Loading

ஏன் மயங்கி விழுந்தாள்? அவளுக்கு என்ன தான் ஆகிற்று என ஒன்றுமே அறியாமல் இடிந்து போனான் யாஷ் பிரஜிதன்.

ஆஹில்யனும் கோவிலையே தீர ஆராய்ந்து விட்டு, யாரும் அவளைக் கடத்திய அறிகுறியே இல்லையெனவும் அவளுக்கு எந்த வித ஆபத்தும் நேர்ந்ததற்கான தகவலும் இல்லையென்று யாஷிடம் கூற, “அப்பறம் எப்படி அவள் திடீர்னு மயங்கிருக்க முடியும்?” என சீறினான் அவன்.

கண்கள் கோவைப்பழமாகச் சிவந்திருந்தது. பொங்கிய கண்ணீரை அவனுக்குள் அடக்கி அடக்கி முகமே சிவந்து போயிருக்க அவனைப் பார்க்கவே ஆஹில்யனுக்கு வருத்தமாக இருந்தது.

“சரி ஆகிடுவாங்க பாஸ்…” என மெல்லமாய் ஆறுதல் உரைக்க, அவனோ தலையைப் பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்தான்.

“பாஸ்… உங்க அம்மா சென்னை ரீச் ஆகிட்டாங்களாம். எங்க வரட்டும்னு கேட்டாங்க. இன்னும் டீடெய்ல்ஸ் சொல்லல…” என்றிட, யாஷ் கண்ணை மூடித் திறந்தான்.

சில மணி நேரங்களுக்கு முன் தான் இளவேந்தன் யாஷ் பிரஜிதனுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

அவருக்கு நிதர்ஷனாவை அவன் திருமணம் செய்து கொள்ளப்போவதாக கூறியதும் ஏகபோக மகிழ்ச்சி.

உடனே அவர்கள் இருவரையும் பார்க்க விரும்புவதாகத் தெரிவிக்க, அவன் தான் அவர்களை தனது சென்னை பங்களாவிற்கு வரச் சொல்லி இருந்தான். அதில் இளவேந்தன், ஆதிசக்தி கண்மணியுடன் சிந்தாமணியும் வந்திருந்தாள்.

“பட், உங்க தங்கச்சிப் பொண்ண நான் மேரேஜ் பண்றதுக்கு நியாயமா நீங்க கோபப்படணுமே?” என யாஷ் ஆழம் பார்க்க,

இளவேந்தனோ “நான் ஏன் கோபப்படணும்? உன்னை அலெஸ்ஸோட பையனா நான் என்னைக்குமே பார்த்தது இல்ல” என்றதில் இரு புருவத்தையும் உயர்த்திக் கொண்டான்.

இப்போது அவர்களை மருத்துவமனைக்கு தான் வர சொல்ல வேண்டும். அவனுக்கே கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போல இருக்கிறதே!

“என்ன வேணாலும் செய்…” என்று கேசத்தை அழுந்தக் கோதி கொண்ட யாஷின் நிலை புரிய, ஆஹில்யன் பெருமூச்சுடன் அவர்களை மருத்துவமனைக்கு வரச் சொல்லி இருந்தான். அவர்களை அழைத்துக்கொள்ள காரையும் அனுப்பினான்.

நிதர்ஷனாவின் அறையில் இருந்த வந்த தாதியர், “பேஷண்ட்டோட அட்டெண்டர் யாரு?” எனக் கேட்க, யாஷை முந்திக்கொண்டு கதிரவன் முன்னே சென்றான்.

“இதுல சைன் பண்ணுங்க” என்று தாதியர் கதிரவனிடம் கொடுக்க, அவனுக்கோ கை நடுங்கியது.

“எதுக்கு சைன்?” கதிரவன் துக்கத்தை விழுங்கியபடி கேட்க,

“எந்நேரம் வேணாலும் ப்ரெய்ன் டெட் ஆக சான்ஸ் இருக்கு சார். க்ரிட்டிக்கலா இருக்குறனால தான் சைன்…” எனக் கூறி கூட முடிக்கவில்லை, கதிரவன் தரையில் பொத்தென அமர்ந்து கதறி விட்டான்.

“ஐயோ நிதா… என்ன தான் ஆச்சு உனக்கு… வந்துடு ப்ளீஸ் நிதா. பயமா இருக்கு நிதா… உன் அண்ணன் கேட்டா நான் என்ன பதில் சொல்லுவேன். அய்யோஓஓஓ” எனத் தலையில் அடித்துக்கொண்டு அழுது தீர்க்க, யாஷ் அவனுக்கு எதிர்பதமாக கண்ணை கூட இமைக்காது உறைந்திருந்தான்.

அவனது நெஞ்சத்தின் ஓலங்களை யார் அறிய இயலும்? அவனாக விரும்பிய, அவனாக ஏங்கிய ஓர் நேசமல்லவா அவள். தனது சுவாசத்தில் ஒன்றென கலந்தவள், தனது சுவாசத்தைத் தனியே பிரித்துச் செல்ல முற்படுவது ஏனோ? உடல் நடுங்கி கால் தளர்ந்தது அவனுக்கு.

வாழ்வின் விரக்தி நிலையை தனிமை கூட அவனுக்குத் தந்தது இல்லை. தன்னவளின் உயிர் போகும் வலியை இங்கு தனது உயிரில் அனுபவித்தவனுக்கு அவளது இதயத் துடிப்பு நிற்கும் நொடி தனது இதயத்துடிப்பும் தானாய் நின்று போக வேண்டுமென்ற பெரும் ஏக்கம் உருவானது.

