
“அந்த பொண்ணு பேர் ஸ்வேதா தானே! ஆனா பிங்கி எப்படி?” என்று யோசனையாக திரு கேட்க,
“எப்படின்னு எனக்கும் தெரியலைங்க பிங்கியை இங்கதான் மண்டபத்துல பார்த்திருக்கான் பிடிச்சுபோய் தான் நம்மகிட்ட சொல்லியிருக்கான்.. ஆனா அவனுக்கும் அது நம்ம பிங்கின்னு தெரியலை போல..” என்றார் மகன் மீதான நம்பிக்கையில் வெள்ளந்தியாக…
“இல்லையே அப்படியும் சொல்றதுக்கு இல்ல” என்று திரு மேவாயை நீவ…
“என்ன சொல்றீங்க..”
“அம்மூ பிங்கின்னு தெரியாமயா இத்தனை வருஷம் காத்திருந்தவன் ஏழு நிமிஷத்துல அவளை வாழ்க்கைதுணையா தேர்ந்தெடுத்தான்.. அதைவிட அவளோட தழும்பு எத்தனை இன்ச் ஆழம்னு சரியா சொன்னான்.. இதெல்லாம் பார்க்கிறப்போ எனக்கென்னமோ இது எதேச்சையா சொன்ன மாதிரி தோணலை.. உனக்கு ஞாபகமிருக்கா கவி பிங்கியை இவன்கிட்ட ஏதோ டியூஷன்ல விட சொன்னப்போ இவன் வேகமா கூட்டிட்டு போனதுலதான் பிங்கிக்கு தாடை கிழிஞ்சு தையல் போடவேண்டியதா போச்சு.. அது இன்னும் ஞாபகம் வச்சுட்டு சொல்றான்னா எனக்கு இது எதார்த்தமா தோணலை”
“வேற என்ன சொல்றீங்க..”
“என்னங்க பேசுறீங்க அப்படி எல்லாம் இருக்காது…”
“எப்படி சொல்ற..”
“எனக்கு தெரியும் அந்த ரெண்டு வருஷத்துல பிங்கியும் தம்புவும் என் எதிர்ல பேசிகிட்டது கூட கிடையாது அப்புறம் எப்படி நீங்க லவ்னு சொல்றீங்க… உங்களுக்கே தெரியும் தம்பு எப்பவும் அவன் ரூம்குள்ள யாரையுமே சேர்த்த மாட்டான்…”
“ஒருமுறை பிங்கி தெரியாம ஜித்துவோட போனதுக்கு காச்மூச்னு கத்தினது எனக்குதான் தெரியும்.. அதுல இருந்து பிங்கி அவன் ரூம் பக்கம்கூட போனதில்லை.. தம்புக்கும் படிப்பு, விளையாட்டு, கராத்தே சிலம்பம் கிளாசஸ்னு யார்கிட்டயும் பேசுமளவு நேரம் இருந்தது இல்லை..”
“ஒருவேளை சண்டே அவன் வீட்டுல இருந்தா பிங்கி அந்த பக்கம்கூட திரும்பி பார்க்க மாட்டா. எப்பவும் என் முந்தானையை பிடிச்சிட்டு தான் சுத்துவா.. அதுவும் அவ அங்கிருந்து போனபோது சிக்ஸ்த் படிச்சிட்டு இருந்த குழந்தை அவளை போய் எப்படிங்க என் பையன்? உங்க கற்பனைக்கு அளவில்லையா..”
“எனக்கு தெரியும் தம்பு இங்க பார்த்துட்டுதான் அவளை பிடிச்சிருக்குன்னு சொல்றான்..” என்று அடித்து கூறினார் நாயகி.
“எனக்கு அப்படி தோணலை.. ஏதோ இருக்கு இல்லன்னா எதுவுமே விசாரிக்காம எந்த கண்டிஷனும் போடாம எப்படி ஒத்துப்பான்… ஏதோ இடிக்குது..”
