அந்தச் சம்பவத்திற்குப் பிறகு, மிகவும் கவனமாக நடந்து கொண்டாள் நிதர்ஷனா. கனவில் வந்தது போல தனக்கு கையிலும் அடிபடவில்லை, அவனுக்கு மூக்கில் இருந்து குருதியும் வரவில்லை. தான் புத்திசாலித்தனமாக இடத்தை மாற்றியதால் தான் தாங்கள் தப்பித்தோம் என்ற தற்பெருமையுடன் சுற்றியவளைக் கதிரவன் தான் வெறியாய் முறைத்தான்.
“இவள் என்ன என்னென்னமோ உளறிட்டு இருக்கா? நீயும் அமைதியா இருக்க…” என யாஷ் பிரஜிதனிடமே சென்று நிற்க,
அவனோ வெகு தீவிரத்துடன் மடிக்கணினியை விரல்களால் தட்டிக்கொண்டிருந்தான்.
“யாஷ்…” கதிரவன் மேலும் பேசும் முன் அவன் முன்னே கையை நீட்டியவன், “இதை பாரு” என்று மடிக்கணினியைத் திருப்பினான்.
அதில் பார்வையைப் பதித்த கதிரவனுக்கு அதிர்ச்சியில் விழிகள் தெறித்தது.
“இது நிவே தான?” கத்தியே விட்டவனை அடக்கினான்.
“இப்போதைக்கு நிதுவுக்கு தெரிய வேணாம் கதிரவன்…”
“கடவுளே… இவனை யாரு கடத்துறா யாஷ். அதுனால யாருக்கு என்ன பிரயோஜனம். ஒன்னும் புரியலையே” எனத் தலையில் கை வைத்தான்.
சரியாக, நிவேதனை அவனது தெரு வாயிலில் இருந்து யாரோ இருவர் கடத்தும் காட்சி தான் மடிக்கணினியில் ஒளிபரப்பானது.
யாஷ் பிரஜிதனோ மடிக்கணினியை மூடி வைத்து விட்டு, “அவனைக் கடத்தி வச்சிருந்த இடத்தைக் கண்டுபிடிச்சாச்சு” என்றான் நிதானமாக.
“என்னது? எங்க வச்சுருக்காங்க? அவனைக் காப்பாத்தியாச்சா? யார் கடத்துனா?” எனக் கதிரவன் அடுக்கடுக்காய் கேள்விகள் கேட்க,
“திருச்சில இருக்குற ஒரு லோக்கல் ரவுடி தான் அவனைக் கடத்தி இருக்கான். ஆனா ஏன் கடத்தி இருக்கான்னு அவனுக்கே தெரியாது. எனக்கு வேறோரு ரௌடி க்ரூப்ல இருந்து உத்தரவு வந்ததுனால கடத்தி இருந்தேன்னு சொல்லிருக்கான். அவனைத் தேடி போனா அவன் இன்னொருத்தன கை காட்டுறான்.
அவனைத் தேடி போனா அவன் வேறொருத்தனை சொல்றான். இந்த நெட்ஒர்க் எண்டில்லாம போயிட்டே இருக்கு” என்றவனிடம், “சரி அப்போ நிவே பாதுகாப்பா தான இருக்கான். அங்க இருந்து அவனைக் கூட்டிட்டு வந்தாச்சா?” என்றான் ஆர்வமாக.
தாடையைத் தடவிய யாஷ், “அதுல ஒரு சிக்கல் ஆகிடுச்சு” என்றதும், கதிரவனிடம் கலவரம்.
“சரியா அவனைக் காப்பாத்த என் ஆளுங்களை அனுப்பி இருக்கும்போது, அவன் அங்க இருந்து தப்பிச்சுப் போய்ட்டான். இப்ப அவனை திரும்பவும் தேட சொல்லிருக்கேன்”
“அய்யயோ… அவனுக்கு எதுக்கு இந்த தேவையில்லாத வேல. மூடிக்கிட்டு அங்கேயே இருக்க வேண்டியது தான? அப்போ திருச்சில தான் அவனைக் கடத்தி வச்சுருந்துருக்காங்களா?” என்ற கதிரவனுக்கு தலையசைப்பைப் பதிலாகக் கொடுத்தான்.
“இப்ப வரை அவன் பாதுகாப்பா தான் இருக்கணும்” யாஷ் யோசனையுடன் கூறியதில்,
“இப்ப தான் மனசே கொஞ்சம் நிம்மதியா இருக்கு. எப்படியோ திரும்பி வந்துட்டா போதும்…” என்ற நிம்மதியுடன் அறைக்குச் சென்ற கதிரவனின் அறை ஜன்னலை தட்டியே உடைத்துக் கொண்டிருந்தாள் சிந்தாமணி.
அவசரமாக ஜன்னலைத் திறந்தவனிடம், “எவ்ளோ நேரம் ஜன்னலைத் தட்டுறது. நீ சீரிஸ் பார்க்க வரலையா?” எனக் கிசுகிசுப்புடன் கேட்டாள்.
“வரேன். வரேன்…” என்றவன் அவளுடன் சைனீஸ் தொடரில் மூழ்கி விட்டான். ஆகினும் மனதின் ஒரு ஓரத்தில் தப்பித்துச் சென்ற நிவேதனின் நிலை குறித்து முணுக்கென ஓர் பயம் தோன்றி மறைந்தது.
இங்கோ, சொல்லி வைத்தது போல மறுநாளில் இருந்து மழைப் பிடிக்க ஆரம்பித்தது.
மழையைத் திகைப்பாய் பார்த்த நிதர்ஷனாவோ, ‘ச்சே ச்சே… இந்த மழை உடனே நின்னுடும்’ என நம்பிக்கொண்டிருக்க, அதுவோ வலுவாய் வலுத்துக் கொண்டே சென்று தெருவில் நீர் தேங்க ஆரம்பித்து, மின்சாரமும் துண்டிக்கப்பட்டது.
அவளுக்கு இதயம் அதிகமாய் துடிக்கத் தொடங்கியது.
‘என்ன நேரத்துல அந்தக் கனவு வந்துச்சோ தெரியல. நடக்குறது எல்லாமே பீதியாவே இருக்கு. இதெல்லாம் கடைசில அந்த கலப்படக்கண்ணுகாரன் மேல லவ்வா கொண்டு வந்து விடுமோ? அவனுக்காக நம்ம அழுவுற நெலமை வந்தா அதை விட அசிங்கம் வேற எதுவுமே இல்ல…’ எனத் திணறியவள், மின்சாரம் துண்டிக்கப்பட்டும் இந்த முறை அறையைச் சுத்தம் செய்ய மெனக்கெடாமல் தான் உண்டு தன் வேலையுண்டு என இருந்தாள்.
செயற்கை நுண்ணறிவெல்லாம் தனது சேவையை நிறுத்தி வைத்திருக்க, அவளோ கதிரவன் அறையில் சென்று அமர்ந்து கொண்டாள்.
தங்களது அறையில் இருந்தால், தனது கையை வைத்துக்கொண்டு அமைதியாக இருக்க மாட்டோமென்ற எண்ணம் தான்.
ஒரு நாள் முழுதும் காற்றும் மழையுமாக இருந்ததில், அறையில் தூசி ஏறி இருந்தது.
வேண்டுமென்றே தவிர்க்கிறாள் எனப் புரிந்தபின், நமுட்டு நகை பூத்தவன் அவனே அறையை ஒழுங்கு படுத்திட, அப்படியும் இந்த நாடகத்தை நிறுத்தவில்லை அவன்.
தூசியில் நின்றதால், அடுத்தடுத்து தும்மியவனுக்கு லேசாய் மயக்கம் வருவது போல இருந்தது.
மூக்கில் இருந்து மெல்லிய கோடாக இரத்தம் எட்டிப்பார்க்க, மூக்கில் அடிக்கக் கூடிய ஸ்ப்ரேயை கையில் வைக்காத மடத்தனத்தை நொந்துபடி கட்டிலில் அமர்ந்து விட்டான்.
தனது பிடிவாதத்தில் உறுதியாக இருந்தவன், செயற்கையாய் பொழிய வைத்த மழையையும் காற்றையும் நிறுத்தாது போக, அவள் அவனை உதாசீனம் செய்த பின்னும் அவனது பிடிவாதம் தளரவில்லை.
கதிரவன் கூட கூறினான். “அவளே ஏதோ கனவுல பார்த்தேன்னு எல்லாத்தையும் மாத்தி மாத்தி பண்ணிட்டு இருக்கா… இந்த மழை கான்செப்ட் ஒர்கவுட் ஆகுமா” என்று.
“ஒர்க் அவுட் ஆகலைன்னாலும் நடக்கும்!” எனத் தீர்மானமாய் உரைத்தவனை கவலையுடன் பார்த்தான்.
இப்போதோ, கதிரவன் பயந்தது போல அவள் தன்னறையில் வந்தமர்ந்து அரட்டை அடித்ததில் கன்னத்தில் கை வைத்தான்.
“என்னடா நான் பேசிட்டே இருக்கேன். நீ ஏதோ கடமைக்கு உக்காந்துருக்க?” நிதர்ஷனா கதிரவனை உலுக்க,
“கேட்டுட்டு தான் இருக்கேன். மழை வேற ஓவரா பேய்து. பசிக்குது…” என்று வயிறைத் தடவியதில், “அந்த அரக்கனுக்காக இல்ல. உனக்காக சாப்பாடு செய்றேன்…” என்றவள் அடுக்களைக்குச் சென்றாள்.
பின் ஏதோ தோன்ற தானாய் அவளது கால்கள் மாடிக்கு ஏறியது.
அங்கு கட்டிலில் தலையைப் பிடித்துக் குனிந்து அமர்ந்திருந்தவனைப் புருவம் சுருக்கிப் பார்த்தவள், “என்னங்க அரக்கன் சார்… உக்காந்துட்டே தியானம் பண்றீங்களா?” எனத் தொட, அவனோ அவள் மீதே அரை மயக்கத்தில் சரிந்தான். கண்ணை இருட்டியதில் அவனுக்கும் விளக்க இயலவில்லை.
உடலெல்லாம் உதறி விட்டது அவளுக்கு.
“யாஷ்… யாஷ்… இங்க பாருங்க…” எனப் பயந்து கத்தியவள், அவனது மூக்கிலிருந்து இரத்தம் வருவதைக் கண்டு உறைந்தே விட்டாள்.
“ஐயோ மடச்சி மடச்சி… ஏதோ கனா கண்டுட்டு இவனை தூசிக்குள்ள விட்டு மயக்கம் போட வச்சுட்டியே…” எனத் தன்னையே நொந்தவள், “யாஷ்… இங்க பாருங்க! யோவ் என்னைப் பாருயா” எனப் பரிதவித்து விட்டாள்.
அவனை மெத்தையில் படுக்க வைத்தவள், பின் அவளுக்கு நினைவில் ஆடியது போல, அவனது ட்ரெஸிங் டேபிள் ட்ராயரைத் திறந்து அதில் அவனது ‘நாசல் ஸ்ப்ரே’ இருக்கிறதா என ஆராய, அங்கேயே தான் அவனுக்கான மருந்து இருந்தது.
இதயத்தில் சுள்ளென ஒரு நடுக்கம். அந்தக் கனவில் கூட இதே இடத்தில் தானே அவனது மூக்கு ஸ்ப்ரே இருந்தது.
அதனை அதிகம் ஆராயாமல், மருந்தை யாஷ் கையில் கொடுத்து, “யாஷ் இந்தாங்க உங்க மருந்து… யாஷ் கண்ணு முழிக்க முடியுதா… தண்ணி தரவா?” எனக் கேட்டிட, அவன் கண்ணை மூடியபடியே ஸ்ப்ரே அடித்து தன்னை நிதானப்படுத்தினான்.
சில பல நிமிடங்களானது அவன் நினைவிற்கு வரவே! அதுவரையில் அவனைத் தன் நெஞ்சிலே பொத்திக் கொண்டாள் நிதர்ஷனா.
யாஷ் நெற்றியைத் தேய்த்துக் கொண்டு மெல்ல உணர்வு பெற, “இப்ப பரவாயில்லையா?” என்றவளின் கவலை நிறைந்த குரலில் முழு உணர்வு பெற்று அவளை விட்டு நகர்ந்தான்.
“ம்ம்…” என்றவனின் திடீர் விலகல் அவளை சற்றே காயப்படுத்தியது.
‘நீ ஏன் என் பக்கத்துல வந்த’ என்ற ரீதியான அவனது முக சுருக்கம் அவளைத் தாக்கிட, சற்றே நிலைகுலைந்து போனவளிடம், ‘விட்டுட்டுப் போனவன் தான…’ என்ற ஏக்கப் பெருமூச்சு தானாய் உருவானது.
“நான் காபி எடுத்துட்டு வரேன்…” என அவள் எழும் முன்னே அவன் விறுவிறுவென அறையை விட்டு வெளியேறி இருந்தான்.
முகத்தில் அடித்தது போல இருந்தது ஆடவனின் செய்கை.
‘ரொம்ப தான் பண்றான்’ எனச் சிலுப்பியவளுக்கு காரணமின்றி கண்களும் கலங்கியது.
அதன் பிறகே அறையை நோட்டமிட்டாள். பால்கனி கதவைத் திறந்து வைத்ததில், அறையில் தூசியாகி இருந்தது.
அதனை சுத்தப்படுத்தும் போது தான் இந்தக் கலவரம் நிகழ்ந்ததென்று புரிந்து கொண்டவள் முதல் வேலையாக அறையைச் சுத்தப்படுத்தினாள்.
பால்கனி கதவை அடைத்து விட்டு, ‘இந்த மழை இப்போதைக்கு விடாதே…’ என்ற நிதர்சனம் உணர்ந்தவள், கீழிறங்கி வர யாஷ் அடுக்களையில் தான் நின்றிருந்தான்.
“என்ன வேணும் உங்களுக்கு? நான் காபி போடுறேன்…” என உதவிக்கு வர, அவன் மறுத்து விட்டான்.
அதில் முகம் சுருங்கிப் போனவள், “இப்ப பரவாயில்லையா?” என்று அவளாக பேச்சுக் கொடுக்க, “ம்ம்” என்றான்.
“அதான் சேராதுன்னு தெரியும்ல. அப்பறம் ஏன் கிளீன் பண்ணுனீங்க?”
அவளைத் திரும்பி முறைத்தவன், “தூசில புரள சொல்றியா?” எனக் கடுகடுத்தான்.
“அதில்ல… நான் வந்து பண்ணிருப்பேன்ல” துப்பட்டா நுனியைத் திருகியபடி நெளிந்ததில்,
“நீ எதுக்கு வந்து பண்ணனும்? ஹு தி ஹெல் ஆர் யூ?” என்றான் புருவம் இடுங்க.
அக்கேள்வியில் திகைத்து விட்டவளுக்கு முகம் செத்தே விட்டது.
‘கனவுல ஹெல்ப் பண்ணுனா சிரிச்சு பேசுனான், இப்ப கடுகடுக்குறான்…’ உள்ளுக்குள் தேம்பியவள்,
“தோ பாருயா… நான் ஒன்னும் ஒனக்காக ஒன்னியும் செய்யல. அதே ரூம்ல தான் நானும் இருக்கேன். எனக்கு டஸ்ட் அலர்ஜி ஆகாதா? எனக்கும் பசிக்கும். பாவம் கதிரு வேற பசிக்குதுன்னு சொன்னான்… கரண்டு வர வரைக்கும் நான் தான் இங்க ஆலம்பனா…” என சிலுப்பிட, அவன் ஆழமாய் அழுத்தமாய் ஒரு பார்வை வீசினான்.
அப்பார்வையின் தீவிரம் அவளது ரத்த நாளங்களை எல்லாம் கிடுகிடுக்க வைக்க, “இன்னாத்துக்கு இப்ப மொறச்சுட்டுருக்க? நீ வேணும்னா என்னை ஆலம்பனானு கூப்டு…” என்று அடமாக நிற்க, அவனிடம் சிறு துளியாய் புன்னகை.
“ஆலம்பனா?”
“எஸ் பாஸ் சொல்லுங்க நான் உங்க ஆலம்பனா தான். இப்ப நான் என்ன செய்யணும்” என்று எலிசா போன்றே பேசிக்காட்ட, அவனோ அசையாது நின்றான்.
முந்தைய நிகழ்வுகளில் எந்த நொடியில் அவளுக்கு தன் மீது காதல் துளிர்த்ததென்று தெரியவில்லை. ஆனால், அதில் ஒரு துளியையும் அவன் வீணாக்கிக்கொள்ள விரும்பவில்லை.
இப்போதும் கூட, நடந்தவைகளை வெளிப்படையாய் உரைத்து இதழ் தீண்டி அவளை நம்ப வைத்து விடலாம் பிடிவாதமாக!
ஆனால், அவளுடன் உரசிக் கழித்த இறுதி நாளில் பெண்ணவளின் விழிகள் காட்டிய காதலின் ஆழம் அபாரம். அந்தக் காதலெனும் ஒற்றை உணர்வை அவளிடம் உணராமல், இந்த நாடகத்தை முடித்து வைக்க அவனுக்கு விருப்பமில்லை.
அவனது ஒற்றைப் பார்வைக்கு தவமிருக்கும் பெண்கள் இத்தாலியில் ஏராளம். ஆனால் ஆடவனின் மொத்த ஜீவனும் அவனது ஆலம்பனாவினுள் அல்லவா ஒடுங்கிக் கிடக்கிறது.
இப்போதும், நிதர்ஷனா அவனைத் தவிர்க்க, அவன் மீது கனவில் வந்தது போல எந்தவித உணர்வும் ஏற்பட்டு விடக்கூடாது என்ற தெளிவுடன் காய் நகர்த்தியது அவனை சற்றே பலமாய் தாக்கியது.
அன்பைக் கேட்டு பழக்கப்படாதவன், அமைதியாகி விட்டான். அவளே உணரும் வரையிலும் அவ்வமைதியை கடைபிடிக்கப் போவதாக.
யாஷ் பிரஜிதனின் முகத்திலிருந்து எதையும் கண்டுகொள்ள இயலாதவள் சோர்ந்தாள்.
‘சரி போ எனக்கு வேலை மிச்சம்…’ என நொடித்துக் கொள்ள, அந்நேரம் கண்மணி கதவைத் தட்டினாள்.
யாஷ் இறுகிய முகத்துடன் கதவைத் திறக்க, கண்மணி உணவுக்கூடையுடன் நின்றாள்.
அவளை முறைத்து வைத்தவன், “என்ன?” எனக் கர்ஜிக்க,
“அண்ணா… மழை பேயுது கரண்டும் இல்ல. அம்மா சாப்பாடு குடுத்து விட சொன்னாங்க…” எனத் தயங்கியதில், அவன் எரிமலையாக வெடித்தான்.
“என்ன இந்தத் திடீர் அக்கறை. இவ்ளோ வருஷமும் சாப்பிட்டேனா இல்லையான்னு பாத்துட்டு இருந்தாங்களாமா…” என உறுமியதில், நடிப்பாக இருந்தாலும் உண்மையாகவே கண்மணிக்கு கண் கலங்கி விட்டது.
அவனது பார்வை தற்போது அவளது மணிக்கட்டில் போடப்பட்டிருந்த கட்டைப் பார்க்க, அவள் தாவணிக்குள் அதனை மறைக்க முற்படும்போதே, நிதர்ஷனா அருகில் வந்தாள்.
“கைல என்னாச்சு கண்மணி?” நிதர்ஷனா கேட்டதில், “அது ஒன்னும் இல்ல அண்ணி…” என்றாள் வேகமாக.
“ப்ச் காட்டு…” எனக் கையை வாங்கிப் பார்த்தவள், “இது என்ன இவ்ளோ பெரிய கட்டு போட்டு வச்சுருக்க? என்னன்னு சொல்லு” என்று வம்படியாக கேட்டதும், ‘ஐயோ சீன்ல இல்லாத விஷயத்தை எல்லாம் கொண்டு வந்து சொதப்புறேனே… அண்ணா திட்டுவாங்களோ’ எனப் பதறி தமையனைப் பார்க்க, அவனும் அவளது பதிலுக்காகக் காத்திருந்தான்.
தற்போது அவளுக்கு செமெஸ்டர் தேர்வுகள் நடந்து கொண்டிருக்க, இந்த ஒரு வாரமும் அவள் கல்லூரிக்குச் செல்லாமல் இருக்க வேண்டும், மழையின் காரணமாக… ஆனால் யாஷ் பிரஜிதன் அவளைத் தேர்வு எழுதி விட்டே வரும் படி ஆணையிட, “இல்லண்ணா எக்ஸ்சாக்ட்டா நடந்த மாதிரி திரும்ப நடத்திட்டு இருக்கும்போது நான் காலேஜ் போனா நல்லாருக்காது. அதும் தெருவே தண்ணி வெள்ளத்துல இருக்கும்போது நான் காலேஜ் போனா அண்ணி கன்பியூஸ் ஆகிட மாட்டாங்களா. நான் அரியர்ல எழுதிக்கிறேன்” என்று விட, சிந்தாமணியும் அதனை ஆமோதித்தாள்.
“ஆமா மாமா இந்தக் கலவரத்துல நான் சைனீஸ் சீரிஸ்ல மூழ்கி படிக்கவே இல்ல” என்று இளித்து வைக்க, இருவரையும் காட்டத்துடன் பார்த்தவன், “ரெண்டு பேரும் எக்ஸாம் போறீங்க. அவளுக்குத் தெரியாம நான் பாத்துக்குறேன்” என்று முடிவாய் கூறி விட, அன்று காலையில் ஒரு பரிட்சையை எழுதி விட்டே வந்தனர் இருவரும்.
இப்போதோ என்ன சொல்வதென்று தெரியாமல் திணறியவள், “கீழ விழுந்துட்டேன் அண்ணி” என சமாளித்தாள்.
“எதே… கீழ விழுந்தா இப்படியா அடிபடும். அதுவும் சரியா மணிக்கட்டுல! கத்தியால கீறின மாதிரி இருக்கு?” நிதர்ஷனா விடாமல் கேட்டதில், “அது… வந்து… நேத்து காலேஜ் போனப்ப ஒரு சின்ன பிரச்சினை” என்றாள்.
முந்தைய நாள் மழை குறைவாக இருந்ததில், இன்று நடந்த கலவரத்தை நேற்று நடந்ததாக அவளை நம்ப வைத்து பேசிட, “நேத்து என்ன ஆச்சு?” எனக் கேட்டாள் நிதர்ஷனா.
“ஒருத்தனுக்கு ஹெல்ப் பண்ண போய், அந்தப் பைத்தியம் என்னை கத்தியால அட்டாக் பண்ணிடுச்சு…” எனத் தயக்கத்துடன் கூற, “யார் அது?” என யாஷ் கேட்டான்.
நிதர்ஷனா வேகமாக “முருகனா?” எனக் கேட்க, அவளை வியப்பாய் பார்த்த கண்மணி “இல்ல அண்ணி. அவன் இல்ல. அதுசரி முருகனை உங்களுக்கு எப்படி தெரியும்?” என்றாள் வினவளாக.
“அப்போ உண்மையாவே முருகன்னு ஒரு கேரக்டர் இருக்கா? பாரேன்…” எனத் தன்னையே பெருமையாய் நினைத்துக் கொண்டதில், அறைக்குள் இருந்த கதிரவன் மெத்தையில் நங்கு நங்கென முட்டினான்.
“ஹலோ என்ன பண்ணிட்டு இருக்கீங்க?” சிந்தாமணி ஜன்னலுக்குப் பின்புறம் இருந்து வினவ,
“இவளுக்கு உத்தமபுத்திரன்ல வர விவேக் மாதிரி, சப்கான்ஷியஸ் மெமரி பவர் இருக்குன்னு நம்பிட்டு இருக்கா. இருக்குற மெமரியே தள்ளாடுதுன்னு இங்க கூட்டிட்டு வந்தா, இந்த அம்மா போதி தர்மர் ரேஞ்சுக்கு பில்டப் குடுக்குது… பிள்ளையாரப்பா…” என்று நொந்து கொண்டதில் சிந்தாமணி வாயைப்பொத்திக்கொண்டு சிரித்தாள்.
கண்மணி விவரத்தைக் கூறி விட்டுக் கிளம்ப தானாய் முந்தைய நாள் நிகழ்ந்த நிகழ்வு அவளுள் இழையோடியது.
பரிட்சையை முதல் ஆளாக எழுதி முடித்து விட்ட கண்மணி, சிந்தாமணி முடித்து விட்டு வரும் வரை கல்லூரி வளாகத்தில் காத்திருந்தாள்.
மறுநாள் தேர்விற்கு, சில நோட்ஸ் தேவைப்பட, அதனை தோழியிடம் வாங்கி ஜெராக்ஸ் எடுப்பதற்காக கல்லூரிக்கு எதிரில் இருக்கும் கடைக்குச் சென்றாள். அந்தக் கடைக்கு அருகிலேயே சற்றே மறைவான பொட்டல் இடம் இருந்தது.
கடையில் நின்றிருந்தவளுக்கு “தண்ணி தண்ணி” என யாரோ முணுமுணுக்கும் சத்தம் கேட்க, அந்தப் பொட்டிலில் எட்டிப் பார்த்தவள், அங்கு ஒரு ஆடவன் முகம் முழுக்க தாடி வளர்ந்து ஆங்காங்கே அடிபட்டு அரை மயக்கத்தில் இருப்பதைக் கண்டு துணுக்குற்றாள்.
அவனை அசட்டை செய்து விட்டு கிளம்பவே எண்ணியவளுக்கு, அவனது முனகல் சத்தம் இளகிய மனதை கரைத்தது.
உடனே தனது பேகில் இருந்து நீர் பாட்டிலை எடுத்தவள், அவன் அருகில் சென்றாள்.
“ஹலோ… இங்க பாருங்க. இந்தாங்க தண்ணி…” எனக் கொடுக்க முற்பட, யாரோ அருகில் வருவது தெரிந்ததும் அத்தனை நேரம் சோர்ந்திருந்தவன் வெடுக்கென சீறிப்பாய்ந்து, “என் பக்கத்துல வராத… பக்கத்துல வந்த கொன்னுடுவேன்” என்று கையடக்கமாக இருந்த கத்தியை நீட்டி கண் சிவக்க மிரட்ட, அலறி விட்டாள்.
“நான் நான் ஹெல்ப் பண்ண தான்…” எனப் பயந்து திணறியவளுக்கோ, இது உனக்கு தேவையா என்றிருந்தது.
‘ஒருவேளை திருடனா இருப்பானோ’ என்ற பயம் வேறு. “உனக்கு செயினு தான வேணும். நானே தரேன்” என்று சரணடைந்தவள் செயினை கழற்றி கொடுக்கும்போதே, அவன் அவளது கையைத் தாக்கி இருந்தான்.
“ஆஅ…” என வலியில் கண் கலங்கி மடங்கி அமர்ந்து விட்டவளின் சத்தத்தில் கடைக்காரர்கள் ஓடிவர, அந்த ஆடவனும் சிறிது நேரத்தில் சுயநினைவை இழந்து விட்டான்.
“ஆம்புலன்ஸ்க்கு போன் பண்ணுங்க” கண்மணி கடைக்காரர்களிடம் கூறியதும் சிறிது நேரத்தில் இருவரையுமே மருத்துவமனையில் சேர்த்தனர்.
நல்லவேளையாக அவளுக்கு காயம் ஆழமாகப் படவில்லை. கட்டிட்டு முடித்தவள், அப்படியே கிளம்ப நினைத்தும் முடியாமல், அந்த ஆடவனைப் பற்றி மருத்துவமனையில் விசாரிக்க, அவர்களோ அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கிப்படுகிறது என்றும், அவனது உறவினர்கள் யாரென்று தெரியாததனால் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க தீர்மானம் செய்திருப்பதாக கூறியதில் கண்மணிக்கு சிறிய வருத்தம்.
“உடம்பு சரியானதும் தான அனுப்புவீங்க?”
“பேஷண்டோட ஹெல்த் கண்டிஷன் க்ரிக்டிகளா இருக்கு. சோ இங்க நாங்க வச்சுருக்க முடியாது…” என்ற மருத்துவரின் கூற்றில் பதறியவள், “உடம்பு சரி ஆனதும் அனுப்பலாமே டாக்டர்” எனக் கேட்டதில், “அது ரிஸ்க் கண்மணி” என மறுத்து விட்டார் மருத்துவர்.
இருப்பினும் யாரேன்றே தெரியாத ஒருவன். நல்லவனா கெட்டவனா என்றும் தெரியாது. கையில் கத்தி வேற வைத்திருந்தான். அதனாலேயே அரை மனதுடன் அங்கிருந்து கிளம்பி வந்திருந்தாள்.
கண்மணி சொன்னதையே உருப்போட்டுக் கொண்டிருந்த யாஷ் பிரஜிதன், நிதர்ஷனா அறைக்குச் சென்றதும் குடையை எடுத்துக்கொண்டு அன்னையின் வீட்டிற்குச் சென்றான்.
“கண்மணி…” உள்ளே சென்று தங்கையை அழைக்க, அவசரமாக வெளியில் வந்தவள் “என்னண்ணா?” என்றாள்.
“யார் அவன்? போலீஸ் கம்பளைண்ட் எதுவும் குடுத்தியா?” யாஷ் தீவிரத்துடன் வினவ, “இல்லண்ணா… கொடுக்கல” என்ற தங்கையின் பதிலில் “ஏன்?” என்றான் கண்ணைச் சுருக்கி.
“அதில்லண்ணா பாக்க மனநலம் சரியில்லாதவன் மாதிரி இருந்தான். அதான்… அதுவும் இல்லாம சுயநினைவுலயும் இல்ல.”
“ம்ம்…” என்றவன் அலைபேசியை எடுத்துக்கொண்டு சற்று தள்ளி பின்பக்கம் சென்று ஆஹில்யனைத் தொடர்பு கொண்டான்.
நிவேதனைப் பற்றிக் கேட்க எண்ணி மீண்டும் கீழிறங்கி வந்த நிதர்ஷனா, அங்கு யாஷைக் காணாமல் கதிரவனின் அறைக்குச் சென்றாள்.
அங்கோ, சிந்தாமணி தனது அறையில் இருந்தபடி கதிரவனிடம் புலம்பிக் கொண்டிருந்தாள்.
“மாமா ரீ-க்ரியேட் பண்ண போறேன்னு சொன்னதும், மறுபடியும் காலேஜ் லீவ் போட்டுடலாம்னு ஜாலியா படிக்காம இருந்தேன். ஆனா மாமா வம்படியா எக்ஸாம்க்கு அனுப்பி விட்டுட்டாங்க. ஒண்ணுமே படிக்கல…”
கதிரவன் கமுக்கமாக சிரித்தபடி, “இவ்ளோ கலவரத்துல சைனீஸ் டிராமா மட்டும் பாக்க முடியும். படிக்க முடியாதுல” என வாரியதில், “நீங்க வேற வெந்த புண்ணுல வேல பாச்சாதீங்க” என்றவள் சட்டென “அக்கா வராங்க” என்று புத்தகத்தில் புதைந்து கொண்டாள்.
“எந்நேரமும் ரெண்டு பேரும் என்ன தான் பண்றீங்க?” என இருவரையும் முறைத்த நிதர்ஷனா, “யாஷ் எங்கடா?” எனக் கேட்க,
“என்னைக் கேட்டா… நான் பாக்கெட்டுலயா வச்சுருக்கேன்” என சிலுப்பினான்.
சிந்தாமணி தான், தனது அறைக் கதவை திறந்து மெல்ல எட்டிப்பார்த்து விட்டு மீண்டும் ஜன்னலின் அருகில் வந்தாள்.
“மாமா இங்க தான் இருக்காங்க. பேச்சு சத்தம் கேக்குதுக்கா” என்றதும், “என்ன ஒரு அதிசயம். இவன் ஏன் அங்க போனான்?” என்று கன்னத்தில் கை வைத்தாள்.
கதிரவன் அவளை நக்கலாய் பார்த்தவாறு, “ஒருவேளை என்னால எதையும் கண்டுபிடிக்க முடியலன்னு அவங்க அம்மாட்டையே சரண்டர் ஆக போயிருப்பானோ” என்று ஆழம் பார்க்க, நிதர்ஷனா நெற்றிக்கண்ணைத் திறந்தாள்.
“மூடு… அப்படி ஒன்னும் யார்ட்டயும் வளைஞ்சு குடுத்து போக வேண்டிய அவசியம் அவனுக்கு இல்ல. அவனே கண்டுபிடிப்பான்…” என்று திணக்கமாய் பொரிந்து தள்ளி விட்டு ஆதிசக்தியின் வீட்டிற்குச் செல்ல,
“லவர்னு வந்துட்டா இந்தப் பொண்ணுங்க ப்ரெண்ட கழட்டி விட்டுடுறாங்கப்பா” என்று கதிரவன் வெகுவாய் வருந்தியதில், சிந்தாமணி நகைத்தாள்.
ஆதிசக்தியின் வீட்டினுள் நுழைந்த நிதர்ஷனாவிற்கு சட்டென ஒரு குழப்பம்.
‘அவன் என்ன கண்டுபிடிக்கப்போறான்னு எனக்கே தெரியாது. அந்தக் கனவுபடி பார்த்தா, இந்த மழை டைம்ல தான் அவன் என்கிட்ட அவனோட பிசினஸ் பத்தி ஷேர் பண்ணுவான். என்கிட்ட ஷேர் பண்ணாத விஷயம், நான் சொல்லாம கதிருக்கு எப்படி தெரிஞ்சுருக்கும்?’ யோசனையுடன் வந்தவள், அப்போது தான் அறைக்குச் சென்று மீண்டும் ஹாலுக்குத் திரும்பிக் கொண்டிருந்த கண்மணியின் மீது இடித்துக் கொண்டாள்.
“ஸ்ஸ்…” அடிபட்ட கையின் மீது மோதி விட்டதில், கண்மணி வலியில் முகம் சுருக்க, “ஐயோ சாரி கண்மணி கவனிக்கல…” என்று பதறினாள் நிதர்ஷனா.
“பரவாயில்ல அண்ணி. என்ன யோசனை அப்படி?”
“அது… ஒன்னும் இல்ல” என்றவள் கண்மணியின் கையில் இருந்த பொருளைப் பார்த்தாள்.
“இது என்ன?” அந்த கருப்பு நிற கயிறில் சின்னதொரு நீல நிற சதுர வடிவ லாக்கெட்டைச் சுட்டிக் காட்டிக் கேட்டாள்.
“இன்னைக்கு ஒரு கிறுக்கன் என் கையை ரத்தக்களரி ஆக்கினான்ல… அவன் கைல இருந்து விழுந்துச்சு” என்றதும் நிதர்ஷனாவின் இதயம் அதிவேகமாகத் துடித்தது.
கண்மணியோ தொடர்ந்து, “அண்ணா அது யார் என்னன்னு கேட்டாங்க. அதை இதை காட்டலாம்னு எடுத்துட்டு வந்தேன். இந்த லாக்கெட் திறக்க வர மாட்டேங்குது!” என்று அதனை அழுத்தி திறக்க முற்பட, அதனை வெடுக்கென பிடுங்கினாள் நிதர்ஷனா.
கைகள் நடுங்க, அந்தக் கயிறைப் பார்த்தவளின் கண்கள் இருட்டவே தொடங்கியது.
அந்த லாக்கெட்டின் அடியில் சின்னதொரு பட்டன் போன்ற அமைப்பு இருப்ப, அதனை தொட்டதும் லாக்கெட் இரண்டாகப் பிளந்தது.
அது திறந்த நேரத்தில் பாவையின் விழிகளில் இருந்து இரு சொட்டுக் கண்ணீர் அதில் விழுந்து நனையச் செய்ய, “அண்ணி என்னாச்சு?” என எட்டி அந்த லாக்கெட்டைப் பார்க்க, அதில் நிதர்ஷனாவின் சின்னதொரு புகைப்படமும் மற்றொரு புறத்தில் நளினப் புன்னகையுடன் இளைஞனின் புகைப்படமும் இருந்தது.
அதில் அதிர்ந்து போன கண்மணி, “அண்ணி… அவன்கிட்ட உங்க போட்டோ எப்படி?” என ஆரம்பித்து விட்டு பின் அவளது கண்ணீரில் எதுவோ புரிந்தது போல, “அவர் உங்க அண்ணாவா?” எனக் கேட்டாள் பலவீனக் குரலில்.
நிதர்ஷனாவோ உள்ளுக்குள் வெடித்த தேம்பலை அடக்கிக் கொண்டு, “யா… யாஷ்… யாஷ்…” எனக் கத்தினாள்.
அவளது குரல் கேட்ட நொடியில் நிதர்ஷனாவை நெருங்கிய யாஷ், “என்னடி என்னாச்சு?” எனப் பதட்டம் கொள்ள,
“நிவே… நிவே… யாஷ் இது நிவே தான்…” எனக் கேவி அழுதவளைக் கண்டு திகைத்தவன் அந்த லாக்கெட்டை வாங்கிப் பார்த்து தனது சந்தேகத்தை உறுதி செய்து கொண்டான்.
தற்போது தான், கடத்தல்காரர்களிடம் இருந்து தப்பித்த நிவேதன், தஞ்சாவூரில் இருக்கலாம் என்ற கணிப்பில் கண்மணியால் காப்பாற்றப்பட்டவன் யாரென்று விசாரிக்கச் சொல்லி இருந்தான்.
“யாஷ்… நிவேவை தான் ஹாஸ்பிடல்ல சேர்த்துருக்கா… நான் பாக்கணும் யாஷ். அவனைப் பார்க்கணும்…” எனப் பரபரத்தாள்.
“வெய்ட் பண்ணுடி. நான் விசாரிக்க சொல்லிருக்கேன். கன்ஃபார்ம் ஆகட்டும் போய் பாக்கலாம்” யாஷ் நிதானமாக அமைதிப்படுத்த,
“முடியாது நானே நேர்ல பாக்குறேன். சீரியஸா இருக்கறதா கூட சொன்னாளே. என்னாச்சு அவனுக்கு. அவன் ஏன் இங்க சுத்தணும். அதுவும் கைல கத்தியோட… ஐயோ… நிவே…” என மடங்கி தளர்ந்து அழுத்தவளின் குரலில் குடும்பமே கூடி விட்டது.
“ப்ளீஸ் என்னை கூட்டிட்டுப் போ யாஷ். அவனைப் பாக்கணும்… ப்ளீஸ் அரக்கா… ப்ளீஸ்” எனத் தன் முன் முட்டியிட்டு அமர்ந்தவனின் சட்டையைப் பிடித்து கதறினாள்.
அவளை இறுக்கி அணைத்துக் கொள்ள துணிந்த கரங்களை கட்டுப்படுத்திக்கொண்டவன், “அங்க என்ன நிலவரம், அவனோட ஹெல்த் கண்டிஷன் என்னன்னு தெரியாம, உன்னை என்னால கூட்டிட்டுப் போக முடியாது…” என்றான் திட்டவட்டமாக.
அவளோ ஏமாற்றத்துடன் முகம் கசங்க, “நான் போய் பாத்துட்டு அவனை நல்ல ஹாஸ்பிடல்ல சேர்த்துட்டு வரேன். யூ ஸ்டே ஹியர்.
புரியுதா?” எனக் கண்டனத்துடன் உத்தரவிட, “முடியாது நானும் தான் வருவேன்… அவனை உடனே பாக்கணும்” என்று கத்தினாள்.
“அவனைப் பார்த்து நீ என்ன செய்யப் போற இப்போ? நீ ட்ரீட்மெண்ட் குடுக்கப் போறியா? நான் சொல்றதை மட்டும் செய்!” என்றவனின் அதட்டலில் இன்னும் கொஞ்சம் தேம்பலே வந்தது.
“நீ சொல்றதை நான் ஏன் கேக்கணும்? நீ யாரு எனக்கு? என்னை விட்டுட்டுப் போக போறவன் தான?” கனவு தந்த தாக்கம் அவளது ஆழ்மனதில் காயத்தை ஏற்படுத்தி இருந்தது.
“நான் விட்டுட்டுப் போனா உனக்கு என்னடி?” விழி சிவக்க கர்ஜித்தவனைக் கண்டு வெளிறியவள்,
“எனக்கு ஒன்னும் இல்ல. என்னை விடு. நான் என் அண்ணன்கிட்ட போறேன்…” என்றதில் சப்பென அறைந்திருந்தான்.
“யாஷ்?” ஆதிசக்தி மகனை அதட்டிட, பாவையின் அதிர்ந்த முகத்தைக் கணக்கில் எடுக்காது வேக நடையுடன் வெளியில் சென்று விட்டான். நடக்கும் கலவரம் அறிந்து கதிரவன் வாசலிலேயே அதிர்ந்து நிற்க, நிதர்ஷனாவைக் கண் காட்டியவன், காரில் ஏறி பறந்து விட்டான்.
அந்த ஒரு தெருவில் மட்டுமே வெள்ளம் நிற்பது போலவும், மழை பெய்வது போலவும் செட் செய்து இருந்தான். அதனைத் தாண்டியதும், வெயில் சுட்டெரிக்க நேராக மருத்துவமனையை அடைந்தான்.
நிவேதனுக்கு சுவாசிக் கருவிகள் பொறுத்தப்பட்டிருக்க, தாடியை ட்ரிம் செய்து சிகையைத் திருத்தினால் மட்டுமே அது நிவேதன் என தெரியும் அளவு மாறிப்போயிருந்தான்.
கண்மணியால் பைத்தியக்காரன் பட்டம் சூட்டும்போதே, அவனது உருவம் இப்படி தான் இருக்குமென உருவகம் செய்திருந்தான்.
இந்தக் கோலத்தில் நிவேதனைக் கண்டால், நிச்சயம் நிதர்ஷனா உடைந்து விடுவாள். ஏற்கனவே பலவித குழப்பத்தில் இருப்பவளுக்கு இந்த அதீத அதிர்ச்சி அவளது மனநிலையை சிதைத்து விடும் என்று புரிந்ததனாலேயே அவளை மறுத்தான்.
இறுதியில் கோபத்தைக் காட்ட வேண்டிய நிர்பந்தம்.
நிவேதனின் உடல்நிலை பற்றி மருத்துவரிடம் விசாரிக்க, அவரது கூற்றில் தலையே கிறுகிறுத்தது.
daily update kodunka please sister. sema twist
sister please daily update kodunka.