Loading

தன்னவனின் முத்தத்தில் சுற்றுப்புறம் மறந்தே போயிருந்தாள் நிதர்ஷனா.

அவன் பூசி இருந்த பெர்பியூம் மணமும் முகத்தில் இருந்த லோஷன் வாசனையும் அடிவயிற்றில் பிரளயத்தை நிகழ்த்த, அவனுக்கோ நாசி உணர்ந்த லக்ஸ் சோப்பின் மணமொன்றே கிளர்ச்சியைத் தூண்டியது.

ஒரு நொடி ஆக்கிரமித்திருந்த அதரங்களை விடுவித்தவன், “என்ன பெர்பியூம் இது. ஆளை மயக்குதுடி!” என முணுமுணுத்து விட்டு அவளது பதிலைக் கேளாமல் மீண்டும் முத்தத்தில் இறங்க, அவனது அதிவேகத்தில் அவனைத் தடுக்கவும் இயலாது தடை சொல்லவும் மனம் வராது பதறிப்போனாள்.

அவனோ அடுத்த கட்டமாய் முத்தத்தின் ஆழத்தை அதிகரித்து கழுத்துக்குக் கீழே பயணிக்க, வேகமாய் அவனைத் தடுத்தவள், “என்ன பண்ற?” எனக் கேட்டாள் மிரட்சியாக.

“லவ்வர்ஸ் என்ன செய்வாங்களோ அதை தான்!” என அவள் தலையில் குண்டைத் தூக்கிப் போட்டான்.

“ஆத்தாடி!” எனத் துரிதமாக எழுந்து கொண்டவளோ அலங்கோலமாய் கலைந்த நைட்டியை ஒழுங்குபடுத்தி, சுவரோரம் ஒட்டி அமர்ந்து காலைக் குறுக்கினாள்.

யாஷ் பிரஜிதனின் மீசை குத்தி உதடும் கன்னமும் எரிந்தது. அதை விட அவனிடம் சிக்கிக் கிடந்த நொடிகளின் பிரதிபலிப்பாய் வதனமெங்கும் சிவப்புத் தடம்.

“வாட் மின்னல்? ஐ ஆம் சோ மேட் ஆன் யூ!” யாஷ் பிரஜிதன் புரியாது வினவ,

“லவ்வர்ஸ் இதெல்லாமா செய்வாங்க. க… கல்யாணம் பண்ணாம என்னமோ நீ பாட்டுக்கு பாஞ்சுட்டு இருக்க?” எனக் கோபமாய் நியாயம் கேட்க வந்தவளின் குரல் வலுவின்றி சிணுங்கியது.

“கல்யாணம், மேரேஜ்… தட் எல்லோ ரோப் போட்டு ரைட்…” எனச் சந்தேகமாய் கேட்டவனை பரிதாபமாய் ஏறிட்டவள், “க்கும் எல்லோ ரோப் தான்” என்றாள்.

“அதென்ன லைசன்ஸா?” யாஷ் நளினமாய் புன்னகைக்க, அதில் ஒரு கணம் விழுந்த மனதை மீட்டு, “ஆமா…” என்றவளுக்கு இன்னும் வார்த்தைகள் வரவில்லை பாவம்.

கண்ணிமைக்கும் நேரத்தில், அவளது ஒட்டு மொத்த தெம்பையும் அல்லவா அவன் கடன் வாங்கியிருந்தான்.

‘செய்றதையும் செஞ்சுட்டு இவன் மட்டும் எப்படி தான் டயர்டாகாம இருக்கானோ…’ என முணுமுணுக்க, “என்னடி சொல்லுது இந்த லிப்ஸ்” என உதட்டடிப் பிடித்தான்.

“ஆத்தாடி ஆத்தா… வெளிநாட்டுக்காரனை காதலிச்சது பெரும் தப்பு போலயே…” என்றபடி வேகமாய் தட்டி விட்டவள், “ஒன்னும் சொல்லல ராசா” என்றாள் கையெடுத்துக் கும்பிட்டு.

“பொய் சொல்ற இந்த லிப்ஸ்க்கு…” புருவம் சுருக்கித் தீவிரமாய் அவன் ஆரம்பிக்க, அவளோ மடமடவென மனதில் நினைத்ததைக் கூறி விட்டாள்.

அதில் வாய்விட்டே சிரித்தவன், “நம்ம ஒண்ணுமே பண்ணலையே? கிஸ் பண்ணுனதுக்கே டயர்ட் ஆகிட்டியா?” என்றபடி அவளை ரசிக்க,

“கிஸ்ன்னா பொறுமையா நிதானமா குடுப்பாங்க. நீ எனக்கு மயக்கமே வர வைக்கிற அரக்கா…” என்றாள் பாவமாக.

“அச்சோ! உன்னை எம்பாரஸ் பண்ணிட்டேனோ…” கம் என முட்டியிட்டு அமர்ந்திருந்தவன் அவளை அழைக்க, வேகமாய் அவனுள் அடங்கிக் கொண்டாள்.

