Loading

அம்பிகா மருத்துவமனை!

இளங்குமரன் சூப்பர் மார்க்கெட் என்ற பெயரில் இரண்டு மாடிக் கட்டடமாய் இருந்த பேரங்காடியினருகில் அதே போன்று இரு மாடிக் கட்டடமாய் உயர்ந்து நின்றிருந்தது அம்பிகா மருத்துவமனை.

அந்த மருத்துவமனைக்குள் தனது மனைவி அர்ச்சனா மற்றும் பத்து வயது மகனான சிவகணேசனின் கையைப் பற்றியவனாய் நுழைந்தான் அர்ஜூன்.

இவர்கள் உள்ளே நுழைந்ததும் வரவேற்பறையில் அமர்ந்திருந்தவர்கள் பலரின் பார்வை இந்த கணவன் மனைவி ஜோடியினை வலம் வந்தன.

முகத்தில் எப்பொழுதும் வீற்றிருக்கும் இளநகையுடன் கண்களை மறைக்கும் குளிர்கண்ணாடி அணிந்திருந்த அர்ஜூனின் பார்வை தங்களின் மீது படிந்து மீண்ட பார்வைகள் மீது படிந்து விலகின.

முன் நாற்பது வயதிலிருந்த அர்ஜூன் மாநிறத்தில் உயரத்திற்கேற்ற எடையுடன் ஜீன்ஸ் டீசர்ட் அணிந்திருந்தான். நேர்த்தியாய் திருத்தப்பட்ட சால்ட் அண்ட் பெப்பர் நிறத்திலிருந்த மீசையும் தாடியும் அவனது கம்பீரத்தை மெருகேற்றிக் காட்டின.

அவனருகில் வந்திருந்த அவனது மனைவி அர்ச்சனாவும் நாற்பதைத் தொட்டிருந்தவள், அவனுக்கு எதிர்ப்பதமாக அவளது உயரத்திற்கேற்ற எடையை விட இரு மடங்கு பருத்திருந்தாள். ஆயினும் தனது உடலுக்கேற்ற வகையில் நீள காட்டன் கவுன் அணிந்து கலரிங் செய்யப்பட்ட சுருள் கேசத்தை மேலே க்ளிப்புக்குள் அடக்கி கீழே விரித்து விட்டிருந்தவளின் வெளுத்த நிறமும் வடிவான முகமும் அவளை அழகியாய் காட்டின.

மருத்துவமனையின் வாசலைக் கடந்து உள்ளே நுழைந்ததும், வலது புறம் இளமயில் மருந்தகம் என்ற பெயர்ப்பலகையுடன் மருந்தகக் கடை இருக்க, அதனைப் புருவம் நெரியப் பார்த்தவாறு உள்ளே சென்ற அர்ஜூன் வரவேற்பறையின் சுவற்றில் பெரியதாக மாட்டப்பட்டிருந்த அந்தப் பலகையைப் பார்த்தான்.

அம்பிகா மருத்துவமனை என்று எழுதப்பட்டு அதன் கீழே நிறுவனர் டாக்டர் இளங்குமரன் தியாகராஜன் என்றிருக்க, அதன் கீழே CEO டாக்டர் இளமயில் இளங்குமரன் என்று அந்தப் பலகையில் பொறிக்கப்பட்டிருந்தன. அதன் கீழே வரிசையாகப் பல்வேறு துறையின் தனித்த மருத்துவ வல்லுநர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டு அதனருகே வாரத்தின் எந்நாள்களில் அவர்களைச் சந்திக்க முடியும் என்கின்ற கிழமையும் நேரமும் குறிப்பிடப்பட்டிருந்தன.

டாக்டர் இளமயில் இளங்குமரன் பெயரைப் பார்த்ததும் அவனின் இதழ்கள் மெல்லியதாய் முறுவலிக்க, அர்ச்சனா அந்தப் பெயரைப் பார்த்து விட்டு அவனைக் கடுகடுவெனப் பார்த்தாள்.