இந்நொடி அவள் இறந்து போய்விடுவது ஒன்று தான் தீர்வென்றால், அதே தீர்வு தனக்கும் வேண்டுமென உறுதி எடுத்துக்கொண்டான்.

தாதியர், “சார் சைன் போட்டா தான் அடுத்த ப்ரொசீஜர் பண்ண முடியும்…” என்றிட கதிரவனோ அழுகையை நிறுத்தியபாடில்லை.

யாஷ் பிரஜிதனும் அசைந்த பாடில்லை என்பதை உணர்ந்த ஆஹில்யன் தான் கையெழுத்திட்டான்.

பின் மீண்டும் சிகிச்சை தீவிரமடைய, ஆதிசக்தியின் குடும்பத்தினர் அனைவரும் மருத்துவமனைக்கு வந்து விட்டனர்.

“யாஷ்… நிதாவுக்கு என்ன ஆச்சு?” இளவேந்தன் பதற்றமாய் கேட்க, அவன் பதில் சொல்லும் நிலையில் இல்லை.

ஆஹில்யன் தான் “திடீர்னு மயங்கி விழுந்துட்டாங்க சார்… ட்ரீட்மெண்ட் போயிட்டு இருக்கு” என்று மேலோட்டமாகக் கூறினான்.

கதிரவனோ ஐசியூ வாசலில் தரையில் அமர்ந்து ஒரு பக்கம் மூச்சு விடாமல் அழுது தீர்க்க, அவனை யாரென்று பார்த்தார் ஆதிசக்தி.

“நிதர்ஷனா மேமோட ப்ரெண்ட் மேம்” என ஆஹில்யன் விளக்கியதும், “அவளுக்கு ஒன்னும் இல்ல தான?” என்றார் தவிப்பாக.

“அது… டாக்டர் இன்னும் எதுவும் சொல்லல…” எனத் தயங்கியதில், ஆதிசக்தி யாஷிடம் சென்றார்.

“யாஷ்…” அவன் தோளைத் தொட, அவனோ யாரையும் நிமிர்ந்து பார்க்கவில்லை.

பாறையின் கடினத்தன்மையுடன் இறுகி இருந்தனிடம், எவ்வித உணர்வும் இல்லை.

என்ன செய்து மனத்தைத் தேற்றுவது எனப் புரியாது குடும்பமே உடைந்திருக்க, கண்மணி தான் யாஷின் கையைப் பற்றிக்கொண்டாள்.

“அண்ணிக்கு ஒன்னும் ஆகாதுண்ணா! வந்துடுவாங்க” என ஆறுதல் உரைத்தாள். அவளது உடல்நிலை சீர் பெறுவதற்காக காத்திருந்தனர்.

மறுநாள் வரை யாஷ் பிரஜிதனுக்கு உயிர் வலியைத் தந்த பிறகே அவளது நிலை சற்றே சீரானது.

“பேஷண்ட்க்கு இன்னும் சுயநினைவு திரும்பல. ஆனா இப்ப ஆபத்து கட்டத்தைத் தாண்டிட்டாங்க…” என்ற பிறகே கடந்த 24 மணி நேரமாக கண்ணீரைக் கொட்டி கொட்டி முகம் வீங்கிப் போயிருந்த கதிரவன் மெல்ல அழுகையை நிறுத்தினான்.

“அவளுக்கு ஏன் இப்படி ஆச்சு டாக்டர்…” கதிரவன் தேம்பியபடி கேட்க,

“எங்களால காரணத்தை டயக்னோஸ் பண்ண முடியல சார். ரொம்ப ரேர் கேஸ் இது. மூளையை அஃபெக்ட் பண்ற வைரஸால இப்படி ஆகியிருக்கலாம். நாங்க குடுத்த ட்ரீட்மெண்ட் அந்த வைரஸோட பாதிப்பை குறைச்சுருக்கு. அவங்க கண் முழிச்சு இன்னும் சில டெஸ்ட் எல்லாம் எடுத்துப் பார்த்தா க்ளியர் தியரி கிடைக்கும்…” என்றதோடு மருத்துவர் நகர்ந்து விட, கதிரவன் மீண்டும் அழ ஆரம்பித்தான்.

யாஷிற்கு மருத்துவரின் கூற்றில் புருவ மத்தியில் முடிச்சு விழுந்தது.

“ஆஹில்…” அமர்ந்த இடத்தை விட்டு முந்தைய நாளில் இருந்து சிறிதும் நகராதவன், தற்போது தான் வாயே திறந்திருக்கிறான்.

“பாஸ்” ஆஹில் அருகில் வந்ததும், யாஷ் அவனை நிமிர்ந்து ஒரு பார்வை பார்க்க, “நான் டீடெய்லா எல்லாமே விசாரிக்க சொல்லிட்டேன் சார். ஆனா மேடம் கோவில தவிர வெளில வந்ததுக்கான எந்த தடயமும் இல்ல. யாரும் அவங்களை அட்டாக் பண்ணவும் இல்ல. நீங்க இங்க இருக்கீங்கன்னு தெரிஞ்சும் உங்களை எதிர்த்து வர, யாருக்கும் தைரியம் இருக்காது பாஸ். அதுவும் இல்லாம, நீங்க சேர்மன் போஸ்ட்ட வேணாம்னு சொன்னது மத்த கம்பெனிஸ்க்கு எதிர்பார்ப்பை தான் உருவாக்கி இருக்கு” என விளக்கினான்.

