Loading

“என் ஃப்ரண்ட் பேர் காரிகா. அவ எப்பவும் சைலண்ட் டைப். யார்கிட்டயும் அவ்வளவாகப் பேச மாட்டா. ஆனால் அவ பொறந்ததும் அவங்க வீட்டில் துரதிர்ஷ்டம் தான் இருக்குன்னு அவ பேரன்ட்ஸ் சொல்வாங்களாம். அதனாலேயே அவளை எப்பவும் திட்டிட்டே இருப்பாங்க. அவ அப்பாவுக்கும், அம்மாவுக்கும் அவ ஒரு துரதிஷ்டசாலியானப் பொண்ணுன்னு நினைப்பு”என்று தோழியைப் பற்றிய அறிமுகத்தைச் சொல்லி முடித்து இருந்தாள் ஆரா.

 

அதை அதுவரையில் அமைதியாக கேட்டுக் கொண்டு இருந்த அபூர்வன்,”அச்சோ பாவம்! தன்னோட சொந்த வீட்டு ஆளுங்களே தன்னைப் பத்தி இப்படி நினைக்கிறது ரொம்ப கஷ்டமான விஷயம் தான்!”என்று மனைவியின் தோழிக்காக தனது வருத்தத்தைத் தெரிவித்தான்.

 

“ஆமாங்க. அதே போல் அவங்க அவளை நல்ல ஸ்கூலில் கூடச் சேர்த்து விடலை. அந்த ஸ்கூலில் படிக்கும் போது ஒருத்தன் அவகிட்ட தப்பாக நடக்கப் பார்த்தான். அதை வீட்டில் சொன்னதுக்கு நீ பொய் சொல்ற ஸ்கூலுக்குப் போகாததுக்கு உனக்கு வேற ரீசன் கிடைக்கலயான்னுக் கேட்டாங்களாம்”என்றதுமே, 

 

“ச்சே! என்ன மனுஷங்களோ!”என்று காரிகாவின் பெற்றோரை எண்ணி அருவருப்பாய் உணர்ந்தான்.

 

“ம்ஹ்ம், அதுக்கு அப்பறம் அவ கஷ்டப்பட்டு ஸ்கூல் படிச்சு முடிச்சு, காலேஜில் இன்ஜினியரிங் படிக்கலாம்னு சேர்ந்தாள்” என்றவுடன்,

 

அதில் இடையிட்ட அபூர்வனோ,”அவங்க வீட்டில் காலேஜ் மட்டும் எப்படி ஈசியா சேர விட்டாங்க?”என்று மனைவியிடன் தனது சந்தேகத்தைக் கேட்டான்.

 

“அதுவா? அவளுக்கு மெரிட்ல சீட் கிடைச்சுருச்சு. அப்போ ஃபீஸ் கம்மி தானே? அதனால் அவங்க கண்டுக்கல”என விளக்கம் அளித்தாள்.

 

“ஓகோ. சரி, சரி”மேலே சொல் என்பதைப் போல் சைகை செய்தான்.

 

“அதே மாதிரி அப்போ தான் நானும், அவளும் ஃப்ரண்ட்ஸ் ஆனோம். காலேஜ் படிச்ச அப்போ அவளுக்கு நிறையப் புரபோசல்ஸ் வந்துச்சு. ரொம்ப அழகான பொண்ணுங்க அவ. ஆனாலும் அதை நினைச்சு அவளுக்குத் தலைக்கனமே இருக்காது; ரொம்பச் சாதாரணமாக இருப்பாள்”என்று காரிகாவின் நல்லக் குணநலன்களைக் கணவனுக்கு விவரித்தாள். 

