Loading

“எனக்கு ஏன் எல்லாம் ஏற்கனவே நடந்த மாதிரியே ஒரு ஃபீல் வந்துச்சு. ஆனா முழிச்சு பார்த்தா கனவு!” மண்டையை உடைத்து கடந்த ஒரு மணி நேரமாக யோசித்துக் கொண்டிருந்தாள் நிதர்ஷனா.

இறுகிய முகத்துடன் அவளெதிரில் டைனிங் டேபிளில் அமர்ந்திருந்த யாஷ் பிரஜிதன், “கனவுல என்ன வந்துச்சு?” எனக் கேட்க, அவனைக் காதலிப்பதாக வந்ததை எப்படி கூற இயலும். தன்னை எலிசாவின் உதவியுடன் புதைத்து விடமாட்டானா!

அதில் திணறியவள், “ஸ்டார்டிங்ல நான் யோசிக்கிறப்ப, நீங்க வேணும்னே இதெல்லாம் திரும்ப செய்ற மாதிரி இருந்துச்சு. அப்பறம் போக போக கனவா மாறிடுச்சு. க்ளியர் விஷன் இல்ல…” எனத் தப்பிக்க எண்ணி சின்னப் பொய்யுடனே எழுந்தாள்.

அழுது அழுது சிவந்த கண்களோடு கதிரவன் வெளியில் வந்தான். அவனை முறைத்து வைத்தவள், அவனிடம் பேசாமல் நகர எத்தனிக்க, கதிரவன் அவள் கையைப் பிடித்தான்.

“சாரி நிதா. என்னை இன்னும் நாலு அடி கூட அடி. ஆனா இப்படி பேசாம இருக்காத. கஷ்டமா இருக்கு. அவனுக்கு என்ன ஆச்சோன்னு பதறிட்டு வருது…” என்றான் அழுகுரலில்.

கதிரவனின் கண்ணீர் அவளை அசைக்க, “சரி சரி ரொம்ப ஒப்பாரி வைக்காத. விடு!” என்று சற்றே கோபம் தணிந்தாள்.

பின், மீண்டும் அவள் அறைக்குச் சென்றவுடன் கதிரவன் தயங்கி தயங்கி யாஷ் பிரஜிதனின் எதிரில் அமர, அவனோ தனது பளிங்கு விழிகளால் ஆடவனைச் சுட்டெரித்தான்.

“உன்னைப் படிச்சு படிச்சு சொன்னேன் தஞ்சாவூர் வர வேணாம்னு. வந்தாலும் ரூம விட்டு வராதன்னு சொன்னேனா இல்லையா?” யாஷ் பிரஜிதனின் குரலில் சீறல் அதிகரித்தது.

“சாரி சாரி யாஷ். நிவேவோட பாடியைத் தேடி போற அளவுக்கு போய்ட்டன்னு தெரிஞ்சதும் ரொம்ப பயமாகிடுச்சு.”

“ஃபூல். இதெல்லாம் ஆல்ரெடி நடந்ததுன்னு சொல்லிட்டேன் தான. அப்பறம் என்ன புதுசா பதறுற. அவளுக்கு ஃப்ளோவா நடந்ததை ரீகிரியேட் பண்றப்ப, அவளை எமோஷனல் ஆக்கி, இப்ப கொலாப்ஸ் பண்ணி வச்சுட்ட. இடியட்!” எனப் பொரிந்து தள்ளினான்.

தான் சொதப்பி விட்டது புரிந்ததும் கதிரவனின் கண்களில் கண்ணீர் நிறைந்தது.

“இப்ப என்ன செய்றது யாஷ்? நான் வேணும்னு பண்ணல. சாரி யாஷ். நிவேவை பத்தி பேசுனதும் எமோஷனல் ஆகிட்டேன்.”

“இப்படி தான் மருதாணி வைக்கிறப்பவும் இடைல வந்து சொதப்பிவிட்ட…” எனும்போதே அவளுக்கு உடைமாற்றிய நினைவில் மெல்லக் கோபம் அகன்றது.

“பட் ஓகே அதுல ரொம்ப சொதப்பல…” என முணுமுணுத்துக் கொண்டவனை விநோதமாகப் பார்த்த கதிரவன், “நிவேக்கு ஒன்னும் ஆகாது தான?” எனக் கேட்டான்.

“அதெப்படி ஆகமா இருக்கும். கண்டிப்பா ஏதோ ஆகியிருக்கும்…” யாஷ் தீர்மானமாகக் கூறியதில் மீண்டும் கண்ணீர் வடித்தான்.

“அட ச்சீ அழுகுறத நிறுத்து. இப்ப வர அவன் பாடி கிடைக்கல. அது மட்டும் தான் நல்ல விஷயம். பட் பாடி கூட கிடைக்கல. இட் ஆல்சோ அ பேட் நியூஸ்” என்றவனைப் ‘பே’ வெனப் பார்த்தவன், “என்ன உளறுறான்னே புரிய மாட்டுதே… புரிஞ்ச மாறிக்க தலையாட்டி வைப்போம்” என்று எல்லா பக்கமும் ஆட்டினான்.

“இப்ப எனக்கு ஒரு சந்தேகம்…” கதிரவன் ஆரம்பிக்க, “என்ன?” எனப் பார்த்தான் யாஷ்.

“அதாவது, இவளுக்கு எல்லாம் ஞாபகம் வந்துடுச்சா இல்லையா? ஞாபகம் வந்தா வந்துச்சுன்னு சொல்லணும். இல்லன்னா இல்லன்னு சொல்லணும். இவள் என்னவோ கனவுன்னு பினாத்திட்டு இருக்கா. ஒன்னும் புரியலையே!” என நெற்றியைத் தட்டிச் சிந்தித்தான்.

“எனக்கும்… பட் இதுல எதிர்பார்க்காத ஏதோ ஒன்னு இருக்கு!”

“ஒன்னு மட்டும் தான் இருக்கா?” கதிரவன் அவனை ஒரு மாதிரியாகப் பார்க்க, “ம்ம்ஹும் பல விஷயம் இருக்கு. எப்படி… எப்படி… எந்த பெரிய ஹெட்டும் தலையிடாம நிவேதன் விஷயத்துலயும் சரி, நிது விஷயத்துலயும் சரி, வெறும் அடியாளுங்க, கூலிக்கு வேலை பாக்குற ஆளுங்க தான் சிக்குறாங்க. சிலர் என்கிட்ட அடிவாங்கி செத்தும் போய்டுறானுங்க. ஒரு லீட் கூட கிடைக்காம எப்படி இருக்கும்… ஷிட்!” என முகத்தை அழுந்தத் தேய்த்துக் கொண்டதில் ஏற்கனவே சிவந்திருந்த வதனம் இரத்த சிவப்பானது.

“ஹௌ எவர்… என்கிட்ட மாட்டுறப்ப இருக்கு” எனும்போதே அவனது ஹேசல் நிற விழிகளில் நெருப்புப்படலம் உதயம் ஆனது.

