

நேரம் நள்ளிரவு பன்னிரண்டை நெருங்குகையில் வீட்டை அடைந்திருந்தான் அர்ஜூன்.
அன்று அவர்களது கேளிக்கை விடுதியில் (ரிசார்ட்) வேலைகள் நீண்டு கொண்டே செல்லவும், இரவு வீட்டிற்கு வரத் தாமதமாகும் எனத் தகவல் சொல்வதற்காக ஏழு மணியளவில் அர்ச்சனாவின் கைப்பேசிக்கு அழைப்பு விடுத்தான் அர்ஜூன்.
மகனுக்கு வீட்டுப் பாடத்தைச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்த அர்ச்சனா அவன் மீதான கோபத்தில் அவ்வழைப்பை ஏற்காது போக,
‘இன்னுமா கோபமா இருக்கா? இல்ல வேலை ஏதாவது செஞ்சிட்டு இருந்ததுல எடுக்காம விட்டுட்டாளா?’ என்று யோசித்தவாறே தனது அன்னைக்கு அழைத்து விபரத்தை உரைத்திருந்தான் அர்ஜூன்.
தனது அன்னை மூலம் செய்தி அறிந்த பிறகும் அவள் தனக்கு அழைக்காமல் போகவும் தான், தன் மீது இன்னும் கோபமாக இருக்கிறாள் என்று புரிந்து கொண்டான். ஆனால் எதற்காக இந்தக் கோபம் என்று தான் விளங்கவேயில்லை அவனுக்கு.
காலை மகனுக்காகத் தான் பேசவில்லை என்ற கோபத்தில் தன்னிடம் கோபமுகம் காட்டினாள் என்று எண்ணியதால் தான், அவளே சமாதானமாகி விடுவாள் என்று நினைத்துக் கொண்டு அலுவலுக்குக் கிளம்பியிருந்தான் அர்ஜூன்.
ஆனால் இரவாகியும் அவள் கோபத்தை இழுத்துப் பிடித்து வைத்திருப்பதில் அதிலும் இளமயிலைக் குறித்துப் பேசி இப்படி அவள் நடந்து கொள்வதில் இவனுக்குக் குழப்பமே மிஞ்சியது.
நள்ளிரவு வீட்டிற்கு வந்தவன் வாயிலிலிருந்த காவலாளியிடம் பேசிவிட்டுத் தன்னிடமிருந்த சாவி மூலம் வீட்டின் கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான்.
வீட்டிற்குள் நுழைந்தவன் தாய் தந்தையரின் அறைக்குச் சென்று அவர்கள் உறங்குவதைப் பார்த்துவிட்டு மாடிக்குச் சென்றான்.
அங்கே பிள்ளைகளின் அறைக்குச் சென்றவனின் முகம் அவர்கள் உறங்கும் அழகைக் கண்டு கனிந்து போனது.
அவனின் பதினான்கு வயது மகள் நிவேதாவின் மீது காலைப் போட்டவாறு உறங்கியிருந்தான் அவனது பத்து வயது மகன் சிவகணேசன்.
நிவேதா அவனை அணைத்தவாறு உறங்கியிருந்தாள். பிள்ளைகள் இருவரையும் கனிவுடன் பார்த்திருந்தவன் நிவேதாவின் தலையைக் கோதி விட்டு நெற்றியில் முத்தமிடவும், தந்தையின் ஸ்பரிசத்தை உணர்ந்தவளாய், “அப்பா” என்று கண் திறவாமலேயே அழைத்தவள் மீண்டும் உறக்கத்திற்குள் செல்ல, அவளின் முதுகை வருடியவனாய் மகனின் நெற்றியிலும் முத்தமிட்டு விட்டு வெளியே வந்தான்.
