“ஹே இரிடேட்டிங் இடியட்… ஏன் கத்திக்கிட்டே இருக்க” காதை ஒரு விரலால் மூடியபடி விறுவிறுவென கீழிறங்கி வந்த யாஷ் பிரஜிதன், உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தான் போலும்.
இறுகிய கடுமையான புஜங்களின் வழியே வியர்வை வழிந்தோட, முட்டிக்கு மேலே ஏறி இருந்தது அவன் அணிந்திருந்த ஷார்ட்ஸ்.
தரை துடைக்கும் இயந்திரத்தைப் பார்த்து பயந்தபடி ஆடவனைப் பார்த்தவளுக்கோ இன்னும் கொஞ்சம் பயம் எழுந்தது.
“கன்றாவி… நீ என்னய்யா அரை கொறையா வந்து நிக்கிற” என முகத்தைச் சுளிக்க, மீண்டுமாக அவனைச் சீண்டி விட்ட அவளது ஆட்டிடியூடில், “நீ டெய்லியும் இதே காஸ்டியூம்ல தான என்னைப் பாக்கணும். பழகிக்க” என்றான் அசட்டையாக.
“கண்ட கருமத்தை எல்லாம் பாக்க வேண்டியதா இருக்கு. காசி கழுசடையால வந்தது எல்லாம்…” எனப் புலம்பியபடி, “சரி இது இன்னாது காலுக்கடில வந்து நிக்குது. போவ சொல்லுயா…” என்றாள் பாவமாக.
“தட்ஸ், ஃப்ளோர் கிளீனர். தரையில சின்ன தூசி இருந்தாலும் தானாவே வந்து க்ளீன் பண்ணும்” என்றபோதே வந்த வேலை முடிந்து விட்ட நிம்மதியில் வட்ட வடிவில் இருந்த இயந்திரம் மீண்டும் தனது இடத்திற்குச் சென்று தனக்குத் தானே சார்ஜ் போட்டுக்கொண்டது.
“தூசியா இருந்தா வெளக்கமாத்தை எடுத்து பெருக்க போறோம். இதுக்கா இந்த அலப்பற…” என்றவளை முறைத்தவன், “மேல வா!” என்றான் கட்டளையாக.
அந்த பங்களாவை சுற்றி முற்றி விநோதமாகப் பார்த்தபடியே அவனுடன் மாடிக்குச் சென்றாள்.
தனது அறைக்குச் சென்றதும் துவாலையை எடுத்துக்கொண்டவன், “எலிசா ஹாட் வாட்டர்” என்றதும் அது தனது வேலையைச் செவ்வனே செய்தது.
“குளிச்சுட்டு வரேன். சிட்” என்றபடி குளியலறைக்குச் செல்ல, நிதர்ஷனா தலையைச் சொறிந்தாள்.
“என்ன இவன்… ஏதோ பொண்டாட்டிட்ட குளிக்க சுடுதண்ணி ரெடி பண்ண சொல்ற மாறிக்க போறான்.”
சரியென்று மெத்தையில் அவள் அமரப் போக, பெட்டிங் சிஸ்டம் கலைந்திருந்த மெத்தை விரிப்பைத் தானாக சரி செய்ததில் அரண்டே போனவள்,
“டேய் கலப்படக்கண்ணுக்காரா… இங்க பாரு ஏதோ குட்டி சாத்தான் ரூமுக்கு வந்துடுச்சு” என்று கத்தியதில் ஷவரை நிறுத்திய யாஷ் பிரஜிதன், தலையை மட்டும் வெளியில் எட்டிப்பார்த்துக் கண்ணாலேயே நெருப்பை அனுப்பினான்.
“எலிசா ஸ்டாப் ஆல் தி ஒர்க்” என்று கட்டளையிட்டவன், “ஏய் கடன்காரி… கொஞ்ச நேரம் உன் வாயை மூடிட்டு உக்காரு” என்று அதட்டிவிட்டு அவசரமாகவே குளித்து வந்தான்.
நல்லவேளையாக இரவு உடை போல எதையோ உடுத்திக் கொண்டு வந்தவனை மேலும் கீழுமாக பார்த்தவள், “இதான் இத்தாலி ட்ரெஸ் போல” என எண்ணிக்கொண்டாள்.
கண்ணாடி முன் நின்று, “எலிசா… ஐ ஹேவ் அ மீட்டிங் வித் சேர்மன். பிக் அ ஃபார்மல் சூட்…” என்று உத்தரவிட, “எஸ் பாஸ்” என்ற செயற்கை நுண்ணறிவு கண்ணாடி அவன் மீது சிவப்பும் கருப்பும் கலந்த கோர்ட் சூட்டை வைத்துக் காட்ட, “நாட் பேட்!” என்றான்.