“ஆத்தி… சரி சரி. உங்க ஃபயர கொறைங்க. வீடு தீப்பிடிச்சுட போகுது. ஆல்ரெடி எல்லாம் கரண்ட்ல ஓடிட்டு இருக்கு…” என மிரண்ட கதிரவன் அறைக்குள் ஓடி விட்டான்.

நெற்றியைத் தேய்த்தபடி அமர்ந்திருந்த யாஷ் பிரஜிதனின் நினைவலைகள், அவன் இத்தாலிக்குச் சென்ற பிறகான நாள்களில் பயணித்தது.

கடந்த காலம்:

இத்தாலிக்குச் சென்றதும், சிரிப்பைத் தொலைத்த யாஷ் பிரஜிதன் அடுத்தடுத்து அவனை மூழ்கடித்த வேலைகளுக்குள் புதைந்தான்.

உண்ணவும் உறங்கவும் நேரமின்றி அவனது நாட்கள் கரைய, அரசாங்க அனுமதியுடன் அவன் தயாரித்த செயற்கை நுண்ணறிவு ரோபோவை விண்வெளிக்கு செலுத்த வேலைகள் நடந்து கொண்டிருந்தது.

இதற்கிடையில், வரதராஜனும் ரித்திகாவும் இத்தாலிக்கு வந்து விட, “வெல்கம்டா” என்று நண்பன் மற்றும் தனது தொழிலின் அங்கமானவரை வரவேற்றார் அலெஸ்சாண்டரோ மோரெட்டி.

“ஹாய் அங்கிள் ஹொவ் ஆர் யூ?” ரித்திகா அவரிடம் நலம் விசாரிக்க,

“குட் குட் டியர்…” என்றவர், “வ்ரதா… மேரேஜ் டேட் ஃபிக்ஸ் பண்ணிடலாம் தான?” எனப் பேச்சைத் தொடங்கியதும், அந்த உரையாடலில் கலந்து கொள்ள விருப்பமின்றி, யாஷைத் தேடித் சென்றாள்.

இரவு முழுதும் லேபில் இருந்தவன், அன்று காலையில் தான் வீடு திரும்பி குளிக்கச் சென்றிருந்தான்.

இத்தாலி வந்த ஒரு வாரத்திற்குப் பின், வீட்டிற்கே இப்போது தான் அவன் வருகிறான்.

குளித்து முடித்து வந்தவன், “ஆலம்பனா ஹங்கிரிடி…” எனப் பேசியபடி வர, கட்டிலில் கால் மேல் கால் போட்டு அமர்ந்து ஏதோ ஒரு நாளிதழைப் புரட்டிக் கொண்டிருந்த ரித்திகா, ஆடவனை நிமிர்ந்து பார்த்தாள்.

“என்ன மேன்… ஆலம்பனாவை வைஃப் ரேஞ்சுக்கு ட்ரீட் பண்ணிட்டு இருக்க?” அவள் நக்கலாகக் கேட்டதும் பிறகே, தான் இருக்கும் இடத்தையே உணர்ந்தான்.

‘ஆலம்பனா’ என அழைத்தது அவனது உயிரில் கலந்தவளை அல்லவா?

அவள் இங்கில்லை என்ற உண்மையே அவனை சோர்வடையச் செய்தது.

“இவ்ளோ பெரிய வெற்றி கிடைச்சிருக்கு. இப்பவும் இதே ரியாக்ஷன் தான் குடுப்பியாடா…” ரித்திகா மேலும் பேச, தானாய் நிதர்ஷனாவின் எண்ணமே வழிந்தோடியது.

நொடிக்கு நொடிக்கு, முக பாவனைகள் காட்டும் மனதை அமைதியாக்கும் முகம். ‘உன்னைப் பார்த்தாலே பிடிக்கல…’ என்றவனின் உள்நெஞ்சம் எப்போதிருந்தது அதைப் பிடித்தமாக்கியது என அவனே அறியான்.

யாஷிடம் நான்கு கேள்விகள் கேட்டால், ஒரே கேள்விக்கு தான் பதில் வரும் என அறிந்தவளானதால், அவனிடம் இருந்து பதில் வராததில் ஆச்சர்யம் கொள்ளவில்லை.

“சரிப்பா… எனக்குத் தேவையில்லாத கேள்வி எல்லாம் கேட்கல. நெக்ஸ்ட் பிளான் என்ன? நம்ம மேரேஜ் டேட் ஃபிக்ஸ் பண்ணிடலாம் தான?”

“ம்ம்!”

“ஆர் யூ ஆல்ரைட் யாஷ்?”

“ஐ திங்க் சோ!” என்றவன் மெத்தையில் அவளருகில் அமர்ந்து கொண்டான்.

“என் டேடியும் உன் டேடியும் மேரேஜ் பத்தி பேசுறாங்க…”

“ஃபைன்!”

“மேரேஜ் பண்ணிட்டு டைவர்ஸ் பண்ண நம்ம பேரண்ட்ஸ் ஓகே சொல்லுவாங்களா யாஷ்?”

“என் பப்பா என்னைக் கேட்டா டைவர்ஸ் பண்ணாரு?” அசட்டையுடன் கூறியவனை பெருமூச்சுடன் ஏறிட்டாள்.

“உனக்கு ஹெல்த் ஓகேவா?” யாஷ் கேட்க,

“டேய்!” என முறைத்தாள்.

அதில் சின்னதாகப் புன்னகைத்தவன், “த்ரீ ஃபோர் மந்த்ஸ்ஸா பெட் ரெஸ்ட் எப்படி இருந்துச்சு?” எனக் கேலியுடன் கேட்டதில், அவன் மீது தலையணையைத் தூக்கி எறிந்தாள்.

“இல்லாத நோய இருக்குற மாதிரி நடிக்க எவ்ளோ கஷ்டம் தெரியுமா…” அவள் பரிதாபமாகக் கூற,

“உன் சேஃப்டிக்கு தான் ரித்தி. இல்லனா உன் டேடி எனிமீஸ் உன்னை டைரக்டா ஹெவன்க்கு அனுப்பி இருப்பாங்க” என்றான் நக்கலாக.

“கரெக்ட் தான். நம்ம மேரேஜும் தள்ளிப் போச்சு. உன் ரிசர்ச்சும் நல்லபடியா முடிஞ்சுது. அப்பாட்ட சேர்மன் போஸ்ட்ட வாங்கிடு. உனக்குத் தண்ணி காட்டிட போறாரு” அவள் எச்சரிக்கையாகக் கூற,

இன்டர்காமில் அலெஸ்சாண்டரோ அழைத்தார்.

“ரெண்டு பேரும் கீழ வாங்க…”

“ரெண்டு ஓல்ட் பீசும் நம்மளை அடகு வைக்க முடிவு பண்ணிடுச்சுங்கடா…” புலம்பியபடி ரித்திகா கீழிறங்கி வர, அவளது கூற்றில் புன்னகைத்தபடி யாஷும் அவளைத் தொடர்ந்தான்.

