Loading

அத்தியாயம் 6

குளுகுளு ஏசியின் குளுமையும், வெகு நேரமாய் ஒரே இடத்தில் அமர்ந்ததிலும் நிவேதனுக்கு உறக்கம் கண்ணைச் சுழற்றியது.

இத்துடன் பத்தாவது கொட்டாவியை ஆரம்பித்தவனை ரித்திகா முறைத்தாள்.

கன்னத்தில் கை வைத்து அமர்ந்திருந்த கண்மணிக்கும், கல்லூரியே பரவாயில்லை என்ற எண்ணமே வந்தது.

“உன்னப் பார்த்து எனக்கும் கொட்டாவி வருதுடா அண்ணா! இந்த பைலைப் பார்த்து முடிச்சிட்டியா?” ரித்திகா கடுப்பாகக் கேட்க,

“ம்ம்… மிஷினோட சேல்ஸ் விவரம், எப்படி நம்ம மார்க்கெட்டிங் பண்றோம்னும் இருக்கு.” எனக் கண்ணைக் கசக்க, “குட்! இப்ப இதுல இருந்து யாஷ் உங்கிட்ட குவெஷ்டின் கேட்பானாம்… ரெடியா இருந்துக்க.” என்றதும் உறக்கமே கலைந்து போனது அவனுக்கு.

“எதே? நான் என்ன ஸ்கூலுக்கா வந்திருக்கேன்…” என நிமிர்த்திய நெஞ்சை வேக நடையுடன் உள்ளே வந்த யாஷ் பிரஜிதனின் வரவில் தளர்த்திக் கொண்டான்.

கண்மணியும் திருதிருவென விழித்தபடி, “என்கிட்டயுமா?” எனப் பரிதாபமாகக் கேட்க, “மே பி…” எனச் சிரிப்பை அடக்கினாள் ரித்திகா.

நிவேதன் கையில் இருந்த பைலைப் பிடுங்கிய யாஷ், அனைத்தும் தமிழில் இருந்ததைக் கண்டு ரித்திகாவிடம், “இங்கிலிஷ் வெர்ஷன் எங்க?” எனக் கேட்க அவளும் எடுத்துக் கொடுத்து விட்டு, “நீ இவனைப் பாரு, அங்க உன் வொய்ப் என்ன கூத்தடிச்சு இருக்கான்னு பார்க்குறேன்…” என்று விட்டு வெளியே சென்றாள்.

ஏதோ ஒரு பக்கத்தில் இருந்து விற்கப்பட்ட விற்பனை இயந்திரத்தைப் பற்றி வினவ, நிவேதன் தலையைச் சொறிந்தான்.

“நீ கேள்வி கேட்பன்னு தெரிஞ்சுருந்தா மனப்பாடம் பண்ணிருப்பேன் மச்சான்…”

“நீ மெமரைஸ் பண்ணத் தேவை இல்ல. அப்சர்வ் பண்ணனும்.”

“ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்?” நிவேதன் முணுமுணுத்ததில்,

அவன் உச்சி முடியைப் பற்றி நிமிர்த்தியவன், “மெமரைஸ் பண்ணுனா அது உன் மெமரி தாண்டி வெளில வரும்போது மறந்துடும். பட் நீ அப்சர்வ் பண்றது இங்க இருக்கும்… மறக்காது!” என்று அவன் நெஞ்சில் ஒரு விரலை வைத்துக் குத்திக் காட்ட,

“நான் கவனிச்சு தான் பார்த்தேன்…” என்றான் வேகமாய்.

“அப்போ நான் கேட்ட டீடெயில் சொல்லு?” யாஷ் ஒய்யாரமாய் டேபிள் மீது அமர்ந்து கொண்டு கேட்க, அவனை நிமிர்ந்து பரிதாபமாகப் பார்த்தான் நிவேதன்.

கண்மணியோ, “நான் வேற பைல் பார்த்துட்டு இருந்தேன். இல்லன்னா பிட்டு குடுத்து பாஸ் பண்ண வச்சுருப்பேன்.” என ஆதரவிற்கு வர,

“நீ பிட்டு கொடுத்துட்டா மட்டும்…” என யாஷ் நக்கலாய் சிரித்ததில் கண்மணி, “அதெல்லாம் பாஸ் பண்ணிடுவாரு அண்ணா…” என்று வேகமாய் கூறி விட்டு நாக்கைக் கடித்ததில், யாஷ் அவளை அரை நொடிக்கும் அதிகமாய் ஏறிட்டு விட்டு நிவேதனிடம் திரும்பினான்.

“நீ ட்ரெஸ் ஷாப்ல ஒர்க் பண்றப்ப… என்ன ஒர்க் பண்ணுவ?”