நிதர்ஷனா வாயில் ஈ போனால் கூட தெரியாத அளவு அவனையே வெறிக்க வெறிக்க பார்த்திருந்தாள்.
“கதவை தான் பேச வைக்கிறீங்கன்னு பார்த்தா கண்ணாடியையும் பேச வைக்கிறீங்க…” என வியந்தவளை கண்ணாடி வழியே பார்த்து முறைத்தான்.
அவளோ கண்ணாடியில் தெரிந்த அவனது கோர்ட் சூட் அணிந்த பிம்பத்தைக் கண்டு, “இந்த கலர் நல்லாவே இல்ல. நீங்க கலரா தான இருக்கீங்க. லைட் கலர் போட்டா சூப்பரா இருக்கும்… ம்ம் ஸ்கை ப்ளூ உங்க கலருக்கு செமயா இருக்கும் சார்” என்று அபிப்ராயம் கூற, “மைண்ட் யுவர் ஒன் பிசினஸ்” என்றான் சுள்ளென.
ஏ. ஐ கண்ணாடி சொன்ன உடையை அணிந்து கொள்ள முற்பட்டதில், அவள் மறுபக்கம் திரும்பி அமர்ந்து, “நான் கீழ இருக்கேன் நீங்க ட்ரெஸ் மாத்திட்டு கூப்பிடுங்க” என்றாள் கண்ணை மூடியபடி.
“அங்க போய் ரெண்டு பேரும் ஒரே ரூம்ல தான் இருக்குற மாதிரி இருக்கும். சோ” என்று முடிக்கும்முன்னே “இந்தக் கருமத்தையும் பழகிக்கணும் அது தான?” எனக் கடுப்பாக கேட்க, “எக்ஸ்சாக்ட்லி” என்றான் யாஷ்.
“ஐ ஆம் டன்!” உடையை மாற்றி விட்டதாக சொன்ன பிறகே அவள் அவனது புறம் திரும்பினாள்.
“என்னால எல்லாம் இப்படி உங்களை திரும்பி நிக்க சொல்லி ட்ரெஸ் மாத்த முடியாது…” நிதர்ஷனா எகிறிட, “ட்ரெஸிங் ரூம் இருக்கும்!” என்றான் ஒரே வார்த்தையாக.
அதில் சற்றே திருதியுற்றவள், “ஆமா இது என்ன பெட் எல்லாம் அதுவாவே எந்திரிச்சு டேன்ஸ் ஆடிட்டு இருந்துச்சு” எனக் கேட்க, கண்ணாடி பார்த்து தனது கருத்த கேசத்தை கோதி விட்டுக் கொண்டிருந்த யாஷ் புருவம் சுருக்கியபடி அவளைப் பார்த்தான்.
“டான்ஸ் ஆடுச்சா?”
“ம்ம்…” இமைகளைப் பாவமாக கொட்டியபடி அவள் கேட்டதில், மீண்டும் இறுக்கம் மறைந்து உள்ளுக்குள் முறுவல் பிறந்தது.
“தட்ஸ் ஆட்டோமேட்டிக் பெட்டிங் சிஸ்டம்” அதை பற்றிய விளக்கம் கொடுத்து விட்டு, “இங்க இருக்குற சின்ன சின்ன பொருள்ல கூட ஏ. ஐ இன்ஃபியூஸ் பண்ணிருக்கேன்” என்றதை விழி அகல கேட்டுக்கொண்டவளின் அருகில் வந்தவன், “கெட் அப்” என்றான்.
“என்னவோயா… என்னவோ நான் கண்டம் விட்டு கண்டம் வந்த மாறிக்க ஒரே கன்ஃபியூசனாகீது…”
“லுக்! இப்ப இந்த செகண்ட்ல இருந்து, இந்த கீது கேதுன்னு ஸ்லாங் பேசுறதை விட்டுட்டு நார்மல் தமிழ்ல பேசு!” என்று நிதானமாகக் கடிந்தான்.
“நார்மல் தமிழ்ன்னா செந்தமிழா?” துடுக்காய் நிதர்ஷனா வினவ,
“வாட் எவர்… பட் இந்த சென்னை ஸ்லாங் மட்டும் வரக்கூடாது. எங்க நார்மலா பேசு” என்றான் சோதனையாக.
“இன்னா பேச?”
“அடிச்சேன்னா…” அவளை நோக்கி கையை ஓங்கியவன், “என்ன பேச?” எனத் திருத்தினான்.
“இன்னாயா” என்று விட்டு அவனது தீப்பார்வையில் எச்சிலை விழுங்கியவள், “என்னங்க சார்… அடிக்கலாம் வர்றீங்க” என்றாள் இதழ் குவித்து.
