
அத்தியாயம் 4
யாஷ் பிரஜிதன் அலுவலகம் சென்றதில் இருந்து நிதர்ஷனாவிற்கு மனம் ஒரு நிலையில் இல்லை. தங்களைச் சுற்றி ஏகப்பட்ட சதிவலைகள் இருக்கிறதென்று தெரியும் தான். அதனை எளிதாய் அவன் ஒதுக்கி விடுவானென்றும் தெரியும் தான். ஆகினும், ஒரு வித அச்சம் கனன்று கொண்டே இருந்தது.
“எங்க போறோம் கலப்படக் கண்ணுக்காரா?” அவன் தோள்மீது சாய்ந்து கொண்டு கேட்டதில்,
“ஒரு ரொமான்டிக் பிளேஸ்க்கு!” என்றவனின் இதழ்களில் இளநகை.
நேராய் அவளை ஃபுளோரன்ஸ் நகரின் மிக அழகான உயரமான மலைப்பகுதிக்கு அழைத்துச் சென்றான்.
நிலவு இன்று வழக்கத்தை விடப் பிரம்மாண்டமாக, அந்த இத்தாலிய மலை உச்சிக்கு மிக அருகில் வந்து நின்றது. Piazzale Michelangelo-வின் அந்தப் பரந்த மைதானம் முழுவதும் பால் ஊற்றியது போன்ற ஒரு வெண்மையான ஒளியில் நனைந்திருந்தது.
கீழே குனிந்து பார்த்தால், ஃபுளோரன்ஸ் நகரம் ஒரு மௌனமான ஓவியமாக மாறியிருந்தது. பகலில் ஆரவாரமாக இருந்த அந்த ஊர், இப்போது நிலவின் மெல்லிய போர்வையைப் போர்த்திக் கொண்டு உறங்குவது போலத் தெரிந்தது. ‘அர்னோ’ நதி கருநீல நிறத்தில் பளபளக்க, அதன் மேலே நிலவின் ஒளி ஒரு ‘வெள்ளிப் பாதை’யைப் போட்டிருந்தது. தூரத்தில் தெரிந்த அந்தப் பழைய பாலங்கள் (Ponte Vecchio), நிலவொளியில் ஏதோ ஒரு சரித்திரக் கதையின் மர்மமான பக்கங்களைப் போலக் காட்சியளித்தன.
மலையின் உச்சியில் வீசிய அந்த ஜுன் மாதத்து இரவுக் காற்று, மெல்லிய பனித்துளிகளைச் சுமந்து வந்து அவளது முகத்தில் அறைந்தது. அந்த மைதானத்தில் இருந்த அந்தப் பெரிய வெண்கலச் சிலை, நிலவொளியில் ஒரு நீல நிற நிழலைத் தரை முழுவதும் படரவிட்டிருந்தது. சுற்றிலும் இருந்த விளக்குகள் மங்கலாகத் தெரிய, வானத்து நட்சத்திரங்கள் யாவும் அந்த மலை உச்சிக்கு விருந்துக்கு வந்தது போல நெருக்கமாகத் தெரிந்தன.
தூரத்தில், யாரோ ஒரு தெருக்கலைஞர் வாசித்த வயலினின் மெல்லிய இசை அந்த மலை உச்சி முழுவதும், காதலின் வாசனையைப் பரப்பிக் கொண்டிருந்தது. “இந்த உலகமே நம்ம காலுக்குக் கீழ இருக்கிற மாதிரி இருக்குல்ல அரக்கா?” என்று அவள் அவனது கைகளைப் பற்றிக் கொண்டாள்.
நிதர்ஷனாவின் முகத்தில் அத்தனைப் பரவசம். ஒருமுறை, இதே போலான உயர்ந்த மலை இத்தாலியில் நிறைய இருக்கிறது என்றும், அங்கிருந்து நிலவைப் பார்க்க அத்தனை ரம்மியமாக இருக்குமென்றும் தஞ்சாவூரில் இருக்கும்போது யாஷ் கூறி இருந்தான்.
அவனுடன் அவள் செல்லுவதெல்லாம், கனவிலும் நடக்காத காரியமென்றல்லவா அதனை அசட்டை செய்திருந்தாள்.
இன்றோ, அருகில் தனது தேகத்தை உரசியபடி நின்றிருந்த மனத்திற்குப் பிடித்த ஆடவன், எதிரிலோ வாழ்நாளில் இதுவரை பார்த்திடாத அத்தனை ரசனை மிக்க நிலவு மகளின் மற்றொரு பரிமாணம்.
“யாஷ்! வானத்தைப் பாருங்களேன்… நட்சத்திரத்தைத் தெளிச்ச மாதிரி இருக்கு. அச்சோ, வானமே பக்கத்துல தெரியுதுல்ல!” என ஆர்ப்பரித்தாள்.
பலமுறை இங்கு வந்திருக்கிறான் தான். இன்றேனோ அவ்விடமே புதிதாய்!
யாஷ் பிரஜிதன் அவளைப் பின்னிருந்து அணைத்தபடி, அந்தக் குளிரில் சிவந்திருந்த அவளது கன்னங்களுக்கு மென்முத்தமிட்டான்.
“இந்த இடத்தை நிறைய டைம் ரசிச்சுப் பார்த்திருக்கேன். ஆனா, இப்ப இந்த இடத்தை ரசிக்கத் தோணல ஆலம்பனா…” என்றான் செவி மடல்களை இதழ்களால் உரசியபடி.
கூசி நெளிந்தவள், “வேற எதை ரசிக்கத் தோணுதாம்?” எனக் கேலியாய் வினவினாள்.
“பதில் தெரிஞ்சே கேள்வி கேட்டா என்ன அர்த்தமாம்?” அவனும் அவளைப் போலவே கேலி செய்தான். இருவரின் உதடுகளிலும் உறைந்தே இருந்தது புன்னகை.
“முழு நிலா! பக்கத்துல நான்! பாட்டுப் பாடத் தோணலையாடி?” மீண்டும் கிசுகிசுத்தான்.
“உங்க பக்கத்துல வார்த்தையே வர மாட்டேங்குதாம். நேத்துல இருந்து நீங்க ரொம்ப பேட் பாயா இருக்கீங்க யாஷ்…” எனச் சிணுங்கிட,
“நான் குட் பாய்னு சொல்லவே இல்லையேடி ஆலம்பனா…” என்றான் கண்ணோரம் சுருங்கிய சிரிப்புடன்.
“நான் பாடட்டா?” யாஷ் பிரஜிதனின் ஆழ்ந்த குரலினுள் அத்தனை நேசம்.
“உங்களுக்குத் தமிழ் பாட்டு பாடத் தெரியுமா?” கழுத்தைத் திருப்பி அவள் கேட்ட நொடியில், அவனும் கழுத்தைச் சாய்த்து அவளிதழ்களைக் களவாடினான்.
“”ம்ம்ஹும், யாஷ்…” இதழில் மிச்சமிருந்த ஈரத்தைத் துடைத்துக் கொண்டே வெட்கம் மறைத்தாள் பெண்ணவள்.
அவனோ, “அள்ளுறடி ஆலம்பா…” என்று மேலும் இறுக்கி அணைத்தபடி, சூடான மூச்சுக்காற்று அவள் கழுத்தில் படரப் பாடத் தொடங்கினான்.
எட்டாத உயரத்தில்
நிலவை வைத்தவன் யாரு…
கையோடு சிக்காமல் காற்றை
வைத்தவன் யாரு…
இதை எண்ணி எண்ணி
இயற்கையை வியக்கிறேன்…
எட்டாத உயரத்தில் நிலவை
வைத்தவன் யாரு…
பெண்ணே! பெண்ணே!
பூங்காற்று அறியாமல் பூவை
திறக்க வேண்டும்…
பூ கூட அறியாமல்
தேனை ருசிக்க வேண்டும்…
அட உலகை ரசிக்க
வேண்டும் நான் – உன் போன்ற
பெண்ணோடு…
வெண்ணிலவே!
வெண்ணிலவே!
விண்ணை தாண்டி வருவாயா
விளையாட ஜோடி தேவை…
உயிர் உருக்கும் பாடல் வரிகளை, அவனிடம் அத்தனைத் தெளிவாக அவள் எதிர்பார்க்கவில்லை.
இடையினை இறுக்கிப் பிடித்திருந்த கரங்களில் துவண்டவள், அவனது நேசச் சூட்டில் உருகிக் கிறங்கி அவனது நடன அசைவுகளுக்கு ஏற்ப அவளும் அசையத் தொடங்கினாள்.
நெருக்கங்கள் இன்னும் நெருங்கவே சொன்னதில், இரு காதல் உள்ளங்களும் பித்துப் பிடித்த நிலையில் சுற்றம் மறந்து தங்களது விழி மொழியில் தொலைந்தனர்.
இரவு உணவாக, அவள் விரும்பும் இந்திய அசைவ உணவகத்திற்கு அழைத்துச் சென்றான் யாஷ் பிரஜிதன்.
அங்கோ விலையுயர்ந்த உணவு வகைகளை மூக்கைச் சுருக்கிப் பார்த்தவள், “இது என்ன யாஷ், இவ்ளோ விலை போட்டுருக்கு. கவுச்சி எல்லாம் இவ்ளோ காஸ்ட்லியா கெடச்சிருந்தா, நான் கஞ்சியைக் குடிச்சே உயிர் வாழ்ந்திருப்பேன்.” என்று அங்கலாய்த்துக் கொண்டதில்,
“நீ தானடி நான்வெஜ் கேட்ட?” என்றான் முறைப்பாக.
“எனக்கு தம்மாத்துண்டு கருவாடு இருந்தால் போதும். இது என்ன, ஒரு பீஸ் சிக்கன் நான் ஒரு மாசம் அரிசி வாங்குற காசா இருக்கு. வேணாம் வா, நம்ம வீட்ல போய் என் மாமியார் வச்ச சாம்பாரையே சாப்பிட்டுக்கலாம்.” என்றிட, “ஏய்! ஒழுங்கா உக்காந்து சாப்பிடு!” என்று அவளுக்குத் தேவையானதை அவனே ஆர்டர் செய்தான்.
அவனுக்குச் சைவ உணவுகளும், அவளுக்கு அசைவ உணவுகளும் வர அவளும் மற்றவை மறந்து சிக்கனில் ஐக்கியமாகி விட்டதில், யாஷ் பிரஜிதனின் முகத்தில் புன்னகை அரும்பியது.
உண்ணும் போதே, “இவ்ளோலாம் என்னால சாப்பிட முடியாது. இதை டேக் அவே பண்ணச் சொல்றியா. நிவேக்கும் கதிருக்கும் பிடிக்கும்.” என்றதில், “அவங்களுக்கு வேற வாங்கிட்டுப் போகலாம். யூ ஃபர்ஸ்ட் ஈட்…” எனத் தலையில் அடிக்காத குறையாகக் கூறியதும் சிலுப்பிக் கொண்டாள்.
பின், “நிவே இன்னைக்கு என்ன செஞ்சான் யாஷ்… ஒழுங்கா சொன்னதைக் கேட்டுக்கிட்டானா? அவனை யாரோ ஃபாலோ பண்றதா சொன்ன… அந்த சைனீஸ்காரனால பிரச்சினை இல்ல தான?” எனச் சிறு தவிப்புடன் கேட்டாள்.
“காட்! மார்னிங் உன் பிரதர் கூடவும், ஈவ்னிங் உன்னோடவும் போராட முடியலடி”
“நான் என்ன செஞ்சேன்?” அவள் உதட்டைச் சுளிக்க, அவளது இதழோரம் ஒட்டி இருந்த சீஸை ஒற்றை விரலால் துடைத்தவன், “ரொமான்டிக் கேண்டில் லைட் டின்னரை ரொமாண்டிசைஸ் பண்ணாம, சைனீஸைஸ் பண்ணிட்டு இருக்க?” என்றான் சிரியாமல்.
அதில் சிரித்து விட்டவள், “நீ 24 மணி நேரமும் ரொமான்டிக் மோட்ல தான் இருக்க அரக்கா… நான் தான் உங்கிட்டச் சிக்கிட்டுப் பாடுபடுறேன்.” என நாக்கைத் துருத்திட,
“அது உன் தலையெழுத்து!” என அசராமல் கூறியதில், “அப்ப என்னையும் நிவேவையும் கட்டி மேய்க்க வேண்டியது உன் தலையெழுத்து!” என்று அவளும் குறும்பாய் வாரினாள்.
“ஜீஸஸ்!” என மேலே பார்த்து நொந்து கொண்ட யாஷ் பிரஜிதனைக் கண்டு இன்னும் அதிகமாய் சிரிப்புப் பீறிட்டது அவளுக்கு.
அதன்பிறகு, வெகு நேரம் சின்னச் சின்னத் தீண்டலில் சிலிர்த்துக் கொஞ்சி அந்த இரவு வேளையை அணு அணுவாய் ரசித்தவர்கள், முழுத் தீண்டலையும் ரசிக்கும் பொருட்டு வீடு நோக்கிச் சென்றனர்.
காரை ஓட்டிக் கொண்டிருந்தவனின் தோள் மீது தலை சாய்த்திருந்த நிதர்ஷனா, மெல்ல விழி உயர்த்தி “நான் கேட்டதுக்குப் பதில் சொல்லலையே யாஷ்? நிவே செட் ஆகிடுவானா?” என வினவினாள்.
“செட் ஆகித் தான் ஆகணும். வேற வழி இல்ல!” யாஷ் அழுத்தமாய் உரைத்ததில்,
“இப்ப இந்தப் பொறுப்பை ஏத்துக்கிட்டா அவனுக்குப் பிரச்சினை எதுவும் வராதா யாஷ்?” நிதர்ஷனா கேட்டதும்,
“கண்டிப்பா வரும். உண்மையாவே யார் இந்தப் பிரச்சினைக்குக் காரணம்னு கண்டுபிடிக்கணும் ஆலம்பனா… கேட்ச் தெம் சூன்!” என்றான் அவள் தலை மீது அவனும் தலை சாய்த்தவனாக.
யாஷ் பிரஜிதனின் கார் வீட்டின் பார்க்கிங்கை அடைய இங்கோ,
“என்ன ஆதி யோசனை?” என மலர் தோட்டத்தின் நடுவில் ஜொலித்த நிலவினை வெறித்துக் கொண்டிருந்த ஆதிசக்தியை நெருங்கினார் இளவேந்தன்.
“மறுபடியும் அந்த பிசினஸ்குள்ள போக விருப்பமில்லை இளா… அதுனால எவ்வளவோ இழந்துட்டேன். ஒருவேளை, நான் அலெக்ஸ் கூட ஒழுங்கா வாழ்ந்திருந்தா, நீயும் வேற கல்யாணம் பண்ணிட்டுச் சந்தோஷமா இருந்திருப்ப தான. எல்லாரோட நிம்மதியையும் கெடுத்துட்டு, ஆரம்பிச்ச இடத்துக்கே போகச் சொன்னா… எப்படி?” எனப் பேசி விட்டே நாக்கைக் கடித்தார்.
அவசரமாகத் திரும்பிக் கணவனது முகம் பார்க்க, அதில் கோபம் ஜொலித்தது.
“மாமா!” ஆதி பேசும் முன்பே,
“போதும் ஆதி… ஒருவேளை, நீ அலெக்ஸ் கூட எந்தப் பிரச்சினையும் இல்லாமல் வாழ்ந்திருந்தால் கூட, நான் இன்னொரு கல்யாணம் பண்ணிருக்க மாட்டேன். உன்னை நான் காதலிச்சது உண்மை! யாஷும், கண்மணியும் என் பசங்க ஆதி… அப்படித் தான் நான் பார்க்குறேன். ஆனா நீ தான் எப்பவுமே யாஷ் உன் பையன் மட்டும் தான்னு பிரிச்சுச் சொல்லுவ. அவன் என்னை வெறும் அங்கிளா கூட நினைக்க மாட்டுறான். இப்பக் கண்மணியையும் வார்த்தையால பிரிச்சு வச்சுடாத ஆதி. கையை விட்டுப் போன காதல் போனது தானோ? அது என்னைக்கும் என்னோடதா இருக்காதுல?” வெடித்தே விட்டார் இளவேந்தன்.
“ஐயோ இளா, என்ன பேசுற? நான் அந்த அர்த்தத்துல சொல்லல இளா…” ஆதிசக்தி பதறித் துடித்து விட, இளவேந்தன் முதன்முறையாய் மனையாளின் மீது மிகுந்த வேதனை கொண்டு வீட்டினுள் சென்று விட்டார்.
வெள்ளிக் கம்பியாய் கண்ணில் நிறைந்து நின்ற கண்ணீருடன், ஆதிசக்தி செய்வதறியாது திரும்ப அங்கு யாஷ் பிரஜிதனும், நிதர்ஷனாவும் நிற்பதைக் கண்டு கீழுதட்டைக் கடித்தார்.
கண்ணீர் கன்னம் வழியே வழிய அடம் பிடிக்க முயன்று அடக்கிக் கொண்டவர், “சாப்டீங்களா, இவ்ளோ நேரம் ஆச்சே…” என இயல்பாய் கேட்க முயல இருவரும் அவரை முறைத்தனர்.
“ஏன் அத்தை, மாமா தான் உன் மேல லவ்வாங்கியா இருக்காரே… இவ்ளோ வருஷமும் உங்களுக்காகப் பார்த்துப் பார்த்துச் செஞ்சவரை ஏன் கஷ்டப்படுத்துறீங்க?” என நிதர்ஷனா இளவேந்தனுக்காகச் சண்டை இட்டாள்.
“நமக்காக ஒருத்தர், அவங்களோட சுய அடையாளத்தை விட்டுட்டு அன்பைச் செலுத்துறது பெரிய வரம் தான் நிதா… ஆனா, அதை ஏத்துக்குறவங்களுக்குப் பெரிய சாபமும் அது தான். அந்த அன்பை ஈடு செய்ய முடியாததுக்கான வலி அதிகம்…” என்றவரின் வார்த்தையிலும், இளவேந்தனின் மீதான நேசம் பேரலையாய் ஆர்ப்பரித்தது.
அதில் நிதர்ஷனா அமைதியாகி விட யாஷ் பிரஜிதனோ, “ஈடு செய்ய முயற்சி செய்யறது தான் மிகப்பெரிய முட்டாள்தனம் மம்மா… எல்லாரோட லவ்வும் அதோட டெப்த்தும் சேம் கிடையாது. டோன்ட் டூ திஸ் டூ ஹிம்!” என்று ஒற்றை வரியில் அவரைக் கடிந்து கொள்ள, ஆதிசக்தி அயர்ந்து போனார்.
நிதர்ஷனாவும் கூடத்தான். ஆதிசக்திக்குத் தனிமை தந்து இருவரும் அறைக்குள் நுழைய, “ஆனாலும், லவ்வுக்கான விளக்கம் குடுக்குற அளவு இந்தக் கலப்படக் கண்ணுக்காரனுக்கு எங்க இருந்து இம்புட்டுப் பக்குவம் வந்துச்சு?” என நிதர்ஷனா வியப்பாய் வினவினாள்.
அவளது கூற்றில் பக்கெனப் புன்னகைத்து விட்டவன், “எல்லாம் நீ குடுத்தது தான்டி! அதை நான் எக்ஸ்ப்ளோர் பண்றேன்.” என்று கன்னம் கிள்ளிட, அவளிடம் கர்வ நகை மிளிர்ந்தது.
—-
“ஏய் சிந்தா, நீ தூங்க வரலையா?” பால்கனி வழியே குளிர் உடலை ஊடுருவக் கையைக் கட்டி நின்றிருந்தாள் சிந்தாமணி.
கதிரவனை எப்படி கரெக்ட் செய்வதென்றே பெரும் யோசனை ஓடிக் கொண்டிருக்க, “நீ தூங்குடி கண்மணி… நான் கொஞ்சம் நேரம் கழிச்சு வர்றேன்.” என்றதில், “சீரிஸ் பார்க்கப் போறியாக்கும்.” எனச் சலித்துக் கொண்ட கண்மணிக்குப் பஞ்சு மெத்தையில் படுத்தும் உறக்கம் வர மறுத்தது.
“நீ தான் காலேஜ் முடிச்சுட்டியே, என்ன செய்யப் போற?” முந்தைய நாள் தமையன் கேட்ட கேள்வி செவியினுள் ரீங்காரமிட, “இன்னும் எதுவும் யோசிக்கலைண்ணா…” என்றாள்.
பின் அவளே, “அப்பா மாதிரி டீச்சிங் சூஸ் பண்ணலாம்னு ஐடியா…” என்றதும், “ம்ம்… கொஞ்ச நாளைக்கு மத்த பிளான்ஸ் அவாய்ட் பண்ணிடு. நீ எலைட் கம்பெனில ஒன் ஆஃப் தி ஹெட் பொசிஷன்ல இருக்கணும்.” என்றான் யோசனையாக.
அவளோ திகைத்து விழித்து, “என்ன அண்ணா சொல்றீங்க… நான் சேட் ஜிபிடில பாட சம்பந்தமான டவுட் கேட்குறதோட சரி. இதுக்குமேல எனக்கும் இந்த ஏஐ- க்கும் சம்பந்தமே இல்ல.” என்றாள் பாவமாக.
யாஷ் அதனைக் கண்டு கொள்ளாது அவனது முடிவில் உறுதியாக இருக்க, இப்போதோ நிவேதனைத் தினம் தினம் அருகில் இருந்து பார்க்கப் போகும் வாய்ப்புக் கிடைக்கப் போகிறதென்று உள்ளம் ஒரு ஓரத்தில் குதூகலித்தாலும், இந்த உணர்வை வலிய உதாசீனப்படுத்துவது பெரும் கொடுமையாக இருந்தது.
——
“மச்சி, மச்சி… நம்ம வேணும்னா இங்க இருந்து எங்கேயாச்சும் ஓடிப் போயிடுவோமா?” நிவேதன் கதிரவனைத் துணைக்கு அழைக்க, “மூடிட்டு வேலையைப் பாருடா… சிசிடிவி வழியா நம்ம மேல தான் கண்ணு வச்சுருப்பான் உன் மச்சான்காரன்!” என்று பரீட்சைக்குப் படிக்கும் மாணவனாக, ஒரு கோப்பினுள் தலையைக் கொடுத்துக் கொண்டிருந்தான் கதிரவன்.
“ஒனக்கு ஏதாவது புரியுதாடா?”
நிவேதனின் கேள்வியில் நொந்த கதிரவன், “நானே ஒரு எழவும் புரியாம ஃபைலை வேடிக்கை பார்த்துட்டு இருக்கேன்டாவ்… அதுசரி, நீ தான் இந்த சாம்ராஜ்யத்தோட வாரிசு. உன்னை வேலை வாங்க வேண்டியது தான். என்னை ஏன்டா இலவச சீர்வரிசைல வாங்குன மாதிரி வேலை வாங்குறான்?” எனக் கேள்வி எழுப்ப,
தீவிரச் சிந்தனையில் இருந்த நிவேதன், “எனக்குக் காரணம் புறிஞ்சுடுச்சு!” என்றான்.
கதிர் என்னவெனப் பார்த்ததும், “நீயும் என் அப்பாவோட வம்சாவளியா இருப்பியோ?” எனப் பீதியைக் கிளப்ப, “எதே?” என விழித்த கதிரவனைப் பார்த்துக் கெக்க பெக்கவெனச் சிரித்தான் நிவேதன்.
அந்நேரம் அங்கு வந்த யாஷ் பிரஜிதன் இருவரையும் பார்வையால் சுட, இவனைக் கண்டதும் இருவரும் அட்டென்சன் மோடில் அமர,
அதே நேரம், யாஷின் பின்னே மாடர்ன் உடையில் வந்த பெண்மணியை இருவரும் வாயைப் பிளக்காத குறையாக ஏறிட்டனர்.
அவரோ, பரோட்டாவைப் பிச்சுப் போட்டு சால்னா ஊற்றிய ரீதியில், இத்தாலியன் மொழியில் யாஷ் பிரஜிதனிடம் எதுவோ கேட்க, அவனும் அதே பரோட்டாவைப் பிச்சுப் போட்டுக் கொண்டிருந்ததில், “ஒருத்தனைச் சமாளிக்கிறதே கஷ்டமா இருக்கே. இதுல இவனை மாறி இன்னொரு வெளிநாட்டுக்காரம்மாவை இழுத்தாந்துருக்கான்!” நிவேதன் எச்சிலை விழுங்கினான்.
அப்போதே, நிதர்ஷனா கண்மணி சிந்தாமணி மூவரும் அறைக்குள் நுழைந்திட, யாஷுடன் வந்த பெண்மணி கண்மணியை வாரி அணைத்துக் கொண்டதோடு, நிதர்ஷனாவையும் உச்சந்தலையில் கை வைத்து ஆசீர்வாதம் செய்வது போல அன்பாய் பேசிட, “இவங்க யாரு யாஷ்?” எனக் கேட்டாள் புரியாமல்.
“எனக்கு ஒரு அத்தை இருக்காங்கன்னு சொல்லிருக்கேன்ல நிது… அது இவங்க தான்!” என்றதும்,
“எப்பச் சொன்ன?” என மறுகேள்வி கேட்டவளை ஒரு கணம் சலனமற்றுப் பார்த்தான்.
அவனது திருமணத்தை நிறுத்தி விட்டு, இவளைத் தேடி வந்தது எல்லாம் அவளது நினைவடுக்கில் இல்லையே. அவன் காதலைக் கூறியதும், தனது குழப்பங்களுக்கு விளக்கம் கூறியது அனைத்தும் கேள்விப்பட்டது மட்டுமே!
ரித்திகாவுக்கும் ‘லவ் யூ’ சொல்லி விட்டுத் தனக்கும் சொல்வதாய் கோபப்பட்டவளிடம், அவனது அத்தையான ஏஞ்சலினாவிற்கு அழைத்துப் பேசி, அவருக்கும் அன்பாய் ‘ஐ லவ் யூ’ சொல்வது தனது வழக்கமெனப் புரிய வைத்தவைகள் மன ஆழத்தில் அத்தனை அழுத்தமாய் பதிந்திருக்கவில்லையே!
தொண்டையைச் செருமிக் கொண்ட யாஷ் பிரஜிதன், “இவங்க என் ஆண்ட்டி ஏஞ்சலினா…” என்றதும், “ஓ, இவங்களுக்கு ஒரு பொண்ணு இருக்கான்னு சொல்லிருக்கல்ல… இப்ப ஞாபகம் வருது.” எனத் தலையாட்டினாள்.
முன்னொரு முறை, மின்சாரம் தடைப்பட்ட சமயத்தில் இருவருக்கும் ஏற்பட்ட உரையாடல்கள் நினைவிலாடியதில் கேட்டிருந்தாள்.
அதற்குள் அவனது முகமாற்றத்தையும் கண்டு கொண்டவளுக்கு, மனம் மெலிதாய் சுணங்கியது. அவளது சுணக்கம் உணர்ந்த நொடியில் பாவனைகளை மாற்றிக் கொண்டான்.
ஆதிசக்தியும் அங்கு வந்து விட்டவர், ஏஞ்சலினாவைக் கண்டு கண் கலங்கினார்.
ஏஞ்சலினாவும், ஆதிசக்தியை அணைத்துக் கொண்டு, “யூ டிட் இட் ஆதி…” என்று யாஷைக் குறித்துக் கூற, ஆதிசக்திக்கு மனம் நிறைந்தது.
நிவேதனையும் கதிரவனையும் காட்டி யாஷ் ஏதோ ஏஞ்சலினாவிடம் கூற, அவர்களைக் கண்டு புன்னகை பூத்தார் அவர்.
“நம்மளைப் பத்தி தான் ஏதோ கேவலமா சொல்றான்…” கதிரவன் முணுமுணுக்க,
“என்ன சொன்னாலும் நமக்குப் புரியாதுல்ல வுடுடா…” என்றவனின் விழிகள் கண்மணியிடம் பதிந்தது.
அனார்கலி சுடிதாரில் தன்னை அழகாய் புதைத்திருந்த கண்மணி, நிவேதனின் பார்வையைத் தவிர்க்கும் பொருட்டுக் கண்களை அங்கும் இங்கும் சுழல விட்டுப் பின், தன்னை அடக்க இயலாமல் அவன் கண்ணை ஏறிட்டு விட, ஒரே கணம் இருவரது விழிகளும் ஒருசேரத் தீண்டிக் கொண்டது.
அவளோ அந்தப் பார்வையின் வீரியத்தில் திகைத்துப் போயிருக்க, நிவேதன் தான் ஸ்நேகமாய் புன்னகைத்தான்.
அது கூட அவளது உள்ளத்தை அசைத்துச் சென்றதை அவன் அறியவில்லை. அவளும் வேறு வழியின்றிச் சிறு புன்னகையைக் கொடுத்து விட்டுத் திரும்பினாள்.
சிந்தாமணியோ, கதிரவனையே அப்பட்டமாய் சைட் அடித்துக் கொண்டிருக்க, “இவள் இன்னாத்துக்குடா வந்துருக்கா?” எனப் புலம்பினான்.
“நீ எப்படி வந்து சிக்கி இருக்கியோ, அதே மாதிரி அவளும் சிக்கி இருப்பாளா இருக்கும்.” நிவேதன் கூறியதில்,
“இந்த ஆடு தானா சிக்கி இருக்கும்னு தான் தோணுது மச்சி…” என்றான் யோசனையாக.
அவனது கூற்றுச் சரிதானென்பது போலச் சிந்தாமணியே, “எனக்கும் உங்க ஆபிஸ்ல ஒரு வேலை போட்டுக் குடுங்க மாமா…” என அடக்க ஒடுக்கமாய் யாஷிடம் வந்து நின்றிருந்தாள்.
“வை நாட்! யூ கேன் ஜாயின் அட் எனி டைம் சிந்தா…” என்று யாஷ் அவள் தலைமுடியைக் கலைத்து விட, “ஐ! தேங்க்ஸ் மாமா…” எனத் துள்ளிக் குதித்தவளிடம், “பட் சின்சியரா வேலை பார்க்கணும். ஆபிஸ்ல சைனீஸ் சீரிஸ் பார்க்கக் கூடாது.” என்று கண்டிப்பாய் கூறியதில், “நான் வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரனோட முறைப் பொண்ணா மாறிடுவேன்!” எனப் பெருமை பீத்திக் கொண்டாள்.
‘ம்ம்க்கும்… அடி வாங்குறதுக்குனே தனக்குத் தானே அளவெடுத்துக்குது பைத்தியம்!’ என நிதர்ஷனா தான் நமுட்டு நகை பூத்தாள்.
பின், அனைவரும் மீட்டிங் ஹாலில் கூடினர்.
எலைட் நிறுவனத்தின் போர்ட் மெம்பெர்ஸ் எல்லாரும் அதிருப்தியாய் அமர்ந்திருக்க, ரித்திகாவும் வந்து விட்டாள்.
“வை சோ லேட் பேப்?” யாஷ் ரித்திகாவிடம் விசாரிக்க, “லேப்ல கொஞ்சம் ஒர்க் யாஷ்!” என வலுக்கட்டாயமாகச் சிரித்து வைத்து விட்டு நாற்காலியில் அமர்ந்தவளை நிதர்ஷனா முறைத்தாள்.
‘பேபாம் பேபு…’ என நொடித்துக் கொண்டவள், ரித்திகாவையே யோசனையாய் பார்த்திருந்த ஆஹில்யனிடம் கிசுகிசுப்பாக, “யோவ் மாம்ஸ், உன் ஆளுக்கு ரெண்டு நாளா வீட்டுக்குக் கூட வர முடியாத மாதிரி என்ன வேலையாம்?” எனக் கிசுகிசுத்தாள்.
“லேப்ல ஒர்க்காம்!” அவனும் தன்னிடம் இரு நாள்களாய் பேசாமல் இருந்தவளை முறைத்தான்.
“ஓ! ஒழுங்கா இன்னைக்கு வீட்டுக்கு வரச் சொல்லு மாம்ஸ் அவள…” நிதர்ஷனாவின் கூற்று ரித்திகாவின் காதிலும் விழுந்தாலும் ஆஹில்யனிடமே, “எனக்கு வேலை இருந்தா நான் மொபைல் எடுக்க மாட்டேன்னு தெரியும் தான ஆஹில்…” என்றதில் அவனும் ஒப்புக் கொண்டான்.
ஆனால், நிதர்ஷனா திருப்தியடையவில்லை. யாஷிடம் இவளைப் பற்றிப் பேச வேண்டுமெனக் குறித்துக் கொண்டாள்.
அதன் பிறகு நடந்தவைகள் எதுவும் ரித்திகா, ஆஹில்யன் தவிர இளையவர்களுக்குத் துளியும் புரியவில்லை.
ஐவரும் கன்னத்தில் கை வைத்துக் கொண்டனர்.
“சிந்தா… நீ போடுற சைனீஸ் சீரிஸ் கூடப் புரிஞ்சுடும்போல. உன் மாமன்காரன் பேசுறது ஒண்ணுமே புரிய மாட்டுதே…” நிவேதன் தனதருகில் அமர்ந்திருந்த சிந்தாமணியிடம் முணுமுணுக்க,
“உங்க மச்சான்காரன், ஒப்புக்குச் சப்பாணியா வந்த என்னை எதுக்கு உக்கார வச்சு மூச்சு வாங்கப் பேசுறாருன்னு எனக்கும் புரியல அண்ணா. கீழ சப்டைட்டில் போடச் சொல்லலாமா?” அவளும் யோசனையாய் கேட்க,
“சப்டைட்டில் போட்டா மட்டும் ரெண்டு பேருக்கும் புரிஞ்சு தள்ளிடுமாக்கும்!” கதிரவன் இருவரையும் வாரியதில் கண்மணி, “சும்மா இருங்கப்பா, அண்ணியைப் பாருங்க. எவ்ளோ தீவிரமா அண்ணா பேசுறதைக் கேக்குறாங்கன்னு. ஒருவேளை அவங்களுக்கு எல்லாம் புரியுமோ?” எனக் கேள்வி எழுப்பிட, நால்வர் குழுவும் அவளை ஒன்றாய் ஏறிட்டது.
‘இந்தக் கலப்படக் கண்ணுக்காரன் இன்னைக்குனு பார்த்து ரொம்ப ஹாட்டா இருக்கானே… நம்மளும் அவனை மாறி சுற்றுப்புறத்தைக் கண்டுக்காம ஒரு கிஸ் அடிச்சுட்டு வந்து உக்காந்துக்கலாமா?’ என்ற தீவிர சிந்தனையில் இருந்திட, நிவேதன் தங்கையின் பார்வையைச் சரியாகக் கணித்து விட்டான்.
“இவ அவனைத் தீவிரமா சைட் அடிச்சுட்டு இருக்கா கண்மணி… காலேஜுக்கு அனுப்பிப் படிக்க வச்சது எல்லாம் இங்கிலிஷ் பேசுறவனை சைட் அடிக்கிறதுக்குனு தெரியாம போச்சு.” எனக் கிண்டலடித்தான்.
ஓரக்கண்ணில் தமையனை முறைத்தவள், “அவன் பேசுறது அமெரிக்கன் இங்கிலிஷ்டா பட்டர்… சரஸ்வதி தேவியே இறங்கி வந்தாலும் புரியாது.” என்றதில் ஐவரும் மெலிதாய் சிரித்திட, அந்த அமைதியான அரங்கத்தில் அது கொலுசோசையாய் கிளுகிளுக்க, மொத்த அரங்கத்தினரும் இவர்களைப் புழுவைப் போலப் பார்த்தனர்.
அரக்கன் தொடரும்
மேகா
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
7
+1
55
+1
4
+1
1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


Super
Wow da