மனைவியையும் மகனையும் அங்கே இருந்த நாற்காலியில் அமரச் சொன்ன அர்ஜூன், வரவேற்பாளினியிடம் சென்றவனாய், “டாக்டர் இளங்குமரனைப் பார்க்கனும்” என்றான்.

“பேஷண்ட் பேரு என்ன? வயசு என்ன?” எனக் கேட்கவும்,

மகனின் பெயரையும் வயதையும் கூறினான் அர்ஜூன்.

“உள்ளே பேஷண்ட் இருக்காங்க. வந்ததும் நீங்க போகலாம். கொஞ்சம் வெயிட் பண்ணுங்க” என்று அவனிடம் வரவேற்பாளினி கூறவும், மனைவி மகனின் அருகில் சென்று அமர்ந்தான் அர்ஜூன்.

“அஜூ அந்த டாக்டரைப் பார்த்து நல்லா திட்டுறதுக்குத் தான் வந்திருக்கோம்! மறந்துடாதீங்க” கண்களை உருட்டியவாறு அவனின் காதோடு மெல்லிய குரலில் கூறி மிரட்டினாள் அர்ச்சனா.

அவளின் விரிந்த விழிகளை ரசித்தவனாய், “ஏன்டி முண்டக்கண்ணி மாதிரி முழிச்சிப் பார்த்துப் பயமுறுத்துற?” என்றவன் கேலிச் செய்ய,

“ஆமா அப்படியே என்னைப் பார்த்து நீங்க பயந்துட்டாலும்” இதழைச் சுழித்து நொடித்துக் கொண்டவளாய் முகத்தைத் திருப்பினாள்.

இவர்கள் இங்கே பேசிக் கொண்டிருந்த அதே நேரம் தனது மருத்துவ அறையில் அமர்ந்திருந்த இளங்குமரன்‌, அவனெதிரே அமர்ந்திருந்த முதியவரிடம், “நேத்து ஆஸ்பிட்டலுக்கு வந்துட்டு யாரையும் பார்க்காமலே போய்ட்டீங்களாமே சார்! நேத்து ஒரு முக்கிய வேலையா வெளியே போய்ட்டேன் அதான் எனக்குப் பதிலா டாக்டர் பிரகாஷ்க்கிட்ட பார்த்துக்கச் சொல்லிட்டுப் போனேன். நீங்க டாக்டர் பிரகாஷ்கிட்ட செக் செஞ்சிருக்கலாமே! இப்ப தேவையில்லாத அலைச்சல் தானே சார்” என்றவன் அவரின் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்கச் சொல்லி அருகிலிருந்த செவிலியரிடம் கூறினான்.

நாற்பதை நெருங்கும் வயதில் இருந்த போதிலும் பார்ப்பதற்கு முப்பது வயதினன் போன்று உயரத்திற்கேற்ற உடல்வாகுடன் மிடுக்கான தோற்றத்துடன் இருந்தான் டாக்டர் இளங்குமரன்.

அந்த முதியவருடன் வந்திருந்த அவருடைய பதினாறு வயது பேத்தி, “நல்லா கேளுங்க டாக்டர். நேத்து பிரகாஷ் டாக்டர்கிட்ட பார்த்துட்டுப் போய்டலாம்னு அவ்ளோ சொன்னேன். தாத்தா கேட்கவேயில்ல. ரெகுலர் செக்கப் தானே. யாருக்கிட்ட வேணா செஞ்சிக்கலாம் தானேனு சொன்னா கேட்கவேயில்ல” என்று புகார் வாசித்தாள்.