“இடிச்சா தள்ளி உட்காருங்க.. அதுக்கும் என் பிள்ளையை குறை சொல்லாதீங்க” என்று கணவரை முறைத்தவர்,
“உங்களுக்கு தம்புவை பேசலைன்னா தூக்கம் வராதே… இவ்ளோ பேசுறவர் எதுக்கு அவன் சொன்ன அடையாளத்தோட பொண்ணை தேடுனீங்க அப்படியேவிட வேண்டியதுதானே நானே பார்த்திருந்திருப்பேனே ..?” என்று நாயகி குரல் உயர்த்தவும்..
“சரி சரி எதுக்கு இவ்ளோ டென்ஷன் ஆகற… எனக்கு தோணினதை சொன்னேன் இனி எதுவும் சொல்லலை விடு” என்று திரு சரண்டராக…
“ஒரு நல்ல அப்பாவா பையனுக்கு பிடிச்ச பெண்ணை சம்பந்தம் பேசி கல்யாணத்தை நடத்துறதை பத்தி யோசிக்காம என் பிள்ளையை குறை சொல்றதுலையே இருந்தா எப்படி..”
“சரி சரிம்மா இனி பேசலை போதுமா… நீயே சொல்லு எப்ப பார்கவி கைலாசம்கிட்ட பேசலாம்… உனக்கு அவங்க வீடு தெரியுமா..”
“தெரியாதுங்க… இனிதான் அதெல்லாம் விசாரிக்கணும்… நான் கவிகிட்ட பேசிட்டு சொல்றேன் அப்புறம் நீங்க கைலாசம் அண்ணன்கிட்ட பேச்சு தொடங்குங்க அடுத்த முகூர்த்தத்துல கல்யாணம் முடிச்சிடலாம்..” என்றிட அவர் அருகே வந்தமர்ந்தார் பார்கவி.
“என்னாச்சு கவி..”
“ரிசெப்ஷன் முடிஞ்சதும் நலங்கு வைக்கனுமில்லையா அதுக்கு எல்லாம் சரியா இருக்கான்னு பார்க்க கூப்பிட்டிருந்தாங்க.”
“ம்மா, அத்தை ஆஷ்மி கூப்பிடுறா நீங்க சாப்பிடுங்க நான் ஸ்டேஜ்க்கு போயிட்டு வந்துடுறேன்” என்று திரு நாயகியிடம் விடைபெற்று ஆஷ்மியிடம் சென்றவளை பிடித்துக்கொண்ட ஆஷ்மிதா அதன்பின் எங்கும் செல்லவிடாமல் அவளை தன்னருகே இருத்திகொண்டாள்.
அடுத்த அரைமணி நேரத்தில் திருமணமண்டபத்தை அடைந்த வசீகரன் வெளியில் வைக்கபட்டிருந்த திரையில் ஆஷ்மியின் பின்னே புன்னகை இழையோட நின்றிருந்த இழையை கண்டவன் இமைக்க மறந்து அவளை ரசித்து அவளில் லயித்து நின்றுவிட்டான்.
மீண்டும் மீண்டும் வசீகரனுக்கு அழைத்து பார்த்த ப்ரணவ் அவன் எடுக்காமல் போகவும் வெளியில் வந்தவன் அங்கே தமையனை கண்டு உடனே அவனருகே சென்று, “என்னன்னா இங்கயே நின்னுட்டீங்க? உங்களுக்காக எல்லாரும் வைட் பண்ணிட்டு இருக்காங்க சீக்கிரம் வாங்க” என்றிட அதெல்லாம் எங்கே அவன் காதில் வாங்கினான்.
அவனது மொத்த கவனமும் இழையிடம் குவித்து வைக்கபட்டிருப்பதை கண்ட பிரணவ் “அண்ணா என்ன யோசனையில் இருக்கீங்க?” என்று கேட்க,
“எனக்கும் உங்கண்ணிக்கும் குழந்தை பிறந்தா யாரை மாதிரி இருக்கும்னு யோசிச்சிட்டு இருக்கேன்டா..” என்று இழையை பார்த்தவாறு சொன்னவன் தன்போக்கில் முன்னே செல்ல “என்னது குழந்தையா?” என்று ஸ்தம்பித்து போய் நின்றிருந்தான் ப்ரணவ்.
