Loading

அத்தியாயம் 44

 

 

“ஏண்டி இப்படி பண்ற. சீனியர் நல்லா இருக்காங்க, அவங்க கிட்டயும் நீ இப்டித்தான் அழுகுறியா? பாவம் அவங்க அங்க தனியா இருக்காங்க, மைண்ட் ஸ்டிரஸா இருக்கும், நீ வேற இப்படி ஸ்ட்ரெஸ் ஏத்துனா என்ன அர்த்தம்?”.

 

“இல்ல இல்ல, நா பிரஸிடெண்ட்ட அழவே இல்ல. பேசவே மாட்டேனே. சொல்றத கேட்டுட்டு வச்சுருவேன்”.

 

“வச்சுட்டு தான் இங்க ஒப்பாரி வைக்கிறியா?”.

 

“நிஜமா பயமா இருக்குடி. இப்ப அவங்களால பேசவே முடியல. ரொம்ப இருமுறாங்க”.

 

“நாலு நாள் அப்படித்தான் இருக்கும் அப்புறம் சரியாகும்ன்னு வைரம் டாக்டர்ட்ட கேட்டு வந்து சொன்னான்ல”.

 

“அவனைப் பத்தி பேசாத, அவன் தான் என்னையும், என் புருஷனையும் பிரிச்சுட்டான். நீயும் உன் புருஷனுக்கு தானே சப்போர்ட் பண்ணுவ போடி” என தள்ளி விட்டு திரும்பி படுத்தாள்.

 

“ஒரு வழியா நாலு நாள் கழிச்சு எனக்கு கல்யாணம் ஆனதும், வைரம் தான் என் புருஷனும் ஞாபகம் வந்துட்டு போல?”.

 

“ஆமா பெரிய புருஷன் போடி”.

 

“ஏன் பேச மாட்ட, புதுசா கல்யாணம் ஆனவங்க, உனக்காக அவன் ஹால்லயும், நா உன்கூட பெட் ரூம்லயும் படுத்து இருந்தா, நீ தெனாவட்டா பேசத்தானடி செய்வ”.

 

“ஏய் எந்துச்சு போடி. போய் புருஷன கொஞ்சு போ, இங்க வந்து படுக்கச்சொல்லி நானா கூப்டேன்.  உன் வீட்டுக்கு போடி” என வேகமாக எழுந்து கட்டிலில் அமர்ந்திருந்தவளை கீழே பிடித்துத் தள்ள, சுதாரிக்கும் முன் விழுந்து விட்ட லட்சு வேகமாக எழுந்து மீண்டும் கட்டிலில் முட்டி போட்டு ஏறி, “நானும் போனா போகுது புருஷனுக்கு உடம்பு முடியாத சோகத்துல இருக்கா அடக்கி வாசிப்போம்னு உன்ன விட்டா, கீழயா பிடிச்சி தள்ளுற, உன்ன இருடி” என எட்டி ஆறு கழுத்தை பிடித்து நெறிக்க…

 

“என்னக் கொல்ற அளவுக்கு வந்துட்டியா?” என இவள் அவளை மல்லாக்கத் தள்ள அடிபுடி அமர்க்களப்பட்டது.

 

இந்த சத்தத்தில் எழுந்து வந்தனர் அம்மாக்கள் இருவரும். அங்கு அல்ரெடி வைரம் தலையிலடித்துக் கொண்டு நிற்க, ராஜம் தான் வாயைப் பிளந்து நின்றார்.

 

ஜெயந்தி, “நாலு புள்ள பெத்தாலும் திருந்தாதுக. நீ வா உனக்கு சாப்பாடு எடுத்து வைக்கிறேன்” என வைரத்தை அழைத்தார்.

 

அவனும் டைனிங் நோக்கி நகர, “ஏய் என்னப்பா பாத்துட்டு பேசாம போற, ரெண்டையும் பிரிச்சி விட்டுட்டு போ” ராஜம் வைரத்தை நிறுத்த.

