Loading

அத்தியாயம் 20

யாஷ் பிரஜிதனும், நிதர்ஷனாவும் தன்னை மறந்து நெருக்கமாக நின்று ஒருவர் மற்றவரின் விழிகளுக்குள் சிறைப்பட்டிருக்க, காலை உணவை எடுத்து வந்த கண்மணி இருவரும் நிற்கும் கோலம் கண்டு நமுட்டு நகை புரிந்தாள்.

அவர்களைத் தொந்தரவு செய்ய மனமின்றித் திரும்பப் போக, சாம்பார் கிண்ணத்துடன் அங்கு வந்த சிந்தாமணி “க்கும்…” எனத் தொண்டையைச் செருமி அவர்களது தவத்தைக் கலைத்து வைத்தாள்.

“ஏன்டி?” கண்மணி முறைக்க,

“வயசுப் பொண்ணுங்க இருக்குற வீட்ல பப்ளிக்கா ரொமான்ஸ் பண்ணக் கூடாது. இதை நான் வன்மையா கண்டிக்கிறேன்.” என்ற சிந்தாமணியின் தலையில் நறுக்கெனக் கொட்டு வைத்தாள் கண்மணி.

இவர்களின் வரவு அறிந்ததும், நிதர்ஷனா விருட்டெனப் பின்னால் நகரப் போக, யாஷ் விடவில்லை.

“ரெஸ்ட் ரூம் போகணுமா ரித்தி?” எனக் கேட்க, அவள் தலையாட்டியதும் அவளைக் கையில் அள்ளி இருந்தான்.

“என்னய்யா பண்ற?” நிகழ்வுணர்ந்து நிதர்ஷனா துள்ளிட, “ஹஸ்பண்ட் வேலையைப் பார்க்கணும்ல.” என அசட்டையாய் மொழிந்து விட்டுக் குளியலறைக்குள் இறக்கி விட்டான்.

“கேன் யூ மேனேஜ்? நான் எதுவும் ஹெல்ப்?” என ஆரம்பித்ததில் படாரெனக் கதவை மூடி நீண்ட மூச்சுக்களை எடுத்து விட்டவள்,

‘ரொம்ப ஓவராத்தான் போறான்…’ எனப் பல்லைக் கடித்தாள்.

தானாய் ஒரு முறுவல் பிறந்தது யாஷ் பிரஜிதனுக்கு. அவனது இளநகையை ஆராய்ந்தபடி அங்கு வந்த இளவேந்தன், பெண்கள் இருவரையும் வெளியில் செல்லச் சொல்லி விட்டு, அவன் முன் நிற்க யாஷ் அவரை நேருக்கு நேராய் ஏறிட்டான்.

“நேத்து வந்தவன் யாருன்னு தெரிஞ்சுதா?” இளவேந்தன் தனக்குள் முளைத்த சந்தேகத்தை மறைத்துக் கேட்க,

“சீக்கிரம் தெரிய வரும்.” என்றதோடு முடித்துக் கொண்டவன், குளியலறைக் கதவு திறக்கும் ஓசை கேட்டதில், நிதர்ஷனாவிற்கு உதவும் பொருட்டு அவளருகில் சென்று தூக்கிக் கொண்டான்.

அறையில் இளவேந்தனும் இருந்ததில் அவளும் மறுக்க இயலவில்லை. நிதர்ஷனாவைக் கட்டிலில் அமர வைத்தவன், இன்னும் இளவேந்தன் நிற்பதை உணர்ந்து அவரைத் திரும்பிப் புருவம் உயர்த்தி ஏறிட, அவரும் இருவரையும் அழுத்தமாய் பார்த்தார்.

அந்த ஒற்றை நொடிப் பார்வை போதுமே, ஆடவனுக்கு அவரது மனத்தின் எண்ணம் புரிய!

அவருக்குச் சந்தேகம் வலுத்து விட்டது என்று தெரிந்தும், அவனிடம் பதற்றமெல்லாம் இல்லை. சிறு ஏளனப்புன்னகை மட்டுமே!

அவர் தன்னைக் குற்றம் சாட்டும் முன்னே, மொத்தக் குடும்பத்தையும் குற்றம் சாட்ட இயலும் அவனால்.

தனிமையைத் தந்தவர்களுக்குத் தன்னிடம் எதிர்த்துப் பேசத் தைரியம் எங்கிருந்து இருக்கப் போகிறது? அப்படியே தைரியம் இருப்பினும், ஒற்றைப் பார்வையில் அதனை வீழ்த்தி விடும் வல்லமை பெற்றவன் அவன்.

கர்வநகை சிந்தியவன், கண்மணி வைத்துச் சென்ற உணவை நிதர்ஷனாவிற்குக் கொடுத்தான்.

கொடுக்கும் முன்னே, “பாய்சன் எதுவும் இருக்காது தான?” என அங்கேயே நின்றவரிடம் நக்கலாகக் கேட்க, இளவேந்தனின் தாடை இறுகியது.

“யாருக்கும் விஷம் வச்சுக் குடுக்குற பழக்கம் எங்க வீட்டுப் பசங்க யாருக்கும் கிடையாது யாஷ்…” தீர்க்கமாக உரைத்தவரை அசத்தல் தலை சிலுப்பலில் உதறினான்.

இருவரும் பேசும் மொழி புரியாதவளாய் திருதிருவென விழித்த நிதர்ஷனா, முதலில் வயிறைச் சரி செய்யும் நோக்கில் உணவை உள்ளே இறக்கினாள்.

இளவேந்தன், அதற்கு மேலும் அவனிடம் தர்க்கம் செய்ய விருப்பமற்று வெளியில் சென்றிட, யாஷ் பிரஜிதனின் முகம் கடுகடுப்பைத் தாங்கி இருந்தது.

“இன்னாய்யா, அந்தாளோட நொய் நொய்னு புரியாத பாசையாவே பேசிட்டு இருக்க?” இட்லியை விழுங்காமல் வாய்க்குள் மென்றபடியே கேட்டாள்.

“அந்த இட்லியை முழுங்கிட்டு டவுட் கேட்குறதுக்குள்ள உன் தலை வெடிச்சுடும்ல.” யாஷ் நக்கலடிக்க,

அசடு வழிந்தவள், நன்றாக விழுங்கி விட்டு மீண்டும் அதே கேள்வியைக் கேட்டாள்.

“இந்த வீட்டு டெரஸ்ல இருந்துதான் கன் ஷாட் நடந்துருக்கு. பக்கத்து டெரஸ் வழியாவும் குதிச்சு வந்துருக்கலாம். இல்லன்னா, இந்த வீட்டு ஆளுங்களே ஹெல்ப் பண்ணிருக்கலாம்… அப்படி டவுட் பண்ணதுக்குத் தான் தட் இளவேந்தன் பொங்கிட்டுப் போறாரு.”

“ச்சே! ச்சே! இருக்காது யாஷ். இங்க இருக்குறவங்களைப் பார்த்தா கொலை பண்ற அளவு எல்லாம் திறமைசாலி மாதிரித் தெரியல…” நிதர்ஷனா மறுப்பாகக் கூறியதும், “பார்த்ததும் கெஸ் பண்ண நீ என்ன போதி தர்மரா?” என்றான் முறைப்புடன்.