“நெக்ஸ்ட் கிஸ் சாப்ட்டா கொடுக்குறேன் ஓகேவா மின்னல்?” எனக் காதோரம் கிசுகிசுக்க வெட்கம் பிடுங்கித் தின்றது.

அவனிடம் இருந்து தப்பிக்கும் பொருட்டு, “ஐயோ கிரைண்டர் ரொம்ப நேரமா ஓடுது” என எழுந்து அடுக்களைக்குச் சென்றாள்.

அவனும் அவள் பின்னே செல்ல, அவனுக்கோ புழுக்கம் தாளவில்லை.

“என்னடி இவ்ளோ ஹாட்டா இருக்கு…” என சட்டையைத் தூக்கி ஊதிக் கொண்டான்.

நெற்றியெல்லாம் வியர்த்து விட்டதில், சூடு தாளாமல் சட்டையைக் கழற்றி விட்டான்.

“நான் இருக்குற நிலமைல இவன் வேற… ஆர்ம்ஸ காட்டிட்டு நிக்கிறான்!” என நொந்து கொண்டவள், “ஸ்டான்ட் ஃபேன் எடுத்துட்டு வரேன் இரு… ஆனா வேகமா காத்து வருமே சேருமா உனக்கு?” எனக் கேட்க, “நோப்!” என்றபடி அவளைப் பின்னிருந்து கட்டிக்கொண்டான்.

பெண்ணவளின் மெல்லிதயம் நின்று துடிக்க, அவனோ அவளது கழுத்து வளைவில் அழுந்த முத்தமிட, “யாஷ்… ப்ளீஸ்” என்றாள் தளர்ந்து.

“நெக்ஸ்ட் ஸ்டெப் போகணும்னா எல்லோ ரோப் வேணுமோ?” கிசுகிசுப்பாய் யாஷ் கேட்க, “ம்ம்ம்” என வேகமாய் தலையாட்டினாள்.

“ஓகே!” என்றவன் அவளைத் தன் பிடியில் இருந்து அகற்றாமல் ஆஹில்யனுக்கு அழைத்தான்.

காரில் இருந்தபடி அழைப்பை ஏற்றவனிடம், “ஆஹில் இமீடியட்டா எனக்கு எல்லோ ரோப் வேணும். இண்டியன் வெட்டிங்க்கு யூஸ் பண்ணுவாங்கள்ல” எனக் கூறி அவனைத் திகைக்க வைக்க, இவளோ “அட கலப்படக்கண்ணுக்காரா!” என வாயைப் பொத்தி நின்றாள்.

“யோவ்… இன்னாயா ஒன்னோட பேஜாராக்கீது. மஞ்சக்கயிறலாம் ஆர்டர் போட்டுக்கீற… ஐயோ மானமே போவுது ஒன்னால” எனப் புலம்பித் தள்ளிட, ஆஹில்யனுக்கும் அவளது புலம்பல் கேட்டதில் சத்தம் வராமல் சிரித்தான்.

சத்தம் வந்தால் யாஷ் அவனைப் போட்டுத் தள்ளி விடுவானே! ‘இன்டர்நெஷனல் லெவல்ல சுத்திட்டு இருந்த மனுஷன், இங்க வந்து சிக்குனது தான் பரிதாபம்’ எனப் பாவப்பட்டுக் கொண்டான்.

“ஏய் இந்த ஸ்லாங்ல பேசுன வாயைக் கடிச்சு வச்சுடுவேன்…” யாஷ் மிரட்டியதில் மீண்டும் வாயைப் பொத்தியவள், “நிவே வராம கல்யாணம் பண்ண முடியாது அரக்கா” என்றாள் பாவமாய்.

வாயைப் பொத்தி பேசியதில் ஒன்றும் புரியாமல், “என்னடி சொல்ற?” என அவன் கேட்க, “நிவே வந்தா தான் நம்ம கல்யாணம்” என மீண்டும் கூறினாள்.

“இதுவேறையா…” என்றபடி அழைப்பைத் துண்டித்தவன், “படுத்துறடி” என்றான் மோகப் பெருமூச்சுடன்.

நாக்கைத் துருக்கி அழகு காட்டியவளின் இதழ்கள் மீண்டும் மீண்டும் அவனிடம் சிறைபட்டுக்கொள்ள, இம்முறை அதிகம் அவளைச் சோர்வடையச் செய்யாது மெதுவாய் அணுகினான்.

அவனது செயலில் மொத்தமாய் அவன் புறமே சரிந்தவளோ, வலுக்கட்டாயமாக முகத்தைப் பின்னிழுத்துக்கொண்டு, அவனைக் காணவே வெட்கிய கண்களை கட்டுப்படுத்திக்கொண்டு, “என்ன அம்மா ஆக்காம நீ இங்கிருந்து போவ மாட்ட அப்படித்தான?” எனக் கேட்டாள் உதட்டைப் பிதுக்கி.