 

“நீங்க வேற ஆண்ட்டி, ரெண்டும் பைத்தியங்க. அதுங்களே சண்டை போட்டு அதங்களே முடிவுக்கு வரும். நீங்க இந்த சத்தத்துல பிள்ளைங்க எழும்பிடாம பாத்துக்கோங்க” என அனுப்பிவிட்டு தானும் சென்றான்.

 

அங்கு சண்டையிட்ட இரண்டும், “முடியலடி இரண்டு புள்ள பெத்தவ கிட்ட சண்டைக்கு வரியே அறிவு இருக்கா?” இழைக்க இழைக்க ஆறு கேக்க.

 

“ரெண்டு பிள்ள பெத்தவ மாதிரியா நீ நடந்துக்குற. பிரகி பரவாயில்லடி உனக்கு, கால கொண்டு வந்து எங்க வச்சிருக்க எடுடி” ௭ன தன் மேல் கிடந்த காலை தள்ளி விட.

 

“நீ தான்டி ௭ன் மேல உக்காந்திருக்க பரதேசி கீழ இறங்கி தொல வெய்ட் தாங்க முடில” ஆறுவும் தன் கழுத்தை நெறித்து கொண்டு தன் மேல் விழுந்து கிடந்தவளை கீழ் தள்ளினாள்.

 

“நீ மொதல்ல கழுத்துலயிருந்து கையை எடுடி. என் புருஷன் ஃபர்ஸ்ட் நைட்ல கூட எனக்கு இவ்ளோ மார்க் போடல. நீ எத்தன மார்க் போட்டுட்ட லூசு” லட்சு தன் கழுத்தை சுற்றி சுற்றி ஆராய்ந்து கத்த.

 

“சரி டீல்லுக்கு வருவோம், ரெண்டு பேரும் ஒன்னு போல ஒருத்தர் ஒருத்தர ரிலீஸ் பண்ணுவோம். மறுபடியும் பாஞ்சனா கடிச்சு வச்சுருவேன்” எழில் டீல் பேச.

 

“எடுத்து தொல” என இருவரும் ஆசுவாசமாக படுத்தனர்.

 

“உன்ட்ட ஏண்டி சீனியர் எல்லாத்தையும் சொல்லிடுறாங்க. நீயே ஒரு பயந்தேரி” லட்சு கேக்க.

 

“சொல்லலனா என்னென்னவோ நெனச்சு அதிகமா பயப்படுவேன், அதான் உள்ளத சொல்லிட்டா அதை மட்டும் யோசிச்சு கம்முனு இருப்பேன். அதுக்காகத்தான் எல்லாத்தையும் எப்பவுமே அப்படியே சொல்லிடுவாங்க, ௭தயும் மறைக்க மாட்டாங்க” என கணவனை நினைத்து பெருமையாகவே சொன்னாள்.

 

“சரி மறுபடியும் ஆரம்பிச்சுடாதடி, தூக்கம் வருது மறுபடியும் உனக்கு ஆறுதல் சொல்ல என்ட்ட தெம்புல்ல”.

 

“நீ ஆறுதல் சொன்ன லட்சணம் தான் தெரியுமே. வைரம் வந்துட்டானான்னு பாத்து சாப்பாடு எடுத்து வச்சுட்டு வா எரும”,

 

“வேணும்னா போட்டு சாப்பிடுவான். எனக்கு டையர்டாயிட்டு”.

 

“உனக்குலா……உனக்குலா வாழ்க்க கொடுத்தான்ல அவன சொல்லணும்” என இரண்டு அடி அடித்துவிட்டு நண்பனுக்காக எழுந்து சென்றாள்.

 

“அவேனா வாழ்க்க கொடுத்தான், அந்த எலினா எப்ப கதவை திறப்பான்னு வெயிட் பண்ணிட்டு இருக்கான். நா இல்லன்னா அவன்னு போயிட்டுருகவனுக்கு இந்த மரியாதை போதும்டி” ௭ன்றவள், “அந்த கதவை சாத்திட்டு போ” என ஏசியை போட்டு வைத்து படுத்துக் கொண்டாள்.

