
நட்சத்திரம் 7
“இனி இந்த வீட்ல நான் ஒரு நிமிசம் கூட இருக்கமாட்டேன்” எனச் சொல்லியவள் துணிகளை எடுத்து தன் பெட்டியில் அடுக்க ஆரம்பித்திருந்தாள்
“மஹி அத்தைக்கு,அம்மாவுக்கெல்லாம் தெரிஞ்சா வருத்த படுவாங்க, நான் செஞ்சது தப்பு தான் எதோ சலனத்துல செஞ்சுட்டேன், என்ன மன்னிக்க மாட்டியா? எனக்கு ஒரு சான்ஸ் தர மாட்டியா?” எனக் கேட்ட தீரனை பார்வையிலேயே அவள் வதைக்கக் குற்ற உணர்ச்சியில் குறுகி நின்றான் தீரன்.
“அதெப்படி தீரன் உங்க நுனிவிரல் கூட என் மேல படாதுன்னு சொல்லிட்டு இப்படி ஒரு விசயத்தை உங்களால செய்ய முடிஞ்சுது, ஃபேக் ப்ராமிஸ் ஏன் பண்ணுறீங்க?” எனக் கேட்டவளுக்குத் தன்னை அறியாமல் எப்படித் தன் கற்பை இழந்தேன் என்ற குற்ற உணர்வு மேலோங்க ஒட்டுமொத்த கோபத்தையும் அவன் மேல் காட்டியிருந்தாள் மகிழினி
“மஹி நீ என் வொஃய்ப்ன்ற உரிமைல நடந்தது அவ்வளவு தான்” எனப் பேசியவனை அவள் பொருட்படுத்தவே இல்லை அவள்
அதற்குள் அவர்களின் அறை கதவு தட்டப்பட “ப்ளீஸ் மஹி .. என்ன விட்டு போயிராத” என்றவனின் கெஞ்சலில் அவள் மனம் இறங்கவில்லை
கதவை திறந்தவுடன் விஜயலட்சுமி புன்னகை முகத்துடன் காபியுடன் நிற்க
“அம்மா நீ எதுக்கு இந்த வேலைலாம் செய்யுற, வா நம்ம வீட்டுக்குப் போகலாம் அப்படி மானம் கெட்டு ஒண்ணும் இங்கே இருக்கணும்னு அவசியம் இல்லை” எனப் பொரிந்து தள்ளியவளை பார்த்து
“நம்ம வீட்டு வேலைய நம்ம தானே மகிழ் செய்யணும் பாகுபாடு பேசாமல், குளிச்சிட்டு வா டிபன் ரெடியா இருக்கு” எனப் பேசிய படி காபி தட்டை கைகளில் திணித்தவர் “மாப்பிளைக்குக் கொடு“ எனச் சொல்லி அங்கிருந்து நகர்ந்தார்
காபியை மேஜை மேல் வைத்தவள் “எடுத்து குடிங்க, நம்ம நடுவுல இனி எந்த ரிலேஷன் ஷிப்பும் கிடையாது, ப்ரண்ட்லியா கூட என் கிட்ட நெருங்காதிங்க” எனச் சொன்னவள் குளியலறைக்குள் நுழைந்திருந்தாள்
அங்கிருந்து விலகிச் செல்ல அவள் மனம் விழைந்தாலும், நெஞ்சுக்குள் எரியும் கேள்விக் கணைகள் அவளைச் சுட்டெரித்தன. அவன் கை தீண்டிய மாத்திரத்தில் ஏன் தன் சுயம் இழக்கிறாள்? தனக்குள் நிகழும் அந்த விசித்திர மாயத்தின் உண்மை அறிய மூளைத் துடித்தாலும், ‘இவ்வளவுதான் வாழ்க்கை’ என அஞ்சிய மனம் அவளைப் பின்னோக்கி இழுத்துப் பிடித்தது.
மேஜையில் அமர்ந்து உணவோடு போராடிக் கொண்டிருந்த தீரனின் பார்வையைத் தன் வசப்படுத்தினாள் மகிழினி. லாவெண்டர் நிறப் புடவையில், தவழும் கார் குழலுமாய் அவளொரு பேரழகாய் படியிறங்கி வர, அவளது தோற்றத்தில் கிறங்கித்தான் போனான் அவன். அடுத்த நொடியே, அவள் கரங்களில் இருந்த பையைக் கண்டதும் அவனது விழி திகைத்தது… அவள் எங்கோ புறப்பட்டுச் செல்ல போகிறாள் என உணர்ந்தவன்.
