ஆதிசக்தி நிதர்ஷனாவின் கூற்று புரியாது மலங்க மலங்க விழிக்க, யாஷ் பிரஜிதன் நீரைத் துப்பி விட்டு “யூ…” என அவளை நோக்கி தீப்பார்வை வீசியதில் நிதர்ஷனா பயத்தில் வெளிறினாள்.
‘அய்யயோ’ எனப் பதறியவள், “அது அது…வந்து அத்த… நான் கொஞ்ச நாள் சென்னைல இருந்தேனா… அங்க இருக்குறவங்களோட பேசி பேசி அந்த ஸ்லாங் எனக்கும் லைட்டா ஒட்டிக்கிச்சு பேச நல்லாருக்கும் நீங்க வேணும்னா ட்ரை பண்ணிப் பாருங்களேன்!” என நாக்கைச் சுழற்றி டீசண்ட்டாக சமாளித்தாள்.
இருவருக்கும் அடிபட்டு இருந்ததில், அவரும் அதனைப் பெரியதாக எடுக்காமல், “சரி சரி ரெண்டு பேரும் கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க இங்கயே…” என்றதில், “நாங்க அங்க போறோம்…” என எழுந்தான் யாஷ்.
“அங்க போய் தனியா இருக்குறதுக்கு இங்க இருக்கலாம்ல யாஷ்!” ஆதிசக்தி ஆதங்கத்துடன் கேட்க,
“சர்ப்ரைஸிங்க்லி, ஆதிசக்தி அலெஸ்ஸாண்டரோவுக்கு பையன் தனியா இருக்கறதை நினைச்சு கவலை எல்லாம் வருது!” என்றான் கடுகடுப்பும் ஏளனப்புன்னகையும் கலந்து.
‘ஆதிசக்தி அலெக்ஸ்சாண்டரா? அலெக்ஸ்சாண்டர் எப்போ இந்தியாவுக்கு வந்தாரு…’ எனத் தான் பள்ளியில் வரலாற்று புத்தகத்தில் படித்த அலெக்ஸ்சாண்டர் எனத் தவறாக நினைத்து விட்டாள் நிதர்ஷனா. ஏற்கனவே வாயைக் கொடுத்து மாட்டி விட்டதால், நல்லவேளையாக இந்தக் கேள்வியை கேட்டு அவனிடம் வாங்கிக் கட்டிக்கொள்ளவில்லை.
ஆதிசக்தியின் முகம் இறுகிப் போனது.
“நான் இப்போ ஆதிசக்தி இளவேந்தன்” என மிடுக்காய் அவர் கூற, “தென் அப்படியே இருந்துருக்கலாமே மிஸஸ் ஆதிசக்தி இளவேந்தன்? யாஷ் அலெஸ்ஸாண்டரோவை இழுத்துப் பிடிச்சு வரவைக்காம நான் கேட்குறதை குடுத்துட்டு எப்பவும் போல உங்க ஓன் லைஃப பாத்துருக்கலாமே!” அதே மிடுக்கு அவனிடம் சற்றும் குறையவில்லை.
மகனின் வார்த்தைப் போரில் வெற்றி கொள்ள இயலாமல் ஆதிசக்தி திண்டாட, அவர்களது பேச்சு மற்றவர்களுக்கு சங்கடத்தைக் கொடுத்தது.
‘என்ன நான்ஸ்டாப்பா புரியாத சப்ஜெக்ட்டாவே பேசுறான்… இதுக்கு ரித்தியா நான் எதுவும் ரியாக்ட் பண்ணி என்னோட பங்களிப்பைக் குடுக்கணுமா?’ என உதட்டைக் குவித்து சிந்தனையில் ஆழ்ந்தாள் நிதர்ஷனா.
யாஷ் இறுகிய பாவனையுடன் கண்மணியை நோக்கி “டாக்டர அங்க அனுப்பி விடு…” என்று உத்தரவிட்டு விட்டு நிதர்ஷனாவை இழுத்துக்கொண்டு வீட்டிற்குச் சென்று விட, கண்மணிக்கு இப்படியாவது தன்னுடன் பேசுகிறாரே என்ற ஒரு நிம்மதி பிறந்தது.