தனது அறைக்குள் சென்றவன், மனைவி ஒருக்களித்தவாறு படுத்திருப்பதைப் பார்த்து விட்டு, உறக்கத்தில் இருக்கிறாள் என்று எண்ணியவனாய் சத்தமிடாது மெல்ல அடியெடுத்து வைத்து நடந்தவாறு குளியலறைக்குச் சென்று குளித்து விட்டு உடை மாற்றி வந்து அவளருகிலே படுத்த நொடி அவனை நோக்கித் திரும்பிப் படுத்தவாறு முறைத்துப் பார்த்தாள் அர்ச்சனா.
அவள் திரும்பவும் சற்று அதிர்ந்தவனாய் அவளைப் பார்த்தவன் மெல்ல புன்னகைத்து, “என்ன அச்சுமா தூங்கலையா இன்னும்?” அவளின் தலையைக் கோதியவாறு கேட்டான்.
அவனின் கையைத் தட்டிவிட்டவள் இன்னுமே கோபமாய் அவனைப் பார்த்தாள்.
அவளின் கோபத்தைக் கண்டு கொள்ளாதவனாய், “சாப்பிட்டியா அச்சுமா?” எனக் கேட்டான்.
ஆமெனத் தலையசைத்தவள் கோபத்துடன் திரும்பிப் படுக்க முனைய, அவளின் இடையைச் சுற்றி கைப்போட்டவனாய் தன்னை நோக்கி அருகில் இழுத்தவன் மூக்கோடு மூக்கை உரசியவாறு, “என் மேல என்ன கோவம் என் கண்ணம்மாவுக்கு” என்று கேட்டான்.
சட்டெனக் கண்களில் கண்ணீர் வழிந்தோட, “என்னை விட உங்க முன்னாள் மனைவியும் அவங்க புருஷனும் முக்கியமா போய்ட்டாங்க தானே உங்களுக்கு. அதனால தானே நான் மதியம் கோபமா இருக்கேன்னு தெரிஞ்சும் என்கிட்ட பேசாம அப்படியே போனீங்க! நான் இப்ப குண்டா வேற ஆகிட்டேன். உங்களுக்கு ஏத்த மாதிரி நான் இல்லை. அதனால உங்களுக்கு என்னைப் பிடிக்காம போச்சுல” அவளின் பேச்சில் அவனின் தாடை இறுக, “ஸ்டாப் இட் அச்சு” என்று கத்தியிருந்தான்.
அவனின் அதட்டலில் அரண்டு கண்களில் நீர் வழிய எழுந்து அமர்ந்தவள், “இப்படிலாம் நீங்க என்கிட்ட கத்திலாம் பேசவே மாட்டீங்க. இன்னிக்கு மயிலோட கணவரைப் பார்த்துட்டு வந்ததுலருந்து நீங்க நீங்களாவே இல்லை. உங்களுக்கு..” என்று முடிப்பதற்கு முன்,
“என்ன தான்டி பிரச்சனை உனக்கு?” கத்தியவனாய் அவளின் பேச்சை நிறுத்தியிருந்தான்.
அவளின் பேச்சு ஏற்படுத்திய கோபத்துடன், “நான் சரியா தான் இருக்கேன். நீ தான் முன்னாடி மாதிரி இல்ல அச்சு. தேவையில்லாத விஷயத்தை எல்லாம் பெரிசாக்கி என்கிட்ட ரொம்பச் சண்டைப் போடுற! என்னை டார்ச்சர் செய்ற” என்று சிடுசிடுத்தவாறு உரைத்தான்.
அவனின் டார்ச்சர் என்ற வார்த்தையில் அவளின் உள்ளம் கொதிநிலை அடைந்து முகத்தில் வலி தெரிய,
தன்னை மீறி உரைத்திருந்தவன் அவள் கண்களில் நில்லாது வழிந்த கண்ணீரையும் அவளின் வலி நிறைந்த பார்வையையும் கண்டு மனம் நொந்தவனாய் அவளருகில் சென்று அவளைத் தனது மார்போடு அணைத்துக் கொண்டான்.
