Loading

திமிர் 27

 

காதல் செய்து கொண்டிருந்தவன் தோள்களைச் சீண்டினான் கமல். அவள் மீது இருக்கும் ஆர்வத்தில் அதைக் கவனிக்காதவன் சட்டையை இழுத்ததில், “என்னடா?” கெடுத்துவிட்ட கடுப்பில் சீறினான்.

 

“கொஞ்சம் தொடச்சுக்கோங்க சார்”

 

“ஹான்!”

 

“ரொம்ப வழியுது சார்…”

 

அவன் இயல்பைத் தொலைத்து வெட்கத்தில் தலை குனிந்தவன், “செம்மையா இருக்காடா” எனக் குழைந்தான்.

 

“ஆத்தாடி! அகம்பன் திவஜ் இப்படிக் குழையுறதைப் பார்த்தாங்கன்னா, கல்யாணம் நின்னுடும்னு கூடக் கவலைப்படாம, ஆளாளுக்கு நெஞ்சப் பிடிச்சுடுவாங்களே”

 

“ஃபர்ஸ்ட் டைம் புடவைல பார்க்குறேன்டா. அவளை விட்டுக் கண்ணை எடுக்க முடியல. சூப்பரோ சூப்பர்!”

 

“ஆமா, செமையா இருக்காங்க.”

 

“டேய்!”

 

“அண்ணி‌… அண்ணி”

 

“அட்சதையைக் கொடுத்துட்டு வாங்க.” என்ற ஐயரின் பேச்சில் கவனத்தைத் திருப்பியவன், இரு நொடி கூடத் தாக்குப் பிடிக்க முடியாமல் பார்வையை அவள் மீது மேய விட்டான்.

 

அவனை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தவள் அவன் பார்வை தீண்டியதும் முகம் சிவக்க, “ம்ம்… ம்ம்” புருவத்தை உயர்த்திப் பாராட்டுக் கொடுக்க, அவள் முகம் இன்னும் சிவந்தது.

 

‘இங்க வாடி!’

 

‘ம்ஹூம்!’

 

‘ஹே! மரியாதையா வந்துடு. ஒன்னும் பண்ண தான் முடியல. பக்கத்துலயாவது பார்த்துக்குறேன்.’

 

‘அங்க இருந்து நீ பார்க்குறதையே தாங்கிக்க முடியல. பக்கத்துல வந்தா…’

 

‘வந்தா…’

 

‘என்னால கண்ட்ரோல் பண்ண முடியாது.’ என அவனை வெட்கத்தில் சிவக்க வைத்தவள், ‘நீயும் வேஷ்டி சட்டையில ம்ம்…” என்றிட, ‘கல்யாணம் பண்ணிக்கலாமா?’ ஆசையாகக் கேட்டான்.

 

“சார்…”

 

“என்னடா?”

 

“ரொம்ப நேரமா உங்க அம்மாவும், அப்பாவும் உங்களைத் தான் பார்த்துட்டு இருக்காங்க.” என்றதும் தூக்கத்திலிருந்து எழுந்தவன் போல் அவர்களைக் கண்டு அசடு வழிய,

 

“அடுத்த முகூர்த்தத்துல கல்யாணம் பண்ணி வச்சிடனும்.” அவன் காதுபட முணுமுணுத்தான் கமல்.

 

முதல்முறையாகத் திருமணக் கோலத்தில் இருவரும் அமர்ந்தால் எப்படி இருக்கும் என்று கனவு கண்டான். மகன் முகத்தில் வந்து மறையும் வெட்கத்தைக் கண்ட பெற்றோர்கள், தங்களுக்குள் பார்த்துக்கொண்டு பாத பூஜைக்குத் தயாராகினார்கள். எல்லாம் அழகாக நடந்தேறியது.

 

படபடப்பும், நாணமும் சூழ அமர்ந்திருந்த பிரியாவின் கழுத்தில் மூன்று முடிச்சுப் போட்டான் ஆதிகேஷ். இனிதே நிறைவடைந்தது திருமணம். அதன் பின் நடக்க வேண்டிய அனைத்துச் சம்பிரதாயங்களும் ஒன்றன்பின் ஒன்றாக நடந்தது. வந்த அனைவருக்கும் விருந்து உபசரிக்கப்பட்டது. எல்லாம் முடிந்து மணமக்கள் சாப்பிட்டனர்.

