
கடலலைகளைப் போலவே இருவரது விழிகளும் மற்றவர்களின் மீது அவ்வப்போது தொட்டு மீண்டது.
அகமொழியின் தோள்மீது கைபோட்டுக் கொண்ட அர்ஜித்தின் கையின் அழுத்தம் அவளை என்னவோ செய்தது. கூடல் பொழுதில் கூட உணர்ச்சி மிகுதியே அதிகம் நிரம்பி இருக்க, சாதாரண தீண்டல்களில் ஏன் இப்படி தேகத்துடன் இணைந்து இதயமும் நழுவுகிறது எனப் புரியாதவளாய், ஒற்றை விரலில் நீரை வருடியபடி குனிந்து நின்றாள்.
“மொழி…” காதோரம் கிசுகிசுத்த ஆண்மகனின் குரலில், பேச்சும் வராது போக, “ம்ம்…” என்றாள்.
“கடல் தண்ணில பேஸ் வாஷ் செய்து இருக்காயோ?” என்றான் குறும்பாக.
“ஹான்?” அவள் குழப்பமாக நிமிரும்போதே தண்ணீரை எடுத்து அவள் முகத்தில் அடித்திருக்க, “டேய்ய்ய்ய்ய்…” எனக் கத்தியவள் தானும் நீரை அவன் மீது அடிக்கத் தொடங்கினாள்.
பிரணீத் இருவரும் கடலுக்குள் செல்லும்போதே வீடியோவில் இருவரையும் பதிவிடத் தொடங்கி விட்டான்.
இதில் எதிர்பாராமல் அவன் முத்தம் வேறு கொடுத்ததில், ‘இவன் அவள் கிட்ட விழுந்தானா அவள் இவன் கிட்ட விழுந்தாளா? ஒண்ணுமே புரியலையே’ என்றவனுக்கு இருவரது பிணைப்பும் சுவாரஸ்யம் கொடுத்தது.
கட்டாயத் திருமணம் போலவா நடந்து கொள்கிறார்கள். சரக்கு பாட்டிலை உடைப்பதும், கடலில் கால் நனைக்கவே பிடிக்காதவன், இப்போது கடல் நீரில் குளிப்பதும்!? நண்பனின் மாற்றம் அவனுக்கே பெரும் அதிர்ச்சி தான். அதிலும் அவனைப் பற்றிய வீடியோ வந்தபோது, அவளைக் கொன்றே போடும் கோபத்தில் அல்லவா இருந்தான்.
அத்தனை விரைவாக அவனது கோபம் குறைந்து விடாது என்று அறிந்தவனாகிற்றே.
‘ம்ம்க்கும், ஒரு விசயத்துல கோபப்படா பரவாயில்ல, என் சிஸ்டர் தான் எல்லா விஷயத்துலயும் அவனை கோபப்படுத்துவாளே…’ என மனத்தினுள்ளேயே கேலி செய்து சிரித்துக் கொண்டான்.
சண்டையிட்டாலும் இருவரும் இதே புரிதலோடு இருக்க வேண்டுமென ஒரு வேண்டுதலைப் போட்டுக்கொண்டான். லேசாய் இருட்டும் நேரமாகியதில், இருவரும் விளையாடி முடித்து சோர்வுடன் கரைக்கு வந்தனர்.
அவர்களுக்கு தனிமை கொடுக்கும் விதமாக, “நீங்க கொஞ்ச நேரம் நடந்துட்டு வாங்க… நான் வீட்டுக்கு போறேன்” என்றவன் வீடு நோக்கி நடக்க, காற்றில் பரந்த ஈர துப்பாட்டாவைப் பிடித்து வைப்பதற்குள் போதும் போதுமென்றானது அவளுக்கு.
ஈர உடை வேறு அவளுக்கு சற்று சங்கடம் கொடுக்க,
“ஐயோ காலெல்லாம் அரிக்குதுடா…” என நெளிந்தாள்.
“வா நம்மளும் நடக்காம். போறதுக்குள்ள ட்ரெஸ் கொஞ்சம் காஞ்ஞு போரும்…” என அவள் கையைப் பிடித்து நடக்கத் தொடங்க, அவளும் அவன் விரல்களுடன் பின்னிப் பிணைந்த விரல்களின் மீதே ஓரப்பார்வை பதித்தபடி நடந்தாள்.
அவனோ கடிகாரத்தைப் பார்த்தபடி, “இவிடே பக்கத்துல மால் இருக்கு. போயிட்டு வரலாமோ? வேணிக்கும் எதுவும் வாங்கிட்டு வரல்ல. அவளுக்கு ப்ரஸண்ட் வாங்கணம்…” எனக் கேட்டான்.
“ம்ம்ம் போலாமே!” வேகமாக தலையாட்டியவள், “வேணிக்கு உன் மேல ரொம்ப பாசமோ?” என்றாள். அர்ஜித் அகனைப் பார்த்ததும் அவள் முகத்தில் இருந்த மகிழ்வை எண்ணி.
“ரொம்ப…”
“அடிக்கடி ப்ரோ வீட்டுக்கு வருவியோ?”
“ம்ம் வருவேன். அவனும் நிறைய தடவை என்டே வீட்டிற்கு வந்திருக்கான். அதுவும் இல்லாம வேணியும் அனுவும் ஒரே ஸ்கூல்ல தான் படிச்சாங்க…” என்றதும் அவள் புருவம் சுருங்கியது.
“ஓ? அப்போ அவள் பிரென்ட் எங்கேஜ்மெண்ட்கு அவள் ஏன் வரல?”
“ஏதோ எக்ஸாம் இருக்குனு பரஞ்ஞா. இல்லெங்கில் எனக்கு முன்னாடி அவள் தான் கிளம்பியிருப்பா…” அகனின் கூற்றில், ஏதோ சிந்தித்தவள் ஊருக்குச் சென்றதுமே அனகாவிடம் பேச வேண்டும் எனக் குறித்துக் கொண்டாள்.
அவள் முகம் திடீரென தீவிரமானது உணர்ந்து, “எந்தா மொழி?” என வினவ, “ப்ச்…” எனக் கண்ணை சிமிட்டி மறுப்பாக தலையசைக்கும்போதே வீடு வந்திருந்தது.
மாடியில் இருவருக்கும் அறை ஒதுக்கி இருந்தனர். அர்ஜித் எப்போது அங்கு வந்தாலும் அவனுக்கு அங்கு அறை தயாராக இருக்கும். அங்கு யாரையும் விட மாட்டான் பிரணீத்.
அர்ஜித்தின் வீட்டிலும் அப்படியே தான். தனக்கு பக்கத்து அறையை எப்போதும் பிரணீத்திற்காக மட்டுமே தயாராக வைத்திருப்பான். சில வருடங்களாக அவன் அர்ஜித்தின் வீட்டிற்கு வருவதும் இல்லை. வந்தாலும் வரவேற்பறையுடன் ஓடி விடுகிறான்.
அது அர்ஜித்திற்கு உறுத்தாமல் இல்லை தான். அவசரமாக மாற்றுடை எடுத்துக்கொண்டு குளியலறைக்குப் புகுந்தவள், உடை மாற்றி விட்டு வர, அர்ஜித் அப்போது தான் சட்டையைக் கழற்றினான்.
அதில் விழித்தவள், சட்டென பார்வையைத் திருப்பிக்கொள்ள, அது அவனைச் சுண்டி இழுத்தது.
கண்ணாடி முன்னே நின்று தலையைத் துடிட்டிக் கொண்டிருந்த அகமொழியின் பின்னே நெருங்கி நின்றான் அர்ஜித் அகன்.
“போய் ட்ரெஸ் மாத்து…” அவனைக் காணாதது போல கூற,
“ஒரு டாஸ்க் மிச்சம் இருக்கு…” என்றான் அவள் உயரத்திற்கு குனிந்து.
அவனின் விழிகள் கண்ணாடியில் பிரதிபலித்த பாவையின் முன்னழகைப் பருகிட, அவனது ஒற்றை விரலோ பின்னழகில் கோலமிட்டது.
கூச்சத்தில் நெளிந்தவள், “என்… என்ன டாஸ்க்?” எனத் தட்டுத் தடுமாறி வினவிட,
“என்டே மச்சத்துல நீ கிஸ் செய்யணும்!” என்றான் குறும்புத் தொனியில்.
“என்னது?” திகைத்து விட்ட அகமொழியைக் கண்டு சிரிப்பை அடக்கியவன், “எந்தாடி என்னமோ என்னை முழுசா பார்க்காதவ மாதிரி ஷாக் ஆகுற…” என்றான் இரு புருவமும் உயர.
