அத்தியாயம் 23
நிதர்ஷனா, தலையைப் பிய்த்துக் கொள்ளாத குறையாக யாஷ் பிரஜிதனைப் பார்க்க, அவனிடம் வெற்றி நகை மிளிர்ந்ததில் “யோவ், இவ உன் தங்கச்சின்னு உனக்கு ஏற்கெனவே தெரியுமா?” எனக் கேட்டாள் வியப்பாக.
“கெஸ் பண்ணேன்.” எனக் கண்மணியைப் பார்த்ததில் அவளும் திகைப்பாய் தமையனை ஏறிட்டாள்.
கூடவே அவளை இறுக்கமாகப் பற்றி இருந்த முருகனும், “என்னடி? புதுக் கதை சொல்ற… அப்ப நீ எங்க ஆளுங்க இல்லையா? வெளிநாட்டுக்காரனுக்கா பிறந்த…” என்றதில் அவன் முகம் அஷ்ட கோணலாகியது.
கண்மணி அவனைத் தீயாக முறைத்து வைக்க, அவனது கன்னத்தைப் பிடித்துத் திருப்பித் திருப்பிப் பார்த்த யாஷ் பிரஜிதன் “உன் பேஸை இதே மாதிரி இழுத்து வச்சுட்டா எப்படி இருக்கும்?” என அர்த்தமாய் வினவினான்.
சுளித்த முகத்தை நேராக்கிய முருகன், யாஷை வெகு அருகில் கண்டதும் இலேசாகப் பயந்தான்.
தள்ளி நின்றிருந்தவன், எப்போது அருகில் வந்தானென்றே அவனுக்குத் தெரியவில்லை.
“கையை எடு!” கண்மணியின் கையைப் பிடித்திருந்த கையைக் காட்டி யாஷ் கூற, “எடுக்க முடியாது, என்னடா செய்வ? உங்க பொறப்பைப் பத்தி எல்லாம் வெளில சொன்னா நாறிடும்…” என மிரட்டினான் முருகன்.
“வெளில தப்பா சொல்லறதுக்கு முதல்ல உனக்குப் பேச வரணுமே!” எனும்போதே மற்றொரு கார் அங்கு வந்து நிற்க, அதில் வந்த இரண்டு ஆள்கள் அவனைக் குண்டுக் கட்டாகத் தூக்கிச் சென்றனர்.
“இவனை எங்க தூக்கிட்டுப் போறானுங்க யாஷ்?” நிதர்ஷனா குழப்பமாகக் கேட்க, தோளைக் குலுக்கியவன் பதில் பேசாது காரில் சென்று அமர்ந்தான்.
கண்மணி, கண்ணில் வழிந்த நீருடன் யாஷைப் பார்க்க, அவனோ “ரித்தி கெட் இன்” என்றான்.
“உங்க தங்கச்சியையும் கூட்டிட்டுப் போலாமே…” என்றதும், அவன் திரும்பி ஒரு பார்வை பார்க்க வாயைப் பொத்திக் கொண்டாள்.
ஆனாலும், அவளது கூற்றை மீறிக் காரை எடுக்கவில்லை அவன்.
சிந்தாமணி தான், “அடி கண்மணி… போய் கார்ல ஏறு. உன் அண்ணனை எப்படியாவது கரெக்ட் பண்ணிடலாம்…” என்றிட, “என்னது?” எனக் கண்மணி கண்ணீரைத் துடைத்துக் கொண்டு முறைத்தாள்.
“உன் அண்ணனை, உனக்கு அண்ணனா கரெக்ட் பண்ணனும்னு சொன்னேன்டி… மேரேஜ் ஆன முறைப்பையனை வச்சு நான் என்ன செய்ய…” எனச் சலித்தபடி காரில் ஏற, கண்மணியும் அவளைத் தொடர்ந்தாள்.
கண்மணி தலையை நிமிர்த்தாமல் அமர்ந்திருக்க, நேராகக் காரை வீட்டின் முன் நிறுத்தினான்.
வீடு வந்த பிறகும் கண்மணி இறங்கவில்லை.
அவனும் கண்ணாடி வழியே அவளை அழுத்தமாகப் பார்த்திருந்தான்.
“உங்களுக்குத் தெரியுமா?” கண்மணி இதழ் பிரித்துக் கேட்டிருக்க, அவனிடம் பதில் இல்லை.
“எப்படி?” அவள் மீண்டும் வினவினாள்.