 

அவர்கள் உடன், குடும்பத்து ஆள்கள் சாப்பிட அமர்ந்தனர். கற்பகம், நவரத்தினத்தோடு, குடும்பமாக அனுசியா அமர்ந்து கல்யாணத்துக்கு அடி போட, “இப்பத்தான பெரியவன் கல்யாணம் முடிஞ்சிருக்கு. அப்புறம் பேசிக்கலாம்.” என்று விட்டனர்.

 

முகம் கருகிப் போனது அவளுக்கும், அவள் பெற்றோர்களுக்கும். அவர்கள் பேச்சில் ஏதோ ஒரு வித்தியாசம் இருப்பதை உணர்ந்தவர்கள், அகம்பனையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்கும் மதுணியைக் கோபம் பொங்கப் பார்த்தனர். வெகு நேரமாக, தான் எங்குச் சென்றாலும் தன்மீது பார்வையை மேயவிடும் காதலியின் செயலைக் கண்டு உடல் கூசிப் போனவன், ‘அப்படிப் பார்க்காதடி!’ என மிரட்டினான்.

 

அவன் மிரட்டலுக்கு அஞ்சாதவள் சைட் அடிக்கும் வேலையைக் கண்ணும் கருத்துமாகச் செய்து கொண்டிருக்க, அதற்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாமல், அவளை இழுத்துக் கொண்டு சாப்பிட அமர்ந்தான். சாப்பிட அமர்ந்தவள் உணவைப் பார்ப்பது போல் அவன் முகத்தைப் பார்க்க, வேறு பக்கம் திருப்பி விட்டான்.

 

மீண்டும் அவன் பக்கம் திரும்பியவள் விழிகள், ஆயிரம் அர்த்தத்தைத் தாங்கி இருந்தது. அவனை அருகில் பார்த்ததும் கண்கள் கலங்கியது. என்றும் இல்லாமல் இன்று அதில் ஒரு வித்தியாசத்தை உணர்ந்தவன், “என்ன தாண்டி உன் பிரச்சனை? நேத்துல இருந்து நீ சரியே இல்லை. எதுவா இருந்தாலும் மறைக்காமல் சொல்லு.” கேட்டும் பதில் சொல்லவில்லை.

 

இறுக்கமாக அவன் கையைப் பிடித்துக் கொண்டாள். தனிமைக்காகக் காத்திருந்தவன் இலையில், ஆரஞ்சு நிற லட்டை வைத்தனர். அடுத்ததாக மதுணிகாவின் இலையில் ஒரு லட்டை வைக்க, “இன்னொன்னு வைங்க.” என்றாள்.

 

உணவு பரிமாறியவர், அமைதியாக வைத்துவிட்டுச் செல்ல, “அகா…” என்றழைத்தாள்.

 

அவள் பக்கம் திரும்பும் நேரம், ஒரு உறவினர் கிளம்புவதாகக் கூற, எழுந்து வழி அனுப்பச் சென்று விட்டான். முகம் வாடிப் போனவள், இலையில் நிரம்பி இருந்த உணவுகளைப் பார்த்துக் கொண்டிருந்தாள். மனம் விட்டு அவனோடு பேச ஏங்கினாள். அவள் எதிரில் அமர்ந்து கண்களால் எரித்துக் கொண்டிருந்தாள் அனு. அவளை எதிரில் பார்த்ததும் பலத்த யோசனை. அப்படியே தலையைத் திருப்பிச் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் கற்பகத்தைப் பார்த்தாள்.

 

ஏசி அறையிலும் புழுக்கம் உண்டானது. தத்தளிக்கும் நிலையில் இருந்தவள், பக்கத்தில் வந்தமர்ந்தவன் சாப்பிட, மீண்டும் அவனைப் பார்க்கும் வேலையைத் தொடங்கினாள்.

 

“என்னனு சொல்றதா இருந்தால் சொல்லு, இல்லனா அமைதியா சாப்பிடு. சும்மா என் உசுரை வாங்கிட்டு இருக்காத.”

 

“எதுக்குக் கோபப்படுற.”

 

“பின்ன என்னடி! எதையோ ஒன்ன முடிவு பண்ணிட்டுச் சொல்ல வெயிட் பண்ற மாதிரி இருக்கு, நீ பார்க்குறது.”

 

“நான் சொல்லி முடிக்குற வரைக்கும் கோபப்படாத.”

 

“டென்ஷன் பண்ணாத மதுணி”

 

கண்களில் நீர் சூழ, “ப்ளீஸ் அகா, கொஞ்சம் பொறுமையா நான் சொல்ல வர்றதைக் கேளு.” என்றதும் பல்லைக் கடித்துப் பொறுமையைக் கடைப்பிடித்தான்.

