Loading

மயங்கி விழுந்த கண்மணியை மடியில் தாங்கியபடி சிந்தாமணி பதறினாள்.

“கண்மணி எந்திரிடி…” என அவள் கன்னம் தட்ட, இங்கோ குருதி வழிய கிடந்த மர்ம நபரைக் கண்டு நடுங்கி கொண்டிருந்தாள் நிதர்ஷனா.

வன்முறைகள் அதிகம் இருக்கும் படங்களைக் கூட கண்டதில்லை அவள். அதனாலேயே கே.ஜி.எஃப் படம் கூட பிடிக்காமல் போனது அவளுக்கு.

யாஷ் பிரஜிதன் ப்ளூடூத்தின் வழியே யாருக்கோ பணிக்க, மடமடவென நான்கு ஆள்கள் வந்தனர்.

தப்பித்து ஓடியவனின் காலிலும் குறி பார்த்துச் சுட்டிருந்தான்.

“இந்த ரெண்டு பேர் யார் என்னன்னு எனக்கு உடனே தெரியணும்” எனத் தன் ஆள்களுக்கு ஆங்கிலத்தில் உத்தரவிட, உடனே அவர்கள் இருவரையும் அள்ளிச் சென்றனர்.

நிதர்ஷனாவின் புறம் திரும்பிய யாஷ் பிரஜிதன், “போய் கார்ல உக்காரு…” என்றிட,

அவளோ பயத்தில் அவனை விட்டு நகரவே இல்லை. “போன்னு சொன்னேன்!” என உறுமியதில் சட்டென விலகியவள், அவனை முறைத்துக்கொண்டு காரினுள் அமர்ந்தாள்.

“மாமா கண்மணி எந்திரிக்க மாட்டுறா…” சிந்தாமணிக்கு கிட்டத்தட்ட அழுகையே வரும்போல இருக்க,

காரில் இருந்து நீர் பாட்டிலை எடுத்துக்கொடுத்தவன், “தண்ணியை தெளிச்சு மயக்கத்தை தெளிய வச்சு வீட்டுக்கு கூட்டிட்டுப் போ” என அசட்டையாக உரைத்து விட்டு இருவரையும் ஒரு பொருட்டாக எண்ணாமல் வீட்டிற்குச் சென்று விட்டான்.

இத்தனை கலவரத்திலும் கண்மணியின் நிலைக்காக கவலை கொண்டாள் நிதர்ஷனா.

வீட்டினுள் நுழைந்ததும் தான் தாமதம்.

“அந்தப் பொண்ணை அங்கேயே விட்டுட்டு வந்துட்டீங்களே… நீங்கள்லாம் ஒரு அண்ணனா” என்று எகிறினாள்.

“நான் அண்ணன்னு சொன்னேனா?” அழுத்தமாய் அவன் பார்க்க,

“யோவ்… உன்னை நம்பி வந்தேன் பாரு என்னை சொல்லணும். யாருயா அவனுங்க என்னை ஏன் கொல்ல வந்தானுங்க” என்றவளுக்கு அதிகமாய் புரிய வைக்க அவசியமின்றி, “ஓ! ரித்தி மாதிரி எனக்கு மேக் அப் போட்டு, அவளோட இடத்துல என்னை இருக்க வச்சது என்னைப் பலி குடுக்கத்தானா?” என அஞ்சியபடி கேட்டாள்.

கதிரவன் இவர்களின் சத்தம் கேட்டு வெளியில் வந்து, நடுங்கிய தோழியைக் கண்டு அதிர்ந்தான்.

“நிதா என்ன ஆச்சு?” என அவள் கையைப் பிடிக்க, அவனையும் அந்தக் கையையும் அழுத்தமாய் ஏறிட்ட யாஷ் பிரஜிதன், “இங்க இருந்து வெளில போனா செகண்ட் லெஃப்ட், ஃபர்ஸ்ட் ரைட் டெட் எண்டுல டெம்பிள் இருக்கு. அங்க போய் அந்த ரெண்டு பொண்ணுங்களையும் கூட்டிட்டு வந்து வீட்ல விடு” எனக் கட்டளையிட, அவனோ தோழியைக் கண்டபடி நின்றான்.

“உன்னை தான் சொல்றேன். காதுல விழுகல…” யாஷ் குரலை உயர்த்தியதில், மனமின்றி கிளம்பினான்.

நிதர்ஷனாவோ, “அவனை ஏன்யா வெளில அனுப்புற? யாரும் துப்பாக்கியோட வந்துட போறானுங்க…” எனப் பயந்தாள்.