“நான் அஞ்சு வயசுல இங்க இருந்து இத்தாலிக்குப் போனதும், கொஞ்ச மாசத்துலயே மம்மா மேரேஜ் ஆகி பேபியோட செட்டில் ஆகிட்டதா பப்பா அடிக்கடி சொல்வாரு. அப்போ எனக்குப் புரியல. இங்க வந்ததும், ஆல்பம்ல மம்மாவுக்கும், இளவேந்தனுக்கும் நடந்த கல்யாணத்துல இருந்த டேட், உன் பர்த்டே போட்டோஸ், பர்ஸ்ட் பர்த்டே இயர் அண்ட்… உன்னோட லெஃப்ட் ஹேண்ட் பழக்கமும் அதை என் முன்னாடி மட்டும் நீ மாத்திக்க ட்ரை பண்றதும் வச்சு கெஸ் பண்ணிட்டேன்.” என்றவனை அசந்து பார்த்திருந்தாள் கண்மணி.
அலெஸ்சாண்ட்ரோவிற்கு, இடது கைப் பழக்கம் உள்ளது. ஆனால் அதைத் தவிர, அவரது மகளெனச் சொல்லிக் கொள்ள எந்த அடையாளமும் அவளிடம் இருக்காது. முழுக்க முழுக்க ஆதிசக்தியை உரித்துப் பிறந்திருந்தாள்.
நிதர்ஷனாவோ, “இந்தப் பொண்ணை எப்பப் பார்த்தாலும் திட்டிட்டுத் தான இருந்த. இதெல்லாம் எப்ப எந்த கேப்ல கவனிச்ச?” என வியந்து விட்டு, கண்மணியின் புறம் திரும்பி “உனக்கு முதல்லயே இவர் உன் அண்ணன்னு தெரியுமா? தெரிஞ்சும் நீ ஏன் இவர்கிட்டப் பேசல…” என்றாள் சற்றே அதட்டலுடன்.
“எனக்குக் கொஞ்ச நாளைக்கு முன்னாடி தான் தெரியும் அண்ணி. அதுவும் அம்மா, அப்பாட்டப் பேசிட்டு இருந்தப்ப…” எனும்போதே மீண்டும் யாஷின் பார்வை கண்ணாடி வழியே தங்கையைத் துளைத்தது.
“இளா அப்பாகிட்டப் பேசிட்டு இருந்ததைச் சொன்னேன். எனக்கு அப்பா எப்பவும் அவர் மட்டும் தான்!” என்றவளின் குரலில் அதீத உறுதி தெரிந்தது.
அதற்கு அவன் பதில் கூறும் முன்னே நிதர்ஷனா பொங்கினாள்.
“ஆமா ஆமா, உன்னை மட்டும் வச்சுக்கிட்டாங்கள்ல. அதனால இந்தக் குடும்பம் உனக்கு உசத்தியா தான் தெரியும். இவரை மாதிரி நாடு கடத்தி விட்டு, ரூம்ல பூட்டி மிஷினோட மிஷினா வச்சிருந்தா தெரிஞ்சுருக்கும்.”
நிதர்ஷனாவின் கோபம் அவனை என்னவோ செய்தது.
அவளது கையைப் பிடித்து நிதானப்படுத்தியவன், “ஏன்டி, இவ்ளோ டென்சன் ஆகுற?” எனக் கேட்க,
“தெரியல. டென்ஷன் ஆகுது!” என நெற்றியைத் தேய்த்துக் கொண்டவள், “நீ சொல்லு!” எனக் கண்மணியை முறைத்தாள். யாஷ், கண்மணியை எல்லாம் கவனிக்கவில்லை. நிதர்ஷனாவை மட்டுமே அழுத்தமாக ஊடுருவிக் கொண்டிருந்தான்.
சங்கடத்துடன் நெளிந்த கண்மணிக்கு, அவனுக்கான நியாயத்தைத் தராமல் போனதில் கோபம் உண்டு தான். ஆனால், அன்பான குடும்பத்தை எதிர்க்க இயலவில்லை.
சிந்தாமணி தான், “இதுல தப்பு முழுக்க முழுக்க அத்தையோடது தானாம் கா… இளா மாமா, யாஷ் மாமாவை அனுப்ப வேணாம்னு தான் சொன்னாராம். அத்தை தான் விடாப்பிடியா இருந்திருக்காங்க. நீங்க வர்றதுக்கு கொஞ்ச நாளைக்கு முன்னாடி, அத்தையும் மாமாவும் கண்மணி அவரோட சொந்தத் தங்கச்சின்னு தெரிய வேணாம்னு பேசிக்கிட்டதைக் கண்மணி கேட்டுட்டா…” என்றிடக் கண்மணிக்குத் தானாய் அந்நிகழ்வு நினைவில் வந்து அலைக்கழித்தது.
அன்று கல்லூரியில் இருந்து, தலைவலி காரணமாகப் பாதியில் வந்து விட்டவளுக்குத் தாய் தந்தையரின் உரையாடல் நெஞ்சை நொறுக்கியது.
