Loading

“சத்யா!” மாலதியின் உதடுகள் நடுங்கியது.

சத்யாவோ யாரையும் நிமிர்ந்து பார்க்க தெம்பற்று இறுக்கத்துடன் நின்றான்.

“முதல் முதல்ல வீட்டுக்கு வர்ற மருமகளுக்கு ஆரத்தி எல்லாம் எடுக்க மாட்டீங்களா?” சட்டமாய் கேட்டவளைக் கண்டு பரபரத்த கீர்த்தனா, “அங்கேயே நில்லுங்க… ஒரே நிமிஷம்” என்று அவசரமாக அடுக்களைக்கு ஓடினார்.

தியாகு உணர்வற்று அவனைப் பார்த்திருக்க, சில நொடிகளின் சங்கடங்களை கீர்த்தனா அவர்களுக்கு ஆரத்தி எடுத்து கலைத்தார்.

அவர் கண்களில் நீர் தேக்கம்!

சத்யாவின் கன்னம் பற்றி தேம்பியவரின் கையைப் பற்றிக்கொண்டவனுக்கும் நெஞ்சம் நிலைகுலைந்திருந்தது.

நீலா தான், “உள்ள வா ராசா… அண்ணன் தான் அவசரப்பட்டு சொல்லுச்சுன்னா நீயும் மொகத்த காட்டாம இத்தனை வருசமா காக்க வச்சுட்டியே தம்பி” என்றதில், “அத்த” என்றான் பலவீனக் குரலில்.

“உள்ள கூப்பிட்டு வச்சு பேச மாட்டீங்களா?” இடுப்பில் கையூன்றி இதயாம்ரிதா கேட்டதும், கண்ணைத் துடைத்துக்கொண்ட கீர்த்தனா “உள்ள வாங்க ரெண்டு பேரும்…” என்றார்.

ஆனால் சத்யா நகரவில்லை. “நீ போ!” என்று அவளை மட்டும் உள்ளே அனுப்பி வைக்க முயன்றான்.

“எதுக்கு நான் மட்டும் போகணும்?” என சீறியவள் தியாகுவின் அருகில் விறுவிறுவென சென்று,” நீங்க தான் இவரை வீட்டை விட்டு அனுப்புனதா? என்ன நடந்துச்சுன்னு தெரியாம நீங்களா ஒரு முடிவெடுத்துட்டா சரியாப்போச்சா. உங்க வீட்டுப் பையன் தப்பு பண்ணிருக்க மாட்டான்னு உங்களுக்கு தோணவே இல்லையா?” என்றவள்,

திரும்பி மாலதியை ஒரு முறை முறைத்து விட்டு, “என்ன தான் பசங்க தப்பு பண்ணாலும் அவங்க தப்பை மூடி மறைக்கிற பேரண்ட்டை பாத்துருக்கேன். ஆனா செய்யாத தப்புக்கு இப்ப வர தண்டனை கொடுக்குற அம்மாவை இப்ப தான் பாக்குறேன்…” என்று குற்றம் சாட்டியதில் அவர் உடைந்து விட்டார்.

“இதயா!” சத்ய யுகாத்ரன் கண்டித்து, அவளை வெளியில் இழுத்துச் செல்ல முற்பட, “ப்ச் விடுங்க…” என்று அவன் கையை உதறியவள்,

“எல்லா பிரச்சினைக்கும் நான் தான் காரணம். நான் தான் இவரை காதலிச்சேன். அது தெரிஞ்சு என் அப்பாவும் என் ப்ரெண்ட்ஸும் இவர் மேல பழி போட்டு… அதுக்கு தண்டனை குடுக்கணுமா எனக்கு நேரடியா குடுங்க. எனக்குப் பிடிச்சவருக்கு பிடிச்ச எல்லாமே என்னாலே சுக்கு நூறா உடைஞ்சு போயிருக்குறத அப்படியே என்னால விட முடியல…” எனும்போதே அவளிடம் அத்தனை வேதனை.

கோவிலில் மிடுக்காய் பேசியவளின் முகம் தாங்கிய வலியைக் கண்டு மாலதிக்கு பேச்சே எழவில்லை.

தியாகுவோ அப்போது தான் வாயைத் திறந்தார்.

“எங்க வீட்டுப் பிள்ளையைப் பத்தி எங்களுக்கு தெரியும்!”

சத்யா அவரை அர்த்தமாய் பார்த்து வைக்க, இதயாம்ரிதா “ஓஹோ அப்பறம் எதுக்கு அவரை அனுப்புனீங்க?” என்றதில் பொங்கி விட்டார்.