“ப்ச்… லுக். உன் கெஸ் கரெக்ட் தான். ரித்திக்கு பதிலா உன்னை இங்க இருக்க வைக்கிறதுக்கு ஒரு காரணம் என் குடும்பத்தை நம்ப வைக்க மட்டும் இல்ல. வரதராஜன் அங்கிளோட எதிரிகளை நம்ப வைக்கவும் தான்…” என்றான்.

“யாரு அந்த ஆளு?”

“ரித்தியோட அப்பா”

“அவர் பொண்ண அவரு பாதுகாக்க மாட்டாராமா?”

“கல்கட்டால ரித்திக்கு பாதுகாப்பு இல்ல. அதனால தான் தமிழ்நாட்டுக்கு அனுப்பி விட்டாரு. லிசன்… உனக்கு எல்லா விளக்கமும் குடுக்க முடியாது. இங்க இருந்து போற வரை உனக்கு ஒரு சின்ன கீறல் இல்லாம அனுப்புறது என் பொறுப்பு. எப்படி வந்தியோ அப்படியே தான் திரும்பி போவ. அதுவும் உன் வாயை கண்ட்ரோல் பண்றதை பொறுத்து…” என இறுதியில் ஒரு நக்கலுடன் முடித்தான்.

“என்னைக் கொண்டு வந்து பலியாடா ஆக்குவ. ஆனா விளக்கம் சொல்ல மாட்டியா அரக்கா. நீ மனுஷனே இல்ல தெரியுமா. செல்பிஷ் ஜெயண்ட்…” என்றாள் அழுகுரலில்.

“வாட் எவர்! இனி வெளில போக நினைக்க மாட்ட தான?” கேலியாய் பார்த்தவனை மூச்சு முட்ட முறைத்தாள்.

“இதே சின்ன கீறல் இல்லாம ரித்தியைக் கல்யாணம் பண்ணிட்டுப் பார்க்க வேண்டியது தான? நான் என்ன க்ரூப்ல டூப்பா?” எனக் கடுகடுத்தாள்.

“ஐ ஆல்ரெடி செட், உனக்கு தேவையான விளக்கம் கொடுத்தாச்சு. இனி இந்த வீட்டத் தாண்டி போக நினைக்காத தட்ஸ் இட்” என்றபடி மாடியேறிட, அவளோ விடவில்லை.

விறுவிறுவென அவனுடன் சென்றவள், “எனக்குத் தெரிஞ்சே ஆகணும்…” என்று நிற்க, அவனோ அவளை அசட்டை செய்யாமல் எலிசாவிடம் அவனது வேலை விஷயமாக ஏதோ பேசிக்கொண்டிருந்தான்.

மேலும் கண்ணாடி முன் நின்று, ஏதோ மீட்டிங்கிற்காக அவுட்ஃபிட் தயார் செய்யச் சொல்ல, “ஏய் எலிசா வாயை மூடு” என அதனைத் திட்டி விட்டு கண்ணாடிக்கும் அவனுக்கும் இடையில் சென்று நின்றாள்.

“இன்னைக்கு மட்டும் அவன் என்னை சுட்டுருந்தா என்ன ஆகியிருக்கும்? உன்கிட்ட துப்பாக்கி குண்டு வாங்கி என்னை தியாகியாகி சாக சொல்றியா அரக்கா. அந்தக் காசி பேச்சைக் கேட்டுருந்தா உயிரோடவாவது இருந்துருப்பேன். பேசாம அவனுக்கு நான் அஞ்சாவது கீப்பாவே இருந்துருக்கலாம்…” எனச் சொல்லி முடிக்கும் முன், காற்றில் பறந்து கொண்டிருந்தாள் அவள்.

அவன் தான் அவளை சிவந்த விழிகளுடன் கழுத்தோடு பிடித்து தூக்கி இருந்தானே!

“என்ன சொன்ன?” சிங்கத்தின் கர்ஜனை அந்தக் கேள்வியில்.

“நீயே போட்டு தள்ளிடாதயா… இறக்கி விடு… அரக்க்க்க்க்கா” பேச இயலாமல் அவள் தத்தளிக்க சற்றே நிதானித்து அவளை இறக்கி விட்டான்.

ஏன் கோபம்? எதற்கு கோபமென்று அவனுக்குத் தெரியவில்லை. மொத்தத்தில் கோபம் அவ்வளவே!

“எதுக்குயா என்னை நீயே கொலை பண்ண பாக்குற?” பரிதாபமாய் இருமியபடி கேட்டாள் நிதர்ஷனா.