உள்ளே நுழைந்தவன் மேடையேறி சாரதியின் காதில் ஏதோ சொல்ல, “தேங்க்ஸ் மச்சி” என்றான் வசீயை கட்டிக்கொண்டு.
ஆனால் வசீகரனின் பார்வையோ ஆஷ்மியின் பின்னே இருந்த இழையை தழுவி நின்றது. வசீகரன் மேடை ஏறுகையிலேயே அவனை கண்டுகொண்ட இழைக்கு பதட்டம் அதிகரிக்க முடிந்தவரை அவனை பார்ப்பதை தவிர்த்தவள் வேறுபுறமாக பார்த்தவாறு நின்றுகொண்டாள்.
ஆனால் வசீகரனுக்கு அப்படி எதுவும் இல்லை நிதானமாக அவளை தழுவி சென்றவனின் பார்வையில் அத்தனை உரிமை.. அதிலும் இறுதியாக தன்னிடமிருந்து கண்ணீரோடு விடைபெற்றவளிடம் இத்தனை வருடங்களில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களை தான் நிதானமாக அவதானித்திருந்தான்.
அன்றைக்கு இப்போது மிகவும் மெலிந்து காணபட்டவளை கண்ட வசீகரனுக்கு அவளிடம் பேசும் ஆவல் மேலிட்டாலும் இருக்கும் சூழல் கருதி அமைதியாக கீழே இறங்கியவன் இழையை பார்த்தவாறு ஒரு நாற்காலியை எடுத்து போட்டு அமர அவனுக்கு நாயகியிடம் இருந்து அழைப்பு..
“சொல்லுங்கம்மா..”
“எங்க இருக்க தம்பு?”
“மண்டபத்துல தான் இருக்கேன்.. நீங்க எங்க இருக்கீங்க?”
“நாங்க எல்லாரும் டைனிங் ரூம்ல இருக்கோம் அங்க வாப்பா” என்றார்.
“சரிம்மா” என்றவன் அங்கே வந்த பிரணவோடு உணவருந்தும் இடத்திற்கு செல்ல.. “தம்பு இங்கே” என்று கையசைத்து அழைத்த நாயகியிடம் சென்றவன் அவரருகே அமர்ந்திருந்த பார்கவியை கண்டதும்..,
“அத்தை நீங்களா..? எப்படி இருக்கீங்க?” என்று குறையாத ஆச்சர்யத்தோடு கேட்க,
“தம்புவா இது?” என்று அருகே இருந்த நாயகியை பார்த்தவரிடம் மகிழ்ச்சி அலை கரைபுரண்டோடியது. “எவ்ளோ வளர்ந்துட்டாங்க உனக்கு என்னை ஞாபகம் இருக்கா தம்பு?” என்று கேட்டாலும் வருடங்கள் பல கடந்தும் அவன் மனதில் இன்னும் அவர்கள் நினைவு இருப்பதை கண்டு அவருக்கு அத்தனை நிறைவு..
பின்னே உடன்பிறந்தோர் யாருமில்லாத பார்கவிக்கு நட்பு எனும் வட்டத்தை தாண்டி extended family என்பார்களே அதுபோல நெருங்கிய சொந்தம் என்று சொல்லி கொள்வதென்றால் 그것ு நாயகி திருவேங்கடத்தின் குடும்பம் தான்..
திருமணத்திற்கு முன்பு இருந்ததைவிட இழையோடு தருமபுரியில் இருவருடங்கள் இருந்தபோது பார்கவி நாயகியின் பிணைப்பு மிகவும் பலப்பட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.., புகுந்த வீட்டு பிரச்சனையால் அவர்களை இத்தனை வருடங்களாக பிரிந்திருந்தவருக்கு இன்று அனைவரையும் ஒருசேர கண்டதில் நெஞ்சம் நெகிழ்ந்திருந்தது.
