
மறுநாள் காலை இதயாம்ரிதா கண் விழித்ததே உமா கதவைத் தட்டும் சத்தம் கேட்டு தான்.
சோம்பல் முறித்து எழுந்து கதவைத் திறந்தவள், “குட் மார்னிங் மாம்” என்றிட அவரோ இடுப்பில் கை கொடுத்து முறைத்தார்.
“காலைல அஞ்சு மணில இருந்து கதவைத் தட்டுறேன். போன் பண்றேன். கும்பகர்ணி மாதிரி தூங்குற அம்ரி நீ!” என்றபிறகு அலைபேசியை சோதித்தவள், “ஓ ஷிட். சாரி மாம் என்னாச்சு உடம்பு சரி இல்லையா?” என அவர் நெற்றியைத் தொட்டுப் பார்த்தாள்.
“எனக்கு ஒன்னும் இல்ல அம்ரி. உனக்கு தான் நிலோஃபர் நைட்டுல இருந்து கால் பண்றாளாம். ரொம்ப டயர்டாடா…” எனக் கவலைப்பட்டுக்கொண்டார்.
சற்றே தடுமாறியவள், “போன் சைலண்ட்ல போட்ருந்தேன்மா…” என அவர் கண்ணைப் பாராது பொய்யுரைத்தவள், “நிலோ எதுக்காக இத்தனை தடவை கால் பண்ணிருக்கா?” எனக் கேட்டபடி அழைப்பு பட்டியல்களைச் சரி பார்க்க, அதில் விஷாலுடைய எண்ணும் மிஸ்ட் காலில் காட்டியது.
லேசாய் புருவம் சுருக்கியவளிடம் உமா, “அது தெரியல அம்ரி. என்னன்னு கேட்டேன் சொல்லவே இல்ல அவ. நீ பேசிட்டு என்னன்னு எனக்கும் சொல்லு… நான் ஊருக்குப் போறதுக்கு பேக் பண்ணிட்டு இருக்கேன். மதியத்துக்கு மேல கிளம்புறேன்” எனத் தகவல் கூற அதனைக் காதில் வாங்கியபடி நிலோஃபருக்கு அழைத்தாள்.
ஒரே ரிங்கில் நிலோபர் அழைப்பை ஏற்றுவிட்டாள். அவளது குரல் கம்மியது.
“போன் பண்ணுனா எடுக்க மாட்டியாடி?” எடுத்ததும் சீறினாள் நிலோபர்.
“கவனிக்கல நிலோ என்ன ஆச்சு?” இதயாம்ரிதா கேட்டதும், அவளிடம் சிறு கேவல்.
“ஷ்யாம் சூசைட் அட்டெம்ப் பண்ணிட்டான் அம்ரி…” நிலோஃபரின் வார்த்தைகளும் உடைந்தது.
அதிர்ந்து போன இதயாம்ரிதா, “என்னடி சொல்ற? அவன் எதுக்காக சூசைட் அட்டெம்ப் பண்ணனும்? பைத்தியமா அவன். இப்ப எப்படி இருக்கான்? எங்க இருக்க நீ. உன் கூட யார் இருக்கா?” என அவசரமாக பல கேள்விகள் கேட்டாள்.
“தெரியல அம்ரி. நைட்டு கையை அறுத்துட்டு பாத்ரூம்ல கிடந்தான். ஹெல்ப்க்கு யாரை கூப்புடுறதுன்னு தெரியல. உனக்கு போன் பண்ணுனேன் நீயும் எடுக்கல. பத்மாவும் ஊர்ல இல்ல. யாமினிக்கு கால் பண்ணுனா, அவள் நைட்டு பார்ட்டில ஹேங் ஓவர். விஷால் தான் என்கூட இருக்கான்… பயமா இருக்கு அம்ரி…” எனத் தேம்பி தேம்பி அழுததில் இதயம்ரிதாவிற்கு வேதனை அதிகரித்தது.