“ஹாய் அங்கிள்” வரதராஜனை யாஷ் வரவேற்றதும்,

“இந்தியா எப்படி இருந்துச்சு யாஷ்?” என வினவினார்.

நிதர்ஷனாவின் நினைவில் தானாய் இதழ்கள் மலர, “ஆஸம் எக்ஸ்பீரியன்ஸ்…” என உணர்ந்து கூற, ரித்திகாவே அவனை மேலும் கீழுமாகப் பார்த்தாள்.

ஏற்கனவே அவனது திட்டப்படி வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து, அது ரித்திகா என எதிராளிகளை நம்ப வைத்திருக்கிறான் எனத் தெரியும். அந்தப் பெண்ணுடன் ஒரே வீட்டில் தான் இத்தனை மாதங்கள் இருந்திருக்கிறான். அந்த நினைவில் தான் இதனைக் கூறுகிறானோ என எண்ணும் போதே வரதராஜனின் முகம் சிறுத்தது.

அலெஸ்ஸாண்ட்ரோவோ, “இங்க மெஷினோட இருந்துப் பழகி, புதுசா ஒரு பொண்ணோட இருக்கவும் அவனுக்கு டிஃபரென்ட் எக்ஸ்பீரியன்ஸா இருந்துருக்கும் வ்ரதா… ஆம் ஐ ரைட் யாஷ்?” எனக் கேட்க,

“மே பி” என்றவன் பதில் ஏதும் கூறவில்லை.

‘குட் பேமிலி!’ ரித்திகா வாய்க்குள் முணுமுணுத்துக்கொள்ள, வரதராஜனுக்கோ அந்தப் பெண்ணுடன் இவன் வாழ்ந்திருந்தால் என்ற சந்தேகம் வேறு வந்தது.

அதனை தனக்குள் விழுங்கிக்கொண்டு “இன்னும் ஒரு வாரத்துல நல்ல டேட் இருக்கு யாஷ். அன்னைக்கே சேர்மன் இன்னாகுரேஷன் வைக்கலாம். அன்னைக்கு ஈவ்னிங் உங்க மேரேஜ். அடுத்த நாள்ல இருந்து நீ சிஇஓவா இல்ல, சேர்மனா ஆபிஸ்க்கு வரலாம்…” என்றிட, “தட்ஸ் ஃபைன்!” என்றதோடு முடித்துக்கொண்டான்.

அவருக்கும் தெரியும். இந்த சேர்மன் பதவி அவனுக்கொன்றும் பெரிய விடயமல்ல என்று. இன்னும் டாப் கம்பெனிகளில் இருந்து இவனை வளைத்துப் போட்டுக்கொள்ள பல நாடுகளில் இருந்தும் ப்ரோபோசல்கள் வந்து கொண்டிருக்க, எலைட் நிறுவனத்தில் போட்ட கடின உழைப்பை அவன் அத்தனை சீக்கிரம் விட்டுச் செல்ல மாட்டான் என்ற தைரியத்தில் தான், மகளைக் கட்டிக்கொள்ளும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் சேர்மன் பதவியைத் தருகிறார் வரதராஜன்.

அவனது தாய் தந்தை இருவராலும் தொடங்கப்பட்ட நிறுவனம். நியாயமாக அவனுக்கே அதிக உரிமை இருக்கிறது. ஒரு கட்டத்தில் அலெஸ்ஸாண்ட்ரோ பெண்களின் மயக்கத்தில் தொழிலை அலட்சியப்படுத்த, ஆதிசத்தி சொந்த வாழ்க்கை தந்த அடியால் விலகிக் கொள்ள, வரதராஜன் தூக்கிப் பிடித்தார். ஆனால், ஒரு நிலைக்கு மேல் அவரால் தொடர இயலாத நிலையின் போது தான் யாஷ் பிரஜிதனின் வரவில் மீண்டும் உச்சம் தொட்டார்.

வரதராஜன் கிளம்பும்போது அலெஸ்சாண்ட்ரா காதில் எதையோ கூறி விட்டுச் செல்ல, யாஷ் இருவரையும் கூர்மையாகப் பார்த்தான்.

பின் அவனிடம் சொல்லிக்கொண்டு கிளம்ப எத்தனிக்க, ரித்திகா “நீங்க போங்க டேடி. நான் யாஷ்ட்ட பேசிட்டு வரேன்…” என்றதும், “கல்யாணத்துக்கு அப்பறம் பேசிட்டு தான இருக்கப்போறீங்க…” எனக் கிண்டல் செய்து விட்டு வெளியேறினார்.

“இந்த டீஃபால்ட் டயலாக்கை எந்த நாட்டுக்குப் போனாலும் விட மாட்டாங்க போல” ரித்திகா யாஷிடம் முணுமுணுக்க, “டாக்சிக் டேடிஸ்!” என்றான் நக்கலாக.

பின் ரித்திகாவுடன் அலுவலகம் செல்வதற்காக கிளம்ப மீண்டும் அறைக்கு வந்தவனைத் தேடி வந்தார் அலெஸ்.

“யாஷ்!” என்றவரை டையை மாட்டியபடி என்னவெனப் பார்த்தான்.

“நீ தட் கேர்ள்ளோட சேஃப்டி ப்ரொடெக்ஷனோட தான இருந்த? நாளை பின்ன ப்ராப்ளம் பண்ணிடப் போறா தட் தமிழியன் கேர்ள்”

ஏற்கனவே அவனுள் நிதர்ஷனாவின் நினைவுகள் குடைந்து கொண்டிருக்க, தந்தையின் கேள்வியில் புன்னகைத்தான்.

அப்புன்னகை பல பதிலைத் தந்தது அவருக்கு.

“யாஷ்?” கண்டனத்துடன் அலெஸ் அழைக்க,

“தட்ஸ் நன் ஆஃப் யுவர் பிசினஸ் பப்பா!” என்றான் வெடுக்கென.

அதில் கோபம் வந்தாலும் பொறுமை காத்தவர், அமைதியாக நகர்ந்து விட்டார்.

முதலில் நிதர்ஷனாவின் பிரிவை ஏற்றுக்கொள்ள முற்பட்டவனுக்கு, புரியவில்லை இது அத்தனை கடினமாய் இருக்குமென்று.

நாள் செல்ல செல்ல ஒருவரின் ஞாபகங்கள் மறந்து போவது தானே நியதி. இங்கோ, நாள்கள் கரைய கரைய அவனுள் ஊறிய பெண்ணவளின் நேசம் மேலெழும்பித் தள்ளாடியது.

அதன் விளைவால், அவனால் அவளைத் தாண்டி தொழிலில் கவனம் செலுத்த இயலவில்லை. மைண்ட் செட் இல்லையென மீட்டிங் அத்தனையையும் கேன்சல் செய்தான்.

நிதர்ஷனாவைப் பார்க்க வேண்டும் போல இருக்க, அவளுக்கு வீடியோ கால் செய்ததில் அவள் அழைப்பை ஏற்கவில்லை.