“சோ இதை எதிர்க்குறது ரெண்டே பேர் தான் ஒன்னு அலெஸ் அண்ட் வரதராஜன்” யாஷ் கூர்மையாய் வினவ,

“ஆனா பாஸ்… அவங்க ரெண்டு பேருமே கடந்த 48 மணி நேரத்துல யார் கூடவும் காண்டாக்ட்ல இல்ல. அதுவும் இல்லாம, நீங்க திடீர்னு கிளம்பி வந்ததுல வரதராஜன் சாருக்கு பேனிக் அட்டாக். இப்ப ஹாஸ்பிடலஸ் ஆகிருக்காரு. அலெஸ் சாரும் ஹாஸ்பிடல்ல தான் இருந்தாரு. அவங்க போன் ரெகார்ட்ஸ், அப்பறம் நம்ம ஆளுங்களை தீவிரமா விசாரிச்சாச்சு. அவங்க ரெண்டு பேருமே இதுல தலையிட்டது மாதிரி தெரியல. அண்ட் அலெஸ் சார் நேத்து நைட்டு இந்தியாவுக்கு கிளம்பி இருக்காரு” என்றான் தீவிரமாக.

“அப்போ இதை யார் செஞ்சுருப்பா? தானா மயங்கி விழுந்துட்டாளா?” யாஷின் விழிகளில் அனல் பறக்க, “மே பி மேடம்க்கு ஏதாவது ஹெல்த் இஸ்யூ…” எனத் தயக்கமாக ஆரம்பித்ததில் கதிரவன் பொங்கினான்.

“அவளுக்கு ஒண்ணுமே கிடையாது. அவ பேசாட்டுக்கு நல்லா நடமாடிட்டு இருந்தா. அவளை மிரட்டி நடிக்க கூப்பிட்டு இப்ப அர உசுரா படுக்க வச்சுருக்கீங்களே. காசு இருந்தா என்ன வேணா செய்வீங்களா… செய்றதையும் செஞ்சுட்டு இன்னும் அவளாண்ட இருந்து என்ன தாங்க வேணும் ஒங்களுக்கு. தயவு செஞ்சு எல்லாரும் போய்டுங்க” எனக் கையெடுத்துக் கும்பிட்டான்.

யாஷ் விருட்டென எழுந்ததும் கதிரவன் சற்றே பயந்து பின்னால் நகன்றான். ஆகினும் இனியும் தோழியை அவனது நிழலுக்கு கீழே விடுவதில் உடன்பாடில்லை.

என்னவோ செய்து விட்டான்… அது மட்டுமே அவனது கருத்து.

“அவளுக்கு திடீர்னு ஏதோ ஆகிருக்குன்னா, என் சைட்ல இருந்து யாரும் பண்ணலைன்னா, அவள் சைட்ல இருந்து முதல் சந்தேகம் உன் மேல தான்” என்றதும் கதிரவன் வாயடைத்து விட்டான்.

“இத்து நல்ல கதையாக்கீது… இவ்ளோ நாளா அவள் என்கூடவா இருந்தா” என எகிறிட,

“அவள் மயங்கி விழுந்தது என் கூட இருந்தப்ப இல்ல கதிரவன். உன் பிளேஸ்ல இருக்கும்போது…” அவனைப் பார்வையால் எரித்த யாஷ் பிரஜிதனைக் கண்டு கதிரவன் பீதியானான்.

“அவள் என் ப்ரெண்டு… அவளை நான் என்ன செய்யப்போறேன். வேணும்னா அவ எந்திரிச்சதும்வளாண்டயே கேளுங்க. நீங்க ஏதோ செஞ்சுட்டு வீணா என் மேல பழி போடாதீங்க…” என்றவனுக்கு மீண்டும் கண்ணீர் கண்ணை நிறைத்தது.

சிந்தாமணி தான், “அட என்ன நடந்துச்சுன்னு தெரியாம நீங்களா பேசிட்டு இருக்கீங்க. மாமா ஒன்னும் செய்யல அக்காவை… மொதோ நாங்க யார்னு தெரியுமா?” எனப் புதிதாய் தன் முன் வந்து பேசிய பெண்ணை யாரென பார்த்தான்.

அதன்பிறகே அங்கு நின்ற ஆதிசக்தி, இளவேந்தன் கண்மணியைக் கண்டான். “ஆமா யார் நீங்கள்லாம்?” எனத் தலையைச் சொறிந்திட, “சுத்தம்…” என நொந்து கொண்டாள் சிந்தாமணி.

கண்மணி தான், “இருடி சிந்தா. நான் சொல்றேன்” என்று கண்மணியே கதிரவனுக்கு புளி போட்டு நடந்ததை விளக்கினாள். அவர்களுக்கு யாஷ் அவளை விரும்பி திருமணத்தை நிறுத்தி விட்டு வந்தது தெரியும். ஆனால் நிதர்ஷனாவின் காதலின் ஆழம், அவள் அதனை அவனிடம் வெளிப்படுத்தியது பற்றி தெரியவில்லை.

ஆஹில்யனுக்கு அவளது காதல் தெரியும் என்பதால், :நிதா மேமும் பாஸை லவ் பண்ணாங்க. அவங்களும் ஓகே சொன்னதுனால தான், பாஸ் அவங்களை அவர் வீட்டுக்கு கூட்டிட்டுப் போக நினைச்சாரு கதிரவன். நீங்க வந்ததும் உங்ககிட்ட சொல்லிட்டுப் போகனும்னு வெய்ட் பண்ணதுனால தான் இந்த ட்ராஜிடி” என்றிட, நடந்ததை எல்லாம் அறிந்த கதிரவனுக்கு தான் இப்போது மயக்கம் வரும்போல இருந்தது.