“எப்ப பாரு லூஸ் டாக் விடுறதே வேலையா போச்சு உனக்கு. இடியட்!” எனக் கடிந்ததில், “பின்ன, என்னை அல்பாயுசுல எதையுமே அனுபவிக்காம சாவ சொல்றியா. புள்ள குட்டி எல்லாம் பெத்துக்குறதுக்கு முன்னாடியே செத்துப்போய் ஆவியா அலைய எனக்கு இஷ்டமில்ல…” என்றாள் உதட்டைப் பிதுக்கி.

அதில் சற்றே இளகியவன், “லூசு மாதிரி பேசாத நிதர்ஷனா” எனப் பின்னந்தலையை அழுந்தக் கோதியவன், “உனக்கு காசி தவிர்த்து யாராவது எதிரி இருக்காங்களா?” எனக் கேட்டான் தீவிரமாக.

“காசி இல்லாம நாலஞ்சு கடன்காரங்க தான் இருக்காங்க. ஆனாலும் அவனுங்க துப்பாக்கி வைக்கிற அளவு ஒர்த் இல்ல. ஏன்?” அவள் புரியாமல் பார்க்க,

“ரித்தியோட உயிருக்கு ஆபத்து இருக்குறது உண்மை தான். ஆனால் இங்க இல்ல. கல்கத்தால. நம்ம கல்யாணம் தவிர எல்லாமே படு சீக்ரட். நம்ம கல்யாணம் கூட எங்க நடந்துச்சுன்னு யாரும் ஃபைண்ட் அவுட் பண்ண முடியாது. ரித்தி இருக்குற இடத்தையும் யாரும் நெருங்க முடியாது நிதர்ஷனா. அண்ட் மோர் ஓவர், நம்ம தஞ்சாவூர்ல இருக்குறது இப்ப வரைக்கும் அவங்க எனிமீஸ்க்கு தெரியாது. எப்ப வேணாலும் கண்டுபிடிக்கலாம். ஆனா அதுவும் எனக்கு தெரிஞ்சு தான் நடக்கும்.

அவனுங்க யாருக்கும் என்னை எதிர்த்து உன்னைத் தொட ஐ மீன் ரித்தியைத் தொட தைரியம் கிடையாது. பிகாஸ், அவங்களுக்கு நான் தேவை. என் கண்டுபிடிப்பு தேவை. என் மூளை தேவை. சோ, என்னைப் பகைச்சுக்க யாருக்கும் விருப்பம் கிடையாது.

விருப்பமிருந்தா, என்னோட கோபத்துக்கு ஆளாக நேரும்ன்றது என்கிட்ட பலமா அடி வாங்குன எல்லாருக்கும் தெரியும். பட், இப்ப வந்த ரெண்டு பேருமே ரித்தியோட எதிரிங்க இல்ல. தஞ்சாவூர் பார்டரை தொட்டதுமே போலீஸ் எனக்கு புது ஆளுங்க இங்க துப்பாக்கியோட சுத்துறதா காலைலயே சொல்லிட்டாங்க. அது யார்னு நான் விசாரிக்கிறதுக்குள்ள உனக்கு துப்பாக்கியைப் பார்க்கணும்னு ஆசை வந்துடுச்சு” என நீண்டதொரு விளக்கம் கொடுத்தான்.

நிதர்ஷனாவிற்கு ஒன்றுமே விளங்கவில்லை.

“எனக்கு ஒரு எழவும் புரியல அரக்கா! உன்மேல இருக்குற பயத்துல உன் வைஃபை தொட மாட்டாங்கன்னா அப்போ நீ ரித்தியை கல்யாணம் பண்ணிட்டு பாத்துருக்கலாமே?”

“எஸ். அதுக்கான எல்லா ஏற்பாடும் நாங்க பண்ணுனோம். பட்… அவளுக்கு கொஞ்சம் ஹெல்த் இஸ்யூ ஆகிடுச்சு” என்றதில் நிதர்ஷனா என்னவென பார்த்தாள்.

“கில்லியன்-பாரே சிண்ட்ரோம். தட் மீன்ஸ், நரம்பு எல்லாம் மெதுவா ஒர்க் ஆகும். திடீர்னு கை கால் எல்லாம் மரத்துப் போன மாதிரி ஆகிடும். வாழ்க்கை முழுக்க பெட்ல இருக்குற டிசீஸ் இல்ல. டெம்ப்ரவரி தான். கண்டிப்பா அவ 4 டு 6 மந்த்ஸ் ட்ரீட்மெண்ட் அண்ட் ரெஸ்ட்ல இருக்கணும்.

