கண்மணி கண்ணைத் தேய்த்துக்கொண்டு தமையனைப் பார்த்தாள். “நான் அரைச்சே வச்சுருக்கேன் அண்ணா. எடுத்துட்டு வரட்டா” என உறக்கம் துறந்து கேட்க, “தேவை இல்ல. அந்த பிளான்ட்டும், வாட்ஸ் தட்?” என்ற கேள்வியுடன் மனையாளைப் பார்த்தான்.
அவளோ ‘ஹை… இந்த ரோபோக்குள்ளயும் ஒரு ரோமியோ இருக்கான்யா…’ எனக் குதூகலித்துக்கொண்டு, “அம்மிக்கல்லுங்க யாஷ்” என்றாள் பெருமையாய் சிரித்தபடி.
சிந்தாமணியோ, “அம்மிக்கல்லுமா வேணும்?” எனத் தலையை சொரிய, ஆதிசக்திக்கு ஒன்றுமே விளங்கவில்லை.
“அம்மிக்கல்லை என்ன செய்ய போறீங்க ரெண்டு பேரும்” என்றவர், “அது தனியா எடுக்கணும்ன்னா, பேத்து தான் எடுக்கணும் யாஷ். இந்நேரத்துல கடப்பாரையைப் போட்டு எடுக்க முடியாது” என்றதும், அவனுக்கு செருக்கு தலைக்கேறியது.
பணத்தைக் கொடுத்து விலையுயர்ந்த எத்தனையோ பொருள்களை வாங்கி இருக்கிறான். பல கோடிகள் பெறுமானம் உள்ள, உலகையே திரும்பி பார்க்க வைக்கும் விதமாக ரோபோடிக்ஸ் டெக்னாலஜியினுள் புகுந்து விளையாடிக் கொண்டிருக்கிறான். அவன் ஒன்றை கேட்டு இல்லை என்று மறுப்பதா?
அதைக் கேட்டது நிதர்ஷனாவாக என்றிருப்பினும், ஆஃப்டர் ஆல் இந்தச் சின்ன விஷயம் கூட தான் கேட்டு கிடைக்கவில்லை என்ற கோபம் அதிகரித்தது அவனுக்கு.
இதுவரை அன்பைத் தவிர அவன் கேட்ட எதுவும் கிடைக்காமல் போனதில்லை. கிடைக்காதென்று தெரிந்தும் அன்பைக் கேட்டு யாரிடமும் கெஞ்சி நின்றதில்லை அவன். அந்த ஆணவம் அவனை எப்போதும் நெஞ்சை நிமிர்த்தி நிற்கவைக்கும்.
“ஃபைன்…” என்றவனின் முகத்தில் தெரிந்த கோபத்தில் ஆதிசக்திக்கு ஒன்றுமே புரியவில்லை தான். ஆகினும் தான் கேட்டு கொடுக்க இயலாது எனக் கூறிய தன் மீது அவனுக்கு சினம் அதிமாகி இருக்கிறது என்று மட்டும் புரிய, “அதில்ல யாஷ், அவளுக்கும் அம்மில அரைக்க தெரியாதுல. கண்மணி தான் அரைச்சு வச்சுருக்கேன்னு சொல்றாளே. காலைல நானே அரேஞ்ச் பண்றேன்” என்றவரிடம் கெஞ்சுதல் தெரிந்தது.
இங்கு நிதர்ஷனாவோ அவனை சுரண்டினாள். “யார் அரைச்சா என்ன? ஒரு தடவை வாங்கிக்கலாம்ல…” என்றதில் அவளை முறைத்திட, அவளும் கெஞ்சல் பார்வை வீசினாள்.
“வாங்கிட்டு வந்து தொலை” என எரிச்சல் மிக வீட்டிற்கு சென்று விட்டதில், “ஐயா ஜாலி…” என்று உள்ளுக்குள் குத்தாட்டம் போட்டாள்.
“உள்ள வா ரித்தி” ஆதிசக்தி அழைக்க, “பரவாயில்ல அத்தை. ஏற்கனவே எல்லாரையும் டிஸ்டர்ப் பண்ணியாச்சு” என சமாளித்தவள், அவன் அனுமதி இன்றி உள்ளே செல்ல மறுத்து விட்டாள்.