கண்மணிக்கு ஆதிசக்தி, இளவேந்தன் என்றால் அத்தனை உயிர். அதிலும் இளவேந்தனின் செல்லப்பெண். சிறு விஷயத்தையும் இருவரிடமும் மறைத்ததில்லை. பள்ளி செல்லும் போதாகட்டும், இப்போது கல்லூரிக்குச் சென்று வரும் போதாகட்டும். அனைத்தையும் ஒப்பித்து விடுவாள்.
ஆதிசக்தி காட்டும் கண்டிப்பில், ஒரு சதவீதம் கூட இளவேந்தன் காட்டியதில்லை. மகள் மீது அத்தனை அன்பு. அப்படி உயிராய் இருந்த தந்தை, தனக்குத் தந்தையே இல்லை எனும் போது அவளால் அதனை ஏற்க இயலவில்லை.
அதிர்ச்சியும், கண்ணீருமாக அறை வாயிலில் நின்றிருந்த கண்மணியைக் கண்டு இருவருமே அதிர்ந்தனர்.
அவளுக்குத் தாயின் முன்னாள் திருமணம் பற்றி, அரசல் புரசலாகத் தெரியும். ஆனால், தனது பிறப்பிலேயே ரகசியம் இருக்குமென்று துளியும் எண்ணவில்லை.
“என்னம்மா இது?” ஆதிசக்தியிடம் ஏமாற்றத்துடன் வினவினாள்.
“கண்மணி…” ஆதிசக்தி சொல்லத் தயங்க, அவளோ “இவர் என் உண்மையான அப்பா இல்லையா?” எனக் கேட்டதும் இளவேந்தனின் இதயம் இரண்டாய் பிளந்தது.
“நான் எப்பவும் உன் அப்பா தான் கண்மணி. என்னை இப்போ உன் அப்பாவா பார்க்கத் தோணலையா?” இளவேந்தனுக்குக் கண்ணில் நீர் நிரம்பி நின்றது.
அவர் நடந்ததை மேலோட்டமாக எடுத்துரைக்க,
“என்கிட்ட ஏன் இதெல்லாம் சொல்லலப்பா. ஒருவேளை, அவருக்கு உண்மை தெரிஞ்சு என்னை உங்ககிட்ட இருந்து பிரிச்சுட்டா?” கண்மணி மிரட்சியுடன் கேட்டாள்.
“அப்படி எதுவும் ஆகாது கண்மணி. உன்னைக் கண்டிப்பா விட்டுக் கொடுக்க மாட்டேன். என்னை நம்புமா…” இளவேந்தன் அவளது தலையைக் கோதி விட்டுக் கூற,
“யார் இடைல வந்தாலும், நான் உங்க பொண்ணு தான்ப்பா. அண்ணனை அவங்ககிட்ட விட்டுக் குடுத்த மாதிரி இவங்க என்னையும் கொடுத்துட்டா?” ஆதிசக்தியை முறைத்தபடி தந்தையிடம் கூற ஆதிசக்தி உணர்வற்று நின்றிருந்தார்.
இருவரது கண்ணீரும் அவரை அசைத்தது. கூடவே கண்மணியின் வார்த்தைகள் தீயாகச் சுட்டது.
ஆகினும், எந்த எதிர்வினையும் காட்டவில்லை அவர்.
“அப்படி எல்லாம் சொல்லாத கண்மணி. கஷ்டமா இருக்கு.” இளவேந்தன் வேதனையில் முகம் கசங்க, அமைதியாக அங்கிருந்து தனிமை நாடிச் சென்று விட்டாள்.
இந்த உண்மையை ஜீரணிக்கவே அவளுக்கு நிறைய நேரம் தேவைப்பட்டது. அதன்பிறகும், யாஷை அலெஸ்ஸாண்ட்ரோவுடன் அனுப்பியதில் தாயிடம் கோபம் கொண்டு அவரிடம் சண்டையிட, அவரோ அவளுக்கு எந்தவிதப் பதிலும் அளிக்காததால், கோபமுற்று அவரிடம் பேசுவதை முற்றிலும் தவிர்த்து விட்டாள்.
தனிமையில், ஆதிசக்தி இளவேந்தனிடம் கடிந்து கொள்வார்.
“ஏன் மாமா இப்படிப் பண்ற? எவ்ளோ படிச்சுப் படிச்சுச் சொன்னேன் என்னைக் கல்யாணம் பண்ணிக்காதன்னு… கண்மணி என் வயித்துல அம்பது நாள் கரு, நம்ம கல்யாணம் பண்றப்ப… வேற எவளையாவது கட்டிட்டு நிம்மதியா இருன்னு எத்தனைத் தடவை சொன்னேன்… ஏற்கெனவே இருக்குற பாவம் பத்தாதுன்னு, உன்னையும் கண்மணியையும் மனசளவுல வேதனைப்பட வச்ச பாவமும் என்னைக் கொல்லுதே இளா…” என மௌனமாய் கண்ணீர் வடித்தார்.