ஒரு தடவை அங்கிளோட எனிமிஸ் அவனை அட்டாக் பண்ண வந்ததுல அவள் ரொம்ப பயந்துட்டா. ஸ்ட்ரெஸ் ஆகுறது அவள் ஹெல்த் கண்டிஷன்க்கு நல்லதில்லை. சோ, அவள் பக்கம் எந்த எதிரிகளும் போக கூடாது அப்டின்னா, அவளை நான் கல்யாணம் பண்ணிக்கிட்டதா நம்பனும். அவள் ஹாஸ்பிடல்ல இருக்குறது தெரிஞ்சா எந்நேரமும் அட்டாக் நடக்கலாம். சோ, வேற வழி யோசிக்கும் போது தான்…” என அவன் முடிக்கும் போதே,

“இளிச்சவாயா நான் கிடைச்சேன்” என அவள் நொடித்தாள்.

“தெரிஞ்சா சரி…” யாஷ் முணுமுணுக்க, “பக்கா கடைஞ்செடுத்த சுயநலம்…” பல்லைக்கடித்து நிதர்ஷனா பொங்க,

“இதோ பாரு. உனக்கு பணத்தேவை. எனக்கு நீ தேவை. அதுக்காக உன்னை பலி குடுக்குற எண்ணம் எனக்கு இப்போ வரை இல்லை. அதுவரை நீ தப்பிச்சுருப்ப. காசிட்ட போய் சாகுறதுக்கு என்கிட்ட இருந்து சாவு. உனக்கு மாலை மரியாதை செஞ்சு அனுப்பி வைக்கிறேன்” என்று முந்தைய நாள் அவள் பேசியதற்கு பழி தீர்த்துக்கொண்டான்.

“என்னை ஏமாத்தி கூட்டிட்டு வந்துட்டல்ல…” கண்ணில் நீர் வைத்து விட்டாள்.

“ப்ச் உனக்கு நான் சொல்றது மரமண்டைல உறைக்கிதா இல்லையா நிதா. இப்ப வந்தது யாருன்னே எனக்கு தெரியாது. எங்களோட எதிரிகளும் கிடையாது. உனக்கு சம்பந்தப்பட்ட யாரோ தான் உன்னைக் கொலை பண்ண வந்துருக்காங்க” யாஷ் பிரஜிதன் எரிச்சலுடன் புரிய வைக்க முயன்றான்.

“என்னை சம்பந்தப்பட்டவங்கன்னா யாரு?”

“அது எனக்கு எப்படி தெரியும், நீ தான் சொல்லணும். உன் வாய் தான் உனக்கு பெரிய எதிரி. யார்கிட்டயாவது வம்பிழுத்து வச்சியா?”

“என் ஏரியாண்ட எல்லார்ட்டையும் தான் வம்பிழுத்தேன். எவன்னு நினைக்கிறது யாஷ். அதுவும் இல்லாம, துப்பாக்கியைத் தூக்கிட்டு வர்ற அளவு எவனுக்கும் தைரியம் இல்ல”

“ம்ம்ம்… காலேஜ்ல, வேற எங்கயும் எதுவும் ப்ராபளம். இந்தக் கடன் பிரச்னையை தவிர்த்து” எனக் கேட்டான்.

அவளோ யோசனையாக, “ம்ம்ஹும் அப்படி எல்லாம் எதுவும் இல்லையே யாஷ். நான் சுத்தி முத்தி அந்த நாலு தெருவை தாண்டி அவ்ளோவா வெளில போனது இல்ல. காலேஜ் போவேன் வருவேன் அவ்ளோதான். யார்டையும் நான் பேசுனதே இல்ல” என்றவளை இடுப்பில் கை வைத்து பார்த்தான்.

“பேசுனதே இல்ல. நீ…?” என நம்ப இயலாமல் கேட்க,

“அட நெசமா அரக்கா. யார் பேசுனாலும் என் அப்பா அம்மா என்ன பண்றங்க. எங்க இருக்காங்கன்னு கேட்பாங்க. எனக்கு அதனால பேச பிடிக்காது. நீ தான் இதுவரை அந்தக் கேள்வியை கேட்கவே இல்லை. அதனால உன்னாண்ட ஈஸியா பேசிட்டேன்” என்றவளை நொடிக்கு அதிகமாய் உள்வாங்கியது அந்த மஞ்சள் பச்சை கலந்த தங்க விழிகள்.

அவளோ மீண்டுமாக யோசித்து, “எப்படினாலும் நீங்க என்ன கடத்துனது யாருக்குமே தெரியாது தான யாஷ். அப்படி ஏரியால ஒருத்தனுக்கு தெரிஞ்சுருந்தா கூட கதிர் அம்மாவுக்கும் தெரிஞ்சு இங்க வந்து ஆட்டமா ஆடி தீர்த்துருக்குமே. அதுக்கு சொம்மாவே என்னை புடிக்காது. இதுல நான் என்னவோ அது புள்ளையை தள்ளிட்டு வந்த ரேஞ்சுக்கு பேசும்” என்றவளின் கூற்றை நிதானமாய் சிந்திருந்தான் யாஷ் பிரஜிதன்.