 

அவனிடம் சொல்ல வார்த்தையைத் தேடியவள், அவன் கோபம் இன்னும் அதிகரிப்பதை உணர்ந்து தலை குனிந்து கொண்டாள். அதற்கு மேல் பொறுமை இல்லாது அவள் பக்கம் திரும்பாது சாப்பிட ஆரம்பித்தான்.

 

கண்மூடித் தன்னை நிலைப்படுத்திக் கொண்டவள், அவன் இலையில் இருக்கும் லட்டை எடுத்துத் தன் இலையில் வைத்தாள். பார்வை அவள் விரல் மீது கோபமாக ஊர்ந்தது. எடுத்த வேகத்திலேயே அவன் இலையில் வைத்தவள், தன் இலையில் இருக்கும் லட்டுவை எடுத்து அவன் லட்டுவோடு ஒட்டி வைத்தாள்.

 

விஷயத்தைச் சொல்லாமல், விளையாடிக் கொண்டிருக்கும் காதலி மீது கோபம் பொங்கியது. சாப்பிடப் பிடிக்காமல் எழுந்தவன் கைப்பிடித்துக் கண்களால் இறைஞ்சி அமர வைத்தாள். அமைதியாக அமர்ந்தவன் இலையில் மீதமிருந்த ஒரு லட்டுவை எடுத்து வைத்தவள் அதை உதிர்த்துப் போட, “பைத்தியமாடி நீ” தாடை புடைக்கக் கேட்டான்.

 

அவன் பேச்சைக் காதில் வாங்காது, உதிர்த்த லட்டுவை மீண்டும் சிறு அளவு பிடித்து இரு லட்டுக்கு நடுவில் வைத்து விட்டு அவன் முகம் பார்த்தாள். பல் இடுக்கில் கோபத்தை மறைத்தவன் திட்ட வர, வார்த்தை ஊமையானது. என்னவென்று புத்தி உரைத்தது. நம்ப மனம் வரவில்லை. உணர்வுகள் அவன் அனுமதியின்றி ஏகத்துக்கும் பொங்கி வழிந்தது. அவனுக்குள் சுழன்று கொண்டிருந்த மூச்சுக்காற்றுக் கழுத்தை இறுக்கியது போன்ற உணர்வு.

 

காற்றில், அலை மோதிக் கொண்டிருந்தவன் முகத்தில், பனிக்கட்டி வந்து விழுந்தது. உலகம் தலைகீழானது. உடல் மரத்துப் போனது. செல்கள் ஆர்ப்பாட்டம் செய்தது. ரத்த நாளங்கள் உறைந்தது. இதயம் துடிப்பை நிறுத்தியது.

 

பெரும் இம்சைக்கு ஆளானவன் பார்வை, அந்த இனிப்பின் மீது மொய்த்தது. உண்ணாமலே அதன் சுவையை உணர்ந்தான். நாவை மட்டுமல்ல, மொத்த உடலையும் தித்திக்க வைத்தது. உணர்வுக்குவியலாக அமர்ந்திருந்தவன், பார்வையை மட்டும் அவளிடம் சுழற்ற, கண்களில் தேங்கியிருந்த நீரில் சின்னத் தாமரைப்பூ பூத்திருக்கும் சங்கதி புரிந்தது.

 

அடுத்த நொடி அவன் விழியில் ஆனந்த நீர். சட்டென்று சூழ்ந்த கண்ணீரை வெளியேற்றவும், தனக்குள் அடக்கிக் கொள்ளவும் வழி தெரியாது மிரண்டு போனவன், தாக்குப் பிடிக்க முடியாது எழுந்தான். எழுந்த வேகத்திலேயே மீண்டும் அமர்ந்து, அவள் முகம் பார்த்தவன் எதையோ சொல்ல வாய் எடுக்க, தாயானவள் முகத்தில் பேச்சை மறந்தான்.

 

காதலித்துத் தன் உயிரோடு உயிராகி, தனக்குள் ஒரு உயிரைக் கொடுத்தவன், உணர்வைக் கொட்ட முடியாமல் திண்டாடுவதைப் பார்த்து உச்சி குளிர்ந்து போனவள், நேற்றில் இருந்து பட்ட அவஸ்தைக்கு விடுதலை கொடுத்தாள். ஏதோ ஒரு உந்துதலில், சோதனை செய்து பார்த்தவள் அந்த நொடியே ஸ்தம்பித்து விட்டாள். வெகு தாமதமாக, வயிற்றை வருடியவளுக்கு கமல் வந்து உசுப்பும் வரை நினைவு திரும்பவில்லை.

