
அகம் 10
பொன் வானம் மஞ்சள் பூசிக்கொள்ள, அந்த அழகான பொன் மாலை பொழுதில் கதிரவன் விடைக்கொடுத்து, நிலாமகளின் வருகை நோக்கி காத்துக்கொண்டிருந்த சமயம், அவளும் அவனும் ஒரே வாகனத்தில், ஒரே சிந்தனையுடன் பயணித்துக்கொண்டிருந்தனர்.
வீட்டில் சில எதிர்ப்புகளைத் தாண்டிதான் அவனுடன் பயணம் செய்துக்கொண்டிருந்தாள் அவந்திகை.
சில கணங்கள் மௌனங்களில் கரைய, சில நொடிகள் விழிகள் கருத்துகளைப் பகிரந்துக்கொள்ள, இதழ் மட்டும் ஏனோ மௌனம் சாதிக்க, தன்னவனுடன முதல் பயணத்தை ரசித்துக்கொண்டிருந்தாள் அவந்திகை.
என்ன தான் பார்த்து பார்த்து வாகனத்தைச் செலுத்தினாலும், அருகில் இருக்கும் தன் எதிர்காலத்தையும் ஒரு பார்வை பார்த்துக்கொண்டவன், மந்தகாச புன்னகையைச் சிந்தினான்.
“அவந்தி எங்க போகணும், நைட் ஆகிருச்சு.” மௌனம் களைத்தான் அகன்,
“இப்போ எந்த இடத்துல இருக்குதோம்.?”
“என்னது எந்த இடத்துல இருக்கோமா.? நீ சொன்ன ரூட்ல தான வந்தேன்” எனப் புரியாது அவன் விழிக்க.
“ம்ம் நெருக்கத்துல வந்துட்டோம் அகன், இன்னும் கொஞ்ச தூரம் தான்” என மொழிந்தவள் சாலையைப் பார்த்திருந்தாள்.
“அப்படி எங்க தான் போறோம்..?”
“இதோ வந்திட்டோமே” என இதழ்மலர்ந்து அவள் சொல்ல.
“இங்க கூட்டிட்டு வர்றதுக்குத் தான் இவ்ளோ பில்டப் பண்ணியா..? எப்போ பாரு கோயில் குளம் தானா.?” போலியாய் கோப முகம் காட்டினான் அகன்.
“சாமி கும்பிடிட்டு எதுனாலும் பேசிக்கலாம் அகன்” எனச் சொன்னவள் அவன் கை பிடித்துக் கோவிலுக்குள் அழைத்துச் சென்றாள் அவந்திகை.
“எதோ சொல்லுற நானும் வர்றேன்” எனச் சொல்லி இருவரும் அந்தக் கோவிலுக்குள் நுழைந்தார்கள்.
வீராவேசமாக, கையில் வல்லயம், வீச்சரிவாள், பொந்தந்தடியை ஏந்தி, வல்லவனாய் நின்ற கோலத்தில் இருந்தார் மாயன் சுடலையாண்டி, கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு மணல் பரப்பில் அமர்ந்தவள் , அவனையும் அமரச் செய்து பேசத் துவங்கினாள்.
“இந்தக் கோவில் பார்த்தா எதாவது நினைவு வருதா அகன்.?” கேள்வியாய் அவனைப் பார்க்க,
“நான் இந்த ஊருக்கு இது தான் முதல் தடவை வர்றேன் அவந்தி, இந்தக் கோவிலை பத்தி என்ன நியாபகம் இருக்கப் போகுது” சலிப்பாய்ச் சொன்னான் அவன்.
“நான் மட்டும் விசயத்தைச் சொன்னேன்னு வையுங்க, நீங்க ஆட்டம் கண்டு போயிடுவிய” எனப் புன்னகைத்தாள் அவந்திகை.
“அப்படி என்ன மகாராணி விசயம்.?”
