Loading

பரத்திற்கான இதய மாற்று அறுவை சிகிச்சை பல மணி நேரங்களுக்கு நடைபெற்றது.

பரிமளம் கடவுளே கதி என கோவிலில் தஞ்சம் அடைய, சகுந்தலா ஆப்பரேஷன் தியேட்டரின் வாசலை விட்டு எங்கும் அசையவில்லை.

இடைக்கிடையே திடீரென தாதிகள் வெளியே வருவதும் உள்ளே போவதுமாக வேறு இருக்க, சகுந்தலாவின் பயத்தை சொல்ல வார்த்தைகள் இல்லை.

ஒருவாறு பரத்தின் அறுவை சிகிச்சையை முடித்துக் கொண்டு துஷ்யந்த் வெளியே வர, அவசரமாக அவனை நெருங்கி அவன் முகத்தைப் பதட்டத்துடன் ஏறிட்டாள் சகுந்தலா.

விழிகள் கலங்கிப் போய் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு நின்ற சகுந்தலாவை மறு நொடியே காற்று கூட புக முடியாதளவு இறுக்கமாக அணைத்துக் கொண்ட துஷ்யந்த், “ஆப்பரேஷன் சக்சஸ்…” என்றான் ஆனந்தக் கண்ணீருடன்.

சில நொடிகள் என்ன நடக்கிறது எனப் புரியாமல் அதிர்ச்சியில் உறைந்த சகுந்தலா துஷ்யந்தின் வார்த்தைகள் காதில் விழவும் துஷ்யந்தைப் பதிலுக்கு அணைத்தவாறு சந்தோஷத்தில் சத்தமாகவே அழுதாள்.

அவளை சமாதானப்படுத்துவதற்குள் துஷ்யந்திற்கு போதும் போதும் என்று ஆகி விட்டது.

சில நொடிகள் கழித்து துஷ்யந்தின் அணைப்பில் இருந்து விலகிய சகுந்தலா, “பரத் எப்படி இருக்கான்? நான் பார்க்கலாமா?” எனக் கேட்டாள் ஆவலாக.

“நோ… ஒரு மேஜர் ஆப்பரேஷன் பண்ணி இருக்கோம். இப்போ பார்க்க முடியாது. இன்னும் கொஞ்சம் நேரம் கழிச்சு நானே கூட்டிட்டுப் போறேன். பட் ரொம்ப நேரம் எல்லாம் இருக்க முடியாது.” என தனுஷ் கூறவும் சகுந்தலாவின் முகம் உடனே வாடிப் போனது.

“சகுந்தலா… என்ன இது? நம்ம பையன் நல்லா தான் இருக்கான். இவ்வளவு நேரம் வெய்ட் பண்ணிட்ட.‌ இன்னும் கொஞ்சம் நேரம் தானே. நீ அதுக்குள்ள வீட்டுக்கு போய் குளிச்சிட்டு, ட்ரெஸ் சேன்ஜ் பண்ணிட்டு, சாப்பிட்டுட்டு வா. பாரு எப்படி களைச்சிப் போய் இருக்கன்னு. இப்போ பரத்த ரொம்ப சேஃபா பார்த்துக்கணும். ஏன்னா ரொம்ப சீக்கிரமா இன்ஃபெக்ஷன் ஆக வாய்ப்பு இருக்கு. பார்த்து நடந்துக்க. நான் இங்க அம்மாவ வர சொல்றேன்.” என துஷ்யந்த் கூறவும் மனமே இன்றி சரி எனத் தலை அசைத்த சகுந்தலா அங்கிருந்து கிளம்புவதற்காகத் திரும்பினாள்.

சட்டென அவளின் கரத்தைப் பிடித்து துஷ்யந்த் இழுக்க, அதிர்ந்து திரும்பியவள் துஷ்யந்தைக் குழப்பமாக ஏறிட்டாள்.

அந்த சில கணங்களுக்குள் தன்னவளின் முகத்தில் வந்து போன பாவனைகளில் தன்னை மறந்து நின்று இருந்தான் துஷ்யந்த்.

“துஷ்யந்த்… என்னாச்சு?” என சகுந்தலா கேட்கவும் தான் தன்னிலை அடைந்த துஷ்யந்த், “அ..அது… ஆங்… நானும் வீட்டுக்கு போக வேண்டி இருக்கு.‌ ஃப்ரெஷ் ஆகிட்டு வருணும். அம்மா வந்ததும் அவங்கள இங்க விட்டுட்டு நாம சேர்ந்து போகலாம்.” என்றவாறு சகுந்தலாவைப் பிடித்து வைத்துக் கொண்டான்.

சகுந்தலா இருந்த மனநிலையில் இதை எல்லாம் பெரிதாகத் தலையில் போட்டுக் கொள்ளவில்லை.

சற்று நேரத்தில் பரிமளம் வந்து விட, சகுந்தலாவை அணைத்துக் கொண்டு வீட்டுக்குக் கிளம்பினான் துஷ்யந்த்.

முதலில் சகுந்தலா வீட்டுக்குச் சென்று அவளை இறக்கி விட்டவன், “எல்லா வேலையையும் முடிச்சிட்டு கால் பண்ணு. நான் வந்து பிக்கப் பண்ணிக்குறேன்.” என்ற துஷ்யந்திடம் சகுந்தலா ஏதோ மறுத்துப் பேச வாய் திறக்க, துஷ்யந்த் அவளை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்து விட்டு அங்கிருந்து கிளப்பினான்.

சொன்னது போலவே சகுந்தலாவை அழைத்துக் கொண்டே மருத்துவமனை வந்தவன் முழுப் பாதுகாப்புடன் சகுந்தலாவை பரத் இருந்த அறைக்கு அழைத்துச் சென்றான்.

வாடிய கொடியாய் படுத்து இருந்த சிறுவனோ இன்னுமே மருத்துவ சாதனங்களோடு தான் இருந்தான்.

அதனைக் கண்டு சகுந்தலா துஷ்யந்தைக் கேள்வியாக நோக்க, அதனைப் புரிந்து கொண்ட துஷ்யந்த், “என்ன தான் ஆப்பரேஷன் சக்சஸா முடிஞ்சாலும் இன்னும் சில நாட்களுக்கு பரத்த அப்சர்வேஷன்ல வைக்க வேண்டி இருக்கு. அதுவரை இதெல்லாம் கொஞ்சம் பொறுத்துக்க தான் வேணும்.” என சமாதாரனப்படுத்தினான்.

சற்று நேரம் அங்கு இருந்து விட்டு இருவரும் வெளியேறினர்.

அனைவரும் பதற வைத்து விட்டு சரியாக ஒரு நாள் கழித்தே இமைகளைப் பிரித்தான் பரத்.

இமைகளைப் பிரித்தவன் முதலில் கண்டது தனக்கு முன்னால் நின்று இருந்த தன் பெற்றோரைத் தான்.

இருவரையும் சேர்த்துக் காணவும் அனைத்தையும் மறந்து பெரிதாகப் புன்னகைத்தான் பரத்.

அதனைக் கண்டு சகுந்தலா கண்ணீர் சிந்த, “ஷ்ஷ்ஷ்… சகுந்தலா… கன்ட்ரோல் யுவர் செல்ஃப்.” என மெல்லிய குரலில் மனைவியைக் கடிந்து கொண்ட துஷ்யந்த், “சேம்ப்… ஹவ் டூ யூ ஃபீல்?” எனக் கேட்டான் பரத்திடம் புன்னகையுடன்.

பரத் அதற்கும் புன்னகையையே பதிலாக வழங்கினான்.

ஏற்கனவே இருந்த இதயப் பிரச்சினையுடன் கூடவே நடந்த விபத்தில் பரத்தின் உடல் மிகவும் பலவீனமாகக் காணப்பட, இப்போது இவ்வளவு பெரிய அறுவை சிகிச்சை நடந்த பின் அப் பாலகனோ உடலளவில் இன்னுமே வலு இழந்து இருந்தான்.

அதனால் சில நொடிகளில்‌ பரத் மீண்டும் மயக்கத்திற்கே சென்று விட, சகுந்தலாவோ பதறி விட்டாள்.

“பரத்… என்னாச்சு துஷ்யந்த்? ஏன் என் பையன் எதுவும் பேச மாட்டேங்குறான்? அவன் ஓக்கே தானே. ஏன் இப்போ திரும்ப மயங்கிட்டான்?” எனக் கேட்டாள் சகுந்தலா பதட்டத்துடன்.