“பாருடா, வெளிநாட்டுக்காரனுக்குப் போதி தர்மரெல்லாம் தெரிஞ்சுருக்கு.” அவள் விழி விரிக்க,

“போதி தர்மரே வெளிநாட்டுல டெத் ஆனவரு தானே… ஐ மீன் சைனால.” என்றதில் “ஆனாலும், அவர் தமிழ்நாட்டுக்காரர்னு ஏழாம் அறிவுல சூர்யா சொல்லிருப்பாரு.” எனச் சிலுப்பிக் கொண்டவள், “சரி, அதை விடுங்க. இங்க இருக்குறவங்க ஏன் என்னைக் கொலை பண்ணப் பார்க்கணும்?” என்றாள் மீண்டும்.

“ஏன், கொலை பண்ணக் கூடாது ரித்தி. உன் அப்பா ஐ மீன்…” சட்டெனக் குரலைத் தாழ்த்தியவன், “ரித்தியோட அப்பாவுக்கும், தட் இளவேந்தனுக்கும் ஏதோ சரி இல்ல. உன்மேல அவருக்கு குட் தாட்டும் இல்ல. சோ வாய்ப்பிருக்கு…” என யோசனையாகக் கூறினான்.

“நீங்க மழைக்குள்ள ஒருத்தனைத் தேடிப் போனீங்கன்னு சொன்னதும், அவர் தான் வேகமா ஓடுனாரு யாஷ். அப்படி அவரே என்னைக் கொலை பண்ண ஏற்பாடு செஞ்சுருந்தாலும், நான் தப்பிச்சுட்டேன்னு அவருக்குச் சின்ன வருத்தம் இருந்திருக்கும் தான… அப்படி எதுவும் அவர்கிட்ட நான் பீல் பண்ணல…”

மெல்ல எரிச்சலுற்றவன், “இப்ப என்ன, உன்னைக் கூட்டிட்டு வந்து கொலை பண்ண வைக்கப் போறது நான் தான்னு சொல்றியா?” எனக் காட்டத்துடன் கத்த,

“இ…இல்ல யாஷ்!” அவள் மறுக்கும் போதே, “சும்மா, இங்க இருக்குறவங்களுக்கே சப்போர்ட் பண்ணிட்டு இருக்க… இந்த வீட்ல ஒரு பெரிய மனுஷன் இருக்காரே, என்னைப் பக்கத்துலயே சேர்த்துக்கிட்டது இல்ல. என் மம்மா கூட நான் எப்போ தூங்குனேன்னு கூட எனக்கு ஞாபகம் இல்ல. ஆனா பப்பா கூடப் போகப் பிடிக்கலைன்னு அழுதது மட்டும் இன்னும் ஞாபகத்துல இருக்கு. என்னை வேணாம்னு தூக்கிப் போட்டவங்க, இப்ப விருந்து உபசரிப்பு செய்யறது எதுக்காம்? என் நிம்மதியைக் கெடுக்கத் தான?” அலையாய் பொழிந்த சீற்றத்திலும் குரலை உயர்த்தவில்லை அவன்.

அதுவே அவளை மிரள வைத்தது.

அந்நேரம் அவனது அலைபேசி அலற அதனை எடுத்துப் பேசியவன், “ம்ம் ஓகே ரித்தி… நீ ஓகே தான? ம்ம், நான் பார்த்துக்குறேன். டேக் கேர்…” எனச் சில நொடிகள் பேசியதிலேயே தெரிந்தது எதிர்முனையில் உண்மையான ரித்திகா என்று.

அவளருகில் இருக்கும் நேரமும் சில தடவைகள் அவள் அழைத்திருக்கிறாள். அப்போதெல்லாம், அவர்களின் பேச்சைச் சட்டை செய்ததில்லை.

இன்றேனோ, தானாகக் காதில் விழுந்த வார்த்தைகளை அலட்சியம் செய்வது போலப் பாவனை செய்து, இட்லியைப் பிய்த்துக் கொண்டிருந்தவளின் காதினுள் முண்டியடித்துக் கொண்டு விழுந்தது யாஷ் பிரஜிதனின் “லவ் யூ பேப்ஸ்!” என்ற வார்த்தைகள்.

“அட் அ டைம்ல ரெண்டு டிராக் ஓட்டிட்டுத் தெம்பா இருக்கான்யா” என முணுமுணுத்துக் கொண்டவளுக்கு அதற்கு மேல் இட்லி இறங்கவில்லை.

பின் மீண்டும் ஏதோ அழைப்பு வர அதையும் பேசி விட்டு வைத்தவனிடம், “நிவே பத்தி எதுவும் தகவல் கிடைச்சுதா யாஷ்?” எனக் கேட்டாள்.

“இப்ப வரை இல்ல, சீக்கிரமே கிடைக்கும்.” என்றவன் நெற்றியை ஒரு விரலால் தேய்த்தபடி, “உன் பேரண்ட்ஸ் பத்தி எதுவும் தெரியுமா?” என்றான்.

அதில் அவள் முகம் சுருங்கிப் போக, “நீங்களும் இந்தக் கேள்வியைக் கேட்டுட்டீங்கள்ல…” பாவையின் குரலில் அத்தனை ஏமாற்றம்.

அது அவனைச் சுட்டதோ என்னவோ, “நான் அப்படி மீன் பண்ணல நிதா… உன் அண்ணன் காணாமல் போனதுக்கான ரீசன், எங்க போயிருப்பான்னு ஒரு கெஸ் வேணும்னா, நீயும் கோ ஆபரேட் பண்ணனும் கடன்காரி… உன் அண்ணனோட போட்டோ தவிர எந்தத் தகவலும் பெருசா இல்லாம, தேடு தேடுன்னா எப்படித் தேட?” என்றவனின் கேள்வியில் சற்றே இலகுவானவள், “அதுக்கும் என் பேரண்ட்ஸ் பத்திக் கேக்குறதுக்கும் என்ன சம்பந்தம்? அவங்களை எல்லாம் நான் பார்த்ததே இல்ல. எனக்கு நெனைவு தெரிஞ்சதுல இருந்து நிவே மட்டும் தான் என்கூட இருக்கான்.” என்றாள் உர்ரென.

“ஃபைன்… பட் கதிரவன் வீட்டு மாடில உங்களை இருக்க வச்சது யாரு. யாரோ நீலகண்டன்ற பேர்ல தான் லீஸ் அக்ரீமெண்ட் இருக்கு.” என்றவனை விழி விரியப் பார்த்தவள், “அந்த லீஸ் அக்ரீமெண்ட் பத்தி எல்லாம் உங்களுக்கு எப்படித் தெரியும்?” என வியப்பாகப் பார்த்தாள்.

அவன் பேண்ட் பாக்கெட்டினுள் கையை நுழைத்து அமர்த்தலாக ஏறிட, ஒரே ஒரு கணம் ரசிக்க வைத்தான்.