“நம்ம ரெண்டு பேரும் முதல் முதல் எங்க சந்திச்சோம்.? சொல்லுங்க பார்ப்போம்” அவந்திகை கேட்டாள்.
“உங்க வீட்டுல..!”
“அதான் இல்லை அகன்”
“அப்பறம் எங்க அவந்தி.?”
“இந்தக் கோவில் தான், அண்ணனும் தங்கச்சியும் சந்திச்சுகுற ரகசியம் இடம்”
“வாட் நிஜாமாதான் சொல்றியா..?”
“ஆமா அகன், மாமாக்கு இந்தச் சாமி தான் இஷ்ட தெய்வமாம்” அவள் எடுத்துரைத்தாள்.
“எங்க அப்பாவ பத்தி எனக்குத் தெரியாத விசயம் கூட உனக்குத் தெரிஞ்சிருக்கே அவந்தி, எங்க அப்பா எனக்குச் சரியான பொண்ண தான் தேர்ந்தெடுத்திருக்காங்க” தன் தந்தையை நினைத்துப் பூரித்துப் போனான் அகன்.
“அகன் எங்க அம்மா, வீட்டுல எப்பயும் அவிய அண்ணன் புராணம் தான் பாடுவாவ, பிறவு எப்புடி எனக்குத் தெரியாம இருக்கும்” தெனவெட்டாய் அவள் சொல்ல.
“எங்க அம்மா அப்படி எந்தக் கதையும் என்கிட்ட சொல்லல அவந்தி, அப்பாவும் எதுக்காக இப்படி ஒரு குடும்பம் இருக்கு, உனக்காக ஒருத்தி இருக்கான்னு என் சொல்லாம இருந்தாங்கன்னு தெரியல அவந்தி” என வருந்திக்கொண்டவனை.,
“சில விசயங்கள் தெரியறதுக்குன்னு சில நேரமும், காலமும் இருக்கு அகன் அது இது தான் போல” எனப் புன்னகைத்தாள் அவந்தி.
“தேங்க்ஸ் அவந்தி இந்தக் கோவிலுக்கு என்னைக் கூட்டிட்டு வந்ததுக்கு, எங்க அப்பாக்கு பிடிச்ச இடத்தை மிதிக்குற பாக்கியத்தை நீ எனக்குக் கொடுத்திருக்க” அவன் நெகிழிந்து பேச.
“அகன் இன்னும் நான் சொல்லி முடிக்கலை”
“வேற என்ன அவந்தி”
“இந்த மண்ணு மேல சத்தியம் பண்ணி சொல்லுங்க”என அவந்தி இடைநிறுத்த,
“சத்தியமா..! எதுக்கு.?” புரியாது விழித்தான் அகன்.
“என் கழுத்துல நீங்க தாலி கட்ட வந்திருவிங்கன்னு, சத்தியம் பண்ணுங்க”
“அப்போ நீ என்ன நம்பலையா அவந்தி..!”
“நம்புறேன் இருந்தாலும்” இதயம் படபடக்க அவன் விழிகளைக் காதலுடன் பார்த்தாள்.
“உனக்கு நம்பிக்கை இருந்தா இந்த அஞ்சு நாள் காத்திட்டு இரு அவந்தி, உன் மனசுல துளியும் நம்பிக்கை கொறைஞ்சா கூட நான் வரமாட்டேன், என்கிட்ட இதுக்காகச் சத்தியம் கேக்காத அவந்தி”
“ஒரு சத்தியம் பண்ணுறதுல என்ன இருக்கு அகன்.?”
“அப்போ என்னை ஏமாத்திட்டு போவலாம்ன்னு முடிவு பண்ணிட்டிய அப்படித் தானா.?” கோபமாய்க் கேட்டாள் அவந்தி.
“உனக்குக் கோபம் வந்தாலும் சரி என்ன வந்தாலும் சரி, நான் சத்தியத்தைப் பண்ண மாட்டேன், நல்லா நினைவு வச்சுக்கோ உன்கிட்ட துளி அளவு நம்பிக்கை கொறைஞ்சாலும் இந்த அகன் வரமாட்டான்” எனச் சொன்னவன் பட்டெனக் கோபமாய் எழுந்தான்.