“ஹா… இப்ப மட்டும் எப்படி நார்மல் தமிழ் வருது? முடிஞ்ச வரை உன் வாயை செல்லோ டேப் போடாத குறையா ஒட்டிக்க. புரிஞ்சுதா?” எனக் கண்டனமாக கூற,
“அது கஷ்டம். நான் வேணும்னா நார்மல் தமிழ் பேச ட்ரை பண்றேன்!” எனத் தடாலடியாக இறங்கி வந்ததில், மீண்டும் எழுந்த முறுவலை அடக்கினான்.
“பைன்… இனி உன் பேர் ரித்திகா. உன்னை ரித்தின்னு தான் கூப்பிடுவேன். நீ ரியாக்ட் பண்ணனும் காட் இட்!”
“சார் சார்… என் பேர் எவ்ளோ அழகா இருக்கு. அத வுட்டுட்டு ரித்தி பித்தின்னுட்டு!” என்றவளை இடுப்பில் கையூன்றி எரிக்கும் பார்வை பார்க்க, “பேரை மாத்துனா பழக வேணாமா சார். பழகிக்கிறேன் அதான…” உர்ரென்று உரைத்ததில் “எஸ். எல்லாத்துக்கும் பழகிதான் ஆகணும்” என்றான் பிடிவாதமாக.
“கம்” என அவள் முழங்கையைப் பிடித்து ஏ. ஐ கண்ணாடி முன் நிற்க வைத்தவன், “எலிசா பிக் சம் குட் வெஸ்டர்ன் வியர் ஃபார் ஹெர்! (மேலை நாட்டு உடைகளை காட்டு) என்று கட்டளையிட, “எஸ் பாஸ்… ஷி லுக்ஸ் காட்ஜியஸ்” என சொல்லி வைத்தது எலிசா.
“அவ்வ்… பாத்தீங்களா காசிக்கு மட்டும் இல்ல உங்க க்ரியேஷன்க்கும் நான் தான் இலியானா மாறிக்க தெரியுறேன்” எனப் பெருமை பீத்த,
“ஆமா ஆமா இலியானா தான். இட்லி விக்கிற ஆயா மாதிரி இருந்துக்கிட்டு இலியானாவாம்” என முணுமுணுத்தான்.
“வர வர நீங்களும் என்னை மாதிரி கோர்வையா பேசுறீங்க அரக்கன் சார்” எனப் புகழ்ந்ததில், நெற்றியை நீவியவன் “கால் மீ யாஷ்…” என்றான்.
“உங்க பேர் யாஷா?” என்றவளின் கேள்வியில் தான் இன்னும் தனது பெயரையே கூறவில்லை என்பது உறைக்க, “ம்ம் யாஷ் பிரஜிதன்” எனக் கம்பீரமாக உரைத்தான்.
“சோக்கா இருக்கு சார் உங்க பேரு” என்றவளைக் குழப்பமாக பார்த்தவனின் பார்வையின் அர்த்தம் புரிய,
“நல்லாருக்குன்னு சொன்னேன்” என்றாள் அனைத்து பற்களையும் காட்டி.
பின் அவளே “ஆனா எனக்கு யாஷ் பேரே பிடிக்காது…” உதட்டைச் சுளித்ததில் அவனது பார்வை ஒரு கணம் அவளது இதழில் தங்கிப் பின் திரும்பியது.
“இந்த இடத்துல நீங்க ஏன்னு கேட்கணும் சார்” அவள் விடாப்பிடியாக நின்றதில், “ஃப்பூ” எனப் பெருமூச்சை எரிச்சலாய் வெளியிட்டவன் கைக்கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்தபடி “ஏன்?” என்றான் அசுவாரஸ்யமாக.
“கே. ஜி. எஃப் படத்துல வர்ற ஹீரோ பேர் தான் யாஷ். என் அண்ணனுக்கு எல்லாம் படம் பிடிச்சுதுனு சொன்னான். எனக்குலாம் பிடிக்கவே இல்ல. அதுவும் அவன் முன்னாடியே அவன் பொண்டாட்டியை கொன்னுடுவாங்க தெரியுமா? அவ்ளோ லவ் பண்ணிட்டு அவ சாகுறத எப்படி அக்செப்ட் பண்ண முடியும். அதனாலேயே பிடிக்கல. உங்களை வேணும்னா பிரஜித்னு கூப்பிடவா?” எனக் கதை போல கூறியவளிடம்,
“ப்ச், வாட் கே. ஜி. எஃப்? வாட் ஹீரோ? ஐ டோன்ட் அண்டர்ஸ்டாண்ட். எக்ஸ்டரா விளக்கம் குடுக்காம நான் சொல்றதை மட்டும் நீ கேளு” கடுகடுப்புடன் முடித்துக் கொண்டதில் அவளும் அமைதியாகி விட்டாள்.