“நீ கடைக்கு போகணும்னு சொன்னல்ல. முதல்ல போ…” அவனிடம் இருந்து தனது பேச்சைக் கேளாத மேனியைக் காத்துக் கொள்ள இயலாது என்று தெரிந்து விட்டது. அதே போல மனதைத் தற்காத்துக்கொள்ளும் பரபரப்பில் கூற,
“ஒரு முத்தம் தாரான் எவ்ளோ நேரம் ஆகும்… நீ எவ்ளோ சீக்கிரம் தருறியோ அவ்ளோ சீக்கிரம் ஞான் போய் கிளம்புவேன்…” என்றவனின் குரலில் கேலி இழையோடினாலும் அழுத்தமாக நின்றான்.
“ஒழுங்கா போ அகன்…” இம்முறை கோபம் போல கூற,
“இதெல்லாம் சீட்டிங்டி! நேத்து மட்டும் ஞான் உன்டே மச்சத்துல எல்லாம் முத்தம் கொடுத்தப்போ, கமுக்கமா வாங்கிக்கிட்ட தான. திருப்பி ஒண்ணாவது கொடுத்தியாடி? இனி ஞான் கொடுத்ததை வசூலிச்சா தான் திரும்ப கொடுப்பேன்!” என கராறாகக் கூறினான்.
கடவுளே! அவன் எங்கெங்கு முத்தமிட்டானோ அவ்விடமெல்லாம் கூசி சிவந்தது.
தனக்கே தெரியாத மச்சங்களை கூட கண்டறிந்து மோகப்புன்னகை வீசியதெல்லாம் கண்முன்னே வர நாணத்தில் திணறிப்போனாள்.
“அகன் ப்ளீஸ்!” அவனிடம் வெட்கம் வருகிறது என ஒப்புக்கொள்ளவும் கூட ஈகோ அவளுக்கு.
“ப்ளஷ் ஆயோ?”
“ம்ம்ஹும்…” வேகமாகத் தலையாட்டியவளின் சிவந்த வதனத்தை கண்ணாடி பிரதிபலிக்க, சிதறிய வெட்கத்தை விழிகளும் அழகாய் காட்டிக்கொடுத்தது ஆடவனுக்கு.
அதில் தானாய் அவனுக்கும் கர்வ நகை மிளிர, அவள் தோள்பட்டை மீது நாடியை வைத்து அழுத்தியவன், “லேட் ஆகுதுடி. சீக்கிரம் கொடு…” என்று அவசரப்படுத்தினான்.
“ஐயோ போடா!” அவனைப் பாராது தலையைக் குனிந்து கொண்டவளைத் திருப்பியவன், “செரி… எனிக்கும் வெளில போக இன்டரஸ்ட் இல்ல. நேத்து விட்டதை கன்டின்யூ செய்துடலாமா?” கேலி கூத்தாட சின்னதொரு மோகமும் கலக்க கேட்டான்.
“இந்நேரத்துலயா?” என பேந்த பேந்த விழித்து மணியைப் பார்த்தாள். ஏழு தான் ஆகியது.
“நல்ல நேரம் எதுவும் நோக்கணுமோ?” மீண்டும் குறும்பு மின்னியது.
“ப்ச்… அகன். விளையாடாத!” சிணுங்கலாய் ஒலித்த குரலில் உண்மையாகவே கிறங்கினான்.
“கிஸ் மீ அட் மை பர்த் மார்க்… நொவ்!” வார்த்தைகள் குழைந்தது அவனுக்கு.
சட்டென அவளுள் சிறு திட்டம் உதயமாக, “உன் மச்சத்துல முத்தம் குடுத்தா விட்டுடுவ தான?” என விழிகளை உருட்டிக் கேட்க,
“ம்ம்ம்…” என்றான் நெருங்கி வந்து.
“ஒரு தடவை தான் குடுப்பேன். சமத்தா போய்டணும்.”
“ம்ம்ம்ம்… கிவ் மீ!”
அவனோ திரும்பி முதுகைக் காட்டி நிற்க, அவளோ அவனுக்கு பக்கவாட்டில் ஓடி வந்து அவனது கன்னத்தில் இருக்கும் சின்ன மச்சத்தில் முத்தமிட்டாள்.