“என்ன வேலைன்னா, ட்ரெஸ்ஸு விப்பேன்…” என்றவனின் பதிலில் கடுமையாய் முறைத்தவன், “அது தெரியுது… பின்ன, ட்ரெஸ் கடையில டிக்கெட்ஸா சேல் பண்ணுவ? எக்ஸ்சாக்டா என்ன வேலை பார்ப்ப?” என்றான்.

“துணியை எல்லாம் மடிச்சு வைப்பேன். கஸ்டமர் கேட்குற கலர், துணி, ப்ராண்ட் எல்லாம் கேட்டதும் எடுத்துக் குடுப்பேன். எந்தத் துணி, என்ன விலை, காட்டனா நைலானா? அது குடோன்ல எங்க இருக்கு, கஸ்டமர்கிட்ட அதிகமா சேல்ஸ் ஆகுற துணி எல்லாம் தனியா ஸ்டாக் வைக்கிறதுனு எல்லாமே செய்வேன்…

நான் இருந்த ஏரியால, ஓரளவு பெரிய கடைன்னா அது அந்த ஜவுளிக் கடை தான். அங்கேயும் ஓரளவு கஸ்டமர்ஸ் வருவாங்க. ரெகுலர் கஸ்டமர்ஸும் இருப்பாங்க. புது டிசைன் வந்தா எடுத்து வைக்கச் சொல்லுவாங்க. அந்த மாதிரி கஸ்டமருக்கு நாங்க மெசேஜ் அனுப்பிக் கூட புது கலெக்ஷன் வந்துருக்குனு சொல்லுவோம். என் ஓனருக்கும் கூட என்னோட இந்த ஐடியா பிடிச்சிருந்துச்சு. என்னை மேனேஜர் ஆக்குறேன்னு சொல்லிருந்தாரு. நானும் அப்படி ஆகிட்டா, நிதாவை மேல படிக்க வைக்கலாம்னு இருந்தேன். ஆனா, அவரோட பையன் திடீர்னு கடையை எடுத்து நடத்துனதுல, இந்தத் தொழிலைப் பத்தியே தெரியாத அவரோட பிரெண்டை மேனேஜரா போட்டுட்டாரு… என் ஓனரும் மகனை எதிர்த்துப் பேசல. அதுனால தான் நாமளே துணிக்கடை ஆரம்பிக்கலாம்னு சொதப்பி வச்சுட்டேன்…” என்று உர்ரென்ற முகத்துடன் பேசியதில், கண்மணி உருகிப் போனாள்.

அவனுக்குப் பதவி உயர்வு கிடைத்தாலும், தங்கைக்காகவே சிந்தித்த அன்பில் அவள் உள்ளம் கனிந்தது.

“பிசினஸ் பண்ணனும்னு நினைக்கிறது தப்பில்ல. அதைச் சொதப்பாமல் செய்யணும்.” யாஷ் கடிந்து கொள்ள,

“நான் சொதப்புனதால தான், நிதாவை நீ பிடிவாதம் பிடிச்சுக் கல்யாணம் பண்ணவே முடிஞ்சுது மச்சான்!” நொடித்துக் கொண்ட நிவேதன் அமர்ந்திருந்த நாற்காலி கைப்பிடியின் மீது காலை வைத்த யாஷ் பிரஜிதன்,

“யா… தட் மே பி ரைட்! பட், உன்னால, உனக்காக அவள் நிறைய அழுதுருக்கா… ஐ ஹேட் தட்!” என்று ஆழ்ந்த குரலில் கூர்பார்வையுடன் கூறியதில் நிவேதனின் முகம் வாடி விட்டது.

—-

அதன்பிறகு, இரு வாரங்கள் கண்ணை மூடித் திறக்கும் நொடியில் கடந்தது.

எலைட் நிறுவனத்தினைப் பற்றிக் கரைத்துக் குடிக்கும் வரை யாஷ் அந்த ஐவரையும் விட்டபாடில்லை.

“உன் ஆலம்பனாவை டார்ச்சர் பண்ணாத அரக்கா…” அவனது சட்டை பட்டனைத் திருகிக் குழைந்த நிதர்ஷனாவை எல்லாம் ஒரு பொருட்டாக மதியாதவன், “ஆபிஸ்ல நீ கடன்காரியாவே இரு!” என்று கிண்டலாய் தள்ளி நிறுத்தினான்.

“இதெல்லாம் ஓவர்… பிரேக் டைம்ல மட்டும் வந்து வந்து கட்டிப் பிடிக்கிறதும் முத்தம் குடுக்குறதுமா இருக்க?”