“என்ன ஆதி நீ. கண்மணி புரிஞ்சுப்பா… எப்படியும் அவளுக்குத் தெரிய வேண்டிய உண்மை தான. இந்த உண்மை தெரிஞ்சாலும், எனக்கும் அவளுக்குமான உறவு என்னைக்கும் மாறப்போறது இல்ல. உன்னையும் அவள் கூடிய சீக்கிரம் புரிஞ்சுப்பா ஆதி. அவளைச் சொல்லியும் குத்தமில்ல. குழந்தைல இருந்து தெரியும் உன்ன… என்னாலயே சில நேரம் உன்னைப் புரிஞ்சுக்க முடியலையே!”
“அப்படிப் புரிஞ்சுக்க முடியாம கஷ்டப்பட எதுக்குக் கல்யாணம் பண்ணுன?”
அவரிடம் மென்புன்னகை பரவ, “உன்னைப் புரிஞ்சுக்க முடியாதே தவிர… உணர முடியாதுன்னு சொல்லலையே. உன் வலி எனக்குப் புரியும்.” என்றவரை இதழ் கடித்து ஆற்றாமையுடன் ஏறிட்டார்.
அலெஸ்சாண்ட்ரோவுடன் விவாகரத்தைப் பதிவு செய்து இத்தாலியில் தான் இருந்தார் ஆதிசக்தி. உடனடியாக விவாகரத்துக் கிடைக்காததும் ஒரு காரணம். மற்றொன்று அலெஸ்ஸாண்ட்ரோ எத்தனைப் பெண்களுடன் கூடிக் களித்தாலும், ஆதிசக்தியின் மீதிருந்த மயக்கம் தீரவில்லை.
அவரை விடாது பிடித்து வைத்திருந்தார். அவரிடம் இருந்து தப்பிக்கும் வழி தெரியாது தவித்துப் போனவர், அவருக்குத் தெரியாமல் மகனுடன் இந்தியாவிற்கு வந்து விட்டார்.
சில நாள்களில் விவாகரத்துச் சம்பந்தமாக ஆதிசக்தி கோர்ட்டில் ஆஜர் ஆக வேண்டுமென்று அவருக்கு அழைப்பு வர, மீண்டும் இத்தாலிக்குச் செல்ல வேண்டிய சூழ்நிலை.
யாஷ் பிரஜிதனை இளவேந்தனின் பொறுப்பில் விட்டுவிட்டு, எப்படியாவது விவாகரத்துப் பெற வேண்டும் என்ற நப்பாசையில் இத்தாலிக்குச் சென்றவருக்கு அதன்பிறகே தெரிந்தது. அது அலெஸ்சாண்ட்ரோவின் சதி என்று.
முழுதாய் குடித்திருந்தவருக்கு ஆதிசக்தி மீது ஆத்திரம் தீயாய் பரவியது. விமான நிலையத்தில் இருந்தே ஆதிசக்தியை வீட்டிற்கு வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றவருக்கு வெறி அதிகரித்தது.
“எவ்ளோ தைரியம் இருந்தா, என்கிட்டச் சொல்லாம இங்க இருந்து கிளம்புவ… உனக்கு என்னைப் பத்தித் தெரியும்ல டார்லிங்… தெரிஞ்சும் இந்த தைரியம் எங்கிருந்து வந்துச்சு?” இத்தாலி மொழியில் கர்ஜித்தார் அலெஸ்சாண்ட்ரோ.
“உன்னைப் பத்தித் தெரிஞ்சதுனால தான் இங்க இருந்து போகணும்னு முடிவெடுத்தேன். உன்னை மாதிரி ஒரு பொறுக்கியோட என்னால இருக்க முடியாது அலெஸ். நீ என் ரிசர்ச்சைத் தப்பான வழிக்கு யூஸ் பண்ணப் பார்க்குற. தட்ஸ் நாட் ஃபேர்…” என்றவரை இளக்காரமாக ஏறிட்டவர்,
“நீ இல்லன்னா என்னால இதைத் தொடர்ந்து நடத்த முடியாதுன்னு நினைக்கிறியா டார்லிங். வெரி ஃபன்னி! நீ சிங்கத்தோட கூண்டுல சிக்குன எலி. இங்க இருந்து தப்பிக்கவும் முடியாது, நிம்மதியா வாழவும் முடியாது.” எனக் கண் சிவக்க உறுமினார்.