“உங்களை எப்படித்தை மறப்பேன்.. இப்போ உங்களோட லோ பிபி எப்படி இருக்கு? ஒழுங்கா நேரத்துக்கு சாப்பிடுறீங்களா இல்ல ஜூஸ், மோர், பால்ன்னு குடிச்சு பாட்டியை ஏமாத்தின மாதிரி மாமாவையும் ஏமாத்திட்டு இருக்கீங்களா?” என்றவனின் உரிமையான பேச்சு கைலாசத்திற்கும் பிடித்து போனது.
“இப்பவும் அடிக்கடி அப்படி செய்வாப்பா.. ஆனா நான்தான் பிடிச்சு உட்கார வச்சு ஊட்டி விட்டுடுவேன்” என்றார் சிரிப்போடு..
ஆம் பார்கவியின் அன்னை மருத்துவமனையில் இருந்த போதெல்லாம் அவரை கவனிக்க வேண்டி அவசரவசரமாக ஓடுபவர் திடஉணவுகளை மறுத்து அவ்வப்போது நீராகரமாக மட்டுமே எடுத்துகொள்வதை கண்டு விடாமல் பார்கவியை பிடித்து உணவருந்த செய்வதே வசீகரன் தான்.. அனைத்தும் அவர் மனதில் பசுமையாய் நிறைந்திருக்க வாஞ்சையாக வசீகரனை பார்த்திருந்தார்.
“என்ன அத்தை நீங்க உங்க ஹெல்த் பத்தின அக்கறை உங்களுக்கே இல்லைன்னா எப்படி?” என்று உரிமையாக வசீகரன் கேட்க.. மற்றவர்கள் அவனை அதிசயித்து பார்த்திருந்தனர்.
“பின்னே பலநேரம் வீட்டினரிடமே அளவோடு பேசுபவன் திருமண விடயத்தில் தான் தன் இயல்பிலிருந்து மாறி நீண்ட சொற்பொழிவே நடத்தியது… ஆனால் இப்போது பார்கவியுடனான அவனது மடை திறந்த பேச்சை கேட்பவர்கள் அதிசயிக்காமல் வேறு என்ன செய்வர்?”
மற்றவர்களுக்கு எப்படியோ சிலகாலமாக வெகுவாக தன் பேச்சை குறைத்து அனைவரிடமும் இருந்து ஒதுங்கி இருந்த மகனின் பேச்சில் நாயகிக்கு அத்தனை மகிழ்ச்சி..
அதன்பின் வசீயை தன்னருகே அமர்த்திய பார்கவி அவனுடன் கதையளந்தவாறே அவனுக்காக பார்த்து பார்த்து பரிமாறிட “நீங்களும் உட்காருங்க அத்தை சேர்ந்து சாப்பிடலாம்” என்றான்.
“எனக்கு உங்களை எல்லாம் பார்த்ததுல மனசே நிறைஞ்சு போச்சு தம்பு.. உனக்கு பரிமாறி எத்தனை வருஷமாச்சு.. நீ சாப்பிடு” என்று அவன் முழுதாக சாப்பிட்டு முடிக்கும்வரை அவனை அங்கிருந்து அசையவிடவில்லை.
வசீகரனும் மறக்காமல் பார்கவியை அமர்த்தியவன் அவருக்கு பரிமாறி மிரட்டி மிரட்டியே அவர் வழக்கத்திற்கு மாறாக அதிகமாக சாப்பிட வைத்திருந்தான்.. அதைகண்ட கைலாசத்திற்கு பெரும் வியப்பு..
