நூடுல்ஸை வெறித்துக் கொண்டிருந்த நிதர்ஷனாவிற்கு, தனது மனம் போகும் போக்கே விசித்திரமாக இருந்தது.
இதுநாள் வரை அவனுக்காக அவனது வீட்டாரிடம் எதிர்த்துப் பேசியதெல்லாம், இயல்பாக வந்ததென்று எண்ணி இருக்க, இப்போதோ அவனது ஒற்றைத் தொடுகை அவளை வசம் இழக்கச் செய்வதில் திகைத்துப் போனாள்.
“ஒரு ஆம்பளைப்பையனோட கூடவே இருந்தா வர்ற ஃபீலிங்கா இருக்கும். 24 மணி நேரமும் அவன் மூஞ்சவே பாக்குறனால தான் நம்ம ஓவரா ரியாக்ட் பண்றோம். அவன் அடிச்சதும், திருப்பி அடிக்காம கண்ணைக் கசக்கிட்டு வந்துருக்கோம். ச்சே!
ஆனா அவன் அடிச்சதை ஏத்துக்கவே முடியல தான அப்போ. ஒரு மாறி நெஞ்சே வலிச்சு போச்சு…” தனக்குள்ளே பட்டிமன்றம் நிகழ்த்திக் கொண்டிருந்தவள், அவனது பூட்ஸ் சத்தம் கேட்டதில் வேக வேகமாக நூடுல்ஸை வாய்க்குள் திணித்தாள்.
“சாப்பிட்டு முடிச்சுட்டு ஆபிஸ் ரூம்க்கு வா!” சொல்லி விட்டு அவன் அங்கிருந்து நகர, உண்டு முடித்து தலையை மெல்ல வெளியில் நீட்டினாள்.
தன்னைப் பார்த்துக் கொண்டிருப்பானோ என்ற குறுகுறுப்பு அவளிடம்.
உடை மாற்றும் அறையில் இருந்து அவளது தலை மட்டும் வெளியில் தெரிய, மடிக்கணினியில் புதைந்திருத்தவன் ஓரப்பார்வையில் அவளைக் கவனித்துக் கொண்டே இருந்தான்.
எப்போதும் அறைக்குள் வந்ததும் துப்பட்டாவை ஒரு ஓரமாகத் தூக்கிப் போட்டு விடுவாள். அறையை விட்டு வெளியில் வரும்போது மறக்காது துப்பட்டா அணிந்து விடுபவள் இன்று வெகு பயபக்தியுடன் துப்பட்டாவை போர்த்திக்கொண்டே இருந்தாள்.
“இவளுக்கு ஓவர் கான்பிடென்ஸ் ஜாஸ்தி…” தானாய் சிரிப்பு மலர்ந்தது யாஷ் பிரஜிதனுக்கு .
அவன் சொன்னது போல சில நிமிடத்தில் அலுவலக அறைக்கு வந்துவிட்டவளிடம், தனது பக்கத்து இருக்கையை காட்டி அமரச் சொன்னான்.
அவனது மடிக்கணினியை அவள் புறம் திருப்பிட, முழுக்க முழுக்க ‘கோடிங்’காக இருந்தது.
“நமக்கு இஃப் எல்ஸ், பார் லூப்(if… else, for loop) தவிர எதுவும் தெரியாதே…” என முணுமுணுத்துக் கொண்டவள், “கோடிங் கரெக்ட்டா இருக்கான்னு பாக்கவா அரக்கா?” எனக் கேட்டாள் வெகு தீவிரமாக.
“அவ்ளோ பெரிய வேலை எல்லாம் நீ பார்க்க தேவை இல்லடி!” எனக் குட்டு வைத்தவன், “இந்த பேஜ்ல தான் கஸ்டம் செட்டிங்ஸ் டூல்ஸ் இருக்கு. இதுல ஆலம்பனாவோட டாக்கிங் ஸ்டைல் மாத்தலாம், கமாண்ட்ல சேஞ்சஸ் பண்ணலாம்… நீ கம்பியூட்டர் ஸ்டூடண்ட் தான. இதுக்குள்ள இருக்குற செட்டிங்ஸ் எல்லாம் கோ த்ரூ பண்ணு. என்னன்ன இருக்குன்னு புரியும்.”
“இதுல நான் சேஞ்ச் பண்ணலாமா?” அவள் விழி விரித்துக் கேட்க,
“இந்த செட்டிங்ஸ் நம்ம வீட்ல இருக்குற, நம்ம யூஸ் பண்ற ரோபோஸ் அண்ட் ஏ. ஐ ஓட மட்டும் தான் கனெக்ட் ஆகிருக்கு. சேஞ்ச் ஆனாலும் நமக்கு மட்டும் தான் ஆகும்…” என்றான் விவரித்து.
“ஓஹோ அப்போ ஆலம்பனான்ற பேரும் நமக்கு மட்டும் தான் மாறிருக்குமா. மத்தவங்களுக்கு எலிசான்னே இருக்கும் அப்படி தான?” நிதர்ஷனா வினவியதும்,
“இல்ல அதை ஒட்டுமொத்தமா எல்லாருக்கும் தான் சேஞ்ச் பண்ணேன்” என நிதானமாய் கூறினான்.
மீண்டுமொரு வியப்பு அவளிடம்.
“ஏன் யாஷ்?”
“பிடிச்சு இருந்துச்சு… தட்ஸ் இட்!” தோளைக் குலுக்கிக் கொண்டான் இயல்பாக.
அவ்வியல்பில் கரைந்து போனது அவளது இதயம்.
