Loading

கந்தன் கேட்டரிங்கில் வேலை பார்க்கும் அத்தனை பேரும் ஜனனிக்கு உதவியாக வந்திருந்தனர்.

அத்தனை பேரும் உதவியதால் தான், கல்லூரி கேட்டுக்கொண்ட உணவுகளை நேரத்திற்குச் செய்து முடிக்க முடிந்தது. அவர்களோடு சேர்ந்து கந்தரூபனுக்கும் ஜனனி நன்றிக்கடன் பட்டிருக்கிறாள்.

கைநிறைய பணமும், மனம் நிறைய பாராட்டுகளும் அன்றைய நாளில் அவளைத் தரையில் நிற்கவே விடவில்லை… மகிழ்ச்சியாக இருந்தாள்.

வேலையை முடித்துவிட்டுப் பாத்திரங்களைச் சேகரித்து அலுவலகம் வந்து சேர மாலையானது.

தனது பாத்திரங்களையும் கந்தன் கேட்டரிங் ஆட்கள் கொண்டு வந்த பாத்திரங்களையும் பிரித்துச் சுத்தமாக விளக்கிக் கொடுத்தார்கள்.

அவர்கள் கேட்ட ஒரு நாள் வாடகைக்கு அதிகமாகவே பணத்தைக் கொடுத்தாள் ஜனனி. சிலர் வாங்கிக்கொண்டு கிளம்ப, சிலர் அவள் முன்னே வந்து நின்றனர்.

அவர்கள் நிற்கும் காரணம் புரியாமல் புருவங்களைச் சுருக்கி, அவர்களின் முகங்களைப் பார்த்தவாறு, “என்ன வேணும் உங்களுக்கு? பணம் பத்தலையா?” என அவர்களைக் காயப்படுத்தாதபடி கனிவாகக் கேட்டாள்.

“எங்களுக்கு நீங்க இங்க ஏதாவது வேலை போட்டுத் தர்றீங்களா? நாங்க ஓரளவுக்குச் சமைப்போம்… எங்களை வேணாம்னு சொல்லாதீங்க, ஏதாவது வேலை கொடுங்க…” எனத் தன் வயதை மீறிய மனிதர் அவளிடம் இறைஞ்சிக் கேட்க, இவளுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது.

அவரைத் தொடர்ந்து இன்னும் இரண்டு மூன்று பேர் நின்று வேலை கேட்க, அவர்களுடன் வந்த மற்றவர்கள் அதிர்ந்து போனார்கள்.

“என்ன பேசுற மாடசாமி! கந்தன் ஐயாவுக்கு நீ துரோகம் பண்ணப்போறியா?” என ஆறுமுகம் கேட்கவும்,

“விசுவாசியா இருந்தா மட்டும் மாசத்துல எல்லா நாளும் என் வயிறு நிறைஞ்சிடுமா? கையில நாலு காசு இல்லாம தினம் தினம் என் மருமககிட்டயும் மகன்கிட்டயும் அவமானப்படச் சொல்றியா? அதைவிட என் பேத்தி கேட்குற தின்பண்டத்தை வாங்கிக் கொடுக்கக்கூட வக்கு இல்லாம இருக்கேன்யா நானு! எத்தனை மாசம் ஆச்சு கையில சம்பளத்தைக் கொடுத்து! ஆர்டர் வரட்டும் தர்றேன்னு சொல்றான். அதுவரைக்கும் பசி கொடுமையில வாடச் சொல்றியா? ஐயா இருந்த வரைக்கும் விசுவாசமா இருந்தது போதும், இனி என்னால அங்க வேலை பார்க்க முடியாது! என்னை விட்டுடு ஆறுமுகம்,” என்று கையெடுத்துக் கும்பிட்டவர், அப்படியே திரும்பி ஜனனியையும் பார்த்து,

“வேலை இருந்தா கொடு தாயி… உன் மூலமா மானத்தோட இருக்குற காலத்துல வாழ்ந்துட்டுப் போயிடுறேன்,” என்று கெஞ்ச, இவளுக்குக் கண்கள் கலங்கிவிட்டது. பக்கவாட்டில் இருந்த நந்துவைப் பார்த்தாள்.