அதில் மயக்கம் தெளிந்தவன், “ஏய் சீட்டிங் செய்யுறியடி…” என சண்டைக்கு வர,
“எது சீட்டிங்? நீ மச்சம்னு மொட்டையா தான் சொன்ன. எங்கன்னு சொன்னியா? நான் சொன்ன சொல்லை காப்பாத்திட்டேன்பா…” என வெகு நல்ல பெண்ணாக மீண்டும் கண்ணாடி முன்னே நின்று தலை துவட்ட,
“காந்தாரி…” எனப் பல்லைக்கடித்தான்.
ஆகினும் கன்னத்தில் கொடுத்த முத்தமும் குளுமையைக் கொடுக்க தவறவில்லை.
“ஈ திமிரு பிடிச்ச லிப்ஸ் இருக்கே…” என்று அவள் முகத்தை மட்டும் பின்னால் திருப்பி அதற்கு தக்க தண்டனை கொடுத்து விடுவித்தவன், “லவ் இட்!” என கண் மூடி மயங்கி நின்ற தோரணையை ரசித்து ருசித்து விட்டு குளியலறைக்குள் புகுந்தான்.
அவன் சென்ற பிறகும் அவள் கண் விழித்து நிதானத்திற்கு வர சில நொடிகள் ஆனது.
பொதுவாக முதல் முத்தம், முதல் நெருக்கம் மட்டும் தானே சிலிர்ப்புக்குள் வர வேண்டும். ஆனால், இங்கு முத்தம் கொடுக்க கொடுக்கவே, நெருக்கம் அதிகரிக்க அதிகரிக்கவே சிலிர்ப்புகள் அதிகமாகும் அதிசயம் புரியவில்லை அவளுக்கு.
கொஞ்ச கொஞ்சமாய் மொழியின் இதயம் விரும்பும் நெருக்கமாகிப் போனான் அகன்.
இருவரும் மாலுக்கு கிளம்ப, ப்ரணீத் உறவுக்காரர்களை தங்க வைக்கும் பணியில் அலைந்து கொண்டிருந்தான்.
இருவரும் பீனிக்ஸ் மாலுக்குச் சென்று இறங்கினர்.
வேணிக்கு நகையை பரிசாக வாங்கியவன், பெண்கள் உடைப்பிரிவிற்கு அவளை அழைத்துச் சென்றான்.
“அவளுக்கு சுடியா சேரியா? பட்டு சேரி வாங்கலாமா?” என அவள் கேட்க,
“இவிடே வந்தது நினக்கு ட்ரெஸ் எடுக்க!” என்றான்.
“பாருடா… ஹஸ்பண்ட் டியூட்டியா?” அவனைக் கிண்டல் செய்தவள், மறுக்காமல் உடை பார்க்கத் தொடங்க சிறிது நேரத்தில் ஒரு குர்தியை மட்டும் எடுத்துக்கொண்டு “இது ஓகே” என்றாள்.
அவளை மேலும் கீழுமாகப் பார்த்தவன் அந்தக் குர்தியை ஓரமாக வைத்து விட்டு, தானே தேடுதல் பணியில் இறங்கினான்.
மாடர்ன் உடை, சுடிதார், புடவை என அனைத்திலும் சிலதை எடுத்து கையில் வைத்தவனை ‘யார் பெத்த புள்ளையோ… கடையவே வாங்கித் தருது’ என சிலாகித்து கொண்டாள்.
இரு கையிலும் உடைகளை வைத்திருந்தவன், அவளிடம் கொடுத்து “போய் எல்லாம் ட்ரையல் நோக்கு…” எனக் கொடுக்க, “எதே?” என மிரண்டாள்.
“ஹலோ மிஸ்டர் மலையாளி… எனக்கு எந்த ட்ரெஸ் போட்டாலும் பிட்டா அழகா தான் இருக்கும். இத்தனை ட்ரஸும் போட்டு பாக்குறதுக்குள்ள நிச்சயதார்த்தம் முடிஞ்சுடும் பரவாயில்லையா?”
அவளை நோக்கி எப்போதும் போலான லேசர் பார்வை வீசியவன், “நினக்கு எப்பவுமே ஓவர் கான்பிடன்ஸ் ஜாஸ்தி அல்லோ. இதுல ஏதாச்சு ஒண்ணாச்சு நினக்கு பிட்டா இருக்கான்னு பார்க்க தான் போட்டு பார்க்க பரஞ்ஞேன்…” என்றான் அசட்டையாக.