“என்னமா செய்ய சொல்ற? கூடவே வச்சு ஆறுதல் சொல்றோம்னு கொட்டி கொட்டி என் அண்ணே போய்டுச்சே! அதே மாறி என் பையனையும் இழக்க சொல்றியா?” எனும்போதே ஆதங்கமும் அத்தனை வருடங்களாக அடக்கப்பட்ட அழுத்தமும் ஒன்றாய் வெடித்தது.

“புரியல!?” இதயாம்ரிதா குழப்பமாய் ஏறிட, அவரே தொடர்ந்தார்.

“சத்யாவை ஜெயில்ல போட்டதும், ‘உன் பையன் அப்படி பண்ணானாமே, இப்டி செஞ்சானாமே’ன்னு சுத்தி இருக்குறவங்க சொந்தக்காரங்கன்னு யாரும் பேசாத பேச்சில்ல. துக்கம் விசாரிக்கிற மாறி வீட்டை விட்டு வெளில காலெடுத்து வச்சாவே, மொத்தக் குடும்பத்தையும் அருவருப்பா பாத்தாங்க.

என் அண்ணே இதெல்லாம் தாங்குமா. வெளில போகவே பயம் வந்துருச்சு அவருக்கு. அதிலேயே உடம்பும் முடியாம போய்…

ஒரு வருஷமா வீட்டை விட்டு வெளில போவாம, படுத்த படுக்கையா இருந்தாரு.

அதுக்கும் சும்மாவா இருந்தாங்க… ‘இப்படி பிள்ளைய பெத்தா மொத்த குடும்பமும் நாண்டுட்டு சாக வேண்டியது தா’ன்னு மனசாட்சியே இல்லாம பேசுனாங்க…

எங்க பிள்ளையைப் பத்தி எங்களுக்கு தெரியும்னு பழைய ஏரியால இருக்குற எல்லார்கிட்டயும் சண்டை போட்டு, சொந்தக்காரன் தெரிஞ்சவன்னு எல்லாரையும் பகைச்சுக்கிட்டு உடம்புக்கு முடியாத அண்ணனையும் இந்த வீட்டுக்கு கூட்டிட்டு வந்தோம்.

ஆனா அவரோட கவலையே என்ன தெரியுமா…

‘ஐயோ என் புள்ள ஜெயில்ல இருந்து வந்ததும் இதே மாதிரி அவன்கிட்டயும் பேசுனா அவன் எப்படி தாங்குவானோ தெரியலையே’ன்னு ஒவ்வொரு நாளும் நொடிஞ்சு போனாரு” எனும்போதே அவரது வார்த்தைகளில் அத்தனை வேதனை.

அவர் பேசியதை எல்லாம் அதிர்ச்சியாய் கேட்டிருந்த இதயாம்ரிதாவும் சத்ய யுகாத்ரனும் அசையாது நின்றிருந்தனர்.

தியாகு மேலும் தொடர்ந்து, “என் அண்ணனோட கடைசி நாள்கள்ல கூட என்கையை புடிச்சுட்டு, ‘என் பையன் இங்க வந்தா இந்த விஷக்கூட்டத்துக்கிட்ட இருக்க விட்டுறாதப்பா. அவன் புத்திசாலிப்புள்ள. எங்க போனாலும் பொழச்சுக்கும். நம்ம அவனை அடைகாத்து ஆறுதல் சொல்றோம்னு மனச அறுத்துட வேணா’ன்னு அழுதப்ப, நான் என்னன்னு செய்றது… அப்ப அண்ணியும் எங்க கூட தான் நின்னாங்க. சத்யா திரும்பி வந்ததும், அண்ணே மாதிரி அவனும் மனசுக்குள்ள புழுங்கிடுவானோன்னு பயந்து தான் அவனை இங்க இருந்து அனுப்பி விட்டேன்.

அண்ணே இறந்தப்ப, அத்தனை சொந்தக்கார பயலும் வந்து சத்யாவை வரவிட கூடாது. வந்தா நாக்கை புடுங்குற மாறி கேள்வி கேக்கணும்னு கங்கணம் கட்டிட்டு இருந்தானுங்க. எல்லாம் ஊர்க்காரங்க. என்ன தான் எதிர்த்து பேசுனாலும் அவங்களுக்கு புரியாது. இன்னும் கொஞ்சம் பிரச்சினையை இழுத்து விட தான் பாப்பாங்க.

வந்த புள்ளையை பேசி பேசி நோகடிச்சுடுவானுங்களோன்னு பயந்து, நானே அவனை அனுப்பிட்டேன். நான் முன்கோபக்காரன். புரியாம பேசுனாலும் பின்னாடி புருஞ்சுப்பேன்னு என் மகனுக்கு தெரியுமே. அவனுக்குப் புரியும்னு தான் நானே அவனை அடிச்சேன். திரும்பி வருவான்னு ஒரு நம்பிக்கை இருந்துச்சு. ரோஷக்காரன் வரவே இல்லையே!” என்றவருக்கு குரல் தேய்ந்து விட, சத்யா அதற்கு மேல் முடியாது அவரை ஓடிச்சென்று கட்டிக்கொண்டான்.