யாஷ் நின்றிருந்த தோரணையின் மீதிருந்த பார்வையை அகற்றாதவளாக, “நானும், நிவேவும் சின்ன வயசா இருக்கும்போது நீலி மாமான்னு யாரையோ கூப்பிட்டதா ஞாபகம். என்னை விட நிவேவுக்குத் தான் அந்த நீலி மாமாவை நல்லாத் தெரியும். எனக்கு நீலி மாமா பேர் ரெஜிஸ்டர் ஆன அளவுக்கு அவர் முகம் மனசுல இப்ப இல்ல யாஷ். அவர்தான் என்னையும் நிவேவையும் வளர்த்தாருன்னு நினைக்கிறேன். எங்களைக் கதிர் வீட்டு மாடில தங்க வச்சுக் கொஞ்ச நாள்ல இறந்துட்டாரு. அதுக்கு அப்புறம் நானும், நிவேவும் தனியாகிட்டோம்.” என்றவளின் விழியசைவுகளும், அவ்வப்பொழுது வெளிப்பட்ட சோகமும் ஆடவனின் நெஞ்சை உருக்கும் அளவு அழுத்தமாய் இருந்தது.

“பட், அந்த நீலகண்டன் பத்தின எந்தத் தகவலும் கிடைக்கலையே. அவரோட போட்டோஸ் எதுவுமே…” நிதர்ஷனாவின் விழி முதல் துடிக்கும் இதழ் வரை அளவெடுத்தது யாஷின் பார்வை.

“போட்டோ எதுவும் இல்ல தான் யாஷ். ஆனா லீஸ்க்கு குடுத்த அக்ரிமெண்ட்ல, அவர் ஐடி எதுவும் இருந்துருக்கும் தான?” புருவம் சுருக்கி அவள் கேட்க ஒரு நொடி அமைதி காத்தவன், “அது அத்தனையும் ஃபேக்” என்றான் நிதானமாக.

“என்னது?” அதிர்ச்சியில் எழுந்தே விட்டவளுக்குக் காலை ஊன்ற இயலாமல் வலி கொன்றது.

“ஐயோ அம்மா…” என அலறியதில் ஆதிசக்தி அங்கு வந்து விட்டார்.

“என்ன ஆச்சு ரித்தி, ரொம்ப பெயினா இருக்கா?” என வருத்தமாகக் கேட்க,

“ம்ம்…” என்றாள் பாவமாக.

யாஷ் அவளைக் கைத்தாங்கலாக அமர வைத்து விட்டு, “இவளை அந்த வீட்டுக்குக் கூட்டிட்டுப் போறேன். அங்க எல்லாம் க்ளீன் பண்ணியாச்சா?” எனக் கேட்டான் தாயிடம்.

“கண்மணியும், சிந்தாவும் க்ளீன் பண்ணிட்டாங்க யாஷ். ஆனா இந்த மழைக்குள்ள அவளைக் கூட்டிட்டுப் போகாத. கொஞ்சம் எல்லாம் நார்மல் ஆகுற வரை இங்கயே இருங்க யாஷ் ப்ளீஸ்… இப்ப அங்கப் போறது சேஃப் இல்ல.” என்றதில் கேலி நகை அவனிடம்.

“இங்க மட்டும் சேஃப்டி அதிகமா இருக்கோ?”

ஆதிசக்தி சட்டென இறுகி, “இங்க உன்னை வரவச்சது நான். இங்க உங்களுக்கு என்ன ஆனாலும் அதுக்குக் காரணம் நான்தான் யாஷ். நானும், என்னைச் சம்பந்தப்பட்டவங்களும் உங்களைப் பாதுகாப்பாய் திருப்பி அனுப்பத்தான் நினைக்கிறோம். இனியொரு தடவை இங்க இருக்குற யாரையும் சந்தேகப்படாத ப்ளீஸ்…” என்றார் கெஞ்சலும் கண்டிப்புமாக.

“அதைச் சொல்ல உங்களுக்கு எந்த உரிமையும் இல்ல!” என்றவன், “யூ ஸ்டே ஹியர்…” என்று அவளை விட்டுத் தனது அலுவல் அறைக்குச் செல்லும் பொருட்டு பக்கத்து வீட்டிற்குச் சென்றான் குடையுடன்.

மாலை வரை அவனும் வீட்டிற்கு வரவில்லை. அவளும் மாத்திரையின் விளைவால் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்.

மாலை தாண்டிய பிறகே கண்மணி நிதர்ஷனாவை எழுப்பினாள்.

“அண்ணி கொஞ்சம் சாப்பிட்டுத் தூங்குங்க…” என்றதில், கண்ணைக் கசக்கிச் சோர்வாய் விழித்தவள், “யாஷ் வந்துட்டாரா?” என்றே முதல் கேள்வியைக் கேட்டாள்.

“இல்ல அண்ணி, நானா வர்ற வரைக்கும் டிஸ்டர்ப் பண்ண வேணாம்னு அண்ணா சொல்லிட்டுத்தான் போனாரு…”

“ஓ! அப்பச் சாப்பிடவும் வரலையா?” நிதர்ஷனா மீண்டும் கேட்க,

“ம்ம்ஹும்.” என்றாள் மறுப்பாக.

“நீங்க சாப்பிடுங்க அண்ணி. டேப்லட் போட்டுட்டு வெறும் வயித்தோட இருக்கக் கூடாது…” எனத் தட்டை நீட்ட, “யாஷ் வரட்டும் கண்மணி… நீ போய் அவரைக் கூட்டிட்டு வர்றியா?” என்றாள்.

“ஆனா, அண்ணா கோபப்படுவாங்களே அண்ணி…” கண்மணி தயங்க, “நான் கூப்பிட்டேன்னு சொல்லு.” என்றதும் மறுக்க இயலாமல் குடையை எடுத்துக்கொண்டு கிளம்பினாள்.

அப்போதே காற்றுப் பலமாக வீசத் தொடங்கியது. மழையின் வேகம் சற்றே குறைந்து பின் அதிகரித்தது.

வேலைக்கு நடுவில் இருந்தவனுக்குக் கதவு தட்டும் சத்தம் கோபத்தைக் கிளறியது.

‘என்னை எரிச்சல் படுத்துறதே இந்தக் குடும்பத்துக்கு வேலையாப் போச்சு.’ என்ற முணுமுணுப்புடன் கீழிறங்கி வந்தவன் கதவைத் திறந்து கண்மணியைத் திட்டப் போக, அவள் வேகமாய் “ஐயோ அண்ணா, நான் டிஸ்டர்ப் பண்ண வேணாம்னு தான் சொன்னேன். அண்ணி தான் உங்களைச் சாப்பிடக் கூப்பிட்டாங்க…” என்றாள் மடமடவென.

அவளது பயத்தில் சற்றே தணிந்தவன், “நான் பிரெட் சாப்பிட்டேன். அவளை ரெஸ்ட் எடுக்கச் சொல்லு.” என்றதில், “அண்ணியும் இன்னும் சாப்பிடல அண்ணா… உங்களுக்காகத் தான் வெய்ட் பண்றாங்க.” என்றதும் புருவம் சுருக்கினான்.

“ஏன்?” எனக் கேட்டு விட்டு அவள் விழித்ததும், “நீ போ, வரேன்” என்று அனுப்பி வைத்தவன், கதவைப் பூட்டி விட்டு நிதர்ஷனாவைத் தேடி வந்தான்.

“இப்போ பெயின் எப்படி இருக்கு ரித்தி?”

“ம்ம் பரவாயில்ல. வாங்க சாப்பிடலாம் பசிக்குது.” என வயிற்றைப் பிடித்ததில், “எனக்காக எதுக்கு வெய்ட் பண்ற?” எனக் கேட்க வந்தவனைத் தடுத்தது கிருஷ்ணவேணியின் குரல்.

“உன் பொண்டாட்டி நீ இல்லாமல் சாப்பிட மாட்டுறா தம்பி. நீயும் சேர்ந்து சாப்பிடு…” எனப் பெருமையாகக் கூறி விட்டுப் போக, “எனக்காக நீ… வெய்ட் பண்ற?” என நக்கலாகக் கேட்டவன், “நீ ஒரு ஃபுட்டீனு இங்க யாருக்கும் புரியலடி கடன்காரி!” என்றான் கேலியுடன்.

“போனா போகுதுன்னு வெய்ட் பண்ணுனா ரொம்பத்தான்…” என நொடித்துக் கொண்டவள், “நான் இன்னும் எவ்ளோ நாளைக்கு இப்படிப் படுத்தே இருக்கணும்.” என்றாள் பாவமாக.

“ஒரு ரெண்டு நாளைக்காவது கம்ப்ளீட் ரெஸ்ட்ல இருக்கணும் ரித்தி. காயம் ஆறுனா தான், உன்னால காலை ஊன்றவே முடியும்.” என்றதில் முகம் சுளித்தாள்.

“சரி, நான் ஹால்ல கூட உக்கார்ந்துக்குறேன். ஏற்கெனவே இன்வெர்ட்டர்ல பவர் கம்மியா இருக்கும், இதுல எனக்குன்னு தனி ஃபேன் எல்லாம் போட வேணாம்…”

“மத்தவங்க இருட்டுல இருந்தா பரவாயில்ல. யூ ஸ்டே ஹியர்!” என அதிகாரமாகக் கூறியதில், “ரொம்பத் தான்யா அழுத்தம் உனக்கு…” என்றாள் சிலுப்பலாக.

யாஷ் பிரஜிதன் தனக்கு வைத்த உணவை மிச்சமின்றி உண்டு விட, நிதர்ஷனா தான் ‘இந்தச் சாம்பார் சோறை இன்னும் எவ்ளோ நாளைக்குச் சாப்புடுறதோ’ என நொந்து கொண்டாள்.

அந்நேரம், காற்றுப் பலமாக அடித்ததில் வீட்டினுள் எதுவோ உடையும் சத்தம் கேட்க, யாஷ் பிரஜிதன் இன்றும் எவனோ தாக்க வந்து விட்டானோ என்ற எண்ணத்தில் வேகமாக வெளியில் சென்றான்.

வீட்டினுள் இருந்துதான் சத்தம் கேட்டதில் பக்கத்தில் இருந்த மற்றொரு அறைக்குச் செல்ல, அங்குப் புகைப்படம் ஒன்று காற்றின் தாக்கத்தில் கீழே விழுந்து நொறுங்கி இருந்தது.

அது மகேந்திரனும், அவரது மனைவி ஆண்டாளும் இணைந்து நின்றிருந்த புகைப்படம். மகேந்திரனிடம் இருந்த ஒரே புகைப்படம் அது மட்டுமே.

அந்தக் காலத்தில் எடுத்த புகைப்படம் ஆதலால், லேசாய் அழுக்குப் படிந்திருந்தது.

மகேந்திரன், உடனடியாக அதனை எடுத்து ஈரத்தை ஒற்றி எடுத்த பிறகும், ஈரத்தில் ஊறி இருந்தது ஜன்னல் வழியே வந்த மழைச்சாரலில்.

அடித்த பேய்க் காற்றில் ஜன்னல் கதவை மூடும் முன்னே மகேந்திரனின் அறையில் இருந்த பழைய அலமாரி ஆடியபடி கீழே விழப் போக, சத்தம் கேட்டு வந்திருந்த யாஷ் பிரஜிதன், அலமாரி விழாமல் பிடித்துக் கொண்டான்.

காலை ஊன்றி நடந்து வந்த நிதர்ஷனா, அவசரமாக ஜன்னல் கதவை அடைத்து விட்டு, “தாத்தா, அந்த போட்டோவைக் கீழ போடுங்க. கண்ணாடி எதுவும் குத்திடப் போகுது.” என்றாள்.

அவருக்கு அவளது வார்த்தைகள் எதுவும் காதினுள் செல்லவில்லை. நனைந்து நிறம் மங்கிப் போன, தன்னவளின் புகைப்படத்திலேயே விழிகள் தங்கி விட்டது அவருக்கு. அவரது ஆழ்ந்த மௌனத்தின் வழியே வெளிப்பட்ட அன்பின் எதிரொலிப்பு மற்ற இருவரையும் அமைதியாக்கி விட, மற்றவர்கள் மாடி அறைகளில் ஜன்னல்களை மூடும் பொருட்டு ஆளுக்கொரு அறையில் இருந்தனர். மாடியில் இருந்ததால், காற்றின் ஒலியில் இந்தச் சத்தம் சரிவரக் கேட்கவில்லை.

அலமாரியைச் சரியாக நிற்க வைத்தாலும், உள்ளே இருந்து நிறைய பொருள்கள் கீழே விழுந்திருந்தது.

அதனை நிதர்ஷனா எடுக்கப்போக, யாஷ் தடுத்தான்.

“ஆல்ரெடி உனக்கு அடிபட்டு இருக்குல்ல, நீ ரூமுக்குப் போ…” என உத்தரவிட, அந்நேரம் அவனுக்கு அலைபேசி அழைப்பு வந்ததில் வேகமாகத் தனது இருப்பிடத்திற்குச் சென்றான்.

அத்தியாயம் 21

அத்தியாயம் 21

யாஷ் அங்கிருந்துச் சென்றதும் மகேந்திரனைப் பார்த்தவள், “வேற போட்டோ ப்ரேம் பண்ணிக்கலாம் தாத்தா. இது ரொம்பப் பழசாகிடுச்சு…” என்றதில்,

என்ன மனநிலையில் இருந்தாரோ மெல்லப் பேசினார்.

“ஆண்டாள் ஞாபகமா இருந்தது இந்த போட்டா மட்டும் தான்!”

அக்குரலில் அத்தனை வலி வழிந்தோடியது.

சில நொடிகள் அமைதி காத்தவள், “ஒருத்தரை ஞாபகப்படுத்த அவங்க சம்பந்தப்பட்ட பொருள்தான் வேணும்னு இல்ல. அவங்களோட நினைவுகள் நமக்குள்ள முழுசா இருக்குறவரை ஞாபகங்கள் தொடர்ந்துட்டே தான் இருக்கும் தாத்தா…” என்றதில் அவர் விலுக்கென நிமிர, அந்நேரம் மற்றவர்கள் அங்கு வந்து சிதறிய பொருள்களைக் கண்டு பதறினர்.

சிந்தாமணி, “அக்கா, நீங்க வாங்க. மறுபடியும் கண்ணாடி குத்திடப் போகுது.” என நிதர்ஷனாவை அறையில் விட்டு விட்டு மகேந்திரன் அறையைச் சுத்தம் செய்தனர். ஆனால், மகேந்திரனின் பார்வை நிதர்ஷனா சென்ற திசையிலேயே படிந்து விட்டது.

மறுநாள் வரை யாஷ் அலுவல் அறையிலேயே இருந்திட, ‘என்ன தான் செய்யறான் இவன்…’ எனத் தலையைப் பிய்த்துக் கொண்டாள்.

மதியம் தாண்டிய வேளையில் தான், ஆதிசக்தியின் வீட்டிற்கு வந்தான். அவனது முகம் எப்போதும் விடப் பளிச்சென இருந்தது.

அவனை விழி விரித்துப் பார்த்தவள், “இந்த மழைக்குள்ள எங்க போய் பேஷியல் பண்ணிட்டு வர அரக்கா?” என நிதர்ஷனா கேட்க, “என்னது பேஷியலா?” என்றான் முறைத்து.

“ம்ம், ஆமா… இன்னைக்கு ஓவர் பிரெஷா இருக்கீங்களே?” என அவனை ஆராய,

அதில் மென்சிரிப்பு அவனிடம்.

“சொல்லிட்டுச் சிரிச்சா நானும் சிரிப்பேன்ல?” உதடு சுளித்துக் கேட்டவளிடம், “சொல்றேன்… இன்னும் ஒரு வாரம்! அப்புறம் இங்க இருந்து ப்ரீ பேர்டா நீயும் போயிடலாம், நானும் போயிடலாம்.” என்றவனின் இதழோரம் வெற்றி நகை வீச,

“ஏதோ கண்டு பிடிக்கணும்னு சொன்னீங்களே, அதை அத்தைகிட்ட இருந்து வாங்கிட்டீங்களா?” என்றாள் ஆர்வமாக.

அதற்குப் பதில் கூறாதவனாக, “முழுசா முடிச்சுட்டுச் சொல்றேன் கடன்காரி…” என்றவனிடம்,

“அப்போ ஒரு வாரத்துல, என்னை இங்க இருந்து அனுப்புறதுக்கு முன்னாடி நிவேவைக் கண்டு பிடிச்சுடுவீங்க தான?” எனக் கேட்டதில், அவனிடம் நீண்ட மௌனம்.

“இப்போ வரை அவனைப் பத்தி எந்தத் தகவலும் கிடைக்கல. பட் எப்பவா இருந்தாலும் அவனை உன் முன்னாடி நிறுத்துறது என் பொறுப்பு. ஓகேவா?” என மென்மையாய்க் கூற, கலங்கிய விழிகளைக் கட்டுப்படுத்தியவள், “இன்னும் கூட கண்டுபிடிக்க முடியாம, அப்படி அவன் எங்கதான் போயிருப்பான் யாஷ்?” அவளுக்கே தெரியாத கேள்விக்கான பதில், அவனுக்கு மட்டும் எப்படித் தெரிந்திட இயலும் எனப் புரிந்தும் ஆதங்கமாகக் கேட்டாள்.

“எனக்குச் சில டவுட்ஸ் இருக்கு. அதெல்லாம் க்ளியர் ஆகிட்டா, உன் பிரதர் பத்தின தகவலும் கிடைக்கலாம். எனக்குக் கொஞ்சம் டைம் குடு.” என்றதில் பலவீனமாகத் தலையாட்டினாள்.

அதில் அதிருப்தி அடைந்தவன், “என்னை நம்புற தான?” என அழுத்தமாகக் கேட்க,

“உங்களை நம்புறனால தான், நிவே கிடைப்பான்னு ஸ்ட்ராங்கா இருக்கேன்.” என்றதில் ஹேசல் நிறக்கண்களில் புதுப் பொழிவு.

“இந்த ஒரு வாரத்துல வேற எந்தச் சேதாரமும் எனக்கு இருக்காது தான?” நக்கலாக நிதர்ஷனா கேட்டதில், “இருக்காதுன்னு தான் நினைக்கிறேன்.” என்றவனின் அதரங்கள் புன்னகைக்க, “அடப்பாவி அரக்கா, எனக்கு அடிபடுறது உனக்குச் சிரிப்பா இருக்குல்ல…” எனச் சிலுப்பினாள்.

“உனக்குன்னே அளவெடுத்துச் செஞ்ச மாதிரி அடிபடுதே…” பாவம் போல அவன் உதட்டைப் பிதுக்க, “எல்லாம் எனக்குச் சேர்க்கை சரி இல்லாததுனால தான்.” என்றாள் நொடித்து.

“ஏய் கடன்காரி…” என அதட்டியவனிடம் ஏனோ கோபமில்லை.

அவளோ “சரி சரி, வா சாப்பிடப் போகலாம் பசிக்குது.” என எழ, “இப்போ பெயின் பரவாயில்லையா ரித்தி…” என்றான் அவள் காலைப் பார்த்து. இம்முறை அவன் கண்களில் சின்னதொரு வலி.

“பரவாயில்ல. இன்னைக்கு ஊன்ற முடியுது…” என்றவள் அவனை வலுக்கட்டாயமாக வரவேற்பறைக்கு இழுத்து வந்தாள்.

எப்போதும், தனியாக உணவு உண்ணும் மகேந்திரனும் அங்கேயே இருக்க, அவரது இருப்பு அனைவருக்கும் ஆச்சரியத்தைக் கொடுத்தாலும் எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை.

மகேந்திரன், நிதர்ஷனாவை ஒரு பார்வை பார்த்து விட்டுப் பின் கண்களைத் தரையில் புதைத்தார். காலையில் அவருக்கும் நிதர்ஷனாவிற்கும் நடந்த உரையாடல்கள் கண்முன் வந்து சென்றது.

காலையில் மழையின் பொழிவு சற்றே குறைவாக இருக்க, நொண்டியபடி அடுக்களைக்குச் சென்றவள் அங்குக் காலை உணவு துரிதமாக நிகழ்வதைக் கண்டு, “சாம்பார் வாசம் ரூம் வரைக்கும் வருதே பெரியம்மா” எனக் கிருஷ்ணவேணியிடம் இளித்து வைத்தாள்.

“அச்சோ, பசி வந்துடுச்சா ரித்தி. அவ்ளோ தான் ஆகிடுச்சு. யாஷ் தம்பி இன்னும் வரலையா?” கிருஷ்ணவேணி கேட்டதும், “இல்ல பெரிம்மா… வேலை போலருக்கு…” எனும்போதே ஆதிசக்தி வந்தார்.

