
சமுத்திரா – 15:
கண்முன்னே தோன்றிய கடற்கன்னி தமிழில் “வணக்கம்!” என கூறியதை கேட்ட அனைவருக்கும் ஆச்சரியமாகவே இருந்தது.
ப்ரதீப், “டேய். அதுக்கு தமிழ் தெரியும் போல டா. தமிழ்லையே வணக்கம் சொல்லுது.” என ரங்காவிடம் சொல்லிவிட்டு, “உங்க நேம். அதாவது உங்க பெயர் என்ன?” என கடற்கன்னியிடம் கேட்டான்.
“என்னுடைய பெயர் சௌந்தர்யம்!” என கிளிப்பிள்ளையாய் சொன்னாள் கடற்கன்னி.
தலையில் இருந்த க்ரீடத்தில் பதிக்கப்பட்டிருந்த விலைமதிப்பில்லாத கற்கள், மற்றும் கையிலும், கழுத்திலும் அரியவகை கற்களாலும் முத்துகளாலும் செய்யப்பட்டிருந்த அணிகலன்களை அணிந்திருந்த கடற்கன்னியை ஒருமுறை பார்த்த ப்ரதீப், “பார்த்தாலே தெரியுது. நீங்க ரொம்ப சௌந்தர்யம் தான்.” என்றவன், “நீங்க இங்க எதுக்கு வந்திருக்கீங்க?” என மீண்டும் கேள்வி எழுப்பினான்.
“என்னை இங்கு செல்லுமாறு கட்டளை வந்தது. உடனே நொடியும் தாமதியாமல் இங்கு வந்துவிட்டேன்.”
“ஓ. யார் உங்களுக்கு கட்டளையிட்டது?” என இம்முறை கேள்வி ரங்காவிடமிருந்து வந்தது.
“அதை கூற எனக்கு அனுமதி இல்லையே!” என அறியா பிள்ளைபோல் முகத்தை வைத்தபடி சொன்னாள் சௌந்தர்யம்.
‘யார் போக சொன்னது? யார் அனுமதி கொடுக்கணும்?’ என்று தோன்றினாலும், “சரி. இங்கயிருந்து எப்ப போவீங்க?” என மீண்டும் ரங்கா கேட்டான்.
“நான், இங்கு முடிக்க வேண்டிய செயல்கள் சில உள்ளது. அதனை முடிக்காமல் எனக்கு இங்கிருந்து செல்ல அனுமதி கிடையாது. செல்லவும் முடியாது.” என கடற்கன்னியான சௌந்தர்யம் சொன்னாள்.
அதுவரை அவர்களின் பேச்சுக்களை கைகளை கட்டியபடி கேட்டுக் கொண்டிருந்த ஷிவன்யா, “உங்களுக்கு எதுவும் வித்தியாசமா தெரியலையா?” என்று அருகில் இருந்த அமரனின் காதை கடித்தாள். ஆனால் அவளின் மற்றொருப்பக்கம் நின்றிருந்த சக்திக்கும் அது தெளிவாக கேட்க, “என்ன வித்தியாசம்?” என சந்தேகமாக கேட்டான்.
“இந்த கடற்கன்னி எதையோ பொடி வெச்சி பேசுற மாதிரியே எனக்கு தோணுது. அதுவும் அதோட பார்வை..” என ஷிவன்யா கடற்கன்னியை பற்றி கூறிக்கொண்டிருக்கும் பொழுதே, அந்த கடற்கன்னி ஷிவன்யாவையும் சக்தியையும் ஆழ்ந்து பார்த்தது. அதில் ஷிவன்யாவின் முதுகு தண்டே சில்லிட்டது.
கடற்கன்னியின் பார்வையை கவனித்த அமரன் ஷிவன்யாவின் கரத்தை பற்றியபடி, “அது கிட்ட போகலாம் வாங்க..” என சக்தியையும் உடன் அழைத்து சென்றான்.
“நீங்க இங்க எதையோ செய்ய வந்திருக்கீங்க. அப்ப இங்க என்ன நடக்க போகுதுன்னு உங்களுக்கு தெரியும் தான?” என்ற ரங்காவின் கேள்விக்கு பதிலேதும் கூறாமல் அமைதியையே கடைபிடித்தது கடற்கன்னி.
“நான் தான் சொல்லுறனே.. இது எதையோ நம்மகிட்ட இருந்து மறைக்குது!” என ஷிவன்யா இம்முறை சத்தமாகவே கூறினாள்.