பக்கென சிரித்தவன், “கிஸ் பண்ணா எப்படிடி அம்மாவாகுவ?” எனக் குறும்பாய் கேட்க,

“ம்ம் நீ அப்டி தான் ஸ்டார்ட் பண்ற. ஆனா உன் கை, கண்ணு வாயெல்லாம் சொம்மாவே இருக்க மாட்டுது. நீ கெளம்பு தெய்வமே” என்றாள் கும்பிட்டு.

“சரி பொழச்சு போ” எனப் பெரிய மனது செய்து விட்டவன், “கிளம்பு கிளம்புன்னா நான் எங்க தனியா போறது. நீயும் தான் வரணும். நீ முதல்ல இந்த காஸ்டியூமை மாத்திட்டுக் கிளம்பு” என்றான்.

“நானா? நமக்கு தான் கல்யாணம் ஆகலையே. அப்படி எங்க வர்றது?”

“இவ்ளோ நாள் கல்யாணம் ஆகி தான் ஒண்ணா இருந்தோமா?” யாஷ் முறைப்பாய் கேட்க,

“அப்போ வேற. இப்பலாம் உன்னை நம்பி வர மாட்டேன்ப்பா…” என்றாள் சிலுப்பலாக.

“நான் ஒன்னும் என் அப்பா மாதிரி பாக்குற பொண்ணுங்ககிட்டலாம் பெட் ஷேர் பண்றது இல்ல. உனக்கு ஓகே சொல்ற வரை நான் உன்னை ரேப் பண்ணிட மாட்டேன். ஐ நோ மை லிமிட்!” என்றவனுக்கு கோபம் எழுந்தது.

அவளோ அவனது தோள்பட்டையில் இருந்த சிறிய மச்சத்தை வருடியபடி, “உனக்கு லிமிட் தெரியும். எனக்கு தெரியுமா என்ன… உங்கிட்ட கரைஞ்சு போறது எனக்கு தான தெரியும்…” என உதட்டைக் குவித்து சோகமாய் சொல்ல, அதில் கோபம் மறைந்து முறுவல் பிறந்தது ஆடவனுக்கு.

“பட் நீ இல்லாம முடியலடி…” மோகக்குரலில் அவளது செவியில் ஒரு முத்தம் வைக்க, சிணுங்கி அவனது வெற்று மார்பில் முகம் புதைத்தவளுக்கு மேனி சிலிர்த்தது.

“போயா என்னை வெட்கப்பட வைக்கிற நீயி…” எனப் பொய்க்கோபம் கொள்ள, “ஐ ஆம் ஃபாலிங் ஃபார் யூ ஆலம்பனா” என மீண்டும் அவளை சொக்க வைத்தான்.

இனிய சில நொடிகளுக்குப் பிறகு, “அது சரி நிவே என்னைத் தேடி இங்க வந்தா…” ஐயத்துடன் வினவினாள்.

“அவனைத் தேடி நம்ம போறவரை அவன் வரமாட்டான்” என்ற யாஷ் பிரஜிதனின் கூற்றில் “என்ன சொல்ற யாஷ்?” என்றாள் மிரட்சியாய்.

“நத்திங்டி. இன்னும் இறங்கி தேடலாம். இங்க வந்தா கதிரவனை இன்ஃபார்ம் பண்ண சொல்லலாம். அண்ட் என் ஆளுங்க இங்க ரவுண்ட்ஸ்லேயே இருப்பாங்க…” என்றதும் சரியென்றாள்.

“இப்பவே வரவா? மாவை அப்படியே விட்டுட்டு வந்தா வீணாகிடும் யாஷ். கதிருட்டையும் சொல்லிட்டு வரணும். அவன் ராத்திரி தான் வருவான். அவன் வந்ததும் சொல்லிட்டு மாவையும் குடுத்துட்டு வரேன். என்னாண்ட நேத்திக்கே இட்லி கேட்டான்…” என்றிட,

“ஃபைன்… நைட்டே கிளம்பலாம்…” என்றதும் “எதே நைட்டு வர நீ இங்க இருக்கப்போறியா?” என்றாள் நெஞ்சைப் பிடித்து.

“எஸ்!” திட்டவட்டமாக யாஷ் கூறியதில், “கையையும் வாயையும் ஒழுங்கா வச்சுட்டு இருக்கணும்…” என எச்சரித்தாள்.

“அது என் கைல இல்ல” கண் சிமிட்டிக் கூறியவனை ரசித்து தொலைத்தாலும், ‘கல்யாணத்துக்கு முன்னாடி கர்ப்பமாகிடுவோமோ’ என்ற பயம் வேறு அவளுக்கு.

அதனை விழுங்கிக்கொண்டு, “நீ சாப்டியா?” எனக் கேட்க,

தோளைக்குலுக்கி மறுப்பாய் தலையசைத்தவன், “ஹங்கிரி ஆலம்பனா” என்றதும் பரபரத்தாள்.

“ட்ராவல் முழுக்க சாப்பிடலையா? ப்ரூட்ஸ் சாப்பிட்டே உயிர் வாழுவியே அதையாச்சு வாங்கித் துன்ன வேண்டியது தான?” என்றவள் சாப்பிட எதாவது இருக்கிறதா என அடுக்களையை உருட்டினாள்.

வீட்டில் ஒன்றுமே இல்லை. மாவும் அப்போது தான் தயாராகிக் கொண்டிருந்தது.

“இரு நான் உனக்கு சாப்பிட எதுனா வாங்கிட்டு வரேன்…” என அவள் கிளம்ப, “வீட்ல எதுவுமே இல்ல. நீ எதை சாப்பிடுவ?” எனக் கேட்டான்.

“கஞ்சி இருந்துச்சு…”

“அப்போ அதுவே குடு!” என்றவனை விழித்துப் பார்த்தவள், “நீ அதெல்லாம் குடிப்பியா? பழசுயா…” என்றாள் சங்கடமாக.

“நீ அதான சாப்பிட போற?” அவன் முறைத்துப் பார்க்க, “ஆமா… ஆனா…” எனத் தயங்கியதில், “குடுடி ஹங்க்ரி” என்றான் மீண்டும்.

அதில் வேறு வழியற்று பானையில் இருந்த கஞ்சியை எடுத்தவள், “ஒரு அஞ்சு நிமிஷம்…” என்று விட்டு அதைச் சூடு காட்டி வெங்காயம் பச்சை மிளகாய் எல்லாம் போட்டு சுட சுட கிண்ணத்தில் ஊற்றி அதில் ஸ்பூன் போட்டுக் கொடுத்தாள்.

“போய் உக்காந்து சாப்பிடுங்க… நான் ஸ்டான்ட் ஃபேன முகத்துல படாம வைக்கிறேன்” என்று ஒரு ஸ்டூலை நன்றாகத் துடைத்து ஹாலில் போட்டவள், ஸ்டாண்ட் பேன்னையும் போட்டு விட்டாள்.

“மொதோ சட்டையைப் போட்டுட்டு சாப்பிடு…”

“ஹாட்டா இருக்குடி” என்றவன் பேண்ட்டையும் கழட்டி விடுவான் போலும்.

“லுங்கி கட்டிக்கிறியா?” நிதர்ஷனா கேட்டதும், “வாட்ஸ் தட்?” என்றான் புரியாமல்.

“இரு வரேன்…” என்று அந்தச் சிறிய அறைக்குச் சென்று, நிவேதனுக்காக வாங்கி வைத்த புது வெள்ளை நிற கைலியை எடுத்து வந்தவள், “இதைக் கட்டிக்க…” எனக் கொடுத்தாள்.

“ஹொவ்?” யாஷ் விழித்ததும், அவளே கட்டி விட்டாள்.

“ஏற்கனவே ஹாட்டா இருக்கு. இதுல இதை வேற ஏண்டி கட்டி விட்ட?” யாஷ் இடுப்பில் கையூன்றி முறைக்க,

“ஹய்ய… உள்ள போய் பேண்ட்டை கழட்டிக்க. இந்தா அப்டியே இந்த பனியனை போட்டுக்கோ” என நிவேதனுடைய சிவப்பு நிற ஸ்லீவ்லெஸ் பனியனைக் கொடுத்தாள்.

அவன் வாங்காமல் பார்க்க, “எல்லாம் புதுசு தான்…” அவள் சேர்த்து சொன்னதும், “ஓகே” என வாங்கிக்கொண்டு அறைக்கு செல்ல எத்தனித்தவன், “உள்ள கேமரா எதுவும் இல்லையே?” எனக் கேட்டான் கேலி நகையுடன்.

“ஆமா இவரை வீடியோ எடுத்து நெட்ல விட்டு சம்பாதிக்க போறேன்… போயா அரக்கா” என சிலுப்பிட, “இதை வியர் பண்ணிக்க ஹெல்ப் பண்ண மாட்டியா?” எனப் பனியனைக் காட்டி சீண்டினான்.

அதில் சிவந்து போனவள், “ப்ச் யாஷ்…” எனக் காலை தரையில் உதைத்து சிணுங்கினாள்.

அவளது நாணத்தை வித்தியாசமாய் பார்த்தவனுக்கு ரசனைத் தலைக்கேறியது.

தனது அலைபேசி வைப்ரேட் ஆகியதில் அதனையே வெறித்துக் கொண்டிருந்தார் ஆதிசக்தி.

ஆதி போன் ரொம்ப நேரமா அடிச்சுட்டு இருக்க. எடுக்க வேண்டியது தான? எனக் கேட்டபடி இளவேந்தன் அறைக்கு வர, அலெஸ் தான் பண்றான் என்றாள் குழப்பமாக.

கண்மணியையும் கல்யாணத்துக்கு வர வேணாம்னு சொல்லிருக்கான். என்ன நடக்குதுன்னு தெரியலையே அங்க… என இளவேந்தன் கேட்டதும், யாஷ் கல்யாணத்தை நிறுத்திட்டு இந்தியா வந்துட்டான். நிதாவுக்காக. ஏஞ்சலா இப்ப தான் கால் பண்ணா… என்றதும் அவரிடம் வியப்பு.