“அது ப்ரீ டைம்ல… ஒர்க் டைம்ல இல்ல.” என்றவனை முறைத்துப் பார்த்தவள், “நீ டைம்பாஸ் பண்றதுக்கு வந்து வந்து உரசிட்டுப் போவியா… இனிமே ஆபிஸ்ல வந்து என்னைத் தொட்டுப் பாரு…” என மூச்சிரைக்கக் கோபம் கொள்பவள் அவனது பின்னைய அணைப்பில் பேச்சிழந்து போவாள்.

அத்தனை நாள்களும் ஐவருக்கும் தனித் தனியாய் பயிற்சி கொடுத்த யாஷ் பிரஜிதன், முக்கியக் கிளையை இந்தியாவிற்கு மாற்றத் தேவையான அனைத்தையும் செய்து முடித்திருந்தான்.

மேலும் ஐவரையும் இணைத்து, அவர்களுக்கு ஒரு ப்ராஜக்டையும் கொடுத்திருந்தான்.

சென்னைக்குச் சென்றதில் இருந்து அடுத்த ஐந்து மாதத்தில் முடித்துக் கொடுக்க வேண்டிய ப்ராஜக்ட் அது.

வாய்ஸ் அசிஸ்டன்ட் உடன் கூடிய ஸ்மார்ட் வாஷிங் மெஷினில் இன்பியூஸ் செய்யக்கூடிய கருவியின் உற்பத்தி, அது வேலை செய்யும் திறன், மார்க்கெட்டில் அதனை வெளிப்படுத்தும் முறை, அதற்கான ப்ரமோஷன், அதில் ஏற்படும் சிறு சிறு தொழில்நுட்பக் கோளாறுகளையும், உடனுக்குடன் கண்டறிந்து ஆராய்ச்சிக் குழுவினருக்குத் தெரியப்படுத்தும் வேகம், வாடிக்கையாளரைக் கையாளும் நிதானம் எனச் சிறு பிழையும் நேராத அளவு நேர்த்தியாய் செய்து முடிக்கக் கட்டளையிட்டிருந்தான்.

இதில், நிவேதனுக்கும் கதிரவனுக்கும் வேலை பார்த்த அனுபவம் இருப்பதால், அவர்களைத் தான் பெண்கள் மூவரையும் வழி நடத்தக் கூறி இருக்க, சிந்தாமணிக்கு முகம் கொள்ளா பூரிப்பு.

ஏதோ கதிரை சைட் அடித்துக் கொண்டு ஒரே அலுவலகத்தில் நேரம் தள்ளி விடலாம் என்ற நப்பாசையில் வந்தவளுக்கு, ஒரே ப்ராஜெக்டில் தங்களை ஒன்றாக இணைத்து அழகு பார்த்த யாஷ் பிரஜிதனுக்கு மனத்தினுள்ளேயே கோவில் கட்டினாள்.

ரித்திகாவையும், ஆஹில்யனையும் இத்தாலியில் இருந்து பார்த்துக் கொள்ளக் கூறி இருந்தான் யாஷ். தனது வீட்டிலேயே இருவரையும் இருக்குமாறு பணித்திட, ஆஹில்யன் தயங்கினான்.

“நான் என்னோட ரூம்ல இருந்துக்குறேன் பாஸ்… ரித்தி இங்க இருக்கட்டுமே.”

“நோ! அவள் சேஃப்ட்டி ரொம்ப முக்கியம். நீ அவ கூடவே இரு. உங்க ரிலசன்ஷிப் பத்தி வெளியே கசியக்கூடாது. காட் இட்!” என உத்தரவிட, “ஓகே பாஸ்!” என்று தலையாட்டியவன் வேகமாய் ரித்திகாவைப் பார்க்கச் சென்றான்.

“ஏன் யாஷ்… அவங்களை மட்டும் இங்க இருக்கச் சொல்ற?” நிதர்ஷனா அதிருப்தியாய் கேட்டதற்கு, “இங்க எல்லா டீடைலும் தெரிஞ்சவங்க மேனேஜ் பண்ணனும், அப்படியே விட்டுட்டு வர முடியாது ஆலம்பனா…” என்றான்.

“ஆனா, அவள் இவ்ளோ வருஷமும் தனியா தான் இருந்தா… இப்பவும் தனியா விட்டுட்டுப் போலாம்னு சொல்ற?”

“அவள் தனியாவா இருக்கா?” புருவம் நெறித்துக் கேட்ட யாஷ், அவளைக் கைப்பிடித்து இழுத்துச்க் கொண்டு ரித்திகாவின் அலுவலக அறைக்குச் சென்றான்.

அங்கோ, ஆஹில்யன் சிறகில்லாமல் வானத்தில் பறந்து கொண்டிருந்தான்.

“ரித்து… இங்க நம்ம மட்டும் இருக்கப் போறோமா?” என குதூகலமாகக் கேட்க, ஏதோ யோசனையில் இருந்தவள் ஆஹில்யனின் துள்ளல் குரலில் புன்னகைத்தாள்.