“அட நீ எந்த மேக்? அது எவ்ளோ அழகா வந்து உட்கார்ந்திருக்கு. அதை பார்த்து இப்படி குறை சொல்லிட்டு இருக்க?” என்று ப்ரதீப் கூறியதும் தீயாய் அவனை முறைத்தாள்.
“அழகுல ஆபத்தும் இருக்கும் ப்ரதீப்..” – ஷிவன்யா.
“ரெண்டு பேரும் பேசாம அமைதியா இருங்க!” என இருவரையும் அடக்கிய அமர், “எங்களுக்கு ஒன்னு மட்டும் சொல்லுங்க. நாங்க இந்த விளையாட்டை முடிப்போமா? எங்க உலகத்துக்கு திரும்பி போவோமா?” என்று சௌந்தர்யத்திடம் கேட்டான்.
அனைவரையும் ஒருநொடி கூர்ந்து நோக்கியவள் கண்ணை ஒரு நொடி மூடி திறந்தாள். பின், “நீங்கள் மேற்கொண்ட காரியம் சிரியதல்ல. உங்களது பயணத்தில் இடர்கள் பல காத்திருக்கிறன.” என சொல்லிக்கொண்டிருக்கும் பொழுதே, “ஏதே! இதுக்கும் மேலயா?” என ப்ரதீப் அதிர்ந்து கத்தினான்.
அதில் அவனை கூர்மையாக பார்த்த கடற்கன்னி, “இதுவரை நீங்கள் விளையாட்டின் ஆரம்ப கட்டத்தை மட்டும் தான் தாண்டியிருக்கிறீர்கள். இன்னும் இருக்கிறதே..” என கூறிவிட்டு மீண்டும் அமைதியானாள்.
“நாங்க முடிப்போமா இல்லையான்னு இன்னும் நீங்க சொல்லவே இல்லையே?” என அமரன் விட்ட இடத்திற்கே மீண்டும் வந்தான்.
பெருமூச்செடுத்து நிதானமடைந்த சௌந்தர்யம், “நேரத்தை வீணாக கடத்தாமல், அதனை உபயோகமாக பயன்படுத்த வேண்டும். வீணடிக்கும் நேரம் ஒவ்வொன்றும் ஆபத்துகளை நெருங்கும் மார்க்கமாக அமையும். மேலும், நீங்கள் செல்லும் வழியில் கவன சிதரல்களிடம் அகப்படாமல் சாதுரியமாக செயல்பட வேண்டும். உயிருக்கும், உணர்வுகளுக்கும் மதிப்பு கொடுக்காமல் முன்னேறி கொண்டேயிருந்தால் நிச்சயம் இலக்கை அடைவீர்கள். ஆனால் அது அவ்வளவு சுலபமானது அல்ல! அதுவும் மனிதர்களாகிய உங்களுக்கு நிச்சயம் இலகுவானது கிடையாது.” என சொல்லி முடித்துவிட்டு மீண்டும் கண்ணை மூடிக்கொண்டது.
“என்ன டா. நம்ம ஊர்ல குறி சொல்லுறவங்க மாதிரி சொல்லுது..” என்று ப்ரதீப் மண்டையை சொரிந்தான். ‘உயிருக்கும் உணர்வுகளுக்கும் மதிப்பு கொடுக்க கூடாதா..’ என்ற வாக்கியம் மட்டும் அனைவரின் மனதையும் வண்டாய் குடைந்தது.
“இப்போதைக்கு அவங்க சொன்னது எதுவும் சரியா புரிய போறது இல்லை. ஷிவ், நீ தான அடுத்து போடணும்?” என்று ராங்க வினவ, ‘ஆம்’ என்ற தலையசைப்புடன் சக்தியின் கையில் இருந்த பகடையை வாங்கிக் கொண்டாள்.
ஆட்டத்தின் முதல் சுற்று முடிந்திருந்தது. அதில் ஷிவன்யா, விலோ, ப்ரதீப், அமர், ராங்க, சக்தி என்ற வரிசையின் முறையே மூன்று, நான்கு, ஆறு, இரண்டு, ஐந்து, ஏழு என்ற கட்டத்தில் அவரவரின் குட்டி கப்பல்கள் அந்தந்த கட்டங்களில் இருந்தன. அடுத்த சுற்றை ஆட துவங்கினாள் ஷிவன்யா.