பயம் நெஞ்சைக் கவ்வ, அவரிடம் இருந்து தப்பிக்கும் பொருட்டு, பூ ஜாடியால் அவரைத் தாக்கி விட்டு அங்கிருந்து செல்ல முயன்றவரை ஒரே பிடியில் முடியைக் கொத்தாகப் பிடித்து விட்டார் அலெஸ்.
அவரது ஒற்றைக் கையின் வலுவே ஆதிசக்தியைப் பலவீனமாக்கப் போதுமானதாக இருக்கும் எப்போதும். காதலாக அவரது பலத்தில் பலவீனமானது வேறு. இப்போதோ?
அவர் மீதிருந்த அசைக்க இயலாத நம்பிக்கையிலும், இதே பலத்திற்கு அன்பால் அடிமைப்பட்டும் தானே, திருமணத்திற்கு முன் தவறு நிகழ்ந்தது. திருமணத்திற்குப் பின்னும் அவருடன் காதல் வாழ்வில் கரைந்து தானே போனார். கணவனின் உண்மை முகத்தை அறிந்த பின்னே, அந்த நிம்மதி தொலைந்தே போனது.
அவர் சுகிக்கும் மற்ற பெண்களைப் போலத் தன்னை வெறும் இச்சையாகப் பயன்படுத்தியது, மனத்தினோரம் முணுக் முணுக்கெனச் சுற்றி வந்த சிறிதளவுக் காதலையும் முற்றிலும் துடைத்தெடுத்தது.
அவரது கோபத்தைத் தாம்பத்தியத்தில் காட்டி, ஆதிசக்தியை உடலளவிலும் மனத்தளவிலும் காயப்படுத்தி விட, உடைந்தே போனார் ஆதிசக்தி.
மறுநாள் கிழித்தெறியப்பட்ட காகிதமாய், அலெஸ்ஸாண்ட்ரோவின் கம்பிக் கையில் இருந்து விடுபட்டு எழுந்த ஆதிசக்தி ஒரு மூச்சு அழுது தீர்த்தார்.
இது அவர் தேர்ந்தெடுத்த வாழ்வு! இதை எல்லாம் தான் அனுபவித்தே ஆக வேண்டும் எனத் தன்னையே தண்டித்துக் கொண்டவர், அலெஸ்சாண்ட்ரோ உறங்கும் நேரத்தைப் பயன்படுத்தித் தனது வக்கீலுக்கு அழைத்துத் தன்னைத் துன்புறுத்தியதாக அலெஸ்சாண்ட்ரோ மீது வழக்குப் பதிவு செய்ததில், அவரைக் கைது செய்தது இத்தாலி நாட்டு அரசு. அடுத்த ஒரு வாரத்தில் விவாகரத்தும் வழங்கி இருந்தது.
தனது செல்வாக்கைப் பயன்படுத்திச் சிறிது நாள்களில் வெளியில் வந்து விட்ட அலெஸ்சாண்ட்ரோ வெறி பிடித்த மிருகமானார்.
இந்தியாவிற்குத் திரும்பிய ஆதிசக்தி, தனது அறைக்குள் முடங்கிக் கொண்டார்.
அன்றைய நிகழ்வு, அவரை மிகவும் மன அழுத்தத்திற்கு ஆளாக்கி இருந்தது. எந்த அளவு என்றால், அலெஸ்சாண்ட்ரோவின் முகத் தோற்றமும், அயல்நாட்டுக்காரனின் நிறமும் கொண்ட ஐந்து வயதுச் சிறுவனைக் கண்டே பயப்பட வைத்தது.
விவாகரத்துப் பெற்ற பின்னும், ஆதிசக்தியின் முகம் தெளிவு பெறாததைக் கண்டு இளவேந்தன் தான் அவரைத் துருவினார்.
“என்ன ஆச்சு ஆதி? ஏன் ஒரு மாதிரி இருக்க?” அவரிடம் பதில் இல்லாமல் போனதில் பெருமூச்சு விட்டுக் கொள்வார்.
ஆனால், யாஷ் பிரஜிதனுக்கு உணவு ஊட்டுவதில் இருந்து, உறங்க வைப்பது வரை அவரே பார்த்துக் கொள்வார். கிருஷ்ணவேணி உதவிக்கு வந்தாலும் தடுத்து விடுவார். அவரது தங்கை குழந்தையைச் சீராட்டி வளர்க்க எண்ணியது நினைவு வரும். அந்தப் பாக்கியம் தான் அவருக்கு இல்லாது போய் விட்டதே. அதனால், தனது மொத்த அன்பையும் யாஷ் மீது காட்டினார்.
யாஷிற்கு, அவரது அன்பைப் புரிந்து கொள்ளும் வயது இல்லை. அவனது கவனம் முழுக்க ஆதிசக்தி தன்னை ஒதுக்குவதில் மட்டுமே பதியும்.