“என்னை மன்னுச்சுடுப்பா” என்றவரை தடுத்தவன், “என்ன சித்தப்பா… உங்களை எனக்குத் தெரியாதா!” என்று விட்டுத் தாயைப் பார்க்க அவரோ தரையில் மடங்கி அமர்ந்து அவனை ஏக்கமாய் ஏறிட்டார்.

என்னவாகினும் அவன் உடன் இருந்திருக்க வேண்டியது அவர் தானே!

“ம்மா…” மகனின் பல வருட அழைப்பில் தனது தவம் முறிந்த ஆர்பரிப்பில் வெடித்து அழுதார் அவர்.

“ம்மா என்னமா” என அவரை அணைத்துக்கொண்ட சத்யாவை கட்டிக்கொண்டு தேம்பி தேம்பி அழுதார் மாலதி.

“என்மேல உனக்கு கோபம் இல்லைல. என்னை பார்க்க கோவில் வர வர்றவன் நேர்ல வந்து நிக்க மாட்டியா… உனக்காக தான் அந்தக் கோவிலுக்கு வர்றேன்னு தெரியும்ல உனக்கு. என்னால முடியல சத்யா…”

“நான் வர்றது உங்களுக்கு தெரியுமா?” அவனிடம் சிறு வியப்பு.

“நீ மொதோ மொதல்ல என்னைப் பார்க்க வந்தப்பவே தெரிஞ்சுட்டேன். எவ்ளோ தூரத்துல இருந்தாலும் புள்ளையை தெரிஞ்சுக்க முடியாதா? ஜெயில்ல எத்தனை தடவை உன்னை பார்க்க வந்தேன். ஏன்பா எங்களை பார்க்கவே விடல?” தவிப்பாய் கேட்ட தாயை ஆதூரமாய் ஏறிட்டவன்,

“எந்த அம்மாவும் பிள்ளையைப் பார்க்க கூடாத கோலம். அதையும் உங்களுக்கு காட்டி, அந்தப் பாவத்தையும் நான் ஏத்திக்கணுமாமா…” எனக் கமறிய குரலில் கேட்டவனை ஒட்டு மொத்த வேதனையையும் கொட்டி அணைத்து அழுதார் மாலதி.

இதயாம்ரிதா சிலையாக நின்றாள்.

நாள் செல்ல செல்ல காயம் குறைவதற்கு பதிலாய் கூடிக்கொண்டே அல்லவா செல்கிறது.

ஒரு நல்ல மனிதனின் இறுதி நாள்கள் எத்தனை கொடூரமாய், எத்தனை பயத்துடன், எத்தனை அவமானத்துடன் கழிந்திருக்கிறது.

மகனின் வருங்காலம் எண்ணி, அந்தத் தந்தையின் மனது எத்தனை பரிதவித்திருந்தால், சுற்றாரின் வார்த்தைகளில் எத்தனை மனம் வெந்திருந்தால், எங்காவது சென்று பிழைத்து கொள்ளட்டுமென மகனின் பாதுகாப்பை எண்ணி செத்துப் பிழைத்திருக்கிறார்.

கணவனையும் மகனையும் ஒரே நேரத்தில் இழந்து, மரியாதையுடன் கவுரத்துடன் தலை நிமிர்ந்து நடக்க வேண்டிய இந்த தாயும் எத்தனை முறை கூனிக்குறுகி தலைகுனிந்து நடந்திருப்பார்!

அன்பால் பிணைக்கப்பட்ட ஒட்டு மொத்த குடும்பத்தினருக்கும் தான் தினம் தினம் எத்துணை வேதனை !

இதற்கெல்லாம் யார் காரணம்? தான் கொண்ட காதல்!

மீண்டும் மீண்டும் இந்தக் காதல் தனக்கு தகுதியானதல்ல என்ற நிலைப்பாடு அவளுள் உறுதியாகிக்கொண்டே சென்றது!

மீண்டும் தனது கூட்டில் இணைந்த மகிழ்வு சத்ய யுகாத்ரனின் முகத்தில் மின்னியது.

கண்ணீரில் மிதந்த பெரியவர்களைப் பேசி சிரிக்க வைத்திருந்தான். அவனது மலர்ந்த புன்னகையையே கண்ணெடுக்காமல் ரசித்திருந்த பாவையின் இதழோரம் கசந்த முறுவல்.