மூன்று முறை முயன்றும் அவளிடம் இருந்து பதில் வராது போக, மெல்ல இதயத்தின் துடிப்பு அதிகரித்தது.

உடனடியாக ஆஹில்யனுக்கு அழைக்க எத்தனித்தவனின் பதற்றத்தைத் தணிக்கும் பொருட்டு, அவளே மீண்டும் அழைத்தாள்.

“என்னடி செஞ்சுட்டு இருக்க கால் எடுக்காம?” அடிக்குரலில் கர்ஜித்தான்.

“குளிச்சுட்டு இருந்தேன் யாஷ். போன் அடிக்கவும் அவசரமா வந்தேன். என்னாச்சு… எதுக்கு கால் பண்ணுனீங்க?” எனக் கேட்க,

“கால் பண்ண ரீசன் சொல்லணுமா?” என்றவனின் கேள்வியில் அவளிடம் அமைதி.

பின், “டேட் ஃபிக்ஸ் பண்ணியாச்சா?” மெல்லமாக நிதர்ஷனா கேட்க,

“ம்ம்… கமிங் சண்டே” என்றான்

“இன்னும் நாலு நாள் தான் இருக்கு. கல்யாணத்துக்கு எல்லாம் ரெடி பண்ணிட்டீங்களா?” கேட்டவளின் குரல் உள்ளே சென்றது.

“பப்பா பாத்துப்பாரு. நான் ஜஸ்ட் போனா போதும். உன் ஜாப் என்ன ஆச்சு?”

“அடுத்த வாரம் ஒரு இன்டர்வியூ இருக்கு. ப்ரிப்பேர் பண்ணிட்டு இருக்கேன். நிவே பத்தி ஏதாச்சும்?”

அவனைப் பற்றிய ஒரு தகவல் இருப்பினும் அதனைத் தற்போது பகிர மனமின்றி, “கிடைச்சா சொல்றேன்” என்றான்.

“இத்தனை மாசம் ஆகிடுச்சு யாஷ்… கிடைக்கவே மாட்டானோன்னு இருக்கு!” தழுதழுத்த குரலில் மெலிதாய் ஒரு வேதனை.

“நிது!” அவளைச் சமாதானம் செய்ய முற்பட, அவளே ‘ச்சே… கல்யாண தேதி சொல்ல போன் பண்ணவருட்ட நம்ம சோகக்கதையை சொல்லிட்டு இருக்கோம்’ என உணர்ந்து, “அதை விடுங்க… சேர்மன் ஆகுறப்ப போட்டோஸ் எல்லாம் அனுப்பி விடுங்க” என்றாள்.

“வெடிங் போட்டோஸ் வேணாமோ?”

கீழுதட்டை அழுந்தக் கடித்தவள், “எல்லாமே அனுப்புங்க” என்றிட,

“இன்னும் நீ கடன் வாங்கலையா யார்ட்டயும்” என்றான் கிண்டலாக.

“யோவ் அரக்கா!” கடுப்பாய் நிதர்ஷனா திட்ட, “போடி கடன்காரி…” எனச் செல்லமாய் திட்டி விட்டு அழைப்பைத் துண்டித்தவன் சுழல் நாற்காலியில் அங்கும் இங்கும் சுழன்றான்.

மடிக்கணினியில் அவளது புகைப்படத்தை அளவிட்டபடி அமர்ந்திருந்தவனுக்குள் ஆழிப்பேரலைகளின் தாக்கம்.

அந்நேரம் சரியாக அலெஸ்ஸாண்ட்ரோ அங்கு வந்து விட்டவர், புகைப்படத்தைப் பார்த்ததும் முகம் கறுத்தது.

“இவள் அந்த தமிழ் பொண்ணு தான?” அவர் கேட்க, அவரிடம் மறைக்கவெல்லாம் முற்படாதவன், “எஸ்” என்றான்.

“நீ போட்டோ ஒபன் பண்ணி பாக்குற அளவு, நாட் ஒர்த்” நிறம் மங்கி இருந்தவளைப் பார்த்து அவருக்கு ஈர்ப்பு தோன்றவில்லை.

யாஷ், அவரைத் திரும்பி பார்வையால் ஒரு முறை எரித்ததில், “உனக்கு அவளை பிடிச்சுருக்கு ரைட்?” எனக் கேட்டார் கேலியாய்.

மகனிடம் பதிலின்றி போக, அந்த அமைதியில் பதிலை உணர்ந்து கொண்டவர்,

“லுக் அட் மீ யாஷ். நமக்கு தமிழ் பொண்ணுங்க தான் வீக். நானும் அப்படி தான் உன் மம்மாட்ட விழுந்தேன். ஷீ வாஸ் ஆல்வேஸ் மை வீக்னஸ். பார்க்கலாம், ரசிக்கலாம்… பெட் ஷேர் பண்ணிக்கலாம். அதோட நிறுத்திக்கணும். அதுக்கு மேல போகணும்னு நினைச்சா… மிஞ்சிப்போனா ஒரு ரெண்டு வருஷம் அவள்கூட உன்னால வாழ முடியுமா? அவ்ளோ தான். அவள் உனக்கு சலிச்சுடுவா யாஷ். நம்ம லைஃப் ஸ்டைல் வேற. நம்ம ஸ்டேட்டஸ் வேற. உனக்கு அவள் மேல இன்டரஸ்ட் இன்னும் போகலைன்னா, ஜஸ்ட் என்ஜாய் ஹெர். இங்க வரவைக்கிறேன். உன் லைஃபை என்ஜாய் பண்ணு. அதை விட்டுட்டு ரொம்ப ஹார்ட் பீலிங்ஸ் உனக்கு தேவை இல்ல. உன்னால லைஃப் டைம் அதே ஹார்ட் பீலிங்ஸோட வாழ முடியாது. திஸ் இஸ் மை பீஸ் ஆஃப் அட்வைஸ்…” என அவனது மனதினுள் கலகத்தை உருவாக்கிச் சென்றார்.

நிதர்ஷனாவைத் தன்னுடனே வைத்துக் கொள்ள இந்தியாவிலேயே தோன்றியது தான். ஆனால் அலெஸ் சொன்னது போல, உள்ளார்ந்த உணர்வாக அவன் எடுக்கவில்லை.

அவள் முற்றிலும் வேறு. தனது ஆபத்து நிறைந்த உலகத்தினுள் அவளை இழுக்க விருப்பப்படாதவன், முயன்ற மட்டும் அவளை மனதில் இருந்து தள்ளியே வைத்தான்.

ஆனால் தற்போது இயலவில்லை. அவளது வாசம் கேட்டு அடம்பிடித்தது அவனது கூர்நாசி. அவளது பேச்சைக் கேட்க தவமிருந்தது சிவந்த செவிகள்.

தன்னை எதிர்த்து வாதாடி முறைக்கும் அந்த அழகு முகத்தைக் காண ஏங்கியது அவனது கலப்படக் கண்கள்.