“அண்ணி, அப்பாவுக்குச் சாப்பாடு எடுத்து வைங்க. நேத்து நைட்டும் அவர் ஒழுங்கா சாப்பிடல போல…”

“ஆமா ஆதி. அவருக்கு நேத்து போட்டோ உடைஞ்சதே மனசுக்கு ஒரு மாறி இருக்கு போல. வெள்ளிக்கிழமை அதுவுமா கண்ணாடி உடைஞ்சது எனக்கும் உறுத்திக்கிட்டே இருக்கு.”

“ம்ம்… அதுக்குத் தோதா ரித்தியோட உயிருக்கும் ஆபத்து இருக்குறதுல எனக்கும் மனசு சரி இல்ல அண்ணி… மழை கொஞ்சம் நிக்கவும், கோவிலுக்குப் போயிட்டு வந்துடலாம்.” ஆதியும் பரிதவித்தார்.

“கண்ணாடி உடைஞ்சா என்ன பிரச்சினை அத்தை?” நிதர்ஷனா புரியாமல் வினவ,

ஆதிசக்தி, “கெட்ட சகுனம்னு சொல்லுவாங்க ரித்தி. அதுவும் வெள்ளிக்கிழமை கண்ணாடி உடையக் கூடாதுன்னு ஒரு ஐதீகம்… வீட்ல உள்ளவங்களுக்கு ஆகாது…” என்றவரை வியப்பாகப் பார்த்தார்.

“நீங்க பெரிய ரிசர்ச்சர்னு கேள்விப்பட்டேன். நீங்க என்ன இவ்ளோ சென்டியா இருக்கீங்க?”

அக்கேள்வியில் முறுவலித்தவர், “இதை எல்லாம் நம்பாம இருந்தது ஒரு காலம் ரித்தி. அதே நம்ம பசங்களுக்கு ஆபத்துன்றப்ப இதெல்லாம் நம்பத் தான தோணுது!” என்றவரை ஆழ்ந்து நோக்கினாள்.

“சரி தான்… ஆனா, நானும் யாஷும் இந்த வீட்டாளுங்க இல்லை தான?” சுருக்கெனச் சொல்லி விட்டதும் ஆதிசக்தி திகைத்தார்.

“யாஷ் என் பையன் ரித்தி!” இறுகலாய் அவர் கூற,

“பயாலாஜிக்கல் மதரா இருக்கலாம்! பட் வளர்த்தது நீங்க இல்லையே.” அவள் யாஷைப் போலவே தோள் குலுக்கி விட்டுப் பின், ‘இப்ப என்ன நம்ம அந்தக் கலப்படக்கண்ணுக்காரன் மாதிரியே பண்ணிட்டு இருக்கோம்… சரி பண்ணுவோம், நல்லாத்தான் இருக்கும் அவன் ஆட்டிடியூட்!’ எனத் தனக்குள் சிலாகித்துக் கொண்டாள்.

அவளது குத்தலுக்கு எப்பதிலும் அளிக்காதவராக, ஆதிசக்தி வெளியில் சென்று விட, கிருஷ்ணவேணி மகேந்திரனுக்கு மட்டுமாக உணவை அடுக்களை ஓரத்திலேயே வைத்து விட்டு, மீதியை வரவேற்பறைக்குக் கொண்டு வந்தார்.

மாமியார் மருமகளின் உரையாடலைக் கேட்டு மனம் வருந்தினாலும், அவர் பேசி எதையும் பெரியதாக்கி விடக்கூடாது என்பதில் கவனமாக அமைதி காத்துக் கொண்டார்.

மீண்டும் அடுக்களைக்கு வந்த கிருஷ்ண வேணியிடம், “ஏன் பெரிம்மா, தாத்தாவுக்கு மட்டும் கிச்சன்குள்ளவே வச்சிருக்கீங்க?” என அவள் வினவ,

“மாமாவுக்கு இங்க உட்கார்ந்து சாப்புடுறது தான் பிடிக்கும் ரித்தி. அவரு எங்ககூடச் சேர்ந்து சாப்பிட மாட்டாரு.” என்றதில் அவரைப் புதிராகப் பார்த்தாள்.

“ஏனாம்?”

“தெரியல… அத்தையோட பழக்கமாம். அவங்க கிட்சன்ல உக்கார்ந்து தான் சாப்பிடுவாங்களாம்” எனும்போதே மகேந்திரன் அடுக்களைக்குள் வந்தார்.

வந்தவர் நிதர்ஷனாவையும், அவள் காலையும் பார்த்து விட்டு ஒன்றும் பேசாமல் உணவுத் தட்டிற்கு முன்னால் தரையில் அமர்ந்து கொண்டார்.

கிருஷ்ணவேணி அவருக்குப் பரிமாறி விட்டு, “நீ சாப்பிட வா ரித்தி…” என்று அழைத்து விட்டு வெளியில் செல்ல, அவளோ நேராக மகேந்திரனுக்கு அருகில் சென்று அமர்ந்தாள்.

தரையில் அமர இயலாமல் கால் வேறு வலிக்க, ஒரு காலை லேசாய் நீட்டி அமர்ந்து கொண்டவளை, “வெளில போய் டைனிங்ல உக்காரு… கீழ உக்கார முடியல தான.” என்றவரின் குரலில் அக்கறை தெறித்தது.

அதனை ஆச்சரியமாகப் பார்த்தவள், “உங்களுக்கு முறைக்க மட்டும் தான் தெரியும்னு நினைச்சேன் தாத்தா… இவ்ளோ கேரிங்கா பேசுவீங்களா?” என்றவளை மூக்கு விடைக்க முறைத்தவர் இட்லியில் கவனமானார்.

அவரைப் பேச வைக்க ஆண்டாளையே இழுத்தாள்.

“பாட்டி போட்டோ அது ஒன்னு தான் இருக்கா தாத்தா… உங்க கல்யாண போட்டோ கூட இல்லையா?” எனக் கேட்டதுமே உண்பதை நிறுத்தியவர், தானாகப் பதில் அளித்தார்.

“இல்ல. அப்போல்லாம் கல்யாண போட்டோ எடுக்குறது வழக்கம் இல்ல. கல்யாணத்துக்கு அப்புறம், ஸ்டூடியோல போய் ஒரே ஒரு போட்டோ எடுத்தோம். அதுக்கே அவளுக்கு வெட்கம் தாங்க முடியல…” எனும்போதே அவரது அழுத்த இதழ்கள் மெல்ல விரிந்தது.

அதில் யாஷின் சாயலும் இருக்க, அவனது முகமே கண்முன் வந்தாடியது.

மகேந்திரனோ மீண்டும் தொடர்ந்தார். “அதுவும், அப்போலாம் போட்டோ எடுத்தா ஆயுசு குறைஞ்சுடும்னு என் அம்மா போட்டா எடுக்க விட மாட்டாங்க… ஆனா என்னவோ, என் ஆண்டாளுக்கு ஆயுசு அப்பவும் நீடிக்கல.” என்றதில் அவளுக்கும் வருத்தமாகிப் போனது.

“பாட்டி மேல ரொம்ப லவ்வோ?” குறும்பாய் அவள் வினவியதில், பெரியவரின் முகத்தில் சிறு வெட்கம்.

“பிடிச்சு தான் கட்டிக்கிட்டேன்.”

“அப்பவே லவ் மேரேஜா தாத்தா?” விழி விரித்துக் கேட்டாள்.

அவர் மெல்லமாகத் தலையசைக்க, “எங்க பார்த்தீங்க பாட்டிய?” என ஆர்வமாகக் கேட்க,

“கோவில்ல. விடிகாலைல குளிச்சுத் தலை நிறையப் பூ வச்சுட்டுக் கோவிலுக்கு வந்துடுவா… பயபக்தியானவ! அவ்ளோ அழகா கந்த சஷ்டி கவசம் பாடுவா… அவளைப் பார்க்க நானும் காலைல சீக்கிரம் எந்திரிச்சுடுவேன்.” என்றவரின் கூற்றில் காதலின் ஆழம் பொதிந்திருந்தது.

“சூப்பரு! எப்போ லவ் சொன்னீங்க?”

“அதெல்லாம் சொல்லல. ரெண்டு பேரும் ஒரு செகண்ட் பார்த்துப்போம். அந்தப் பார்வையில தெரியும் எனக்கு அவளைப் பிடிக்கும்னு, அவளுக்கும் என்னைப் பிடிக்கும்னு… அதை வச்சு வீட்ல பேசுனேன். கல்யாணம் பண்ணிக்கிட்டோம்…”

பெரியவர்களின் புரிதலில் வியந்தவள், “பார்வையை வச்சே எப்படி லவ் பண்றாங்கனு சொல்ல முடியும் தாத்தா?” என்றாள் குழப்பமாக.

“முடியுமே! ஏன், நீயும் அந்த வெளிநாட்டுக்காரனும் பார்வையால பேசிக்கிறது இல்லையா?” அவர்களைக் கண்டு கொள்ளாத போல இருந்தாலும், நுணுக்கமாகக் கவனித்து இருக்கிறார் எனப் புரியச் சிலையானாள்.

தங்களது அன்பு வெறும் நடிப்பு தானே. அதில் எங்கிருந்து இவர் உண்மை அன்பைக் கண்டு கொண்டாரென்று புரியாதவளாகப் பேச்சைத் திசை திருப்ப முயன்றாள்.

“உங்க வீட்ல எதுவும் பிரச்சினை பண்ணலையா தாத்தா?”

“ம்ம்ஹும், என் விருப்பம் தான் என் அப்பா, அம்மா விருப்பமாவும் இருந்துச்சு. அதனால பிரச்சினை எதுவும் வரல. அழகா நிதானமா அவளைக் கட்டிக்கிட்டு, அவள் கூட நிம்மதியா இருந்தேன்…” பழைய நினைவுகளில் மூழ்கிப்போனார் மகேந்திரன்.

“சரி, அதுக்கு ஏன் இங்க உக்கார்ந்து சாப்புடுறீங்க?” நிதர்ஷனா கேட்க,

“ஆண்டாளுக்குக் கூச்ச சுபாவம் ஜாஸ்தி. எனக்கு ரெண்டு அண்ணனுங்க. அவங்க குடும்பம் எல்லாம் ஒரே வீட்ல தான் இருந்தோம். அதிர்ந்து கூடப் பேச மாட்டா. அதே மாதிரி மத்தவங்க முன்னாடி வந்து நிக்கக் கூட ரொம்பக் கூச்சப்படுவா. சாப்புடுறது கூட, அடுப்படியிலேயே சாப்பிட்டுப்பா. அவள் தனியா உக்கார்ந்து சாப்பிடுறது மனசு கேட்காது. அதுனால நானும் அவள் கூட அடுப்படில உக்கார்ந்து சாப்பிடுவேன். யார் கிண்டல் பண்ணுனாலும் கண்டுக்க மாட்டேன். ஆனா, அவள் சாப்பிட்டு முடிக்கிற வரை எனக்குச் சாப்பாடு இறங்காது.” என்றதில் அவள் ஏனெனப் பார்த்தாள்.

“என் ஆண்டாளு சாப்பிடுற அழகு அப்படி. விரலை இப்படிக் குவிச்சு வச்சுட்டு, இலைக்கும் விரலுக்கும் வலிக்காம சாப்பாடை எடுத்து அவள் சாப்பிடுற அழகு இருக்கே… பிடிச்சதோ, பிடிக்காததோ, இலைல இருக்கறதைச் சாப்பிடாம எந்திரிக்க மாட்டா. பிடிச்சதை அதிகமா வச்சுச் சாப்பிட்டதும் இல்ல. அந்த இலைல அவள் சாப்பிட்டு முடிச்சதும் நானும் அதே இலைல சாப்பிடணும்னு ஆசை வரும். சிலர் சாப்புடுறது அழகுமா… அந்த அழகு அவள்கிட்ட இருந்துச்சு. மூணு வேளையும் நான் சாப்பிட வீட்டுக்கு வர்றேனோ இல்லையோ, என் ஆண்டாளு சாப்புடுற அழகைப் பார்க்கக் கண்டிப்பா அவள்கூடச் சேர்ந்து சாப்பிட்டிருவேன்…” என்றிட அவள் சிரித்தாள்.

“இதைச் சொன்னா எல்லாரும் கேலியா சிரிப்பாங்க. சாப்பிடுறதுல என்ன அழகு இருக்குன்னு… அவள் சாப்பிடுறதைக் கண்ணு வைக்கறியான்னு… அது அப்படி இல்ல, அதுல இருக்குற அன்பை உணர்ந்தவங்க மட்டும் தான், அந்த அழகியலையும் உணர முடியும். அடுத்து அடுத்து வர்ற ஜெனரேஷன்க்கு இதைப் புரிய வைக்க முடியல. அதனால கண்மணி கேட்டால் கூட நான் விளக்கம் சொல்றது இல்ல… வெறும் பத்து வருஷம் தான் அவள் கூட வாழ்ந்தேன். அதுக்கு அப்புறம் தனியா உக்கார்ந்து சாப்புடுறது என் வழக்கம். அவள் என்கூட, என் பக்கத்துல உக்கார்ந்து சாப்புடுற மாதிரி நினைச்சுட்டே தான் சாப்பிடுவேன்…” எனும்போதே இத்தனைக் காலமாகியும் கண்கள் ஈரமானது மகேந்திரனுக்கு.

அவரது காதலின் மீது பெருமதிப்பே உருவானது. எத்தகைய அன்பு இது? நினைக்கவே சிலிர்த்தது அவளுக்கு. இதே போலான ஒரு காதல் வாழ்வை வாழ்ந்திட மனம் ஏங்கிட, எண்ணமேனோ மீண்டும் யாஷிடமே வந்து நிற்கத் திடுக்கிட்ட நெஞ்சத்துடன் மூச்சிரைத்தாள்.

கண்ணை இறுக மூடி அவனது முகத்தைக் கண்ணில் இருந்து துடைத்து விட்டவள், ‘அவன் மூஞ்சி வேற அப்ப அப்ப ஜூம்ல வந்து பயம் காட்டுது.’ எனக் கிண்டலடித்துக் கொண்டாள்.