“காலேஜ் படிக்கும்போது இப்படி லவ் பேர்ட்ஸா சுத்துனது… அப்புறம் நமக்குன்னு லவ் பண்ணக் கூட டைம் கிடைக்கல. இப்ப நிறைய டைம் கிடைக்கும்ல லவ் பண்ண…” எனக் கண் சிமிட்ட அவனை ரசித்து வைத்தவள், “இருக்கும் இருக்கும்… தலைக்கு மேல கத்தி தொங்குதுடா டொமேட்டோ…” என்றாள் நக்கலாய்.

“உன் டியரஸ்ட் ப்ரெண்ட்கிட்ட எப்ப வேலைக்குச் சேர்ந்தேனோ, அப்பவே கத்தி கூட தான் நான் குடும்பம் நடத்திட்டு இருக்கேன். நீ எனக்குக் கிடைப்பியா மாட்டியான்ற நிச்சயம் இல்லாமலே அதெல்லாம் கண்டுக்கல… இப்ப நீ எனக்கே எனக்காகன்னு இருக்கும்போது, கத்தி தலையை ரெண்டாய் பொளந்தாலும் ஐ டோன்ட் கேர்…” என்றவனின் ஆழமான காதல் ரித்திகாவைக் கண் கலங்க வைத்தது.

அவன் நெஞ்சில் முகத்தைப் புகைத்துக் கொண்டவளுக்குள் பெரும் கலக்கம்.

நெருஞ்சி முள்ளாய் எதுவோ அவளைத் துளைக்கிறது என்று புரிந்தாலும் கூட, அவளாகக் கூறாமல் என்னவென்று கேட்பதென்ற யோசனையில் அவளை இறுக்கி அணைத்திருந்தான் ஆஹில்யன்.

இருவரது அணைப்பையும் சுட்டிக் காட்டிய யாஷ், “இப்பச் சொல்லு… அவள் வரட்டுமா, இருக்கட்டுமா?” எனக் கேட்க,

நிதர்ஷனா நமுட்டு நகையுடன், “தாராளமா இருக்கட்டுமே! ஆனா எவ்ளோ நாளைக்கு யாஷ்? அவங்களுக்கும் கல்யாணம் பண்ணி வைக்கணும்ல… ஆமா, ஏன் அவங்க ரிலேசன்ஷிப் வெளில தெரிய வேணாம்னு சொன்ன?” என்றாள்.

“ஆறு மாசத்துக்குத் தான்டி இருப்பாங்க. இங்க மேனேஜ் பண்ண புது டீம் ஆர்கனைஸ் பண்ணிருக்கேன். அவங்களுக்கு ட்ரைனிங் குடுத்துட்டு இந்தியா வந்து நம்மளோட ஜாயின் பண்ணிப்பாங்க. போதுமா? தென்…” என நெற்றியை நீவியவன், “இப்ப இருக்குற சிட்டுவேஷன்ல ஆஹில்கும் காவல் குடுத்துட்டு இருக்க முடியாது. அவன் ரித்தியோட பாய் ப்ரெண்ட்னு தெரிஞ்சா அவனுக்கும் டேஞ்சர்… இப்போதைக்கு எக்ஸ்போஸ் பண்ண வேணாம்.” என்றான்.

“ஓ! அதான், அவள் மூஞ்சி கொஞ்ச நாளாவே உர்ருன்னு இருக்கா?” நிதர்ஷனாவின் கேள்விக்குப் பதில் கூறாதவனாக,

“உன் சிஸ்டரைப் பிரிஞ்சு இருக்க முடியலையோ?” யாஷ் கிண்டலாய் எப்போதும் போலப் பேச்சை மாற்றியதைக் கவனிக்கத் தவறியவள்,

“அவளுக்குத் தான் அவளோட அண்ணனைப் பிரிஞ்சு இருக்க முடியாதுல. அதான் சொன்னேன். எனக்கு என்ன வந்துச்சு?” என அசட்டையாகக் கூறிக் கொண்டாலும், அவளை விட்டு விட்டுச் செல்வதில் வருத்தம் தான்.

விமான நிலையத்திற்கு வீட்டில் இருந்து கிளம்பும்போது, நிவேதன் தான் ரித்திகாவிடம் இருந்து பிரியா விடை பெற்றான்.

“நீயும் எங்க கூட வா ரித்தி, நீ இல்லாம எப்படிப் போறது?”

“ஆறு மாசம் தான் நிவே… அப்பறம் நான் வந்துடுவேன். எல்லாத்தையும் அப்படியே போட்டுட்டு வர முடியாதுல… நீ ப்ராஜக்டை சூப்பரா பண்ணு, ஆல் தி பெஸ்ட்!” என்றாள் சிறு நகையுடன்.