“மஹி… நான் ட்ராப் பண்ணவா?”அவன் குரலில் கசிந்த மென்மை அவளைத் தீண்டத் தயங்கியது.
“தேவையில்லை.. நான் பஸ்ஸிலேயே போய்க்கிறேன்!” என அவள் வீசிய வார்த்தைகள் பாறையாய் விழ,
“ஏய் இங்க வாடி!” எனத் தாய்மைக்கே உரிய வேகத்தோடு இழுத்து அமரவைத்த விஜயலட்சுமி, இட்லியை அவள் வாயில் ஊட்டிவிட்டார். “எங்கே போனாலும் மாப்பிள்ளை கூடத்தான் போகணும்… அம்மா கையால சாப்பிட்டுத்தான் போகணும்!” என ஆணை பிறப்பிக்க, அந்த உணவைத் தொண்டைக்குழியில் இறக்கியவள்,
“நீ சொன்ன ரெண்டாவது விஷயத்தை வேணும்னா செய்றேன்… ஆனா முதல்ல சொன்னதை என்னால செய்ய முடியாது!” எனத் திமிரானப் பார்வையோடு தீரனை முறைத்தபடி உணவை மென்றாள்.
“அவள் விருப்பப்படியே இருக்கட்டும் அத்தை… கட்டாயப்படுத்தி காதலை விதைக்க முடியாது! என்றாவது ஒருநாள் அவளாகவே உணர்வாள்…” எனக் கூறியபடி, அரைகுறை உணவோடு தட்டிலையே கைகழுவி நகர்ந்தான் பிரகதீரன்.
“யார் எதைப் பேசணும்னு தகுதியே இல்லாம போச்சு! கழுத்துல தாலியைப் பலவந்தமாக் கட்டிட்டு… இப்ப காதல் பத்தி வேதாந்தம் பேசுறதைப் பார்த்தா, சாத்தான் வேதம் ஓதுற கதைதான் நினைவுக்கு வருது!” என நஞ்சாய் வார்த்தைகளைக் கொட்டி பையை மாட்டியவளை,
“அம்மாடி மகிழ்… உன் மேல எங்களுக்குப் பாசம் இருக்கக் கூடாதாடா? தீரன் கூடவே போயிட்டு வாமா…” என அன்பொழுகப் படியிறங்கி வந்தார் நீலவேணி.
“அது வந்து “ எனத் திணறி நின்றவளை
“நீ அத்தைன்னு கூப்பிடலாம், தயங்காத , உன் மனசுக்குப் பிடிக்காத திருமணம் தான் ஆனால் மனசுக்கு பிடிச்ச வாழ்க்கையா மாத்த முடியும் மகிழ், இப்படி அவன் மேல வெறுப்ப வளர்த்துகிட்டே இருந்தா சரியா இருக்காதும்மா” என நீலவேணி உணவருந்த அமர்ந்தார்
மகிழினி எதுவும் பேசாமல் அமைதியாய் நிற்க,
“மௌனம் சம்மதம், டேய் தீரா அவளைப் பத்திரமா கூட்டிட்டு போயிட்டு வாடா“ எனச் சிரித்தபடி காவி நிற புடவையில் வந்து நின்றார் மீராம்மா
“என்னோட அமைதி பெரியவங்களுக்குக் கொடுக்குற மரியாதை மட்டும் தான் சம்மதம்னு தப்பா நினைக்காதீங்க, உங்க பேச்சை கேட்டு அவரைக் கூட்டிட்டு போறேன் அத்தை, ஆனா அவரோட நுனி விரல் கூட என் மேல படக்கூடாது, இன்னொரு முறை அவமானம படுற சக்தி எனக்கில்லை” எனச் சொன்னவளின் முகம் சோகத்தைச் சுமந்து நிற்க
“மஹி நீ தனியாவே போயிட்டு வா, ஆனா நான் உன்னை ஹிப்நாட்டைஸ் பண்ணிருக்கேன்னு நீ நம்புறியா ?” கேள்வியாய் அவன் பார்க்க மௌனம் சாதித்த பெண்ணவளை பார்த்து
‘அமைதியா இருந்தா என் நக்ஷத்ரா மாதிரியே இருக்கா’ என நினைத்தபடி நின்றிருந்தான்.