தனது கவனத்தையே திசை திருப்பும் பொருட்டு,

“நீங்களே லவ் மேரேஜ் தான? அப்புறம் ஏன் அத்தையோட லவ்வை ஒத்துக்கல நீங்க?” எனச் சண்டைக் கோழியாய் சிலுப்பினாள்.

அவளிடம் பதில் கூற அவசியமில்லை தான். ஆனால், ஏனோ அவளிடம் பதில் கொடுக்காமல் அவரால் இருக்க இயலவில்லை. அவளிடம் என்ன மாதிரியாகத் தான் கட்டி இழுக்கப் படுகிறோமெனப் புரியாதவராக,

“அவளோட காதலுக்கு நான் எதிரி இல்ல. அப்படிப் பார்த்தா, இளாவோட தங்கச்சி ஒருத்தனை விரும்புறதா சொன்னதும், நான் ஒத்துக்கத் தான செஞ்சேன். அவனைப் பத்தி விசாரிச்சுக் கட்டிக் கொடுக்கவும் செஞ்சேன். ஆனா, அவனும் அவளை ஏமாத்திட்டான். என் பொண்ணு நம்பிப் போனவனும் ஏமாத்திட்டான். என் ரெண்டு பொண்ணுங்க வாழ்க்கையும் நரகமாகிடுச்சே!” மகேந்திரனின் குரல் வேதனையில் நடுங்கிற்று.

“சரி, கட்டிக்கிட்டவங்க தான் கெட்டவங்க… யாஷ் என்ன செஞ்சாரு?” என்ற கேள்விக்கு அவரால் பதில் அளிக்க இயலவில்லை.

“என்னவோ பிடிக்கல!” விட்டேத்தியாக அவர் பதில் அளிக்க, அவளுக்கு வந்ததே கோபம்.

“உங்க ஜாதி இல்லாம, வேற ஆளுங்களைக் கட்டிக்கிட்டதனால தான உங்களுக்குப் பிடிக்கல.” நிதர்ஷனா பொரும, மகேந்திரன் நெற்றிக் கண்ணைத் திறந்தார்.

“ஜாதி பார்த்து, மதம் பார்த்து, நான் யார்கிட்டயும் பழகுனது இல்ல பொண்ணே…” அவர் சீறிட,

“ஜாதி வெறி இல்ல, மத வெறி இல்ல… சரி தான்! அப்போ இது என்ன நிற வெறியா? ஒரு சின்னப் பையனை அவனோட அம்மாட்ட இருந்து பிரிச்சு இருக்கீங்க… இதே அவன் உங்க பொண்ணு மாதிரி நம்ம நாட்டுக் கலர்ல பிறந்திருந்தா விரட்டி விட்டிருப்பீங்களா தாத்தா? உருவமும், தோற்றமும் கண்ணுக்கு மட்டும் தான. அவருக்குள்ள உங்களோட இரத்தம் தான ஓடுது. நீங்க எந்த அன்பை இழந்துட்டுத் தவிச்சீங்களோ, அதே அன்பு அவருக்குத் தேவைப்படாமல் போயிருக்குமா தாத்தா… வெள்ளைத் தோள்ல பிறந்துட்டதுனால, மனசுல ஆட்டோமேட்டிக்கா மேல்நாட்டுக் கலாச்சாரம் வந்துடாதே. சரி அதெல்லாம் விடுங்க. வேற நிறம், வேற தோற்றம்னு தான உங்க பேரனை ஒதுக்கி வச்சீங்க. இன்னைக்கு லன்ச் அவர்கூடச் சாப்பிடுங்க, யார் யாரை இழந்தாங்கன்னு புரியும்…” அவளும் விடாது சினந்து விட்டுக் கால் வலியைப் பொருட்படுத்தாது வேக நடையுடன் அறைக்குச் செல்ல, பெரியவருக்கு வாயடைத்த நிலை தான்.

அவனது நிறமும், தோற்றமும் பிறந்ததில் இருந்தே ஒட்டவில்லை தானே அவருக்கு. கிட்டத்தட்ட அலெஸ்ஸாண்ட்ரோ போலான தோற்றம் கொண்டவனைத் தனது பேரனென எண்ண இயலவில்லை.

அலெஸ்ஸாண்ட்ரோ கொடுத்த அழுத்தத்தில், அவனது உறவே தனது மகளுக்கு வேண்டாமென முடிவெடுத்தவர், யாஷையும் தந்தையிடமே கொடுத்து விட வற்புறுத்தினார் அவர் பங்கிற்கு.

அதன்பிறகு, இப்போது தான் யாஷைப் பார்க்கிறார். தந்தையைப் போலவே தன்னைப் பார்க்கும்போது அவன் கண்களில் தெரிந்த வெறுப்பு அவரைச் சீண்டியது.

அதையும் மீறி, நிதர்ஷனாவின் மீது அவன் காட்டும் நேசம் ஒரு வகையில் ஈர்த்திட, அவனைச் சிறுவயதில் வெறுத்தது போல முழுதாய் வெறுக்க இயலாது அமைதி காத்தார்.

இப்போதோ, பெண்ணவளின் கோப வார்த்தைகளில் நெஞ்சுக்குள் என்னவோ ஒரு குற்ற உணர்வு. ஆகினும், அதனை ஒதுக்கித் தள்ளி விட்டு, தனது வீம்பில் பிடிவாதமாக இருந்தார்.

அவள் சவால் விட்டது போல, அன்று மதியம் அவனுடன் உண்பதற்காக அவரும் டைனிங் டேபிளிலேயே அமர்ந்தார்.

மகேந்திரனை நக்கலாகப் பார்த்து விட்டு, “என்ன ஒரு அதிசயம்! உங்க தாத்தாவுக்கு உங்க கூடச் சாப்பிடணும்னு ஆசை வந்துடுச்சு போலயே யாஷ்…” என அவனிடம் கேலி செய்ய, “மூடிட்டு உக்காரு!” என்றான் காட்டமாக.

அவன் உண்ணத் தொடங்கியதுமே, மகேந்திரன் உணவைக் கூட மறந்து விட்டு அவனையே திகைப்பாகப் பார்த்திருந்தார்.

ஆண்டாளைப் போல விரல் குவித்து, சிறு சிறு உருண்டைகளாகச் சோறை எடுத்து உண்டவன், தட்டில் வைத்த காய்கறி, கருவேப்பிலையைக் கூட வீணாக்காது நிதானமாய், அதே நேரம் ஆண்டாளிடம் அவர் ரசித்த அழகியலுடன் உணவு உண்டவனை உறைந்து பார்த்திருந்தார் மகேந்திரன்.

அன்பு இனிக்கும்
மேகா

Sorry for the late uds drs.. ooruku poitu vanthuten ini epi Mazhai la elaraiyum nanaichh current poga vaikiren 🙈🙈🙈🙈

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
21
+1
121
+1
11
+1
3

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment

    1. Very super sis… Grand pa now realise his mistake… Waiting next episode sis… 🙂