ஆகினும், தாயை நிமிர்ந்து பாராதவளாக உள்ளே சென்று விட்டாள்.
ஆதிசக்தி அறைக்குள் புகுந்து கீழுதட்டைக் கடித்து தனது வேதனையை அடக்க, இளவேந்தன் அவர் தோளைத் தொட்டார்.
“இது உனக்கு தேவையா ஆதி. அவன் கேக்குறதை குடுத்துடலாமே. ஏன் இந்த மனக்கஷ்டம்” என வருந்தினார்.
அதற்கு பதில் சொல்ல இயலாதவருக்கு கண்ணில் நீர் கசிந்தது.
இளவேந்தனோ தொடர்ந்து, “எனக்கு என்னவோ அந்தப் பொண்ணை பார்த்தா ரித்திகா பீலே வரல. கல்கத்தால வளர்ந்த பொண்ணு மாதிரியும் தோணல… உன் பையன் எதுவும் தில்லாலங்கடி வேலை பாக்குற ஆள் இல்லை தான?” என்றார் சந்தேகமாக.
“சே சே… அப்டி எல்லாம் இருக்காது மாமா” என்ற ஆதிசக்திக்கும் புருவம் சுருங்கியது.
நிதர்ஷனாவைத் தனது அறைக்கு இழுத்துச் சென்ற யாஷ் பிரஜிதன், அவள் மீது கனல் பார்வையை வீச, அவளோ நைசாக நகர்ந்து நகர்ந்து சென்றாள்.
அவனும் அவளுக்கு முன்னே காலடி எடுத்து வைத்து, “உன்னை வாயை கண்ட்ரோல் பண்ணுன்னு சொன்னேனா இல்லையா?” என மணிக்கட்டை சுற்றியபடி அவளை நெருங்கினான்.
“தோ பாருயா. உன் பவரை எல்லாம் அந்த ரௌடிப்பசங்ககிட்ட காட்டுறதோட நிறுத்திக்க. என்மேல கை வச்ச…” என விரல் நீட்டி எச்சரித்தபடி, சற்றே வேகமாக பின்னால் நகர, “என்னடி செய்வ கடன்காரி…” என்றான் முறைத்து.
“மூஞ்சில தூசியை அடிச்சு விட்டுடுவேன்…” எனப் படபடவென மிரட்டினாள்.
“அதுக்கு உன் கை இருந்தா தான?” என எட்டி அவள் கையைப் பிடிக்க, அவளோ கரத்தை உருவிக் கொண்டு கட்டிலைச் சுற்றி ஓடினாள்.
“ஏய் நில்லுடி!” அவன் எச்சரிக்கையாய் கூற,
“நான் வேணும்னு பேசல அரக்கா. உங்க அம்மா டாக்டர் ஊசின்னு பேசுனதும் பயந்து தான் பேசிட்டேன். நான்லாம் ஜுரம் வந்தா கூட ஆஸ்பத்திரி பக்கம் தலை வைக்க மாட்டேன் தெரியுமா. நிவே மணக்க மணக்க மிளகு ரசம் வச்சு தருவான் அதுலேயே எல்லாம் சரியாப்போயிடும். எங்கனாவது கீழ விழுந்துட்டு வந்தா, மஞ்சளை அரைச்சு வச்சு விடுவான். அதுலயே காயம் ஆறிடும். எனக்கு அடிபட்டா அவன் அழுதுடுவான். அதுனாலயே நான் அடிபடாம பாத்துப்பேன்” என ஓடிக்கொண்டே தன் கையில் இருந்த காயத்தை ஒரு முறை பார்த்துக் கொண்டாள்.
“உன் செண்டிமெண்ட் சீனை நிறுத்திட்டு ஓடாம நில்லு” அவளது பேச்சில் ஏனோ வந்த கோபம் அவனே அறியாது பறந்திருக்க, இருப்பினும் மிரட்டலை நிறுத்தவில்லை.