“வேலிட் பாயிண்ட். ஆனா, கண்டிப்பா என் சம்பந்தப்பட்டவங்க இல்ல. அவங்க யாருக்கும் தமிழே தெரியாது கடன்காரி. ஓகே… நான் விசாரிக்கிறேன். உன் பிரதர் திருச்சி தான வந்ததா சொன்ன…” எனத் தாடையை தடவிக் கொண்டவன், “அவனைப் பத்தியும் விசாரிக்க சொல்றேன்” என்றான்.

சட்டென விழிகள் மின்ன, “என்ன அண்ணனை தேட போறீங்களா யாஷ்?” என ஆர்வமாகக் கேட்டாள்.

அந்த படபடக்கும் இமைகள் கண்டு என்ன நினைத்தானோ, மேலோட்டமாக விசாரிக்க எண்ணியவன், தேடுவதாக ஒப்புதல் அளித்தான். அதில் பூமுகம் குழப்பத்தை விடுத்து தெளிந்தது.

—-

யாஷ் பிரஜிதன் விட்டுச் செல்வானென்று சிந்தாமணி எண்ணவே இல்லை. கோபம் வேறு வந்தது. அதை விட கண்மணி எழும்பாமல் இருந்ததில் பயமும் வந்தது.

அந்நேரம் கதிரவன் அங்கு வந்து கண்மணி மயங்கிருப்பதைக் கண்டு, “என்ன ஆச்சு?” என வினவினான்.

“நீங்க ஏன் வந்தீங்க?” யாஷின் மீதிருந்த கோபத்தை கதிரவனிடம் காட்ட, அவனோ “இல்லங்க… யாஷ் தான் உங்களை வீட்ல விட சொன்னான்” என்றதில் “அம்போன்னு விட்டுட்டுப் போனவருக்கு எதுக்கு திடீர்னு அக்கறை வருது?” எனப் பொங்கினாள்.

“அதை நீங்க அவன்கிட்ட தான் கேட்கணும். வேணும்னா ஏணி தரேன் அதுல ஏறி கேட்டுப்பாருங்க…” என்று நக்கலடித்தவன், “அந்தப் பொண்ணு வாயில கொஞ்சம் தண்ணியை ஊத்துமா. எவ்ளோ நேரம் சுட்டெரிக்கிற வெயில்ல மல்லாந்துருக்கும்” மீண்டும் ஒரு கிண்டல் அவனிடம்.

அவனை முறைத்து வைத்த சிந்தாமணி, சில நிமிட போராட்டத்தில் கண்மணியை எழுப்பி விட, அங்கு நடந்த கலவரம் சுற்றியுள்ளவர்களால் இளவேந்தனின் காதிற்கும் எட்டியது.

அவர் வருவதற்குள் கதிரவனே ஒரு ஆட்டோவில் இரு பெண்களையும் ஏற்றி விட, “நீங்க ஏறுங்க” என்றாள் சிந்தாமணி. “இல்ல பக்கம் தான நான் நடந்து வந்துடுறேன்…” என்றவன் பின்னேயே நடந்து வந்தான்.

சிந்தாமணி கண்மணியைக் கைத்தாங்கலாகக் அழைத்து வருவதைக் கண்டு பதறிய இளவேந்தன், “என்னமா ஆச்சு?” என்க,

“அது… ஒன்னும் இல்ல மாமா. இவள் கோவில்ல மயங்கிட்டா…” என்றபடி உள்ளே சென்றனர். வேகநடையுடன் அங்கு வந்த கதிரவன் அவர்கள் வீட்டினுள் சென்று விட்டதைக் கண்டு, அவனும் பக்கத்து வீட்டிற்குச் சென்று விட்டான்.

கணவன் மூலம் விஷயம் அறிந்த ஆதிசக்தி, சிந்தாமணியை அதட்டினார்.

“அறிவில்லையா உனக்கு. நீங்க கோவிலுக்குப் போறதுன்னா போக வேண்டியது தான? ரித்திகாவை எதுக்கு கூப்பிட்டீங்க?”

சிந்தாமணி அச்சத்துடன் பார்க்க, கண்மணி தான் “நா… நான் தான் அவளை கூட்டிட்டுப் போனேன்” என்றாள் தலை கவிழ்ந்து.