அவளோ தீயாக முறைத்தபடி நிற்க, “செரி… ஒவ்வொரு மாடல்ல ஒன்னு போட்டுக் காமி…” என ஒரு சுடிதாரும், ஹை வெய்ஸ்ட் ஜீன் மற்றும் டீ-ஷர்ட் வித் ப்ளேஸ், லூஸ் பிட் பேண்ட் அண்ட் ட்ரெண்டி டாப் என்று சில உடைகளை கொடுத்து அதை மட்டும் ட்ரையல் பார்க்க சொன்னான்.
‘தலையெழுத்து!’ எனப் புலம்பியபடி ட்ரையல் அறைக்குச் சென்றவளை, “ஓய் காந்தாரி!” என அழைத்தவன், “போட்டுட்டு வெளில வந்து காட்டிட்டுப் போ…” என்றபடி அங்கிருந்த சோபாவில் அமர்ந்து விட்டான்.
உள்ளே சென்றவள் மீண்டும் மடமடவென வெளியில் வந்து, “உன் பார்வை என் ட்ரையல் ரூம் பக்கம் மட்டும் தான் இருக்கணும். அடுத்த ரூம் பக்கம் போக கூடாது…” என்று கண்டித்து விட்டுச் செல்ல, “அரை பைத்தியம்…” என முணுமுணுத்துக் கொண்டான் ஆடவன்.
முதலில் அவளுக்காக தேர்ந்தெடுத்த மேக்சி சுடிதாரை விரித்து காட்டியபடி வெளியில் வந்தவளை மேலும் கீழும் நக்கலாகப் பார்த்தவனுக்குள் ரசனை ஊற்றெடுத்தாலும், “ஓகே… பெட்டர்!” என்றான் ஏனோதானோவென்று.
“டேய் இது விலை நாலாயிரம் போட்டுருக்கு. பெட்டராமே…” எனக் கடுப்பாகி மீண்டும் உள்ளே சென்றவள், லூஸ் பேண்ட்டும் சாண்டில் நிற க்ளோஸ் நெக் டாப்புமாக வெளியில் வர, அவனின் பார்வை அவள் மீதே ஊர்ந்தது.
“இது?”
“ம்ம்!”
“ஓகே இன்னும் ஒன்னு தான் போடுவேன்…” என்று கண்டிப்புடன் சென்றவள், அடுத்ததாக ஜீனும் டீ-ஷர்ட் வித் ப்ளேசுமாக வெளியில் வர, அர்ஜித் அகனின் நெஞ்சம் மெல்ல வழுக்கியது.
“இது நல்லாருக்குல்ல?” என ப்ளேசை இழுத்தபடி கூறியதில், அவன் எழுந்து கொண்டான்.
அவளை நோக்கி வரும்போதே, “சரி நான் என் ட்ரெஸ்ஸை போட்டுட்டு வரேன்…” என அவள் உள்ளே சென்று கதவை அடைக்கப்போக, காலால் கதவைத் தடுத்தான்.
அதில் திருதிருவென விழித்தவள், “என்னடா?” என வினவ, அவனோ மெல்ல அவளை நோக்கி குனிந்ததில் பதறி விட்டாள்.
“அடேய் இது கடை…” எனும்போதே இன்னுமாக நெருங்கியவன், இடையுடன் அணைக்க வருவது போல வந்து, பின்னால் ஜீன்சினுள் சிக்கி இருந்த டி ஷர்ட்டை வெளியில் எடுத்து விட்டான்.
அதன் பிறகே நிம்மதி பெருமூச்சு வந்தாலும், கொஞ்சமே கொஞ்சம் ஏமாற்றம் அவளுக்கு.
“இதுக்கு தான் இப்படி உத்து பார்த்துட்டே வாந்தியாக்கும்…” என முணுமுணுத்திட, “வேற எந்தா விச்சாரிச்சே காந்தாரி?” என்றான் அவளது முகம் போன போக்கை பார்த்து.
சிரிப்பை அடக்குவது அவன் முகத்திலேயே தெரிய, ‘ஐயோ சொன்னா அசிங்கம்’ என தனக்குள்ளேயே புலம்பி விட்டு, “போ அகன்…” என்று வெளியில் தள்ளி விட்டு கதவை அடைத்தாள்.