“சரி, நான் ஒர்க் அவுட் பண்ண போறேன். வேற எந்த ஸ்க்ரீனும் ஓபன் பண்ணி சொதப்பி வைக்கக் கூடாது” என்று கண்டிப்புடன் கூறி விட்டு தனதறைக்குச் சென்றான்.
செல்லும் அவனையே சிசிடிவி காணொளி வழியே பார்த்திருந்தாள் நிதர்ஷனா.
அறைக்குச் சென்றதும் டி – ஷர்ட்டைக் கழற்றியவன் பேண்ட்டையும் கழட்டப் போக, “அச்சோ” எனக் கண்ணை மூடிக் கொண்டாள்.
சட்டென நிதர்ஷனாவின் நினைவு வர, கேமாராவைப் பார்த்தவன், “இவளை நம்ப முடியாது. நம்மளை வீடியோ எடுத்து நெட்ல விட்டாலும் விடுவா…” என கேமரா முன்னால் நாக்கைத் துருக்கி அழகு காட்டினான் அவளைப் போன்றே.
“ஐயோ… நம்ம பார்த்தது தெரிஞ்சுருக்குமோ… அந்த கலப்பட கண்ணுக்காரனுக்கு எல்லா பக்கமும் கண்ணு இருக்கே” எனப் படபடத்தவள், “நான் பாக்கல அரக்கா” என்றாள் வேகமாக தலையாட்டி.
அவன் சிறு புன்சிரிப்புடன் உடற்பயிற்சி கூடம் சென்று விட, அந்தக் காட்சிகளும் அவளுக்கு ஒளிபரப்பானது.
மேற்சட்டையின்றி சிவந்த வதனத்தை வருத்தி செய்த உடற்பயிற்சியில் முத்து முத்தாய் வியர்த்திருந்தான். அதுவும் அவன் முகத்தில் ஒட்டிக்கொள்ளாது கழுத்தில் வழிந்தோட, அவனையே கண்ணெடுக்காமல் பார்த்திருந்த நிதர்ஷனா கண்ணைச் சிமிட்டி தலையிலேயே கொட்டிக் கொண்டாள்.
“ஒரு ஆம்பளைப்பையனை கண்ணால அபியூஸ் பண்றது தப்பு நிதா!” எனத் தனக்குத் தானே கண்டனம் தெரிவித்துக் கொண்டு, மடிக்கணினியின் மீது முழு கவனத்தையும் வைத்தாள்.
அவன் குளித்து முடித்து மெத்தையில் படுக்கும் வரை அவள் இடத்தை விட்டு அகலவில்லை.
யாஷ் அறைக்குள் வந்ததும், கருமேகத்தை பின் தொடர்ந்து வரும் மழையாய் பாவையின் பார்வை ஆடவனைச் சுற்றி வர, அவள் தன்னைப் பார்த்துக் கொண்டிருப்பாள் என்பதை உணர்ந்தவனாக, கேமராவைப் பார்த்து “ஸ்லீப்பிங் டைம்…” என்று கடிகாரத்தைச் சுட்டிக் காட்டினான்.
‘நான் பாக்குறது இவனுக்கு எப்படி தெரியுமாம்’ என சிலுப்பிக் கொண்டாலும் அடுத்த நிமிடம் அறைக்குள் இருந்தாள்.
அவனருகில் படுத்து போர்வையைப் போர்த்தியவளிடம், “எதுக்கு என்னைப் பார்த்துட்டே இருந்த?” எனக் கேட்டான் புருவம் உயர்த்தி.
“ஹய்ய… உன்னை யாரு பார்த்தா. நான் சீரியஸா செட்டிங்ஸ் பத்தி தான் பார்த்துட்டு இருக்கேனாக்கும்”
“ஓஹோ. அப்போ நான் வர சொன்னதும் கரெக்ட்டா வந்துட்ட எப்படி?” இம்முறை நக்கல் நகை அவனிடம்.
திருதிருவென விழித்தவள், “அது… அது… உங்கிட்ட அடி வாங்கி அழுததுல தூக்கமா வந்துச்சு. அதான் வந்தேன். இது கோ-இன்சிடென்ஸ் அரக்கா” என்றாள் உதடு குவித்து.
“பொய் சொல்ற லிப்ஸ்க்கு என்ன தண்டனை குடுக்கலாம்?” அவள் புறம் திரும்பி தலைக்கு கையை குடுத்து மெல்லிய நெருக்கத்தில் படுத்தபடி கேட்டவனின் தோரணையில் உள்ளம் செயலிழந்து நின்றது.
“நீ கன்னத்துல கொடுத்ததே போதும்…” தட்டுத் தடுமாறி பதில் அளித்தவள், அவனது பார்வைச் சூட்டை தாங்க இயலாது மறுபுறம் திரும்பி போர்வையை முகம் வரைக்கும் போர்த்திக் கொண்டாள்.
மெல்ல போர்வை விலகும் உணர்வு எழ, சுள்ளென இருந்தது அவளுக்கு.
இதுநாள் வரை அவனுடன் ஒரே மெத்தையில் தான் உறங்குகிறாள்.
இருவருக்கும் நடுவில் சில தலையணைகள் அரணாக இருக்கும். சில நேரங்களில் அந்தத் தலையணைகள் இல்லாவிட்டாலும் அவன் அவனது இடத்தில் இருந்து அவள் புறம் நகன்று கூட படுத்ததில்லை.
அவன் மீதிருக்கும் நம்பிக்கையில் தலையணைகளைக் கூட தவிர்த்து வந்தாள். இன்றோ அவனது பார்வையும் பேச்சும் செயலும், அத்து மீறி விடுவானோ என்ற பயத்தைக் கொடுத்தது.