ஏற்கனவே குவைத்திலிருந்த போதும் சரி இங்கு வந்தபிறகும் சரி திருவின் குடும்பத்தை பற்றியும் வசீகரனை பற்றியும் அவ்வப்போது பார்கவி பேசி கேட்டிருக்கிறார் ஆனால் அவர்களின் பிணைப்பை முதல்முறை காண்பவருக்கு.. கொஞ்சம் முயற்சி செய்து இக்குடும்பத்தை மனைவிக்கு முன்னரே மீட்டு கொடுத்திருக்க வேண்டுமோ என்ற எண்ணம் எழத்தான் செய்தது.
ஒருவழியாக அனைவரும் உண்டு முடித்து வர இங்கு ரிசெப்ஷனில் கூட்டமும் குறைந்திருந்தது.. மகள் இன்னும் உண்ணாமலிருப்பதை கண்ட பார்கவி அவளுக்கு அழைத்தார்.
“சொல்லுங்கம்மா..”
“நேரத்துக்கு சாப்பிடாம என்ன பண்ணிட்டு இருக்க பிங்கி?” என்றார் சற்று அதட்டலாக.
“இல்லமா ஆஷ்மிகூட சாப்பிடலாம்..” என்றவள் அப்போதுதான் சாரதியையும் ஆஷ்மிதாவையும் புகைப்படக்காரர்கள் தனித்து புகைப்படம் எடுப்பதை கண்டவள், “இதோ போய் சாப்பிடுறேன்ம்மா” என்றவள் “அத்தை மாமா சாப்ட்டாச்சு தானே?” என்று கேட்கவும் மறக்கவில்லை..
“அவங்கெல்லாம் சாப்ட்டச்சு நீ முதல்ல இங்க வா” என்று மகளை அழைத்தார்.
“எங்க இருக்கீங்க?” என்றவளிடம் இடத்தை கூறவும் அடுத்த சில நொடிகளில் அங்கு சேர்ந்தவளின் முன் வசீகரன் நின்றிருந்தான். அவனை கண்டதும் பேச்சை மறந்தவளாக இழை மெளனமாக நின்றிருப்பதை கண்ட பார்கவி, “என்ன பார்க்கிற நம்ம தம்பு பிங்கி உனக்கு ஞாபகமில்லையா” என்று சந்தேகமாக கேட்க மறக்கமுடியுமா அவளால் அவனை?
“ஹ்ம்ம்..” என்று தலையசைத்தவள் முயன்றவரை இயல்பாக அவனுக்கு வணக்கம் தெரிவித்தவள் நொடியும் தாமதிக்காமல் அவனிடமிருந்து விலகி அபியின் அருகே சென்று இயல்பாக பேச தொடங்கிவிட்டாள். அதை கண்ட வசீகரனின் கண்கள் இடுங்கியது.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
9
+1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


திருப்பா உங்க பையன் உங்கள சுத்தல்ல தான் எப்பவும் வெச்சிருப்பான் போல. எப்படி புலம்ப வெச்சுட்டான் பாருங்க.
“தழும்புகாரி பிங்கினு தெரிஞ்சு சொன்னானா?, அப்போ பிங்கிய விரும்பினானா?, சுவேதா யாரு?, தழும்புக்காரி மேல் கொஞ்ச நேரத்தில் காதல் வந்துட்டா?” – பாவம் எத்தனை குழப்பம் திரு அப்பாவிடம். 🤣🤣 இதுல இடிச்சா தள்ளி உட்கார சொல்றாங்க அவர் தர்ம பத்தினி.
“புன்னகை இழையோட நின்றிருந்த இழை” 😍😍😍😍
அவள ரசிக்கிறது போதாதுனு குழந்தை யார் ஜாடைல இருக்கும்னு கற்பனை குதிரையை வேறு தட்டி விடறானே.
பாவப்பட்ட குடும்பம் கொஞ்சம் பார்த்து பண்ணு வசி. ஒரே நாள்ல இத்தனை ஷாக் குடுத்தா எப்படி?
இழை ஏன் வசிய தவிர்கிறா?
இழை ஏன் வசீய தவிர்க்கணும் …
வசீ ரொம்ப பாஸ்ட் டா போகாதப்பா … பாவம் வீட்ல இருக்க எல்லாரும் …