 

அதற்குள் மணிப் பத்தைத் தாண்டி விட்டதால்,”ஆரா! மணியைப் பாரு! பத்து ஆகிடுச்சு. உன் கதையும் என்னோட ஆர்வத்தைத் தூண்டி விட்ற மாதிரி ஆகத் தான் இருக்கு. ஆனால் நாளைக்கு நான் ஆஃபீஸூக்கு சீக்கிரம் போகனும்ல? அதனால் தூங்கலாமா?”என்று பாவமாகக் கேட்டவனை முறைக்கக் கூட முடியவில்லை ஆராவால்.

 

“நான் எவ்வளவு பொறுமையாக கதைச் சொல்லிட்டு இருக்கேன். நீங்கத் தூக்கம் வருதுன்னு சொல்றீங்களே? உங்களுக்குக் கொஞ்சம் கூட என் மேல் பாசமே இல்லங்க”என்று அழுவது போல் பாசாங்கு செய்யவும்,

 

அதைக் கண்ட அபூர்வனுக்கு அவளது பாசாங்கு அவ்வளவு அழகாய்த் தெரிய,

மனைவியின் கன்னத்தில் இதழ் பதித்தவன்,”என் செல்லக் குட்டிம்மாவே! நீயும் தான் காலையில் இருந்து இப்போ வரைக்கும் வேலைப் பார்த்து இருப்ப. உனக்கும் களைப்பாக இருக்கும்! நீயும் நல்லா தூங்கு! நாளைக்கு முழுக் கதையையும் கேட்க முயற்சிப் பண்றேன்” என்று அவளைச் சமாதானம் செய்தான்.

 

ஆனால் அவளோ,”அப்ப கூட நீங்க முயற்சித் தான் பண்றேன்னு சொல்றீங்கள்ல?”கணவனிடம் குறைபட்டுக் கொண்டாள் ஆரா.

 

அதில் அவனுக்குச் சிரிப்புத் தான் வந்தது. தன் மனையாளின் இந்தச் சின்ன, சின்ன அழகானப் பாவனைகளை எப்போதுமே ரசிக்கத் தவற மாட்டான்.

 

“இல்லம்மா. அவங்க வாழ்க்கை வரலாறு முழுசையும் சொல்லப் போற! அது சின்னதாகவா இருக்கும்? பெருசாகத் தானே இருக்கும்? அப்போ தான் அதைப் பொறுமையாக கேட்கனும்ல? அதான், கொஞ்சம், கொஞ்சமாகப் பொறுமையாக கேட்டு முடிச்சு அவங்களுக்கு என்னாலான உதவிப் பண்ணுவேன்ல?”என்று அவன் லாஜிக்காகப் பேசியவுடன், அதனைச் சரி என்று ஒப்புக் கொண்டு விட்டாள் ஆரா. 

 

“நீங்க சொல்றதும் லாஜிக் ஆகத் தான் இருக்கு.அப்படியே செய்வோம். இப்போ தூங்குங்க”என்றவளோ, 

 

அவனது நெற்றியில் மென்மையான முத்தம் ஒன்றைப் பதித்து விட்டு அவனை அணைத்துக் கொண்டுத் தானும் அருகில் படுத்துக் கொண்டாள்.

 

வழக்கம் போலவே, மனைவியின் இடது காதுக்கு மிக அருகில் இருந்த மச்சத்தில் இதழ் பதித்தவன் கழுத்தில் முகம் புதைத்துக் கொண்டு உறங்கினான் அபூர்வன்.

 

மறுநாள் காலையில் குளித்து முடித்து வந்த ஆராவிற்குக் கணவன் இன்னும் உறங்கிக் கொண்டு இருப்பது தெரிய வந்ததுமே,”இவர் இன்னும் எழுந்திரிக்காமல் தலகாணியைக் கட்டிப் பிடிச்சுட்டுக் கனவிலேயே டூயட் பாடிக்கிட்டு இருக்காரு போலவே!”என்று கூறிக் கொண்டே அபூர்வனின் அருகில் சென்று அவனின் தலையைக் கோதி விட்டு, 

 

“அபூ எழுந்திரிங்க. உங்களை எழுப்புற கஷ்டத்தைக் கூட எனக்குத் தர மாட்டேன்னு சொன்னீங்களே? இப்போ இப்படி தூங்கிட்டு இருக்கீங்க!”என இவள் அவ்வாறு கூறியது தான் தாமதம் உடனே எழுந்து விட்டிருந்தவனோ, 

 

“இது தான் கடைசி தடவை! இனிமேல் இப்படி நடக்காது! பிராமிஸ்”என்று அவளுக்கு வாக்குக் கொடுத்தான் அவளது கணவன்.

 

“அச்சோ அபூ! நான் சும்மா சொன்னேன். நான் எழுப்பின உடனே நீங்க எப்பவுமே எழுந்திரிச்சுடுவீங்கனு எனக்குத் தெரியும்”எனப் புன்னகைத்த மனைவியின் பிரகாசமான முகத்தைப் பார்த்ததும் அவனுக்கும் புத்துணர்ச்சித் தொற்றிக் கொண்டது.

 

உடனே எழுந்து அரை மணி நேரத்தில் கிளம்பி வந்ததைக் கண்டதும் சமைத்த உணவைப் பாத்திரங்களில் எடுத்துக் கொண்டு வந்து சாப்பாட்டு மேசையில் வைத்தாள் ஆரா.

 

“தோசை, நிலக்கடலை சட்னி, இட்லிப் பொடி இருக்குங்க. உங்களுக்கு எது வேணுமோ, அதை நல்லா சாப்பிடுங்கள்” என்றவளோ, அவனுக்கு உணவைப் பரிமாறத் தொடங்கினாள். 

 

தன் கணவனுக்கு உணவைப் பரிமாறும் பொழுதெல்லாம் மிகவும் கவனமாக இருப்பாள் ஆரா.

 

ஏனெனில் அவன் சரியாகச் சாப்பிடுவதே வீட்டில் தான். மதிய உணவையும் முடிந்த அளவிற்கு அலுவலகத்திற்குக் கொண்டுப் போய்க் கொடுத்து விட்டு வருவாள்.

 

“நிலக்கடலைச் சட்னி சூப்பராக இருக்கு ஆரா”என அவளைப் பாராட்டி விட்டு, மேலும் இரண்டுக் கரண்டிச் சட்னியை ஊற்றி அதில் தோசையைத் தோய்த்துச் சுவைத்தான் அபூர்வன்.

 

அதில் மெலிதாகப் புன்னகைத்து விட்டு அவன் உணவுண்டு முடிக்கும் வரை அருகிலிருந்து கவனித்துக் கொண்டாள்.

 

சில நிமிடங்கள் கழித்து, அலுவலகம் செல்லத் தயாராகி விட்டு,”நான் ஆஃபீஸூக்குப் போய்ட்டு வர்றேன் புஜ்ஜி. நீ பத்திரமாக இரு. ரெஸ்ட் எடு. சரியா? பார்த்துக்கோ”என்று அவளிடம் கூறி விடைபெற்றுக் கொண்டான் அபூர்வன்.

 

அவன் சென்றதும் வீட்டை ஒழுங்குபடுத்திய ஆராவிற்கு ஏனோ இன்று மனம் சஞ்சலமாக இருந்தது.

 

ஏதோ அவளது மனம் கஷ்டப்படும் படி ஒரு விஷயம் நடக்கப் போவதாக உள்ளுணர்வு உரைப்பதை அவதானித்தாள்.

 

அந்தச் சிந்தனையில் உழன்று கொண்டு இருந்த சமயத்தில் அழைப்பு மணி ஒலித்த சத்தம் அதிகமாக கேட்க,”யாரது இப்படி காலிங் பெல்லை அடிக்கிறாங்க? சுவிட்ச்சையே உடைச்சுடுவாங்க போலவே!”எனக் கடுப்புடன் மொழிந்து விட்டு வந்து வீட்டின் கதவின் குமிழ் வழியாக யாரென்றுப் பார்த்தாள்.