“அவளுக்கு என்னய்யா தெரியும் நம்ம பழக்கத்தைப் பத்தி! இந்த ஆஸ்பத்திரியை பத்து வருஷத்துக்கு முன்னாடி சின்னதா ஆரம்பிச்சப்ப வந்தவன் நான். கைராசியான டாக்டர்யா நீ! அன்னிலருந்து என் குடும்ப மொத்தத்துக்கும் நீ தானே குடும்ப டாக்டர். உன்னை விட்டுட்டு வேற யார்க்கிட்டயும் பார்க்க மனசு ஒப்ப மாட்டேங்குது குமரா” என்று வாஞ்சையுடன் உரைத்தார்.

ரத்த அழுத்தத்தைக் கணக்கிடும் இயந்திரத்தில் கண்களைப் பதித்தவனாய் மெல்லிய சிரிப்புடன் கேட்டிருந்தவன், “உங்களை மாதிரி நல்லவங்க ஆசிர்வாதத்தால தான் சார்‌ நான் இவ்ளோ தூரம் வளர்ந்து நிக்கிறேன்” என்றான்.

அந்த இயந்திரத்தை விட்டு பார்வையைத் திருப்பியவனாய், “பிபி கூட இல்ல! நீங்க கம்ப்ளீட்லி ஆல்ரைட். ஹேப்பியா இருங்க சார்” என்றவாறு மேலும் சில நிமிடங்கள் அவரிடம் பேசி விட்டு அனுப்பி வைத்தவன் அடுத்த நோயாளியின் வருகைக்காக அழைப்பொலியை அழுத்தினான்.

வரவேற்பாளினி அர்ஜூனிடம் உள்ளே செல்லுமாறு உரைத்தாள்.

கதவு திறக்கும் ஓசை கேட்டதும், சிரித்த முகமாய் வாசலைப் பார்த்தவன், உள்ளே நுழைந்தவர்களைப் பார்த்து முதலில் திகைத்து பின் இதழ் விரிய சிரித்தவனாய் வரவேற்றான் இளங்குமரன்.

“ஹே சிவா குட்டி! வாங்க மிஸ்டர் அண்ட் மிஸஸ் அர்ஸூன். வாட் எ ஸ்வீட் சர்ப்ரைஸ்! உங்க பையனா இவன்?” என்று ஆச்சரியத்துடன் கேட்டான்.

“ஹாய் அங்கிள்” என்றவனாய் தன்னருகே வந்து நின்ற பத்து வயது சிவகணேசனின் கன்னங்களை ஆதூரமாய் வருடினான் இளங்குமரன்.

“ஹாய் டாக்டர்! ஹவ் ஆர் யூ? நானுமே ஹாஸ்பிட்டல் என்ட்ரன்ஸ்ல உங்க பேரையும் மயிலு பேரையும் பார்த்து ஷாக் ஆகிட்டேன் டாக்டர். நீங்க நேத்து போன்ல பேசும் போது கூட யாரோ தெரியாத டாக்டர்னு நினைச்சி தான் பேசினேன்” என்று சிரித்த முகமாய் இளங்குமரனிடம் உரைத்தவாறு கையைக் குலுக்கினான் அர்ஜூன்.

‘சண்டை போடச் சொன்னா கையைக் குலுக்கிட்டு இருக்கீங்க?’ என்பது போல் அர்ஜூனை முறைத்தவாறு பார்த்திருந்த அர்ச்சனா, “என்ன பொண்ணை வளர்த்து வச்சிருக்கீங்க டாக்டர்?” என்று தனது அர்ச்சனையைத் தொடங்கவும்,

“அச்சுமா” அதட்டலாய் அழைத்த அர்ஜூன் அவளைக் கண்டனப் பார்வைப் பார்த்தவனாய் வாயை மூடச் சொல்லி கண்ணசைத்தான்.