“ப்ளீஸ் ப்ளீஸ் அரக்கா சார்…” எனக் கெஞ்சியும் அவளை சுற்றி வளைத்துப் பிடித்து விட்டவன், “ஏதாச்சு தப்பா பேசிட்டு ஓடிப் பிடிச்சு விளையாட கூடாது புரியதா?” என அவள் காதைப் பிடித்து திருகினான்.
“ஆஆ… ஐயோ கையா அது… சுத்தியலை வச்சு திருவுன மாறிக்க இருக்குயா. விடுயா விடுயா” எனப் பரிதாபமாகக் கெஞ்சியதுமே விட்டவன்,
“அடிபட்டா பிராப்பரா டாக்டர்கிட்ட காட்டணும். இல்லன்னா செப்டிக் ஆகிடும்…” என்றான் பொறுமையாக.
“ம்ம்க்கும் டாக்டர்ட்ட போவ காசு உன் அப்பாவா தருவாரு” என கழுத்தை வெட்டிக்கொள்ள, இம்முறை யாஷின் பார்வை அவள் மீது நிதானமாகப் படிந்தது.
அவளோ தொடர்ந்து, “அது இருக்கட்டும் யார் யாஷ் அந்த அலெக்ஸ்சாண்டர்?” எனக் கேட்டு வைக்க,
“வாட்? அலெக்ஸ்சாண்டரா?” அவனும் புரியாது பார்த்தான்.
“அதான் உன் அம்மாவாண்ட மல்லுக்கட்டிட்டு இருந்தியே”
“இன்னொரு தடவை இந்த ஸ்லாங் வந்துச்சு, வாயை கடிச்சு வச்சுடுவேன்” தீப்பொறி பறக்க யாஷ் கண்டித்ததும், “ஆத்தாடி” என வாயை மூடியவள் ‘சரியான இரத்தம் குடி குடிகாரனா இருப்பான் போல…’ என நொந்து கொண்டு, “அதான் உன் அம்மாகிட்ட பேசிட்டு இருந்தீல… அத கேட்டேன்” என்றாள்.
ஒரு நொடி சிந்தித்து விட்டுப் பின், “ப்ச் அலெஸ்ஸாண்டரோ என் டேடி” எனத் திருத்தினான்.
“அவர் உன் அப்பான்னா அப்போ இங்க இருக்குறவரு?” தலையைச் சொரிந்த நிதர்ஷனாவிடம், “என் மம்மாவோட ஹஸ்பண்ட்” என்றான் தோளைக்குலுக்கி.
“அட இன்னாயா…” என ஆரம்பித்தவன் அவனது பார்வை சூட்டில், “அட என்னங்க யாஷ் ஒரே குழப்பமா இருக்கு” என்று மாற்றிக்கொண்டாள்.
அவளது சமாளிப்பில் அவனே அறியாத சிறு நகை இதழ்களில் பரவ, அவளோ விடாமல் “அது சரி உங்க அம்மா நார்மல் கலர்ல தான் இருக்காங்க. ஆனா நீங்க மட்டும் எப்படி வெள்ளைக்காரன் மாறிக்க இருக்கீங்க?” என்றாள் யோசனையாக.
“என் பப்பா இத்தாலியன்”
“ஓஹோ! இப்ப எனக்கு ரொம்ப நல்லா புரியுது… அதாவது உங்க மதத்துல மட்டும் கலப்படம் இல்ல… பொறப்புலயும் கலப்படம் கரிக்ட்டா…” எனப் பேருண்மையைக் கண்டுபிடித்த பெருமையுடன் கேட்டாள்.
“ம்ம்” இறுக்கம் கொண்ட இதழ்களில் இருந்து உறுமல் மட்டும் வெளிவர, அங்கிருந்து நகரப் போனவனின் முகமாற்றம் அவளுள் சிறு கலவரம் புரிந்தது.
அதில் சட்டென “யாஷ்” என அழைத்து விட்டவள், அவன் நின்றதும் எதற்கு அழைத்தோமென தெரியாமல் திணறினாள்.
“அது வந்து… சாரி”
கண்ணைச் சுருக்கி ஏனென பார்த்தான் யாஷ் பிரஜிதன்.