அதன்பின் இருவரும் எதுவும் பேசாமால் வீடு வந்து சேர்ந்தனர், ஆனால் இருவருக்குள்ளும் சின்ன விரிசல் ஏற்பட்டிருந்தது. அவந்திகையின் வருகைக்காகக் காத்திருந்த காயத்ரி, அவளைக் கண்ட உடன் அருகே சென்றார்.
“என்னமா அவந்தி சத்தியம் செஞ்சானா.? சென்னை போயிட்டு வந்திருவான்ல” ஆவலாய் கேட்டார் காயத்ரி. மகனிடம் சத்தியம் வாங்க சொல்லி அவந்திகையை அந்தக் கோவிலுக்கு அனுப்பியதே காயத்ரி தான். அவர் கேட்ட கேள்விக்கு எந்தப் பதிலும் சொல்லாமல் தன் அறைக்குள் சென்று கதவடைத்துக்கொண்டாள்.
அகனோ அவளிடம் சொல்லாமல் சென்னைக்குப் பயணமானான்
***************************
மறுநாள் காலை வழக்கம் போல் கடைக்குத் தேவையான பொருள்களை வாங்க சென்றிருந்தாள் அவந்திகை. அங்கே மன்னராசா காய்கறி கடையில் வேலை செய்துக் கொண்டிருந்தான். அவந்திகையைக் கண்டதும் புறம் காட்டி நின்றவனை முறைத்தவள்.
“ஏலே மன்ராசா..!” குரல் கொடுத்தாள் அவந்திகை. அவனோ திரும்பாமல் தன் வேலையில் மும்மரமாய் இருப்பது போல் காட்டிக்கொண்டான்.
“ஏலே எருமை.!”
“தம்பி உன்ன தான் அந்தப் பிள்ளை கூப்பிடுது பாரு” அருகில் இருந்த பெரியவர் சுட்டிக்காட்ட,மெல்ல திரும்பினான்.
“ஏலே கூப்பிட்டுகிட்டே இருக்குதேன், செவிடனா ஆகிட்டியோ பே பயலே” கோபமாய் ஏசினாள்.
“இந்தா பாருட்டி ஏசாதே, அப்பறம் பார்த்துக்க”
“என்னடா கழட்டிருவ இங்க வாயேன்டா” அவனை அழைத்தாள்.
“என்னட்டி நீ கூப்பிட்டா வர்றதுக்கும், போன்னா போறதுக்கும் நான் என்ன உன் வீட்டு நாய் குட்டியா..?” ஆவேசமாய்க் கத்தினான்.
“சரி தான் என் மேல கோவபடுதியோ.? ச்செரி நான் கிளம்புதேன்” முகத்தை வாட்டமாய் வைத்துக்கொண்டவள்., தன் வண்டியை ஆன் செய்து ஆக்ஸிலேட்டரை திருக்க, அது கீர் கீர் எனச் சத்தம் கொடுத்தது.
“என்ன வண்டி எலவு வச்சிருக்கியோ.? ஊர் சனத்தையே கூப்பிடுது” என உரிமையாய் வந்து வண்டியில் இருந்த சாவியை எடுத்தவன்,
“வா அவி டீ குடிச்சிட்டுப் போகலாம்” மீண்டும் உரிமையாய் பேச, அவன் தலையில் குட்டியவள்,
“இதை முன்னமே செஞ்சிருக்கலாம் பக்கி பயவுள்ள” திட்டினாள்.
சில நிமிடங்கிளில் சந்தைக்கு வெளியே இருந்த தேநீர் கடையில், தேநீர் குவளையுடன் இருவரும் அமர்ந்திருந்தனர் இருவரும்.
“எல்லாத்தையும் விளக்கியாச்சி பிறவு என்னத்துக்கு வீஞ்சிட்டு போற” அவனைக் கோபமாய்ப் பார்த்து வைத்தாள்.
“நீ சந்தோசமா இருந்தா எனக்குப் போதும்ட்டி, அகனை உனக்குப் பிடிச்சு தான கெட்டிக்குற பிறவு என்ன.? சவத்த அதை விட்டு தள்ளு, ஊளுருக்குல என்ன நடந்து கேட்டியோ.?” பாசமாய்த் தொடங்கி அதிர்வுடன் முடித்தான் மன்னராசா.
“அதைப் பிறவு பேசிகிடலாம், நீ எதுக்கு டே இப்படி மூட்டைய தூக்கிகிட்டு அலையுத.?”
“ஏன் தூக்க கூடாதோ.? எனக்குத் தெரிஞ்சத நான் செய்யுதேன், இதுல என்ன வெட்கம் வேண்டி கிடக்கு” அவன் சொல்லி முடிக்க,
“நீ இதெல்லாம் செய்ய வேண்டாம், என் அங்காடிய பார்த்துகிற பொறுப்ப நீ எடுத்துக்க” அவள் சாதாரணமாய்ச் சொல்லிவிட அவன் அதிர்ந்தே போனான்.
“என்னட்டி ஒளருத.? அந்த இதுக்குத் தான் இத்தனை வருசம் சிரமபட்டியோ” கோபமாய்ப் பாரத்தான்.
“ஒரு வாரத்துல கல்யாணம் கட்டி கொடுத்துக் கண் காணா தேசத்துக்கு அனுப்ப போறாவ, அதுக்குள்ள ஒரு பொறுப்பான ஆள்கிட்ட அங்காடிய கொடுத்தினலாம்ன்னு முடிவு செஞ்சிட்டேன் டே”
“இதுக்கு தான் என்னைக் கெட்டிக்கடின்னு சொல்லுதேன் கேட்கமாட்டேன்றீயே”
“பே பயலே.! நான் என்ன பேசுதேன், நீ என்ன சலம்புற, நீயும் சக்தியும் தான் அங்காடியை இனி நடத்த போறீங்க, அவ படிப்ப முடிச்சதும், அவளுக்கு எல்லாத்தையும் நீ தான் சொல்லி தரணும் சரியா” அவன் முகம் பாரத்தாள் அவந்திகை.
“புரிஞ்சிட்டு நீ என்ன நினைச்சு சொல்லுதன்னு தெளிவா புரிஞ்சிட்டு, அவ சின்னப் புள்ளைட்டி அவ கூட என்ன சேர்த்து வைக்கணும் நினைக்குத, உனக்குக் கிறுக்கெதும் பிடிச்சுட்டோ.?”
“நான் அவளை இப்பயே கட்டிக்கிட்டு கூட்டிட்டு போன்னு சொல்லையே, அவ படிப்ப முடிக்கட்டும், பாம்பு கடிச்சு நீ கிடந்த அன்னைக்கி தவிச்சுப் போயிட்டா தெரியுமா, நானும் படிக்குத பிள்ளையேன்னு அவகிட்ட விவரத்தை சொல்லாம வச்சிருக்கேன், அத்தான் அத்தான்னு உன்னையே தான சுத்தி வர, பிறவு என்ன உனக்கு, அவளுக்குத் தொழிலை சொல்லிக்கொடு, நான் ஊரை விட்டுப் போன பிறவு அவளை நீ தான் பார்த்துகிடனும்” எனச் சொன்னவளின் விழிகளில் உவர் நீர் சுரக்க.
“அடி கழுதை, இதுக்கு ஏம்ட்டி அழுவுத, சக்தியையும் உன் கடையும் பத்திரம பார்த்துகிடணும் அவ்வளவு தான, நான் பார்த்து கிடுதேன். இன்னொரு விசயம் தெரிஞ்சுக்க” என அவன் எதோ சொல்ல வர.