“மிஸ் யூ டி!” இதழ்கள் முணுமுணுக்க, மேஜை மீது கையை ஊன்றி நெற்றியில் கை வைத்தான்.

இதற்கெல்லாம் பெயர் காதல் என்றால், அந்தக் காதலுக்காக அவன் கனவுகளை இழக்கும் துணிவு வேண்டும் எனப் புரிந்தது.

அவசரமாக மீண்டும் நிதர்ஷனாவிற்கு அழைத்தான்.

“சொல்லுங்க யாஷ்?”

“நான் உன்கூட இல்லைன்னு உனக்கு பீலிங்ஸ் இல்லையாடி?” ஆர்வமாக அவன் கேட்கும் தொனி புரியாதவளாய், தன்னைக் காட்டிக்கொள்ள விருப்பமற்று,

“ச்சே… ச்சே! உன் இம்சைல இருந்து தப்பிச்சு தினமும் வாய்க்கு ருசியா கருவாட்டுக் குழம்பும் மீன் வறுவலும் சாப்பிட்டு ஜெகஜோதியா இருக்கேன்யா. உன் ரோபோ ரூல்ஸ்ல தப்பிச்சு வந்ததும், இங்க பாக்குற எல்லாரும் மனுசங்க மாறிக்க இருக்காங்க. சுதந்திர காற்றை சுவாசிக்கிறேன்…” என ஆழ்ந்து அனுபவித்துக் கூற, வெடுக்கென அழைப்பைத் துண்டித்தவனின் முகம் கடுகடுத்தது.

‘அப்போ இந்த வலி எல்லாம் எனக்கு மட்டும் தான்ல…’ என்ற ஆதங்கம் மிக, மேஜையில் நங்கெனக் குத்தியவன் அறியவில்லை, அமைதியாய் பாவையவள் வெளியிட்ட கண்ணீரை.

என்னவோ, அன்பைத் தேடி அன்பிற்காக யாரிடமும் அடிபணியாதவன், தன்னை ஒரு பொருட்டாகவே எண்ணாதவளிடம் அன்பைக் கேட்டு ஏக்கம் கொண்டான்.

வெளிப்படையாய் கேட்க அவனது ஈகோ தடுத்தது. கேட்டும் கிடைக்காத தாயன்பு போல, அவனது அன்பும் ஆகிவிட்டால்?

அதை விட பெரும் ரணம் எதுவுமில்லை தானே.

எப்போதும் விட பாறையாய் இறுகிப்போனான் அவன்.

ரித்திகாவிடம் கூட முகம் கொடுத்துப் பேசவில்லை. அவனிடம் ஆஹில்யனைப் பற்றி பேச எத்தனித்தவளுக்கு தோல்வியே கிட்ட, திருமணத்திற்குப் பின் நிச்சயம் கூறி விட எண்ணினாள்.

இருவருக்குள்ளும் ஒரு புரிதலின் அடிப்படையில் நிகழப்போகும் திருமணம் இது.

திருமணத்திற்கு இரு நாட்கள் முன்பு. வரதராஜன் யாஷ் பிரஜிதனைச் சந்தித்தார்.

சேர்மன் பதவியேற்கும் விழாவிற்கு பிரெஸ் மீட்டுடன் இணைந்து மேலும் சில நிகழ்ச்சிகள் நிகழ்த்த பணியாளர்கள் விருப்பம் கொண்டுள்ளதாகவும், அதற்காக சிறு ஒத்திகைப் பார்க்க அவனை அழைத்தார். அதற்காக ஆடிட்டோரியம் செல்ல விழைந்தவனின் காதில் விழுந்தது ஒரு தமிழ் உரையாடல்.

அவனது அலுவலத்தில் வேலை செய்யும் ஒரு தமிழ் பெண், “இந்த கலை நிகழ்ச்சில பாட்டுலாம் பாடக் கூடாதா?” என யாரிடமோ தமிழில் கேட்டபடி செல்வதைக் கண்டதும் மீண்டும் அவன் இதயம் நத்தையாய் அவளது நினைவினில் சுருண்டது.

கூடவே, அன்று இரவு அவள் பாடிய பாடலும் ஞாபகம் வந்தது. ஒத்திகைக்குச் செல்ல இன்னும் நேரமிருக்க, மீண்டும் தனதறைக்குச் சென்றவன், அப்பாடலைத் தேடிப் பிடித்துக் கேட்டான்.

முதல் நான்கு வரிகள் புரிந்தது. அதன்பிறகு ‘ரயில் பாதை பூவோடு வண்டுகள் தூங்குவதில்லை’ என்ற வரிகள் புரியவில்லை.

அந்த வெண்ணிலவைப் பார்த்து உணர்ந்து பாடினாளே!

மூன்று நான்கு முறை மீண்டும் மீண்டும் கேட்டதன் பொருட்டு, அந்தப் பாடலின் உள்ளர்த்தமும் அவளது குரலில் ஒலித்த ஏக்கமும் மெல்லப் புரியத் தொடங்கியது.

ஆனால், “வாட்ஸ் தட் ரயில் பாதை…” என சிந்தித்து ஆலம்பனாவிடம் உதவி கேட்க விழைய, சரியாய் அப்போது ரித்திகா உள்ளே வந்தாள்.

“ஹே மேன்… அங்க என் டேடி உன்னைத் தேடிட்டு இருக்காரு. இங்க என்ன ஹெட் போனோட உக்காந்து இருக்க?”

“ரித்தி நீ தமிழ் சாங்ஸ் கேட்ப தான?” யாஷ் பரபரப்பாகக் கேட்டதும், “ம்ம் கேட்பேனே…” என்றபடி அருகில் வந்தவளைக் கைப்பிடித்து அமர வைத்தவன், “இந்த சாங்கோட மீனிங் சொல்லு…” என்று ஹெட் போனை அவள் காதில் மாட்டினான்.

ரித்திகா வளர்ந்தது கல்கத்தாவாக இருந்தாலும், பள்ளி இறுதியில் இருந்து படித்தது எல்லாம் சென்னையில் தான். அங்கு தான் ஆஹில்யனின் அறிமுகமும் கிடைத்தது. அவனது தயவால் தமிழ் எழுத படிக்கவும் கற்றுக்கொண்டாள். தமிழ் பாடல்களைக் கேட்பதும் அவளுக்கு மிகவும் பிடித்த ஒன்று.

“ஹே இந்த சாங் நல்லாருக்கும்” என்றவள், “இது அந்த ஹீரோ ஹீரோயினோட லவ்வ ஏத்துக்க முடியாத சிட்டுவேஷன்ல பாடுறது” என்றாள்.