 

அங்கே நின்றிருந்தது வேறு யாருமில்லை அபூர்வனின் தாயார் நீலவேணி தான்.

 

அவரைக் கண்டதும் உடனே கதவைத் திறந்து,”வாங்க அத்தை”என்று வெகு நாட்கள் கழித்து தங்களைப் பார்க்கத் தன்னுடைய மாமியார் வந்திருப்பதைக் கண்டு ஆராவிற்கு மகிழ்ச்சித் தாளவில்லை.

 

ஆனால் அவரோ உள்ளே செல்லாமல் வெளியே நின்று தன் மருமகளைக் கூர்மையாகப் பார்த்துக் கொண்டு இருந்தார்.

 

அதைக் கவனிக்கத் தவறியவளோ,”உள்ளே வாங்க அத்தை. உங்களைப் பார்த்து ரொம்ப நாளாச்சு. உங்க கூட மாமா வரலையா?”என்று அவரிடம் பூரிப்புடன் அவரை வரவேற்றாள் ஆரா.

 

ஆனால், அவர் தன் முகத்தில் எந்தவித உணர்ச்சியும் காட்டாமல் இவளைக் காட்டமாகப் பார்த்துக் கொண்டு இருந்தார்.

 

அதை இப்போது தான் கவனித்தவளாக,”ஏன் அத்தை ஒரு மாதிரி இருக்கீங்க?”என்று அவரிடம் வினவிவளுக்கு மாமியாரின் முகமாறுதல் நெருடலைக் கொடுத்தது.

 

“அதைப் பத்தி உள்ளே வந்து சொல்றேன்”என்றவரின் குரலில் ஏனோ ஒரு பேதத்தை உணர்ந்திருந்தாள் ஆரா.

 

ஆனால் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது.

 

அவர் வயதில் பெரியவர்! ஆதலால், அவர் தன்னை எவ்வளவு திட்டினாலும், மனம் நோகப் பேசினாலும் பரவாயில்லை, தாங்கிக் கொள்ளலாம் என்ற நோக்கத்தில் அவர் உள்ளே நுழைந்ததும்,”ஹார்லிக்ஸ் செஞ்சுக் கொண்டு வரவா அத்தை? உங்களுக்கு அது தானே விருப்பம்?”என்று தன்னால் முடிந்தளவு அவரைப் பொறுமையாகக் கையாள நினைத்தாள் ஆரா.

 

ஆனால் அங்கிருந்த சோபாவில் பதவிசாய் அமர்ந்த நீலவேணியோ,”ஹார்லிக்ஸ் எல்லாம் வேண்டாம். குழந்தை தங்கிருக்கா?”என்று கேட்கும் பொழுதே அவரது குரலில் இருந்த வேதனையை அவளால் தெள்ளத் தெளிவாக உணர முடிந்தது.

 

அதற்கு அவளோ விரக்தியாக,”இல்லை அத்தை”எனக் கூறி விட்டுக் கூனிக் குறுகிப் போய் நின்றாள்.

 

“எதுக்கு இப்போ தப்பு செஞ்சவ மாதிரி தலை குனிஞ்சு நிக்குற? நிமிர்ந்து நில்லு!”என்று அதட்டி அறிவுறுத்தினார்.

 

அவரது இந்த அதட்டல் ஆராவிற்கு விசித்திரமாய்த் தெரிந்தாலும்,”சரிங்க அத்தை” என்று நிமிர்வாக நின்றாள்.