 

“லூசு எருமை” என திட்டி விட்டு லைட்டை அணைத்து கதவை லேசாக அடைத்து ஆறு வெளிவர.

 

ஜெயந்தி பரிமாற வைரம் சாப்பிட்டுக் கொண்டிருக்கவும், “ம்மா ப்ரெசிடெண்ட் சாப்பிட்டாங்களான்னு கேளுமா?” ௭ன்றாள் தாயிடம்.

 

“சாப்பாடு குடுக்குறது தான் என் வேல, அங்க உட்காந்து ஊட்டி விட்ட நர்ஸ்ட்ட தான் சாப்பிட்டாங்களான்னு கேட்கணும்னு சொல்லுங்க ஆண்ட்டி” என்றான் வைரம்.

 

ஆறு அவனை முறைக்க, “அதெல்லாம் நர்சு பக்குவமா ஊட்டிவிட்டுருப்பா, நீ போய் படுடி” என்றார் ஜெயந்தி பதிலாக.

 

அவரையும் முறைத்தவள், தங் தங்கென்று அறையை நோக்கிச் சென்று விட்டாள். “இவ மைண்ட் டைவர்ட் பண்ணவே உட்கார்ந்து யோசிக்க வேண்டியிருக்கு ஆண்ட்டி” ௭ன்றான் போறவளை கண்டு.

 

“புள்ளைங்க மேல கூட கவனம் இல்லாம எனக்கென்னனு இருக்காப்பா. மாப்பிள வீட்டுக்கு வந்துட்டா அவர் பாத்துப்பார்.  சரி அத விடு இங்கேயே இப்படியே எத்தனை நாள் இருக்கதா உத்தேசம், நைட்டுக்குனாலும் உன் பொண்டாட்டிய கூட்டிட்டு உன் வீட்டுக்கு போனா என்ன?” என்றார் ஜெயந்தி.

 

“இப்பதான் வெகேஷனுக்கு அம்மா வீட்டுக்கு வந்தவன் மாதிரி ஜாலியா நிம்மதியா இருக்கேன் அது பொறுக்கலையா உங்களுக்கு”.

 

“டேய், ஏன்டா…..” என அவர் மேலும் சொல்ல வர.

 

“சீனியர் வரட்டும் ஆண்ட்டி, உங்க ரெண்டு பேரால அவங்க மூணு பேரையும் சமாளிக்க முடியாது. ஆறுவும் இப்ப பிரகி மாதிரிதான் இருக்கா. அவளுக்கு நாங்க தான் சரி. கொஞ்ச நாள் இங்க இருக்க விட மாட்டிங்களா?”.

 

“நல்ல ஃப்ரெண்ட்ஸ் டா” என்றவாறு சாப்பிட்டதை ஒதுக்க, தானும் உதவியவன் லைட்டை அணைத்து கதவைச் சாத்திவிட்டு ஹாலில் தனக்காக மனைவி ரெடி செய்து வைத்திருந்ததில் வந்து படுத்தான். “குட் நைட்டி அலங்கு” என்ற மெசேஜை லட்சுவுக்கு தட்டிவிட்டு தூங்க முயன்றான்.

 

மறுநாள் ப்ரகலத்தனுக்கு ஆக்ஸிஜன் லெவல் 91 என்றே காட்ட, பத்தாத குறைக்கு காலை சாப்பாடு எடுத்துச் சென்றவனிடம் டாக்டர், “அவருக்கு வீசிங் ப்ராப்ளம் எதுவும் இருக்கா?”. இவன் உடனே ஆறுவிற்கு போன் அடிச்சு கேட்க, “அவள் இல்லை” எனவும், “சரி ஓகே கொஞ்சம் மூச்சு வாங்கி பேசுறாரு அதான் கேட்டேன். சரி ஒரு ஈ.சி.ஜி., எடுத்து செக் பண்ணிடலாம். இன்னைக்கு ஆக்ஸிஜன் சிலிண்டரும் வச்சுடலாம்” என முடித்துவிட்டார்.