“இருந்தாலும்…” என வெகுவாய் சோகப்பட்டவனிடம், “அவங்க இப்ப தான் பர்ஸ்ட் டைம் இட்டாலில இருக்காங்களா? மூடிட்டு வா!” என்ற மகேந்திரனைக் கைப்பிடித்துக் காருக்கு அழைத்துச் சென்றான்.

அனைவரும் ஆயிரம் பத்திரம் சொல்லி விட்டுக் கிளம்பினர்.

ரித்திகாவையே பார்த்திருந்த ஆஹில்யன், “நீ வேணும்னா இந்தியாவுக்குப் போ ரித்து… இங்க நான் பார்த்துக்குறேன்.” எனக் கனிவாய் கூறியதில், “சாருக்கு என்கூட லவ் பண்ற ஐடியா இல்லையோ?” என்றாள் இடுப்பில் கையூன்றி.

“அதெல்லாம் நிறையவே இருக்கு. ஆனா நீ மிஸ் பண்ணுவ தான அவங்கள, அதான் சொன்னேன்.”

“மிஸ் பண்ணுவேன் தான். பட் நான் உன் கூட இருக்கணும் ஆஹி!” எனத் தலை சாய்த்துக் கூறிட, அவனுக்கும் சிலிர்த்தது.

“நான் வரேன்னு சொன்னாலும், இப்போதைக்கு யாஷ் என்னை இந்தியாவுக்கு வர விட மாட்டான்.” எனத் தனக்குள் சொல்லிக் கொண்டவளுக்குத் தெரியாதா காரணம்?

யாஷ் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் அவனவளுக்காக மட்டுமே என்று!

———-

உறக்கத்தில் இருந்து வெடுக்கென விழித்த நிதர்ஷனா, கடந்த காலத்தைக் கனவாக மறக்க முற்பட்டுக் கண்ணை இறுக்கி மூடிக் கொண்டாள்.

மூடிய கண்ணிலும் ஆடவனின் கலப்படக் கண்ணே காட்சியாக, இவனது வலையில் மீண்டும் மீண்டும் விழுந்து விடக் கூடாதென்ற முன்னெச்சரிக்கையுடன் அந்தப் பங்களா அறையின் ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தாள்.

யாஷ் பிரஜிதனின் கார் கேட்டைத் தாண்டிக் கடப்பது தெரிந்ததும் பரபரப்பானாள்.

கதிரவனை அருகில் தேடிப் பார்த்தாள். அவனைக் காணவில்லை. எப்படியும் யாஷிற்குச் சொம்பு தூக்குவான் என்று அறிந்ததால், வேக வேகமாக அங்கிருந்து தப்பிக்க முற்பட்டுக் கதவைத் திறக்க, அது திறந்து கொண்டது.

“ஹை!” என்றபடி அவசரமாக வாசற்கதவை அடைந்தவள், கதவைத் திறக்க முற்பட அதுவோ திறக்காமல் சதி செய்தது.

“எலிசா, ஓபன் தி டோர்…” நிதர்ஷனாவின் குரலுக்குக் கட்டுப்படாத செயற்கை நுண்ணறிவு அமைதியாக இருக்க,

பின், “ஆலம்பனா, ஓபன் தி டோர்!” என்றதில் கதவு தானாய் திறக்கப்பட, மறுபுறம் கருப்பு நிற ப்ளேசரில் கையை பேண்ட் பாக்கெட்டினுள் நுழைத்துக் கொண்டு ஸ்டைலாக நின்றான் யாஷ் பிரஜிதன்.

அவனைக் கண்டதும் விழி தெறிக்க அதிர்ந்தவள் திக்கற்று நிற்க, அவளை நோக்கி அழுத்தக் காலடி ஓசையுடன் வந்தவன், “ஹூ இஸ் தட் ஆலம்பனா?” என அர்த்தமாய் வினவியதில் நெஞ்சுக்கூடு காலியானது போல இருந்தது.

“ஆலம்பனாவா, அது யாரு?” அவசரமாய் சமாளித்தவள், “எனக்குப் பசிக்குது. கடத்திட்டு வந்து குழந்தை கேட்டா பத்தாது. சிக்கனும் மீனுமா குடுத்துக் கவனிச்சுக்கணும்.” என்று வாய்க்கு வந்ததை உளறியவள், திடுதிடுவென மாடியேற முற்பட அவனது கைச்சிறையில் தானாய் நின்றாள்.