அதில் மகளைப் பாராமல் சிந்தாமணியை ஏறிட்டவர், “ஏதோ நான் கூப்பிட்டுட்டதுனால மட்டும் யாஷ் இங்க வரல சிந்தா. அந்தப் பொண்ணோட உயிருக்கு ஆபத்து இருக்குனு தான் தமிழ்நாட்டுக்கு கூட்டிட்டு வந்துருக்கான். இங்க அவள் சேஃப்டியா இருக்க முடியும்னு தான் வீட்லயும் அவ்ளோ செட்டப் பண்ணிருக்கான். ஆனா இங்க… எப்படி வந்தாங்க…” என நெற்றியை நீவி யோசித்து விட்டு, “ப்ச்… இனி அவளை வெளில எங்கயும் கூப்பிடாத சிந்தா” மகளுக்கும் சேர்த்து வந்த கட்டளை அது என்று புரிந்தது.

கண்மணி அப்போதும் தாயை நிமிர்ந்து பார்க்கவில்லை. இருவருக்குள்ளும் நிகழும் பாராமுகம் பல வருடங்களாய் நிகழ்வது தானே.

“ஓ… ஆபத்து இருக்கறதுனால தான், உள்ள அவ்ளோ பாதுகாப்பா வச்சுருக்காங்களா? யார் அத்தை அவங்கள்லாம்?” என சிந்தாமணி வினவ, “தெரியல… பிசினஸ் எனிமீஸ்!” என்றார் சிந்தனையுடன்.

“அப்போ நீங்க பிசினஸ் பண்ணிட்டு இருந்தப்ப உங்களுக்கும் எனிமிஸ் இருந்தாங்களா அத்தை?” சிந்தாமணி விடாது கேள்வி கேட்க, ஆதிசக்தியின் வதனம் வாடியது.

ஏதேதோ எண்ணங்கள் முட்டிட, இளவேந்தன் தான், “இப்ப எதுக்கு தேவையில்லாம நின்னு பேசிட்டு இருக்கீங்க. கண்மணிய உள்ள கூட்டிட்டுப் போ” என்று உத்தரவிட சிந்தாமணி விடவில்லை.

“எப்ப எந்த கேள்வி கேட்டாலும் ஒழுங்கா பதில் சொல்றது கிடையாது… அதனால தான எங்களை ஏதோ வேத்தாளு மாதிரி பாக்குறாரு அத்தை உங்க பையன்” சிந்தாமணி பொருமிட, ஆதிசக்திக்கு கண்ணீர் திரண்டிருந்தது.

“சிந்தா… உள்ள போ!” அழகேசனின் குரல் கேட்டு அமைதியானவளிடம், கண்மணி “இங்க எந்த கேள்விக்கும் விடையை நாமளா தான் கண்டுபிடிக்கணும் சிந்தா…” என்று சூசகமாக சொல்லி விட்டுச் செல்ல, அது இன்னுமாக ஆதிசக்தியை வதைத்தது.

நிற்கவே துணிவின்றி தள்ளாடியவரை தாங்கியது இளவேந்தனின் கரங்கள் தான்.

தங்கையை சலனமின்றி பார்த்த அழகேசன், “பிள்ளைங்க தோளுக்கு மேல வந்துட்டாங்க சக்தி. அவங்களை நம்ம அரவணைச்சா, திரும்ப நம்மளை அரவணைப்பாங்க. இல்லன்னா, நமக்கே யாரோ மாதிரி எதிர்ல நிப்பாங்க… உன் பையன் நின்னதை பார்த்தேனே!” என்றதும் ஆதிசக்தி சிவந்த விழிகளுடன் தமையனை நிமிர்ந்து பார்க்க, அதற்குமேல் தங்கையின் கலங்கிய முகத்தைப் பார்க்க அவருக்கு வலுவில்லை.

தான் அத்தனை சொல்லியும் யாஷ் பிரஜிதனை அலெஸ்ஸான்டரோவிடம் கொடுத்ததற்கான வருத்தமும் இன்னும் மாறவில்லை.

அந்நேரம் மகேந்திரன் வரும் அரவம் கேட்க, மூவரும் தனது நிலையில் இருந்து வெளியில் வந்து முகத்தை சீராக்கி கொண்டனர்.

“துப்பாக்கியோட ஊருக்குள்ள ஆளுங்க வந்துருக்குறதா நம்ம கான்ஸ்டபிள் முத்து போன் பண்ணுனான். என்னமா ஆச்சு?” என மகளிடம் வினவ,

“அது…” ஆதி சமாளிக்கும் முன்னே, அழகேசன் இடைபுகுந்தார்.