 

“இங்க வந்து உக்காரு”என்று அவளைத் தன் அருகில் அழைத்து அமரச் செய்து, 

 

“நான் ஏதோ ஆதங்கத்தில் பேசினால் நீங்க ரெண்டு பேரும் தனியாக வந்துடறதா? உங்க ரெண்டு பேரையும் விட்டால் நாங்க எங்கப் போக?”என அழுதுகொண்டே கூறிய மாமியாரின் தோளில் ஆதரவாகத் தன் கரத்தைப் பதித்து,

 

“அத்தை! நீங்க இல்லாமல் நாங்களும் எப்படி இருப்போம்? அவர் வந்ததும் நாம பேசலாம். நாம எல்லாரும் மறுபடியும் ஒன்னாக இருக்கலாம்னு சொன்னால் அவருக்கும் சந்தோஷமாகத் தான் இருக்கும்”என்று அவருக்குத் தைரியம் அளித்தாள் மருமகள்.

 

நீலவேணியும், நாச்சிமுத்துவும் தங்கள் மகன் அபூர்வன் மற்றும் மருமகள் ஆராவைப் பிரிந்து இத்தனை மாதங்கள் இருந்து விட்டாலும், இப்போது அவர்களால் இதற்கு மேல் மகன் மற்றும் மருமகளைப் பிரித்து வைத்துப் பார்க்க முடியவில்லை.

 

குழந்தைப் பிறக்கவில்லை என்ற ஒரே காரணத்திற்காக மருமகளை ஒதுக்கி வைக்க எண்ணியவர்களுக்குத் தங்களது மகனும் தங்களிடமிருந்து பிரிந்து செல்வான் என்று எதிர்பார்க்கவில்லை.

 

அதற்குள் அவனுக்கு எங்கள் இருவரின் மேலிருந்த பாசம் இவளுக்குக் கிடைத்து விட்டதோ! மகன் தங்களுக்குக் கொடுத்த முதலிடத்தை மனைவிக்குக் கொடுத்து விட்டானோ! என்று கலங்கிப் போனார் நீலவேணி.

 

ஆனால், நாச்சிமுத்து தான், அவருக்கு உரிய போதனைகளை வழங்கி,’நம் மகன் உன் இடத்தை யாருக்கும் கொடுக்க நினைக்க மாட்டான். ஏனென்றால் அவன் தாய் மற்றும் தாரம் இருவரையும் விட்டுக் கொடுக்க மாட்டான். குழந்தை இன்னும் வரவில்லை என்றால் அதற்கு அவனும் தானே பொறுப்பு! அதை நினைத்துப் பார்க்காமல் ஆராவை மட்டும் திட்டுவதில் என்ன நியாயம்? என்றக் கோபத்தில் தான் அபூர்வன் வீட்டை விட்டு வெளியேறி இருந்தான்!’என்று தங்களது மகனின் மனதைக் கணித்துக் கூறினார் நாச்சிமுத்து.

 

அதைச் சரியாகப் புரிந்து கொண்டு இனிமேலும் தாமதிக்காமல் உடனே தங்கள் மகன் மற்றும் மருமகனைப் பார்க்க வந்து விட்டார் நீலவேணி.

 

“சரிம்மா. எனக்கு ஹார்லிக்ஸ் போட்டுக் கொண்டு வா”என்று அந்தச் சோபாவில் சாய்ந்து அமர்ந்தவர் மருமகள் வீட்டை வைத்திருக்கும் நேர்த்தியைக் கண்டுப் பெருமை அடைந்தார்.

 

இவ்வளவு நாட்கள் மகனையும், மருமகனையும் பிரிந்து இருந்ததை எண்ணி நிஜமாகவே வருத்தம் கொண்டார் நீலவேணி. 

 

இருவரையும் தங்கள் இல்லத்திற்கே அழைத்துச் செல்ல வேண்டும் என்றும், மருமகள் கருவுற்றாலும், இல்லை என்றாலும் அவளைத் தன் மகள் போல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற முடிவோடு தான் இங்கே தற்போது விஜயம் செய்து இருக்கிறார். 

 

                – தொடரும்

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்