 

ஆனந்தமும், பயமும் சரிசமமாக உலா வந்தது. அன்பானவன் இருக்கும்பொழுது, அவசியமற்ற பயத்தைச் சுமந்து கொண்டு அவனையும் சோதித்து விட்டாள். முதலில் மகிழ்ந்தவள், பின் சுற்றி இருப்பவர்கள் தன் பிள்ளையைத் தன் போல் விமர்சிப்பார்கள் என்ற பயத்தில் மறுகினாள். அவை அனைத்தையும் மீறி அவன் மீதான காதல் சொல்ல வைத்துவிட்டது.

 

என்ன செய்வது என்று தெரியவில்லை அகம்பன் திவஜ்க்கு. அவளை அள்ளி அணைக்க வேண்டும். ஆசைத் தீர முத்தமிட வேண்டும். தன் உயிருக்குள், தன் அனுமதியில்லாமல் குடி கொண்டிருக்கும் தன் வாரிசைத் தொட்டுத் தடவ வேண்டும். எதையும் செய்ய முடியாமல் கட்டிப்போட்ட நிலையில் இருந்தவன், பக்கத்தில் ரசத்தை உறிஞ்சிக் குடிக்கும் கமலின் சத்தத்தில் பல்லைக் கடித்தான்.

 

“ஏன்டா நாயே! அவனவன் எவ்ளோ இம்சைல இருக்கான், உறிஞ்சிட்டு இருக்க. எந்திரிச்சுப் போடா”

 

“எதுக்குப் பொங்குறிங்க? வேணும்னா நீங்களும் ரசத்தை ஊத்தி நக்குங்க.”

 

“அவள்தான் சோதிக்கிறான்னா, நீ அதுக்கும் மேலடா.”

 

“ஓஹோ! லவ் ஓவர் ஃப்லோ ஆகிப் பொங்கி ஊத்துதோ…” என ஐவிரல்களையும் முன்னும் பின்னும் நக்கியவன் சட்டைக் காலரைப் பிடித்தவன்,

 

“மரியாதையா நீயும், உன் அண்ணியும் இங்க இருந்து ஓடுங்கடா. நான் வீட்டுக்கு வர வரைக்கும் அவள் என் கண்ணுல படக்கூடாது.” என்ற‌ மிரட்டலைத் தூசி தட்டியவன்,

 

“சாப்பிட்டு முடிச்சுட்டுத் தான் கூட்டிட்டுப் போவேன்.” சட்டம் பேசினான்.

 

பல்லைக் கடித்தவன், “சொன்னால் கேளுடா. நான் இருக்குற நிலைமைக்கு யார் இருக்காங்க, என்னன்னு கூடப் பார்க்காமல் அவளைக் கட்டிப்பிடிச்சு கிஸ் அடிச்சிடுவேன்.” என அவன் உதட்டை நெருங்க, பயந்து இரண்டடி பின்னுக்குக் கொண்டு சென்றான் முகத்தை.

 

“எதுக்கு சார் இவ்ளோ வேகம்?”

 

“என் நிலைமை அப்படிடா!”

 

“அப்படி என்ன சார் நிலைமை? இந்த மாதிரி டேஸ்ட்டான ரசத்த விட்டுட்டுப் போறதோட நிலைமை என்னன்னு தெரியுமா?”

 

தன் நிலைமை புரியாமல் பிதற்றிக் கொண்டிருக்கும் அவன் சட்டையைத் தாறுமாறாக இழுத்தவன், “சித்தப்பா ஆனது கூடத் தெரியாமல் நக்கிட்டு இருக்கான் பாரு, பேக்கு…” என்றதும் வாயில் வைத்த விரலோடு தன் முதலாளியைப் பார்த்தான்.

 

“கண்ட்ரோல் பண்ண முடியலடா, என்னைக் காப்பாத்துடா.” சரணடைந்தான்.

 

“அண்ணி மேடம்!” எனக் கமல் கத்திய கத்தலில், அங்கிருந்த அனைவரும் திரும்பினார்கள்.

 

யாரையும் கண்டுகொள்ளாது தன் முதலாளியைத் தள்ளிவிட்டு, “அய்யய்யோ! சார் சொன்னது உண்மையா? என்ன அண்ணி மேடம், இப்படி ஒரு சர்ப்ரைஸ் கொடுத்துட்டீங்க. இப்ப நான் என்ன பண்ணுவேன்.” துள்ளிக் குதித்தான்.

 

‘நானே கம்முன்னு இருக்கேன், இவனுக்கு என்ன!’