“ஏன் ஏன் ஏத்துக்க முடியல?” புருவம் சுருக்கி யாஷ் வினவ,

“ம்ம்ம்ம்… அவன் ரொம்ப ஏழை. அந்தப் பொண்ணு ரிச். ரெண்டு பேருக்கும் ஸ்டேட்டஸ் ப்ராப்ளம், கல்ச்சர் ப்ராப்ளம் எல்லாமே ப்ராப்ளம். ஆனாலும் ரெண்டு பேருக்குள்ள ஒரு லவ் வந்துடும். பட் அதை ஹீரோவால எக்ஸ்போஸ் பண்ண முடியாது. சோ அவளை நினைச்சு இதை பாடுவான்.

ரயில் பாதை பூவோடு வண்டுகள் தூங்குவதில்லைன்னா, ட்ரெயின் போற இடம் ரொம்ப சத்தமா, நேச்சரோட அமைதி இல்லாம இருக்கும் தான. அப்படியான இடத்துல இருக்குற ப்ளவர்ஸ் கூட எந்த தேனீக்கும் இருக்க பிடிக்காது தான” என்றவள் முழுதாய் சொல்லி முடிக்கும் முன்னே அவனுக்குப் புரிந்து விட்டது.

“யூ இடியட் கேர்ள்…” எனப் பல்லைக்கடித்து நிதர்ஷனாவைத் திட்டினான்.

கூடவே ஒரு மலர்ந்த புன்னகை அவனிடம். அவளது கண்ணீரின் வீரியத்தை, தான் கொடுத்து வந்த காதல் வலியை தற்போது தான் உணர்கிறான்.

இதற்கு மேல் அவளைத் தவிர்த்து இங்கிருக்க துளியும் அவனுக்கு விருப்பமிருக்கவில்லை. கண்ணை மூடி ஒரு நொடி நிதானித்தவன், அடுத்தடுத்து என்ன செய்ய வேண்டுமென தீர்மானித்துக் கொண்டான்.

அந்தத் தீர்மானம் எடுத்தபிறகே மனம் ஒரு அமைதி நிலைக்கு மாறியது.

“கொல்றடி மின்னல்!” தானாய்ப் பேசிக்கொண்டவனை அரண்டு பார்த்த ரித்திகா “என்னடா ஆச்சு?” எனக் கேட்க,

அவளது கையைப் பிடித்து நெஞ்சில் வைத்துக்கொண்டவன், “யூ ஆர் மை சுவீட் ப்ரெண்ட் ரைட்?” என்றான் பாசமாக.

“ம்ம் சுவீட்டு தான் சுவீட்டு தான். என்ன அதுக்கு?”

“இந்த மேரேஜை கேன்சல் பண்ணிடலாம் பேப்ஸ்” என்றவனைத் திடுக்கிட்டுப் பார்த்தவள், “என்ன சொல்ற யாஷ்?” எனப் புரியாது கேட்டாள்.

“ப்ச், ஐ காண்ட் மேரி யூ பேப்ஸ். ஐ லவ் சம் ஒன்” சொல்லும்போதே தேனாய் இனித்தது அவனுக்கு.

“என்னது?” கையை அவனிடம் இருந்து இழுத்தவள், “என்னடா திடீர்னு உளறுற? யாரு அந்த நிதர்ஷனாவா?” எனக் கேட்டதும், “எஸ்” என்றவனின் இதழ்கள் வெட்கப்புன்னகை சிந்தியது.

“மச்சி… இட்ஸ் வெரி காம்ப்ளிகேடட். நம்ம டேடிஸ்க்கு தெரிஞ்சா, உன்னை இல்ல அவளைத் தான் கொல்லுவாங்க…” என்றதும்,

“இதே விஷயத்துக்காக பயந்து பயந்து ஆஹில டீல்ல விட்டுட்ட, இப்ப என்னையும் அதையே பண்ண சொல்றியா?” என அதட்டினான்.

அதில் அதிர்ந்தே விட்டவள், “உன்… உனக்கு எப்படி தெரியும்?” என மிரண்டு கேட்க,

இதழை ஏளனமாய் வளைத்தவன் “கமான் பேப்ஸ், என்கிட்ட அவனை வேலைக்காக ரெகமண்ட் பண்ணும்போதே ஐ கெஸ். அப்பறம், நம்ம மேரேஜ் பத்திப் பேசும்போது, உன் லவ் பெயின் புரிஞ்சுது. யூ ஆர் மை ஸ்வீட் ஹார்ட். உன்னைப் புரியாதா எனக்கு… என்கிட்ட சொல்லுவன்னு நினைச்சேன். பட் நீ என்னை நம்பல. மேரேஜ் அண்ட் டிவோர்ஸ் தான் கரெக்ட்டுன்னு சொன்னதும், ஐ அக்ரீ” என்றதும் கண்கள் கலங்கிப்போனது அவளுக்கு.

“நம்பாம இல்ல யாஷ். உங்கிட்ட ஒவ்வொரு தடவையும் ஆஹில் பத்தி சொல்ல வருவேன். ஆனா, இது டேடி காதுக்கு போய்ட்டா என்ன ஆகும்ன்ற பயம் தான் எனக்கு. நீ இந்த கம்பெனிக்காக எவ்ளோ ஹார்ட் ஒர்க் பண்ணுனன்னு எனக்குத் தெரியும். நீ சேர்மன் ஆகுறது தான் என்னோட ஆசையும். யூ ஆர் மை ஒன் அண்ட் ஒன்லி சோல்மேட்டா.

உனக்கு ஒரு க்ரோத் கிடைக்கும்போது அதை இடைல புகுந்து தடுக்க முடியல என்னால. அண்ட், நான் வேணாம்னு சொன்னாலும் டேடி என்னை ஃபோர்ஸ் பண்ணுவாங்க. உன்னைத் தவிர வேற யாரை மேரேஜ் பண்ணாலும், கண்டிப்பா சிக்கல்ல முடியும். அதனால தான், நீன்னு சொன்னதும் தைரியமா மேரேஜ் பண்ணிட்டு டிவோர்ஸ் பண்ணிடலாம்னு ஐடியா குடுத்தேன். எப்படியும் நீ என்னைப் புருஞ்சுப்பன்ற நம்பிக்கைல தான். சாரிடா…” என அழுகுரலில் கூறியவளின் தலையைக் கலைத்து விட்டவன்,

“நீ ஒரு விஷயத்தை மறந்துட்ட… ஆஹில் என் நிழல்ல இருக்கான். உன் பப்பாவால அவனோட ஹேரை கூடத் தொட முடியாது. அண்ட் மை ஆலம்பனா இங்க இருக்கா…” எனத் தனது நெஞ்சைத் தொட்டுக் காட்டியவன், “அவளை நெருங்க யாராலும் முடியாது” என்றான் அதீத கம்பீரத்துடன்.

“அது ஓகே… ஆனா எப்படினாலும் இந்த மேரேஜ் நடக்கலைன்னா தேவையில்லாத பிரச்சினை வரும். உனக்கும் நிறைய லாஸ் யாஷ்…”

“ம்ம் புரியுது. சேர்மன் போஸ்டிங் எனக்கு வேணாம்னு முடிவு பண்ணிட்டேன்” என்றவனைத் திகைத்துப் பார்த்தவள் “உளறாத! பெர்சனல் லைஃப் எவ்ளோ முக்கியமோ அதை விட கேரியரும் முக்கியம்” அவளும் அழுத்தமாகக் கூறினாள்.