தானாய் ஒரு புன்னகை அரும்பியது அவளுக்கு. ஒரு சில நொடிகளேனும் அவன் நெருக்கம் தந்த இதத்தை ரசித்து விட்டே உடையை மாற்றினாள்.
அவளுக்காக சில உடைகளை தேர்ந்தெடுத்து எடுத்துக்கொண்டவனை தரதரவென ஆண்கள் பிரிவிற்கு அழைத்துச் சென்றாள்.
அவனோ கைக்கடிகாரத்தைப் பார்த்தபடி, “டைம் இல்லடி. கடை க்ளோஸ் செய்யும் டைம்…” என்றான்.
“உன்னை மாதிரி நான் ரொம்ப நேரம் பார்க்க மாட்டேன். ஒரே ஒரு ட்ரெஸ் தான் எடுப்பேன்…” என்றவள், சற்றே தேடி விட்டு, “ஹே மிஸ்டர் மலையாளி! இது பாரேன். நீ எனக்கு எடுத்த டீ-ஷர்ட் ப்ளேஸ் மாதிரியே இருக்கு. நீயும் இது எடுக்குறியா? நம்ம டிவின்னிங் பண்ணலாம்…” என விழி விரித்துக் கேட்டதில், ஏற்கனவே அவளிடம் வீழ்ந்து கிடந்தவன், “ம்ம் ஓகே!” என்றான்.
“போய் போட்டுப் பாரு…”
“கரெக்ட்டாயி தன்னே இருக்கும்டி…” என்றாலும் வற்புறுத்தி ட்ரையல் அறைக்கு அனுப்பி வைத்தாள்.
“போட்டுட்டு வந்து காட்டணுமோ?” புருவம் உயர்த்தி அவன் கேட்க,
“உனக்கு பிட்டிங் கரெக்ட்டா இருக்கா பாரு. எனக்கு ஒன்னும் வந்து காட்ட தேவையில்லை. இவர் பெரிய மன்மதரு. இதை போட்டா மட்டும் அப்படியே நான் மயங்கிடுவோம் பாரு…” என நொடித்துக் கொண்டாள்.
அவன் பேசியதற்கு பதில் பேச்சாம்!
முதலில் என்றால் எது பேசினாலும் இருவரும் தீவிரமாக எடுத்துக் கொள்வது வழக்கம். ஆனால், இப்போது அவன் விளையாட்டாக எதை பேசுகிறான் எனப் பிரிக்க முடிந்தது.
அவனுக்கும் அதுவே பழக, “என்னை நோக்கி பிளாட் ஆயிடும்னு பேடி(பயம்) நினக்கு!” என்றான் நக்கலாக.
“அய்யயோ நாங்க அப்படியே பிளாட் ஆகி பிளாட் போட்டுருவோம் பாரு. போடா!”
“நீ போடி!” என்றபடி அறைக்குள் செல்லும் போதே, “இரு இரு இந்த கூலர்ஸ்ஸும் ட்ரை பண்ணு…” எனக் கொடுத்தாள்.
சில நிமிடங்கள் கழித்து அறைக்கதவு திறக்கப்பட, அசுவாரஸ்யமாக அவனைப் பார்த்தவளின் விழிகள் அவனிடமே கட்டுண்டு போனது.
அவள் தேர்ந்தெடுத்த சாண்டில் நிற டீ-ஷிர்ட்டும் அதற்கு தோதான ப்ளேசும், ஜீன்சும், அவனுக்காகவே செதுக்கப்பட்டது போன்ற குளிர் கண்ணாடியும் அணிந்து ஸ்டைலாக வந்து நின்றவனை அசையாது பார்த்திருந்தாள்.
எப்போதும் பார்மல் உடையில் இருந்தது தான் அதிகம். எப்போதாவது டீ-ஷர்ட்டில் பார்த்திருக்கிறாள்.
ஆனால், இத்தனை மாடர்ன் உடையில் அவனைப் பார்ப்பது இதுவே முதன்முறை!
கண்ணாடியை லேசாய் கீழிறக்கி விட்டு, “எந்தா காந்தாரி… பிளாட் ஆயோ?” எனக் கண்ணடிக்க, அதன்பிறகே நிகழ்வுணர்ந்தவள், “ஓகே தான்…” என்று விட்டு வேறு ஏதோ உடை பார்ப்பது போல பாவனை செய்தபடி அங்கிருந்து நழுவி விட்டாள்.