நிஜமாவா சொல்ற? இளவேந்தன் அதிக சந்தோஷத்துடன் கேட்க, அந்த மகிழ்வு ஆதிசக்தியின் முகத்தில் இல்லை.

பயமா இருக்கு இளா. அலெஸ்ஸ மீறி வந்துருக்கான்… என்றவருக்கு இதயம் தாறுமாறாய் துடிக்க,

என்ன செஞ்சுடுவான் அவன்? இந்த தடவை நீ என்னைத் தடுக்காத ஆதி. என்ன ஆனாலும் சரி, இனி யாஷ் இந்தியால இருக்க விருப்பப்பட்டா நீயே தடுத்தாலும் அவனை விட மாட்டேன். அந்த அலெஸ்ஸாண்டரோ பைத்தியக்காரன உண்டு இல்லைன்னு ஆக்கிட்டு தான் அனுப்புவேன் என சீறினார்.

இதெல்லாம் நடக்குற காரியமா? பயத்தை மென்று விழுங்கிய ஆதிசக்தி, அலெஸ்ஸாண்ட்ரோவின் அழைப்பை நிராகரித்தார்.

—-

சிவப்பு நிற பனியனும் வெள்ளைக் கைலியையும் அணிந்து வந்தவனைக் கண்டு மூச்சு முட்டியது நிதர்ஷனாவிற்கு.

“இவன் என்ன இந்த ட்ரெஸ்லயே அள்ளுறான்…” எனப் புலம்பிக்கொண்டு, “சோக்கா இருக்க அரக்கா” என்றாள் கண் சிமிட்டி.

அப்டின்னா?

“அழகா இருக்கன்னு சொன்னேன்…” எனக் கஞ்சிக் கிண்ணத்தைக் கொடுத்தவள், ‘இவனுக்கு தமிழுக்கே சப்டைட்டில் போட வேண்டியதாகீது…’ என முணுமுணுத்தாள்.

கஞ்சியை உண்டவன், “நைஸ் ஒன்” எனப் பாராட்டி விட்டு அவளுக்கும் ஊட்டி விட, இருவரும் மாறி மாறி ஊட்டி விட்டுக் கொண்டனர்.

“இவர் எப்ப வருவாருன்னே தெரியலையே…” எனப் புலம்பிய ஆஹில்யனுக்கு அவனை அழைக்க வேண்டிய நிர்பந்தம்.

இங்கோ யாஷ் பிரஜிதன் உலகத்தையே மறந்து, பல நாடுகளை பதற விட்டு வந்ததை அறிந்தும் உதறி விட்டு, தன்னவளின் மடியை மஞ்சமாக்கி அவளது கன்னத்தை வருடிக் கொண்டிருந்தான்.

“கல்யாணம் நின்னது அத்தைக்குலாம் தெரியுமா யாஷ்?” அவனது கேசத்தை வருடியபடி கேட்டாள் நிதர்ஷனா.

“கண்மணியையும் சிந்தாமணியையும் என் மேரேஜ்க்கு வர சொல்லிருந்தேன். நேத்து அவங்க கிளம்புறதா இருந்துச்சு. பட் இப்ப வர வேணாம்னு மெசேஜ் மட்டும் போட்டேன். கால் பண்ணாங்க எடுக்க முடியல. இனி தான் சொல்லணும்” என்றதில், “இந்தக் கருமம் பிடிச்ச காதலை இங்கவே சொல்லிருந்தா பிளைட்டுக் காசு மிச்சமாகி இருக்கும்ல…” என்றாள் நமுட்டு நகையுடன்.

கண்ணைச் சுருக்கி முறைத்தவன், “வெடிங்க்கு நிவேதன் மட்டும் வரணுமா? இல்ல உன் பேமிலியும் வரணுமா?” எனக் கேட்டான் நக்கலாக.

“அது என் பேமிலி மட்டும் தானா?” என முறைத்தவள், “அதை அப்போ பாத்துக்கலாம்… உங்க சேர்மன் போஸ்ட் போனது தான் கஷ்டமா இருக்கு” என்றாள் வருந்தி.

“என் சேர்மன் சீட்ல ஆணி வைக்கணும்னு வேண்டுனவ தான நீ. வேண்டுதல் பலிச்சுடுச்சு” யாஷ் கிண்டலடிக்க, “ச்சே… நான் ஏதோ சும்மா சொன்னேன். நிஜமா நான் அப்படி நினைக்கல அரக்கா…” நிஜமாய் வருந்தியதில், “ஐ நோ டி… லீவ் இட்! ஐ ஜஸ்ட் வான்னா பீ வித் யூ. தட்ஸ் இட்” என்றான் ஆழ்ந்த குரலில்.

“யாஷ்… இப்போ இந்த முடிவு கரெக்ட்டா தெரியலாம். ஆனா கொஞ்ச நாள்ல தப்பான முடிவோன்னு தோணிட கூடாதுல…”

“தப்பான முடிவு எடுத்துட்டோம்னு என்னை ஃபீல் பண்ண வைக்க கூடாது உன் லவ். அன்லிமிட்டடா குடு எதையும் யோசிக்க விடாத மாதிரி…” அவளது முகத்தை அளந்தபடி ரசித்துக் கூறியவனின் நெற்றியில் அழுந்த முத்தமிட்டாள்.