எத்தனை அழகிய புன்னகை! இந்தப் புன்னகையை அவனிடம் இருந்து பறித்த கயவர்களின் மீது ஆத்திரம் பெருக்கெடுத்து ஓடியது.

ஒருத்தரையும் விடப்போவதில்லை அவள். இறந்துபோன தந்தையை முதற்கொண்டு!!!

அவ்வப்பொழுது சத்யாவின் நயனம் தன்னவளையும் தீண்டிச் சென்றது.

அவளது மனவுணர்வுகள் அவன் அறியாததா?

“ம்மா… எங்களை ஆசீர்வாதம் பண்ணுங்க” என்றவன் மாலதியை நிற்கச் சொல்லி விட்டு இதயாம்ரிதாவின் கையைப் பற்றி தன்னருகே இழுத்தான்.

அதில் யோசனை கலைந்து விழித்தவள், அவனுடன் இணைந்து மாலதியின் காலில் விழுந்தாள்.

“இனியாவது எந்தக் கண்ணேறும் காத்து கருப்பும் அண்டாம நல்லாருங்”க என்று பரிபூரணமாய் ஆசீர்வாதம் செய்ய, “அதை உங்க மருமக காதுல படுற மாதிரி சத்தமா சொல்லுங்கம்மா” என்று கிண்டல் செய்தபடி அவளைப் பார்த்தான்.

வலுக்கட்டாயமாக ஒரு முறுவலைக் கொடுத்தவள் வேறேதும் பேசவில்லை.

பின், தியாகு மற்றும் கீர்த்தனாவிடமும், நீலாவிடமும் ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டனர்.

இந்த அத்தனை துயரத்திற்கும் காரணம் அவளது பக்கத்தினர் என்று புரிந்தது என்றாலும் யாரும் அதைப் பற்றி ஒரு வார்த்தையும் கேட்கவில்லை.

தங்களது வீட்டு வாரிசின் துணையாளை எதிர்த்து நிற்கும் குணம் அங்கு ஒருவருக்கும் இல்லையே.

அந்தச் சிறிது நேரத்திற்குள்ளாகவே சத்ய யுகாத்ரனுக்கு கொடுக்கும் அன்பையும் பரிவையும் அவளுக்கும் இம்மியளவு குறையாமல் கொடுத்தனர்.

அதில் இதுவரை அவள் தாய் தவிர மற்றவர்களிடம் உணர்ந்திடாத உண்மை தெறித்தது.

விஷாலின் அன்னையைப் போல அந்த அன்பில் எந்த கலப்படமும் இல்லை. அவளுக்கான அன்பை அவளுக்காக மட்டுமே கொடுத்தனர். அந்த வித்தியாசத்தை உணர இயலாத பேதையல்லவே அவள்!

நீலா தான், “ஏன்பா ஏதோ விவாகரத்து அது இதுன்னு நியூஸ்ல பார்த்தோமே அந்த மாதிரி எதுவும் இல்லல…” என வருத்தமாகக் கேட்டார்.

“மீடியா எதையாவது சொல்லிட்டு இருப்பாங்க அத்த. அதெல்லாம் கண்டுக்க வேணாம்…” என முடித்துக்கொண்டான் சத்யா.

தியாகுவும், “ஆமாப்பா உன்னைப் பத்தியும் இல்லாதது எல்லாம் சொல்லி வச்சாங்களே. அதுல இருந்து நான் நியூஸ் எதையும் பாக்குறதே இல்ல…” என்றவரின் வெறுப்பிலிருந்து வெளிப்பட்ட பாசம் அவனை உருக்கியது.

கீர்த்தனாவோ, “இந்த சோஷியல் மீடியா வந்ததும் வந்திச்சு… பொண்ணுங்க குடிக்கிற மாதிரி எல்லாம் செட் செஞ்சு வீடியோ போடுறாங்க. நம்ம மருமகளை பத்தியும் வீடியோ போட்டிருந்தாங்க. காசுக்காக ஏன் தான் இப்படி இறங்குறாங்களோ” என அங்கலாய்த்துக்கொள்ள,

இதயாம்ரிதா கணவனைத் திரும்பி முறைத்து வைத்தாள்.

‘வீடியோ அனுப்புனதே நீ தானடா…’ என்ற முறைப்பு தெறிக்க அசடு வழிந்தவன், “சித்தி இப்படி பேசிட்டே நேரத்தை ஓட்டுறதா எண்ணமா? உங்க கையால சாப்பிடணுமே” என சிறுவனாய் கேட்டான்.

கண் கலங்கிய கீர்த்தனா “இதோ அரை மணி நேரத்துல எல்லாம் செஞ்சுடுறேன்” என சுறுசுறுவென அடுக்களைக்குச் சென்றவர் போன வேகத்தில் திரும்பி வந்து “உனக்கு என்ன பிடிக்கும்னு சொல்லு இதயா…” எனக் கேட்டார்.