அவளின் கரத்தில் இருந்து விழுந்த பகடை இருமுறை சுழன்றுவிட்டு ஐந்தில் நின்றது. ஏற்கனவே, மூன்றில் இருந்த அவளின் நீல நிற கப்பல் ஐந்து கட்டங்களை கடந்து இப்பொழுது எட்டில் சென்று நின்றது. வழக்கம் போல் நீர்குமிழில் எழுத்துக்கள் தோன்ற துவங்கின.
இடியின் ஓசை மிரளவைக்க..
புயலின் வேகம் கைகொடுக்க..
தூவலாக தோன்றி அடர்த்தியாய் வலுப்பெற்று,
மூழ்கவைக்கும் வல்லவனவன்!
என்ற குறிப்பை வாசித்த ஷிவன்யா, “இடி, புயல், மழை எல்லாமே வர போகுது.” என்றாள் அனைவரிடமும். “மழையா? நாம வேணா உள்ள போய்டலாமா?” என்று விலோ யோசனை சொன்னாள்.
“அது பாதுகாப்பு இல்லை விலோ! ஏற்கனவே அ..அலெக்ஸ் இறந்ததா விக்டர் சொன்னாரு. நாம உள்ள போய் மாட்டிக்கிட்டா கேமை முடிக்க முடியாம போய்ட போகுது..” என சக்தி அதனை மறுத்துவிட்டான்.
“சக்தி சொல்லுறது சரிதான். நாம இங்கயே இருக்கலாம். அதோ அங்க நீச்சல் குளத்துக்கு பக்கத்துல நிழற்குடை இருக்கே. அதுக்கு கீழ போய் நிற்கலாம்.” என்று அமரன் சொன்னதும் பலம்வாய்ந்த இடியின் ஓசை அவர்களின் செவியை கிழித்தது.
அந்த குறிப்பில் போட்டிருப்பது போல் அந்த இடியின் ஓசை அவர்களை மிரள தான் செய்தது. இடியின் ஓசை துவங்கிய நொடியே காற்றின் வேகமும் அதிகரிக்க, கரியமேகங்கள் அனைத்தும் பூந்தூரலாய் பெய்ய தொடங்கியது.
“நாம இந்த பாய்களையெல்லாம் சுருட்டனும்..” என்று மார்ட்டின் அனைவரிடமும் வலியுறுத்தினார். “அதுக்கெல்லாம் இப்ப நேரமில்லை. மழை பெருசா வரதுக்குள்ள எல்லாரும் ஒடுங்க.” என ப்ரதீப் கூறியதும்,
“டேய் லூசு. புயல் காத்துல இந்த பாய்மறக்கப்பல் காத்தோட திசைக்கு போகும் டா. அதுக்கு தான் மார்ட்டின் அப்படி சொல்றாரு..” என்ற அமரன் அங்கிருந்த பாயை சுருட்ட முயன்றான். அவனை தொடர்ந்து மற்றவர்களும் அனைத்து பாய்களையும் சுருட்டினர். அனைத்தையும் பார்த்தபடியே நீச்சல் குளத்தின் கைப்பிடியில் அமர்ந்திருந்தாள் கடற்கன்னியான சௌந்தர்யா.
அனைத்து பாய்களையும் சுருட்டிய அனைவரும் அந்த நீச்சல் குளத்தின் நிழற்குடையின் கீழ் சென்று நின்றனர். ஆனாலும் காற்றின் வேகத்தில் மழையின் சாரல் அனைவரையும் நனைத்துவிட்டது.
சிறிது நேரத்தில் சாரலாய் தோன்றிய மழை வலுத்து பேய்மழையாய் பொழிந்தது. அதில் ஏற்பட்ட குளிரில் அனைவரும் வெடவெடுத்து நடுங்கி நின்றனர்.
“அங்க பாருங்க. அந்த கடற்கன்னி மட்டும் இந்த மழையில் கூட அப்படியே கல்லு மாதிரி உட்கார்ந்திருக்கா..” என்று குளிரில் நடுங்கியபடியே விலோ அவளை சுட்டிக்காட்டினாள். “அவங்க கடல்லையே இருந்ததால பழகிருக்கும் போல..” என ரங்கா சொன்னான்.