“இதையெல்லாம் அவ என்னாண்ட சொல்லவே இல்லையே…” என்றவனுக்கு லேசாய் வேதனையும் எழுந்தது.

“நீங்க இன்னா வேணா சொல்லுங்க நம்புறேன். ஆனா அவள் லவ் பண்ணான்னு என்னால நம்ப முடியல…” என முணுமுணுக்க, யாஷ் “யூ…” என அவனை அடிக்கவே சென்றதில் ஆஹில்யன் தான் தடுக்க வேண்டியதாகப் போயிற்று.

கதிரவன் அரண்டு நிற்க, “அவள் எந்திரிச்சதும் அவள்கிட்டயே கேளு… ஷீ இஸ் மை கேர்ள்” என உரிமையாய் கர்வமாய் உரைத்தவனை கதிரவன் மட்டுமல்ல ஆதிசக்தி இளவேந்தனுமே வியந்து தான் பார்த்தனர்.

பல மணி நேரம் கடந்தும் அவள் கண் விழிக்காது போக, இதற்கிடையில் அலெஸ்ஸாண்ட்ரோ மருத்துவமனைக்கு வந்திருந்தார்.

கிட்டத்தட்ட இருபது வருடங்கள் கழித்து ஆதிசக்தியைப் பார்க்கிறார்.

அலெஸ்ஸாண்ட்ரோவைப் பார்த்ததும் ஆதிசக்தியின் கண்கள் வெறுப்பை உமிழ்ந்தன. யாரை இறுதி மூச்சு வரைப் பார்க்கக் கூடாதென்று இருந்தாரோ இதோ அவரைச் சந்திக்க வைத்து உயிர்வதை கொடுக்கிறது இந்த விதி.

அலெஸ்ஸாண்ட்ரோ ஆதிசக்தியைப் பார்த்ததும் மின்னிய விழிகளுடன் அவரருகில் செல்ல, இளவேந்தன் வெடுக்கென ஆதிசக்தியின் முன்னாள் வந்து நின்று கொண்டார்.

அதில் ஏளனப் புன்னகை தந்த அலெஸ், “இனி அவள்கிட்ட இருந்து எடுக்குறதுக்கு என்ன இருக்குனு இந்த பாதுகாப்பு” என ஆங்கிலத்தில் உரைத்ததில் ஆதிசக்திக்கு முணுக்கென கண்ணில் நீர் நிறைய,

“நீ எடுத்தது எல்லாம் திரும்ப கிடைக்காதுன்னு கனவு காணாத…” என இளவேந்தனும் இளக்காரமாக பதில் அளித்தார்.

அதில் அலெஸ் மகனைத் திரும்பிப் பார்க்க, அவன் ஆதிசக்தியின் கரங்கள் நடுங்கி கண்களில் ஒரு எரிமலை வெடிப்பதை ஆழ்ந்து பார்த்திருந்தான்.

“யாஷ்…” கோபத்தில் அலெஸ் கத்தி விட, நிதானமாய் அவர் புறம் திரும்பியவனிடம், “நீ திரும்ப இத்தாலிக்கு வரணும். அங்க எல்லாத்தையும் ஸ்டாப் பண்ணிட்டு வந்ததுல எந்த அர்த்தமும் இல்ல. நீ இங்க இருக்குறதுல யாருக்கும் எந்த இலாபமும் இல்ல. இழப்பு தான் அதிகம் ஆகும்” என்றவரின் கண்களில் வஞ்சம் அதிகரிக்க, “எனக்கு இழப்பு ஏற்பட்டா, அதுக்கு ஈடா அதே இழப்பு உங்களுக்கும் நடக்கும் பப்பா” என்றான் அமர்த்தலாக.

கண்மணி முதன் முறையாக தனது தந்தையைப் பார்க்கிறாள். ஆனால் தமையனைப் பார்த்தபோது வந்த நெகிழ்வு அவரிடம் வரவில்லை. மாறாக நெஞ்சைக் கவ்வும் பயமே நிறைந்திருந்தது.

அலெஸ்ஸாண்ட்ரோ திரும்பி கண்மணியைப் பார்க்க, அவளோ பயத்தில் இளவேந்தனின் கையைப் பற்றி அவருக்குப் பின்னால் ஒளிந்து கொண்டாள்.

இளவேந்தன் அவளைக் கெட்டியாய் பிடித்துக்கொள்ள, கண்மணியை மேலிருந்து கீழ் வரை அருவருக்கும் பார்வை வீசிய அலெஸ்ஸாண்ட்ரோவை கலைக்கும் வண்ணம் தாதியரின் குரல் கேட்டது.

“சார் பேஷண்ட் கண்ணு முழிச்சுட்டாங்க…”

குரல் வந்ததும் முதல் ஆளாக யாஷ் பிரஜிதனும் கதிரவனும் உள்ளே செல்ல, மற்றவர்களும் நிம்மதியுடன் பின் தொடர்ந்தனர்.

கதிரவன் கட்டிலின் ஒரு புறமும் யாஷ் பிரஜிதன் மறுபுறமும் நிற்க, யாஷ் நின்ற திசையில் கண்ணைக் கசக்கிப் பார்த்தவள் மங்கலாகத் தெரிந்த உருவத்தை அசட்டை செய்து விட்டு, கதிரவன் புறம் திரும்பி “என்னடா நீ ரெண்டு ரெண்டா தெரியிற…” எனத் தலையைப் பிடித்தாள்.

யாஷிற்கு அவள் தன்னை நிராகரித்ததில் சுள்ளென ஒரு வலி.