“ஏதோ பக்கத்து ஊர்ல இருந்து தப்பிச்சு வந்த கைதிங்கன்னு கேள்விப்பட்டேன்ப்பா…” என சமாளித்து விட்டு, “கிருஷ்ணா அப்பாவுக்கு சாப்பாடு எடுத்து வை…” என மனையாளுக்கு சத்தம் கொடுத்தார்.

“வேணாம் வேணாம். மருமக ஆத்தங்கரைக்கு போறேன்னு சொல்லிட்டு தான் போச்சு. நான் போய் சாப்ட்டுக்குறேன். ஒன்னும் பிரச்சினை இல்லையே” மீண்டும் ஒருமுறை கேட்டு விட்டு, வயோதிகத்தால் மெல்ல நடந்து அடுக்களைக்குச் சென்றார்.

அவருக்கு உணவு பரிமாறுவது ஆண்டாள் மட்டும் தான். அவர் சென்றதும், தனியாக உணவு உண்டு தான் அவருக்குப் பழக்கம். ஏனென்ற காரணம் அவர் மட்டுமே அறிவார்.

கிருஷ்ணவேணி வந்த பிறகு, அவர் வம்படியாக பரிமாறி விட்டு தனிமை கொடுத்து சென்று விடுவார்.

அழகேசன் தங்கையின் புறம் திரும்பி, “இங்க எந்த பிரச்சினையும் வராதுன்னு தான ரெண்டு பேரும் இங்க வந்தாங்க. இங்கயும் எப்படி சக்தி இது நடந்துச்சு. அதுக்குள்ள மோப்பம் பிடிச்சுட்டாங்களா என்ன?” என்றார் புரியாமல். அதே குழப்பம் மற்றவர்களிடமும் வீற்றிருந்தது.

இங்கோ, யாஷ் பிரஜிதன் அலைபேசியில் கத்திக் கொண்டிருந்தான் ஆஹில்யனிடம்.

“ரெண்டு பேருல ஒருத்தன் சீரியஸா இருந்தா என்ன? இன்னொருத்தனை முழுசா தான விட்டேன். அவன் மூலமா எதுவும் கண்டுபிடிக்க முடியலைன்னா என்ன அர்த்தம் இடியட்ஸ்…” அவன் கண்களில் நெருப்பு எரிந்தது.

ஆஹில்யன் நடந்ததை அறிந்து தஞ்சாவூருக்கு வந்திருந்தான்.

“பாஸ், வரதராஜன் சாரோட எதிரிகளை கண்கொத்தி பாம்பா வாட்ச் பண்ணிட்டே தான் இருக்கேன். நம்மளைத் தேடி இன்னும் இத்தாலிலையும் கல்கத்தாலையும் தான் அலைஞ்சுட்டு இருக்கானுங்க. வேற யாரோ தான் இதுல இன்வால்வ் ஆகிருக்கனும்.”

“அந்த ஆனியன் எல்லாம் எனக்கும் தெரியுது. அந்த யாரோ யார்ன்னு தான் கேட்குறேன்… நைட்டு வரைக்கும் டைம். எனக்கு டீடெய்ல்ஸ் வரலைன்னா, ரெண்டு பேரும் உயிரோட இருக்க தேவை இல்ல” என்று உறுமி விட்டு அழைப்பைத் துண்டித்தான்.

யாரும் எக்கேடு வேண்டுமானாலும் கெட்டுக்கொள்ளுங்கள் என்ற ரீதியில் மெத்தையில் மல்லாந்து படுத்து கால் மீது கால் போட்டு ஆட்டியபடி, எலிசாவை பாட சொல்லி உயிரை வாங்கி கொண்டிருந்தாள் நிதர்ஷனா.

தனக்கு தெரிந்த ஆங்கில புலமையைக் காட்டி எலிசாவை, பல முறை சோதித்து விட்டாள்.

“சரி… போய்த்தொலை! எனக்கு இந்த நைட்டு டைம்க்கு ஏத்த மாதிரி மெலோடி சாங் ஒன்னு போடு!” என எலிசாவிற்கு உத்தரவிட, அது ஸ்பாட்டிஃபையில் தேடி பாடலைத் தேர்வு செய்து ஒலித்தது.

“ஓ… நீ பாட்டுலாம் தேடி போடுவியா… பல வித்தைகளை கத்து வச்சுருக்க எலிசா நீ. அதுவும் இது என்னோட பேவரைட் சாங்” என்று காற்றிலேயே எலிசாவிற்கு முத்தம் கொடுத்தாள்.

மெல்லிய அரை வெளிச்சத்தில் காதினுள் இனிமையாய் பயணித்தது, ஹரிஹரனின் குரலும் ஏ. ஆர் ரஹ்மானின் இசையும் அடங்கிய வெண்ணிலவே வெண்ணிலவே… விண்ணைத் தாண்டி வருவாயா! பாடல்.

