Loading

நிவேதனுக்கு தொடர்ந்து போதை மருந்து கொடுக்கப்பட்டதன் விளைவால், அவை அதிக அளவில் இரத்தத்தில் கலந்து விட்டதென்றும், மூளையையும் பாதித்து இருக்க வாய்ப்பிருக்கிறதென்றும் மருத்துவர் கூறியதில் யாஷ் அதிர்ந்து விட்டான்.

“ரெகவர் ஆகிடுவான் தான?” சற்றே வருத்தம் கலந்து கேட்க,

“கொஞ்சம் டைம் எடுக்கும் சார். ப்ரெய்ன்ல அஃபெக்ட் ஆனதுனால மெமரி லாஸ், அல்லது ஹாலுசினேஷன் மாதிரி ஆகலாம்” என்ற மருத்துவரின் கூற்றில், “வாட்? இவனுக்கும் மெமரி லாஸ்ஸா? இவனுக்கு வேற ரீ-க்ரியேஷன் பண்ணனுமா…” என நொந்தான்.

“அவன் உடம்புல என்ன மாதிரி ட்ரக்ஸ் கலந்துருக்குன்ற டீடெய்ல் எனக்கு வேணும்…” என்றவன், அவரது ரிப்போர்டிற்காக காத்திருந்தான்.

இந்நிலையில் தாதியர் வந்து நிவேதன் கண் விழித்து விட்டதாகக் கூற, யாஷ் பிரஜிதனும் தீவிர சிகிச்சைப் பிரிவினுள் நுழைந்தான்.

அவனுக்குத் தன்னை யாரென்று தெரியாது தான் என்றாலும், தன்னவளின் தமையன் என்ற ஒற்றைக் காரணத்திற்காக தனது உயர்நிலையை மறந்து எவனோ ஒருவனின் நலனுக்காக காத்திருக்கிறான். விசித்திரம் தான் என்றாலும், காதலென்ற ஒற்றை வார்த்தை அவனுள் புகுந்து ஆட்டம் காண வைக்கிறதே! நிவேதனின் விஷயத்தில் யாரையும் நம்பாது நேரடியாய் அவனே வந்து நிற்கிறான்.

ஆறுதலாய், செண்டிமெண்ட் டோனில் பேச வராது என்றாலும் நிவேதனின் அருகில் சென்ற யாஷ் பிரஜிதனை நிவேதன் உற்றுப் பார்த்தான்.

கண்ணெல்லாம் கருவளையம் விழுந்து, அடர்ந்த தாடியெல்லாம் சிக்கலாகி முடியும் நீண்டு வளர்ந்திருந்தது. பார்ப்பதற்கு காதல் பரத்தை நினைவுபடுத்தினான். இறுதியில் பைத்தியமாய் வலம் வரும் பரத்தை தான்.

யாஷிற்கு அவனது நிலை பரிதாபத்தைக் கொடுத்தது. பேச வாயெடுக்கும் முன்னே, நிவேதனே ஆரம்பித்தான்.

“குருவே… ஏனிப்படி மேல்நாட்டு உடையணிந்து காட்சியளிக்கிறீர்கள். தாங்கள் காந்தியின் வழியில் கதர் அணியத் தொடங்கி விட்டீர்கள் தானே. ஏனிந்த திடீர் மாற்றம். மீண்டும் லண்டன் மாநகரத்திற்குத் திரும்பி விடாதீர்கள்!” என உணர்ச்சி ததும்ப பேசியவனைக் கண்டு யாஷ் பிரஜிதன் பேச்சற்று நின்றான்.

தேம்பி தேம்பி அழுத நிதர்ஷனாவை சமன் செய்வதற்குள் கதிரவன் திண்டாடிப்போனான்.

“அழுகாதீங்க அண்ணி. அவருக்கு ஒன்னும் ஆகாது!” கண்மணியும் சமன் செய்ய, “அவன் பார்க்க நல்லா தான இருந்தான். ரொம்ப அடிபட்டுருந்துச்சா?” எனப் பரிதாபமாக வினவ, கண்மணிக்கு சங்கடமாகப் போய் விட்டது.