அந்நேரம் காற்றின் வேகம் மேலும் அதிகரித்து புயலாய் சீறியது. அலையின் உயரமும் ஆர்பரிப்பும் கூட அதிகரித்திருந்தது. அதன் விளைவால் கப்பலும் கடலில் ஆட்டம் காண தொடங்கியது. கப்பல் இங்கிட்டும் அங்கிட்டுமாக அடிக்கொண்டிருக்க, அதில் இருந்த அனைவரும் கூட தவிக்க தொடங்கினர்.
அவர்களுடன் சேர்ந்து அற்புத பூததால் கப்பலில் நிரம்பியிருந்த அட்டை பெட்டிகளும் உருள துவங்கியது.
“எல்லாரும் இந்த புயல் போற வரைக்கும் பத்திரமா எதையாவது கெட்டியா பிடிச்சிக்கோங்க..” என்ற அமரனின் கத்தல் ஓரளவு அனைவருக்கும் கேட்க, அருகில் இருந்த பாய்கள் அற்ற கம்பத்தை இறுக்கி பிடித்துக் கொண்டனர்.
அடுத்து வந்த பெரிய அலையில் கப்பல் ஒருபக்கமாக சாய கையின் பிடிமானத்தை விட்டுவிட்டான் சக்தி. காற்றும் அதனின் வேகத்தில் அவனை இழுத்துச்செல்ல சுருக்கியபடியே கப்பலின் ஒரு முனையிலிருந்து மற்றொரு முனைக்கு சறுக்க தொடங்கினான். “சக்தி!” என்ற அனைவரின் குரலும் காற்றில் காணாமல் தான் போனது.
ஒரு மென் கரம் சக்தியின் கையை பற்றி அவனை மேலும் சறுக்க விடாமல் காப்பாற்றியது. மெல்ல நிமிர்ந்து யார் என்று சக்தி பார்க்க, ஆழ்ந்த பார்வையுடன் அவனை பார்த்த கடற்கன்னி சிரித்தாள்.
அதனை பார்த்த நண்பர்கள் கூட்டம் ஆசுவாசமடைந்தனர். “என்னமோ கடற்கன்னியை பற்றி தப்பு தப்பா சொன்ன? இப்ப பாரு ஏஞ்சல் மாதிரி அவதான் நம்ம சக்தியை காப்பாத்திருக்கா..” என்று ப்ரதீப் ஷிவன்யாவை பார்த்து கூறினான்.
அத்துடன் புயல் அவர்களின் இடத்தை கடந்து செல்ல, அடித்துக்கொண்டிருந்த காற்றின் வேகமும் மெல்ல குறைய தொடங்கியது. ஆனால் மழை மட்டும் ஓயாமல் பெய்து கொண்டிருந்தது. “இந்த மழை விடுற மாதிரி தெரியல. இங்க மேல இருக்க அவ்வளவு மழை தண்ணியும் கீழ கப்பலுக்குள்ள போகுது. இப்படியே போனா கப்பலே மூழ்கிடும் போல?” என்றான் ரங்கா.
“நல்லதா எதாவது சொல்லு ராங்க..” என அவனை அதட்டிய அமர், “அடுத்து நீதான விலோ போடணும்?” என கேட்க, விலோ முழித்தாள்.
“நீ தான். உனக்கு அடுத்து தான் நான்.” என்ற ப்ரதீப் அவளின் காதின் அருகில் சென்று, “எதாவது தப்பு பண்ணிட்ட்டியா? திருட்டு முழி முழிக்கிற?” என்றான். “நா..நான் எதுவும் பண்ணலயே..” என்று நடுங்கிக் கொண்டே கூறினாள்.
“நீ போடு விலோ. அப்பயாவது மழை விடுதான்னு பார்க்கலாம்.” என்ற சக்தி, “அந்த போர்ட் எங்க?” என்றான்.
“இங்க தான் இருந்துச்சு.” என்ற ஷிவன்யாவிற்கு இருட்டில் எதுவும் தெரியவில்லை. பின், சக்தியின் ஃபோன் வெளிச்சத்தில் அனைவரும் பார்க்க அவர்களின் கண்ணுக்கு அந்த சமுத்திரா பெட்டி அகப்படவில்லை.
“ஐயோ! அது இல்லனா எப்படி நாம கேமை முடிக்கிறது? எப்படி நம்ம உலகத்துக்கு போறது?” என்று ப்ரதீப் பதற, ஷிவன்யா மட்டும் அந்த கடற்கன்னியையே சந்தேகமாக பார்த்தாள்.
– சமுத்திரா வருவாள்
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
4
+1
+1