“பேபிக்காக இதெல்லாம் சாப்பிடணும்னு அவசியம் இல்ல நிதர்ஷனா… என்னைச் சாப்பிட விட்டா போதும்… லைக் திஸ்!” என இழுத்து முத்தமிட்டவனின் கரங்கள் இடையிலும் பதிந்திருக்க, அவனது நெஞ்சில் கை வைத்துத் தள்ளி விட்டாள்.

சிவந்திருந்த உதடுகள் அவனது கடுமையில் வலியும் கொடுத்தது.

“தேவையில்லாமல் தொடுற வேலை வச்சுக்காத?” விரல் நீட்டி எச்சரித்தவளின் மெலிந்த நகங்களைக் கவ்வியவன், “தேவையோட தான் தொடுறேன்… பேபி பெத்துக்குற ப்ராசஸ் எப்ப ஸ்டார்ட் பண்ணலாம்?” ப்ராஜக்ட் ஆரம்பிப்பது போலக் கேட்டவனிடம் இருந்து கையை உருவிக் கொண்டாள்.

“என்னை விடு யாஷ்!” தவிப்புடன் மறுத்தவளின் இரு கன்னத்தையும் அழுத்திப் பிடித்தவன், “விடணும்னா எப்பவோ விட்டிருப்பேன்.” என கர்ஜனையுடன் வீடு அதிரக் கத்தினான் அவன்.

அவனது வார்த்தையும், அழுத்திப் பிடித்த விரல்களும் வலியைக் கொடுக்கக் கண்கள் கலங்கி நின்றவளிடம், “ஹு இஸ் ஆலம்பனா? பதில் சொல்லு, விடுறேன்!” என்றான் அழுத்தமாய்.

“எனக்குத் தெரியாது… நா…” என்றவளின் மறுவார்த்தை அவனது இதழுக்குள்ளேயே மடிந்து போக, அவளது உயிர் மீண்டும் அவனுடனான வசந்த காலத்தின் வடுக்களில் மடியத் தயாராகி நின்றது.

————-

இளையவர்கள் தொழிலில் கவனத்தைச் செலுத்தியதால், அவர்களைச் சென்னையில் விட்டு விட்டுப் பெரியவர்கள் மட்டும் தஞ்சாவூருக்குச் சென்றனர்.

“நீங்களும் எங்க கூடவே இருக்கலாம்ல தாத்தா…” நிதர்ஷனா கேட்டதில்,

“இல்லமா, வீட்ல போய் படுத்தா தான் தூக்கமே வருது. நீங்களும் வேலையா அலையறீங்க. லீவு கிடைக்கிறப்ப எல்லாம் வந்துட்டுப் போங்கப்பா…” என்று பொதுவாகக் கூறியவர், கண்மணி சிந்தாமணியைக் கண்டு, “பார்த்துச் சூதானமா இருந்துக்கங்க…” என்றார்.

கிருஷ்ணவேணியும் யாஷ் பிரஜிதனிடம், “இதுவரை படிக்கக் கூட வெளியூருக்கு அனுப்புனது இல்ல தம்பி… சூதுவாது தெரியாத பொண்ணுங்க, பார்த்துக்கப்பா…” என்றதில், கதிரவன் வாயில் கை வைத்தான்.

‘இதுவா சூதுவாது தெரியாதது? அவ்வா!’ என்றவனுக்கு முந்தைய நாள் நிகழ்வு நினைவிலாடியது.

சென்னையில் இருந்து யாஷ் பிரஜிதனின் பங்களாவிற்கு வந்து சேர்ந்தவர்கள், அதிக நேரப் பயணக் களைப்பில் ஆளுக்கொரு அறையில் தஞ்சம் புகுந்தனர்.

சரியாகக் கதிரவனும் ஒரு அறைக்குள் நுழையும் போது, “கதிர்…” என்ற ஹஸ்கி குரல் கேட்டதில் பயந்து அங்கும் இங்கும் பார்த்தான்.

“கதிர், நான் தான்… இங்க பாருங்க.” எனக் குரல் வந்த திசையை மிரட்சியாக ஏறிட்டவன் அதன்பிறகே தளர்ந்தான்.

பக்கத்து அறை வாயிலில் இருந்து சிந்தாமணி அழைத்ததும், “என்ன?” என்றான் அவனும் அதே ஹஸ்கி குரலில்.

“இங்க வாங்களேன்…” சிந்தாமணி அழைத்ததும் யோசனையாய் அவளருகில் சென்றவன், “என்ன சிந்தா?” எனக் கேட்க,

“நாளைக்குப் பெரியவங்க எல்லாம் தஞ்சாவூர் போறாங்க…” என்றாள் மெதுவாக.