 

இங்கு வீட்டில் உள்ளவர்களுக்கு எல்லாம் ப்ராப்ளம் ஸ்டார்ட் ஆகியிருந்தது. ஆறு ஒரு மூச்சு பயத்தில் அழுது தீர்க்க. என்றும் கணவரிடம் மட்டுமே புலம்பி தனது ஆற்றாமையை தீர்த்துக் கொண்டிருந்த ராஜம் இன்று வெளிப்படையாக அழ ஆரம்பிக்க, அதில் லட்சுவும், ஜெயந்தியும் கூட பயந்து விட்டிருந்தனர். கொஞ்சம் தைரியமாக இருந்தது வைரம் மட்டுமே. ஆனாலும் அவனால் அத்தனை பேரையும் சமாளிக்க முடியாமல் தான் போனது. ஆனால் இது எதுவும் அவனை எட்டாமல் பார்த்துக்கொண்டனர், தனியாக இருப்பவன் மனநிலையை கெடுக்க வேண்டாம் என்றெண்ணி.

 

அன்று முழுவதும் பூஜை அறையில் சாமியே துணையென இருந்துவிட்டாள் ஆறு. அன்று முழுவதும் அவள் வேண்டியதன் பலனாக மறுநாள் ஈசிஜி ரிசல்ட்டில் ஒன்றும் பிரச்சனை இல்லை என்றும், ஆக்சிசன் 96 என்றும் காட்டிய பின், சிலிண்டரையும் ரிமூவ் செய்தனர். ஆனால் சுகர் லெவல் 330 என எட்டியிருந்தது, ஆனால் அதுவும் கொரோனாவிற்காக ஏற்றப்பட்ட மருந்தினால் தான். கொஞ்சம் கொஞ்சமாக நார்மலுக்கு வந்துவிடும் என டாக்டர்கள் கூறிவிட, கொஞ்சம் நிம்மதியாக மூச்சு விட்டனர்.

 

ஆறு இந்தளவு டாக்டர் கூறி நிம்மதி அளித்ததற்காகவே 108 முறை ஸ்ரீராமஜெயம் எழுதி மாலையாக தொடுத்து பெருமாள் பாதத்தில் வைத்து நன்றி கூறி கொண்டாள். கொஞ்சமாக நிம்மதி கிடைத்தாலும் அவன் வீடு வந்த பின்பே பயத்திலிருந்து விடுதலை என்ற நிலையில் இருந்தாள்.

 

முழுதாக ஏழு நாள் எல்லோரையும் ஒரு பாடு படுத்தி எடுத்தே டிஸ்சார்ஜ் ஆனான் ப்ரகலத்தன். மேற்கொண்டு 15 நாட்கள் கோரன்டைன் அவசியம். இருமல் குறையும் வரை யாரையும் நெருங்க அனுமதிக்க வேண்டாம் என்ற டாக்டரின் வலியுறுத்தலுடன், ஏகப்பட்ட மாத்திரைகளும், டானிக்குடன் வீடு கிளம்பினான்.

 

பிரகியிடம் அவன் வெளியூர் சென்றிருப்பதாக சொல்லப்பட்டிருக்க, இனியும் அப்படியே சொல்லிக் கொள்ளலாம் என்ற முடிவுடன் அவனை ஜெயந்தி கீழ் உள்ள பார்க்கிற்கு அழைத்து சென்று விட, ராஜம் சின்னவளை வைத்துக் கொண்டு ஒதுங்கிவிட, வாசலிலேயே அவனை எதிர்பார்த்து நின்றதென்னவோ ஆறு மட்டுமே. வைரம் அவனை அழைத்துவர சென்றிருக்க, லட்சு சமையலில் மூழ்கிவிட்டாள்.