ஏனென்றெல்லாம் அவளுக்கும் தெரியவில்லை. உள்ளே செல்ல கால் ஒத்துழைக்கவில்லை அவ்வளவே!
“கண்மணி அந்த மருதாணி கிண்ணம்” என அசடு வழிந்து கேட்க, சிரிப்பை அடக்கிக்கொண்ட கண்மணி, “அண்ணாவையே இங்க வர வச்சுட்டீங்க அண்ணி…” எனக் கிண்ணத்தை கொடுக்கும் போது பாராட்டிக் கொண்டாள்.
அவளுக்கு அது எல்லாம் ஒன்றுமே உறைக்கவில்லை. மருதாணியின் மீது கண்ணாக இருந்தவள், “தேங்க்ஸ் நாத்தனாரே” என அவள் கன்னம் கிள்ளி வீட்டிற்கு ஓடிப்போக, “இந்த அண்ணியை பார்த்தா கல்கத்தால இருந்து வந்த மாதிரியே இல்லப்பா. ரொம்ப சிம்பிளா இருக்காங்க.” என்று நடப்பது இன்னுமே புரியாமல் நின்றிருந்த இளவேந்தனிடம் கூறினாள்.
“சரி சரி போய் தூங்குங்க…” என அனைவரையும் அனுப்பி விட்டார்.
குடுகுடுவென அறைக்கு வந்தவவளை, “இனி அந்த வீட்ல இருக்குற எதையும் கேட்குற வேலை வச்சுக்காத புரியதா?” என்றான் அதட்டினான் யாஷ்.
கேவலம் ஒரு மருதாணிச் செடிக்காக தன்னை அவ்வீட்டில் நிற்க வைத்து விட்டாளே என்ற ஆத்திரம் அவனுக்கு.
அவளாக அவனிடம் கேட்கவில்லை என்பது உறைக்காமல் அவள் மீதே கோபம் கொண்டான்.
“சரி சரி இனிமே கேட்கல…” என அனைத்திற்கும் ஒப்புக்கொண்டவள், தரையில் அமர்ந்து கொள்ள அவன் புருவம் நெளிந்தது. காட்டப்பார்வையில் மாற்றமேதும் இல்லை.
அப்பார்வையின் பொருள் உணர்ந்தவள் போல, “உங்க பெட்ல எல்லாம் மருதாணி பட்டுட்டா அப்பறம் அதுக்கு வேற கத்துவீங்க…” என விளக்கம் கூறி விட்டு ஒரு உள்ளங்கையில் அழகாக வட்டங்களை வைக்கத் தொடங்கினாள்.
“யூஸ்லெஸ்…” பல்லிடுக்கில் கோபத்தைக் கொட்டி விட்டு சோபாவில் அமர்ந்து மடிக்கணினியைத் தட்டினான்.
தனது மொத்த சினத்தையும் அதனிடம் காட்டும் பொருட்டு கீ – பேடை படபடவென தட்ட, நிதர்ஷனாவோ உள்ளங்கையில் வட்டங்களை வைத்து முடித்து விட்டு, “யாஷ் இதோ பாருங்க… நல்லாருக்குல்ல” எனக் கையை நீட்டி காட்ட, ஏற்கனவே காட்டத்தில் இருந்தவன்
“இந்த சொரசொர கைக்கு எதை வச்சாலும் அக்லியா தான் இருக்கும்” என சீறினான்.
அனிச்சையாய் அவள் முகம் சுருங்கிப் போனது. “ரொம்பத் தான்…” என நொடித்துக் கொண்டாள்.
இங்கு கதிரவனுக்கோ உறக்கமே வரவில்லை. நிதர்ஷனாவின் முகம் வாடி இருந்ததே நினைவிலாட, “இவ்ளோ நாளும் நல்லா தான இருந்தா… இன்னைக்கு என்ன ஆச்சு?” என்ற வருத்தத்திலேயே உழன்றவன் அதற்கு மேல் முடியாமல், அவளைக் காண அறைக்கே சென்று விட்டான்.
தயங்கி தயங்கி அறை வாயிலை எட்டிப் பார்த்தான்.