“ஆமா, இத்தாலிலேயே பேசிக்கிட்டாங்களே… ஆதி ஆண்ட்டி தஞ்சாவூர்ல இருந்துட்டே ஆன்லைன்ல பிசினஸ் பார்த்துக்கிட்டு, போர்ட் மீட்டிங் மட்டும் நேர்ல வர்ற மாறி பிளான் பண்ணிட்டு, ப்ராஜக்ட் முடியிற வரை நம்மளும் இங்கயே இருக்கறதா தான பிளான்… இதை ஏன் இவ்ளோ ரகசியமா சொல்ற?”

தலையில் அடித்துக் கொண்ட சிந்தாமணி, “ரசனை கெட்ட ஜென்மம் கதிர் நீங்க… எல்லாரும் இருக்குறனால உங்ககிட்டப் பேசவும், என் அடிமனசுல பிராண்டிட்டு இருக்குற காதலை வச்சு உங்க மனசைப் பிராண்டவும் முடியாம தவிச்சுட்டு இருந்தேன். அல்வா மாதிரி வாய்ப்பு வந்துருக்கு. இந்த ஆறு மாசம் போதும். ப்ராஜக்டை கரெக்ட் பண்றேனோ இல்லையோ, உங்களைக் கண்டிப்பா கரெக்ட் பண்ணிடுவேன்.” என்று சுடிதாரின் காலரைத் தூக்கி விட்டுக் கொண்டவளை முறைத்தான் கதிரவன்.

“கரெக்ட் பண்ண நான் என்ன ஆன்சர் பேப்பரா?”

“என் லைஃப்கான ஆன்சர் உங்ககிட்டத் தான இருக்கு.” அவள் கண் சிமிட்டியதில்,

“நீயா கண்டதை நினைச்சு உளறிட்டு இருக்காத. உன்னை இங்க விட்டுட்டுப் போறாங்கன்னா, அது யாஷ் மேல இருக்குற நம்பிக்கையால் மட்டும் இல்ல… எங்க மேலயும் அதே நம்பிக்கை இருக்குன்றதுனால தான்…” எனக் கதிரவன் கடிந்தான்.

“இப்ப நான் என்ன நம்பிக்கையைக் கெடுக்குறேன்? என் மனசுக்குப் பிடிச்ச ஒருத்தரைப் பிடிச்சுருக்குனு சொல்றது இந்தச் சுதந்திர நாட்டுல ஒரு குத்தமா?”

“குத்தம் தான்! காதல்னா, அது தராதரம் பார்த்து வந்தால் தான் காதல். இல்லன்னா, அது வெறும் சலனம். நடக்கவே நடக்காதுனு தெரிஞ்சும், நீ வீம்புக்குச் செய்யறதுக்குப் பேர் உனக்கு ஏற்பட்ட சலனம் தான். நிவே நம்மளைச் சேர்த்து வச்சுப் பேசுனதுல நீ குழம்பி இருப்ப, அவ்ளோ தான்!”

“ஏன், ஏன் நடக்காது?” அவள் சீறினாள். தனது காதலைச் சலனமென்று கூறியவனைக் கொலை செய்யவே தோன்றியது.

“நடக்குமா? அப்போ சரி, என் ஏரியாண்ட ஒரு ஒரு மணி நேரம் வந்து என் வீட்ல இரு. என் அம்மா கேக்குற வசவை எல்லாம் கேட்டுப் பாரு. நீ ஒரு மணி நேரம் தாக்குப் பிடிச்சுட்டா, நான் கண்டிப்பா உன்னைக் காதலிக்கிறேன்.” சவாலாய் கூறியவனை முறைத்தவள்,

“ஒரு மணி நேரம் என்ன, ஒரு நாள் முழுக்க இருக்கேன். என்னை நாளைக்கே கூட்டிட்டுப் போங்க…” என்றாள்.

“பெரியவங்க ஊருக்குப் போகட்டும். நானும் என் வீட்டுக்குப் போய் தான் ஆகணும். எனக்குத் தெரிஞ்ச பொண்ணா இல்லாம, நிதாவோட ப்ரெண்டா நீ வா…” என்றதில்,

“ஏன், நிதா அக்காவோட ப்ரெண்டா வரணும்?” என மறுகேள்வி கேட்டவளுக்குப் பதில் கூறாது, “குட் நைட்!” என்று விட்டு அறைக்குச் சென்று விட்டான்.
—–

வீட்டினர் அனைவரும் கிளம்பிய அன்று இரவு, யாஷ் பிரஜிதனின் அறையில் செயற்கை இயந்திரங்கள் துரிதமாக வேலை செய்து கொண்டிருந்தது.

படுக்கை விரிப்பைச் சரி செய்வதும், தரையைத் துடைப்பதுமாக இருக்க… “என்னை விட நீ தாண்டி ஆலம்பனா என் அரக்கனுக்குப் பொண்டாட்டியாட்டம் துடிச்சுட்டு வர்ற… உன் சக்களத்தி வேலை எல்லாம் இத்தோட நிறுத்திக்கோ!” என்று ஏ. ஐ க்கு மிரட்டல் விடுத்தவளை, வாயில் கதவில் சாய்ந்து கைகட்டி ரசித்திருந்தான் யாஷ் பிரஜிதன்.