வெளிநாட்டில் வளர்ந்தவனுக்கு ‘லவ் மேக்’ என்பது கூட வெறும் உடல் அளவிலான இன்பம் மட்டும் தானே! அதனை மனதில் தீவிரமாக எடுத்துக்கொள்வது அவனது வளர்ப்பிலேயே இல்லை என்பதை அவள் அறிவாள் தான்.
ஆனால், அவன் தன்னை நெருங்கினால், தான் மொத்தமாக அவனிடம் உறைந்து போகிறோம் என்பதும் புரிந்திட தவித்துப் போனாள்.
‘இது என்னடி கிறுக்கு கூமுட்டை மாதிரி யோசிக்கிற. உன்னைத் தொட்டா கையை வெட்டிப்போடு’ என்று மூளை கட்டளையிட்டது.
அதனை நிறைவேற்ற மனம் தடுமாற, கண்கள் பனித்துப் போனது.
‘என் அரக்கன் ஒன்னும் அலையிறவன் இல்ல…’ வரிந்து கட்டிக்கொண்டு ஆதரவிற்கு வந்தது யாஷ் மீதான நம்பிக்கை.
போர்வை விலகியதில் கழுத்தைத் திருப்பிப் பார்த்தவள், என்னவென கேட்க, “முகத்தை க்ளோஸ் பண்ணாம தூங்கு. இட்ஸ் நாட் குட் ஃபார் ஹெல்த். குட் நைட்…” என்று விட்டு தனது பக்கம் சென்று படுத்துக் கொண்டான்.
மானசீகமாகத் தலையில் அடித்தவள், ‘ச்சே… இவனைப் போய் கொஞ்ச நேரத்துல எப்படி எல்லாம் பேசிட்ட. இனி உன் பேச்ச நான் கேட்க மாட்டேன்’ எனத் தனது மூளையிடம் கோபித்துக் கொண்டாள்.
மறுநாள் காலையில் எப்போதும் போல சிரிப்பற்ற வதனத்துடன் கண்ணாடி முன் நின்றவன், “பிக் சம் ஃபார்மல் சூட்” என்று கட்டளையிட, ஆலம்பனா அசையாமல் இருந்தது.
“ஆலம்பனா… வாட்ஸ் ராங் வித் யூ?” என்று புருவம் சுருக்கியவன், தனக்கு காபி எடுத்துக்கொண்டு அறைக்கு வந்த நிதர்ஷனாவை முறைத்தான்.
“எதையும் தப்பா மாத்தி வச்சுட்டியாடி?”
“இல்லையே!” அவள் வேகமாகத் தலையாட்ட,
யாஷ் அவளைக் கடுமையாய் முறைத்து விட்டு, “ஆலம்பனா ஐ ஆம் டாக்கிங் டூ யூ” என்றான்.
“சாரி பாஸ். நீங்க என் முன்னாடி ஸ்மைல் பண்ற வரை, என்னால உங்க கமாண்டை அக்செப்ட் பண்ண முடியாது. என்கிட்ட ட்ரெஸ் சஜஷன் கேட்கும்போது, டென்ஷன் இல்லாம சின்ன ஸ்மைலோட நிக்கணும்…” எனப் பதில் அளிக்க கண்ணாடி வழியே நிதர்ஷனாவைக் கண்டான், உன் வேலையா இது என்று.
“பின்ன, எப்ப பாரு ஜிஞ்சர் மங்கி மாதிரி இருந்தா… அதான் ஆலம்பனாவ என் பக்கம் இழுத்துட்டேன்” எனக் கண் சிமிட்டியவள், “வேற ஆப்ஷன் இல்ல பாஸ். சிரிங்க. சிரிச்சா தான் உங்களுக்கு நல்ல ட்ரெஸ்ஸா பிக் பண்ணி குடுக்கும்!” என்றாள் கேலிப்புன்னகையுடன்.
அனைத்துப் பற்களையும் காட்டியவன் “ஈஈ… தட்ஸ் எனஃப்” எனக் கேட்க,
உதட்டைப் பிதுக்கிய நிதர்ஷனா, “இதுக்குலாம் நானும் உங்க ஆலம்பனாவும் அசர மாட்டோம் அரக்கா. நிஜமா ஸ்மைல் பண்ணனும். வாய்ஸ்ல ஒரு மென்மை இருக்கணும்” என்றதில், அவள் மீது வன்மைப்பார்வை வீசினான்.
“யோவ் சிரியேன்!” ஏ. ஐ மிரரை அவளை போலவே பேச வைத்திருந்ததாள்.
அதில் அதிர்ந்தவன், “அடிப்பாவி… உன்ன…” என்று நிதர்ஷனாவைத் துரத்த, அவள் அவனது கையில் அகப்படாதவாறு கீழே ஓடினாள்.
“நில்லுடி கடன்காரி!” யாஷ் பிரஜிதன் அதட்ட,
“சிரிக்க சொன்னதுக்கு ஏன்யா கொந்தளிக்கிற. கஞ்சூஸ்!” எனத் திட்டிக்கொண்டே கதவைத் திறந்து பக்கத்து வீட்டிற்கும் சென்று விட்டாள்.
“ஒழுங்கா நில்லுடி!”
“நிக்க முடியாது போயா… அத்தை என்னைக் காப்பாத்துங்க” என்று ஆதிசக்தி அறைக்குச் செல்ல, அவர் இருவரையும் குழப்பமாகப் பார்த்து, யாஷைத் தடுத்தார்.
“என்ன யாஷ் இது. அவளை ஏன் துரத்துற?”
“அவள் என் எலிசாவை தப்பா கைட் பண்றா மம்மா. ஏய் ஒழுங்கா வா” என்று ஆதிசக்தியின் பின்னால் ஒளிந்திருந்தவளைப் பிடிக்க எத்தனித்தான்.
“ஐயோ அத்தை… எப்ப பாரு உர்ருன்னு கண்ணாடி முன்னாடி நிக்கிறாரேன்னு சிரிச்சா தான் ட்ரெஸ் சஜஸ்ட் பண்ணனும்னு அந்த கண்ணாடிக்கு கமாண்ட் குடுத்தேன் அது தப்பா? என்னமோ இவர் சொத்தை எழுதி கேட்ட மாதிரி சிலுத்துக்குறாரு. இவருக்கு சிரிக்கத் தெரியாதுன்னு தெரிஞ்சுருந்தா நான் கல்யாணமே பண்ணிருக்க மாட்டேன் தெரியுமா?” என நீலிக்கண்ணீர் வடித்தாள்.
யாஷ் சட்டென அவளது துப்பட்டாவைப் பிடித்து விட, “அதை நீயே வச்சுக்கோ அரக்கா” என்று துப்பட்டாவை கொடுத்து விட்டு மீண்டும் வீட்டைச் சுற்றி ஓடினாள்.
அவனுக்கு சிரிக்க வேண்டிய சூழ்நிலையைக் கொடுக்காத தன் மீதே சினம் கொண்டவருக்கு வேதனைப்படுவதா? அல்லது அவனுக்கு அழகான வாழ்க்கையைத் தந்த கடவுளுக்கு நன்றியைச் சொல்லி அவனுடன் இருக்கும் நேரத்தை ரசிப்பதா என அறியாது வேதனை கொண்டார் ஆதிசக்தி.
இளவேந்தனிடமும் ஒளிந்து விளையாடி அவரையும் விழிக்கச் செய்தாள். இறுதியாய் மகேந்திரனின் அறைக்கும் புகுந்து விட்டவள், “பாருங்க தாத்தா உங்க பேரன்… என்னை அடிக்க வர்றாரு?” என்றாள் குறையாக.
அவரது அறைக்குள் நுழையாது வாசலில் நின்று விட்ட யாஷ் பிரஜிதன், “உன்னால இன்னைக்கு மீட்டிங் போச்சுடி” என்று முணுமுணுத்தான். ஆனால் கோபம் மட்டும் வரமாட்டேனென அடம்பிடித்தது அவள்மீது.
“அவன் அடிக்க வர்ற அளவு என்ன செஞ்சமா?” எனக் கேட்ட மகேந்திரனை முறைத்தாள்.
யாஷ் அவரை அர்த்தமாய் பார்த்து விட்டு, கையிலிருந்த அவளது துப்பாட்டை அவள் மீது எறிந்து விட்டே வெளிநடப்பு செய்ய, நிதர்ஷனா மகேந்திரனிடம் பொங்கினாள்.
“இதுலாம் போங்காட்டம் தாத்தா. அடிக்க வர்றவரை தடுக்குறதை விட்டுட்டு என்னைக் கேள்வி கேக்குறீங்க?” என இடுப்பில் கையூன்றி நியாயம் கேட்டவளைக் கண்டு மெலிதான புன்னகை பரவியது அவரிடம்.
“நானே உன்னைக் கூப்பிடணும்னு நினைச்சேன்…” என்றவர் அலமாரியில் தேடிப்பிடித்து ஒரு கவரை எடுத்து நீட்டினார்.
“இதை பிடிமா” எனக் கொடுக்க, “என்ன தாத்தா இது?” எனக் கேட்டாள்.
“என் தங்கச்சி பெண்ணுக்காக நான் வாங்கி வச்ச புடவை. இதை அவளுக்கு கொடுக்கவே முடியல” மகேந்திரன் விரல் நடுங்க கூற,
“ஓ, இதை நான் டோர் டெலிவரி பண்ணனுமா. அட்ரஸ் குடுங்க” என்றாள் நிதர்ஷனா.
அவரோ விழித்து விட்டு, “அட்ரஸ் இல்லாத இடம்மா அவள் இருக்குறது” மெல்ல அவர் விழிகள் கலங்க, “இப்ப கூகுள் மேப்ல போட்டாலே வந்துடும் தாத்தா” பாவம் ஒன்றும் புரியாமல் தீவிரமாக விளக்கம் அளித்தாள்.
அதில் அவருக்கு புன்னகை தோன்றியது போல!
“அவள் உலகத்துல இல்லமா” மெதுவாய் கூறியதும் நிதர்ஷனா “ஸ்ஸ்ஸ்… ஓ! சாரி தாத்தா” என வருந்தியவள், “ஆனா உலகத்துல இல்லாதவங்களுக்கு நான் எப்படி புடவை குடுக்க?” குழப்பம் அகலாது மீண்டும் கேட்டதில் மகேந்திரன் நன்றாகவே சிரித்து விட்டார்.
“இது உனக்குமா. உனக்கு குடுக்க தோணுச்சு” மகேந்திரன் கூறியதும், விழிகளை அகல விரித்தாள்.
“எனக்கா தாத்தா?” என்றவள் புடவையை எடுத்துப் பார்த்து இன்னுமாக வியந்தாள்.
அந்தக் காலத்து பட்டுப்புடவை. புதியதை பறைசாற்றும் வாசம் மாறாது இருந்தது. மஞ்சளில் அரக்கு கரை வைத்திருந்தது. அகலமான பார்டர். அவளுக்குப் பிடித்த நிறமும் கூட. பார்த்தாலே விலை அதிகம் என்று புரிந்தது.
அதனை ஏற்க மனது வராமல், “கண்மணி இல்லன்னா சிந்தாட்ட குடுங்க தாத்தா. எனக்கு எதுக்கு?” என்றாள் தயக்கமாக.
“இது உனக்குன்னு குடுக்க நினைச்சேன். கொடுத்துட்டேன். இங்க இருந்து போறதுக்கு முன்னாடி கட்டிக் காட்டுறியா?” அவரது ஆசையான கேள்வியில் ஒரு நொடி உள்ளுக்குள் குற்ற உணர்வு எழுந்தது.
தான் யாஷுடைய உண்மையான மனைவி இல்லை என்று தெரிந்தால் அனைவர்க்கும் வருத்தம் தானே.
இங்கிருந்து செல்லும்முன் உண்மையை கூறி விட்டே செல்ல வேண்டுமென குறித்து வைத்துக் கொண்டாள்.
அவரிடம் தலையசைத்து விட்டு புடவையுடன் வெளியில் வந்தாள். ஆதிசக்தி தான் அவளை நிறுத்தி, “அவன் வேலையை முடிச்சுட்டு வரட்டும். நீ இங்க இருக்கலாமே ரித்தி” எனக் கேட்க, “சரி அத்தை. கண்மணி, சிந்தா எல்லாம் எங்க?” எனக் கேட்டாள்.
“காலேஜ்க்குப் போயிருக்காங்க…”
“அந்த முருகனால பிரச்சினை ஒன்னும் இல்லைல?” ஆதிசக்தியுடன் அடுக்களைக்குச் சென்றவள், அடுப்பு மேடை மீது அமர்ந்து கிருஷ்ணவேணி வெட்டி வைத்த கேரட்டை வாயில் திணித்தாள்.
ஒரு பக்கம் கிரைண்டர் ஓடிக்கொண்டிருந்தது.
“முதல்ல முருகனையே காணோமே!” ஆதிசக்தி மாவின் பதத்தை சோதித்தபடி சொன்னார்.
“அன்னைக்கு தூக்கிட்டு போனவங்க இன்னும் கொண்டாந்து விடலையா அத்தை? இவர் என்ன பண்ணி வச்சுருக்காரோ” என யாஷை எண்ணிப் பயம் எழ, “அதான் எனக்கும் பயமா இருக்கு. முருகனோட அப்பா விதண்டாவாதம் செய்ற ஆளு. நீயாவது சொல்லு ரித்தி” என்றார்.
“ம்ம்… சொல்றேன்!” வேகமாகத் தலையாட்டினாள். தான் சொன்னால் அவன் கேட்பான் என்ற நம்பிக்கை உள்ளூர உயர்ந்திருந்தது.
கிருஷ்ணவேணி, “ஆதி கைல துவைக்கிற துணி இருக்கு. நான் அலசிப் போட்டுட்டு வந்துடுறேன். மாவை மட்டும் எடுத்துடு” என்று விட்டுப் போக தலையாட்டி விட்டு மாவை ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தார்.
அவரை நிதானமாக ஏறிட்ட நிதர்ஷனா, “கண்மணி யாஷ் கலர்ல பொறந்துருந்தா இந்நேரம் இத்தாலிக்கே அனுப்பி இருப்பீங்களா அத்தை?” எனக் கேட்க, அவர் கரங்கள் வேலை நிறுத்தம் செய்தது.
கண்கள் கலங்கி நிற்க, அவரிடம் பதில் இல்லை.
“யாஷ் வெளிநாட்டுக்காரன் மாதிரி இருந்தது தான உங்களுக்கு ஸ்ட்ரெஸ். அதுனால தான் குடுத்தீங்களாம்?” மீண்டும் கேள்வி எழுப்ப அவரிடம் பதில் இல்லை.
“என்னவோ என்னால அதை நம்ப முடியல. உங்க மேல ரொம்பவே கோபம் இருக்கு. ஆதங்கம் இருக்கு. ஆனாலும் உங்க மனசுல யாஷ்கிட்ட வெளிப்படுத்தாத விஷயம் இருக்குன்னு தோணுது” என்றதும் சரட்டென நிமிர்ந்தார்.
கன்னம் வழியே ஒரு துளி நீர் வழிந்தோட, அதனை அமைதியாக ஏறிட்டவள், “ஆனா என்ன காரணம் இருந்தாலும் சரி, என் புருஷனை நீங்க விட்டுக்கொடுத்ததை நான் மன்னிக்கவே மாட்டேன். அதெப்படி அத்தை, அவரை நீங்க விடலாம்? உங்க புருஷனைப் பத்தி தெரிஞ்சும் விட்டுருக்கீங்க. அவர் சுயநலத்துக்காக கொன்னுருந்தா?” நிதர்ஷனாவின் கேள்வியில் துடித்தவர்,
“என்கிட்ட இருந்திருந்தா நிச்சயம் கொன்னுருப்பான். வாழட்டும்னு நினைச்சேன். ஆனா இப்படி தனிமைல வாழுவான்னு நான் எதிர்பார்க்கல!” உடைந்தார் ஆதிசக்தி.
எதுவோ புரிந்தாலும், “அவங்க அப்பா மாதிரி பொம்பள பொறுக்கியா மாறி இருந்திருந்தா?” என ஆற்றாமை பொங்க கேட்டாள் நிதர்ஷனா.