“எனக்கு எதுவும் வேணாம் ஆண்ட்டி!” என மெலிதாய் மறுத்தவள், “நான் கிளம்பனும்…” என்றாள்.

அவளைப் புருவம் சுருக்கிப் பார்த்தவன், தானும் எழுந்து கொண்டு “சித்தப்பா எங்களுக்கு நடக்கப்போற ரிசப்ஷன நீங்க தான் நடத்தி வைக்கணும். அன்னைக்கே முறைப்படி உங்க மருமகளை வீட்டுக்கு கூட்டிட்டு வரேன்” என்றதும் அவர்களுக்கும் அதுவே சரியென பட்டது.

மாலதி, “என்ன இருந்தாலும் நாங்க இதயாவோட அம்மா சந்திச்சு பேசணுமே சத்யா” என்றிட, “நாளைக்கு அவங்களைப் பார்க்கலாம்மா… இப்ப எனக்கு வேலை இருக்கு. நாங்க கிளம்புறோம்” என்றதும் மாலதியின் முகம் சுருங்கிப் போனது.

“வேலை முடிச்சுட்டு இங்க வருவ தான?” கேட்ட பிறகே சங்கடம் உணர்ந்தவர், “எல்லா அழுக்கையும் சரி செஞ்சுட்டு கண்டிப்பா வருவேன்மா!” என்றான் உறுதியாக.

அதில் அவருக்கு நிம்மதி பெருமூச்சு எழ, சுவரில் புகைப்படமான தந்தையின் புன்னகையை ஒரு முறை கண்ணில் நிரப்பிக்கொண்டவன் இதயாம்ரிதாவுடன் கிளம்பினான்.

காரில் போகும்போதே, இதயாம்ரிதா அவனை முறைத்தாள்.

“நீங்க ஏன் வந்தீங்க?”

“என்ன கேள்வி இது?” சத்யா உறுத்து விழிக்க,

“உங்க குடும்பம் உங்களுக்கு கிடைச்சுடுச்சே! ஸ்ரீ இண்டஸ்ட்ரீஸ் ஜாப் இன்னும் கைல இருக்கு” என்றவளிடம்,

“திரும்ப திரும்ப சொல்ல முடியாது இதயா. என்னால உன்னை விட்டுப் போக முடியாது” என்றான் அழுத்தம் திருத்தமாக.

அவள் அமைதியாய் அலுவலகம் சென்று காரை நிறுத்த,

“சரி ஓகே! எப்படியா இருந்தாலும் இந்த ஒரு வருஷத்துல கான்டராக்ட் முடிஞ்சதும் இந்த டிராமாவை நிறுத்தி தான ஆகணும்” என்றாள் அதே அழுத்தத்துடன்.

“டிராமாவா? அப்போ இந்த ரிசப்ஷன்?” பற்களை கடித்தபடி அவன் கேட்க,

“ஒளிராவோட ஓனர்கு டைவர்ஸ் ஆகலனு மீடியாவுக்கு ப்ரூவ் பண்றதுக்கு!” என்றாள் அசராமல்.

“அதுக்காக மட்டும் தானா?” புருவம் இடுங்க கேட்டவனிடம், “வேற எதுக்காகன்னு நினைச்சீங்க. புகுந்த வீட்டுக்கு வர்றதுக்கா? எத்தனை புகுந்த வீட்டுக்குப் போறது…? அண்ட் என்னால அவ்ளோ சின்ன வீட்ல எல்லாம் இருக்க முடியாது!” என வேண்டுமென்றே தவிர்த்தாள்.

“ஓ! ஓகே…” என்றவன் அலுவலகம் சென்று விட, ஓய்ந்த நிலையில் சீட்டின் பின்னால் சாய்ந்தவளின் கண்ணோரம் வழிந்தோடியது நீரலைகள்.

வெகு நேர யோசனைக்குப் பிறகு அலைபேசியை எடுத்து யாருக்கோ அழைப்பு விடுத்தாள்.

திரையில் புது எண்ணைக் கண்டதும் யோசனையுடன் அழைப்பை ஏற்ற ஸ்ரீராம் “ஹலோ” என்க, “நான் இதயா என்றாள்” உணர்வற்று.

சில நொடி அமைதி காத்தவன், “ம்ம் சொல்லு!” எனக் கேட்டதும்,

“உன் ப்ரெண்ட் சேஃப்டி உனக்கு முக்கியம் தான?” என நேரடியாகக் கேட்டாள்.