அம்முத்தம் அவனுக்குப் புதிது. அன்பின் வெளிப்பாடான நெற்றி முத்தம் மனதை அமைதியாக்கும் என முதன்முறை உணர்கிறான். இத்தனை நேரம் அவன் காட்டிய காமத்தை எதிரொலிக்கவில்லை அம்முத்தம்.

“இட்ஸ் சம்திங் டிஃபரென்ட் மின்னல். இன்னொன்னு குடு!” எனக் கேட்டு வாங்க, அதில் புன்னகைத்தவள் மீண்டும் அவன் நெற்றியில் ஆழ்ந்த முத்தம் பதிப்பிக்க, உயிரில் நிறைந்து வழிந்தது அவ்வுணர்வு.

அதே அன்பை செலுத்த எண்ணி, அவளுக்கும் நெற்றி மத்தியில் அழுத்தமாய் முத்தமிட, நெக்குருகிப் போனாள் நிதர்ஷனா.

“ஒரு பாட்டு பாடேன் ஆலம்பனா!” ஒற்றை விரலால் அவளது கரத்தை வருடியபடி கேட்டான் ஆடவன்.

“ஏற்கனவே பாடுன பாட்டுக்கு தான் இங்க வந்து நின்னுருக்கீங்க மிஸ்டர் யாஷ் பிரஜிதன்” நிதர்ஷனா கிளுக் என சிரிக்க, “இந்தப் பாட்டு என்னையவே மறக்க வைக்கணும்…” என்றான் மேலுதட்டை மடித்து.

க்ளீன் ஷேவ் செய்யப்பட ஆடவனின் கன்னத்தில் முத்தமிட்டவள்,

நீ நான் மட்டும்
வாழ்கின்ற உலகம் போதும்
உன் தோள் சாயும்
இடம் போதுமே

உன் போ்
சொல்லி சிலிா்க்கின்ற
இன்பம் போதும்
இறந்தாலும் மீண்டும் பிழைப்பேன்

ஒன்றோடு
ஒன்றாய் கலக்க என்னுயிரே
காதோரம் காதல் உரைக்க… எனப் பாடலின் நடுப்பகுதியில் இருந்து அவனை அணைத்துக் கொண்டு உயிர் உருக பாடினாள்.

“மெஸ்மரைசிங்…” அவனுக்குப் புரியும் படியான இலகுவான வரிகளும் கூட. அவ்வரிகளில் அவனுக்குள்ளும் சிலிர்த்தது.

தனது மொத்த காதலையும் பாடல் வரிகளில் காட்டும் அவளது அன்பு விசித்திரமானது. ஆழமானதும் கூட.

“என்ன சாங்டி இது…” அவன் கிறக்கத்துடன் கேட்க,

இரவாக நீ
நிலவாக நான்
உறவாடும் நேரம்
சுகம் தானடா…

என பாடலின் மூலம் பதில் அளித்ததில், அவள் இதழ்களோடு உறவாட ஆயத்தம் கொண்டான்.

இருவருக்குமான இனிய நிமிடங்கள் முத்தத்தின் பிடியில் கழிய, ஆஹில்யனின் அழைப்பில் தான் இருவரும் நிகழ்விற்கு மீண்டனர்.

தன்னிதழ்களில் தங்கி விட்ட அவனது இதழீரத்தின் மிச்சத்தை வெட்கத்தின் பிடியில் துடைத்துக் கொண்ட நிதர்ஷனாவிற்கு வேறொரு உலகில் வாழ்வது போலொரு பிரம்மை.

ஆஹில்யனின் அழைப்பை ஏற்றவன் ஒரு கையால் அவளது கையை இறுக்கிப் பிடித்துக் கொண்டான்.

“பாஸ்… இத்தாலில இருந்து கால் மேல கால் வந்துட்டே இருக்கு. இட்ஸ் வெரி அஃபிஷியல். உங்க ரிசர்ச் சம்பந்தமா கவர்மெண்ட்ல இருந்தும் கால். ஹெசிட்டேட் பண்ண முடியல பாஸ். இங்க டவர் ப்ராப்ளம் வேற…” என்றதும் நிலையின் தீவிரத்தைப் புரிந்து கொண்டவன், “ம்ம்” என்று அழைப்பைத் துண்டித்து விட்டு, நிதர்ஷனாவைப் பார்த்தான்.

“மின்னல், ஐ ஹேவ் டூ கோ. நீ கதிரவன்ட்ட சொல்லிட்டு இங்க உனக்கு தேவையானதை பேக் பண்ணிட்டு ரெடியா இரு. கீழ உனக்கு சேஃப்ட்டி கார்ட் இருப்பாங்க. என்னை மீறி இங்க யாரும் வர முடியாது…” என ஆணித்தரமாகக் கூறிட, காதல் மயக்கத்தில் இருந்தவள் “ம்ம் சரி… எப்ப வருவா அரக்கா?” எனக் கேட்டாள் அவன் பிரிந்து செல்வதை தாள இயலாமல்.