“நிது” யாஷ் அழுத்தக்குரலில் அழைக்க, மீண்டும் அவன் புறம் திரும்பியவள் கண்ணைத் தேய்த்து விட்டு, “டாக்டர் கண்ணு ரெண்டு ரெண்டா தெரியுது… தலை வேற வலிக்குது… கண்ணு ஃபியூஸா போச்சா?” என்றாள் பரிதாபமாக.

தன்னை மருத்துவர் எனக் கூறியவளை அதிர்ந்து பார்த்த யாஷ் பிரஜிதன், “மின்னல்” என தவிப்புடன் அழைக்க,

“எதே என் தலைல மின்னல் விழுந்துடுச்சா… டேய் கதிரு இன்னாடா ஆச்சு எனக்கு!” என்றாள் பயத்துடன்.

அங்கிருந்த தாதியரோ அவளைப் பரிதாபமாகப் பார்த்து விட்டு, “உங்களுக்கு மருந்து பவர்னால கண் மங்கலா இருக்கு. கொஞ்ச நேரத்துல சரி ஆகிடும்” என்றதும் தான் நிம்மதியானாள்.

கதிரவனோ யாஷை வெற்றிப்பார்வை பார்த்தான். பின்னே விழித்ததில் இருந்து அவள் தன்னிடம் மட்டும் தானே பேசுகிறாள். ஆனால் அவனையே யாரென்று அவளுக்குத் தெரியவில்லை என்றதும் அவனுள் அச்சம் பூதாகராமாக எழ, கூடவே யாஷ் பிரஜிதனின் முகம் அப்பட்டமாய் வலியைக் காட்டியதில் அவனுக்கும் செய்வதறியாத நிலை.

“நிதா மின்னல் எல்லாம் விழுகல. மயங்கி விழுந்துட்ட…” கதிரவன் விளக்கியதும்,

“யப்பா உசுரே போய்டுச்சு. ஏண்டா பொறம்போக்கு. மயங்கி வுழுந்ததுக்கு ஏண்டா இம்மாம் பெரிய ஆஸ்பத்திரில படுக்க போட்டுருக்க. தண்ணியை தெளிச்சுருந்தா எந்திரிச்சுருக்க போறேன்… ஆஸ்பத்திரி பில்லு உன் அப்பனா காட்டுவான்” என சிடுசிடுத்தாள்.

“அடிப்பாவி… ரெண்டு நாளா எந்திரிக்காம மனுசன பதற வச்சுட்டு பேச்ச பாரு”

“ரெண்டு நாளாவா முழிக்கல… ஆமா என்னை சுத்தி ஏண்டா இத்தனை பேர் நிக்கிறாங்க. ஏதோ கல்லறைக்குள்ள இருந்து பாக்குற மாறிக்க பக்குன்னு இருக்கு. போவ சொல்லுடா எல்லாரையும்…” எனக் கடுப்பாய் கூற, இளவேந்தனுக்கு ஒன்றுமே புரியவில்லை.

“ம்மா நிதா உனக்கு எங்களை யார்னு தெரியலையா?” அவர் குரல் மட்டும் கேட்க, “தெரியலேயே இந்தக் கண்ணு இன்னும் மங்கலா தான் தெரியுது… யார்டா அது?” கதிரவனின் கேட்டாள்.

அவனோ “அவர் உன் மாமா” என்றதும், “என்னது நீலி மாமா உசுரோட வந்துட்டாரா?” என்று நெஞ்சில் கை வைத்ததில் அவனுக்கோ நெஞ்சு வலியே வந்து விட்டது.

“பைத்தியக்காரி… உன் சொந்த தாய் மாமாடி”

“இன்னாடா கொழப்புற. சொந்த தாயே யார்னு தெரியாது. இதுல தாய் மாமாவாம். தண்ணி கிண்ணி அடிச்சுருக்கியா?”

“ஐயோ ராமா. எனக்கு ஒண்ணுமே புரியலைங்க…” என்று தலையைப் பிய்த்துக் கொண்டான் கதிரவன்.

“இங்க பாரு இது யாஷ்… உனக்குத் தெரியும் தான?” எனத் தனக்கு எதிர்புறம் இருந்தவனைக் கை காட்ட, அவனைப் பார்த்து விட்டு மீண்டும் கதிரவனிடம் திரும்பியவள், :கே. ஜி. எஃப் ஹீரோவாடா. ஆனா ரொம்ப வெள்ளையா தெரியுறான்” எனக் கண்ணைக் கசக்கி விட்டு, “பார்ட் 3 எடுக்குறாங்களா… எனக்கும் சேர்த்து நீயே ஆட்டோகிராப் வாங்கிடுடா” என்றதில், “ஐயோ! சித்தம் கலங்கிப்போச்சு இவளுக்கு” என்று புலம்பினான் கதிரவன்.

“பைத்தியக்காரா இன்டெர்வியூ டென்சன்ல காலைல இருந்து துன்னல. அதுனால மயங்கி விழுந்துருப்பேன். நீ என்னன்னா ஏதேதோ ஒளறிட்டுருக்க” என்றதில், “இன்டெர்வியூவா?” கதிரவன் திகைக்க,

“ம்ம்… நான் கூட வேலை கண்டிப்பா கெடச்சுடும். இந்த காசி பிரச்சினையை முடிச்சு வுட்ரலாம்னு சொல்லிட்டு இருந்தேனே. அந்த இன்டெர்வியூல ஃபர்ஸ்ட் ரவுண்டு முடிஞ்சுடுச்சு. அடுத்த ரவுண்டுக்கு பத்து நாள்ல வர சொல்லிருக்காங்க. அது மட்டும் கெடச்சுடுச்சு… அந்தக் காசி கை கால்ல விழுந்து டயம் வாங்கிடுவேன்…” முதல் முதலில் அவள் கூற நேர்காணல் பற்றி தற்போது அவள் கூறிக்கொண்டிருக்க, யாஷ் பிரஜிதன் அவளை விட்டுப் பார்வையைத் திருப்பினானில்லை.