“ஒன்னும் ஆகாதுடி. லொகேஷன் அனுப்பு நான் வந்துடுறேன்…” என்றவள் தாயிடம் துரிதமாக விவரம் கூறி விட்டு மருத்துவமனை நோக்கிப் பயணத்தைத் தொடர்ந்தாள்.
காரின் வேகம் போல சீறிப்பாய்ந்தது அவளது கடந்த காலங்களும் தான்.
ராம்குமார். படு பிஸியான பிசினஸ்மேன். உமாவிற்கு கண்டிப்பான கணவன். ஆனால், மகளுக்கு மட்டும் செல்லத் தந்தை. காஸ்மெட்டிக் தொழிலில் உச்சத்தில் இருந்தவர். ராம்குமாரும் விஷாலின் தந்தை நந்தகோபாலும் பார்ட்னர்ஸ்ஸாக இருந்து பின் தொழிலைப் பிரித்துக் கொண்டவர்கள் தான். நந்தகோபால் பின்தங்கிவிட ராம்குமாரின் தொழிலும் அறிவும் அபாரமாகச் சென்றது.
திரைப்பிரபலங்களுக்கு மேக்கப் சாதனங்கள் முதல், அதனை அழிக்கும் ஜெல் வரை ஒரே கிட்டாக கொடுத்து விடுவர். நாயக நாயகிகளையும் தாஜா செய்து அல்லது கோடிக்கணக்கில் சம்பளம் கொடுத்து கூட நிவோரா பிராண்டை இன்னும் இன்னும் பிரபலமாக்கினார் ராம்குமார்.
என்னவாகினும் இருவருக்குள்ளும் இருந்த நட்பு மாறவில்லை. விஷாலை கல்லூரி காலத்தில் இருந்தே ராம்குமாரிடம் தொழில் கற்க அனுப்பினார் நந்தகோபால்.
நடிக்க மறுக்கும் உட்ச நடிகர்களின் பலவீனத்தை நன்றாக பயன்படுத்த தெரிந்தவர் ராம்குமார். தன்னிடம் வாய்ப்பு கேட்டோ அல்லது தன்னுடைய அலுவலகத்தில் வேலை பார்த்தபடி மாடல் கனவுகளுடன் வலம் வரும் இளம் பெண்களிடம் வாய்ப்பு வழங்குவதாகக் கூறி அந்த உச்ச நடிகர்களுடன் இசைய செய்திடுவார்.
சில நேரங்களில் அவருக்கே அப்பெண்களை பயன்படுத்திக் கொள்வதும் உண்டு. என்ன ஒன்றென்றால், பயன்படுத்தியபின் நிச்சயம் ஒரு வாய்ப்பு கொடுப்பார். அதை அவர்களே கெட்டியாகப் பிடித்துக்கொண்டு மேலே வருவது அவர்களின் திறமை. அதற்கு மேல் அவர் இம்மியளவும் இளகிட மாட்டார்.
விஷாலும் இதயாம்ரிதாவும் சிறு வயது முதலே நெருங்கிய நண்பர்களாதலால், இருவரின் குறும்பு பேச்சுகளும் இரு வீட்டாருக்கும் மிகவும் பிடிக்கும். ஒரு கட்டத்தில் விஷால் நிவோரா காஸ்மெட்டிக்கின் பிரபல ப்ராண்ட் மாடலாக மாறிவிட, அவனுக்கு பட வாய்ப்புகள் கூட குவிந்தது.
இதயாம்ரிதாவின் உலகமே வேறு. அவளுக்கு தந்தையின் குணநலன்கள், அவரது நடவடிக்கை அனைத்தும் அத்துப்படி தான். ஆனால், தொழிலில் அவள் தலையிட்டதில்லை. அதில் விருப்பமும் இருந்ததில்லை.
சில விஷயங்களில் தந்தையின் பிடிவாதத்தை அறிந்தவள்.