“அவ தான் அமைதியா நிக்குறாளே, நீ கூட்டிடு போடா” என மீரம்மா சொல்ல
‘எவ்வளவு கோபம் இருந்தாலும் ஏன் நம்ம மனசு அவன் கூட இருக்குறத விரும்புது’ எனக் குழம்பி போய் நின்றாள் தீரனின் மஹி ..
“தீரன் வாக்கிங் ஸ்டிக் எடுத்திட்டு வாங்க” என அவள் சொல்ல
சொன்ன நொடியில் ஒட்டம் பிடித்து மாடியிலிருந்த வாக்கிங் ஸ்டிக்கை எடுத்து வந்தான் தீரன், அதன்பின் இருவரும் காரில் ஏறி அவள் பின்னிருக்கையில் அமர்ந்து கொண்டதே அவன் மேல் அவளுக்கிருக்கும் அவநம்பிக்கையைக் காட்ட,
“எங்க போகணும் மஹி” என்றவனின் குரலில் காரின் கண்ணாடி வழி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவளின் சிந்தை களைய
“தீக்ஷா ஹாஸ்பிட்டல்” எனச் சொன்னவள் மறுபடியும் சாலையில் செல்லும் வண்டிகளின் மேல் கவனம் செலுத்த
“என்ன மஹி உடம்புக்கு எதும் சரியில்லையா, எதுக்கு அந்த ஹாஸ்பிட்டல் போகணும்” என்றவனின் விழி காரின் முன் கண்ணாடி வழி அவள் விழியை நோக்க
“கொஞ்சம் ப்ளீஸ் பேசாமல் வாங்க தீரன், ஏற்கனவே நான் குழப்பத்துல இருக்கேன்” எனப் பேசியவள் தன் கைப்பேசியை எடுத்துக் கேம் விளையாட ஆரம்பித்திருந்தாள்.
*****
மருத்துவமனை வந்தடைந்ததும் “நீங்க கார்லையே வெயிட் பண்ணுங்க தீரன், நான் உள்ள போயிட்டு வந்தறேன்” எனச் சொல்லியபடி கைப்பையை எடுத்துக்கொண்டு உள்ளே நுழைந்தாள்.
அவள் செல்லும் வழியைப் பார்த்து நின்றவனுக்கு என்ன தோன்றியதோ அவளைப் பின் தொடர ஆரம்பித்து இருந்தான், அவன் முன்னே நடந்து சென்ற காரிகை தன் கைப் பையிலிருந்து எதோ பைலை எடுத்துக்கொண்டு முன்னே செல்ல
‘ஜாப்காக வந்திருப்பளோ.? என்னன்னு போய்ப் பார்ப்போம் ‘ என அமைதியாய் பின் தொடர்ந்தான்
உள்ளே நுழைந்தவள் லிஃப்டில் ஏறி சென்று விட அவள் இறங்கும் தளத்தை மனதில் பதித்துக்கொண்டவன் மறுபுறம் இருந்த லிஃப்டில் ஏறி அவள் இறங்கிய தளத்தில் வரவேற்பறையில் அமர்ந்திருந்த பெண்ணிடம் விசாரணையை ஆரம்பித்திருந்தான்
“மஹி..! மஹி ..!” அவன் திணறினான் , அவன் திணறியதற்கான காரணம் அவன் நின்றிருந்த தளமே காரணம்
“சார் ரிலக்ஸா கேளுங்க சார்” என வரவேற்பரையிலிருந்த பெண் அவனிடம் கேட்க
“இல்ல மகிழினி , இன்டர்வீயூ தானே வந்திருக்காங்க “ எனக் கேட்டவனின் மனதில் ‘இன்டர்வீயூக்கு தான் வந்திருக்கணும் கடவுளே ‘ என வேண்டுதலை விடுத்தான் மஹியின் தீரன்
“சார் ஷி இஸ் ரெகுலர் பேஷண்ட் ஹியர் “ என்ற பதிலில் திகைத்து நின்றவன்