அவனின் பார்வையையும் அழைப்பையும் கண்டுகொள்ளாமல் புறம் தள்ளியவளாய், “இப்படித் தான் கீழே தள்ளி விட்டு விளையாடுவாளா டாக்டர் உங்கப் பொண்ணு! அவன் உள்ளங்கையைப் பார்த்தீங்களா? அவ்ளோ சிராய்ப்பு! என் பிள்ளை கைய பார்த்து எனக்கு மனசே ஆறலை. கையால சாப்பிட முடியாம எரியுதுமானு நேத்து அழுதான். என் மனசு என்ன பாடு பட்டுச்சு தெரியுமா? உங்களை நாலு வார்த்தைத் திட்டிட்டுப் போகலாம்னு தான் வந்திருக்கோம்” என்று கோபமாக உரைத்திருந்தாள் அர்ச்சனா.

அர்ஜூன் சங்கடமாய் இளங்குமரனைப்‌ பார்க்க, தனக்கு அருகில் இருந்த சிவகணேசனின் கரத்தினைப் பிடித்து உள்ளங்கையை ஆராய்ந்தவனாய்,

“எனக்கு உங்க ஃபீலிங்க்ஸ் புரியுது மிஸஸ் அர்ஜூன். உங்க பையன் கேசுவலா பாடினதை அவளைக் கேலி செஞ்சி பாடுறான்னு நினைச்சு என் பொண்ணு தள்ளி விட்டுட்டா! இது தவறுதலா நடந்த தப்பு! அதுக்குத் தான் நேத்து நானே கால் பண்ணி அர்ஜூன்கிட்ட சாரி கேட்டேன். ஆனா அப்ப எனக்குத் தெரிஞ்ச அர்ஜூனா இவர் இருப்பாருனு நான் நினைக்கலை. தெரிஞ்சிருந்தா அப்பவே உங்களை நேர்ல வந்து பார்த்திருப்பேன்” என்றவன் பேசி முடிப்பதற்குள்,

“சாரி கேட்ட ஆச்சா டாக்டர்! என் பையனோட வலி குறைஞ்சிடுமா? அந்த காயம் காணாமல் போய்டுமா? மாயமா மறைஞ்சிடுமா? சொல்லுங்க டாக்டர்” அத்தனை ஆதங்கம் அவள் குரலில்.

“இனஃப் அச்சுமா! அவர் தான் தெரியாம நடந்துச்சுனு சொல்றாருல! சின்ன காயத்துக்கு ஏன் இவ்ளோ கத்துற” என்று இப்பொழுது அர்ஜூன் பல்லைக் கடித்தவாறு கோபத்தை அடக்கியவனாய் அர்ச்சனாவிடம் உரைத்திருந்தான்.

“இப்படித் தான் சின்ன அடி நாளை பெரிய காயமா வந்து நிக்கும் அஜூ. இதெல்லாம் முளையிலேயே கிள்ளி எறியனும்” அதற்கும் இவள் பொங்கிக் கொண்டு பேசவும்,

‘இவளிடம் பேசுவது வேஸ்ட்’ என நினைத்தவனாய் பெருமூச்சுடன் இளங்குமரன் புறம் பார்வையைத் திருப்பிய அர்ஜூன்,

“அவளுக்காக நான் சாரி கேட்டுக்கிறேன் டாக்டர். சின்ன பசங்க சண்டைல இதெல்லாம் சகஜம் தானே டாக்டர்” என்றான்.

முந்தைய நாள் இளங்குமரனின் பத்து வயது மகள் வள்ளிமயில் பள்ளியில் சிவகணேசனைக் கீழே தள்ளி விட்டதாகக் கூறி தலைமை ஆசிரியர் இளங்குமரனை நேரில் அழைத்துப் பேசியிருந்தார்.