“நான் கோவிலுக்குப் போவாம இருந்திருந்தா உங்களுக்கு பிளட் எல்லாம் வந்துருக்காதுல” அவளைக் காவு கொடுக்கவே அவன் கடத்தி இருப்பது தெரிந்தும் தன்னால் அவனுக்கு நேர்ந்த அசௌகர்யத்திற்காக மன்னிப்பு வேண்டியவளை விசித்திரமாகப் பார்த்தான் அவன்.
அவன் சந்தித்த மனிதர்களில் வித்தியாசமானவள்!
அந்நேரம் காலிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்க, யாஷ் செல்லும் முன்னே தனது அடிபடாத கையால் அவனைத் தடுத்தாள்.
“யாஷ் யாஷ்… டாக்டர் எல்லாம் வேணாம்னு சொல்லிடுங்க ப்ளீஸ்…” எனக் கெஞ்சுதலாகப் பார்க்க, “நோ வே!” என்றவன் வாசலில் கண்மணி அழைத்து வந்த மருத்துவரை உள்ளே அழைத்தான்.
கண்மணியும் கையில் சாப்பாடு கூடையுடன் வீட்டினுள் நுழைய, யாஷ் அவளை அழுத்தமாய் ஏறிட்டான்.
“அது அடிபட்டு இருக்குல்ல அண்ணா அதான்…” அவள் தயங்க, அவனது விழிக்கூர்மை இன்னுமாய் அதிகரித்தது.
“மழை வர்ற மாதிரி வேற இருக்கு. கரெண்ட்டுப் போனா ரோபோ வேலை செய்யாதுல” தலையாட்டி அவள் பரிதாபமாகக் கூற, “இன்வர்ட்டர் இருக்கு. அப்படியே இல்லைன்னாலும் நீ எதுவும் அங்க இருந்து எடுத்துட்டு வரத் தேவையில்லை. ஸ்டே இன் யவர் லிமிட்ஸ்!” என வார்த்தைகளைக் கடித்துத் துப்பினான்.
கண்ணில் நீர் கோர்க்க, கூடையை வெளியிலேயே வைத்து விட்டவளை கணக்கில் எடுக்காது மருத்துவருடன் தனது அறைக்குச் சென்றான்.
அங்கோ நிதர்ஷனா இல்லை. “ரித்தி எங்க இருக்க?” எனக் கேட்டபடி அறையில் சுற்றி முற்றித் தேடியவன், அவள் குளியலறையில் பதுங்கி இருப்பதை உணர்ந்து, “ரித்தி வெளில வா” என்றான் கதவைத் தட்டி.
“ம்ம்ஹும் நான் வரமாட்டேன். அந்த டாக்டரை வெளில அனுப்பு, இல்லன்னா நான் பாத்ரூம்க்குள்ளயே போராட்டம் நடத்துவேன்” என்றாள் வீம்பாக.
கண்மணி தான் ஒன்றும் புரியாமல், “அண்ணி… உங்களை செக் பண்ணத்தான் வந்துருக்காங்க. வெளில வாங்க…” என அழைக்க, “வரமாட்டேன் வரமாட்டேன்…” என்றாள் முடிவாக.
“இப்ப நீ வெளில வரல. பாத்ரூம்க்குள்ளயே உன்னை வச்சு பூட்டிடுவேன். ஜென்மத்துக்கும் நீ உள்ளேயே தான் இருக்கணும்…” என யாஷ் கடிந்திட, குளியலறையைச் சுற்றி முற்றி பார்த்தாள்.
“பரவாயில்ல யாஷ். இங்க சோறு போட்டு சாப்புடுற அளவு பளபளன்னு தான் இருக்கு. எனக்கு நேரா நேரத்துக்கு சோறு மட்டும் கதவு அடி வழியா குடுத்துடுங்க. நான் இங்க இருந்துக்குறேன்…”
“ஓகே ஓகே உன் இஷ்டம். பட் பாத்துக்கோ… பெரிய சைஸ் பாம்பு ஒன்னு சுத்துறதா கேள்விப்பட்டேன். மழை டைமா வேற இருக்கு… நீங்க கிளம்புங்க டாக்டர். நான் பாடியை போஸ்ட்மார்ட்டம்க்கு அனுப்பிக்கிறேன்” என்றான் எகத்தாளமாக.