குறும்புச் சிரிப்புடன் “பிளாட் ஆயி கழிஞ்ஞு…” என விசிலடித்தபடி தனது உடைக்கு மாறி வந்தவன், “இரு பில் போட்டு வரான்…” என்று நகர, அந்த உடையைப் பிடுங்கியவள் “நான் தான் போடுவேன்…” என்று அவளே பணம் கொடுத்து வாங்கினாள்.
அதனை விழியயர்த்திப் பார்த்தவன், அமைதியாகவே அவளது ஆளுமையை ரசித்துக் கொண்டான்.
மால் விட்டு வெளியில் வரும்போதே மணி ஒன்பதரையைத் தாண்டியது.
“பசிக்குது சாப்பிடலாமா?” அவள் கேட்டபிறகே அவனுக்கும் பசி உறைத்தது.
“ஹோட்டல் போய்டலாம்…” என பார்க்கிங்கில் இருந்து காரை எடுத்து வெளியில் செல்லும்போதே, “அகன் இங்கவே ஹோட்டல் இருக்கு…” எனக் காட்ட, அவனும் காரை ஓரமாக நிறுத்தினான்.
இருவரும் உண்டு விட்டு வெளியில் வரும்போது, “நீ காரை எடு… நான் நிக்கிறேன்…” என்று சாலையை ஒட்டி நின்றபடி அலைபேசியை பார்த்துக் கொண்டிருந்தாள்.
காரை ஆன் செய்தபடி ஜன்னல் வழியே அவளை பார்த்தவன் ஏதோ தோன்ற சாலையைப் பார்க்க, அங்கு ஒரு கார் அதிவேகத்தில் வந்து கொண்டிருந்தது. சாலையைப் பார்த்து நேராக வருவது போன்றும் தோன்றவில்லை.
மனம் உறுத்த, அவன் இறங்கும்போதே அந்தக் கார் அதிக வேகத்தில் சாலை ஓரம் வரைக்கும் அவளை நோக்கியே வர, அவளும் அந்த காரை அப்போது தான் கவனித்து திகைத்து நின்றாள்.
சரியாக கார் இடிக்கப்போகும் சமயத்தில் அர்ஜித் அவளை பிடித்து பின்னால் நகற்றி விட, நூழிலையில் உயிர் தப்பினாள்.
பயத்தில் அரண்டு நின்றிருந்தவளை தனது கை வளைவிற்குள் கொண்டு வந்த அர்ஜித்திற்கும் கூட சற்று நேரத்தில் உயிரே பிரிந்து மீண்டது போலொரு பதற்றம்.
இதயத்துடிப்பு தாறுமாறாகத் துடிக்க, காரை நிறுத்தாமல் சென்றவனின் மீது கடுங்கோபம் எழுந்தது.
அவளை காரில் அமர வைத்தவன், அந்த கார் ஓட்டுனரை விட அதீத வேகத்தில் சாலையில் பறக்க, அகமொழி இன்னும் கொஞ்சம் மிரண்டு போனாள்.
“அகன் மெதுவா போ!”
அவளது கூற்றை காதில் வாங்கவில்லை அவன். தாடை இறுகி இருந்தது. அவனது முகம் கண்டே அவளுக்கு பயம் எழுந்திட, சீட் பெல்ட்டை இறுக்கிப் பிடித்தபடி ‘கடவுளே எந்த லாரில மோத போறோமோ’ என்ற அச்சத்தில் இருந்தாள்.
சரியாக அந்தக் காரை பிடித்து விட்டவன், அதனை ஓவர்டேக் செய்து டயர் சத்தம் காதை கிழிக்கும் படி நிறுத்திட அந்தக் காரும் நின்று போனது.
நான்கு இளைஞர்கள் குடித்து விட்டு கார் ஓட்டினர் போலும்.
காரை ஒட்டியவன் கையில் பாட்டிலுடன் இறங்க, அவனை சப்பென்று அறைந்தான் அர்ஜித்.
“பிரச்சினை வேணாம் அகன்…” அகமொழி தடுத்துப் பார்க்க, அவனோ விட்டானில்லை.
அடித்து துவைத்து விட்டான்.
காவலர்கள் வந்தே சண்டையை நிறுத்தினர். அவர்களும் சிசிடிவியில் நடந்ததை பார்த்து விட்டு அந்தக் காரை பின்தொடர்ந்துள்ளனர்.
“இனி குடித்துட்டு மட்டும் இல்ல… குடிக்காம கூட காரை தொடான் பாடில்லை!” என மிதி மிதியென மிதித்து விட்டான்.
“அகன் ப்ளீஸ் விடு…” அவன் கையைப் பிடித்து அமைதிபடுத்த, அந்நேரம் மற்றவன் போதை தலைக்கேற பாட்டிலால் அகமொழியையே அடிக்க வந்ததில், கையால் பாட்டிலை உடைத்து தடுத்தான்.
“ஐயோ டேய் பைத்தியக்காரா… உனக்கு தான் அடிபடும்!” என்று கத்தியும் அவன் அடங்கவில்லை.
காவலர்கள் பிரச்சினையை நிறுத்தி குடித்திருந்த ஆடவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல, அர்ஜித் அவளை அழைத்துக் கொண்டு வீட்டை நோக்கிச் சென்றான்.
உள்ளங்கையில் இரத்தம் கசிந்து கொண்டிருந்தது.
“இரத்தம் வருது அகன்…” கொஞ்சம் அதிகமாவே வழிந்ததில் அவளுக்கு ஆதங்கம் தாளவில்லை.
அவனோ கோபம் அடங்காது துடிப்பும் அடங்காது இறுகி அமர்ந்திருக்க, “அங்க க்ளினிக் இருக்கு பாரு. அங்க நிறுத்து… அகன் நிறுத்துடா!” என அவன் புஜத்தை உலுக்கியதும் தான் நிறுத்தினான்.
இம்முறை அவள் இறங்கும் முன்னே அவனே மறுபுறம் வந்து கதவைத் திறந்து விட்டவன், அவளை கைப்பிடித்து அழைத்துப் போக, அவனது உள்ளங்கை சில்லிட்டு இருந்தது.
பயந்திருப்பான் போலும்!
“அகன்…” அவள் பேச வரும்போதே தாதியர் வந்து விவரம் கேட்டு கட்டிட்டார்.
வீட்டிற்கு சென்றதும், யாரும் அறியாமல் அறைக்குச் சென்று விட்டனர்.
“கை வலிக்குதா அகன்?” அறைக்குள் நுழையும் போதே அவள் வினவ, அர்ஜித்தோ கதவை அடைத்த நொடியில் அவளை இறுக்கி அணைத்திருந்தான்.
அவனது இதயத்துடிப்பு தாறுமாறாக கேட்டது அவளுக்கு.
நேரம் செல்ல செல்ல இறுக்கத்தின் அழுத்தம் அதிகரிக்க, அதை விட அவனது இதயத்தின் துடிப்பும் அதிகரித்தது.
“உன் ஹார்ட் பீட் ஏன் இப்படி அடிக்குது?” விழி நிமிர்த்திக் கேட்க, “அறியிதில்லா…(தெரியல)” என்றான் அவனும்.
“இன்னைக்கு வாங்குன ட்ரெஸ் எல்லாம் ஒரு செகண்ட்ல போட விடாம செஞ்சுருப்பானுங்க. ஜஸ்ட் மிஸ்ஸுல…” எச்சிலை விழுங்கியபடி கூறியதில், அவளது இரு கன்னத்தையும் அழுந்தப் பற்றியவனின் விழி இடுங்கியது.
“நீ என்டே லீஸ் ஆனு. அதுவும் அறுவது வருஷத்தேக்கு!” என்றவனின் அழுத்தம் நிறைந்த கூற்றிலும் அதற்கு மாறாக கண்கள் காட்டிய நேசத்திலும் உறைந்து நின்றவள்,
“பேடியோ?(பயந்துட்டியா)” என்றாள் அவனைப் போன்றே.
“ரொம்ப!” அவன் உடனே ஒப்புக்கொண்டதில், காலை எக்கி அவன் அதரங்களில் தன்னிதழ்களைப் ஒப்படைத்துக் கொண்டாள் அகமொழி… இதயத்தையும் சேர்த்தே!
அகன் வசமாவாள்(வான்)
மேகா
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
6
+1
74
+1
3
+1
1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


அடேய்களா!!! போன எபில தான் காதலுக்கு தொடக்க புள்ளி வச்சீங்க… இந்த எபில ரெண்டு பேரும் மொத்தமா காதல் கடல்ல விழுந்துட்டீங்க…💖💕💞💜💛
அகா அகன் இருவரும் காதல் அழகு.