“ஈவ்னிங்குள்ள வந்து உன்னை இங்க இருந்து கடத்திட்டுப் போய்டுவேன்… ரைட்? பீ சேஃப்!” என அவளது கன்னத்தை தட்டிக்கொண்டு எழுந்திட, “இந்த ஏரியாக்குள்ள எவனும் வர முடியாது யாஷ்” என்றவளின் கூற்றை காதில் வாங்கியபடி தனது உடையை மாட்டினான்.

மீண்டும் அவள் உதட்டில் முத்தமிட்டவன், “லவ் யூ சோ மச்!” என நெற்றியிலும் முத்தமிட, அவளும் முத்தத்தைத் திருப்பித் தந்து அவனை வழியனுப்பி வைத்தாள்.

வெறும் சில மணி நேரங்களிலேயே வாழ்க்கை அழகாக முடியுமா? தனக்காக ஒட்டு மொத்த இலட்சியத்தையும் விட்டு விட்டு வந்திருக்கிறான்… இந்த நேசத்திற்கு ஈடாக தனது நேசம் இருக்குமா? தன்னைத் திருமணம் செய்ய ஆசையாய் கேட்டானே… என்றவளுக்கு அதை மறுத்தது தற்போது கவலையாக இருந்தது.

நிவேதன் இல்லாமல் தனது வாழ்வில் ஒரு நல்லது நிகழ்வது ஏற்றுக்கொள்ளத் தக்கதாக இல்லையென்றாலும், அவனது நேசத்திற்காய் தானும் விட்டுக் கொடுத்தே ஆக வேண்டும் தானே… என்ற எண்ணத்தில் அவனை உடனடியாய் திருமணம் செய்து கொள்ள ஆசை கொண்டாள்.

இந்த எண்ணத்தினூடே குளித்து உடை மாற்றி வந்தவள், “அரக்கா…” என யாஷிற்கு குறுஞ்செய்தி அனுப்ப, “எஸ் டி” என்றான் அவன்.

“நம்ம மேரேஜ் பண்ணிக்கலாம். நிவே வரவும்… அவனுக்காக திரும்ப கல்யாணம் பண்ணிக்கலாம் ஓகே வா?” எனக் கேட்க, அவனிடம் சிறிதாய் ஒரு வியப்பு.

“என்ன மேடம் ஆச்சு திடீர்னு?” கேலி போல யாஷ் கேட்க,

“நீ வேணும் யாஷ்!” என்றாள் ஒற்றை வார்த்தையில்.

அதில் மந்தகாசப் புன்னகை வீசியவன், “நைட்டே எல்லோ ரோப் போட்டு விடவா?” என ஆர்வமாய் கேட்டதில், “அதுக்குன்னு நைட்டேவா… நல்ல நாள் பார்க்கணும். கோவில்ல தான் நடக்கணும். அப்பறம் உன் முறைப்படி சர்ச்லையும் பண்ணிக்கலாம் ஓகேவா?” எனக் கேட்க, “டபிள் ஓகே…” என முத்த ஸ்மைலியைப் பறக்க விட்டான்.

இருவரின் முகமும் பூரிப்பில் மிளிர்ந்தது.

மாலை நேரமாக, பக்கத்து தெருவில் எப்போதும் அவள் செல்லும் முருகன் கோவிலுக்குச் செல்ல தோன்றியது.

நிவேதனுடன் ஒவ்வொரு வாரமும் தவறாமல் சென்று விடுவாள். இங்கு திரும்பி வந்ததில் இருந்து முருகனை டீலில் விட்டதில் தற்போது அவரை சமாதானம் செய்யும் பொருட்டு கீழிறங்கிச் சென்றாள்.

யாஷ் சொன்னது போல இரண்டு கார்களில் அவளுக்கு பாதுகாவலர்கள் நின்றனர்.

நடேசனும் பரமேஸ்வரியும் உறவினரின் திருமண விழாவிற்குச் சென்றதால் அவர்கள் கண்ணில் இவையெல்லாம் படவில்லை.

கோவிலுக்குச் செல்லும் பொருட்டு கீழிறங்கி வந்தவளைத் தடுத்தனர் அவளது பாதுகாவலர்கள்.

அவர்களை மிரட்சியாய் பார்த்தவள், “பக்கத்து தெருவுல இருக்குற கோவிலுக்குத் தாங்க போறேன்” என்றிட, அவர்களோ காரில் தான் செல்ல வேண்டுமென முடிவாய் கூறியதில் அவர்களுடனே சென்றாள்.

அவளைத் தெருவே வேடிக்கைப் பார்க்க, ‘ஐயோ இவனுங்களுக்கு வேற பதில் சொல்லணுமே’ என்ற கவலை வேறு அவளுக்கு.