“சந்தோசம் மன்னராசா, இந்த ஒரே கவலை தான் மண்டைய குடைஞ்சிட்டே இருந்திச்சு, இனி நிம்மதியா மெட்ராஸ் போயிடுவேன்” குரலில் சுரத்தை இல்லாமல் சொல்ல.
“உன்ன நீயே ஏம்ட்டி சிரம்படுத்திகிடுத, உனக்குத் தான் அங்க போவ பிடிக்கலைல, கல்யாணம் கட்டிகிட மாட்டேன்னு சொல்லிருக்கலாம்ல”
“மன்ராசா..! பிடிக்குதோ இல்லையோ இது தான் பொண்ணுங்களோட வாழ்க்கை, சரி அதை விடு எதோ சொல்ல வந்த.?”
“அவி.! நம்ம குல தெய்வ கோவிலுக்குப் போயிருந்தோம்ல, அந்த நேரம் பார்த்து, எவனோ வீட்டுக்கு தேவையான அம்புட்டு பொருளையும் இலவசமா கொடுத்திட்டு போயிருக்கான் பார்த்திக்க, எவன்னு தெரியல, அதுல போட்டிருந்த பேரும் சரியா எனக்கு விளங்கலை பார்த்துக்க”
“ஆரம்பிச்சுடானுவலா எவன் செஞ்ச வேலையா இருக்கும்” என்ற யோசனையில் இருக்க. அவள் அலைபேசி சிணுங்கியது, அதற்குச் செவி கொடுத்தாள் அவந்திகை.
“சொல்லுமா.!”
“நாலு நாள்ல கலியாணம், கேக்காம எங்கடி போனவ, விரச வா வீட்டுக்கு” காய்ந்தார் ஜெயக்கொடி.
“சந்தையில இருக்குதேன் வர்றேன்ம்மா”
“அங்க எதுக்குட்டி போன, இனி அங்காடி பக்கமே போகவே கூடாது, விரச வீடு வந்து சேரு” எனப் பேசியவர் அழைப்பை துண்டிக்க. சாவி கொத்தை எடுத்து மன்னராசாவின் கைகளில் கொடுத்தவள்.
“உன்ன நம்பி ஒப்படைக்கேன் பார்த்துக்க” எனச் சொல்லவிட்டு அழுதபடி வீட்டுக்கு புறப்பட.
“அவி..! நில்லாம்ட்டி” என மன்னராசா அழைக்க, அழுகையைக் கட்டுபடுத்தியபடி அங்கிருந்து சென்றாள் அவந்திகை.
சிறு வயதிலே படிப்பில் நாட்டம் இல்லாதவள் அவந்திகை, அவளின் எண்ணம் எல்லாம் சொந்த காலில் நிற்க வேண்டும் என்பதே., சிறு தொழிலுக்கான பயிற்சி சென்று அனைத்தையும் கற்று தேர்ந்தவளுக்கு., அவளின் அங்காடி தான் உயிர்., அதை விட்டும் செல்லும் நிலை வருமென்று ஒரு போதும் அவள் எண்ணியதே இல்லை., குடும்பத்திற்காக எதையும் செய்பவள் திருமணம் செய்ய மாட்டாளா என்ன.?
சூழ்நிலை கைதியாய் இருப்பவளுக்கு, அகனை பிடித்திருந்தாலும், அவளின் அங்காடியை விட்டு செல்வது மட்டுமே வருத்தத்தைக் கொடுத்தது. ஆனால் அவள் ஓய்ந்து போகவில்லை, மன்னராசாவிடம் ஒப்படைத்தால் மட்டுமே இது சரியாக வரும் என எண்ணியிருந்தாள் அவந்திகை. அதன்படியே செய்தாள்.