அவனும் அதே நிலையில்தான் அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தான். அங்கே அவளிடம் வேலை கேட்டு நின்ற ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கஷ்டம் இருந்தது.

சிலர் தைரியமாக முடிவு எடுத்து அவளிடம் வேலை கேட்டு நின்றனர். மற்றவர்களுக்கோ வாங்கிய கடனுக்காக அங்கே இருக்க வேண்டிய சூழ்நிலை. சிலரோ தைரியமாக வெளியே வந்தனர். ‘காசு கிடைச்சாதானே அவன்கிட்ட வாங்கின கடனை அடைக்க முடியும்…’ என்று அவளிடம் வேலை கேட்டு நின்ற கூட்டத்துடன் நின்றனர். சிலர் இருமனதாக இருந்தனர்; அதில் ஆறுமுகமும் அடக்கம்.

“எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலைங்க. உங்களுக்கு வேலை இல்லைன்னு சொல்ல மாட்டேன், வேலை இருக்கு. ஆனா, ஒரு நாள் உதவிக்குக் கூப்பிட்ட நான், உங்க மூளையைச் சலவை செஞ்சு என்கிட்ட வேலை பார்க்கச் சொன்னபடி ஆகிடுமே! உங்க முதலாளியைப் பத்தி உங்களுக்குத் தெரியாதா?” எனக் கேட்டதும் எல்லாரும் தலைகுனிந்து நிற்க, இவளுக்குச் சங்கடமாகத்தான் இருந்தது. அவர்களது சூழ்நிலையையும் பார்க்க வேண்டுமல்லவா?

எல்லாரும் அமைதியாக இருக்க, நந்தன் தான் குரலைச் சீர் செய்தபடி பேசத் தொடங்கினான்.

“வேலை கேட்டு நிற்கிற உங்களுக்கு வேலை இருக்கு! ஆனா ஒரு விஷயம் நீங்க பண்ணனும்!” என்றதும் அனைவரும் அவனை ஆர்வமாகப் பார்த்தார்கள்.

“அந்தக் கந்தரூபன்கிட்ட, ‘இனி நான் வேலை பார்க்க முடியாது, என்னோட கஷ்டத்துக்காகத்தான் நான் வேலையை விட்டுப் போறேன்’னு சொல்லிட்டு வாங்க… நாங்க உங்களை ஏத்துக்குறோம். இத்தனை வருஷமா உங்களை வேலைக்கு வச்சுப் பார்த்துக்கிட்ட அந்த கந்தன் சாருக்காகவாவது மரியாதையா சொல்லிட்டு வாங்க…” என்றான்.

அவர்களும் யோசனையோடு ‘சரி’ என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர்.

“என்ன நந்து இப்படிச் சொல்லிட்ட? அந்த கந்தரூபன் நம்மளைத் தானே தப்பா நினைப்பான்? சரியான நேரத்துக்கு உதவி பண்ணினானே! அந்த நன்றி இல்லாம இவங்களை வேலைக்கு வச்சா அவன் என்ன நினைப்பான்?”

“அதுக்காக இவங்களை பசி பட்டினியில விட்டு வைப்பான், நீயும் அதையே செய்யப்போறியா? அவன் செஞ்ச உதவிக்கு நன்றிக்கடனாகத்தான் அவன்கிட்ட சொல்லிட்டு வரச் சொன்னேன்… எனக்கு அது தப்பா தெரியலை! இவங்களை வேலைக்கு எடுக்கலாம்… நமக்கு வர்ற ஆர்டர்களுக்கு ஆட்கள் தேவைப்படுறாங்கதானே! எப்படி இருந்தாலும் ஆட்களை எடுக்கத்தானே போறோம்? இவங்களா இருந்தா ஓகே தானே?”

அவளும் எதுவும் பேசவில்லை… வேலை பார்க்கச் சென்றுவிட்டாள். இரவு தாமதமாக இல்லம் வந்தனர் இருவரும். அவர்களுக்காகச் சமைத்து வைத்திருந்தார் வள்ளி!

