Loading

அத்தியாயம் 39

“எதுக்குப் பிசாசு என்னைக் கூப்பிட்ட.?” எனக் கணியன் எரிச்சலுடன் அத்தை மகளிடம் வினவ, “என்னடா செய்யப் போற?” என்று மறுவினா எழுப்பியவளின் குரலில் கண்டிப்பு எட்டிப் பார்த்தது.

புரியாது விழித்தவன், “என்ன கேட்குற?”

“நீ ஆளே சரியில்ல. நான், கோவில்ல இருந்தே உன்னை கவனிச்சுக்கிட்டு தான் இருக்கேன். ரோகிணியவே பார்த்துட்டு இருக்க?”

“அட பிசாசு! தப்பா எல்லாம் எதுவும் இல்ல.”

“தப்பா பார்க்கிறனு நான் சொன்னேனா?”

“அப்புறம், வேற என்ன?”

“உன்னோட பார்வை சரியில்ல, அத்தை மகனே! என்ன செய்யிறா, எங்க போறா, வர்றானு நோட்டம் விடுற!”

“ஓ.. நீ கூடதான் அருண் அண்ணாக்கிட்ட மண்டபத்துல ரொம்ப நேரமா பேசிக்கிட்டு இருந்த. அதுவும் பக்கத்துல நின்னு!”

“அடப்பாவி! நான் மௌனியோட ஃப்ரெண்ட், அவரு சரண் அண்ணாவோட ஃப்ரெண்ட். அவங்க ரெண்டு பேரோட லைஃபை பத்திதான் பேசிக்கிட்டு இருந்தோம்.”

“அப்படியா?”

“நம்பலேனா போ!”

“அதேமாதிரி, நீயும் என்னை நம்பணும்னு அவசியம் இல்ல. நான் ரொகிணிக்கிட்ட பேசத்தான் போனேன். ஆனா, நீ நினைக்கிற மீனிங்ல இல்ல!” என்றவன் மாமன் மகளைக் கண்டு கொள்ளாது அங்கிருந்து நகர்ந்தான்.

ரோகிணி அமர்ந்திருந்த இடத்திற்கு வந்து பார்க்க, அவள் எழுந்து அறைக்குள் சென்று கொண்டிருந்தாள்.

“ரோகிணி.. ஏங்க ரோகிணி. கொஞ்சம் நில்லுங்க. ஒரே ஒரு நிமிஷம்!” என உரைத்தவாறே பின்னால் செல்ல, அவளிடம் இருந்து எந்த எதிர்வினையும் இல்லை.

பெண்கள் அனைவரும் மணப்பெண்ணுடன் இரவில் தங்கி இருந்ததால், உடையை தருவதற்காக அவள் அறைக்கு வந்த பொழுது, அவர்களிடம் ரோகினியின் இயலாமையைப் பற்றி உரைத்து இருந்தாள் மௌனிகா.

ஆனால் கணியனிற்கு அந்த வாய்ப்பு கிட்டவில்லை. சரணும், திருமண அழுத்தத்தாலும் வருங்கால மனைவியைப் பற்றிய சிந்தனையாலும் தங்கையைப் பற்றி உரைக்க மறந்திருந்தான்.

தனது அழைப்பை கண்டு கொள்ளாது செல்பவளின் நடவடிக்கையில் எரிச்சல் தோன்றிட, ஓடிச் சென்று கைப்பற்றி நிறுத்தினான் ஆடவன்.

நடந்த நிகழ்வில் அதிர்ந்து பார்த்த பாவை, “இது வீடு, யாரும் இல்லாத ரோடு இல்ல. எல்லாரும் இங்கதான் இருக்காங்க. நேத்து ஃபோட்டோ எடுத்து பிரச்சனை பண்ண. இன்னைக்குக் கையைப் பிடிச்சு வம்பு செய்யிறியா? உனக்கு எல்லாம், மரியாதைனா என்னனு தெரியாதா?” என வசை சொற்களை வீச, 

“எத்தனை தடவை கூப்பிடுறேன், நீங்க பாட்டு காது கேட்காதது மாதிரி போறீங்க? ஒன் டைம் நின்னு என்னனு கேட்டு இருந்தா, நான் எதுக்கு வந்து கையை பிடிக்கிறேன்? ஸாரி, உங்க  கையைப் பிடிச்சதுக்கு!” என்று தனது செயலுக்கான விளக்கத்தைத் தந்து, பற்றிய கரத்தை விலக்கிக் கொண்டான் கணியன்.

“கூப்பிட்டியா என்னை?”

“ஏது கூப்பிட்டியாவா? ஒன்னு, ரெண்டு, மூணு..” என தனது விரல்களை நீட்டி எண்ணியவன், “ஆறு தடவை கூப்பிட்டேன்!” என கையை அவளது முகத்திற்கு நேராய் காட்டினான்.

“ஏய்.. ச்சீ.. கையை அந்த பக்கம் தள்ளிவை!” என்று கணியனின் கரத்தை தள்ளிவிட, “இப்ப மட்டும் நீங்க என்னோட கையைப் பிடிச்சீங்க? இது அப்யூஸ் இல்லையா.?”

“ஹான்..” என்று தலையை ஒரு விதமாய் அசைத்தவள், “பொண்ணும் பையனும் ஒன்னா.?”

“பின்ன, ஒன்னு இல்லையா? ரெண்டு பேருக்கும்  ரெண்டு கண்ணு, ஒரு மூக்கு, ஒரு வாயி, இரண்டு கை, இரண்டு கால், வயிறு, அதுக்குள்ள இருக்கிற குடலுனு எல்லாம் ஒரே மாதிரிதான இருக்குது?”

“அடடா! என்ன ஒரு கிரேட் கம்பேரிசன்?”

“தேங்க்யூ ஃபார் யுவர் காம்ப்ளிமெண்ட்!”

“சரி, எதுக்கு என்னை கூப்பிட்ட?”

“நான் கூப்பிட்டதுக்கு ஏன் திரும்பி பார்க்கலனு முதல்ல பதில் சொல்லுங்க!”

‘பின்னாடி இருந்து கூப்பிட்டா, எனக்கு எப்படி தெரியும்? நீ, முன்னாடி வந்து இல்ல, பேசி இருக்கணும்?”

“இது என்ன கொடுமையா இருக்கு? ஒருத்தர்கிட்ட பேசணும்னா கூப்பிட்டு தான் நிப்பாட்ட முடியும். அது முன்னாடியா இருந்தா என்ன? பின்னாடியா இருந்த என்ன?”

“என்கிட்ட முன்னாடி வந்து பேசினா தான், நான் ரிப்ளை பண்ணுவேன்!”

“இது என்ன பிடிவாதம்? ஏன், பின்னாடி இருந்து பேசினா என்ன?”

“எனக்குத் தெரியாது!”

“புரியல. ஏன் அப்படி?”

“ஏன்னா? என்னால கேட்க முடியாது. பின்னாடி இருந்து கூப்பிட்டா, முன்னாடி பக்கம் திரும்பி இருக்கிற எனக்கு, எப்படி தெரியும்.?”

“வாட்..?” என அதிர்ந்தவன், “என்ன சொன்னீங்க?”

“ஏன், அண்ணி உன்கிட்ட சொல்லலையா? நீ என்னோட டிஸ்எபிலிட்டியை மறந்து, பேசிட்டு இருக்கனு இல்ல நினைச்சேன்!”

“இல்ல, எனக்கு யாரும் சொல்ல. தெரியாது. ஸாரி ரோகிணி!”

“ஏய்.. இந்தமாதிரி பாவமா பாக்குறதை முதல்ல நிறுத்து. நான், நல்லாதான் இருக்கேன்.”

“ஏங்க.. பாவமா எல்லாம் பார்க்கல. நானே ஷாக்குல இருக்கேன்!” என அவன் அங்கிருந்த இருக்கையில் அமர, நெஞ்சம் ஏனோ காரணம் இன்றி அதி வேகத்தில் துடித்தது. 

அதன் விளைவாய் பார்வை அங்கும் இங்குமாய் அலைபாய, அவனைப் பார்த்திருந்த ரோகிணிக்கு ஏனோ சிரிப்புதான் வந்தது.

“எதுக்கு ஷாக்.?”

“அழகான பொண்ணுக்கு இப்படி ஒரு குறையானு தான்!”

பக்கவாட்டில் திரும்பி இருந்தவனின் வாய் அசைய, ரோகிணியால் புரிந்து கொள்ள முடியாமல் போனது.

“எதுவும் சொன்னியா? எது பேசுறதா இருந்தாலும், நேருக்கு நேர் பார்த்து பேசு!”

கணியன் பாவையின் பக்கம் திரும்பிட, “எப்படி நான் பேசுறதை நீங்க புரிஞ்சுக்கிறீங்க?”

“வாய் அசையிறதை வச்சு!”

“ஓ.. அப்படியேனாலும் அக்யூரெட்டா எப்படிப் புரிஞ்சிக்க முடியும்?”

“லிப் ரீடிங் தெரியும். கத்துக்கிட்டேன்!”