தன்னைப் பார்த்து சிவகணேசன் மயிலு மயிலு மயிலம்மா என்று பாடியதாகவும், அதனால் தான் அவனைத் தள்ளி விட்டதாகவும் வள்ளிமயில் கூறியதைக் கேட்டு அவளின் சேட்டையையும் தைரியத்தையும் எண்ணி சிரிப்பு தான் வந்தது இளங்குமரனுக்கு. ‘அப்படியே அவங்க அம்மா மயிலு சின்ன வயசுல செஞ்சா மாதிரியே செஞ்சிட்டு வந்து நிக்கிறாளே’ என்று மனத்தோடு நினைத்துப் பெருமைப்பட்டுக் கொண்டான்.

சிவகணேசனிடம் விசாரிக்கும் போது தான் அவன் வள்ளிமயிலைப் பார்த்து பாடவில்லை இயல்பாய் பாடியவாறு நடந்து கொண்டிருக்கும் போது இவள் தவறாகப்‌ புரிந்து கொண்டு அவனை தள்ளி விட்டிருக்கிறாள் என்று அறிந்து கொண்டான்.

அதன் பிறகு மகளை சிவகணேசனிடம் மன்னிப்புக் கோர வைத்து, அர்ஜூனுக்கு அழைத்து நடந்ததை உரைத்து மன்னிப்புக் கோரினான். ஆனால் அப்பொழுது தனக்குத் தெரிந்த பழக்கமான அர்ஜூனிடம் தான் பேசுகிறோம் என அறிந்திருக்கவில்லை அவன்.

“அட நீங்க எதுக்கு சாரி கேட்குறீங்க. உங்க மனைவியோட கோபம் நியாயமானது அர்ஜூன். இனி இப்படி ஆகாம பார்த்துக்கிறேன் மேடம். என் பொண்ணுக்கிட்ட நேத்தே கண்டிச்சிட்டேன்” என்ற இளங்குமரன் சிவகணேசனின் கையை ஆராய்ந்து மருந்திட்டவனாய்,

“செப்டிக் ஆகாம இருக்க ஒரு இன்ஜக்ஷன் போடலாமா?” என்று கேட்டான்.

சிவகணேசன் கண்களில் திகிலுடன் வேண்டாமென தலையசைத்தவனாய் இளங்குமரனைப் பார்க்க, அர்ச்சனாவின் கண்கள் பயத்தில் விரிய, “இல்ல இல்ல வேண்டாம். பிள்ளை தாங்க மாட்டான்” என்றாள்.

மகனின் மீதிருக்கும் அவளின் அன்பைப் பார்த்து மென்னகைப் புரிந்தவனாய், “சரி நான் டேப்லெட் எழுதி தரேன்” என்றவாறு சில மாத்திரைகளை எழுதிக் கொடுத்தான்.

அர்ச்சனாவின் முகம் இன்னுமே கடுகடுவென்றிருக்க, “அப்புறம் லைஃப் எப்படிப் போகுது டாக்டர்? மயில் எப்படி இருக்கா? பார்மஸி கோர்ஸ் தானே படிச்சிருந்தா இப்ப மேல் படிப்பு படிச்சி டாக்டர் ஆகிட்டா போல? வெளில போர்ட்ல நேம் பார்த்தேன்” என்று சிரித்த முகமாக ஆர்வத்துடன் வினவினான் அர்ஜூன்.

“ஆல் குட் அர்ஜூன். ஆமா சைக்காலஜில பிஎச்டி முடிச்சிட்டா! என் பொண்ணும் உங்க பையனும் ஒரே கிளாஸ்ல தான் படிக்கிறாங்கனு இத்தனை நாளா எனக்குத் தெரியாம போச்சே! நீங்க எப்ப சென்னைக்கு வந்தீங்க? பெங்களூர்ல தானே வேலை பார்த்துட்டு இருந்தீங்க. உங்களை கடைசியா பத்து வருஷம் முன்னாடி கொடைக்கானல்ல பார்த்தேன்னு நினைக்கிறேன். உங்களுக்கு ஒரு பொண்ணு கூட உண்டு தானே” என்று கேட்டான் இளங்குமரன்.