*******
பந்தகால் ஊன்றுவதில் இருந்து அனைத்து சடங்குளும் சம்பிரதாயங்களும் அரங்கேறியது, ஆனால் சென்னை சென்றிருந்த அகத்தினியன் மட்டும் வந்து சேரவில்லை. மூகூர்த்ததிற்கு இன்னும் ஒரு மணி நேரம் தான் இருக்கிறது. அவந்திகையோ மணபெண் அலகங்காரத்தோடு தன் அறையில் அமர்ந்திருந்தாள் அவள் செவிகளில் ஒலித்துக்கொண்டிருந்தென்னவோ அவனின் குரல் தான், தன் மீது ஒரு சதவீதம் நம்பிக்கை குறைந்தாலும் தான் வரவே மாட்டேன் என்று சொன்னவனாயிற்றே, நம்பிக்கையுடன் மாலை சூட வருவான் எனக் காத்திருந்தாள் கோதையவள். ஒரு நொடி கூட அவன் வராமல் இருந்துவிடுவான் என்று அவளுக்குத் தோன்றவேயில்லை, அவன் இவளிடம் லேகாவின் விசயத்தை இவளிடம் நேரடியாகச் சொன்னதே இவளுக்குள் நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தது.
“ஏட்டி அவி என்ன இன்னும் உன் மாப்பிள்ளையைக் காணலை” நக்கலாய் கேட்டார் பார்வதி.
“அத்தை அவிய வந்திருவாவ”
“வரலைனாலும் கவலை படாதடி மருமகளே, அதான் என் மவன் மன்னராசா இருக்குதான்ல” என அவர் சொல்லிக்கொண்டிருந்தபோதே, மன்னராசா அறைக்குள் நுழைந்திருந்தான்.
“எம்மா எந்த நேரத்துல எதை வந்து பேசுதணும்னு தெரியாதாம்மா.?, உனக்குக் கொஞ்சமும் அறிவில்லையா.?” தாயை சாடினான் மன்னராசா.
“அவி அதெல்லாம அகன் வந்திடுவாவ நீ விசனப்படாத” என அவந்திகையைத் தேற்றியவன், கல்யாண வேலையைப் பார்க்க சென்றுவிட்டான். பார்வதி முகத்தைத் தூக்கிக்கொண்டு வெளியே சென்றுவிட்டார். மூகூர்த்த நேரம் நெருங்க நெருங்க காயத்ரியும் சாந்தியாவும் கூனி குறுகி அவையோர் முன் நின்றிருந்தனர்.
“என்ன மைனி இதெல்லாம் உங்க பையன் இன்னக்கி வந்திருவான், நாளைக்கு வந்திருவான்னு பார்த்தா, இன்னும் காணலை தாலிக் கெட்டுற நேரமும் நெருங்கிட்டு” எனச் சாடினார் ஜெயக்கொடி.
“இனியன் வந்திருவான் அவந்திகை கழுத்துல தாலியை கட்டுவான், என்ன நம்பு ஜெயா” எனக் காயத்ரி கடினபட்டு தன்னிலையை விளக்கினார்.
“நாங்களா மாப்பிளை கேட்டு வந்தோம், இத்தனை வருசம் வராதவிய இப்ப வந்துட்டு, ஊர கூட்டி வச்சு அசிங்க படுத்ததான் வந்தியளோ.? இனி என் பொண்ணு அவந்திகையை யாரு கெட்டிப்பாங்க, ஊர் உலகம் என்ன பேசும், உன் புத்திய காமிச்சுட்டல காயத்ரி, கூடப் பொறந்த பொறப்புனா இப்புடி செஞ்சிருப்பியா.?” கோபமாய் வந்து விழுந்தது முத்து வேலின் வார்த்தைகள். இந்தச் சமயத்திற்காகக் காத்துக்கொண்டிருந்த பார்வதியும் முத்து வேலுடன் சேர்ந்துக்கொண்டார்.
“அண்ணேன் நீ ஏன் கவலைபடுற, சிங்கம் மாதிரி என் புள்ளை இருக்கான் அவி கழுத்துல தாலி கட்ட” எனப் பார்வதி சொல்ல.
“பார்வதி அமைதியா இரு..!” எச்சரிக்கையாய் ஒலித்தது ராஜபூபதியின் குரல்.