அவனைக் கண்டதும், “யோவ் கலப்படக் கண்ணுக்காரா… நம்ம ரூமுக்குள்ள உன் எக்ஸ் எதுக்கு இருக்கா?” என சண்டை பிடித்ததில், “எக்ஸ்சா?” எனக் கண்ணோரம் சுருங்கப் புன்னகைத்தான்.

“ஆமா, நீ தான உன் பொண்டாட்டியாட்டம் எலிசா, எலிசான்னு உசுர விடுவ… த்தோ பாரு அரக்கா… ஒன்னு இந்த ரூம்ல நான் இருக்கனும், இல்லனா அவ இருக்கணும்.” என மூச்சு வாங்கியதில், “எனக்கு ரெண்டு ஆலம்பனாவும் வேணுமே!” எனச் சீண்டினான்.

அவன் உயரத்திற்குக் காலை எக்கியவள், அவனது மூக்கின் நுனியில் தனது மூக்கு நுனியை அழுத்தி, “அப்போ அந்த ஆலம்பனா கூடவே சரசம் பண்ணிக்க… நான் வெளில படுத்துக்குறேன்!” என்றதில்,

“இன்னைக்கு நீ ஷை ஆகாம என்கூட இன்டிமேட் பண்ணு… அந்த ஆலம்பனாவைத் துரத்தி விட்டுடறேன்.” அவனும் மோகக் குரலில் குழைந்தான்.

அதில் நாணம் மிக அவனை விட்டு விலகியவள், “போய்யா…” என்று சிலுப்பினாலும் இதழ்களில் வெட்கப் புன்னகை நிரந்தரமாய் வீற்றிருந்தது.

“போறது எல்லாம் நடக்காத காரியம்…” அழுத்தமாய் கூறியவன், “இதைக் குடி!” என்றான்.

அதன்பிறகே அவனது கையில் இருந்த பால் கிளாஸைப் பார்த்தாள்.

“என்ன யாஷ் இது? இவ்ளோ நாளும் அத்தை டெய்லி பால் குடிச்சுட்டுத் தான் தூங்கப் போகணும்னு என்னைப் பாடாய் படுத்திப் பாலைக் குடிக்க வச்சாங்க. இன்னைக்கு அவங்க இல்லையே, இந்தப் பால்ல இருந்து எஸ்கேப் ஆகிடலாம்னு பார்த்தா, நீ கொண்டாந்துருக்க.”

“மம்மாவோட கண்டிஷன். நீ தெம்பா இருக்கணுமாமே! சோ கம்பல்சரியா என்னைக் குடுக்கச் சொல்லிருக்காங்க.” லேசாய் உதட்டைப் பிதுக்கினான்.

“ஹய்ய… தூங்குறப்ப தெம்பு வந்து நான் என்ன சூப்பர் வுமனா ஆகப்போறேன்? இதுல வேற பாதாம், முந்திரினு இந்தப் பாலைப் பார்த்தாலே பயமா இருக்கு.”

“தூங்கப் போறப்ப தானடி தெம்பு வேணும்!” கிசுகிசுப்பாய் அவளை மீண்டும் சீண்டிய யாஷின் குறும்பில் தவித்துப் போனாள்.

அவனோ விடாது, “என் டார்ச்சரைத் தாங்க உனக்கு ஸ்ட்ரென்த் வேணும்னு மம்மா இதை ரெடி பண்ணச் சொல்லிருக்காங்க போல. உன் வெயிட் தாங்காம உடைஞ்சுடுவியோனு பயந்திருப்பாங்களோ…” இன்னுமாக என்ன பேசி இருப்பானோ, அந்தப் பாலை வாங்கி மடமடவெனக் குடித்தவள், “ஆளை விடு சாமி… உன்னாண்ட வாதம் பண்ணது என் தப்பு தான்!” எனக் கும்பிடு போட்டுக் கொண்டு மெத்தையில் குப்புறப் படுத்து முகத்தை மூடிக் கொண்டவளுக்கு, இன்றும் புதிதாய் அவனிடம் வசப்படுவது போல வெட்கம் ஆட்கொண்டது.

மெல்ல மெல்லப் புன்னகை அடங்க, அந்தப் பால் கிளாஸை வெறித்த யாஷ் பிரஜிதனின் உள்ளத்தில் ஊசியாய் ஒரு வலி பரவியது.

அரக்கனின் அன்பினிலே
மேகா

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 29

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
38
+1
1
+1
2

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்