“அவ்ளோ அடி இல்ல அண்ணி.”

“பார்க்க பைத்தியக்காரன் மாதிரி இருந்தான்னு சொன்ன?” மூக்கை உறிஞ்சிய நிதர்ஷனாவிடம் பதில் கூற இயலாமல் திணறினாள்.

கதிரவன் தான், “இவ்ளோ மாசமா கடத்தி வச்சுருந்தவன் அவனுக்கு ஷேவிங் பண்ணி, புது ட்ரெஸ் போட்டா அழகு பார்த்திருப்பான். யாரை கடத்தி வச்சுருந்தாலும் அவங்க வெளில வர்றப்ப தேவதாஸ் மாதிரி தான் வந்தாகணும்” என்றதில்,

“கடத்தி வச்சுருந்தாங்கன்னு நீ எப்படி இவ்ளோ கன்பார்மா சொல்ற?” நிதர்ஷனா புருவம் சுருக்கினாள்.

‘அய்யோ உளறிட்டோமே…’ என விழித்திட,

இளவேந்தன் உதவிக்கு வந்தார்.

“கண்மணி சொல்றத வச்சே யாரோ கடத்தல்காரங்கள்ட்ட இருந்து தப்பிச்சு வந்துருப்பான்னு கணிச்சு சொல்லிருப்பான். இல்லப்பா” என்றதில், “ஆ… ஆமா சார்” என்று கதிரவனும் பலவீனமாய் ஆமோதித்தான்.

“இந்த எருமைக்கு டீ கடைல டீ போடுவாங்களா காபி போடுவாங்களான்னே கணிக்க முடியாது…” என அழுகுரலில் கதிரவனை வார, சிந்தாமணி பக்கென சிரித்தாள்.

அவளை முறைத்து வைத்தவன், “என் இமேஜை டேமேஜ் பண்றதுல உனக்கு அவ்ளோ சந்தோசம்ல” எனப் பல்லைக்கடித்தான்.

ஆதிசக்திக்கு இன்னும் என்னவெல்லாம் நிகழப் போகிறதோ என்ற பயம் எழுந்தது.

யோசனையில் மிதந்தவரை கலைத்தது யாஷ் பிரஜிதனின் அலைபேசி அழைப்பு.

நிதர்ஷனாவை அழைத்து வரச் சொன்னதில், அவர் தனியறைக்குச் சென்று “இந்த மழையை நிறுத்திடலாமே யாஷ்” என்றார்.

“ம்ம்” என்றவனின் குரலில் சோர்வு தெரிய, அதில் ஆதிசக்திக்கு வேதனை அரித்தது.

“நிதா உன்னைப் புருஞ்சுப்பா யாஷ்!”

“என்னைப் புருஞ்சுக்கிட்டது அவள் ஒருத்தி தான். இப்ப அவளும் புரிஞ்சுக்கற சூழ்நிலைல இல்ல…” மகனின் கூற்று சுருக்கென குத்தியது.

அவன் சொன்னது போன்றே, அனைவரும் அடுத்த அரை மணி நேரத்தில் மருத்துவமனையில் இருக்க, கதிரவனும் நிதர்ஷனாவும் வேக நடையுடன் உள்ளே சென்றனர்.

நேராக ஐசியூக்கு வர சொன்னதில், அங்கேயே சென்று விட்ட நிதர்ஷனாவிற்கு நெஞ்சம் அதிவேகத்தில் துடித்தது.

ஐசியூ கதவைத் திறக்க, அங்கு நிவேதன் மெத்தையில் அமர்ந்திருந்தான். அவனுக்கு அவள் வருவதற்குள் முடி திருத்தம் செய்யப்பட்டு, ட்ரிம்மிங் செய்யப்பட்டிருந்தது.

ஆஹில்யன் மூலம் சடுதியில் இவற்றை நிகழ்த்தி இருந்தான் யாஷ் பிரஜிதன். ஆனால் அவனுக்கு ட்ரிம்மிங் செய்யும் முன் ஆஹில்யனுக்கு மயக்கமே வந்து விட்டது.