“நீ கேட்குற எந்த கேள்விக்கும் என்னால பதில் சொல்ல முடியாது ரித்தி. அந்த நேரத்துல, அந்த நிமிஷத்துல அவன் எங்கயோ உயிரோட இருக்கட்டும் அவ்ளோ மட்டும் தான் தோணுச்சு. அவன் வருங்காலம் வரைக்கும் யோசிக்கிற அளவு எனக்கு தெம்பு அப்போ இல்ல. மறுபடியும் நான் என்னை மீட்டு வரும்போது, அவன் என்கூட பேச தயாரா இல்ல.
ஆனா அவனை வளர்த்து, எனக்கு எதிராவே அனுப்பி இருக்கான் அந்த அலெஸ். நான் எந்த ஆராய்ச்சியை யாருமே செய்யக்கூடாதுன்னு நினைச்சு பாதில டிராப் பண்ணிட்டு வந்தேனோ… அதை என் பையனை வச்சே செஞ்சுட்டு இருக்கான். அதுல வர்ற வெற்றி மட்டும் தான் யாஷ்க்கு தெரியுது. ஆனா அதுக்கு பின்னாடி இருக்குற உலக அரசியல் ரொம்ப கொடூரமானது ரித்தி. அவனுக்கே அது ஆபத்தா முடியும்! இதை அவனுக்குப் புரிய வைக்கத்தான் வர வச்சேன். ஆனா என்னையவே என்னால புரிய வைக்க முடியல. அவனோட ஆராய்ச்சிக்குள்ள எப்படி நுழையுறதுனு புரியாம குழம்பி போயிருக்கேன்!” என்றார் வேதனையாக.
யாஷிற்கு ஆபத்து என்றதும் அவளது உள்ளமும் பரிதவித்தது.
ஆனாலும், “எனக்குத் தெரிஞ்சு இதுக்கு பின்னாடி இருக்குற பிரச்சினையைப் பத்தி யோசிக்காம வெறும் வெற்றிக்காக மட்டுமே யாஷ் இதை பண்ண மாட்டாரு அத்தை. அவரோட ஒவ்வொரு மூவ்மெண்ட்டும் ரொம்ப நிதானமா, தெளிவா தான் இருக்கும். இதுனால வர்ற ஆக்கமும் அழிவும் பத்தி கண்டிப்பா யோசிச்சு இருப்பாரு. எந்த கண்டுபிடிப்பா இருந்தாலும் ரெண்டுமே இருக்கும் தான. அதை கரெக்ட்டா ஹேண்டில் பண்ணுவாருன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு…” என நிமிர்வுடன் கூறியவளை நின்று விட்ட கண்ணீருடன் வியப்புடன் ஏறிட்டார் ஆதிசக்தி.
“நீ சொல்றதும் சரி தான்!” என ஒப்புக்கொண்டாலும் உள்ளுக்குள் முணுமுணுவென உறுத்திய பயத்தை காட்டாது மறைத்துக் கொண்டார்.
மீட்டிங் நேரம் தாண்டிச் செல்ல, அலெஸ்சாண்டரோ யாஷிற்கு போன் செய்து கத்தி விட்டார்.
“நேத்தும் மீட்டிங் கேன்சல் பண்ணிட்ட. இன்னைக்கும் ஆன் டைம்க்கு இல்ல. வாட் ஆர் யூ டூயிங் தேர்?”
“அதை உங்ககிட்ட எக்ஸ்பிளைன் பண்ண எனக்கு டைம் இல்ல” என அலட்டலின்றி அழைப்பைத் துண்டித்து விட்டவன், “இந்த ஆலம்பனா எங்க போனா. அங்க போய் யார் தலையை உருட்டிட்டு இருக்காளோ…” என முணுமுணுத்து விட்டு அவளைத் தேடி ஆதிசக்தி வீட்டிற்குச் செல்ல, அங்கு தாயுடன் பேசியதைக் கேட்டிருந்தான்.
தனக்காக அவளிடம் எழும் இயல்பான கோபம் சிலிர்க்க செய்தாலும் அதனை முழுதாய் உணர இயலாதவாறு தடுத்தது ஆதிசக்தியின் கூற்று.
“சம்திங் ஃபிஷ்ஷி” தலையாட்டிக்கொண்டு மீண்டும் தனது இருப்பிடத்திற்குச் சென்றான்.
இங்கோ மாவு முழுதாய் அரைபட்டு விட, அதற்கு மேல் பொறுக்க இயலாத நிதர்ஷனா அடுப்பு மேடையில் இருந்து குதித்து, “நான் மாவு எடுக்குறேன் அத்தை” என்றாள்.
“வேணாம் ரித்தி. கைல அடிபட்டுட போகுது” எனப் பதறி தடுத்தார்.
“அட அதெல்லாம் அடிபடாது…” என்றவள் விறுவிறுவென சுற்றிக்கொண்டிருந்த கிரைண்டரை பொருட்படுத்தாது, ஒரு துளியையும் வீணாக்காது மாவை பாத்திரத்தில் இட்டதில் அசந்து போனார்.
“என்ன அத்தை உளுந்து சரியாவே அரையல. நான் ஒரு டிப்ஸ் சொல்றேன். மாவு இன்னும் பஞ்சு மாதிரி வரும்…” என ஆரம்பித்தவள் தனது தொழில் ரகசியத்தை சொல்ல மனமின்றி, “வேணாம் வேணாம்… அந்த வீட்ல ஒரு கிரைண்டர் இருந்துச்சுல. அதுல நானே ஆட்டி கொண்டு வரேன். அதுல இட்லி ஊத்தி பாருங்க. சும்மா பொசு பொசுன்னு இருக்கும்…” என்று சிலாகித்துக் கூறி விட்டுச் சென்றவளின் திசையையே ஆராய்ச்சியாய் பார்த்திருந்தார் ஆதிசக்தி.
வீட்டிற்கு வந்தவள் அமைதியாக இருக்கவில்லை. ஆடிய பாதமும் பாடிய வாயும் சும்மா இருக்காது என்பது போல, மாவு ஆட்டாமல் அவளுக்கு கையெல்லாம் உதறத் தொடங்கி விட்டது.
அதில் அங்கு இருந்த அரிசியையும் உளுந்தையும் ஊற வைத்து விட்டு வந்தவள், ஹால் சோபாவிலேயே அமர்ந்திருந்த யாஷைக் கண்டாள்.
“யாஷ்… உங்க ரிசர்ச் சக்ஸஸ் ஆனா பிரச்சினை வராது தான?” ஆதிசக்தியின் கூற்று உறுத்தவே அவனிடம் கேட்டிருந்தாள்.
அங்கு அத்தனை நம்பிக்கையாய் பேசியவள் தன்னை எண்ணிக் கவலைகொண்டதில் முறுவல் தோன்றியது அவனுக்கு.
“என்னைத் தொட எவனுக்கும் தைரியம் இல்ல!” திமிராய் வெளிவந்தது அவனது கூற்று.
அதனை ஆமோதித்துக்கொண்டவள், “அப்பறம் அந்த முருகனை அனுப்பி விடுங்க யாஷ். அத்தை பயப்படுறாங்க” என்றதும், “ம்ம் ஓகே…” என்றவன் உடனடியாய் அவனை விடுவிக்கப் பணித்தான்.
அவளிடம் ஒரு கவர் இருந்ததில், “இது என்ன?” எனக் கேட்க,
“இது தாத்தா குடுத்தாரு” என விவரம் கூறியதும், யோசனைக்குச் சென்றவனிடம் இருந்து “ம்ம்” என்பதை தவிர வேறெதுவும் வரவில்லை.
மாலை நேரத்தில் கண்மணியும் சிந்தாமணியும் யாஷ் பிரஜிதனைத் தேடி ஓடோடி வந்தனர்.
யாஷும் நிதர்ஷனாவும் டைனிங் டேபிளில் அமர்ந்து காபி பருகிக்கொண்டிருக்க, கதவு திறந்திருந்ததில் இருவரும் உள்ளே வந்து விட்டனர்.
“மாமா… செம்ம சம்பவம் பண்ணிட்டீங்க!” சிந்தாமணி மூச்சிரைக்க கூற, கண்மணிக்கு அவளைப்போல அவனிடம் இயல்பாகப் பேசுவதில் தயக்கம் ஏற்பட்டாலும், “இதுனால உங்களுக்கு எதுவும் பிரச்சினை வராது தான அண்ணா?” என்றாள் கவலையாக.
“ரெண்டு பேரும் என்ன பேசிட்டு இருக்கீங்க?” நிதர்ஷனா புரியாது வினவ,
“அக்கா உங்களுக்கு விஷயமே தெரியாதா. அந்த முருகன் திரும்ப வீட்டுக்கு வந்துட்டான். ஆனா அவன் வாயை இழுத்து வச்சு காது வரை தச்சு வச்சுருக்காங்க மாமா! அவன் பேசுறது ஒரு எழவும் புரியல. இன்னும் அவங்க வீட்ல அந்த முருகனுக்கும் மாமாவுக்கும் நடந்த கலவரம் தெரியல. அதனால, அவன் பேசுறது புரியாம அவன் வீடே கொழம்பி கிடக்கு” என்று வயிற்றைப் பிடித்துக்கொண்டு சிரித்தாள் சிந்தாமணி.
நிதர்ஷனா அதிர்ந்தே விட்டாள்.
“யோவ்… வாயை இழுத்து வச்சு தச்சுடுவேன்னு ஒரு வாய் வார்த்தைக்கு தான்யா சொல்லுவாங்க. நீ என்ன நிஜமா பண்ணி வச்சுருக்க?”
“நியாயமா நாக்கைத் தான் இழுத்துருக்கணும்” யாஷ் தோள் குலுக்கிக் கொள்ள, “தேங்க்ஸ் அண்ணா” என்றாள் கண்மணி.
எதற்கு என்று அவனும் கேட்கவில்லை. அவளும் சொல்லவில்லை.
நிதர்ஷனாவிற்குப் புரிந்தது. இவர்கள் வருவார்கள் என்றெண்ணி தான் அவன் கதவை பூட்டாமல் வைத்திருக்கிறான் போலும்!
கண்மணி மீது பாசத்தைக் காட்ட விழையவில்லை என்றாலும் அவள் காட்டும் அன்பை நிராகரிக்க இயலாமல் தடுமாறுகிறான் எனப் புரிய புன்னகைத்துக் கொண்டாள் நிதர்ஷனா.
இரவு நேரம், உடற்பயிற்சி கூடத்திற்கு செல்லப் போனவனை நிறுத்தியவள், “கீழ பின்பக்கம் ஒரு வாக்கிங் போகலாமா?” எனக் கேட்டாள்.
“அந்தப் பதினைஞ்சடி இடத்துலயா?” நெற்றியை சுருக்கியவன் மறுக்கவில்லை.
இருவரும் பின்பக்கத்தில் வீற்றிருந்த சிறு சிறு செடிகளைப் பார்வையிட்டபடி நடக்க, அவள் கையைப் பிசைந்து கொண்டிருந்தாள்.
அதனைக் கண்டு விட்டவன், அவளாக பேசட்டும் என அமைதி காக்க, அவளோ மௌனமாகவே நடந்தாள்.