“வாவ்.. சூப்பர்ல.?” என வியப்புடன் புன்னகைத்த ஆடவன், இந்நொடியில் புதியவனாய்  தெரிந்தான் அவளிற்கு.

“ஸாரிங்க. நான் வேணும்னே உங்களை ஃபோட்டோ எடுக்கல. ஆனா, தப்புதான் அது. ஸாரி. மத்தபடி நான் கெட்டவன் எல்லாம் இல்லங்க. மாம்ஸ், விமல் மாதிரி தான் நானும். எனக்கும் ஒரு அக்கா இருக்கா. அத்தை பொண்ணு இருக்கா. இப்ப மௌனி அக்காவும். பொண்ணுங்க விஷயத்துல தப்பு செய்ய மாட்டேன். என்னை மன்னிச்சிடுறீங்களா ப்ளீஸ்? மௌனி அக்காக்குத் தெரிஞ்சா, வருத்தப்படுவாங்க, பாவம்.”

“ஹோ.. அடி பலமோ.?”

“ஹான்.. என்ன கேட்டீங்க?”

தனது நெற்றியை தொட்டு காட்டினாள் அவள்.

அதை உணர்ந்து நெற்றியில் இருந்த காயத்தை வருடிக் கொண்டவன், “அப்படி எல்லாம் இல்ல, லைட்டா தான்.”

“சரி, இந்த விஷயத்துக்காக உங்களை மன்னிச்சிடுறேன். இனிமேல் இப்படி நடந்துக்காதீங்க. அப்புறம் இதுக்கூட அண்ணிக்காக தான். என்னோட அண்ணாக்கு, அவங்களை ரொம்ப பிடிச்சிருக்கு. இதுனால அவங்க ரெண்டு பேரோட லைஃப் அஃபெக்ட் ஆகுறதை நான் விரும்பல! அதுவும் இல்லாம, இனி இது ரொம்ப காலம் தொடர போற ரிலேஷன்ஸிப். பிரச்சனயை இப்படியே கண்டினியூ பண்ணி கடைசி வரைக் கொண்டு போறது எந்த ஒரு உறவுக்கமே நல்லது இல்ல. சோ..”

“ஹப்பாடா. தேங்க்ஸ் ரோகிணி!” என நிம்மதி மூச்சுவிட்டு எழுந்தவன், “அப்புறம் ஒரு ரெக்குவஸ்ட்.”

அவள் கேள்வியாய்ப் பார்க்க, “உங்களுக்கு மாடலிங் பண்ணுற ஐடியா எதுவும் இருக்கா?”

விழிகள் சுருக்கி அவனைக் கூர்ந்து நோக்கியவள், “எதுக்கு கேக்குறீங்க?”

“உங்களுக்கு ஃபோட்டோ ஃபேஸ் ரோகிணி. நான் எடுத்த ஃபோட்டோ செமயா இருந்துச்சு. டிரைப் பண்ணா, மாடலிங்ல பிரைட் ஃபியூச்சர் இருக்கு. ஏற்கனவே ரெண்டு பொண்ணுங்களை நான் இண்ட்ரோடியூஸ் செஞ்சிருக்கேன். உங்களுக்கு விருப்பம்னா சொல்லுங்க, பண்ணலாம். இஷ்டம் இல்லனா நான் சொன்னதை அப்படியே மறந்துடுங்க. மாம்ஸ், விமல், அருண் அண்ணானு யார்கிட்டயாவது சொல்லி அடி வாங்கி கொடுத்திடாதீங்க!” என அவளிற்கு இடையே பேசுவதற்கு வாய்ப்புக் கொடாது மூச்சை விடாமல் உரைத்தவன், ‘தப்பித்தேன் பிழைத்தேன்!’ என்று அங்கிருந்து தூரித கதியில் நகர்ந்தான்.

“ஏற்கனவே வாங்கின அடி பத்தல போல இருக்கு? எல்லாரையும் இன்னொரு தடவைக் கவனிக்கச் சொன்னா தான், புத்தி வரும்!” என்ற அவளின் மறுமொழி கணியனின் செவியை அடைய, திரும்பிப் பார்த்துப் புன்னகைத்தவன், “மை ப்ளஷர்!” எனக் குரல் எழுப்பாமல் வாய் அசைத்து அவளிற்கு மட்டும் புரியும் விதத்தில் சொல்லிச் சென்றான். 

‘இவனை என்னதான் செய்யிறது? பாம்புனு நினைச்சு அடிக்கவும் முடியல. பழுதுனு நினைச்சு தள்ளவும் முடியல. நாமளே.. போனா போகுதுனு விட நினைச்சாலும், எப்பவும் வாலண்டியரா சிக்குறதுக்கு இவன் ரெடியா இருக்கான்!’ என மனதோடு எண்ணியவள் மெலிதான பெரூமூச்சை விட்டபடி அறையை நோக்கி நடந்தாள்.

ரஞ்சனி மற்றும் கணியனின் குடும்பத்தாரை வழியனுப்பும் பொறுப்பை தோழனிடம் ஒப்படைத்து இருந்தான் சரண்.

நால்வரையும் கோவில்பட்டி இரயில் நிலையத்தில் ஏற்றிவிட்டு, இரவு உணவையும் வாங்கித் தந்தான்.

“எதுக்கு இது? நாங்க வாங்கிக்க மாட்டோமோ?” என ரஞ்சனி வினவிட, “நண்பனோட ஆர்டர். செய்யணும்ல.?” என்று புன்னகைத்தான்.

“நல்ல ஃப்ரெண்ட்ஸ் தான்.”

“உங்க அளவுக்கு இல்லனாலும், ஏதோ நாங்களும் கொஞ்சம்..” என அவன் பாதியில் நிறுத்திட, “என்ன கேலி பண்றீங்களா?”

“சேச்சே.. அதெல்லாம் இல்ல. சும்மா விளையாட்டுக்கு தான் சொன்னேன்!” எனப் பாவைக்கு சமாதானம் சொல்லிட, இதழ்களை சுளித்து அழகு காட்டிவிட்டு திரும்பிக் கொண்டாள் அவள்.

கணியனிடம் தனது கைப்பேசி எண்ணைப் பகிர்ந்து கொண்ட அருண், “எதுவும் ஹெல்ப் வேணும்னா கால் பண்ணு. சென்னையில நமக்கும் தெரிஞ்ச ஆளுங்க நிறைய இருக்காங்க. எதுனாலும் செஞ்சிடலாம்!” என உரைக்க, “அண்ணா, பெரிய இடம் போலயே.?” என்று கேலியாய் வினவினான் அவன்.

“அப்படி ஒன்னும் பெரிய இடம் இல்ல. ஆனா, பெரிய இடத்துக்கூட நிறையவே டச் இருக்கு!”

“அடடா!” எனச் சிரித்தவன், “அப்ப நீங்க சென்னைக்கு வருவீங்களா.?”

“சித்தப்பா, சென்னையில நாலு பிராஞ்ச் வச்சு நடத்துறாரு. அதுல ஒன்னைத்தான் திவா பாக்குறான். நானும் ரெண்டு மாசத்துக்கு ஒருதடவை வந்து போவேன். கடை தனித்தனியா இருந்தாலும், நாங்க ஒரே ஃபேமிலி தான்.”

“அப்ப, சான்ஸ் கிடைச்சா மீட் பண்ணலாம்.” என கணியன் கைப்பற்றிக் குலுக்க, “மீட் பண்றதுக்கு சான்ஸ் அமையணுமா என்ன? ஒரு கால், போதுமே?”

“அதுவும் சரிதான்!”

“மௌனி சிஸ்டர் அங்கதான இருப்பாங்க? அவங்களைப் பார்க்க கண்டிப்பா வருவேன். மீட் பண்ணலாம். ஓகே கணி. டேக் கேர். சேஃப் ஜர்னி!” என்று கை அசைத்து விடை கொடுத்தவன், நடைமேடையில் நின்றபடியே உள்ளே அமர்ந்திருந்த பாவையை நோக்கினான்.

அவள் இன்னும் வெளிப்பக்கம் திரும்பாமல் அத்தை மட்டும் அவரது மகளிற்கு இருக்கையை சரிபார்த்து அமர்வதற்கு உதவிக் கொண்டிருந்தாள்.

பாவையானவள் பணியை முடிக்கும் வரை காத்திருந்தவன் ஜன்னல் கம்பிகளின் மீது கரத்தை பதித்து முகத்தை அருகே கொண்டு சென்று, “மிஸ் ரஞ்சனி.?”

அவள் திரும்பிக் கேள்வியாய் பார்த்திட, “பாய்..”

“அதை இவ்வளவு பக்கத்துல வந்து சொல்லணுமா என்ன?”

“சும்மா சொல்லிப் பார்த்தேன். சீக்கிரம் மீட் பண்ணலாம்!” என தலை அசைக்க, அவர்களுக்கு இடையேயான தூரத்தை அதிகரித்த படி, தொடர்வண்டி கிளம்பி சென்றது.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 17

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
17
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்