அதற்குள் ஏ. ஐ கண்ணாடி அவளுக்கு ஏற்ற மாதிரியான உடையை கண்ணாடியில் தெரிந்த அவளது பிம்பத்தில் காட்டிட, அவளோ பதறி “அய்யயோ” எனத் தன்னை தானே மூடிக்கொண்டாள்.
வெஸ்டர்ன் உடை என்றதும், வயிறு தெரிவது போன்றும், முட்டி தெரிவது போன்றும் அது உடையைக் காட்டிட, அவள் பதறிப்போனாள்.
“மொதோ அதை நிப்பாட்டுங்க சார்… எனக்குப் புடிக்கவே இல்ல” கண்ணை சுருக்கி சுண்டி விட்ட முகத்துடன் கூறியதில், “எலிசா… பிக் சம் நீட் அவுட்ஃபிட்ஸ்” என அதற்கு தேவையான விளக்கம் கொடுத்ததும், எலிசா புரிந்து கொண்டு அடுத்த உடையை இறக்க, நிதர்ஷனாவோ
“இதை ஆப் பண்ணுங்க சார்” என்றாள் விடாப்பிடியாக.
கண்ணை வேறு மூடி இருந்ததில், “நீ ஃபர்ஸ்ட் மிர்ர பாரு. இட் லுக்ஸ் குட்” என்றான் யாஷ்.
மெல்ல ஒரு கண்ணை மட்டும் திறந்து பார்த்தவள், பின் இரு கண்ணையும் திறந்து அகல விரித்தாள்.
இளஞ்சிவப்பில் தங்க வேலைப்பாடுகள் செய்த அம்பரெல்லா கட்டிங் உடையை அவள் மீது வைத்துக் காட்டியது.
“வாவ்! நானா இது?” அவளே ஆச்சர்யப்பட்டுப் போக,
“இந்த மாதிரி ட்ரெஸ்ல நீ கொஞ்சம் பெரிய பொண்ணு மாதிரியும் தெரிவ… சோ இதே போல அவுட்ஃபிட்ஸ் ஃபிக்ஸ் பண்ணிக்கலாம். ம்ம் தென், ஜீன்ஸ் ஓகே?” என அவளிடம் கேட்டுக்கொண்டவனிடம்,
“ம்ம் ஆனா குர்தி தான் போடுவேன்” என்று உறுதியாய் கூறியதும், அதற்கேற்ற உடைகளுக்கான மாடலையும் தெரிந்து வைத்துக் கொண்டவன், ஆஹில்யனுக்கு அனுப்பி அதே போலான உடைகளை கொண்டு வர கட்டளையிட்டான்.
பின், சிகை அலங்காரம் செய்யவும் ஒப்பனைகள் செய்யவும் பெண்களை வரவைத்திருந்தவன், அவளுக்கு என்ன என்ன மாதிரியான மாற்றங்களை செய்ய வேண்டுமென கூற, நிதர்ஷனா கதறினாள்.
“யோவ் யோவ் இதெல்லாம் வாணாம்யா. ப்ளீஸ்…” எனக் கெஞ்சியும் அவன் காதில் வாங்கவே இல்லை.
இறுதியில், அவளது வளைந்த முடிகளை ஒரே நேர்கோட்டில் சீரமைத்து, புருவம் திருத்தி அவளது நிறத்தை அதிகப்படுத்த முயற்சிகள் எடுக்கப்பட்டிருக்க, அது அவளது அழகை அதிகப்படுத்தியது தான் என்றாலும் ஏனோ அவளுக்கே அவள் வித்தியாசமாய் தெரிந்தாள்.
“லுக்ஸ் பெட்டெர்” அவளை ஒரு கணம் அளந்து விட்டு யாஷ் பிரஜிதன் கூற, அவளுக்கு கண்ணில் நீர் வைத்து விட்டது.
“போயா எனக்கு இதெல்லாம் பிடிக்கவே இல்ல” தலையை ஆட்டி விருப்பமின்மையை தெரிவிக்க,
“உன்னை என்ன அசிங்கமாவா ஆக்குனேன். அழகா தான ஆக்கிருக்கேன்?” புரியாத பாவனை வீசினான்.
“அழகா ஆக்குறீங்களோ அசிங்கமா ஆக்குறீங்களோ அது சம்பந்தப்பட்டவங்களுக்கு பிடிக்கணும்” நிதர்ஷனா சுருக்கென கூற,
“உனக்குப் பிடிச்சு ஒன்னொன்னும் செய்ய, நான் உன் ரியல் ