Loading

அவர் நண்பர் சாகரிடம் இருந்து அழைப்பு வரவும் பேசி முடித்து வாட்ஸ்அப்பை திறந்து பார்த்தவர்  மகனின் பதிலில் சீற்றம் கொண்டு உடனே அவனுக்கு அழைக்க அதுவோ அணைத்து வைக்கபட்டிருந்தது.

ஜித்து உன் பெரிம்மாவை கூப்பிடு என்றவர் தன் எதிரே வந்து நின்ற நாயகியை கடிய முடியாமல் பல்லை கடித்து கொண்டு அமர்ந்திருந்தார். பின்னே மகன் மட்டுமல்ல மனைவியும் அவருக்கு ப்ரியமானவளே!

கோபமாக இருக்கையில் எங்கே வார்த்தைகளை சிதற விட்டுவிடுவோமோ என்று மனைவியிடம் அதிகம் பேசமாட்டார் அதனால்  “தம்பி என்ன விஷயம்னு நீங்களாவது சொல்லுங்க?” என்று கணவரின் கோபத்தை கண்டு நாயகி பசுபதியிடம் படபடத்தார்.

“இனி நான் பொண்ணு பார்த்து எங்கயும் அசிங்கப்பட தயாரா இல்லை அவனையே ஏதாவது பெண்ணை கூட்டிட்டு வர சொல்லு ஆசிர்வாதம் பண்றேன்” என்று திரு பொதுவாக அனைவரையும் பார்த்து  கடுகடுக்க…,

“ஆத்தாடி அக்கா மாமா என்ன இப்படி ஒரு முடிவுக்கு வந்துட்டாரு தம்பு அப்படி என்ன சொல்லி இருப்பான்” என்று அபி காதை கடிக்க,

“இவ வேற சும்மா இருடி..”

“நீங்க சொல்லுங்க தம்பி..”

“அண்ணி கரண்க்கு  பெண்ணோட போட்டோவும் டீடெயில்ஸ்ஸும் மெசேஜ் பண்ணி இருந்தேன் அதுக்கு அவன் அனுப்பின ரிப்ளை பார்த்துட்டு தான் அண்ணா கோபமாகிட்டார்…”

“அப்படி என்ன அனுப்பினானோ..” என்று பரிதவிப்போடிருந்த நாயகியிடம், “அக்கா இப்போ ஏதாவது புது கண்டிஷன் போட்டிருப்பானோ அதான் மாமா டென்ஷன் ஆகிட்டார் நினைக்கிறேன்..”

“அப்படியெல்லாம் இருக்காது அபி இருந்தா முதல்ல என்கிட்டே தானே சொல்லுவான்… நீங்க சொல்லுங்க..?”

“அண்ணி அந்த பொண்ணு விதுஷா மாசம் ஒன்றரை லட்சம் சம்பாதிக்குது..”

“அதுதான் தெரியுமே தம்பி! இவ்ளோ நாள் தம்பு கேட்ட மாதிரிதானே பொண்ணுங்களை பார்த்துட்டு வரோம் அதுல என்ன பிரச்சனை..”

“அதில்லண்ணி பிரச்சனை..”

“வேற என்னன்னு சீக்கிரம் சொல்லுங்க..” என்று பரபரத்தார் அபிராமி.

“இவ்ளோ நாள் இல்லாம கரண் இனி வேலைக்கு போற பெண்ணை பார்க்காதீங்க வேலைக்கு போகாத பெண்தான் வேணும்னு சொல்லிட்டான்” என்றதுமே அரண்டு போனார் அகிலாண்டநாயகி.