அப்படியும் ஒரு முறை கல்லூரிக்கு கிளம்பிக் கொண்டிருந்தவளைப் பிடித்து நிறுத்தினார் ராம்குமார். நரைத்த முடி அடர்த்தியாகவே இருந்தது.
“ஏன்மா, விஷாலோட சேர்ந்து நீயும் இப்ப இருந்தே தொழிலை கத்துக்கலாம்ல” விலையுர்ந்த வைர டாலர் அவர் சட்டைக்குள் இருந்து எட்டிப் பார்த்தது.
“மாம்… காபி!” எனக் கேட்டபடி டைனிங் டேபிளில் அமர்ந்தவள், தந்தையில் கேள்விக்கு நக்கலாக பதில் அளித்தாள்.
“இந்தத் தொழில்குள்ள தான் பல தொழில் இருக்கே. எனக்கு எத கத்துக்கணும்னு ஒரே கன்ஃபியூஸ் ஆகிடும்பா” எனக் குத்தியவள், அவர் முகம் மாறுவதைக் கண்டு, “எனக்கு பிசினஸ்ல பெருசா இன்டரஸ்ட் இல்ல. பேசாம காலேஜ்ல ப்ரொஃபஸர் ஆகிடலாம்னு இருக்கேன்” என்றாள் கண்சிமிட்டி.
மகளின் கூற்று புரியாது, “என்னமா நீ கடல் மாதிரி இன்டர்நெஷனல் லெவல்ல நம்ம பிசினஸ் பண்ணிட்டு இருக்கோம். ஆஃப்டரால் ப்ரொஃபஸராகணும்னு சொல்லிட்டு இருக்க…” அதிருப்தியாய் தலையசைத்தார் ராம்குமார்.
இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே சுட சுட இட்லியை மகளுக்கு எடுத்து வந்தார் உமா.
அதனைக் கண்டு தாயை முறைத்தவள், “நான் கேட்டது காபி மாம்!” என்று அதிகாரமாய் உரைக்க, “காலை டிபன் சாப்பிடும்போது எதுக்கு காபி? அதெல்லாம் விடிய காலைல எந்திரிக்கிறவங்களுக்கு தான். இதை முதல்ல சாப்பிடு” என்று அவளை விட அதிகாரமாய் அதட்டினார்.
எப்போதும் மகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் ராம்குமார், அவள் பட்னியாய் கல்லூரிக்கு கிளம்புவதில் உடன்பாடின்றி, “சாப்பிட்டு காபி குடிமா. என் தங்கம்ல” என்று கொஞ்சி சொல்ல,
“ம்ம்… மாம்காக இல்ல. உங்களுக்காக சாப்பிடுறேன் டேடி. மொதோ இவங்களை இந்த இட்லியை சமைக்க வேணாம்னு சொல்லுங்க. டூ போரிங்” என்று முகம் சுளித்தாள்.
“நீ இருமா. ஏய் உமா… ரெண்டுக்கு நாலு வேலைக்காரங்க போட்டுருக்கேன் சமைக்க. ஏன் வெறும் இட்லி மட்டும் தான் செஞ்சுருக்கு. இத எடுத்துட்டு போய் முறுகலா தோசை சுடு” என்றார் அதட்டலாக.
“அதில்லங்க, இன்னைக்கு வேலைக்காரங்க லீவு. வெள்ளிக்கிழமை வேற. வீட்டை சுத்தம் பண்ணிட்டு சாமி ரூமை க்ளீன் பண்ணவே லேட்டாகிடுச்சு. அதான் அவசரத்துக்கு இட்லி ஊத்துனேன்” என கணவனிடம் அடக்கமாய் பதில் அளித்தார். அவரிடம் குரலை உயர்த்தவோ எதிர்த்து பேசவோ அவர் பழக்கப்படவே இல்லை.
“அதுக்கு, அவளுக்குப் பிடிச்சது செய்ய வலிக்குதா?” என அவர் எகிற, உமா அமைதியாய் நின்றார்.
பேச்சுவார்த்தை நீள்வதில் திருதிருவென விழித்த இதயாம்ரிதாவிற்கு தாயின் கண்டிப்பு கலந்த அன்பை புரிந்து கொள்ள முதிர்ச்சி இருக்கவில்லை. அவள் கல்லூரியில் இருந்து தாமதமாக வந்தால், சொல்லாமல் நண்பர்களுடன் வெளியில் சென்றால் பாரபட்சமின்றி கடிந்து விடுவார் உமா. ஆனால், ராம்குமார் அதற்கும் விடுவதில்லை.
“எங்க போகணும் வரணும்னு அவளுக்கு தெரியும். நீ அவ விஷயத்துல தலையிடாத” என்று ஒரே போடாக போட்டு விடுவார்.
தனக்காக தனக்குப் பிடித்ததை மட்டுமே தந்தை செய்வதாக அவளுக்கு ஒரு மாயை. தனக்கு ஆதரவு அளித்து தாயை திட்டுவதில் அவளுக்கு ஒன்றும் குற்ற உணர்வும் எழுவதில்லை. உமாவின் வலியும் புரியவில்லை.
அதற்காக அவர் மீது அன்பு இல்லை என்றெல்லாம் இல்லை.
எங்கு சென்றாலும் தந்தைக்கு ஒரு பரிசு வாங்கி வருவது போல உமாவிற்கும் கட்டாயம் வாங்கி விடுவாள். சில நேரம் கொஞ்சியும் கொள்வாள். ஆனால் ராம்குமார் என்று வந்து விட்டால், தாயெல்லாம் இரண்டாம்பட்சம் தான்.
பின்னாளில் தாயின் வலியைப் புரிய கைமாறாக வாழ்வில் அனைத்தையும் இழந்து போனாள்.
தாய் தந்தையிடம் இருந்து தப்பித்து வாசலில் தனக்காக காத்திருந்த காரில் ஏறி அமர்ந்தவளை அவளது நண்பர்கள் முறைத்துப் பார்த்தனர்.
“ஏன்டி இவ்ளோ நேரம்?” நிலோஃபர் கேட்க, “சாப்பிட்டுட்டு இருந்தேன் நிலோ” என்று இளித்து வைத்தாள்.
“அடிப்பாவி… பிரேக்ஃபாஸ்ட் காலேஜ் கேன்டீன்ல சாப்பிடலாம்னு இழுத்துட்டு வந்துட்டு நீ மட்டும் நல்ல சாப்பாடு சாப்பிட்டுருக்க?” என முறைத்தாள் யாமினி. நவ நாகரீகத்தில் மூழ்கிப் போனவள். முட்டிக்கு கீழே என்றும் உடையணிந்ததில்லை அவள்.
மாடர்ன் உலகின் முடிசூடா ராணிகள் இவர்கள். விஷால், ஷ்யாம், யாமினி, நிலோபர், பத்மபிரியா, இதயாம்ரிதா ஆறு பேருமே பள்ளிக்காலம் தொட்டு நெருங்கிய நண்பர்கள்.
சின்னதொரு விஷயத்திற்கும் ஒன்றாக அமர்ந்து திட்டம் போட்டு தான் செய்வர். காலை உணவை எங்கு உண்பது முதற்கொண்டு இவர்களுக்கு வாட்சப் குழுவில் அடங்கி விடும்.
ஷ்யாம் தான், “என்னால அந்த கேன்டீன்ல சாப்பிட முடியாதுப்பா. நான் போய் ஆண்ட்டி சமைச்சத சாப்பிட்டு வந்துடவா” என்று எழ போக, விஷால் அவனைப் பிடித்து அமர வைத்தான்.
“அவங்க சட்டியை எல்லாம் கழுவி வச்சுட்டாங்களாம்டா. நல்லவேளை காலைலயே அம்மா கொழுக்கட்டை செஞ்சாங்க. அதை சாப்பிட்டு வந்ததுனால நான் தப்பிச்சேன்” என்றதில், இதயாம்ரிதா அவன் தலையில் நங்கென கொட்டினாள்.
“எங்கடா என் பங்கு?”
“இருக்குடி உனக்கு. அம்மா குடுத்து விட்டாங்க…” என்று டேஷுபோர்டில் இருந்து டிபன் பாக்ஸை எடுக்க, அனைவரும் ஒன்றாக மொய்த்தனர்.
இதில் கடும் அமைதி பத்மபிரியா தான். தேவைக்கு பேசுவாள். ஆனால், அனைவர் மீதும் அதீத அன்பு கொண்டவள்.
கொழுக்கட்டையை காலி செய்த பின்னர், “சரி சரி சீக்கிரம் காரை எடுங்க. காலேஜ்க்கு போகணும். முக்கியமான வேலை இருக்கு…” என்ற இதயாம்ரிதாவை ஐவர் குழு ஒரு மார்க்கமாகப் பார்த்தது.
“அட, நேத்து அந்த ப்ரொஃபி எனக்கு ஏதோ பனிஷ்மென்ட் தரேன்னு சொன்னானே. அவன் என்ன பனிஷ்மெண்ட் தர்றான்னு பார்க்க வேணாமா? சோ ஈகர் மச்சீஸ்…” என்றாள் நெளிந்து.
யாமினி, “உண்மையை சொல்லு. அவன் குடுக்குற பனிஷ்மெண்ட்ட பார்க்கவா அவனை பாக்கவா?” எனக் கேட்க,
“இதுல என்ன டவுட்டு மச்சி. அவனை பார்க்க தான். கண்ணுக்குள்ள கயறு கட்டி சுத்திட்டே இருக்கான்டி அவன். என்கிட்டயே திமிரா பேசுறான். இன்டரஸ்டிங் கேரக்டர்” என்று தலைசாய்த்து கனவுலகில் மூழ்க, அங்கு நிலவிய பலத்த அமைதியின் காரணத்தை அவள் இன்றளவும் உணரவில்லை!
சொன்னது போன்றே விரைவாக கல்லூரிக்குச் சென்றவள், மென்னெற்றி முடிகளை லேசாக முகத்தில் படர விட்டுக்கொண்டாள்.
அழிந்த லிப்ஸ்டிக்கை மீண்டும் ஒரு முறை பூசிக்கொண்டவளின் கால்கள் நேராக ஸ்டாஃப் ரூமை அடைந்தது.
“குட்மார்னிங் ப்ரொஃபி!” குறும்பு தலைதூக்க அவனது இருக்கை மேஜை மீது கையை ஊன்றி அழைத்தாள்.
“ப்ரொபஸர், சார்” என்று அவனை பார்மலாக அழைக்கத் தோன்றவில்லையாம். ப்ரொபஸரைச் சுருக்கி ‘ப்ரொஃபி’ ஆக்கி இருந்தாள்.
புத்தகத்தைப் புரட்டிக் குறிப்பு எடுத்துக்கொண்டிருந்தவனின் இறுகிய புஜங்கள் மேலும் இறுகியது.
“பிஹேவ் யுவர்செல்ஃப்” வார்த்தைகளைக் கடித்துத் துப்பினான்.
ஒரு வாரம் முன்பு தான், அந்தப் பிரபல கல்லூரியில் Managerial Communication (MBA – Core) என்ற நான் – எலக்டிவ் சிறப்பு பேராசிரியராகச் சேர்ந்திருந்தான்.
எம். பி. ஏ முதல் வருடம் படித்துக்கொண்டிருந்த இதயாம்ரிதாவின் குழுவினர் அந்த வகுப்பை அசட்டை செய்தனர்.
ஆறு பேரின் குடும்பமுமே பணத்திலும் தொழிலும் செழுமை நிறைந்தது. தொழில் நடத்துவதைப் பற்றி தெரிய எதற்காக நான் எலக்டிவ்? இருக்கும் வகுப்புகளே போதுமென்று எண்ணி கடந்த ஒரு வாரமாக ‘பங்க்’ அடித்தனர்.
அதன் விளைவாக, முந்தைய தினம் இவர்களைக் கையும் களவுமாகப் பிடித்து விட்டான் புதிதாய் வந்த பேராசிரியர்.
ஒரு வாரம் முழுக்க, வகுப்பை கட் செய்ததற்கு ஈடாக 100 பக்கத்திற்கு அசைன்மென்ட் கொடுத்திருந்தான். அதையும் இரவோடு இரவாக எழுதி வரவேண்டும் என்று!
அவளோ, அதையும் செய்யவில்லை. வெறும் கையோடு வந்திருந்தாள்.
ஆடவனின் காட்டப்பார்வை அவளைத் துளியும் தாக்கவில்லை என்பது போல கூலாக நின்றிருந்தவள், “அசைன்மெண்ட் எழுதலைன்னா ஏதோ பெரிய பனிஷ்மென்ட் தருவேன்னு சொன்னீங்களே ப்ரொஃபி. அது என்னன்னு தெரிஞ்சுக்க ஆர்வமா வந்துருக்கேன்… தங்கள் தண்டனையை ஏற்க வந்த இந்தத் தலைவியை தாழ்மையுடன் ஏற்றுக்கொள்ளுங்கள்!” என்று தலை குனிந்து கிண்டலாகக் கூறியவளைத் தீப்பார்வை பார்த்தான்.
—–
அலைபேசி அழைப்பு நினைவலைகளைக் கலைக்க மருத்துவமனையும் வந்ததில் காரை சடன் பிரேக் அடித்து நிறுத்தினாள்.
அலைபேசி திரையில் ‘ப்ரொஃபி காலிங்’ என்ற பெயர் ஒளிர்ந்தது.
தேகம் இறுகிப்போக, ஒரு முறை கண்ணை இறுக்கி மூடித் திறந்தவள், அழைப்பைத் துண்டித்து விட்டு உடனடியாக அந்தப் பெயரை மாற்றினாள், ‘ப்ராமிஸ்’ என்று.
மீண்டும் ஒருமுறை அதே எண்ணில் இருந்து அழைப்பு வர, கம்பீரம் மொத்தத்தையும் குத்தகைக்கு எடுத்தவள் “எஸ் சத்யா!” என்றாள்.
“மீட்டிங்கு டைம் ஆச்சு மேம்…” கடமையில் கண்ணாக கூறினான்.
எப்போதும் அப்படித்தானே அவன். கடமையென்று வந்து விட்டால், கன்னியெல்லாம் கண்ணிற்கே தெரியாதே!
அவளை மீறியும் துளிர்த்த புன்னகை மறுகணமே மறைந்து போனது.
“ஒன் ஹவர் போஸ்ட்போன்ட் பண்ணுங்க!” என உத்தரவிட்டவளிடம், “சாரி மேம். லாஸ்ட் மினிட்ல போஸ்ட்போன்ட் பண்றது எதிக்ஸ் இல்ல” என மறுத்தான்.
“எல்லாரும் எல்லா நேரமும் எதிக்ஸ்ஸோட வேலை செய்றது இல்லையே மிஸ்டர் சத்யா…” கேலிக்குரலில் முதன்முறையாக பழைய நிகழ்வை இணைத்துக் குட்டு வைத்தாள்.
அலைபேசியை அழுத்திப் பிடித்திருந்தவனின் பிடி தாங்க இயலாது அவனது அலைபேசி அணைந்தே விட்டது.
அவன் முன்னே ஆபிஸ் பாய் கொண்டு வந்து வைத்த காஃபி போலவே கொதித்துக்கொண்டிருந்தது அவனது மனமும் தான்.
புது காதல் மலரும்
மேகா
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.

ப்ரோபி சத்யா தானா?
செம.