 

 

 

“என் காதை என்னாலயே நம்ப முடியல.” என ஆர்ப்பரிக்கும் அவனை அடக்க முடியாமல் பாடுபட்டாள் மதுணிகா.

 

திரும்பிய அனைவரும் என்னவென்று கேட்டுக் குடைய, “அதுவா…” எனச் சொல்ல வந்தவன் வாயை இருவரும் மூடினார்கள்.

 

“வாயத் தொறந்த, சோத்த அடிச்சுக் கொன்னுடுவேன்!”

 

உயிருக்குப் பயந்து வாயை மூடிக்கொண்டவன், சத்தம் இல்லாமல் குலுங்கி அழ ஆரம்பித்தான். தன்னவள் மீது பார்வையைப் பதித்துக் கண்களால் தன் ஆனந்தத்தைப் பகிர்ந்து கொண்டிருந்தவன், காதோரம் கேட்கும் விசும்பலில் அவன் பக்கம் திரும்ப, அழுகை அதிகமானது.

 

“என்னடா, ஆனந்தக் கண்ணீரா?”

 

“சோகக் கண்ணீர்!”

 

“என்னத்துக்கு?”

 

“எல்லாம் அவரைப் பார்த்துத்தான்!”

 

“அவனுக்கு என்னடா?” என ஆதிகேஷைப் பார்த்துக்கொண்டு கேட்க, “தனக்குப் பின்னாடி பிறந்தவன், தனக்குப் பெரிய நாமத்தைப் போட்டது கூடத் தெரியாமல் இப்பத்தான் தாலி கட்டி இருக்காரு. அந்த வெள்ளந்தி மனுஷன் கிட்ட, நீங்க அப்பா ஆகுறதுக்கு முன்னாடியே பெரியப்பா ஆகிட்டீங்கன்னு எப்படிச் சொல்வேன். அவரை விடுங்க. பக்கத்துல அமைதியா சாப்பிட்டுட்டு இருக்காங்களே, அவங்ககிட்ட நீங்க பெரியம்மா ஆகிட்டீங்கன்னு எப்படிச் சொல்லுவேன். எத்தனைக் கனவோட வீட்டுக்குள்ள காலை வச்சாங்களோ, இப்படி வந்த கையோட உங்கப் புள்ளைக்கு ஆய் கழுவ வச்சிட்டீங்களே.” என்றவன் பேச்சைக் கேட்டுச் சத்தமாகச் சிரிக்க ஆரம்பித்தாள் மதுணிகா.

 

மொத்தக் கூட்டமும், அவள் சத்தத்தில் அலறி அவளையே பார்க்க, தன்னவள் சிரிப்பில் உலகத்தை மறந்தான். எதிரில் ஒருத்தி கருகிக் கொண்டிருப்பது தெரியாமல், இடைவிடாது சிரிக்கும் தன்னவளைக் கட்டுப்படுத்த, ‘என்னடா நடக்குது அங்க?’ கமலைப் பார்வையால் மிரட்டினான் ஆதி.

 

‘எல்லாம் முடிஞ்சு பெரியப்பா ஆனதுக்கப்புறம் கேக்குறாரு பாரு கேள்வி.’ தனக்குள் புலம்பிக் கொண்டவன், “லவ் மேட்டர் சார்!” என்றான் சத்தமாக.

 

அவன் வார்த்தையைக் கேட்ட பின், அவரவர் அவரவர் வேலையைக் கவனிக்க, குடும்பமாக இருந்த இனிப்பின் மீது காதலர்கள் பார்வை திரும்பியது. கைகளும், வாய்மொழியும் பரிமாறாத அன்பை, விழிகள் பரிமாறிக் கொண்டது. நேற்றிலிருந்து தன்னவள் ஏன் துடித்தாள் என்பதைத் தன் நிலை உணர்ந்து புரிந்து ஆதரவாக அவள் கைப்பிடித்தான்.

 

“அப்பா ஆகப் போற!” என்றவள் வார்த்தையில் அவள் கையை இறுக்கிப் பிடிக்க, “எப்படிச் சொல்றதுன்னு தெரியல அகா… இதை எல்லாரும் எப்படி எடுத்துப்பாங்கன்னு தெரியல. எவ்ளோ குழப்பம் இருந்தாலும், அம்மா ஆகிட்டேன்ற சந்தோஷம் மூச்சு முட்ட வைக்குது. என்னால எதுவும் யோசிக்க முடியல. அடுத்து என்ன பண்ணப் போறோம்னு தெரியல. ஒரு மாதிரி நான் புதுசாய் பிறந்த மாதிரி இருக்கு.” எனக் கண்ணீர் சிந்தும் காதலியின் கையை மென்மையாகக் கையாண்டவன், அவள் விழிகளைத் தீர்க்கமாகப் பார்த்தான்.

