கலையா உனக்கு! நீ அதை ஆரம்பிச்சி கொடுத்துட்டீனா என்னைப் பத்தி யோசிக்கவே மாட்டாருடா உங்கப்பா” என்று சிரித்தார் சித்ரா.
சித்ராவும் ஓய்வுப்பெற்ற பேராசிரியர் தான். முன்பு கணவனும் மனைவியும் வேலை வேலை என்று ஓடித் தவறவிட்ட தங்களுக்கான பிரத்யேகத் தருணங்களை இப்பொழுது தான் அனுபவிக்கிறார்கள் என்பதால் சித்ராவுக்கு இப்பொழுது வீட்டில் இருந்து பேரன் பேத்திகளைக் கவனித்துக் கொண்டு கணவருடன் நேரம் செலவழிப்பதே பிடித்திருந்தது.
தாயின் கூற்றில் வாய்விட்டுச் சிரித்தவனாய், “நானும் வேலை வேலைனு சுத்திட்டு இதே தப்பைத் தான் அச்சுவுக்கும் செஞ்சிட்டேனோனு கொஞ்ச நாளா யோசனையா இருக்குமா” சற்றுத் தீவிரமான குரலில் உரைத்தான்.
“ஏன்டா அப்படிச் சொல்ற? உங்க ரெண்டு பேருக்குள்ளயும் எதுவும் பிரச்சனையாடா? எப்ப பார்த்தாலும் சண்டை போட்டுட்டே இருக்கீங்க? இப்ப கூட மூஞ்சைத் தூக்கி வச்சிக்கிட்டு தான் மேலே போனா உன் பொண்டாட்டி?” என்று குறைப்பட்டார் சித்ரா.
“நான் இப்ப போன ஹாஸ்பிட்டல் மயிலோட புருஷனுடையது மா. மயிலோட பொண்ணு தான் நம்ம சிவாவைத் தள்ளி விட்டதுனு அங்கே போன பிறகு தான் தெரிஞ்சிதுமா. அதைக் கேட்டுட்டு தான் கோபத்துல இருக்கா” என்று அர்ஜூன் கூறியதைக் கேட்டு,
“அப்படியா? அப்ப உன் பொண்டாட்டி கோபப்படுறதுல தப்பு இல்லடா” வெடுக்கெனக் கூறினார் சித்ரா.
“ஏன்மா? மயிலு என்ன பண்ணா? அவ மேல ஏன் இவ கோபப்படனும்? நான் எப்பவுமே மயிலு நல்லா இருக்கனும்னு தான்மா நினைப்பேன்” என்று அவன் கூறியதைக் கேட்டு கோபம் கொண்டவராய்,
“அந்த மயிலு உன் வாழ்க்கையை பாழாக்கினது மறந்துடுச்சா? ரெண்டு வருஷமா நீ நிம்மதி இல்லாம சுத்தினது மறந்திடுச்சா? இந்த அர்ச்சனா மட்டும் உன் வாழ்க்கைல வராம போயிருந்தா உன் வாழ்க்கை என்னவாகிருக்குமோனு நான் எத்தனை நாள் நினைச்சிருக்கேன் தெரியுமா! நான் எப்பவுமே என் மருமகளுக்கு தான் சப்போர்ட் செய்வேன்” என்றார் சித்ரா.
ஹ்ம்ம் என்று பெருமூச்சு விட்டவனாய், “சரி நான் ரிசார்ட்டுக்குப் போய்ட்டு வரேன். எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு. சிவாக்கு மாத்திரை கொடுத்திருக்காங்க. சாப்பிட வச்சி மாத்திரையைக் கொடுத்துடுங்க. அவளையும் சாப்பிட வைங்கமா. கோபத்துல சாப்பிடாம இருந்துடப் போறா” என்று உரைத்து விட்டு கிளம்பியிருந்தான் அர்ஜூன்.
அறையில் இருந்த அர்ச்சனாவோ அர்ஜூன் வருவான் பேசலாம் என்று கோபமாகக் காத்துக் கொண்டிருந்தவள் அவன் அறைக்கு வராமல் அப்படியே கிளம்பிச் செல்வதை பால்கனி வழியாகப் பார்த்து மேலும் கோபமாகி இரவு அவன் வருகைக்காகக் காத்திருந்தாள்.
இரவு அவள் உறங்கும் வரை கூட அர்ஜூன் வீட்டுக்கு வராதிருந்து அவளை மேலும் கோபமேற்றி இருந்தான்.
அன்றிரவு தனது வீட்டிற்குச் சென்ற இளங்குமரன் குடும்பத்துடன் இரவுணவை உண்ண அமர்ந்தான்.
இளங்குமரனின் அன்னை அம்பிகா உணவைப் பரிமாறியவாறே சாப்பிட, இளங்குமரன் தனது இரட்டையர்களான பத்து வயது மகன் முத்தமிழ்க்குமரன் மற்றும் பத்து வயது மகள் வள்ளிமயிலுக்கு ஊட்டிவிட்டவாறு உண்டு கொண்டிருக்க, அவனின் மனைவி இளமயிலும் அவனின் தந்தை தியாகராஜனும் சுற்றி அமர்ந்து உண்டு கொண்டிருந்தனர்.
மருந்தகக் கல்லூரியில் பேராசிரியையாய் வேலைப் பார்க்கும் இளமயில் தனது வகுப்பில் இன்று நடந்தவைகளைக் கூறியவாறு சாப்பிட, அனைவரும் கேட்டுச்சிரித்தவாறு உண்டிருந்தனர்.
இளங்குமரனின் தந்தை தியாகராஜன் அவனது மருத்துவமனையின் அருகில் இருக்கும் இளங்குமரன் சூப்பர் மார்க்கெட்டை கவனித்துக் கொள்கிறார்.
அனைவரும் உண்டு முடித்ததும் சில நிமிடங்கள் பேசி விட்டு அவரவர் அறைக்கு உறங்கச் சென்றனர்.
எப்பொழுதும் தாய் தந்தையருடன் உறங்கும் வள்ளிமயிலும் முத்தமிழ்க்குமரனும் அன்று தாத்தா பாட்டியுடன் உறங்குவதாகக் கூறிச் சென்று விட, மகனையும் மகளையும் அந்த அறைக்குச் சென்று பார்த்து விட்டு வந்த இளமயில், பெருத்த யோசனையுடன் கட்டிலில் அமர்ந்திருந்த இளங்குமரனின் அருகில் வந்து அமர்ந்தவளாய், “எப்ப பிள்ளைங்க தாத்தா பாட்டிக் கூட தூங்குறதா சொன்னாலும் குஷியாகிப் போற என் இளா மச்சானுக்கு இன்னிக்கு என்னாச்சு?” என்றவளாய் அவன் தோளில் சாய்ந்தாள்.
அவளின் தோளைச் சுற்றி கையைப் போட்டவனாய், “நேத்து நம்ம வள்ளி பாப்பா ஸ்கூல்ல தள்ளிவிட்ட பையன், அர்ஜூனோட பையனாம்” என்றான்.
“ஓஹோ! யாரு அவரு? யாரும் பெரிய ஆளா? எதுவும் பிரச்சனை பண்ணாங்களா?” எனக் கேட்டாள் இளமயில்.
அவளின் கேள்வியில் முதலில் திகைத்து பின் மெல்ல புன்னகைத்தவனாய் அவளின் முகம் பார்த்தவன், “நம்ம ஹனிமூன் போனப்ப கொடைகானல்ல பார்த்தோமே ஹோட்டல் மேனேஜர் அர்ஜூன்! அவரோட பையனாம்” என்றவன் சொன்னதும் அவளின் நினைவில் வந்து நின்றான் அர்ஜூன்.
சற்றுத் திகைத்து அவன் தோளிலிருந்து நிமிர்ந்து அமர்ந்தவளாய், “அவரை நான் மறந்தே போய்ட்டேன் பாரேன் இளா மச்சான்” தன்னைக் குறித்தே ஆச்சரியம் கொண்டவளாய் உரைத்திருந்தாள் இளமயில்.
“ஆமா ஹனிமூன் போய்ட்டு வந்தே பன்னிரண்டு வருஷம்கிட்ட இருக்கும்ல” என்றான் இளங்குமரன்.
தன்னுடைய முன்னாள் கணவன் என்று உரைக்காமல், கொடைக்கானலில் பார்த்த அர்ஜூன் என்று இளங்குமரன் கூறியதில் தன் மீதான அவனின் உரிமையுணர்வை எண்ணிச் சிரித்தவளாய்,
“அவரை டிவோர்ஸ் செஞ்சி பதினேழு வருஷம்கிட்ட இருக்கும்ல. எனக்கு என்னமோ முன்னாடி ஜென்மத்துல எப்பவோ அதெல்லாம் நடந்தா மாதிரி தான் மைண்ட்ல இருக்கு இளா மச்சான். அந்தளவுக்கு என்னை நீ மாத்தி வச்சிருக்க. அதான் நீ அர்ஜூன்னு சொன்னதும் எனக்கு ஸ்ட்ரைக் ஆகலை” மென்னகைவுடனேயே உரைத்தாள்.
“இங்கே நீ அப்படி ஒன்னு உன் வாழ்க்கைல நடந்ததையே மறந்து போய் வாழ்ந்துட்டு இருக்க ஆனா அங்க என்னடானா அர்ஜூனோட வைஃப், பையனை விட முன்னாள் மனைவியோட புருஷன் பெரிசா போய்ட்டாங்களா உங்களுக்குனு அர்ஜூனைத் திட்டிட்டு இருக்காங்க. இதை மறக்காம இன்னுமா நினைவில் வச்சி, சொல்லிக் காண்பிச்சிட்டு இருக்காங்கனு முதல்ல ஷாக்காகி அப்புறம் அர்ஜூனோட நிலையை நினைச்சு பாவமாகிப் போச்சு எனக்கு” என்றான் இளங்குமரன்.
“என்னது அர்ஜூன் மனைவி அப்படிப் பேசினாங்களா? இல்ல மச்சான். அவங்க சோ ஸ்வீட்! இப்படிலாம் பேச மாட்டாங்களே! அவங்க கல்யாணத்துக்கு நான் போனப்ப, நான் யாருனு தெரிஞ்சுமே ரொம்ப நல்லவிதமா பேசினாங்க. ‘உங்களால தான் எனக்கு அர்ஜூன் கிடைச்சிருக்காரு. அதனால என்னால என்னிக்குமே உங்க மேல கோபப்பட முடியாதுனு’ சொன்னாங்க” என்று ஆச்சரியத்துடன் கூறினாள் இளமயில்.
“அப்படியா? ஆனா ஏன் இன்னிக்கு அப்படிச் சொன்னாங்க? ஒரு வேளை அவங்களுக்குள்ள வேற எதுவும் பிரச்சனை இன்னிக்கு இருந்திருக்கலாம். அது அந்த நேரம் இப்படி வெளிப்பட்டிருக்கலாம்” என்றான் இளங்குமரன்.
இளங்குமரனின் கூற்றில் கவலையாகிப் போனவளாய், “என்னால அவங்களுக்குள்ள என்னிக்கும் எந்தப் பிர்சசனையும் வந்துடக் கூடாதுனு தான் அவங்க கல்யாணத்தப்ப நானே போய் அர்ச்சனாகிட்ட பேசினேன்.
என்னால தான் அர்ஜூன் வாழ்க்கைல ரொம்ப கஷ்டப்பட்டுட்டாரு. அந்த மேரேஜூக்குப் பிறகு சந்தோஷமா இருப்பாருனு நினைச்சிட்டு இருந்தேனே. என்னை வச்சி அவங்களுக்குள்ள எதுவும் பிரச்சனைனா அதை நாம தீர்த்து வைக்கனும் இளா மச்சான்” என்றவள் சற்று யோசித்தவளாய்,
“இளா மச்சான்! நாம அர்ஜூன் பேமிலியை ஒரு நாள் டின்னருக்கு கூப்பிடலாமா? ஒரு வேளை அவங்களுக்குள்ள என்னை வச்சி எதுவும் கருத்து வேறுபாடு இருந்தா அதை நாம சரி செய்ய முயற்சி செய்யலாமே” கண்களைச் சுருக்கிக் கெஞ்சும் பாவனையில் கேட்டாள்.
“நானே அவர் மனைவியைத் தனியா கூப்பிட்டு, இனி என் பொண்டாட்டியை அவரோட முன்னாள் மனைவினு சொல்லாதீங்க. இளமயில் என்னோட மனைவி மட்டும் தான். அவளுக்கு முன்னாள் பின்னாள்லாம் யாரும் கிடையாதுனு சொல்லனும்னு நினைச்சிருந்தேன்” என்றவன்,
“நீ சொன்ன மாதிரி அவங்களை டின்னருக்கு கூப்பிட்டே இதமா பதமா இதை சொல்லிடலாம்” என்று சற்று கோபத்துடனே உரைத்தான்.
தனக்கான அவனின் உரிமையிலும் கோபத்திலும் இவளின் இதழ்கள் முறுவலிக்க, “லவ் யூ இளா மச்சான்” என்று அவனை இறுக்கி அணைத்தாள்.
அவளின் கன்னத்தில் இதழ் பதித்தவனாய், “ஏதோ விதி வசத்தால உன்னை லேட்டா கரம் பிடிச்சேன் தான் ஆனா அதுக்காக உன்னை யாரு கூடவும் சேர்த்து வச்சி பேசுறதை என்னால் என்னிக்கும் ஏத்துக்க முடியாது மயிலம்மா! இதுக்கு முடிவு கட்டாம விட மாட்டேன்” தீர்க்கமான குரலில் உரைத்திருந்தான் இளங்குமரன்.