பாம்பு என்றதும் பயந்து கதவைத் திறந்தாள்.
“என்னது போஸ்ட்மார்ட்டமா யோவ்!” என கத்தியவள், அவனது கடின முறைப்பில் அடங்கி, “யாஷ் ப்ளீஸ் யாஷ்” எனக் கெஞ்சி கதற, “என்கிட்டயே ஹைட் அண்ட் சீக் விளையாடுறியா?” என்று அவளை அப்படியே கையில் அள்ளினான்.
அதில் பேந்த பேந்த விழித்தவள், “யோவ் என்னத்துக்கு என்னை தூக்குற?” எனப் பதற,
“நீ ஆல்ரெடி பேசுன ஸ்லாங்ல வீட்ல எல்லாருக்கும் ஒரு டவுட் வந்துருக்கும். உன் கூட க்ளோசா இருந்தா தான் இந்த கண்மணி அப்படியே வீட்ல போய் சொல்லுவா. வாயை மூடிட்டு ஆக்ட் பண்ணு…” எனக் கடிந்தவன், அவளை மெதுவாய் மெத்தையில் படுக்க வைத்து, “டோன்ட் வொரி மை டியர் மின்னல், டாக்டர் உனக்கு வலிக்காம டெஸ்ட் பண்ணுவாங்க” என தனது இயல்பு மாறி கொஞ்சினான்.
“ஆத்தாடி ஆத்தா” நெஞ்சில் கை வைத்து அவனையே மிரட்சியுடன் பார்த்த நிதர்ஷனா, மருத்துவர் கையை சோதித்ததைக் கூட உணரவில்லை.
மருத்துவரோ ஒரு ஊசி போட்டுக்கொள்வது நல்லது என்று உரைக்க, “போட்டுடுங்க டாக்டர்” என்றவனை “அரக்கா…” எனப் பல்லைக்கடித்தாள்.
“அசையாம ஃபியூ செகண்ட்ஸ் இருந்தா, லைட்டா எறும்பு கடிச்ச மாதிரி வலிச்சுட்டு விட்டுடும் மின்னல். யூ மை டார்லிங்…” என அவளைத் தோளோடு அணைத்துக் கொள்ள, “யோவ் யோவ் ரொம்ப நடிக்காத. உன் தங்கச்சி உன்னைக் கண்டுபிடிச்சுட போறா… உனக்கு தான் ரொமான்டிக்கா பேச வரலையே. அப்பறம் ஏன் ட்ரை பண்ணுற…” எனக் கேலி செய்தாலும், அவனது நெருக்கம் அவளுக்கு இனிமை கொடுத்ததே உண்மை.
“வாயை மூடுடி” சிரித்தபடி அவள் மட்டும் கேட்கும்படி அதட்டியவன், அவள் கதற கதற ஊசியை போட வைத்து விட்டே மருத்துவரை அனுப்பினான். கண்மணியும் ‘அண்ணாவும் அண்ணியும் செம்ம பேர்’ என சிலாகித்துக்கொண்டே வீட்டில் சென்று அனைவரிடமும் சொல்லி வைக்க, இளவேந்தனுக்குள் நெருடிய சிறு நெருடலும் காணாமல் போனது.
மருத்துவரை அனுப்பி விட்டுத் தனதறைக்கு வந்த யாஷ் பிரஜிதன் கண்டது, கண்ணீர் கடலில் நீந்திக் கொண்டிருந்த நிதர்ஷனாவைத் தான்.
“ஏய் கடன்காரி எதுக்கு இப்டி உக்காந்து அழுதுட்டு இருக்க?”
“போடா அரக்கா… நிவே எல்லாம் இருந்திருந்தா எனக்கு ஊசி போடவே விட்டிருக்க மாட்டான் தெரியுமா. கல்நெஞ்சக்காரா” என அவனைக் குற்றம் சாட்டினாள்.
எப்போது பார்த்தாலும் ‘நிவே நிவே’ என்று அவள் உருகியது ஏனோ அவனுக்கு எரிச்சலைக் கொடுத்தது.