 

அவன் பார்வையில் பாதுகாப்பை உணர்ந்தவள் கண்ணீரைக் கட்டுப்படுத்த, “யார் எப்படிப் பார்த்தா உனக்கு என்னடி? இது என்னோட குழந்தை! நம்ம காதலுக்குக் கிடைச்ச முதல் வெற்றி! நம்ம குழந்தை, எல்லா அங்கீகாரத்தோடவும் தான் பிறக்கும். அகம்பன் திவஜ் வாரிசுடி இது. இதுக்குதான் நேத்துல இருந்து அழுதுட்டு இருந்தியா… என் மேல நம்பிக்கை இல்லையா உனக்கு.” என்றவனை எதிர்த்துப் பேச வந்தவளை விழியால் தடை போட்டவன்,

 

“உன்கிட்ட நிறையப் பேசணும். இப்ப இல்ல. என் பிள்ளைக்குப் பசிக்கப் போகுது சாப்பிடு.” என்றான்.

 

மனத்தில் இருந்த பெரிய பாரத்தை இறக்கி வைத்த நிம்மதியோடு, சாப்பிடத் தொடங்கினாள். இந்தக் குழந்தை தான், நேசித்தவனைத் தன்னிடமிருந்து பிரிக்கப் போவதை அறியாது.

 

***

 

அறைக்குள் வந்தவனைப் பார்க்க முடியாது திரும்பிக் கொண்டாள். புதிதாக நடந்து கொள்ளும், தன் பிள்ளையின் தாயைக் காதல் பொங்கப் பார்த்துக்கொண்டு பின்னால் நின்றான்.‌ அவன் வந்ததும், முகத்தில் குடியிருந்த வெட்கத்தின் அளவு கூடியது. கைகள் பின்னத் தவித்துக் கொண்டிருந்த மதுணிகாவின் முதுகை உரசினான். முகம் பொலிவுடன் மின்னியது. அதன் தாக்கம் பின்னால் இருந்தவனைத் தாக்கியது. கூந்தலை ஓரம் தள்ளித் தோளில் முத்தமிட்டவன், அவள் சிணுங்கியதில் உதட்டைக் கழுத்திற்குக் கொண்டு சென்றான்.

 

கைகள் முன்னேறி அவள் கைகளைப் பிடிக்க, தன்னவன் கையை வயிற்றின் மீது வைத்தாள். உடல் சில்லிட்டது. அவன் தொடாத பாகம் இல்லை அவளிடம். அதிலும் வயிற்றில் பதிக்காத முத்தம் இல்லை. அப்பொழுதெல்லாம் ஏற்படாத சிலிர்ப்பு இப்பொழுது. தன்னுயிர் இருக்கும் இடத்தில் விரல் பட்டதும் கண் மூடியவன் அவள் தோளில் முகம் வைத்து, “என் குழந்தை இங்க தான் இருக்கா…” அப்பாவாகிய மகிழ்வில் கேட்டான்.

 

வார்த்தை வரவில்லை அவளிடம். கைமீது அழுத்தம் வைத்து வயிற்றை இறுக்க, அடங்காதவன் கைகள் பதறியது. தன் பிள்ளையை எண்ணிப் பயந்தவன், அழுத்தத்தைத் தளர்த்தி இதமாகக் கையாள, தன்னவன் அன்பைப் பகிரப் போட்டிக்கு ஆள் வந்து விட்டதை நன்றாக உணர்ந்து கொண்டாள்.

 

“நீ ஏன் சொல்ல அவ்ளோ கஷ்டப்பட்டன்னு இப்பத்தான் புரியுது. நிறைய மனசுக்குள்ள ஓடுது. வார்த்தை ஒன்னும் வரமாட்டேங்குது. என்னமோ, என்னையும் மீறிய மாற்றம்.”

 

“நான் கொஞ்சம் கூட எக்ஸ்பெக்ட் பண்ணல அகா…”

 

“எனக்கு இதைப்பத்தின ஐடியாவே இல்லடி!”

 

“ரெண்டு பேரும் ஓவரா ஆட்டம் போட்டுட்டோம் போல.”