கதிரவனோ “அது நடந்து முடிஞ்சு நாலஞ்சு மாசம் ஆச்சே… இன்னாடி ஆச்சுது ஒனக்கு” எனப் புலம்பிட, அவளோ அதனை சரியாகப் புரிந்து கொள்ளாமல், “கதிரு தல வலிக்குதுடா… கூடவே இரு” என்று அவன் கையைப் பிடித்துக் கொண்டாள்.

யாஷ் அந்தக் கையை வெறித்துப் பார்க்க, கதிரவனோ நிமிர்ந்து யாஷை மிரட்சியுடன் பார்த்து விட்டு, கையை தானாய் விலக்கிக்கொள்ள முற்பட, அவளோ விடவில்லை.

“ஐயோ தல வலிக்குதுடா கதிரு” என்றதும் தாதியர் மாற்று மருந்து வழங்க, மீண்டும் மயக்கத்திற்குச் சென்று விட்டாள்.

ஆதிசக்திக்கு அவள் அனைத்தையும் மறந்து விட்டாள் எனப் புரிந்தது ஆனால் ஏன் எதற்கு எப்படி என்ற காரணம் மட்டும் விளங்கவே இல்லை.

அலெஸ்ஸாண்ட்ரோவிற்கு அவர்களது உரையாடல்கள் எதுவுமே விளங்கவில்லை, மருத்துவர் வந்து விளக்கும் வரை.

ஆதிசக்தி தன்னவளையே வெறித்துப் பார்த்திருந்த யாஷ் பிரஜிதனைக் கையைப் பிடித்து வெளியில் இழுத்து வர, வெளியில் வந்த நொடியில், “வாட் தி ஹெல் இஸ் ஹேப்பனிங்!” என்று வெறிப்பிடித்தது போல கத்தினான்.

“மிஸ்டர் ஹாஸ்பிடல்ல நியூசன்ஸ் பண்ணக் கூடாது” என்று மருத்துவர் எச்சரிக்க, “ஐ நீட் டூ நோ! ரெண்டு நாளுக்கு முன்னாடி என் லவ்வ அக்செப்ட் பண்ணவ… இப்ப எப்படி எல்லாத்தையும் மறக்க முடியும். அதுவும்… அவளுக்கு அடிபடல… ஆக்சிடெண்ட் இல்ல. ஜஸ்ட் லைக் தட்… ஹொவ் கேன் ஷீ ஃபர்கட் மீ?” எனத் தொண்டை கிழிய கத்த,

ஆதிசக்தியோ “யாஷ் ப்ளீஸ். கொஞ்சம் பொறுமையா இரு… என்னன்னு விசாரிக்கலாம். அவளுக்கு ஷார்ட் டெர்ம் மெமரி லாஸ் மாதிரி இருக்கலாம்… ப்ளீஸ்” என்று அவன் கன்னத்தைப் பிடித்து அமைதியாக்க முற்பட்டு விட்டு, “டாக்டர் அவளுக்கு என்ன தான் ஆச்சு” என்றார் கண் கலங்க.

“மேம் ஒரு விஷயத்தை புருஞ்சுக்கோங்க. அவங்களுக்கு என்ன ஆச்சுன்னு நாங்க இன்னும் டயக்னோஸ் பண்ணிட்டே தான் இருக்கோம். இங்க இந்தியா’ஸ் பெஸ்ட் நியூரோல இருந்து பெஸ்ட் டாக்டர்ஸ் இருக்கோம். எல்லார்கிட்டயும் ஒபினியன் கேட்டாச்சு. இட்ஸ் வெரி ரேர் கேஸ். ப்ரெய்ன்ல சடனா ஒரு வைரஸ் அஃபெக்ட் ஆகியிருக்கு…” என்றதும், “அதெப்படி சடனா அஃபெக்ட் ஆகும்?” என்றான் கூர்மையாக.

“சின்ன வயசுல இருந்தே இருந்துருக்கலாம் மிஸ்டர் யாஷ். இதுக்கு எங்களுக்கு க்ளியர் தியரி தெரியல. தட்ஸ் ட்ரூ. இப்ப அவங்க உயிரோட இருக்காங்க. ஷீ இஸ் ஹெல்தி நொவ். அந்த வைரஸை பலவீனப்படுத்துற முயற்சில மே பி அவங்க சில விஷயங்களை மறந்துருக்கலாம். பட் இந்த விஷயத்துல நீங்க என்னை நம்பியே ஆகணும். அவங்க பிழைக்க மாட்டாங்கன்னு தான் நினைச்சோம். ஏதோ ஒரு மெடிக்கல் மிராக்கிள்ல தானாவே அவங்க மூளை மறுபடியும் ஒர்க் ஆக ஆரம்பிடிச்சுச்சு. அவங்க உயிரோட இருக்குறதே பெரிய விஷயம் தான்…” என்றதும்,

இளவேந்தன் “அவள் பொழைச்சதே எங்களுக்கு போதும் டாக்டர்… ஆனா அவளுக்கு ஞாபகம் எல்லாம் திரும்ப வந்துடும் தான?” எனக் கேட்டதில், மருத்துவரிடம் சிறு அமைதி.