“அந்த முக்கியத்துவம் அந்த வேலையால அவளை இழக்காத வரைக்கும் தான் ரித்தி. உன்னை மேரேஜ் பண்ணிட்டு டிவோர்ஸ் பண்ணிட்டுப் போனா அந்தக் கடன்காரி என்னை கொன்னுடுவா. மேரேஜ், டிவோர்ஸ் எல்லாம் அவளை பொறுத்தவரை ரொம்பப் பெரிய விஷயம். நம்மளை மாதிரி ஈஸியா ஹேண்டில் பண்ண மாட்டா. ட்ரை டூ ஆண்டர்ஸ்டாண்ட் மீ பேப்ஸ்!”

“பட், டேடி உன்னை டெர்மினேட் பண்ணிட்டா?” மிகுந்த கவலையுடன் ரித்திகா கேட்க, அவனிடம் ஏளனப் புன்னகை.

“உன் பப்பாவை நம்பி நான் இல்ல. என்னை நம்பி தான் எலைட் க்ரூப் ஆப் கம்பெனிஸ் இருக்கு. இந்த முட்டாள்தனத்தை எமோஷனல் பேஸ்ல அவர் எடுத்தாலும், லாஸ் அவருக்கு தான். பிகாஸ் எனக்கு மத்த கம்பெனீஸ்ல இருந்த வந்த ப்ரபோசல்ஸ் அதிகம். என்னோட ரீசன்ட் ரிசர்ச், அடுத்து நான் போற கம்பெனியைத் தான் சேரும்” என்றான் நிமிர்வாக.

“ஐயோ அங்கையும் நீ சி. இ. ஓ வா தான் இருப்ப. பட் நாட் சேர்மன் யாஷ்.”

“தட்ஸ் ஆல்ரைட்!” கண் சிமிட்டிப் புன்னகை செய்தான். லேசாய் வலித்தாலும் காதல் வலியை விட அது ஒன்றும் தன்னை அமிழ்த்தவில்லை.

அவளை விட, அவளது அண்மையை விட இந்த வெற்றிகளும் பதவிகளும் அவனுக்கு சிறிதளவும் மகிழ்வைக் கொடுக்கப் போவதில்லை எனப் புரிந்து கொண்டுவனது பேச்சுகள் தெளிவாய் வெளிவந்தது.

“நீயா மச்சி இது?” வாயில் கை வைத்த ரித்திகாவிடம், “நானே தான். அண்ட், நான் உடனே இந்தியா கிளம்புறேன். நீ என்ன செய்றன்னா, நான் போனது நினைச்சு சோகத்தை டஜன் கணக்குல புழியிற. உன் அப்பாவே நம்பனும் ஓகே வா?” என்றவன் வேக வேகமாக தனது மடிக்கணினி முதற்கொண்டு அனைத்தையும் பேக் செய்தான்.

இங்கிருந்து தற்போது சென்றால், மீண்டும் இந்த அறைக்குள் அவன் வர இயலாது எனப் புரிந்தாலும் அவன் சுணங்கவில்லை.

எங்கிருந்தோ விடுபட்டு சுதந்திரக் காற்றைத் தேடி ஓடுபவன் போல இருந்தது அவனது செயல்கள்.

அவனையே நொந்து பார்த்திருந்த ரித்திகா, “இப்ப என்ன உன் பிளான்?” எனக் கேட்க, “என் ஆலம்பனாவைப் பார்க்கணும். தட்ஸ் மை பிளான்…” என்றான்.

“கல்யாணம் வேணாம்னு சொல்லிட்டு தான போக போற?”

“யெப்!” என்றவன் நேராக ஆடிட்டோரியம் சென்றான்.

அங்கு அலெஸ்ஸாண்ட்ரோவும் வரதராஜனும் மேடையைப் பார்த்து பேசிக்கொண்டு நிற்க, அவர்கள் அருகில் சென்றவன், “உங்க ரெண்டு பேர்ட்டயும் இம்பார்ட்டண்ட் விஷயம் பேசணும்” என்றான்.

அதில் இருவரும் என்னவென பார்க்க, “வெடிங் கேன்சல் பண்ணிடுங்க, அண்ட் இந்த இன்னாகுரேஷன் பிளானையும் ஸ்டாப் பண்ணிடுங்க” என்றிட, இருவரும் அதிர்ந்து நின்றனர்.

“என்ன ஆச்சு யாஷ்?” வரதராஜன் பதற்றமாகக் கேட்க,

“எனக்கு இந்த வெடிங்ல இன்டரெஸ்ட் இல்லை அங்கிள்” என்றான் இயல்பாக. அந்த மனிதர் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு நிற்க, அலெஸ் கண்ணில் கோபம் மின்ன, “தட் தமிழியன் கேர்ள்ள மனசுல வச்சுட்டு தான இதை சொல்ற?” என சீறினார்.

“யெப் பப்பா. ஐ நீட் மை ஆலம்பனா. அண்ட் ஐ லவ் ஹெர். நீங்க அன்னைக்கு சொன்னீங்களே அவள் என்னோட வீக்னஸ்ன்னு… ப்ச் நோ பப்பா, அவள் என் பலவீனம் இல்ல. என் பலம். இந்தியால என்னோட ஒட்டுமொத்த பலமா இருந்தா. இங்க என்னவோ நான் என்னோட ஒரிஜினாலிட்டியை இழந்த ஃபீல். ஐ ஜஸ்ட் நீட் ஹெர். சோ நான் போறேன்…” என்று தீர்மானமாகக் கூற, பெரியவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

யாஷ் அவர்களது அதிர்வையெல்லாம் பெரியதாக எடுக்காமல், “நான் இங்க இருந்து போறதுக்குள்ள, அங்க அவளுக்கு ஏதாச்சு வில்லத்தனம் செஞ்சது தெரிஞ்சுது… உங்க ரெண்டு பேரோட குடலும் என் கைல இருக்கும். என்னைப் பத்தி எல்லாரை விடவும் உங்க ரெண்டு பேருக்கும் நல்லாவே தெரியும் ஐ ஹோப்!” என அழுத்தம் திருத்தமாக அவர்களுக்கு உயிர் பயத்தைக் காட்டி விட்டு, அடுத்ததாக சென்றது அவனது ஆய்வகத்திற்கு தான்.

அங்கு பணிபுரிந்து கொண்டிருந்தவர்களுக்கு முழு சம்பளம் கொடுத்து அனுப்பி விட்டு, முழுக்க முழுக்க அனைத்திற்கும் கடவுச் சொல்களை கொடுத்து லாக் செய்து, தன்னைத் தவிர யாருமே அதனைத் திறக்க இயலாதவாறு மொத்தமாகப் பூட்டினான்.