“போனா போகுதுன்னு, உனக்கு ட்ரீட்மெண்ட் பார்த்தா, ஆஃப்டர் ஆல் டெப்ட்ஸ்க்கு பயந்து உன்னை விட்டு ஓடிப்போன உன் ப்ரதர் கூட கம்பேர் பண்ற…” யாஷ் கடுகடுத்தான்.
“எங்க ஓடிப்போனாலும் திரும்ப என்னாண்ட வந்துடுவான் பாரு” அவள் சவால் விட,
“கிழிப்பான். இந்நேரம் எங்கயாவது பாதுகாப்பா அவனுக்குன்னு ஒரு லைஃபை லீட் பண்ணிட்டு இருப்பான்” என்றான் ஏளனமாக.
கண்ணைக் கரித்தது அவளுக்கு.
“என் அண்ணனைப் பத்தி அப்படி பேசாதீங்க யாஷ். அவன் ஓடிப்போனது தப்பு தான். ஆனா கண்டிப்பா என்னை நாட்டாத்துல விட்டுட்டுப் போகணும்னு போயிருக்க மாட்டான். நீங்க வேணா பாருங்க. நீங்க அந்தக் காசி பிரச்சினையை முடிக்கிறதுக்குள்ள அவன் சம்பாரிச்சு காசோட வந்துருவான்…” எனும்போதே குரல் நடுங்கியது.
“ஆமா, அவன் அம்பானிக்கு அசிஸ்டன்ட் வேலை பாக்க போறான் பாரு. வெறும் ஆறு மாசத்துல லட்சக்கணக்குல இயர்ன் பண்ணிட்டு வர்றதுக்கு…” என அசட்டையாகக் கூற,
“அப்போ… அப்போ அவன் ஓடிப்போகாம… அவனுக்கு ஏதாச்சு ஆகிருக்குமா? அப்படின்னா அவன் எங்க போயிருப்பான்” என்றவளுக்கு கண்ணில் இருந்து நீர் பொலபொலவென கொட்டியது.
அதில் சட்டென தனது வாக்குவாதத்தை நிறுத்தி விட்டவன், “அவன் ஓடி தான் போயிருப்பான் நிதர்ஷனா. நீ சொன்ன மாதிரி வந்துடுவான் விடு…” என மெலிதாய் அவளை சமன்படுத்த முயன்றான்.
“இல்ல… நீங்க பொய் சொல்றீங்க… அவனுக்கு ஏதோ ஆகிடுச்சு. அதான இப்படி எல்லாம் பேசுறீங்க. நீங்க சொல்றதைக் கேட்கணும்னு கதிரயும் சேர்த்து கடத்துன மாதிரி நிவேவையும் ஏதாச்சு செஞ்சுட்டீங்களா?” எனத் தேம்பியபடி கேட்க, அவனோ முகம் சிவந்தான்.
“உனக்கு என்ன பைத்தியமா? நான் இந்தியாவுக்கு வந்தே நாலு மாசம் தான் ஆகுது. நான் வர்றதுக்கு முன்னாடியே அவன் காணாம போயிருக்கான். தென், நான் எதுக்கு அவனை என்னவும் செய்யணும். எனக்கு வேற வேலை இல்லை பாரு… அப்டி செய்யணும்னா, கதிரையும் அப்படியே மிரட்டி மட்டும் விட்டுட்டு வீட்டுக்கு அனுப்பி இருக்க மாட்டேன். கொன்னு தான் அனுப்பி இருப்பேன்” என்றான் கர்ஜனையாக.
கதிருக்கும் எந்த ஆபத்தும் இல்லாமல், யாரிடமும் உண்மையை உளறி விடக்கூடாதென்றும் அப்படி உண்மையைக் கூறினால் உன் தோழியைக் கொன்று விடுவேன் என்று மிரட்டியும் அவனைப் பயமுறுத்தி தானே மீண்டும் வீட்டிற்கு அனுப்பி வைத்தான் அவன்.
தலையைக் குனிந்திருந்தவள் அமைதியாகி விட்டாள்.
“சைலண்டா இருந்தா என்ன அர்த்தம்?” குரலை உயர்த்தி கேட்ட யாஷிடம் நிமிராமலேயே, “எனக்கு என் அண்ணே வேணும். என் கடனை கூட நீங்க அடைக்க வேணாம். அவனை மட்டும் கண்டுபிடிச்சு குடுங்க. நாங்க ரெண்டு பேரும் சம்பாரிச்சு கட்டிக்கிறோம். எனக்கு அவனை எங்க போய் தேடன்னு தெரியல…” எனக் கேவலுடன் கெஞ்சுதலாக முடித்தாள்.
அவள் கண்ணீர் மீண்டும் அவன் மனத்தைக் குடைந்து எடுத்தது.
‘வாட் நான்சென்ஸ் பீலிங் இஸ் திஸ்’ எனக் கேட்டுக்கொண்டாலும் அவனிடம் பதில் இல்லை.
மெத்தையில் அவள் அருகில் சென்று அமர்ந்தவன், “அழுகாத” என்றான் அமைதியாக.
“உன்னை தான் சொல்றேன் நிதா. டோண்ட் க்ரை!” இம்முறை அழுத்தமாக கூறியதில் தேம்பல் விசும்பலாய் நின்றது.
“உனக்கு உன் பிரதர் மேல கோபமே இல்லையா?” ஏனோ கேட்க வேண்டும்போல தோன்ற கேட்டு விட்டான்.
“எதுக்கு கோபம்?”
“உன்னைக் கடன்ல விட்டுட்டுப் போயிருக்கான். அதுனால தான நான் சொல்றதைக் கேட்க வேண்டிய சிட்டுவேஷன் இருக்கு. பட் அது இல்லைனா கூட நான் சொல்றதை உன்னைக் கேட்க வச்சுருப்பேன். தட்ஸ் நாட் ஆன் இஸ்யூ” என்றவனின் திமிர் தோரணையை நிமிர்ந்து முறைத்தாள்.
“ஓ… நான் ஏதோ உனக்குப் பயந்து, வேற வழியில்லாம சொல்றதை கேட்டேன்னு நினைச்சுட்டு இருக்கியா அரக்கா. அதெல்லாம் ஒன்னும் இல்ல. நானே அந்தக் காசி கண்ணுல படாம எப்படிடா மறைஞ்சு போறதுன்னு நினைச்சுட்டு இருந்தேன். தெய்வம் மாறி வந்து என்னைக் காப்பாத்தி விட்டு, இதோ மூணு வேளையும் சோறு போட்டுட்டு இருக்க. என்ன தலைக்கு மேல கத்தி தொங்குது… ஆனாலும் நீ அதைக் குத்த விட மாட்டன்னு ஒரு நம்பிக்கை இருக்குயா அரக்கா…” என்றவளை முதன்முறை ரசனையாகத் தழுவியது அவனது விழிகள்.
“யாருன்னே தெரியாத உன்மேலேயே நம்பிக்கை வச்சுருக்கேன். என் கூட சின்ன வயசுல இருந்து வளர்ந்தவன் மேல எனக்கு நம்பிக்கை இருக்காதா? நீ வேணா பாரு… அவன் என் அண்ணனா திரும்ப வந்துடுவான். நீ ஊசி போட்டு விட்டதுக்கு உன்னை ரிவெஞ்ச் எடுக்க வைப்பேன்…” என உதட்டைப் பிதுக்கிக் கூறிட, பக்கென சிரித்து விட்டான் யாஷ் பிரஜிதன்.
அவனது சிரிப்பின் அவளது வட்ட விழிகள் விரிந்தது.
“அட சிரிங்க பாஸ் அடிக்கடி. அழகா இருக்கே உங்களுக்கு” என வியந்து போனவளை ஒற்றைப்புருவம் உயர்த்தி பார்த்து வைத்தான்.
அந்நேரம் மெல்லத் தூறலாக விழுந்த மழைத்துளிகள் வலுப்பெற்று சடசடவென பொழிய, மின்சாரமும் துண்டிக்கப்பட்டது.
அன்பு இனிக்கும்
மேகா