சாப்பிட்டு முடித்ததுமே பெரியவர்கள் உறங்கச் செல்ல, இவர்களோ கணக்கு வழக்குகளைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

கடுகு வாங்கிய விலையைக் கூட விட்டுவைக்காமல் எழுதி வைத்திருந்தாள் ஜனனி.

வரவு செலவு பார்த்த கணக்கும், கையில் இருக்கும் இருப்பின் கணக்கும் ஒன்றாக இருக்க, இருவரும் புன்னகைத்துக் கொண்டனர்.

“பரவாயில்லை நந்து, எங்கேயும் பணத்தை இழக்கலை, கூடவும் வாங்கலை… எல்லாமே சரியா இருக்கு!”

“ம்ம்… இந்தக் கணக்குப்பிள்ளையோட வேலை அப்படி!” எனச் சட்டையைப் பின்னுக்குத் தள்ளிவிட்டுப் பெருமையாகச் சொல்ல,

அவளும், “அதென்னவோ உண்மைதான்… நீ இல்லைன்னா இந்த ஆர்டரை கேன்சல் தான் பண்ணிருப்பேன். என்னால தனியா செஞ்சிருக்க முடியுமான்னு தெரியலை! தேங்க்ஸ் நந்து,” என்றாள்.

“அப்படி இல்லைடி, உன்னால தனியா பண்ணிருக்க முடியும்… ஆனா என்னைப் போல ‘உன்னால முடியும்’னு யாராவது சொல்லியிருந்தால் கண்டிப்பா நீ தனியா இருந்து இதைப் பண்ணிருப்ப! நான் என்கரேஜ் (Encourage) தான் பண்ணேன் அன்னம்மா! நீ என்னை பெருசா பில்டப் பண்ணிச் சொல்லாதே!”

“நான் பில்டப் பண்ணலை, உண்மைதான் சொன்னேன். என்கரேஜ் பண்ணியிருந்தாலும் செஞ்சிருக்க மாட்டேன். என் சக்திக்கு மீறியதுன்னு மறுத்திருப்பேன். ஏன், இப்பக்கூட இதுல ஒரு வேலையும் நான் செய்யலை! என்னை நீ இன்னைக்கு ஒரு வேலைகூட செய்ய விடலை! கருவேப்பிலையைக் கூடக் கிள்ளிப் போடலை! மேற்பார்வை பார்க்க வச்சுட்டு நீதான் அத்தனையும் பண்ணின! கண்டிப்பா உன் இடத்துல இருந்து என்னால… ப்ச், வாய்ப்பே இல்லைடா,” என்றாள் உதட்டை வளைத்து.

அவளைப் பார்த்துக் கொண்டிருந்தவன், “அதே போலத்தான் அன்னம்மா! நீ இல்லாம என் வாழ்க்கையை வாழ முடியும். ஆனா உன் இடத்துல வேற ஒருத்தியை வச்சு என்னால இந்த வாழ்க்கையைக் கடந்திட முடியாது. நீ வேணும்டி… என்னோட நல்லது கெட்டதுல நீ வேணும்! ‘என்னடா வாழ்க்கை இது’ன்னு சலிச்சுப் போய் வாழ்ந்த எனக்கு நீ மிகப்பெரிய ஊக்கம்டி! உன் கூடப் பேசவே ஒவ்வொரு விடியலையும் எதிர்பார்க்கிறேன். நீ தூங்கப் போறேன்னு சொல்லும்போது, உன்னை என்னோட அணைச்சுட்டுத் தூங்குறது போலக் கற்பனையில்தான் என்னோட ஏகாந்த இரவைக் கழிப்பேன். நீ சின்னுக்குச் சோறு ஊட்டுறேன், அவனை ஸ்கூலுக்குக் கிளப்பினேன்னு மெசேஜ் அனுப்பும் போதெல்லாம், கற்பனையில எனக்கு நீ ஊட்டிவிடுறது போல, என்னோட சட்டை பட்டனை மாட்டி விடுறது போலக் கற்பனை பண்ணுவேன்டி. நீ வீட்டுல பண்ணினதாச் சொல்ற ஒவ்வொரு செயல்லயும் நானும் உன் கூட இருக்கிறதா கற்பனைப் பண்ணிப் பார்த்துப்பேன். அந்த கற்பனைதான்டி என்னை இத்தனை நாள் உயிர்ப்போட வச்சிருக்கு…” என்று தலைகுனிந்தபடி சொன்னவன் நிமிர்ந்து பார்க்க, அவள் அவனையேதான் பார்த்திருந்தாள்; கண்கள் கலங்கியிருந்தது.