“அவன் சேஃப்ட்டிக்கு என்ன குறைச்சல்?” ஸ்ரீராம் புரியாமல் வினவ,

“இன்னும் ரெண்டு நாள்ல, எல்லாம் முடிஞ்சுடும். அதுவரை சத்யாவுக்கு பாதுகாப்பு வேணும். ஐ நீட் யுவர் ஹெல்ப்! சத்யாவுக்காக மட்டும்!” என்று அழுத்திக் கூறினாள்.

“உன் ப்ரெண்ட்ஸை போட்டுத் தள்ளிட்டா இந்தப் பிரச்சினையே இல்ல. எனக்கு வர்ற கோபத்துக்கு அவங்களை கொலையே செஞ்சுடுவேன்” என மூச்சிரைத்தான்.

“அந்த ஆருயிர் நட்புகளை எப்படி தடுக்கணும்னு எனக்குத் தெரியும் ஸ்ரீராம். நான் உங்கிட்ட ஹெல்ப் கேட்டது அதுக்காக இல்ல. உன் அப்பாகிட்ட இருந்து சத்யாவை காப்பாத்த!” என்றதில் துணுக்குற்றான்.

“என்ன சொல்ற?”

“ரெண்டு நாளா வாட்ச் பண்றேன். ஒரு கார் எங்க போனாலும் எங்களை பாலோ பண்ணுது. கோவில்ல சத்யாவை வேவு பாத்த மாதிரி ரெண்டு பேர் இருந்தாங்க. நான் அவருக்கு தெரியாம போலீஸ் ப்ரொடெக்ஷன் போட்டுருக்கேன். அவங்க உன் அப்பா இதுல தலையிட்டு இருக்கிறதா சொல்லி பின்வாங்குறாங்க. ஸ்ஸீ… இத பெரிய அளவுல எடுத்துட்டுப் போறதுல எனக்குப் பிரச்சினை இல்ல.

ஆனா உன் ப்ரெண்ட் இருக்காரே… சென்டிமென்டல் இடியட். உன் அப்பா வாழ்க்கை தந்தாரு வாழக்கா தந்தாருன்னு நெஞ்சுல புல்லட் குடுங்கன்னு நின்னாலும் நிப்பாரு.

உன் அப்பாவை நீ ஸ்டாப் பண்ணுனா, இந்த விஷயம் இத்தோட முடியும். நான் ஸ்டாப் பண்ணுனா, சில சேதாரங்கள் ஆகும்.

சத்யாவோட ப்ரெண்ட், அவனோட ஹார்ட் டைம்ல நீ கூட இருந்துருக்க. அந்த ஒரே காரணத்துக்காக அவனோட நட்பை மதிக்கறதுக்காக மட்டும் தான் இந்த போன் கால் அலெர்ட்!” என மறைமுகமாய் மிரட்டலும் கொடுத்ததில் ஸ்ரீராமின் முகம் கறுத்தது.

“நான் பாத்துக்குறேன்!” இறுக்கத்துடன் கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்தவன் ரவிச்சந்திரனைப் பார்க்கச் சென்றான்.

தனது அலுவல் அறையில் ஒரு கையில் சிகரெட்டுடன் ஒரு கோப்பை சரி பார்த்துக்கொண்டிருந்த ரவிச்சந்திரன் முன் கோபக்கணலுடன் நின்றான் ஸ்ரீராம்.

“உங்க பகை உங்களுக்கும் ராம்குமாருக்கும் தான? எதுக்காக சத்யாவை டார்கெட் பண்றீங்க?” அடக்கப்பட்ட சினத்துடன் வினவியவனிடம்,

“என்ன பண்ணணும்னு எனக்குத் தெரியும். நீ உன் வேலையை மட்டும் பாரு. இங்க இருந்து பிஸினஸைக் கத்துக்கிட்டு, இங்க இருக்குற சீக்ரட்டை எல்லாம் நம்ம எதிரிக்கு சொல்லிக்கொடுத்து துரோகம் பண்றவனை பிரெண்டுன்னு கூட வச்சுருக்குற உன்னை சொல்லணும்…” என்று எரிந்து விழுந்தார்.

“அப்பா துரோகி அது இதுன்னு சொல்லாதீங்க. அவனுக்கு பிசினஸ் நீங்களா சொல்லிக்குடுத்தீங்க? அவன் இங்க வரும்போதே எக்ஸ்பர்ட் தான்.”

“ஓ! அந்த எக்ஸ்பர்ட் பிளாட்பாரம்ல தான இருந்தாரு!”