“ஆமா பொண்ணு இப்ப ஒன்பதாவது படிக்கிறா. நாங்க சென்னைக்கு வந்து ஒரு வருஷம் ஆகுது டாக்டர். அப்பா அம்மா இங்கே தனியா இருந்தாங்க, அம்மாக்கு உடம்பு முடியாம போகவும் கூடவே இருந்து பார்த்துக்கலாம்னு வந்தாச்சு” என்றான்.

“அப்படியா அம்மாக்கு என்னாச்சு? எனக் கேட்டான் இளங்குமரன்.

“அம்மாக்கு யுட்ரெஸ்ல கட்டி இருக்குனு ரிமோவ் செஞ்சாங்க. ஷீ இஸ் பைன் நௌ” என்றவன் சொன்னதும்,

“ஓ குட்! நீங்க பெங்களூர் அண்ட் கொடைக்கானல் ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் மேனேஜரா தானே இருந்தீங்க! இப்ப எங்கே வர்க் பண்றீங்க அர்ஜூன்?” எனக் கேட்டான்.

“ஈசிஆர்ல ஒரு ரெசார்ட் சொந்தமா கட்டிட்டு தான் சென்னைக்கு வந்தேன் டாக்டர். இப்ப அந்த பிசினஸ்ஸை தான் நானும் என் மனைவியும் சேர்ந்து பார்த்துட்டு இருக்கோம்” என்றான்.

“ஓ நைஸ்” என்று இளங்குமரன் உரைக்கவும்,

கிளம்பலாமா என்பது போல் அர்ஜூனின் கையை இடித்தாள் அர்ச்சனா.

“சரி டாக்டர்! நாங்க கிளம்புறோம்” என்றவனாய் அர்ஜூன் எழுந்து கொள்ள இவளும் எழுந்து எதுவும் கூறாமல் விடைப்பெற்று வெளியே வந்தாள்.

அறையை விட்டு வெளியே வந்து காலணிகளைப் போட்டவாறே, “இடம் பொருள் பார்த்துப் பேச மாட்டியா அச்சுமா? எதுக்கு அப்படிப் பேசின? அதுவும் நமக்கு தெரிஞ்சவங்கக்கிட்ட அப்படித் தான் பேசுவியா?” என்று காட்டமான குரலில் கேட்டிருந்தான் அர்ஜூன்.

“யாரா இருந்தா என்ன? எனக்கு என் பையன் தான் முக்கியம்! உங்களை மாதிரி உங்களோட முன்னாள் மனைவியோட புருஷன் தான் முக்கியம்னு என் பையனை என்னால விட்டுக் கொடுக்க முடியாது” கோபமாகவே அடிக்குரலில் கூறியிருந்த சமயம், அந்த மருத்துவ அறையின் கதவைத் திறந்து அடுத்த நோயாளி உள்ளே செல்ல, இவளின் வார்த்தைகள் துல்லியமாய் இளங்குமரனின் செவியைத் தீண்டியிருந்தன.

இளங்குமரனின் புருவங்கள் சுருங்கி விரிய, இங்கே அர்ஜூனின் முகம் கோபத்தில் இறுகியது.

“கொஞ்ச நாளா இவளுக்கு எதுவும் பேய் பிடிச்சிருச்சானு தெரியலை. எப்ப பார்த்தாலும் கடிச்சி துப்புற மாதிரியே பேசுறா” என்று மனத்திற்குள் புலம்பியவனாய் அங்கிருந்த மருந்தகத்தில் மருந்து மாத்திரைகளை வாங்கிக் கொண்டு அவளிடம் கோப முகம் காட்டியவனாய் சென்றான் அர்ஜூன்.

அதன் பிறகு இருவருமே எதுவும் பேசிக் கொள்ளாமல் மகிழுந்தில் ஏறி வீட்டை நோக்கிப் பயணித்திருந்தனர்.

Click on a star to rate it!

Rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்