“இப்போ கூட நான் எப்படித் தூங்குவேன் தெரியுமாடி?”

“உன்னோட அந்த மெத்தையில, உன் நெஞ்சுல முகம் புதைச்சு, குழந்தையைப் போல இறுக்க அணைச்சுத் தூங்குறது போலத் தலையணையை அணைச்சுட்டுத்தான் தூங்குறேன். முடியலைடி… நீ இல்லாத தனிமை ரொம்பக் கொடுமையா இருக்கு, நரகமா இருக்கு! எனக்கு ஒரு வாய்ப்பு கொடுடி… நிச்சயமா உன்னையும் சின்னையும் சந்தோஷமாப் பார்த்துப்பேன். உடனே ஏத்துக்கச் சொல்லலை, நல்லா யோசிடி. இன்னும் நமக்கு டைம் இருக்கு, வயசு இருக்கு. நல்லா யோசிச்சு ஒரு முடிவைச் சொல்லுடி. நான் ரொம்ப நாளா உன் பதிலுக்காகக் காத்திட்டு இருக்கேன்… காத்துட்டும் இருப்பேன். பை டி! லவ் யூ,” என்று எழுந்து அவனது வீட்டிற்குச் சென்றுவிட்டான்.

இவளோ சிலை போல அமர்ந்தவள், மகனின் முனகல் சத்தத்தில் எழுந்து கதவைச் சாத்திவிட்டு, அறைக்குள் அவனை அணைத்துக்கொண்டு கண்களை மூடினாள்.

உறக்கம் அவள் கண்களைத் தாமதமாக வந்தடைய, அதுவரையிலும் அவன் சொன்னதைத் தான் கற்பனை செய்து பார்த்தாள். உதட்டில் அவளையும் அறியாமல் புன்னகை (முறுவல்) பிறந்தது.

கண்களை மூடிப் படுத்திருந்தவளின் கழுத்தில் ஏதோ ஊர்வது போலத் தோன்ற, விழிகளைத் திறக்காமல் கண்களை மூடியே இருந்தாள். கழுத்திலிருந்து மெல்ல நெஞ்சாங்கூட்டை அடைவது போல இருக்க, சட்டென விழிகளைத் திறந்து மெல்லப் பார்வையைத் தாழ்த்திப் பார்க்க, தன் மீசையால் அவளது நெஞ்சாங்கூட்டில் குறுகுறுப்பு செய்தான் அவன்.

அவளோ வெட்கத்தில் முகம் சிவக்க, அவன் மேலும் முன்னேறி இதழை மென்மையாக மூடினான். மீண்டும் கீழிறங்கித் தனது இதழ்களால் அவளை ஆளத் தொடங்க, விழிகளைத் திறக்காமல் அவனது தேகத்தை வருடினாள்.

மெல்ல வலி கூட்டி அவளைத் துடிக்க வைத்து, சமாதானமாய் பல முத்தங்களை வாரி இறைத்து, அவளை ஆள்வதை நிறுத்தாமல் முன்னேற, முனகல் இசையுடன் அழகான கூடலை நிகழ்த்திக் கொண்டிருந்தான் அவன்.

அப்படித்தான் அவளது கற்பனை, நீண்ட பெரும் கனவாக மாற, அவளது ஏகாந்தக் கனவில் அவனோடு அவளும் இணைந்தாள்.

Click on a star to rate it!

Rating 4 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
2
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்