அப்படி ஒரு அன்பை யாஷ் மீது செலுத்திக் கொண்டிருக்கும் போது தான், ஆதிசக்தி அவனை அலெஸ்சாண்ட்ரோவிடம் கொடுக்கப் போவதாகக் கூற, அதிர்ந்தே விட்டார்.
“என்ன ஆதி இது, அவனைப் பத்தித் தெரிஞ்சும் ஏன் இப்படி?”
“என்கிட்ட வேற எதுவும் கேட்காத மாமா…” என்றவரின் முகம் இறுகிப் போயிருக்க, ஒரு முறை மலங்க மலங்க விழித்துக் கொண்டு இளவேந்தனைக் கட்டிக்கொண்டு நின்ற யாஷின் மீது, பார்வை படிந்து மீண்டது.
வீட்டாரின் கேள்விக்கும், சரியான பதில் கூறவில்லை ஆதிசக்தி.
“அவனைப் பார்க்கும் போது அலெஸ்ஸப் பார்க்குற மாதிரி இருக்கு. ரொம்ப ஸ்ட்ரெஸ் ஆகுது.” என்ற ஆதிசக்தியை மொத்தக் குடும்பமும் வினோதமாகப் பார்த்தது.
இளவேந்தன் எவ்வளவோ கெஞ்சினார்.
“ப்ளீஸ் ஆதி, யாஷ் இங்கயே இருக்கட்டும்.” என்றதில், “என் பையன் விஷயத்துல நீ தலையிட வேண்டாம் மாமா…” என்று முகத்தில் அடித்தவாறு கூறிவிட இளவேந்தனுக்கு அது அதிகமாய் காயம் கொடுத்தது. அதில் இருந்து அவன் விஷயத்தில் தலையிடுவதில்லை. யாஷை அலெஸ்சாண்ட்ரோ அழைத்துச் சென்ற பிறகு,
தனது தொழிலைக் கை விட்ட ஆதிசக்தி, இளவேந்தனுடன் ஆசிரியர் வேலைக்கே செல்ல எத்தனிக்க, அதன்பிறகே தெரிந்தது… அன்று நேர்ந்த கசப்பான கூடலின் பலனாகத் தனது வயிற்றில் கரு வளர்ந்திருப்பது.
மீண்டும் மீண்டுமாகத் தொய்ந்து போனார் ஆதிசக்தி.
“நான் எடுத்த ஒரே தப்பான முடிவுனால, என்னால நிம்மதியா ஒரு நாள் கூட வாழ முடியாதுல இளா…” எனத் தளர்ந்து வினவியரைப் பரிதாபமாக ஏறிட்டார்.
இளவேந்தனுக்கு இது எப்படி நடந்தது எனக் கேட்கவும் தயக்கம்…
பதில் பேச இயலாது திணறியவரிடம், “என்னைத் தப்பா நினைக்காத மாமா… அவனோட ஒட்டி உறவாட எல்லாம் இல்ல.” என்றவர் அன்று நிகழ்ந்ததை வேதனையுடன் உரைக்க இளவேந்தன் அதிர்ந்து போனார்.
“இதை ஏன், நீ முன்னாடியே சொல்லல ஆதி… அந்த நாய வெட்டிப் போட்டுட்டு ஜெயிலுக்குப் போயிருப்பேன்ல.” கோபத்தில் கொந்தளித்தார்.
“போதும் இளா… என்னால மறுபடியும், மறுபடியும் பிரச்சினை வர்றது கஷ்டமா இருக்கு. ப்ச்! இப்ப என்ன செய்யறது? ஒரு குழந்தையைக் கஷ்டப்படுத்தி அனுப்பிட்டேன். இப்போ… இது!” என வயிற்றைத் தடவிக் கொண்டார்.
“இதையும் அலெஸ் விட மாட்டான் இளா…” எங்கோ வெறித்தபடி கூறிய ஆதிசக்தியை அமைதியாய் ஏறிட்டவர், “நம்ம கல்யாணம் பண்ணிக்கலாம் ஆதி!” என்றார்.
அதில் திடுக்கிட்டவர், “உனக்கு என்ன பைத்தியமாடா?” எனக் கத்தியே விட்டார்.
“கொஞ்சம் யோசி ஆதி. இப்ப இதைப்பத்தித் தெரிஞ்சா, அலெஸ் மறுபடியும் பிரச்சினை பண்ண வருவான். நம்ம உடனே கல்யாணம் பண்ணிக்கிட்டா இது பிறக்குறப்ப என் குழந்தையா, நம்ம குழந்தையா பிறக்கும். நாள் கணக்குலாம் மத்தவங்களுக்கு அவ்ளோ அக்கியூரட்டா தெரிய வாய்ப்பில்ல.” என்றவரைக் கண்ணீருடன் முறைத்துப் பார்த்தார்.