 

ஓசை கொடுக்காமல், கழுத்தோரம் சிரிப்பைப் புதைத்தவன், “என் ஜூனியருக்கு என்ன அவசரம்னு தெரியல. அப்பாவ இன்னும் கொஞ்ச நாள் என்ஜாய் பண்ண விட்டுட்டு வந்திருக்கலாம். இப்பப்பாரு, கை வைக்கவே பயமா இருக்கு.” என்றிட,

 

“என்ஜாய் பண்ணதே போதும். உன்னை என்ஜாய் பண்ண விட்டதால தான் இன்னைக்கு ஏடாகூடமாய் நிக்கிறேன்.”

 

“ரொம்பச் சிலுத்துக்காதடி! என் பிள்ளைகிட்டச் சொல்லி அடிக்கச் சொல்லுவேன்.”

 

“கூட்டணியா?”

 

“நமக்கு எப்பவும் கூட்டணி தான் வெற்றி!”

 

“அரசியல்வாதி புத்தி போகுதா பாரு.”

 

“கட்சிக்குப் புது மினிஸ்டர் வந்திருக்காங்க.”

 

“பையன்னே முடிவு பண்ணிட்டியா?”

 

“பொண்ணு, மினிஸ்டர் ஆகக் கூடாதா என்ன?”

 

“ஒரு முடிவோட தான் இருக்க.” எனத் திரும்பியவள் முகத்தைப் பரவசம் பொங்கப் பார்த்தான்.

 

காதலும், மோகமும் குடிகொண்ட காதலில், புதிதாக மரியாதையும் முளைத்திருக்கிறது. மனையாளின் கன்னம் பற்றியவன் நோகாமல் முத்தம் கொடுக்க, அவன் நெஞ்சோடு சேர்ந்து கொண்டவளுக்கு விவரிக்க முடியாத ஆனந்தப் பேரலைகள்.

 

“எதுக்குடி அழுத?”

 

அவனை விட்டுப் பிரிந்தவள் மெத்தையில் அமர்ந்தாள். மனத்தில் இருக்கும் வேண்டாத களைகளை இன்றே எடுத்து விட முடிவு செய்தவன், “ஒன்னு மட்டும் புரியல மதுணி. என் வீட்டை எதிர்த்து உன் பக்கம் நிற்கும்போது, என் குழந்தையை மட்டும் எப்படி விட்டிடுவேன். நீ அழுததை நினைச்சா ரொம்பக் குற்ற உணர்ச்சியா இருக்கு. உன்னோட விருப்பம் இல்லாமல் இந்தக் குழந்தை வந்துடுச்சா?” கேட்டவன் முகத்தைப் பார்த்தாள்.

 

“உனக்கு விருப்பம் இல்லன்னா தாராளமா சொல்லு. எனக்கு உன்னை விடக் குழந்தை முக்கியமில்லை.”

 

“பிடிக்கலன்னா உன்கிட்டச் சொல்லி இருக்கவே மாட்டேன்.”

 

“அப்புறம் என்ன?”

 

“இதுல நிறையச் சிக்கல் இருக்கு அகா… ஏற்கெனவே உன் வீட்டுல இருக்க யாரும் என்னை ஏத்துக்கல. இதுல குழந்தை இருக்குன்னு தெரிஞ்சா அவங்க சொன்ன அத்தனை வார்த்தையும் உண்மை ஆகிடாதா? எனக்கு அதைப் பத்திக் கூடக் கவலை இல்லை. என் மேல தெளிச்ச அசிங்கத்தை, குழந்தை மேலயும் தெளிச்சு விடுவாங்கன்னு பயமா இருக்கு. நீ என்னை எவ்ளோ உயர்த்தி வச்சாலும், அவங்க சொல்ற ஒரு வார்த்தை சுக்கு நூறா உடைச்சிடுது.

 

எல்லாம் இருந்தும் எனக்கு எதுவும் இல்லை. என்னை மாதிரி என் குழந்தையும் வளருமோன்னு பயமா இருக்கு. உனக்குன்னு இங்க ஒரு மரியாதை இருக்கு. அந்த மரியாதை, தாலி கட்டாமல் வந்த இந்தக் குழந்தையால கெட்டுட்டா.”

 

“மத்தவங்களைப் பத்தி யோசிக்காதன்னு எத்தனைத் தடவைச் சொல்றது? எனக்கு என்னோட மரியாதையக் காப்பாத்திக்கத் தெரியும். உன்னையும், நம்ம குழந்தையையும் எப்படிக் காப்பாத்தணும்னும் தெரியும். புத்தி கெட்டத்தனமா யோசிக்காத.”

 

“என்னோட பக்கம் புரியல அகா…”

 

“எனக்கு எல்லாமே புரியுது அம்மு. வந்த குழந்தையை என்ன பண்ண முடியும்?” என்றவன் குரலில் காட்டம்.