மருதாணியின் மணம் அறையை நிறைக்க, அது தலைவலியை உண்டு செய்தது யாஷ் பிரஜிதனுக்கு. அதில் கதவு அனைத்தையும் திறந்து வைத்திருந்தான்.
தனது தோழி செய்யும் காரியத்தில் திகைத்துப் போனவன், விறுவிறுவென உள்ளே வந்து அவளை முறைத்தான்.
“அடிப்பாவி… என்ன பண்ணிட்டு இருக்க. உனக்கு தான் மருதாணி சேராதுல” என அலறிட, அவனைக் கண்டதும் வேகமாக கிண்ணத்தை முதுகுக்குப் பின்னால் மறைத்துக் கொண்டவள், “நீ எதுக்கு இங்க வந்த?” என்றாள் கடுப்பாகி.
“உன்னைக் கொல்ல போறேன். நிவே மட்டும் இருக்கணும் இப்ப. உன்னை தூக்கிப் போட்டு மிதிச்சுருப்பான்.”
“அதான் அவன் என்னை விட்டு ஓடிப்போயிட்டானே…”
“ப்ச் நிதா… ஏற்கனவே உனக்கு தலைவலி வந்து ஜலதோஷம் பிடிச்சுடும். வந்தா உடனே போகவும் செய்யாது. இப்படி ஏசிக்குள்ள உக்காந்து அதுவும் ராத்திரி நேரத்துல மருதாணி வைக்கிறியே உனக்கு ஜன்னியே வந்துடும் லூசு” என அதட்டிட,
“வாட்ஸ் ஹேப்பனிங்?” நெற்றியை நீவியபடி யாஷ் கேட்டான். அவன் விவரம் கூறியதும், “லீவ் ஹெர். சாகட்டும்” என்று அசட்டையுடன் கூறி விட்டு மீண்டும் மடிக்கணினியில் புதைந்ததில், நிதர்ஷனா அவனை முறைத்து வைத்தாள்.
‘இருடா… என்னையவா கண்ட்ரோல் பண்ணுற. உன்னைக் கதற விடுறேன் இரு…’ என சபதம் எடுத்துக்கொண்டவள், “கதிரு ப்ளீஸ் டா… நான் என்ன ஸ்கூல் காலேஜுக்கா போக போறேன். எப்படியும் சும்மா தான இருக்கபோறேன். ஜலதோஷம் வந்தா பிரச்சினை இல்ல. ஒரே ஒரு தடவை ப்ளீஸ்டா” எனக் கெஞ்சிட,
“ஏன் நிதா இப்படி பண்ற?” என அங்கலாய்த்தான் கதிரவன்.
“ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்…” பல ப்ளீஸ்களைப் போட்டு கதிரவனை தாஜா செய்ய, அதற்கு மேல் அவள் ஆசையை எப்படி தடுப்பான்.
“என்னமோ பண்ணு” என்று அவன் நகரப்போக, “வந்தது வந்துட்ட இந்தக் கைக்கு வச்சு விட்டுப் போ” என்றதும், “அடங்கவே மாட்டல்ல நீ…” என்று சிடுசிடுத்தபடியே அவளருகில் அமர்ந்து அழகாய் வைத்து விட்டான்.
“சிரிச்ச மாறிக்க வைடா… அப்பறம் எனக்கு செவக்காம போய்ட போகுது”
“ஈஈ போதுமா” எனும்போதே அவனுக்கும் சிரிப்பு வர, “இந்த மூஞ்சில எக்ஸ்பிரஷனை எதிர்பார்த்தது என் தப்பு தான்” என்று வாரினாள்.
அதில் இருவரும் சிரித்தபடி பேசிக்கொள்ள யாஷ் பிரஜிதனின் சினம் எல்லையைக் கடந்து சென்று கொண்டிருந்தது.
“போதுமா” கதிரவன் வைத்து முடித்ததும் கேட்க,
“அப்டியே பாதத்துலயும்” என மூக்கைச் சுருக்கி அவன் கால் பாதத்தை வைத்தாள்.
“ஜன்னி கன்பார்ம்! கதிரவன் முறைத்திட, அவளோ “வச்சு விடு. எப்டின்னாலும் வர தான போகுது…” என அதிகாரமாகக் கூறியதில், “எனஃப்…” எனக் கத்தினான் யாஷ்.
அதில் இருவரும் மிரண்டு திரும்ப, “கெட் அவுட்” என்றான் கதிரவனைப் பார்த்து.
அவனோ திருதிருவென விழித்தபடி, “காலுக்கு நாளைக்கு வச்சுக்கலாம் நிதா” என்று அவசர நடையுடன் ஓடி விட,
நிதர்ஷனா மூச்சிரைத்து, “என்ன பிரச்சினை உங்களுக்கு?” என்றாள் கோபமாக.
“இங்க நீ என் வைஃப்… அது ஞாபகம் இருக்கு தான?” பற்களைக் கடித்து அவன் கேட்க,
“அப்போ நீங்க வச்சு விடுங்க” என்று காலை நீட்டினாள்.
“வாட்? மீ?” அவன் கடுகடுப்புடன் கேட்க, “நீங்க தான வைஃப்னு சொன்னீங்க? எனக்குலாம் புருஷனா வந்தா தினமும் கால்ல விழுகணும்” என அவனை மடக்கினாள்.
“ஓஹோ!” என இடுப்பில் கையூன்றியவன், “அப்போ ரியல் ஹஸ்பண்ட் அண்ட் வைஃபா, ரெண்டு பேரும் பிஸிக்கல் இன்டிமசி பண்ணலாமா?” என்றான் எகத்தாளமாக.
“எதே?” விருட்டென எழுந்தவள், “ஹச் ஹச்” என நான்கு தும்மல்களை வரிசையாக போட்டாள்.
மூக்கை உறிஞ்சியபடி, “நான் எப்படி வந்தேனோ அதே மாறி தான் அனுப்புவேன்னு சொன்னீங்க. இப்ப என்ன இப்டி பேசுறீங்க?” என சண்டைக்கு நின்றவளுக்கு மீண்டும் நான்கு தும்மல் வரிசை கட்டி நின்றது.
அவனோ தனது ட்ராயரைத் திறந்து ஒரு மாஸ்க்கை எடுத்து அணிந்து விட்டு, “உன் வாயை அடக்கல. நான் குடுத்த பிராமிசஸ் ஒவ்வொண்ணா பிரேக் பண்ண வேண்டியது வரும்…” என்றவன் அவளை மேலிருந்து கீழ் வரை பார்த்து, “முதல்ல உன்னைப் பார்த்து எனக்கு பீலிங்ஸ் வரணுமே. சோ உன் இமேஜினேஷனைக் கம்மி பண்ணிக்கோ” என்று உதாசீனம் செய்து விட்டுச் செல்ல, அவளோ “போடா அரக்கா…” என வாய்க்குள்ளேயே முணுமுணுத்தாள்.
நேரம் செல்ல செல்ல தலை வலித்தது.
“கோல்டு ஆகிடுச்சா?” யாஷ் பிரஜிதன் கேட்டதும், பரிதாபமாகத் தலையசைத்தவளிடம், “ஃபைன்… நீ வேற ரூம்ல தூங்கு” என வெளியில் துரத்தி விட்டான்.
அப்போதும் கையைக் கழுவ மனமில்லை. மருதாணியைக் கழுவி விடலாமென்றால் இந்நேரத்துக்கு கைல பிடிச்சு இருக்காதே என்ற வருத்தம் எழ, நேரம் செல்ல செல்ல தலைவலி அதிகமே ஆனது.
கதிரவனுக்கு அவள் தனி அறைக்கு வந்தது தெரியவில்லை. அறைக்கதவு வேறு அடைத்திருக்க, “இவள் நல்லாருக்காளா இல்லையான்னு வேற தெரியலையே” எனப் பரிதவித்தான்.
நேரம் கடந்தும் உறக்கம் வராமல், யாஷின் அறைக்கதவைத் தட்டியும் விட்டான்.
உறக்கம் கண்ணில் நிறைய கதவைத் திறந்த யாஷ் பிரஜிதன், “வாட் மேன்?” என்றான் கடுப்பாக.
“அது… நிதா தூங்கிட்டாளான்னு பாக்க வந்தேன்…” எனத் தயங்கியபடி அறைக்குள் எட்டிப்பார்க்க அங்கு அவள் இல்லையென்றதும், “நிதா எங்க யாஷ்?” என்றான்.
“தட் ரூம்…” என அருகில் இருந்த மற்றொரு அறைக்கதவைக் காட்டி விட்டு, கதவை படாரென அடைத்து விட்டான்.
“அய்யயோ” என வேகமாய் அந்த அறையைத் திறந்தவன், காய்ச்சலில் கொதித்துக் கொண்டிருந்தவளைக் கண்டு பயந்து விட்டான்.
“அடிப்பாவி… இவ்ளோ கொதிக்குது. இப்பவும் கையைக் கழுவலயா நீ?” எனும்போதே அழுத்த நடையுடன் உள்ளே வந்தான் யாஷ் பிரஜிதன்.
அவளைத் தரதரவென குளியலறைக்கு அழைத்துச் சென்றவன், “எலிசா வார்ம் வாட்டர்” என உத்தரவிட, குழாயில் இருந்து மிதமான சூட்டில் நீர் வந்தது. அதில் அவனே அவள் கையைப் பிடித்து கழுவி விட, அவளுக்கு கண்ணையே திறக்க இயலவில்லை.
கையைக் கழுவியதில் அவள் உடையிலும் சிறிது ஈரம் பட்டுவிட்டது. உடையை மாற்றவில்லையென்றால், உடம்பின் சூடும் அதிகரித்து விடும் அபாயம் இருக்க, அவளைக் கையில் அள்ளி வந்து கட்டிலில் போட்டான்.
கதிரவனுக்கு இவன் ஏன் இதெல்லாம் செய்றான் என்ற எண்ணம் தான்.
“நான் பாத்துக்குறேன் யாஷ்…” என்றதும் திரும்பி அவனை ஒரு பார்வை பார்க்க, உள்ளுக்குள் குளிர் பரவியது அவனுக்கு.
“அவுட்!” யாஷ் பிரஜிதன் ஒரு சத்தம் கொடுத்ததில் மறுநொடி அவன் தெரு வாயிலுக்கே சென்றிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
மடமடவென அவள் அணிந்திருந்த சுடிதாரைக் கழற்றினான்.
“டேய் அரக்கா என்னை என்னடா செய்ற?” அரை மயக்கத்தில் அவள் பினாத்த,
“உன்னை எதுவும் செய்ற அளவு நீ ஒர்த் இல்ல” என்று சுடுசொல்லை விட்டு விட்டு, அவளுக்கு உடையை மாற்றினான். அப்போதும் அவளது சிறுத்த இடையின் ஓரத்தில் பதிந்திருந்த சிறு மச்சம் அந்த தங்க நிறக் கண்களுக்கு விருந்தானது.
உணர்வற்று அவளை படுக்க வைத்து போர்வையைப் போர்த்தி விட்டவன்,
ஒரு காட்டன் துணியை ஈரப்படுத்தி அவள் நெற்றியில் வைத்திட, “ஸ்ஸ்… குளுருது” என்றாள் முனைகலாக.
மருதாணியில் சிவந்திருந்த அவள் கரத்தை ஒரு முறை ஏறிட்டவன், அக்கரத்தை வெறித்து விட்டு, “எலிசா ரூம் ஹீட்டர்” என உத்தரவிட அறையே சூடாக மாறியது.
அவளது குளிருக்கு இதமாக இருக்க, அவள் வாயில் மாத்திரையைக் கரைத்து ஊற்றியவன், அவளருகிலேயே படுத்துக்கொண்டான்.
‘மெண்டல்… மருதாணி வைக்கிறேன்னு இரிடேட் பண்றா’ எனத் தனக்குள் கறுவியடிக் கொண்டவனின் கரங்கள் இலேசான சிவந்திருந்த கரத்தைப் பற்றிக்கொண்டது.
அடுத்த ஒரு வாரமும் சளி காய்ச்சலென்று ஒரு காட்டு காட்டி விட்டது அவளுக்கு.
விவரம் அறிந்து ஆதிசக்தி குடும்பத்தினர் அவளை வந்து பார்க்க, கண்மணியோ “உங்களுக்கு சேராதுன்னு சொல்லிருக்கலாம்ல அண்ணி” என்றாள் வருத்தமாக.
“சொல்லிருந்தா தர மாட்டியே…” என்றவளை சிறிதாக முறைத்தாள்.
யாஷ் பிரஜிதன் அவர்கள் வரும் நேரம் அலுவலக அறையை விட்டு நகரவே இல்லை.
சிந்தாமணி தான், “இது என்ன இந்த வீட்ல எல்லாமே ஹை டெக்னாலஜியா இருக்கு” என வியக்க, நிதர்ஷனாவோ, “க்கும்… இங்க சோறு கூட ரோபோ தான் குடுக்குது சிந்தா. வா நான் வீட்டைச் சுத்தி காட்டுறேன். உன் மாமா என்ன என்ன குறளி வித்தைக் காட்டி இருக்காருன்னு பாரு” என்று அனைவரும் வீட்டைச் சுத்தி காட்டியதோடு எலிசாவையும் அறிமுகம் செய்து வைத்தாள்.
உடல்நிலை சரியில்லாது படுத்த படுக்கையாக இருந்தவள், இப்போது குதூகலமாக வீட்டைச் சுற்றிக் காட்டிக் கொண்டிருந்ததில் அப்போது தான் அங்கு வந்த யாஷிற்கு கடுப்பாக வந்தது.
அவளைத் திட்ட வரும் முன், கண்மணி “இப்படி வீடு சுத்தி கேமராவும் மெஷினுமா இருந்தா பைத்தியம் பிடிச்சுடாதா?” என வருத்தமாகக் கேட்க,
அவளோ “சே சே… நாங்களே எலிசாவை ரேஷன் கார்டுல சேர்த்து விடலாமான்னு யோசிச்சுட்டு இருக்கோம் இல்லங்க யாஷ்” என அங்கு வந்தவனையும் உரையாடலில் சேர்த்துக் கொள்ள, கிருஷ்ணவேணியோ கமுக்கமாக சிரித்தார்.
“ஏன் ஆதார் கார்டும் வாங்க வேண்டியது தான?”
“அதுக்கும் அப்ளை பண்ணிருக்கோம் பெரிம்மா. வந்துடும்” என்றதில் குபீர் சிரிப்பு தான்.
இளவேந்தனுக்கும் அவளது பேச்சில் மெல்ல புன்னகை எழ, ஆதிசக்தியால் இதனை எளிதாய் ஏற்க இயலவில்லை.
அவரும் இந்த இயந்திரங்களுடன் மல்லுக்கட்டியவர் தானே. இது தரும் தனிமையும் அவருக்குப் புரியுமே. புரிந்தும், தனது மகனை இத்தனை வருடங்களும் இயந்திரங்களுடன் வாழ விட்டதில் மனம் வலித்தது.
அத்தனை ஆவேசமாக மகனைத் தன்னிடம் அனுப்பக் கேட்ட அலெஸ்சாண்டரோ அடிப்படை அன்பைக் கூட காட்டவில்லை என்பதும் புரிந்தது. அதுசரி, அவருக்கு அன்பென்றால் படுக்கையில் மட்டும் தானே! காதலித்து மணம் புரிந்த தனக்கே அப்படி என்றால், மகனுக்கு மட்டும் எப்படி கிடைத்திருக்கும்? ஏதேதோ எண்ணங்கள் அவரை வாட்டி எடுக்க, “உடம்பை பாத்துக்கோ ரித்தி” என மகனை நேர்கொள்ளத் தெம்பின்றி கிளம்பி விட்டார்.
அவரைக் கண்டுகொள்ளவே இல்லை யாஷ்.
“ரூம்க்குப் போ!” என நிதர்ஷனாவை விரட்டி விட, அழகேசனோ “இப்படி வீட்டுக்குள்ளேயே அடைஞ்சு இருக்காதீங்கப்பா. வெளில போனா தான பிரச்சினை நம்ம வீட்டுக்காச்சு வாங்களேன்” என மருமகனை அழைத்தார்.