“என்னை முழு சுயநலவாதியா மாத்திடாத மாமா… என்னால என் வாழ்க்கை கெட்டது பத்தாதுன்னு, உன் வாழ்க்கையையும் கெடுக்கச் சொல்றியா?”
“எனக்கு நீ இல்லாம ஏது வாழ்க்கை? உன்னைத் தவிர வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்கிற ஐடியால நான் இல்ல. இப்பவும், எப்பவும்! இதுல சுயநலவாதி நான் தான்… உன் பக்கத்துல வாழ எனக்கு ஒரு வாய்ப்பு!” என்றவரின் கூற்றில் பரிசுத்தமான அன்பே வெளிப்பட்டது.
சிலையாகச் சமைந்து நின்றவருக்கோ வார்த்தைகள் திக்கியது.
“இளா… இளா… நீ… நீ என்னை…” எனத் திணறிட, இளவேந்தனின் சிறுதுளிக் கண்ணீர் மூலமே அவரது காதல் இப்போது தான் உறைத்தது ஆதிசக்திக்கு.
சிறுவயது முதல் ஆதிசக்தி இளவேந்தனுக்கு தான் எனப் பேசி வைத்தாலும், ஆதிசக்திக்குக் காதலென்ற உணர்வெல்லாம் தோன்றவில்லை. தனக்குப் பிரியமானவன் என்ற எண்ணம் மட்டுமே. தந்தையை எப்படியாவது சமாளிக்க வேண்டும் என்பதற்காகவே வெளிநாட்டில் படிக்கச் செல்லும் முன் இளாவைத் திருமணம் செய்வதாகப் பொய் வாக்குறுதி கொடுத்தார்.
எப்படியும், இளாவிற்கும் தன் மீது அந்த மாதிரியான எண்ணங்கள் இல்லை என்றே நம்பி இருந்தார். இப்போதோ? தான் தனக்கு மட்டுமல்ல, அவருக்கும் அநீதி இழைத்திருப்பது புரியக் கதறி அழுதார்.
“ஏண்டா, என்னை இப்படிப் பாவக்காரி ஆக்கி வைக்கிற! ஐயோ…” எனத் தலையில் அடித்துக்கொண்டு அழுதவரைக் கண்டு திகைத்த இளவேந்தன்,
“என்ன பண்ற ஆதி. வயித்துப் பிள்ளையோட இப்படிப் பண்ணாத. நான் உங்கிட்ட என் மனசைச் சொல்லிருந்தா, நீ கண்டிப்பா அந்த நாயைக் கல்யாணம் பண்ணிருக்க மாட்ட. எனக்குத் தெரியும். சரியான நேரத்துல என் காதலைச் சொல்லாமல் தள்ளிப் போட்டது தான் உன் வாழ்க்கையைக் கெடுத்துருச்சு…” அப்போதும் தன்மீதே பழி போட்டுக் கொண்டவரின் நேசம் எத்தகைய ஆழமானது.
அந்த ஆழத்தில் வீழ்த்தி விடப்பட்ட ஆதிசத்தி முடிவாய் மறுத்து விட்டார்.
“வேணாம் மாமா. இப்ப நான், நீ காதலிச்ச ஆதி கிடையாது. இதெல்லாம் என்னோட போகட்டும். நீ வேற கல்யாணம் பண்ணிக்கோ…” எனக் கண்ணீரைத் துடைத்தபடி, அவரது அன்பை நாடிய மனத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு திடமாய் கூறினார்.
“முடியாது!” அதே திடம் அவரிடம் இருந்தும் வந்தது.
“டேய், உன்னைக் கொன்னுடுவேன்!” ஆதிசக்தி விரல் நீட்டி மிரட்டிட,
“கொன்னுக்கோ… உன்னை மனசுல சுமந்துட்டுச் செத்துக்குறேன். ஆனா இன்னொருத்தியோட புருஷனா சாக மாட்டேன்…” என்றவரின் அழுத்தத்தில் அயர்ந்து போனார்.
பொதுவாக, இளவேந்தன் மென்மையான குணம் உடையவர். அவருக்கு இத்தனை அழுத்தம் தந்திருப்பது தன் மீதான நேசம் என்று புரிய, கதறி அழவே தோன்றியது.