“எல்லாரும் அமைதியா இருங்க, அகன் வருவாங்க, அவரு வந்த பிறவு தான் இந்த மணமேடையில நான் ஏறுவேன்., அதுவரைக்கும் எல்லாம் ஆக வேண்டிய வேலைய பாருங்க, எனக்கு அகன் மேல நம்பிக்கை இருக்கு” எனச் சொல்லி தன் அறைக்குள் சென்று விட., அவள் பின்னால் சந்தியாவும், சக்தியும் ஓடினார்கள்.
“அவந்தி அண்ணி..! அண்ணா கால் பண்ணிச்சா..?”
“இல்லை” ஒரு சொல்லில் பதில் அளித்தாள் அவந்திகை.
“பிறவு என்ன நம்பிக்கைல இங்க உட்காந்திருக்க அவிக்கா..?” கோபமாய்க் கேட்டாள் சக்தி.
“அகன் வருவாங்கட்டி, வரலைனா என் முடிவு வேற மாதிரி இருக்கும்” எனச் சொல்லி அமைதியாய் அமர்ந்திருந்தாள்.
“அண்ணி ஆறு டூ ஏழரை முகூர்த்தம் இப்போவே ஏழாகிருச்சு அண்ணி, அண்ணா வருமான்னு எனக்கே சந்தேகமா இருக்கு” சந்தியா பேசிக்கொண்டிருக்க,
“சந்தியா..! உங்க அண்ணன் வருவாக, நம்ம குடும்ப மானத்தை வாங்க மாட்டாங்க எனக்கு நம்பிக்கை இருக்கு அந்த நம்பிக்கை உனக்கு இருந்தா அமைதியா இதுல இரு” எனத் தன் முன்னிருந்த நாற்காலியை காட்டினாள். அண்ணியின் நம்பிக்கையான பேச்சை கண்டதும் கண்களில் நீர் வழிய அறையை விட்டு வெளியே வந்த சந்தியா, தன் அண்ணனுக்கு அழைப்பு விடுத்தாள். முதல் அழைப்பிலே அழைப்பை ஏற்றிருந்தான் அகன்.
“சொல்லு சந்தியா.? என்ன விசயம்..?”
“அண்ணா முகூர்த்த நேரம் நெருங்கிட்டே இருக்கு நீ இன்னும் வீடு வந்து சேரலை, என்ன தான் பண்ணிட்டு இருக்க, அண்ணி வந்திடுவன்னு நம்பிக்கையோ இருக்குறாங்க, அண்ணியை டெஸ்ட் பண்ணி பாக்குறியா அண்ணா..? உன்ன அண்ணான்னு சொல்லிக்கவே வெட்காம இருக்கு” எனத் திட்டினாள்.
“திட்டி முடிச்சுட்டன்னா போனை வை..!” உணர்ச்சியற்று ஒலித்தது அகனின் குரல்.
“அண்ணா..!”
“நான் முக்கியமான வேலைல இருக்கேன் வை சந்தியா” பட்டென இணைப்பு துண்டிக்கபட, அதிர்ந்து போனாள் சந்தியா. விரைந்து தன் அண்ணியின் அறையை நோக்கி ஓடினாள்.
“அண்ணி அண்ணா வரமாட்டாங்க போல, முக்கியமான வேலையில இருக்கேன்ன்னு கட் பண்ணிருச்சு, இன்னும் இங்க வரலை போல” படப் படவெனச் சந்தியா சொல்ல. உணர்ச்சியற்று அமைதியாய் அமர்ந்திருந்தாள் அவந்திகை.
அகம் கொய்த அவந்திகையின்
அகமோ..!
தன்னவனைத் தேட..!
காத்திருப்பைப் பரிசாய் தந்தவன்..!
மாலை சூடுவானா..?
காதலுடன் காத்திருக்கும்
பேதை இவளின் துயர்
தீர்ப்பானா..?
அவந்தியின் அகன்..!