அவளைப் பொய்யாக முறைத்துப் பார்த்த துஷ்யந்த், “சகுந்தலா… இது ஒன்னும் படமோ நாடகமோ இல்ல சர்ஜரி முடிஞ்சதும் எழுந்து பழையபடி நடமாட. அவனுக்கு இப்போ தான் அஞ்சு வயசு ஆகுது. ஒரு‌‌ சின்ன காயம் வந்தா கூட பெரியவங்க நாமளே தாங்க மாட்டோம். இவ்வளவு பெரிய சர்ஜரி நடந்து இருக்கு. அதோட அஃபெக்ட் உடம்புல இருக்கும்ல. அதனால தான் டயர்ட்ல மயங்கிட்டான். இதெல்லாம் சாதாரணம் தான்.‌ நீ சும்மா எதையும் போட்டு யோசிச்சு பயப்படாதே. எப்பவும் நம்மள சுத்தி இருக்குற வைப் பாசிட்டிவ்வா இருக்கணும். நீயே இப்படி நெகடிவ்வா திங்க் பண்ணா அதுக்கு மேல நான் என்ன பண்ண?” எனக் கேட்டான் கடினமான குரலில்.

அது சரியாக சகுந்தலாவிடம் வேலை செய்ய, எதுவும் பேசாமல் கப்சிப் என வாயை மூடிக் கொண்டாள்.

அடுத்து வந்த ஒரு வாரமும் பரத்தை மருத்துவமனையிலேயே வைத்து கட் காணித்தனர்.

சரியாக ஒரு வாரத்தில் பரத்தின் உடல்நிலையைப் பரிசோதித்து எல்லாம் சாதாரணமாக இருப்பதை உறுதி கொண்டு அவனை டிஸ்சார்ஜ் செய்து துஷ்யந்தின் வீட்டுக்கே அழைத்துச் சென்றனர்.

சகுந்தலா எவ்வளவோ மறுத்தும் ஒன்றுமே துஷ்யந்தின் செவிகளை அடையவில்லை.

துஷ்யந்த் தான் பரத்தைத் தூக்கி வைத்து இருந்தான்.

ஒரு நொடி கூட அவனை விட்டு விலகவில்லை.

அதுவே பரத்திற்கு அவ்வளவு சந்தோஷத்தைத் தந்தது.

அதனாலேயே சகுந்தலாவால் ஒரு அளவுக்கு மேல் துஷ்யந்தை எதுவும் கூற முடியவில்லை.

பரத் வேறு கொஞ்சம் கொஞ்சமாக பழைய நிலைக்கு திரும்பி இருக்க, அதுவே அனைவருக்கும் போதுமாக இருந்தது.

அன்று இரவு துஷ்யந்த் மற்றும் சகுந்தலாவின் கரங்களை தன் இரண்டு கரங்களாலும் பிடித்துக் கொண்ட பரத் அவர்களை துஷ்யந்தின் அறைக்குள் இழுத்துச் சென்று கட்டிலின் அருகில் நிறுத்தினான்.

பரத்தின் செயல்களை இருவரும் குழப்பத்துடன் நோக்கிக் கொண்டு இருக்க, கட்டிலின் நடுவே சென்று படுத்துக் கொண்ட பரத், “மம்மி… நீங்க இங்க வந்து படுங்க. டாடி இந்தப் பக்கம் வாங்க.” என்றவாறு தன் இரண்டு பக்கமும் கை காட்டினான்.

அதனைக் கேட்டு சகுந்தலா அதிர்ந்து நிற்க, துஷ்யந்தோ புன்னகையுடன் பரத்தின் ஒரு பக்கம் சென்று படுத்துக் கொண்டான்.

“மம்மி வாங்க…” என்ற பரத்தின் குரலில் தன்னிலை அடைந்த சகுந்தலா, “இ…இல்ல பரத். நீ அப்பா கூட தூங்கு. நான் நான்…” என வார்த்தைகள் வராது திணறினாள் பெண்ணவள்.

தன்னவளின் திணறலை ரசித்துப் பார்த்த துஷ்யந்தோ எதுவுமே பேசாமல் வேடிக்கை பார்த்தான்.

“மம்மி ப்ளீஸ் வாங்க. பரத்துக்கு மம்மி டாடி ரெண்டு பேருமே பக்கத்துல வேணும்.” என்று அடம் பிடித்தான் சிறுவன்.

சகுந்தலா தனக்கு உதவிக்கு வருமாறு துஷ்யந்தைப் பாவமாகப் பார்த்து வைக்க, அக் காதல் கள்வனோ சட்டென சகுந்தலாவைக் கவனிக்காதவாறு பரத்தின் பக்கம் பார்த்தான்.

துஷ்யந்தின் கள்ளத்தனத்தைக் கண்டு கொண்ட சகுந்தலா அவனை முறைத்துப் பார்க்க, “டாடி… மம்மிய வர சொல்லுங்க.‌ மம்மி வேணும்…” என்றவாறு அழுகைக்குத் தயார் ஆகினான் பரத்.

எங்கே மகன் அழுது ஏதாவது ஆகி விடுமோ என்று பயந்த சகுந்தலா அவசரமாக பரத்தின் மறு பக்கம் வந்து படுத்தாள்.

அதன் பின்னர் தான் பரத்தின் முகத்தில் புன்னகை பூத்தது.

உடனே துஷ்யந்தினதும் சகுநாதலாவினதும் கரங்களை எடுத்து தன் நெஞ்சில் வைத்துக் கொண்ட பரத் தன் இரு கால்களையும் துஷ்யந்த் மற்றும் சகுந்தலா மீது போட்டுக் கொண்டு கண்களை மூடிக் கொண்டான்.

அதனைக் கண்டு சகுந்தலாவிற்கும் துஷ்யந்திற்கும் முகத்தில் புன்னகை அரும்பியது.

தம்மை மறந்து இருவருமே பரத்தின் நெஞ்சைத் தட்டிக் கொடுக்க, அவர்களே அறியாமல் தொட்டுக் கொண்ட விரல்கள் வழியாக இருவருக்கும் உடல் முழுவதும் சில்லென்ற உணர்வு.

சகுந்தலா சட்டென தன் கரத்தை விலக்க முயல, பரத்தின் பிடி இறுக்கமாக இருந்தது.

அதனால் வேறு வழி இல்லாமல் அமைதியாக இருந்தாள்.

விரல் நுனிகள் உரசிக் கொள்ளும் ஒவ்வொரு முறையும் இருவரின் மனதிலுமே ஒரு வித்தியாசமான உணர்வு.

ஆனால் எதிர்த்தரப்பின் மனதை இன்னுமே இருவரும் அறியாமல் இருந்ததால் அதனைத் தமக்குள் மறைத்து வைத்துக் கொண்டனர்.

அடுத்து வந்த நாட்களும் இவ்வாறே செல்ல, பரத்தின் தயவால் சகுந்தலா மற்றும் துஷ்யந்த் கொஞ்சம் கொஞ்சமாக மனதளவில் நெருங்கிக் கொண்டு இருந்தனர்.

பரிமளமும் சந்திரசேகரனும் சகுந்தலாவை மகளாகவே தாங்க, தன் இருண்ட கடந்த காலத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளி வரத் தொடங்கினாள் பெண்ணவள்.

ரிஷிகேஷ் என்ற ஒருவனைப் பற்றி சகுந்தலா சுத்தமாக மறந்து விட, அவனால் பாதிக்கப்பட்ட ஒருவனோ ரிஷிகேஷின் இறுதி அத்தியாயத்தை எழுதப் போகும் நாளுக்காகக் காத்து இருந்தான்.

அது ஒரு பாழடைந்த குடோன்.

ஊரின் ஒதுக்குப்பறமாக இருந்ததால் ஆள் நடமாட்டம் இன்றி சுற்றியும் பற்றைகள் வளர்ந்து சிலந்தி வலையால் சுற்றியும் மூடப்பட்டு பார்க்கவே பயங்கரமாக இருந்தது.

அந்த குடோனில் ஒரு இடத்தில் மட்டும் ஒரு குமிழ் விளக்கு மங்கிய வெளிச்சத்துடன் விட்டு விட்டு எரிந்து கொண்டு இருந்தது.

ஒரு சிறிய அறை போல் இருந்த அவ் இடத்தில் சரி நடுவே தலை கீழாகத் தொங்கிக் கொண்டு இருந்தான் ரிஷிகேஷ்.

அவனின் உடம்பெங்கும் இரத்தம் கட்டி, சில இடங்களில் பெரிய வெட்டுக் காயங்களில் சீழுடன் சேர்த்து இரத்தம் வடிந்து கொண்டு இருக்க, அரை மயக்கத்தில் இருந்த ரிஷிகேஷோ, “ப்ளீஸ்… என்னைக் கொன்னுடு… என்னைக் கொன்னுடு… என்னால முடியல.” என முணங்கினான் ஈனக் குரலில்.

Click on a star to rate it!

Rating 4.7 / 5. Vote count: 11

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
16
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்