“என்ன பேசணும்?” யாஷே கேட்டு விட்டான்.
“பேச தான் கூப்பிட்டேன்னு உனக்கு எப்படி தெரியும்?” அவள் நெஞ்சைப் பிடித்துக் கேட்க, அவன் இதழ்கள் கர்வ நகை வீசியது.
உதட்டைச் சுளித்தவள், “சிட்டி ரோபோ மாதிரி என்னை மட்டும் நல்லா ஸ்கேன் பண்ணுங்க. அந்த கண்மணி பொண்ணும் உங்களை சுத்தி சுத்தி வருது. அதுகிட்ட நார்மலா ரெண்டு வார்த்தை பேசலாம்ல?” என்றாள்.
புருவம் உயர்த்தினானே தவிர ஒன்றும் பதில் கூறவில்லை.
“ப்பா… நீயும் உன் அம்மாவும் வாயில கொழுக்கட்டை எதுவும் வச்சுருப்பீங்களா. உங்ககிட்ட ஒரு வார்த்தை வாங்குறதுக்கு முன்னாடி என் தொண்டை தண்ணி வத்திப் போகுது!”
சின்னதாய் முறுவலித்தவன், “இதுவரை யாரையும் நான் ரிலேஷனா பார்த்தது இல்லை. இப்ப பிளட் ரிலேஷனா ஒரு சிஸ்டர் இருக்கான்னு தெரியவும் ரியாக்ட் பண்ண தெரியல. எப்படியும் இன்னும் கொஞ்ச நாள்ல மொத்தமா முடிய போகுது. நான் பெர்மனண்ட்டா இத்தாலிக்குப் போய்டுவேன். அப்பறம் நினைச்சாலும் இங்க இருக்குற யார்ட்டயும் பேச எனக்கு டைம் இருக்காது. தென், நான் பேசுனா என்ன பேசலைன்னா என்ன?” என்றான் அசட்டையுடன்.
அது அவளுக்கு அதிக வலி கொடுத்தது.
“மொத்தமா இத்தாலிக்குப் போய்ட்டா திரும்ப வர மாட்டிங்களா யாஷ்?” இதயத்தின் தவிப்பு அதை கண்களால் வெளிப்படுத்தினாள்.
“ம்ம்… எஸ். என் ரிசர்ச் சக்ஸஸ் ஆகிட்டா, அது ரிலேட்டட் வேலையே நிறைய இருக்கும். தென், சேர்மன் போஸ்டிங்கு மீட்டிங் நடக்கும். வெடிங் இருக்கும். தென், என் பெர்சனல் லைஃப்ல நான் பிசி ஆகிடுவேன். இவங்களை பத்தி யோசிக்க எனக்கு தேவையும் இல்ல!”
‘என்னைப் பத்தி கூட யோசிக்க மாட்டீங்களா?’ துடித்துக்கொண்டு வந்த வார்த்தையை விழுங்கினாள்.
அவளது மேனியின் வாட்டம் கொண்டே அவளது கேள்வியைப் புரிந்து கொண்டவன், “ஏய் கடன்காரி… உன்னை மறக்கவே மாட்டேன். டைம் கிடைக்குறப்ப உன்கூட கண்டிப்பா பேசுவேன் மை டியர் ஆலம்பனா. வெடிங் டைம்ல விசா டிக்கட் அனுப்புவேன். யூ மஸ்ட் பீ கம்! அதுக்குள்ள பாஸ்போர்ட் எடுத்துரு” என சொல்லிக்கொண்டே நிறுத்தினான்.
“நீ எங்க எடுக்கப்போற. இந்த டிராமா எல்லாம் முடியட்டும் நானே ஆஹில்கிட்ட எடுக்க சொல்றேன்… டன்?” என தம்சப் காட்ட, வலியுணர்ந்த மனதை எப்படி சமன்செய்வது என்று புரியாதவளாய் வலுக்கட்டாயமாக சிரித்து வைத்தாள்.
பேச மொழியற்று முதன்முறை தடுமாறியவளுக்கு இதென்ன புது தலைவலி என்றே இருந்தது.
நடக்க வாய்ப்பற்ற, நடக்கவே கூடாத மாற்றமல்லவோ நடக்கிறது தன்னுள்!
தனக்குள் அவள் திணறுவது புரிய, அதையும் தவறாகவே புரிந்து கொண்டான் யாஷ்.
“இப்ப என்ன கண்மணி கூட பேசணும் அவ்ளோ தான. ஓகே! அவள் ஓவர் ரியாக்ட் பண்ணாம நார்மலா பேசுனா, நானும் கேஷுவலா இருக்கேன். ஓகே தான ஆலம்பனா?” அவளது முக சுருக்கம் உணர்ந்து அவள் முன்னே தலையைக் குனிந்து கேட்டதில், மின்னலும் மழையும் ஒரே நேரத்தில் பொழிவது போல அவனுடன் இணைந்தும் இணைந்திடாத நேசத்தில் கருகிப்போனாள் நிதர்ஷனா.
அன்பு இனிக்கும்
மேகா
please daily update kodunka please please . wait pana mudiyala. next update ena nu yochichu yochichu head ache varuthu. porumaiya iruka mudiyala.please daily update kodunka
Ini cect aa poduren sis thank you sooo much sis 😍🥰🥰😍😍
Super epi sis… 🙂
Thank you sooo much sis 🥰🥰🥰
please daily update kodunka sister please
Sure sis
hai sister 1 week atchi . yean inum update podala. please daily update kodunka please sister
Ini cect aa poduren sis 😍
New epi seekiram podunga sister ingayum sister please