தனது மார்பில் விசும்பலுடன் அழுதவாறு முகத்தைப் புதைத்திருந்தவளின் தலையை வருடியவனாய் கட்டிலில் சாய்ந்து அமர்ந்தவன் சில நிமிடங்கள் அப்படியே இருந்தான்.
“எந்த நிலைமைல நீ என்னைக் கல்யாணம் செஞ்சிக்கிட்டனு ஞாபகம் இருக்கா அச்சுமா? நீயே இப்படிப் பேசலாமா? நான் உன்னை விட மயிலு பெரிசுனு நினைப்பேன்னு நீயே நினைக்கலாமா? மனசுக்குள்ள முள் குத்தின மாதிரி வலிக்குதுடா கண்ணம்மா? என்னை உனக்குத் தெரியாதாடா?” அவளின் முகத்தை நிமிர்த்திக் கண்ணோடு நோக்கியவனாய் ஆதங்கமும் வருத்தமும் கலந்த குரலில் உரைத்தவனின் வலி நிறைந்த வார்த்தைகள் அவளின் நெஞ்சில் பெரும் வலியை உண்டு செய்ய,
‘என்ன பேசி வச்சிருக்கேன் நான்? அவரை வருத்தப்பட வச்சிட்டேனே’ தான் பேசியதை எண்ணிக் குறுகிப் போனாள் அர்ச்சனா.
“நீ மட்டும் என் வாழ்க்கைல வராம போயிருந்தா ஆயுசுக்கும் நான் ஒத்தையா இருந்து செத்துப் போயிருப்பேன்டி!” என்றவன் சொன்ன நொடி, அவனின் வாயை தனது கைக்கொண்டு மூடியவளாய்,
“சாரி! வெரி சாரி அஜூப்பா” அவனைத் தன்னோடு அணைத்தவளாய் அழுதிருந்தாள்.

“கொஞ்ச நாளா நான் என்ன பண்றேன், என்ன பேசுறேன்னு எனக்கே தெரியலை. எனக்கு ரொம்பக் கோபம் வருது. ஏதாவது பேசி உங்களைக் கஷ்டப்படுத்திடுறேன். சாரிப்பா” என்று மீண்டுமாய் மன்னிப்புக் கேட்டவாறு அழுதவளைத் தன்னோடு இறுக அணைத்துக் கொண்டு உச்சியில் ஆறுதலாய் முத்தமிட்டவன்,
“நீ என் வாழ்க்கைல இல்லாம போயிருந்தா எனக்கு இப்படி ஒரு குடும்ப வாழ்க்கையே கிடைச்சிருக்காதே அச்சுமா. நீயே இப்படிப் பேசலாமா கண்ணம்மா” அவன் விடாது புலம்பிக் கொண்டே இருக்கவும், தான் பேசியது அவனை எத்தனையாய் காயம் செய்திருக்கிறது என்று புரிய, கண்ணீர் கண்களுடன் அவன் இதழில் தனது இதழைப் புதைத்தாள்.
அவன் முகம் முழுவதும் முத்தமிட்டு அவனது நினைவைத் தன்னை நோக்கி இழுத்தவள் மோகத்திற்குப் பாலம் அமைக்க, கணவனாய் அவளுடன் காதலான கூடலில் கலந்திருந்தான் அர்ஜூன்.
கணவனின் ஒவ்வொரு தொடுகைக்கும் உருகாது, “நான் அழகா இல்லை தானே. எனக்கு ரொம்பச் சதைப் போட்டுருச்சு தானே. நான் உங்களுக்குப் பிடிச்ச மாதிரி இல்லை தானே” என்று அவனுள் ஒன்றாமல் புலம்பியவளை தனது ஆளுகைக்குள் கொண்டு வந்து சிலிர்க்கச் செய்தவன் அவளின் கவனம் முழுவதையும் தன் மீது கொண்டு வந்து அவளின் புலம்பலை நிறுத்தி மயங்கிக் கிறங்கச் செய்திருந்தவன் அவளுள் மூழ்கிக் கரைந்திருந்தான்.