“திஸ் இஸ் தி லிமிட்பா. நம்ம பிசினஸ் சீக்ரட்ஸை வெளில சொல்ற அளவு அவனுக்கு கீழ்த்தர எண்ணம் கிடையாது. அண்ட் ஆல்சோ இப்போ அம்ரிதா கூட, உங்களோட தாட் ப்ராஸசை அவளோட பிசினஸ்கு யூஸ் பண்ணல. உங்களோட ஐடியாவை ராம்குமார் யூஸ் பண்ணிட்டாருன்னு தான் இவ்ளோ நாள் அவங்களை டார்கட் பண்ணீங்க. இப்போ நிவோராவே இல்ல. ஒளிரால அவள் புதுசா தான் இன்பியூஸ் பண்றா!” என்றதும் விருட்டென எழுந்த ரவிச்சந்திரன், “ஓ நீ தினமும் அவள் கூட கூத்தடிச்சுட்டு தான் வர்றியா?” என எகிறியதில் அவனுக்கும் கோபம் பீறிட்டது.

“தப்பா பேசாதீங்கப்பா… எனக்கும் அவளுக்கும் இருக்குற ஒரே கனக்ஷன் சத்யா மட்டும் தான். அவனுக்கு ஏதாவது ஆச்சு!” என மிரட்டியவனிடம்,

“உனக்கு பிஸினஸும் ஒழுங்கா பண்ண தெரியாது. இருக்குற பிசினஸை கட்டிக் காப்பாத்தவும் தெரியாது. உன்னை நம்பி இருந்தா, நீ மொத்தத்தையும் அவள்கிட்ட குடுத்துட்டு உக்காந்துருப்ப. எப்ப அவனுக்கு எதிரா என்னையவே மிரட்ட ஆரம்பிச்சியோ அப்பவே நீ இந்த கம்பெனிக்கு தேவை இல்லன்னு முடிவு பண்ணிட்டேன். அவுட்!” என்றவரின் கூற்றில் வெகுவாய் காயப்பட்டுப் போனான்.

“என்னை இங்க இருந்து அனுப்பிட்டு சத்யாவை தூக்கலாம்னு தப்பு கணக்கு போடாதீங்கப்பா. நான் விட மாட்டேன். அண்ட், அப்படி எல்லாம் வெறும் கையோட போக முடியாது. எனக்கு சேர வேண்டியதை பிரிச்சு குடுங்க. உங்க பிசினஸ் எனக்கு வேணாம்!” என்று தீர்க்கமாய் கூறி விட்டு வெளியேறி விட்டவனுக்கும் மனம் பாரமாக இருந்தது.

“இனி ப்ராபளம் வராதுன்னு சொல்ல முடியாது. இதுக்கு அப்பறம் என் அப்பா மூலமா ஏதாவது ப்ராப்ளம் வந்தா, நீ உன் சைட் ஆக்ஷன் எடுத்துக்கோ!” என இதயாம்ரிதாவிற்கு குறுஞ்செய்தி அனுப்பி விட்டவன், காரை எடுத்துக் கொண்டு இலக்கின்றி பயணம் செய்தான்.

அந்தக் குறுஞ்செய்தியை யோசனையுடன் ஏறிட்ட இதயாம்ரிதா, மறுநாள் வரை பொறுமை காத்தாள்.

சத்யாவைத் தனியே எங்கும் அனுப்புவதில்லை. ஆனால், அதனைக் காதில் வாங்கினால் தானே!

முந்தைய நாளில் இருந்தே அவளுடன் ஒரு வார்த்தை கூட பேசவில்லை அவன். வெளி வேலையாக அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தான்.

“சத்யா… எனக்குத் தெரியாம எங்கயும் போகாதீங்க” அவள் கண்டித்தும் விட்டாள்.

“உங்கிட்ட நான் ஏன் சொல்லணும்?” என்பவனைக் காட்டத்துடன் முறைப்பதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை.

வீட்டிற்கு செல்ல விருப்பமற்று காரிலேயே ஒரு நாள் பொழுதையும் கழித்த ஸ்ரீராமின் அலைபேசி அலறியது. அகில் தான் அழைத்தான்.

“சொல்லு அகில்…”

“சார்… பத்மா அக்கா அம்மாவைப் பத்தி நீங்க சொன்ன மாதிரி எல்லாமே விசாரிச்சாச்சு. ஆனா அப்படி ஒரு கேரக்டர் இருக்குற மாதிரியே தெரியல. அப்படி ஒருத்தரை கடத்துனதுக்காக அறிகுறி கூட இல்ல. ராம்குமார் சார் உயிரோட இருந்தப்ப, அவர் கூட இருந்த ஆள்கள் எல்லாரையும் சத்யா சார் விசாரிக்க சொன்னாரு. பட் என்ன பியூட்டின்னா அவங்க யாருக்கும் இப்படி ஒரு சம்பவம் நடந்ததே தெரியல…”

“ம்ம் அப்போ விஷாலைத் தவிர யாருமே இதுக்கு பதில் சொல்ல முடியாது ரைட்?”

“எக்ஸ்சாக்ட்லி சார்” என்ற அகிலை பூமிகா நச்சரித்தாள்.

“சார் ஒரு நிமிஷம் மிதுனா பேசுறா” என அலைபேசியை அவளிடம் கொடுத்தான்.

“அண்ணா… விஷால் மட்டும் தான் இதுக்கு பதில் சொல்ல முடியும்னு நானும் அகியும் விஷாலோட பிரைவேட் பங்களால நோட்டம் விடலாம்னு வந்தோம். ஒருவேளை அவன் இங்க எதையாவது மறைச்சு வச்சுருக்கலாம்ல” என்றதும், விஷால் அவளது அழைப்பில் கனிந்தான்.

“ஏதாவது கிடைச்சுதா மிதுனா…?”

“ஆண்ட்டி பத்தி எதுவும் கிடைக்கல. ஆனா அவன் பங்களால ஏதோ ஒரு சஸ்பீஷியஸான விஷயம் நடக்குது” என்றாள் கிசுகிசுப்பாக.

அகிலோ, “சார் இவ இப்படி தான் அப்போதுல இருந்து சந்திரமுகில வர்ற சாமியார் மாறி பயமுறுத்திட்டு இருக்கா” என்றதும் ஸ்ரீராமின் இதழ்கள் லேசாய் புன்னகைத்தது.

“டேய் இருடா…” என்று அகிலை அடக்கியவளிடம், “இதை சத்யாட்ட சொன்னீங்களா?” என ஸ்ரீராம் கேட்டான்.

“சத்யா சாரோட அத்தைப் பொண்ணைக் காணோம்னு தேடிட்டு இருக்காங்க அண்ணா. அவளைத் தேடி ஹாஸ்டல் போயிருக்காங்க. அதான் உங்களுக்கு போன் பண்ணோம்” என்ற மிதுனாவின் கூற்றில்,

“ஓ! இப்ப நான் என்ன பண்றது?” எனக் கேட்டான்.

“விஷால் பங்களாகுள்ள போகணும். ஏதாச்சு வழி இருக்கா?”

“அதான் வாசல் இருக்குமே!” நேரங்காலம் தெரியாமல் வாரிய ஸ்ரீராமை அலைபேசியின் வழியாகவே முறைத்த மிதுனா,

“அண்ண்ண்ண்ணா… வீடுன்னு இருந்தா வாசல்னு ஒன்னு இருக்க தான் செய்யும். நான் விஷாலுக்குத் தெரியாம உள்ள போகணும். சத்யா சாரோட பொய் கேஸ் பைல்ஸ் எல்லாம் அவன்கிட்ட இருக்கும்னு அக்காவோட டவுட்” என்றதும்,

“ஆனா இப்போ எதுக்கு அதெல்லாம்” எனப் புரியாது வினவினான் ஸ்ரீராம்.

“அது தெரியல. பத்மா அக்கா அம்மாவைத் தேடுறதோட இந்த வேலையையும் பார்க்க சொன்னா. இப்ப நாங்க ஏன் உங்களுக்கு போன் பண்ணுனோம்னா, இங்க விஷாலோட பிரைவேட் பங்களால அவனுக்கு அஸிஸ்டண்ட்டா இருக்குறது, உங்க கம்பெனில ஒர்க் பண்ற ஒரு எம்பிளாயி” என்றதும் “வாட்?” எனத் திகைத்தான்.

“ஆமா அண்ணா. விஷால் வெளில போற சமயத்துல அவன் தான் பங்களாவை பாதுகாக்குறான். வாட்ச்மேன் தவிர இன்னொருத்தன் இருக்கான்னா, அப்போ அவன் பங்களாக்குள்ள ஏதோ வச்சுருக்கான்னு தான அர்த்தம். ஒருவேளை ஆண்ட்டியை அடைச்சு வச்சுருந்தா?” என வினவும் போதே அவளுக்கு இதயாம்ரிதா அழைத்தாள்.

“அண்ணா ஒரே செகண்ட் லைன்ல இருங்க கான்பரன்ஸ் போடுறேன்” என்று இதயாவையும் இணைத்து விவரத்தைக் கூறிட, அவளோ தடுத்தாள்.

“நோ மிதுனா. இப்ப நீங்க உள்ள போறது நல்லது கிடையாது. அவனுக்கு டவுட் வந்துட்டா எல்லாம் வேஸ்ட் ஆகிடும். நம்ம பத்மாவை உள்ள அனுப்பலாம்…” என்றதும் ஸ்ரீராம் தடுத்தான்.

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 122

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
19
+1
128
+1
5
+1
4

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

3 Comments

  1. விறுவிறுப்பாக போகுது.

  2. Stry supiri aa eakiii..
    But stry romba late aa potringele
    Next epo siz poduvinge