கண்ணை மூடி காலை ஆட்டியபடி அந்த பாடலில் மூழ்கியவள், தன்னை மீறி பாடத் தொடங்கி விட்டாள்.

பெண்ணே பெண்ணே…
பூலோகம் எல்லாமே தூங்கிபோன பின்னே
புல்லோடு பூவீழும் ஓசை
கேட்கும் பெண்ணே
நாம் இரவின் மடியில் பிள்ளைகள் ஆவோம்
பாலுாட்ட நிலவுண்டு…

வெண்ணிலவே வெண்ணிலவே
விண்ணை தாண்டி வருவாயா
விளையாட ஜோடி தேவை
இந்த பூலோகத்தில் யாரும்
பாா்க்கும் முன்னே உன்னை
அதிகாலை அனுப்பி வைப்போம்…

அப்பாடலில் இலயித்து பாடியவளின் குரலில் அத்தனை உயிர் இருந்தது.

எரிச்சலுடன் அலுவல் அறையில் இருந்து தனதறைக்கு வந்த யாஷ் பிரஜிதன், எலிசாவிடம் பாடல் கேட்டு தொந்தரவு செய்து கொண்டிருந்தவளைக் கடிந்து கொள்ளவே உள்ளே நுழைந்தான்.

இதில் அவள் படுத்திருக்கும் தோரணை வேறு வெகுவாய் கடுப்பைக் கிளப்பியது.

மெத்தையில் அத்தனை தூசிகளும் ஒட்டிக்கொள்ளுமாறு காலை சுத்தம் செய்யாமல் வைத்திருந்தாள். அவளது காலிலேயே அடித்து எழுப்பும் முன்னே, கண் மூடி இருந்தவள் தானாக பாடத் தொடங்க, அதில் அவனுக்கும் மூளை வேலைநிறுத்தம் செய்தது போலும்.

தமிழ் பாடல்கள் கேட்டுப் பழக்கமில்லை அவனுக்கு. முதன்முறை கேட்கும் அப்பாடலும் அவ்வரிகளும் அவளது குரலும் அவனது இதயத்தின் ஆழத்தில் வேரிட்டு படர்ந்தது.

அதனைக் கருத்தில் கொள்ளாதவன், கனிந்த கண்களை கண்டுகொள்ளாது, “ஸ்டாப் இட் எலிசா” என்றான் சத்தமாக.

எலிசா கப்பென்று வாயை மூடிக்கொள்ள, அவளோ இவனது சத்தம் கேட்டும் எழாமல், வேண்டுமென்றே சத்தமாகப் பாடினாள்.

“டிஸ்கஸ்டிங்… ஏன் இப்படி கத்திட்டு இருக்க?” அவள் பாடலை ரசித்து விட்டும் அதனை பாராட்ட மனம் விரும்பாமல் ஈகோ தலைதூக்க எப்போதும் போல அதட்டினான்.

அதில் விருட்டென எழுந்தமர்ந்தவள், “எதே கத்துறேனா? எங்க ஏரியாவோட சின்னக்குயில் சித்ரா யாரு தெரியுமா?” மூச்சிரைக்க அவள் கேட்க, காதை நீவியபடி “யாரு?” என்றான் அசட்டையாக.

“நான் தான்” அவள் பெருமையாய் கூறிக்கொண்டதில்,

“முதல்ல அந்த சித்ரா யாரு?” சட்டை பட்டனைக் கழற்றியபடி அவன் வினவ,

“ஓ! மை காட். இதென்ன தமிழுக்கு நேர்ந்த சோகம்… சித்ராம்மா யாருன்னு தெரியாதா?” என அங்கலாய்க்கும்போதே அவன் சட்டையைக் கழற்றி இருந்தான்.

‘இவனுக்கு என் முன்னாடி ட்ரெஸ் மாத்துறதே வேலையா போச்சு’ எனப் புலம்பிட, அடுத்ததாக பெல்டின் மீது கையை வைத்தவன், “எலிசா சேஞ்ச் தி பெட்ஷீட்” என உத்தரவிட்டதும், பெட்டிங் சிஸ்டம் கட்டிலின் மீது அமர்ந்திருந்தவளை உதறி விட, அவளோ துள்ளிக் குதித்து இறங்கி அவன் மீதே இடித்ததில், அவனது வெற்று மார்பில் பாவையின் முகம் பதிந்தது.

அன்பு இனிக்கும்
மேகா

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
27
+1
115
+1
7
+1
9

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்