 

“கோவப்படாத!”

 

“நீ பேசுறது அப்படி இருக்கு.”

 

“நான் குழந்தை வேண்டாம்னு சொல்லல.”

 

“ஐயோ வந்துடுச்சேன்னு யோசிக்கிற.”

 

“அப்படி இல்ல.”

 

“தப்பு என் மேல தான். நான் தான் வரம்பு மீறி நடந்துக்கிட்டேன்.”

 

“அகா…”

 

“உனக்கான அங்கீகாரத்தைக் கொடுக்காமல், என் சந்தோஷத்தை மட்டும் யோசிச்சுட்டேன். இப்ப என்ன பண்ணனும்னு மட்டும் சொல்லு.”

 

“நான் உன்னை எதுவும் பண்ணச் சொல்லல. எனக்குக் கொஞ்சம் பயமா இருக்குன்னு சொல்றேன்.”

 

“அடுத்த முகூர்த்தத்துல கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணச் சொல்றேன். வீட்ல இருக்கவங்க ஒத்துக்கிட்டா அவங்க சம்மதத்தோட. இல்லன்னா தனியாப் பண்ணிக்கலாம். அப்புறம் குழந்தையைப் பத்திச் சொல்றதுல பிரச்சினை இல்லல்ல உனக்கு.”

 

“இங்கப் பாரு.”

 

“உன்னத்தான். இந்தப் பக்கம் திரும்பு!”

 

அவள் பக்கம் திரும்பாமல் வீம்பு பிடித்தவன் தோள் மீது சாய்ந்தவள், “நான் யோசிக்கறது எல்லாமே உனக்காக மட்டும்தான்.” எனப் பேச்சை ஆரம்பித்தவளிடம் இருந்து விலகியவன்,

 

“இப்பவே எல்லார்கிட்டயும் சொல்லிடுறேன். எது வந்தாலும் பார்த்துக்க நான் ரெடி.” என்றான்.

 

“இப்பத்தான் உங்க அண்ணன் கல்யாணம் முடிஞ்சிருக்கு. அவருக்குக் கிடைக்க வேண்டிய எல்லா சந்தோஷமும் கிடைக்கட்டும். நம்ம பிரச்சினையைச் சொல்லி யாரையும் கஷ்டப்படுத்த வேண்டாம்.”

 

“அப்போ இந்தக் குழந்தையைப் பிரச்சினைன்னு சொல்ற.”

 

“சத்தியமா இல்ல. இப்ப இந்த விஷயத்தைச் சொன்னா, ஏதாச்சும் பேச்சு வரும். தேவை இல்லாமல், கல்யாணம் பண்ணிட்டு வந்தவங்களுக்குக் கஷ்டம். அதுவுமில்லாமல், பிரியாக்கு இதுதான் முதல் நாள். வந்த அன்னைக்கே பிரச்சினைன்னா, அவங்க மனநிலை எப்படி இருக்கும்னு யோசி.”

 

“உனக்கு எல்லாரையும் பத்திதான் கவலை, என்னைத் தவிர.”

 

“என்னடா பேசுற? உன்னப் பத்தி யோசிக்காம தான் இங்க உட்கார்ந்து இருக்கனா? நீ சொன்ன ஒரு வார்த்தைக்காக, என்னை வளர்த்தவங்க கிட்டக் கூட ஒரு வார்த்தைப் பேசாம இருக்கேன்.”

 

“அப்படி ஒன்னும் உங்களை வருத்திக்கிட்டு இருக்க வேண்டாம் மேடம். பேசணும்னு தோணுச்சுன்னா பேசுங்க. பார்க்கணும்னு தோணுச்சுன்னா போய் பாருங்க.”

 

“உன் பேச்சை மீறி நான் எதுவும் செய்ய மாட்டேன். நீயா அங்க கூட்டிட்டுப் போற வரைக்கும் அவங்களை நான் பார்க்க மாட்டேன்.”

 

“பார்க்கலாம். எத்தனை நாளுக்கு இந்த முடிவுன்னு.” என்றவன் அறையை விட்டு வெளியேறினான்.

 

தன் மனத்தில் இருக்கும் சங்கடம் புரியாமல், கோபம் கொண்டவனை எண்ணிக் கலங்கியவள் கைகள் வயிற்றை வருடியது.

 

காதலித்தவன் பேச்சை மீற மாட்டேன் என்றவள் மீறினால்?

 

 

Click on a star to rate it!

Rating 4.4 / 5. Vote count: 20

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
17
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்