 

நேரத்தை பார்ப்பதும், வாசலை பார்ப்பதும், அவனுக்காக செட் செய்த ரூம் பக்காவாக இருக்கிறதா என செக் செய்வதும் என சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தாள். அவளுக்கு பொறுமை போய்க்கொண்டிருந்தது.

 

வராமல் போய் விடுவானோ, இனி நம் வாழ்க்கை என்ன ஆகும் என்பது போன்ற அவள் மனம் இந்த ஏழு நாட்களில் யோசிக்கும் போதெல்லாம், ‘ஐயோ அப்படி நினையாதே மனமே’ என அதனோடு போராடிப் போராடி நாட்களை எண்ணி எண்ணிக் கடத்தியிருக்கிறாள். அந்த பயம், அந்த வலி, இன்றோடு தீரப் போகிறது என்ற நினைப்பே அவளை இவ்வளவு பரபரப்பாக்கியது. எப்போ எப்போ என அவள் காத்திருந்த பொழுதை எல்லாம் விழுங்கி விட்டு ஆட்டோவில் வீடு கிளம்பினான்.

 

அவள் நிலைமை அவ்வாறென்றால், அவனுக்கு எப்படா வீட்டுக்குப் போவோம் என்ற நிலைதான். ஒரு மாதிரியான ஸ்ட்ரெஸ்ஸில் தான் இருந்தான் என்று கூட சொல்லலாம். எல்லோரிடமும் தினமும் போனில் பேசிவிடுவான். பிரகி கூட, “ப்பா ப்பா” என்று இரண்டு வார்த்தை பேசி விடுவான். பேசாதது அவன் மனைவி மட்டுமே. அவளோ அவ்வளவு பதறினாலும், பயந்தாலும் அவனிடம் அதை எதையும் அழுகையாகவோ, வார்த்தையாகவோ இதுவரை வெளிக்காட்டவில்லை. ஆனால் தன்னை காணாமல் அவள் தவித்துவிட்டிருப்பாள் என்பது மட்டும் அவனுக்கு நிச்சயம் தெரியும். இனியாவது மைண்ட் கொஞ்சம் ரிலாக்ஸ்ஸாத பீல் பண்ணும் என்ற தெளிவுடன் டிஸ்சார்ஜ் ரிப்போர்ட்டுடன் டாக்டருக்கு ஒரு தேங்க்ஸை பரிசாக கொடுத்து கிளம்பினான், இவன் ஆட்டோவிலும், வைரம் பைக்கிலுமாக.

 

“எப்போ வருவாங்க இந்த ப்ரசிடெண்ட்” என வேகமாக வாசலுக்கு வந்தவள், அவனைக் கண்டு ஷாக்காகி நின்றுவிட்டாள். அவனோ அவளை கண்டதும் புத்துணர்ச்சி கிடைத்தது போல் நன்றாக புன்னகைத்தான்.

 

ஏழுநாள் குளிக்காததாலும், பழைய கசங்கிய உடையினாலும் வேற்று மனிதனாகத்தான் தெரிந்தான். செம்பட்டை தலையாக, ஒரு வார தாடியுடன், ஹாஸ்பிடல் வாசத்தால் அதீத சோர்வுடனும் பார்க்கவே பாவமாக இருந்தான்.

 

ஆனால் எப்போதும் அவளை மயக்கும் அந்த கண் இப்போதும் அதே மயக்கத்தை கொடுத்தது அவ்வளவு சோர்விலும். அதற்கு மேல் முடியாமல் வேகமாக ஓடிவந்து கட்டிக்கொண்டாள். மாஸ்க்கை மூச்சுக் காற்றுக்காக இறக்கிவிட்டிருந்தவன், அவள் வந்து அணைக்கவும் வேகமாக மாட்டிக் கொண்டு தானும் அணைத்துக்கொண்டான். அவளது இறுகிய அணைப்பிலேயே தெரிந்தது அவள் தன்னை எவ்வளவு தேடினாள் என்று.

 

 

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 31

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
32
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்