அவன் அழுத்தப்பார்வை வீசியதும், “உங்களுக்கு வேலை இருந்தா, ரித்தியவாவது அனுப்பி வச்சா கண்மணி சிந்தா கூட பேசிட்டு இருக்கும்ல…” என்றதில், “அதான் நானும் சொன்னேன் பெரியப்பா” என நிதர்ஷனா சரணடைய, யாஷ் திரும்பி ஒரு பார்வை பார்த்ததில், “எனக்கு ரொம்ப தலைவலிக்கிற மாறி இருக்கு நான் போய் படுக்கிறேன்” என ஓடியே விட்டாள்.
கதிரவன் தான், “அடுத்த எபிசோட் எப்ப பாக்குறது” என யாரும் அறியாமல் சிந்தாமணியிடம் கிசுகிசுத்தான்.
“இன்னைக்கு எனக்கு காலேஜ் லீவ் தான். இன்னைக்கு பாத்துடலாம். லன்ச் முடிச்சுட்டு வந்துடுறேன். ஓகே வா” என அவளும் திட்டம் கூற, “டன்” என்றான் வேகமாக. கண்மணியோ இவர்களைக் கவனித்து “என்னடி?” என சிந்தாமணியிடம் கண்ணைக் காட்ட, அவளோ வெட்கத்துடன் விஷயத்தைக் கூறியதில், “த்து” என இருவரையும் பார்த்தே துப்பினாள்.
“ப்ளீஸ்டி வீட்ல சொல்லிடாத. அப்பறம் என் சி – டிராமாவையும் என் ஆளு சென் ஷெ யுவானயும் டைவர்ஸ் பண்ண வேண்டியது வந்துடும்.”
“யாருடி அந்த யுவன்?” கண்மணி புரியாது கேட்க,
“ம்ம் யுவன் சங்கர் ராஜா. உன் சைனீஸ்ல தீய வைக்க. யுவான்டி… மை க்ரஷ்” என கூச்சப்பட, கதிரவனும் வெட்கத்துடன் “லியாங் ஜியே என் ஆளு…” என்றான்.
“எது… லியோ ஜியோ வச்சுருக்காரா?” கண்மணி தலையைச் சொரிய,
“என்ன சிந்தா… உன்கூடவே இருக்குற கண்மணிக்கு கொஞ்சம் கூட டிராமா அறிவே இல்ல. சோ சேட்” என கதிரவன் வாரியதில், சிந்தாமணி சிரித்து விட, “அண்ணா” என்று சிணுங்கி முறைத்தாள் கண்மணி.
இவர்கள் சிரித்துப் பேசியதை யாஷ் கண்டுவிட்டு கதிரவனை முறைக்க, அவன் அசடு வழிந்து விட்டு பயத்தில் அங்கிருந்து நழுவி விட்டான்.
மேலும் இரு நாள்கள் கழிந்திருக்க, ரோபோ செய்யும் உணவில் வெறுத்துப்போன நிதர்ஷனா, தானே களத்தில் இறங்கும்பொருட்டு அடுக்களைக்குச் சென்றாள்.
யாரிடமோ போனில் பேசியபடி, “ஏய் கடன்காரி எங்க இருக்க?”எனக் கத்திக்கொண்டே வந்த யாஷ் பிரஜிதனிடம் “கிட்சன்ல இருக்கேன்” எனச் சத்தம் கொடுத்தாள்.
அதில் அங்கு வந்தவன், எவ்வித ஆர்பாட்டமுமின்றி, “நம்ம ட்ரிச்சிக்கு போகணும். கம்” என அழைக்க,
“இப்ப தான் ரசம் வைக்க புளியைக் கரைச்சேன்… ஆமா எதுக்கு?” என்றாள் புரியாமல்.
“உன் அண்ணனோட அடையாளம் உள்ள டெட் பாடி போலீசுக்கு கிடைச்சு இருக்கு. அது அவனான்னு ஐடென்டிஃபை பண்ண உன்னை வர சொல்லிருக்காங்க. மேக்சிமம் அவனா இருக்க சான்ஸ் இல்ல. பட் ஹேவ் டு செக்” என ஏதோ செய்தி வாசிப்பது போல விவரம் சொல்ல, இடிந்து போனாள் நிதர்ஷனா.
அன்பு இனிக்கும்
மேகா