“ஐ நீட் மெடிக்கல் ரெக்கார்ட் ஆஃப் ஹர், கேன் யூ ப்ளீஸ் ஹெல்ப் மீ ஓவர் திஸ் “ எனக் கேட்டவனை
“சாரி சார் அவர் பேஷண்ட் ரெக்கார்ட்ஸ் ஹைலி கான்ஃபிடன்ஷியல் “
“ஷி இஸ் மை வொய்ப், அவளைப் பத்தி எல்லாமே தெரிஞ்சுக்கிற உரிமை எனக்கு இருக்கு” என இவன் வரவேற்பறையில் சண்டை போட்டுக் கொண்டிருந்தான் தீரன்
அங்கே மருத்துவரின் அறையில் அமர்ந்திருந்தாள் மகிழினி “சொல்லுங்க மகிழினி, ட்ரீட்மெண்ட்டிற்கு அப்பறம் அந்தக் கனவு உங்களை டிஸ்டர்ப் பண்ணுதா?” என மருத்துவர் தீபன் கேட்க,
“இப்போ அந்தக் கனவு வரவில்லை டாக்டர், பிகாஸ் கனவுல வந்த பெர்சன,நேர்ல பாத்தேன், அவரைப் பார்தத மறுநாளே கட்டாமல் இருந்த தாலி கட்டியது போல் கனவில் வந்தது”
“வாட் கனவுல வந்தவர நேர்ல பார்த்தீங்களா? இன்டிரஸ்ட்டிங்” எனச் சொன்ன தீபனை பார்த்தவள்
“பார்த்ததோட முடியல டாக்டர் எங்களுக்குக் கல்யாணமும் ஆயிருச்சு, பொம்மை கல்யாணம்” என அவள் பேசியபடி அவளுடைய ரிபோர்ட்டை எடுத்து மேசை மேல் வைத்தாள்
“வாழ்த்துக்கள் மகிழினி ” எனத் தீபன் சொல்லியபடி “அதான் கனவுல வந்தவரோட கல்யாணமும் ஆச்சு உங்க கனவுகளுக்கான விடையும் கிடைச்சிருச்சு, சந்தோசமா வாழுங்க மகிழினி ” எனத் தீபன் சொல்ல
“இப்ப தான் பிரச்சினையே ஆரம்பிச்சிருக்கு” எனச் சொன்னவள் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகியிருந்த வீடியோ பதிவை டாக்டர் தீபனிடம் போட்டு காண்பித்தவள் “இது எப்படி நடந்திருக்கும் டாக்டர், பிகாஸ் அப்ப என்ன நடந்திச்சுன்னு எனக்கு நினைவே இல்லை , தொடுதல் மூலம் ஹிப்நாட்டைஸ் செய்ய முடியுமா…?” எனக் கேள்விகளை அடுக்கியவளை பார்த்து
“நீங்க, உங்க கணவரை கூட்டிட்டு வந்தா பேசி பாக்கலாம்? என்ன நடந்திச்சுன்னு அவருக்குத் தெரிய வாய்ப்புகள் அதிகம் இருக்கு, அதே மாதிரி இது எண்பது சதவீதம் ஹிப்நாட்டிக்ஸா இருக்க வாய்ப்பு இருக்கு” எனத் தீபன் பேசியபடி அவளின் ரிபோர்ட்களை ஆராய்ந்து கொண்டிருந்தான்
“ஆனா ஹிப்நாட்டிக்ஸா இருந்தா இதுக்கு முன்ன அவரை நான் பாத்திருக்கணுமே, ஆனால் இப்ப தானே அவரை முதல் முறையா பாக்குறேன்” என மகிழினி சொல்ல
“உங்க கேஸ் கொஞ்சம் புரியாத புதிராகவே இருக்கு ஒரு கன்சல்டேசன்லையே , உங்களோட எல்லாக் கேள்விகளுக்கும் விடை கிடைச்சிறாது மகிழினி, இப்போதைக்கு நான் முன்ன கொடுத்த எந்த டேப்ளட்ஸையும் எடுக்க வேண்டாம்” எனத் தீபன் சொல்ல