அங்கிருந்து நேராக, விமான நிலையம் செல்ல ரித்திகாவே அவனை அழைத்துச் சென்றாள். கடைசி நேரத்தில் கிடைத்த விமானத்தைப் பிடிக்க வேகவேகமாகச் சென்றவனைத் தடுத்த ரித்திகா, “ஆல் தி பெஸ்ட் யாஷ்…” என்றிட,

அவளைக் கட்டி அணைத்துக் கொண்டவன், “தேங்க் யூ பேப்ஸ். லவ் யூ” என்று கூறி விட்டு, அவள் கூறிய “லவ் யூ டூ” வை காதில் வாங்காதவனாக ஓடிச் சென்றான்.

பத்து மணி நேரத்திற்கும் மேலான பயணம் அவனைச் சிறிதும் சோர்வாக்கவில்லை.

விமான நிலையத்தில் இருந்து அழைக்க ஆஹில்யன் வந்திருந்தான்.

ரித்திகாவின் தயவில் தனது முதலாளியின் காதல் மனதை அறிந்திருந்தவனுக்கு பெரும் ஆச்சர்யம் தான்.

ஆஹில்யனுக்கு எந்தப் பதிலும் அளிக்காமல் காரில் ஏறி அமர்ந்து கொள்ள, “எங்க பாஸ் போகணும்?” என ஆழம் பார்த்தான்.

“யூ ஆல்ரெடி நோ ரைட்? இன்ஃபர்மேஷன் வந்துருக்குமே!” அமர்த்தலாக யாஷ் உரைத்ததில், தலையில் நங்கென கொட்டியது போல இருந்தது.

அதில் அவன் புறம் மறந்தும் திரும்பாதவனாக சற்றே பயத்துடனே நிதர்ஷனாவின் வீட்டை நோக்கிச் சென்றான்.

ரித்திகாவுடனான காதல் இவனுக்குத் தெரிந்திருக்கிறது! என்ன செய்வானோ என்ற அச்சமே.

நிதர்ஷனாவின் வீட்டு வாசலில் காரை நிறுத்தியதும், “மாடில ஃபர்ஸ்ட் வீடு சார்” என்றான்.

அதனைக் கேட்டபடி இறங்கியவன், விறுவிறுவென மாடிக்கு ஏறினான்.

தெருவில் இருந்த வீடுகள் அனைத்தும் பெட்டி பெட்டியாக இருக்க, கருவாடு நாற்றம் வேறு குடலைப் பிரட்ட வைத்தது.

“எப்படி தான் இதுக்குள்ள இருக்காளோ…” என்ற எண்ணத்தில் முதல் வீட்டுக் கதவை படபடவெனத் தட்டினான்.

கிரைண்டரில் மாவு அரைத்துக் கொண்டிருந்த நிதர்ஷனா, மாவின் பதம் பார்த்துக் கொண்டிருக்க, கதவு தட்டப்படும் சத்தத்தில் “இந்நேரத்துல யாரு?” எனப் புருவம் சுருக்கினாள்.

கையைக் கழுவப் போனவள், இன்னும் அதிவேகமாக சத்தம் கேட்டதில், “ஐயோ எந்தக் கடன்காரனோ தெரியலையே” என்ற எண்ணத்தில் மாவுக் கையோடு, இடுப்பில் தூக்கி சொருகப்பட்டிருந்த நைட்டியை கூட விடுவிக்காது அப்படியே கதவைத் திறக்க, எதிரில் “ஹாய் மின்னல்” எனப் பளிச்சென்ற புன்னகையுடன் நின்ற யாஷ் பிரஜிதனைக் கண்டு மயக்கமே வந்தது.

யாஷோ பாவையை மேலிருந்து கீழ் வரை ஸ்கேன் செய்தான்.

சிவப்பில் வெள்ளைக் கோடு போட்ட நைட்டி. பாவாடையில் நைட்டியை சொருகி இருந்தவளின் வெள்ளை நிறப் பாவாடை லேசாக வெளியில் தெரிய, கையில் மாவுத் திட்டுக்கள்.

“என்ன காஸ்டியூம்டி இது?” அவளை அள்ளிப்பருக ஆசையெழ, அழுத்த அடி வைத்து உள்ளே நுழைந்தான் ஆடவன்.

அவளோ இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளாது, “யோவ் நீ என்னையா செய்ற இங்க? நாளைக்கு கல்யாணத்தை வச்சுக்கிட்டு இங்க வந்து நின்னுட்டு இருக்க… காலைல பங்க்ஷன் வேற இருக்குன்னு சொன்ன?” எனக் கேட்டபடியே தானாக பின்னோக்கி நகர்ந்தாள்.

“ஓ… எல்லாத்தையும் இந்தியாக்கு மாத்திட்டியா? ஆனா நீ திரும்ப வரமாட்டேன்னு தான சொன்ன?” என மேலும் கேள்வியெழுப்ப, இதற்கு மேல் பின்னால் நகர இடமின்றி சுவரில் முட்டி நின்றாள்.

அவனோ நடையை நிறுத்தாது, முன்னேறிக்கொண்டே சென்று அவளது மேனியுடன் ஒட்டியபடி நின்றான்.

அவனது வெப்ப மூச்சு பாவையின் நெற்றியைப் பதமாய் தீண்டி இதயத்தில் பல்வேறு அதிர்வலைகளைத் தோற்றுவிக்க, “என்… என்ன பண்ற? தள்ளு யாஷ்…” என்றாள் பதற்றமாக.

கையில் இருந்து மாவு அவனது சட்டையில் ஒட்டிக்கொண்டது.

அதனைப் பொருட்படுத்தாதவன், “நீ ஏன் அந்தப் பாட்டுப் பாடுன?” என்றான் சற்றே குனிந்து.

இம்முறை அவனது முன்னெற்றி கேசம் அவளது நெற்றியுடன் உறவாட, மூக்கும் மூக்கும் இடித்துக் கொள்ள ஆயத்தமானது.

அவளோ நன்றாகத் தலையைக் குனிந்து, அவனைத் தள்ளி விட முயன்றாள்.

“யாஷ்… என்ன பண்றீங்க? தண்ணி எதுவும் அடிச்சுருக்கியாயா. நான் ரித்தி இல்ல…” என்று அவனை உலுக்க, அவனோ அவளது கையிரண்டையும் பின்னால் வளைத்து தன் நெஞ்சோடு மோத வைத்தான்.

பேச்சிழந்து மூச்சிழந்து போன நிதர்ஷனா சிலையாகி இருக்க, “சொல்லுடி… எதுக்கு அன்னைக்கு அந்தப் பாட்டுப் பாடுன…” எனக் கேட்டவனது அழுத்த ஹேசல் நிற விழிகள் கண்ணியம் மறந்து அவளது இதழ்களைக் களவாடியது.

அன்பு இனிக்கும்
மேகா

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
27
+1
203
+1
6
+1
7

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    4 Comments

    1. super love story.wait pana mudiyala.next enanu seekiram update podunka please , please please ❤️❤️