மாலை தாண்டிய வேளையில் மீண்டும் யாஷ் பிரஜிதன் அவள் வீட்டிற்கு வர அங்கு யாருமே இல்லாததை உணர்ந்து, பாதுகாலவர்களுக்கு அழைக்க, அவர்கள் விவரம் கூறியதும் கோவிலுக்கு விரைந்தான்.

கோவில் வாசலில் நின்றிருந்த தனது ஆள்களைக் கண்டு பற்களைக் கடித்தவன், “நீங்களும் அவள் கூட உள்ள போக வேண்டியது தான?” எனக் கடிந்து விட்டு கோவிலுக்குள் சென்று அவளைத் தேடினான்.

எங்கும் காணவில்லை. அலைபேசியில் அழைத்த வண்ணம் இருந்தான். அவள் எடுக்கவுமில்லை.

ஆஹிலுக்கு அழைத்தவன், “நிதுவோட நம்பர் ட்ரேஸ் பண்ணு. ஃபாஸ்ட்” என உத்தரவிட, ஐந்தே நிமிடத்தில் ஆஹில்யன் அழைத்தான்.

“கோவிலுக்குள்ள தான் காட்டுது பாஸ்…”

“ஷிட்… நிது பிக்கப் பிக்கப்” என மீண்டும் கோவிலைச் சுற்றி அலசியவனுக்கு அங்கு சிசிடிவி கூட இல்லாததில் தலை வலித்தது.

மீண்டும் அவளைத் தேடி வீட்டிற்கு விரைய, அப்போது கதிரவன் வேலை முடித்து திரும்பி இருந்தான்.

யாஷ் பிரஜிதனைக் கண்டு திகைத்தவன், ‘ஐயோ இவனா’ என மிரண்டு “சார் சார்… மறுக்கா மறுக்கா நடிக்க கூப்பிடாதீங்க” எனக் கெஞ்சினான்.

“ப்ச்… நிதர்ஷனா எங்க?” எனக் கேட்டான் எரிச்சலாக.

“அவள் வீட்டாண்ட தான் இருப்பா…” என அவனும் வீட்டில் தேடி விட்டு வந்து “அவளைக் காணோமே” எனப் பதறினான்.

“நிது…” எனத் தலையைப் பிடித்துக் கொண்ட யாஷ் பிரஜிதனுக்கு இதயத்தில் எழுந்த பயத்தையும் பரிதவிப்பையும் வார்த்தையால் விளக்க இயலவில்லை.

அந்நேரம் கதிரவனே “சார் அவள் வந்துட்டா” என எதிரில் காட்ட, அங்கு நிதர்ஷனா தான் நடந்து வந்து கொண்டிருந்தாள்.

அவளைக் கண்டதும் வேகமாக அவளருகில் சென்ற யாஷ் பிரஜிதன், “எங்கடி போய் தொலைஞ்ச” என அதட்ட, “கோவிலுக்குத் தான் அரக்கா…” என்றவள் சொல்லும்போதே தலையைப் பிடித்துக் கொண்டாள்.

“வாட் ஹேப்பண்ட்?” யாஷ் கேட்கும்போதே, உணர்வின்றி மயங்கிச் சரிந்தாள்.

கதிரவனும் யாஷ் பிரஜிதனும் ஒன்றாக அவளைப் பிடித்துக் கொள்ள, கதிரவனோ “ஐயோ என்னாச்சு இவளுக்கு… நிதா நிதா எந்திரி…” என எழுப்ப, அவளிடம் அசைவே இல்லை.

அதிர்வின் பிடியில் இருந்த யாஷ் பிரஜிதன், அவளது உடலில் காயம் எதுவும் இருக்கிறதா என ஆராய ஒன்றுமே இல்லை.

ஆனால் அவளது மூச்சு சீரற்று வருவதை அறிந்து கொண்டவனுக்குள் பலவித கலவரம். அவளை அள்ளிக்கொண்டு அவசரமாக மருத்துவமனைக்கு விரைய, அவர்களோ மூளை சிறிது சிறிதாக செயலிழக்கிறதாக காரணம் கூறி அவளைத் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்து உயிர் காக்கும் உபகரணங்கள் பொறுத்த, கதிரவனுக்கு உயிரே இல்லை.

“சார்… அவள் நல்லாதான வந்துட்டு இருந்தா… அவளை என்ன சார் செஞ்சீங்க?” எனப் பயத்துடன், யாஷ் தான் ஏதோ செய்து விட்டானென நியாயம் கேட்க, யாஷ் பிரஜிதனின் உயிர் தான் எப்போதோ அவளுடன் சென்று விட்டதே!

அதை அறியாமல் கதிரவன் அழுதபடி ஏதேதோ பிதற்ற, மெல்ல மெல்லமாய் சிதைந்து கொண்டிருந்த ஆடவனின் காதல் வழிந்த இதயத்தில் இருந்து குருதி வழிந்தது, ரணமாய்.

அன்பு இனிக்கும்
மேகா

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
20
+1
194
+1
3
+1
8

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments

    1. hapya poitdu irunthuchu suddenly ipadi feel pana vatchudinkale sister 😢