“பட் டாக்டர், ஒரு ஸ்டேரஞ்சர் கூட இருக்குற எனக்கு, என்னோட குழப்பங்களுக்கு விடை தெரிஞ்சா மட்டும் தான் லைப்ல நான் அடுத்த டெசிஷன் எடுக்க முடியும்” மகிழினி பேசிய படி வெளியே பார்க்க அந்தக் கண்ணாடி அறையின் வெளியே நின்றிருந்த பிரகதீரனை பார்த்து குனிந்துக் கொண்டாள்
“இவர் தான் உங்க கனவு கணவனா..? ” ஆச்சரியமாய்த் தீபன் கேட்க
“அதான் வீடியோ காட்டினேன்ல டாக்டர் ” என்றவள் முகத்தை மறைத்துக்கொள்ள முற்பட
“நீங்க உள்ளே இருக்குறத வெளிய இருக்குறவங்களால பார்க்க முடியாது, அப்பறம் அந்த வீடியோ க்ளீயரா இல்லை, அதான் எனக்குச் சரியா தெரியலை, பை தி வே அவர் என்னோட ப்ரெண்ட் தான்” என்றவனின் பதிலில் அதிர்ந்து எழுந்து நின்றாள் மகிழினி
“நீங்க ஷாக் ஆகாதீங்க, பிரகாக்கு ஹிப்னாட்டிக்ஸ் தெரிய வாய்ப்பில்லை மகிழினி, அவன் என்னோட ஸ்கூல் ப்ரெண்ட் தான், அவன் யூஜியே வேற டிபார்ட்மண்ட் தான் எடுத்தான், ஹிப்னாட்டிக்ஸ்ல அவனுக்கு ஆர்வமும் இல்லை, இதெல்லாம் ஏன் உங்க கற்பனையா இருக்கக் கூடாது” எனத் தீபன் பேசிக் கொண்டே இருக்க
“ஓகே ஃபைன் நான் வேற டாக்டர் பாக்குறது தான் நல்லதுன்னு தோணுது” எனப் பேசியவளின் வார்த்தைகள் கோபமாய் வந்து விழ
“லுக் மகிழினி, நான் என்னோட பாயிண்ட் ஆப் வீயூவ சொன்னேன், ஒரே நாள்ல எதையும் சரி செய்ய முடியாது மகிழினி” எனத் தீபன் சொல்ல
“அதான் தெரியுதே டாக்டர் ப்ரெண்ட் மேல கரிசனம் பொங்கி வழியுறது, உங்களை மீட் பண்ண வச்சது கூட அவனோட ப்ளானா தான் இருக்கும்” எனப் பேசியபடி எழுந்து நின்றவளை பார்த்து
“நீங்க அவனை ஸ்டேரஞ்சரா பாக்குற வரை, உங்க குழப்பங்களுக்கு விடை கிடைக்காது மகிழினி, நீங்க எந்த டாக்டர் பார்த்தாலும் உங்களுக்குப் பதில் கிடைக்கப் போறதில்லை” என அவளின் ரிபோர்ட் நிறைந்த பைலை அவள் புறம் நீட்டினான் தீபன்
“அது என்னோட கவலை, உங்க ப்ரெண்ட் கிட்ட, என்னோட கேஸ் டீடைல்ஸ் டிஸ்கஸ் பண்ணாமல் இருப்பதே நீங்க எனக்குச் செய்யுற பெரிய உதவியா இருக்கும் ” எனப் பேசியவள் வெளியே செல்ல முற்பட
“மிஸஸ் பிரகதீரன், இந்த டேபிளிற்கு வந்த எந்தக் கேஸ் டிட்டைல்ஸூம் நூல் அளவு கூடக் கசியாது, நீங்க அதைப் பத்தி கவலைப் பட வேண்டாம்” எனச் சொன்ன தீபன் “உங்க ஹாண்ட் பேக்கை மறந்திட்டுப் போறீங்க “ என அவள் கை பையைச் சுட்டி காட்ட அவள் எடுத்து விட்டு வெளியே செல்லவும் பிரகதீரன் அறைக்குள் நுழையவும் சரியாக இருந்தது.
*******
“டேய் பிரகா எப்படி இருக்க..? “ எனத் தீபன் எழுந்து நிற்க தன் முன் ஆறடியில் நின்றிருந்த தன் கணவனைப் பார்த்து உடனே விலகி நின்றாள் மகிழினி
“டேய் தீப்ஸ் டாக்டர் ஆகிட்டியா? உன்ன பார்த்து எவ்வளவு நாள் ஆச்சு, மஹி வா, ஷி இஸ் மை வொய்ப் டா” என அவன் சொல்ல
“ஓ.. உன்னோட வொய்ஃப்பா எனக்குத் தெரியாது டா” என அவன் மழுப்ப
“அப்பறம் மஹிக்கு என்ன ட்ரீட்மெண்ட் கொடுக்குற, மெடிக்கல் ரொக்கார்ட் கேட்டா ரிசப்ஷனிஸ்ட் ஆயிரத்து எட்டு ரூல்ஸ் பேசுறாங்க” எனப் பிரகதீரன் கோபமாய்க் கேட்க
“சரி நீங்க பேசிட்டு வாங்க நான் கார்ல வெய்ட் பண்ணுறேன் “ என மகிழினி எழுந்து நிற்க
“சிட் மகிழினி மேடம், நான் உங்க முன்னாடியே உங்க் ஹஸ்பண்ட் கிட்ட பேசிக்கிறேன், அது தான நல்லது?” எனச் சொன்ன தீபனை பார்த்து தயங்கிய படி நின்றாள் மகிழினி
“மஹி உட்காரு பேசிட்டுப் போகலாம்” எனப் பிரகதீரன் சொல்ல
“இல்ல தீரன் , நீங்க பேசிட்டு வாங்க “ எனச் சொன்னவளை அனிச்சையாய் அவள் கைகப்பிடிக்கப் போக
“டோன்ட் டச் மீ தீரன்” எனக் கூச்சலிட்டிருந்தாள் மகிழினி
“சாரி மஹி நான் வான்டடா பண்ணலை, ரியலி சாரி” எனத் தீரன் மன்னிப்பு கோர்வதைப் பார்த்தவுடன் தீபனால் உணர முடிந்தது ஹிப்னாட்டிஸம் இல்லை என்பதையும் பிரச்சனையில் இருப்பது மகிழினி மட்டுமல்ல பிரகதீரனும் தான் என்பதை அவனுக்குத் தெளிவாய் வெளிச்சம் போட்டுக் காட்டியது அங்கு நடந்த விசயங்கள்
“ஐ திங் போத் ஆப் யூ நீட் ட்ரீட்மெண்ட்” எனத் தீபன் சொல்ல,
“எக்ஸ்க்யூஸ்மீ நீங்க நிஜமாவே டாக்டர் தானே இல்லை, இவரோட நாடக கம்பெனில நீங்களும் ஒரு ஆளா“ எனத் தீபனை பாரத்து கத்தியவள்
“தீரன் என்ன நீங்க நிம்மதியாவே இருக்க விடமாட்டீங்களா?, என் நிழல் மாதிரி ஏன் என் பின்னாடி வந்திட்டே இருக்கீங்க, உங்களுக்கெல்லாம் என்ன தான் வேணும்?” எனப் பேசியவளை நெருங்கியவன்,
“இங்க பாரு மஹி நீ சாதாரண ஹாஸ்பிட்டல் வந்திருந்தா உன் பின்னாடி வந்திருக்க மாட்டேன், எதோ இன்டர்வீயூ வந்திருக்கன்னு நினைச்சி தான் வந்தேன், இங்க வந்து பார்த்தா நீ என்ன ட்ரீட்மென்ட் எடுத்திட்டு இருக்க இதைப் பத்தி அத்தைக்குத் தெரியுமா” எனத் தீரன் கேட்க
“அம்மாக்குத் தெரியாது, சீக்கிரமே தெரிஞ்சுரும்” என அவள் கோபமாய்ச் சொல்ல
“எப்படித் தெரியும்.? நீயே சொல்லப் போறியா” அவள் விழி பார்த்து அவன் கேட்க
“இல்லை அவங்களையும் ஹிப்நாட்டைஸ் பண்ணி தான வச்சிருக்க, அவங்களுக்கும் ட்ரீட்மென்ட் தேவை” எனச் சொல்ல மனம் வருந்தி நின்றான் மஹியின் தீரன்.
காதல் தேடும் மாயவனின்
மாய வலையில் வீழ்ந்து,
சுயம் தொலைத்து நிற்கும்
நட்சத்திரப் பெண்ணவள்…
அவள் மௌனத்தின் பின்னே
மறைந்திருக்கும் ரகசியங்களை
காலம் அவிழ்க்குமா…
அல்லது தீரனின் பாசப் பிணைப்பில்
அவள் மனம் கரையுமா?