நிறைவில் நெற்றியில் அவன் முத்தமிட்ட போதே அவள் ஆழ்ந்த உறக்கத்திற்குள் சென்றிருக்க, தனது கை அணைவிலேயே அவளை வைத்திருந்தவனாய் அவளின் முகத்தைப் பார்த்திருந்தான்.
விவாகரத்தின் வலியிலும் வேதனையிலும் சுருண்டிருந்தவனைத் தனது காதலால் உயிர்ப்பித்து மீளச் செய்தவள் ஏன் இன்று இவ்வாறு கோபப்படுகிறாள் என்று சிந்தித்தவனாய் அவளைப் பார்த்திருந்தான்.
“என்னாச்சு கண்ணம்மா உனக்கு? நீ இப்படிக் கிடையாதே?” என்று வாய் விட்டே புலம்பியவாறு பெருமூச்சு விட்டவனாய் கண்களை மூடிப் படுத்திருந்தவனின் கண்களுக்குள் அவர்களின் முதல் சந்திப்பும் அதனைத் தொடர்ந்து நடந்த நிகழ்வுகளும் காட்சிகளாய் ஓடின.
அப்பொழுது அர்ஜூனுக்கு இருபத்தைந்து வயது!
அதற்குள்ளாகவே திருமணம் முடிந்து விவாகரத்தும் ஆகியிருந்தது அவனுக்கு.
“ராகமாலிகா இசைக்குழுவா? நாளைக்கு இங்கே உங்களோட மியூசிக் கான்சர்ட் இருக்கு. டைமுக்கு வந்துடுவீங்க தானே” என்று கைப்பேசியில் பேசியவாறு தனது அலுவலக அறைக்குச் சென்று நாற்காலியில் அமர்ந்தான் அர்ஜூன்.
பெங்களூரில் ராதிகா பேலஸ் என்ற பெயரில் அமையப் பெற்ற அந்த ஐந்து நட்சத்திர விடுதியில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு மேலாளராக (ஈவன்ட் மேனேஜராக) பணிபுரிந்து கொண்டிருந்தான் அர்ஜூன்.
சென்னையில் BEM (Bachelors in Event Management) படித்து முடித்ததும் ஒரு நட்சத்திர விடுதியில் பணிபுரிந்தவனுக்கு, தன்னுடன் வேலைச் செய்யும் கல்லூரி பேராசிரியையின் மகளான இளமயிலை மணமுடித்து வைத்தார் அவனின் தந்தை செந்தமிழன்.
கல்லூரி விழாவிற்குத் தனது தாய் மரகதத்துடன் வந்திருந்த இளமயிலிடம் பேசிய செந்தமிழனிடம், “சார் உங்க பெயர் பண்புத்தொகை தானே” என்று அவள் கேட்டதிலேயே தமிழ் பேராசிரியரான அவருக்கு, தமிழின் மீது ஆர்வம் கொண்ட இளமயிலை மிகவும் பிடித்து விட்டது.
தனது மகனுக்கு இவள் தான் மருமகளாக வேண்டுமெனத் தீர்மானித்தவராய் அவ்வப்போது இதைக் குறித்து அவளின் தாயான மரகதத்திடம் பேசிப் பேசியே ஒப்புக் கொள்ள வைத்திருந்தார் செந்தமிழன்.
தான் மணந்து கொள்ளும் பெண்ணை மட்டுமே காதலிக்க வேண்டுமென்ற கொள்கையுடன் வாழ்ந்திருந்த அர்ஜூனுக்கு, பலரைப் போல் திருமணத்திற்கான வயது இது இல்லை என்ற எண்ணமெல்லாம் இல்லை. காலாகாலத்தில் நடக்க வேண்டியது நடக்கட்டும் என்று தான் நினைத்திருந்தான்.
அதிலும் இளமயிலை நிழற்படத்தில் பார்த்தவுடனேயே பிடித்து விட்டது அவனுக்கு. அதனால் அவள் மீது காதலையும் வளர்த்துக் கொண்டவனாய் தான் அவளை மணந்திருந்தான் அர்ஜூன்.
இளமயிலை மிகுந்த விருப்பத்துடன் மணமுடித்த அர்ஜூனுக்கு அந்தத் திருமணம் ஏமாற்றத்தையும் வலியையும் வேதனையையும் அளித்திருக்க, அந்தத் திருமண முறிவிற்குப் பிறகு பெங்களூரில் வேறு வேலை தேடிக் கொண்டு வந்தவன் இங்குத் தனியாய் ஒற்றைப் படுக்கையறை கொண்ட வாடகை வீட்டில் தங்கியவனாய் அந்த நட்சத்திர விடுதியில் பணிபுரிய ஆரம்பித்திருந்தான். இந்தப் பணியில் சேர்ந்து ஒரு வருடமாகிறது.
“ஜீவா நாளைக்கு ஃபங்ஷனுக்கு எல்லாம் ரெடி தானே” என்று தன்னுடைய உதவியாளரைக் கேட்டவனாய் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மேற்பார்வையிட்டவன், “குட் ஜாப் ஜீவா” என்று மென்னகையுடன் மனதாரப் பாராட்டினான்.
எப்பொழுதும் இதழில் புன்னகை அவனிடம் ஒட்டிக் கொண்டே இருக்கும். எச்சூழலிலும் பளிச்சென்ற புன்னகையுடன் இன்முகமாய்ப் பேசுவது அவனுடைய பணிக்கு மிகவும் தேவை என்பதால் தனக்குள் எத்தகைய வலியும் வேதனையும் இருந்தாலும் அதனை வெளிக் காட்டாது சிரிப்பினில் மறைத்திடுவான் அர்ஜூன்.
அன்றைய பணிகளை முடித்து விட்டு இரவுணவை உணவகத்தில் உண்டு விட்டு வீட்டிற்குச் சென்றவனின் முகத்தில் வெறுமைக் குடியேறியது.
கண்களை மூடிப் படுத்தவனின் கண்களுக்குள் வந்து நின்றாள் இளமயில். நெஞ்சம் விம்மித் தணிய பெருமூச்சோடு அவளின் நினைவை அகற்ற முயன்றவாறு வெறுமையான மனத்தைத் திசைத் திருப்ப முயன்றவாறு படுத்திருந்தான் அர்ஜூன்.
‘மயிலு இந்நேரம் இளங்குமரனைக் கண்டுபிடிச்சி கல்யாணம் செஞ்சிருப்பா தானே’ மனத்தோடு நினைத்தவன் நெஞ்சில் முள் தைத்த வலியை உணர்ந்தான்.
இளமயிலை மிகவும் பிடித்து விரும்பி மணம் புரிந்து கொண்டவனுக்கு இந்தப் பிரிவும் விவாகரத்தும் அவனது மனத்தை ரணமாக்கியிருந்தன.
இனி தன்னுடைய வாழ்வில் என்ன இருக்கிறது என்ற விரக்தி தான் அவனைச் சூழ்ந்திருந்தது.
அப்படியே பலவித எண்ணங்களுடன் உழன்றவனாய் உறங்கிப் போனான் அர்ஜூன்.
மறுநாள் ராகமாலிகா இசைக்குழுவினர் இவனிடம் தங்களை அறிமுகப்படுத்திப் பேசிக் கொண்டிருக்கும் போது அர்ஜூனை இமைச் சிமிட்டாது ரசித்துப் பார்த்திருந்தாள் அந்தக் குழுவின் பெண் பாடகியாக வந்திருந்த அர்ச்சனா.