பின்னே முதல்முறை உனக்கு பெண் பார்க்க போகிறோம் என்று வசீகரனிடம் சொன்னதுமே ‘திருமணமா?? யாரை கேட்டு முடிவு செஞ்சீங்க என்னோட பிரைவசி போயிடும்.. யாருக்கும் பதில் சொல்லி எனக்கு பழக்கம் இல்லை.. நானே இப்போதான் ஓரளவு ஸ்டெடி ஆகியிருக்கேன் இன்னும் சாதிக்க வேண்டியது எவ்வளவோ இருக்கு அதுக்குள்ள என்னால யார்கூடவும் எதுவும்.. ஐ மீன் நான் தனியாவே இருந்துட்டேன்ம்மா என்னால.. எனக்கு மத்தவங்ககூட ரூம் ஷேர் பண்ணி பழக்கமில்லை.. ‘ என்றதுமே தூக்கிவாரி போட்டது பெண்களுக்கு.

“என்னக்கா இது ரூமே ஷேர் பண்ணமாட்டேன் சொல்றவன் எப்படி கல்யாணம், குழந்தை அப்போ உனக்கு இந்த ஜென்மத்துல பேரன் பேத்திக்கு ப்ராப்த்தம் இல்லையா?” என்று கேட்க நாயகிக்கு பேச்சே எழவில்லை.

“தம்பு..” என்ற தாயின் கலங்கிய முகத்தை கண்டவன்,

“ம்ப்ச் ம்மா நீங்க நினைக்கிற மாதிரி கல்யாணம் அத்தனை சாதாரணம் கிடையாது.. எனக்கு என்ன இப்பதானே இருபத்தஞ்சாகுது லைப்ல எவ்வளவோ இருக்கும்மா அதுக்குள்ள கல்யாணங்கிறது ஒரு பெரிய ஸ்பீட் ப்ரேக்! யாரு என்னன்னே தெரியாத ஒரு பெண்ணோட நம்ம லைப்பையே ஷேர் பண்றதுங்கிறது  அவ்ளோ ஈஸி இல்லம்மா..”

“எனக்குன்னு சில கமிட்மெண்ட்ஸ் இருக்கு நிறைய அச்சீவ் பண்ணனும்.. அதைவிட என்னோட லைப் பார்ட்னர் பற்றின எதிர்பார்ப்பு இருக்கு .. ஆனா அதுக்கு இது நேரமில்லை இன்னும் கொஞ்சம் நாள் போகட்டும்” என்றதும் தான் சமாதானமானார் நாயகி.

நினைவில் அமிழ்ந்திருந்த நாயகியிடம்,  “க்கா இதென்னக்கா புது பூகம்பம்?” என்ற அபியின் விழிகளிலும் கலக்கம்.

இறுதியாக அனைவரையும் ஒரு பார்வை பார்த்த திருவேங்கடம், “என்னால இவன் எதிர்பார்ப்புக்கு இனி பெண் பார்க்க முடியாது அவனையே பார்த்துக்க சொல்லுங்க இல்ல யாரையாவது லவ் பண்ண சொல்லி கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வர சொல்லுங்க…”

“லவ்வா?” என்ற அனைவரின் முகத்திலும் அத்தனை அதிர்ச்சி.

பின்னே ஒருவருடத்திற்கு முன் வசீகரனிடம் “யாரையாவது லவ் பண்ணினா சொல்லுப்பா நாங்க அப்பா கிட்ட பேசி அந்த பெண்ணையே கல்யாணம் பண்ணி வைக்கிறோம்..”

“ம்மா லவ்ங்கிறது ஸ்லோ பாய்சன் மாதிரி நம்மோட நேரம், சந்தோசம், நிம்மதி, லட்சியம், உறவு, உயிர்னு எல்லாத்தையும் கொஞ்சம் கொஞ்சமா நம்மகிட்ட இருந்து பிரிச்சு மொத்தமா நம்மையே அழிச்சிடும்.. மூளை இருக்கவன் யாரும் லவ் பண்ண மாட்டான்மா..  எனக்கு அதைவிட முக்கியமான வேலைகள் இருக்கு நகருங்க..” என்றதில் விழிபிதுங்கி போயினர் அன்னையர்.

“இன்னும் எவ்ளோ நேரம் தான் யோசிப்ப கவி சீக்கிரம் சொல்லுமா இவங்க வீட்ல பேசட்டா” என்று வரன்களின் குடும்பம் குறித்த விவரங்களை கையில் வைத்து ஆராய்ந்து கொண்டிருந்த பார்கவியிடம் மூன்றாவது முறையாக கேட்டிருந்தார் கைலாசம்.

அதில் ஒரு பையனின் புகைப்படத்தை கணவரிடம் காண்பித்தவர், “இந்த பையன் நல்லா சம்பாதிக்கிறான் நல்ல வேலை, சென்னைல தான் வீடு ஆனாலும் வேண்டாங்க..”

“ஏன்மா?”

“அவனோட அப்பா அம்மாக்கு ஒரே பையனா இருக்கான் அக்கா தங்கச்சி, அண்ணன் தம்பின்னு யாருமே இல்லைங்க..”

“ஏன் அதனால என்ன? ஒருவேளை நாளைக்கு நம்ம பொண்ணு தான் தனியா எல்லாம் எடுத்து செய்யணும்னு வேண்டாம் சொல்றியா?”

“ம்ப்ச் அப்படி இல்லைங்க.. அவரோட அப்பா அம்மாக்கு வேற குழந்தைங்க இல்ல அதனால எப்பவும் இவரைதான் சார்ந்து இருப்பாங்க..”

“அது தப்புன்னு சொல்றியா?”

“அப்படி இல்லைங்க அவங்களோட மொத்த பாசமும் அன்பும் இந்த பையன் மேலதான் இருக்கும்.. சொல்லபோனா அவங்களோட உலகமே இவர சுத்தி தான் இயங்கும்..”

“அதுல ஒன்னும் தப்பில்லையே நமக்கும் ஒரே பொண்ணு நாமளும் அப்படிதான் இருக்கோம் இதுல என்ன இருக்கு..?”

“இல்லைங்க அப்படி சொல்லலை அவங்களுக்கு ஒரே பையன் நமக்கு இருக்கிறது ஒரே பொண்ணு.. நிச்சயமா அவதான் நம்மோட வேர்! அதுல சந்தேகமில்லை ஆனா எப்ப அவ பிறந்தாலோ அப்பவே அவ வேரா மட்டுமில்லை ஒருநாள் வேறாகவும் மாறப்போறாங்கிறது நமக்கு தெரியும்.. இதுதான் நிதர்சனம் அந்த புரிதல் எனக்கு இருக்கு ஆனா அந்த பையனோட அப்பா அம்மாக்கு அவங்க பையனுக்கு மகனா மட்டுமில்லாம கணவனாகவும் கடமை இருக்குன்னு எந்தளவுக்கு புரிதல் இருக்கும் சொல்லுங்க? ஒருவேளை உங்கம்மா மாதிரியே..” என்று ஆரம்பிக்கவும்,

‘என்ன கவி எதை எதோட முடிச்சு போடுற எங்கம்மாக்கு நாங்க நாலு பசங்க!’

“இல்லைன்னு சொல்லலைங்க ஆனா நாலு பேர் இருந்தப்பவும் அவங்களோட மொத்த பாசமும் மூத்த பையனான உங்கமேல தானே இருந்தது அதுவே என்னை அவங்களை எதிரியா பார்க்க வச்சது அதனால நான் படாத கஷ்டமில்லை… இப்போ தெரிஞ்சே ஒரு பையன் இருக்க வீட்ல என் பெண்ணை கொடுத்து அதனால..” என்று ஒரு நொடி கண்களை இறுக மூடியவரின் இமைகளுக்குள் கடந்த காலம் விரிய அதை உணர்ந்த கைலாசமும்,

“இப்போ எதுக்கும்மா அதெல்லாம் பேசிட்டிருக்க? விட்டுத்தள்ளு  கவி..” என்று ஆறுதலாய் மனைவியை அணைத்து கொண்டார்.

என்னமோ தெரியலை எவ்வளவோ ஹாஸ்பிட்டல் எத்தனையோ செக்அப் பண்ணிட்டோம் எல்லாரும் நமக்கு  அடுத்த குழந்தை பிறக்கும்னு சொன்னாங்க ஆனா கடவுள் நமக்கு ஒரு குழந்தை தான்னு விதிச்சிருக்கார்.. நான் எங்கப்பா அம்மாக்கு ஒரே பொண்ணு அதேபோல எனக்கும் எழுதிட்டார் போல..

இங்க நம்ம வீட்லதான் அவ தனியாவே வளர்ந்துட்டா போற இடத்துலயும் நாலு சொந்தபந்தம் இல்லாம, ஆத்திர அவசரத்துக்கு, நல்லது கெட்டதுக்கு சொந்தபந்தம் துணை இல்லாம இருந்தா எப்படிங்க..?

“சொல்ல முடியாது இப்போ இந்த பையன் ஒரே குழந்தை எனும்போது நாளைக்கு என் பெண்ணையும் அவங்க பையனை பிரிக்க வந்த எதிரியா பார்க்க வச்சுட்டா அவ எப்படி சமாளிப்பா நீங்களே சொல்லுங்க?”

“எல்லாரும் எங்க அம்மா மாதிரி இருக்கனும்னு அவசியம் இல்லையேமா?”

“அதுதாங்க தப்பு எத்தனை குழந்தை இருந்தாலும் எப்பவும் ஒரு அம்மாக்கு தனக்கு முதல்முறையா அந்த ஸ்தானம் கொடுத்த குழந்தை ரொம்ப ஸ்பெஷலா இருக்கும்.. அதுவும் அது பையனா இருந்துட்டா சொல்லவே வேண்டாம் அவ்ளோ சீக்கிரம் அந்த பையன் மேல இருக்க உரிமையை விட்டு கொடுக்க மாட்டாங்க அதுதான் உங்க அம்மா விஷயத்துலயும் நடந்தது இல்லைன்னு உங்களால சொல்ல முடியுமா?”

“ஒத்துக்குறேன் அதனாலதானே நான் இங்க இல்லாதப்போ பிரச்சனை வேண்டான்னு  உன்னை உங்க அம்மா வீட்டுக்கு அனுப்பியிருந்தேன்..”

“நீங்க என்னை புரிஞ்சிகிட்டீங்க உங்க அம்மாவையும் விட்டு கொடுக்காம என்னையும் விட்டுகொடுக்காம ரொம்ப அழகா அந்த சூழலை கையாண்டீங்க ஆனா அதையே எல்லார்கிட்டயும் எதிர்பார்க்க முடியுமா சொல்லுங்க.. உங்ககிட்ட இருக்க பக்குவமும் பொறுமையும் இந்த காலத்து பசங்ககிட்ட எதிர்பார்க்க முடியுமா அதுவும் ஒரே பையன்னா சொல்லவே வேண்டாம்..”

“அப்போ உனக்கும் இழை ஸ்பெஷல் தானே?”

“இல்லைன்னு சொல்லுவேனா? அதுதான் சொன்னேனே அவ பிறந்தபோதே வேறாகவும் மாறபோறாங்கிற நிதர்சனத்தை ஏத்துகிட்டு இப்போ அந்த பக்குவத்துக்கு வந்த பிறகுதான் நான் என் பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடவே ஒத்துகிட்டேன்னு.. நான் மட்டுமில்லை பெண் பிள்ளையை பெற்ற எல்லா அம்மாவுமே அவ என்னைக்கு இருந்தாலும் இன்னொருத்தருக்கு மனைவியாக போறவங்கிற புரிதலோட இருப்பாங்க ஆனா பையனை பெத்த எந்த அம்மாவும் நாளைக்கு அவங்க மகன் இன்னொருத்திக்கு கணவனாக போறவங்கிற புரிதல் கொண்டிருக்க மாட்டாங்க..”

“என்னம்மா பேசுற உன்னை போலவே பக்குவமான அம்மாக்கள் இருக்கவும் வாய்ப்பு இருக்குதானே!”

“இருக்கலாம்ங்க ஆனா அதெல்லாம் எனக்கு தெரியாது என்னால ஒரே பையன் இருக்க வீட்டுக்கு என் பெண்ணை அனுப்ப முடியாது அவ்ளோதான்!”

“என்னம்மா பேசுற வாழ்க்கையில் பிரச்சனை வராமலே இருந்திடுமா என்ன..?”

“பிரச்னைங்கிறது வேற ஆனா தெரிஞ்சே என் பெண்ணோட வாழ்க்கையை சிக்கலாக்க விரும்பலைங்க எனக்கு என் பெண்ணோட சந்தோஷம்தான் முக்கியம்..”

“சரிம்மா உன் விருப்பம் அடுத்த பையன் எப்படி..?”

“இந்த பையன் இதோட நாலு கம்பனி மாறிட்டான் சொல்றீங்க.. நிலையான வேலைல இல்லாதவன் உறுதியான முடிவும் எடுக்கமாட்டான் அடுத்து அடுத்துன்னு தேடிட்டே இருப்பான்…, போதுமென்ற மனமே பொன் செய்யும் மனதுன்னு சொல்லுவாங்க கால் காசு சம்பாதிச்சாலும் ஆத்ம திருப்தியோட வாழனும்..  சம்பாத்தியத்தை கொண்டு சிறப்பா வாழ தெரியாதவன் எவ்ளோ கொடுத்தாலும் திருப்தி அடையாத மனநிலையில இருப்பான்..”

“அதனால ஐடி மாப்பிள்ளை தான்னு இல்லை ஸ்டேட் கவர்மென்ட்டா இருந்தாலும் சரி இல்ல சென்ட்ரல் கவர்ன்மென்டா இருந்தாலும் சரி ஆனா ஒரு நிலையான வேலையில இருக்கனுங்க… ஊருவிட்டு ஊரு போய் நாடு விட்டு நாடு போய்னு அங்கயும் இங்கயும் அல்லாடுற நாடோடி பொழப்பு என் பொண்ணுக்கு வேண்டாம்….முடிஞ்சவரை சென்னையில இருக்க பையன்னா நல்லா இருக்கும் இல்ல ஒரு மணி நேரம் ட்ராவல் பண்ற மாதிரி ஊருல இருக்கவங்களை பாருங்க ரொம்ப தூரம் வேண்டாம்”

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
8
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. வசீகரன் குடும்பத்தை நல்லா குழப்பி வச்சிருக்கான் போலையே. முன்னாடி போனால் இடிக்கும் பின்னாடி போனால் கடிக்கும் மாதிரி. யார்கூடையும் ரூம் ஷேர் செஞ்சு பழக்கம் இல்லையா. 🤣🤣
    பாவம் அம்மும்மா! என் உலகம் தனி உலகம் என்று சுற்றிக்கொண்டுள்ளவனை என்ன செய்ய?
    இங்கு வந்த வரன் வேலைக்கு செல்வதால் வேண்டாம் என்று அக்கப்போரு.
    அங்கு நாயகி வீட்டிலோ வந்த வரன்களை அலசி ஆராய்ந்து நிராகரிக்கும் படலம் நடக்கிறது.
    நாயகன் நாயகி சந்திப்பு படலம் எப்பொழுதோ?

  2. தீவிரமா பொண்ணு மாப்பிள்ளை பார்க்குறாங்க … இழை வீட்ல அம்மா சொல்றது நியாயம் தான் … அதனால பெரிய குடும்பம் னு கரணை தேர்ந்தெடுப்பாங்களோ