நிவேதனோ, “யாரடா நீ தேசத் துரோகி… என்னைக் கொலை செய்யப்பார்க்கிறாய்” என ஆஹில்யனைக் குற்றம் சுமத்த, “பாஸ்” என்று யாஷை பரிதாபத்துடன் ஏறிட்டான் ஆஹில்யன்.

தற்போது, நிதர்ஷனா வேகமாக நிவேதனை ஒரு முறை கண்ணில் நிரப்பிக்கொண்டு, “நிவே… எங்கடா போய் தொலைஞ்ச… பயந்தே போயிட்டேன் தெரியுமா” என அவனது கையைப் பிடித்து கண்ணீரில் கரைய, அவளை ஒரு நொடி அழுத்தமாகப் பார்த்த நிவேதன் கையை உதறினான்.

“உனக்கும் எனக்கும் இடையில் எவ்வித உறவும் இருக்கக்கூடாதென்று தீர்மானித்தப் பிறகு, எதற்கிந்த போலி கண்ணீர்? என்னவாகினும், என் தங்கையின் இடத்தை உன்னால நிரப்ப இயலாது…” என சுடு சொற்களால் அவளை சாடிட, அயர்ந்து போனாள் நிதர்ஷனா.

“நிவே… என்ன உளறுற. நான் நிதர்ஷனா. உன் தங்கச்சிடா” அதிர்வில் இருந்து விலகாது கூறியவளை வெறுப்பாய் ஏறிட்டான்.

“மாற்று தாய்க்கு பிறந்த நீ என் தங்கையா? உன் குடும்பமே எனக்கு த்ரோகம் மட்டுமே இழைத்திருக்குற, நம் நாட்டுச் சுதந்திரத்திற்கு எதிராக வெள்ளையனுடன் கைகோர்த்த உன் குடும்பத்தை முற்றிலும் வெறுக்கிறேன்.”

“எதே சுதந்திரமா?”

கதிரவன் அலறி விட்டான்.

“இன்னாடா ஒளறுற?” நிதர்ஷனாவிற்கு அவனது வெறுப்பு மனதை வாட வைத்தாலும், மற்றொரு புறம் கோபம் எழுந்தது.

“என்ன மொழி கதைக்கிறாய். ஆங்கிலத்தை பிரதானமாக எண்ணும் உன்னிடம் மொழிப்பற்றையும் தேசப்பற்றையும் எதிர்பார்க்க இயலாது தானே…” வஞ்சம் மின்னும் விழிகளால் அவளை சாட, நிதர்ஷனா அவனது சட்டையைப் பிடித்தாள்.

“தேசியக்கொடில ஆரஞ்சு கலரு மேல வருமா கீழ வருமான்னு கூட தெரியாத பரதேசிப் பயலே… நீ நாட்டுப்பற்றை பத்தி பேசுறியா?” எனப் பொங்கிட, கதிரவன் அவளைத் தடுத்து “இரு நிதா… அவன் கொழப்பத்துல இருக்கான். நான் அவனை கரெக்ட் பண்றேன் இரு…” எனப் பேச ஆரம்பிக்கும்போதே நிவேதன் கதிரவனையும் வெறித்தான்.

“இந்த ஜென்மம் மட்டுமல்ல எத்தனை ஜென்மம் எடுத்தாலும் என் குடும்பத்தில் மணமகனாக நீ நுழையவே இயலாது… உங்கள் நாடகத்தை இத்துடன் நிறுத்தி விட்டு வெளியேறுங்கள். நான் மகான் காந்தியுடன் கலந்தாலோசிக்க வேண்டும்!” என்று தீர்மானமாய் கூற, இருவரும் வெறியாகி விட்டனர்.

“யாஷ் என்ன நடக்குது இங்க?” ஆதிசக்தி தலையும் புரியாது வாலும் புரியாது குழம்பினார்.

“ஐ டோன்ட் நோ மம்மா. வாட் லாங்குவேஜ் ஹீ இஸ் ஸ்பீக்கிங்?” எனக் கடுகடுப்பாய் கேட்டான்.

“அதுவும் தமிழ் தான் யாஷ்” இளவேந்தன் விளக்க,

“காட்! அப்ப நீங்க பேசுறது…?” எனக் கேட்டான் எரிச்சலாய்.

கண்மணியோ, “இது தமிழ் மாதிரி, அவர் பேசுறது ஒரிஜினல் தமிழ் அண்ணா… இவருக்கு என்னதான் ஆச்சு?” எனக் கேட்கும்போதே,

“கண்மணி” என நிவேதன் அழைத்ததில் வெலவெலத்துப் போனாள்.

இளவேந்தனும் ஆதிசக்தியும் அவளை ஒரு மாதிரியாகப் பார்க்க, “ஐயோ எனக்கு இவரை தெரியவே தெரியாது… என் பேர் எப்படி தெரியும் உங்களுக்கு” என்று பதறினாள்.

அவன் முகத்தில் கீற்றாய் ஒரு ஏமாற்றம்.

“நமது நேசத்தில் உன் தாய் தந்தைக்கு பிடித்தமில்லை என்றாலும், அனைவர் முன்னும் என்னை நிராகரிப்பது வலிக்கிறது கண்மணி” என்றவனின் கண்கள் காட்டிய அளப்பறிய நேசத்தில் திணறி விட்டாள்.

என்ன சொல்வதென்று தெரியாமல், மொத்த குடும்பமும் தன்னையே மொய்த்ததில் நெளிந்தாள்.

இதில் அத்தனை நேரமும் குனிந்து அமர்ந்திருந்த யாஷ் பிரஜிதன் விழி நிமிர்த்தி தங்கையைக் காண அதில் பயந்தே விட்டாள்.

“சாமி சத்தியமா எனக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லண்ணா” என அழுகாத குறையாக கூற, நிதர்ஷனா நிவேதனை முறைத்து விட்டு வெளியில் வந்து விட்டாள்.

கோபமும் அழுகையும் ஒரு சேர பொங்கியது.

அவள் வெளியேறியதும் யாஷ் பிரஜிதனும் அவள் பின்னே செல்ல எத்தனிக்க, இம்முறை நிவேதன் அவனை அழைத்தான்.

“குருவே!”

அக்குரலில் நின்று விட்டவன், “வாட்?” என்று பற்களை நறநறவென கடிக்க, “இந்தப் போராட்டத்தில் எனக்கு உயிர்ச்சேதம் நிகழ்ந்து விட்டால், தாங்கள் என் தங்கையை பார்த்துக்கொள்வீர்கள் தானே?” எனக் கேட்டதும், அவனது இதழ்களில் குறுநகை.

“ஆல்ரெடி, உன் தங்கச்சியைப் பார்த்துட்டே தான் இருக்கேன். நீ எதுவும் குழப்பம் பண்ணுன. உன்னை காந்தி காலத்துக்கே அனுப்பிடுவேன்…” சூசகமாக மிரட்டியது கூட புரியாதவனாக, காந்தி என்ற பெயரைக் கேட்டதும் அவனுள் சுதந்திர தாகம் வீறிட்டு எழுந்தது.

“என்னுள் சுதந்திர தாகத்தை புகுத்திய நீவிர், என்னை என்ன செய்தாலும் சிரம் தாழ்த்தி ஏற்றுக்கொள்வேன் குருவே!”

யாஷ் பிரஜிதன், “ஓ! ஷிட்…” என நெற்றியைப் பிடித்திட, கதிரவன் தான், “அனேகமா நம்ம இவனுக்கு பிளேஷ்பேக் ரீ கிரியேட் பண்ண தேவை இல்ல. இப்ப இவன் தான் நமக்கு ரீ கிரியேட் பண்ண போறான்னு நினைக்கிறேன் யாஷ்…” என்றதில், போங்கடா எனத் திட்டி விட்டு வெளியில் சென்றான்.

கதிரவன் அதோடு நில்லாமல் நிவேதனிடமும் “தாகமா இருந்தா தண்ணி குடிடா வெண்ண” என்றபடி அவன் அருகில் அமர்ந்ததில் நிவேதனின் பார்வைச் சூட்டில் வெந்தான்.

மருத்துவமனை வாயிலுக்கு வந்து விட்ட நிதர்ஷனாவிற்கு கண்ணில் குளம் கட்டியது.

அருகில் நிழலாடியதில் வந்தது யாஷ் என்று உணர்ந்து கொண்டவள், “அவனுக்கு என்ன ஆச்சு?” எனக் கேட்க, அவனோ அதற்கு பதில் கூறாமல் கையில் கொண்டு வந்திருந்த க்ரீமை ஒற்றை விரலில் எடுத்து அவளது கன்னத்தில் தேய்த்தான்.

அவன் அறைந்ததில் அவளது கன்னத்தில் கைரேகை பதிந்திருந்தது.

அந்த க்ரீமையும் அவனையும் ஒரு முறை ஆழ்ந்து பார்த்தவள், “நீ யாருயா? எதுக்குயா என் உணர்வோட வெளையாடிட்டு இருக்க. உன்கூட என்னவோ ரொம்ப க்ளோசா பழகுன மாதிரியும் இருக்கு, ஆனா அது மனசுல ஒட்டவும் மாட்டேங்குது… திரும்ப திரும்ப ஏற்கனவே நடந்த மாதிரி நெறய நடக்குது. நீ அடிச்சா கன்னத்துல விட, மனசுல ரொம்ப வலிக்குது. இந்த அடியை ஏற்கனவே வாங்குன மாதிரி வேற இருக்கு… நீ கூட இருக்கணும்னும் தோணுது, என்னை விட்டுப் போய்டணும்னும் தோணுது. கடைசியா என்னை விட்டுப் போக போறவன் தானன்னும் உறுத்துது.

நீ எங்க இருந்து வந்தியோ அங்கேயே போய்டு அரக்கா… உன்னைப் பார்க்க பார்க்க என்னையவே நான் இழந்துட்டு இருக்கேன்னு உள்ளுக்குள்ள புழுங்கிட்டே இருக்க வேண்டியதா இருக்கு. இப்ப என் அண்ணனையும் இழந்துட்டேன்… இன்னும் என்ன என்ன இழக்குறதுன்னு புரியல…” எனக் குழம்பித் தவித்தாள்.

அவனோ அவளது பேச்சைக் கேட்டபடி ஆற அமர க்ரீமைத் தேய்த்து விட்டு, “நான் எங்க போறதுடி? நம்ம கல்யாணத்தை கேன்சல் பண்ற எண்ணம் எனக்கு இல்ல. உனக்கு நிறைய இருக்கோ” என்றான் ஹேசல் விழியால் அவளைக் கவர்த்திழுத்தபடி.

“கல்யாணம் எல்லாம் நடிப்பு தான? உன் அம்மாவை நம்ப வைக்க…” தேய்ந்த குரலில் நிதர்ஷனா கேட்க,

“எல்லாமே நடிப்பாவே போய்டும்ல? இது கூட…” சுடிதாருக்குள் புதைந்திருந்த மஞ்சள் நாணை எடுத்துக் காட்டியவன், அதனை மென்மையாய் வருடியதில், உயிர் வரை சிலிர்த்த தேகம் சில்லிட்டது.

“இது நடிப்பு தான?” விழி தெறிக்க அவள் கேட்டதில், தனது சிவந்த கன்னத்தின் குறுந்தாடி குத்த, அவளது கன்னத்தில் உரசியவன், செவியோரம் வெப்ப மூச்சு தீண்ட நெருங்கினான்.

“நடிக்கணும்னா, உன் கனவுல வந்த மாதிரி உன்னையவே இதை வியர் பண்ண சொல்லிருப்பேன். ஏன்னா அது வெறும் நினைவுகள்… இது நிஜம்டி. அதுல இருந்த காதல் இதுல இல்ல. ஆனா உரிமை இருக்கு. யூ ஆர் மை கேர்ள் ஆலம்பனா!” எனத் திட்டவட்டமாய் அழுத்தம் திருத்தமாய் உரைத்ததில் உறைந்து போனாள் நிதர்ஷனா.

அன்பு இனிக்கும்
மேகா

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
8
+1
83
+1
0
+1
2

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்