பெருமூச்சு எடுத்துத் தன்னைச் சமன்செய்த ஆதிசக்தி, “சரி இப்ப கல்யாணம் பண்ணிக்கிறோம்னே வச்சுக்கலாம். இந்தக் குழந்தையும் அலெஸ் மாதிரிப் பிறந்தா? ஈஸியா அவனுக்குத் தெரிஞ்சுடும். ஊர் உலகம் உன்னையும் சேர்த்துத்தான் தப்பாப் பேசும்.” என அவரை லாக் செய்யப் பார்க்க,
“இப்படித்தான் நடக்கும்னு நம்மளா கணிச்சு ஏன் ஸ்ட்ரெஸ் ஏத்திக்கணும். நல்லதே நடக்கும்னு நம்பு ஆதி. இது உன் குழந்தையும் தான. உன்னை மாதிரிப் பிறக்க வாய்ப்பு இருக்கு. அப்படியே அவனை மாதிரிப் பிறந்தாலும், யாஷை விட்டுக் குடுத்த மாதிரி இந்தக் குழந்தையை விட்டுக் குடுக்க மாட்டேன். விட்டுக் குடுக்க முடியாத அளவு இது என் குழந்தையா பிறக்கணும், வளரணும்.” என இறுதியில் ஒரு குட்டும் வைத்தார்.
இளவேந்தனின் பிடிவாதத்தின் முன், முரண்டு பிடித்த ஆதிசக்தியின் பிடிவாதம் கரைந்து தான் போனது.
இளவேந்தனின் நம்பிக்கையின் படி, கண்மணி ஆதிசக்தியை உரித்து வைத்திருந்தாள். வெளிநாட்டுச் சாயலில் இருந்த யாஷ் மீதே அன்பைக் கொட்டியவர், தன்னவள் போல இருக்கும் கண்மணியை ஒதுக்கியா வைப்பார்? உயிரையே அவள் மீது வைத்திருந்தார். இப்போதும் அவரது அன்பின் ஆழம் சிறிதும் குறையவில்லை.
கண்மணிக்கு இத்தனை விளக்கங்கள் கொடுக்கப்படவில்லை. ஆகினும், அவளது கோபமெல்லாம் தமையனை விட்டதில் தான். அவனை நேரில் பார்க்க அத்தனை ஆவல் கொண்டாள்.
நிதர்ஷனா தான், “உங்க அம்மா சரியான செல்ஃபிஷ்…” என்றாள் கடுப்பாக.
அதில் இருவருமே அமைதி காக்க, அவள் மீண்டும் பேசினாள்.
“சரி, கொஞ்ச நாளைக்கு முன்னாடி தெரிஞ்சும், நீ ஏன் யாஷ்கிட்டப் பேசல. நம்பர் எப்படியும் இருந்திருக்கும் தான?”
“இருந்துச்சு. அம்மா போன்ல இருந்து எடுத்தேன். நான் ரெண்டு மூணு வாட்டி போன் பண்ணுனேன். அப்பலாம் அண்ணா மீட்டிங்ல இருக்காங்க, வேலையா இருக்காங்கன்னு சொன்னாங்களே தவிர அண்ணாட்டப் பேச முடியல. இங்க வந்தப்புறம் உங்ககிட்ட உண்மையைச் சொல்லத் தயக்கம். அம்மாவும், அமைதியா இருந்துட்டாங்க. நானா வந்து எப்படிச் சொல்ல? அண்ணாவுக்கும் என்னைப் பிடிக்கல!” என்றாள் உள்ளே சென்ற குரலில்.
“உன் அண்ணனுக்கு மனுஷங்களையே பிடிக்காதே. இதே நீ ஒரு ஏ. ஐ யாவோ, எலிசாவுக்கு எல்டர் சிஸ்டராவோ இருந்திருந்தா பிடிச்சுருக்கும். நீ எப்பப் பாரு, கண்ணுல ஒரு லிட்டர் தண்ணியோடவே சுத்துனா, எனக்கே பிடிக்க மாட்டுது.” எனச் சலித்திட, கண்மணிக்குக் கண்ணீரை மீறியும் சிறு புன்னகை ஒளிர்ந்திட, யாஷ் பிரஜிதன் தான் நிதர்ஷனாவைக் காட்டத்துடன் முறைத்திருந்தான்.
அவனை ஓரக்கண்ணில் ஏறிட்டவள், “சரி… அட்லீஸ்ட் ஆலம்பனா மாறியாவது இருக்கணும், இது ஓகேவாயா?” எனத் திருத்திக் கொள்ள, அவனுக்கு இதழ்க்கடையோரம் குறுநகை பிறந்ததில், “ஆலம்பனா, ரேர் பீஸ்டி! அது மாதிரி… வேற… சான்ஸ் இல்ல. யூ ஆர் தி ஒன் அண்ட் ஒன்லி ஆலம்பனா!” என்றவனின் ஹேசல் நிற விழிகள் முழுதும், நிதாவின் வியந்த வதனமே நிறைந்திருந்தது.
அன்பு இனிக்கும்
மேகா
Yash ku unmaiyalam epa therium sis…