“அவங்க கம்ப்ளீட்டா சில விஷயங்களை மறந்துட்டாங்க. திரும்பி ஞாபகம் வரத்துக்கான வாய்ப்பு ரொம்ப ரொம்ப கம்மி. நார்மல் அம்னீசியா மாதிரி இல்ல இது. அவங்க மறந்த விஷயங்கள் அவங்களோட ஆழ்மனசுல இருக்கலாம். ஆனா அது அவங்கள டைரக்டா அஃபெக்ட் பண்ணாது. இப்போ உங்களை அவங்களுக்குப் பார்த்த மாதிரி இருக்கலாம். உங்க மேல அட்டாச் ஆகத் தோணலாம். ஆனா, அவங்களுக்கு அட்டாச்மெண்ட் கொடுக்காது.

சிம்பிளா சொல்லனும்னா, சிஸ்டம்ல ரீசைக்கிள் பின்ல டெலிட் செய்யப்பட மெமரீஸ் மாதிரி தான் இப்போ அவங்க சிட்டுவேஷன். டெலிட் ஆனது, ஆனது தான்… நீங்க ஞாபகப்படுத்த முயற்சி பண்ணாலும் அவங்களை அது ஸ்ட்ரெஸ் பண்ணுமே தவிர, மெமரி கெய்ன் கொடுக்காது. சோ இதை நல்லா ஞாபகம் வச்சுட்டு அவங்களை ஹேண்டில் பண்ணுங்க. இப்போ அவங்களுக்கு தேவை கம்ப்ளீட் ரெஸ்ட் தான். அண்ட் இன்ஃபெக்ஷன் ஆகாம பாத்துக்கணும்…” என்று சொல்லி விட்டுச் செல்ல, இளவேந்தன் இடிந்தே போனார்.

கண்மணியோ :என்ன இந்த டாக்டர் என்னன்னவோ சொல்றாங்க…” எனக் கண்ணீர் விட,

சிந்தாமணி, “அதான… அம்னீசியா வர்றதும் அப்பறம் திரும்ப ஞாபகம் வர்றதும் தான உலக வழக்கம். மாமா நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க. அந்த அம்மா அனீஸியாவை தான் பல ஆங்கிள்ல சொல்லிட்டுப் போகுது. அதெல்லாம் அக்காக்கு உங்க ஞாபகம் வந்துடும் பாருங்க” என்று தேற்றினாள்.

ஆனால் யாஷ் பிரஜிதன் நன்றாகவே அவளது நிலையை உள்வாங்கிக் கொண்டான்.

கண்கள் அவளது பார்வையைக் கேட்டு அடம்பிடிக்க, “யோவ் அரக்கா” என்ற அழைப்பைக் கேட்க ஒட்டு மொத்த ஆன்மாவும் தவமிருந்தது.

அலெஸ்ஸாண்ட்ரோ நிலையை உணர்ந்து கொண்டு இளக்கார நகை பூத்தார்.

“வந்த வேலை இவ்ளோ சுமூகமா முடியும்னு எதிர்பார்க்கல யாஷ். அதான் அவளுக்கு உன்னை ஞாபகம் இல்லையே. இங்க இருந்து என்ன செய்யப்போற. ஒழுங்கு மரியாதையா கிளம்பி இத்தாலிக்கு வர வழியைப் பாரு…” என்று மிரட்டியவர் ஆதிசக்தியைத் திரும்பிப் பார்த்து, “ஸீ யூ சூன்” என்று வஞ்சம் நிறைந்த புன்னகையை வழிய விட்டு சென்றார்.

தனது தனிமையை சூறையாடியவள். வெறுமையில் வண்ணம் கலந்தவள். இயந்திர வாழ்வில் உணர்வினை ஊற்றியவள். செயற்கை நுண்ணறிவின் மத்தியில் நேசத்தை நெஞ்சமெங்கிலும் விதைத்தவள்.

இன்றேனோ மீண்டும் தனிமை தந்து, மீண்டும் வெறுமையில் வேக விட்டு, மீண்டுமொரு இயந்திர வாழ்வைப் பரிசளித்து விட்டு தன்னைப் புறக்கணிக்கிறாள்.

எப்படி ஏற்றுக்கொள்ள இயலுமாம் அவனால்?

அவனாக கேட்ட அன்பல்லவோ அவள்!

கேட்காது கிடைத்திட்ட காதலல்லவோ அவள்!

தரையை வெறித்தபடி நிதர்ஷனாவின் அறை வாயிலிலேயே அமர்ந்து விட்டவனின் கன்னங்களில் கோடுகளாய் நீரூற்று.

அவள் உயிருடன் திரும்ப மாட்டாளெனும் போது ஏற்பட்ட விரக்தியின் உச்சம், தற்போது இவ்வுலகில் ஒன்றாய் வாழ்ந்தாலும் அவளுக்கு தான் யாரோ ஒருவன் தான் என்ற நிலையில் விரக்திகள் மெல்ல மெல்லக் கரைந்து கண்ணீராய் உருப்பெற்று இருக்கிறது.

நினைவு தெரிந்தது முதல் அழுததில்லை அவன்.

அதிலும், அன்பைக் கேட்டு அழும் கோழையும் அல்ல அவன்.

இன்று தனது உயிர்க்காதலை, அவளுக்கு தன் மீது துளிர்த்த காதலை இழந்து விட்டான். எப்பேர்ப்பட்ட வலி அதுவென்று உணரும்போதே உள்ளுறுப்புகள் ஒவ்வொன்றாய் துடிதுடித்து சாகின்றது.

ஆதிசக்திக்கு மகனின் கண்ணீர் வேதனையைக் கொடுக்க, அவனருகில் அமர்ந்தவர் “யாஷ்… எப்படியும் அவளை சரி பண்ணிடலாம்!” என்றார் பரிதவிப்பாக.

“எப்படி?” யாஷ் கேட்கும்போதே மீண்டும் புதிதாய் வழிந்தது கண்ணீர்.

அவன் கண்ணீரைத் துடைத்து விட்டவர், “எப்படியோ சரி பண்ணிடலாம். வெளிநாட்டுக்குக் கூட்டிட்டு போய் இன்னும் பெஸ்ட் சர்ஜன் வச்சு… நான் நான் டாக்டர்ட்ட பேசுறேன்… ப்ளீஸ் நீ ஹோப் விடாத” என்றவர் தனது கண்ணீரையும் அவசரமாகத் துடைத்து விட்டு, அவனது காதலை எப்படியும் மீட்டு விட வேண்டுமென்ற உறுதியில் மருத்துவரின் அறைக்குச் சென்று மீண்டும் சுவரில் அடித்த பந்தாகத் திரும்பினார்.

அவளுக்கு தற்போது தேவையானது சிகிச்சையல்ல என்றும், தேவையான சிகிச்சையைத் தாங்களே வழங்கி விட்டதாகவும், அவளுக்கு நினைவு வர வேண்டுமென மீண்டும் சிகிச்சை அளித்தால் அது இன்னும் சில நிகழ்வுகளை மறக்கவே உதவி செய்யும் எனவும் மருத்துவர் கூறி விட, செய்வதறியாது யாஷின் அருகில் அமர்ந்தார்.

அவனுக்கு மறுபுறம் இளவேந்தன் அமர்ந்திருக்க, “என்ன ஆதி சொன்னாங்க டாக்டர்?” எனக் கேட்டதும், அவர் விஷயத்தைக் கூற இளவேந்தனுக்கு அத்தனை வேதனை.

யாஷ் ஏற்கனவே கணித்திருந்தான் இதை. அதனால் அவனிடம் ஒரு அசைவும் அதிர்வும் இல்லை.

அவனது நிலையே பயத்தைக் கொடுத்தது இரு பெரியவர்களுக்கும்.

“யாஷ் நீ இப்படி இருக்காத ப்ளீஸ்” ஆதிசக்தி அச்சத்துடன் உரைக்க,

“வேற எப்படி இருக்க?” எனக் கேட்டான் உணர்வின்றி.

“எனக்கு என்ன செய்றதுன்னு தெரியல யாஷ்… உன்ன இப்டி பாக்க முடியல”

“இந்த இருவது வருஷத்துல நீங்க வேணும்னு உங்களைத் தேடி வந்து உங்க பெர்சனல் லைஃப்ல நான் தலையிட்டுருக்கேனா?” யாஷ் உடைந்து கேட்க,

“ஐயோ ஏன் யாஷ்…” ஆதிசக்திக்கு அழுகை வெடித்தது.

“சொல்லுங்க!” அவன் அழுத்திக் கேட்டதும் அவர் மறுப்பாய் தலையசைத்தார்.

“எனக்குத் தேவையான ரிசர்ச் பேசிக் உங்ககிட்ட இருக்குன்னு கேட்டப்ப, நானா வரேன்னு சொன்னேனா? என்னை வலுக்கட்டாயமா அனுப்பி விட்ட நீங்களே, நான் இங்க வந்தே ஆகணும்னு சொன்னதுனால தான வந்தேன். பிகாஸ் ஐ ஹேட் பெக்கிங் ஃபார் லவ் மம்மா…” (அன்புக்காக யாசகம் கேக்குறதை வெறுக்குறேன் மா) என ஆழ்க்குரலில் கூறியதில், ஆதிசக்திக்கு மனம் முறிந்தே போனது.

“பட் நொவ்… ஐ ஆம் பெக்கிங் பார் ஹெர். அவள் லவ் வேணும்மா. ஐ நீட் ஹெர். ஐ ஆம் ஜஸ்ட் நீட் ஹெர். ஆனா யாராலும் எதுவும் செய்ய முடியாதுல… எனக்காக அவள் இருந்தப்ப எதுலாம் நான் பாசிபிள் இல்லன்னு நினைச்சேனோ அதை எல்லாம் எனக்கு பாசிபிள் ஆக்குனா. இப்ப அவளே எனக்கு பாசிபிள் இல்லைல… அவளை நான் திரும்ப பாக்கும்போது, நீங்க என்கிட்ட வெறுத்த இந்த பாரீனர் தோற்றத்தைப் பார்த்து அவளும் என்னை வெறுத்துடுவால… ஐ நீட் ஹெர் மம்மா… எனக்கு அவள் வேணும். என்னால அவள் இல்லாம டாலரேட் பண்ண முடியல மம்மா… என்றவனின் தேய்ந்த வார்த்தைகளில் உறைந்தே போன ஆதிசக்தி, அவனை நெஞ்சில் சாய்த்துக்கொண்டு கதறினார்.

‘ஐயோ… சத்தியமா நீ அலெஸ் மாதிரி இருக்கன்னு உன்னை அனுப்பல யாஷ்… ஹையோ கடவுளே!’ என மனத்தினுள்ளே அரற்றிய ஆதிசக்தியின் மடியில் புதைந்தே தனது கண்ணீரை எல்லாம் தன்னவளுக்காக வீணாக்கினான் யாஷ் பிரஜிதன்.

அன்பு இனிக்கும்
மேகா

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
23
+1
186
+1
9
+1
7

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment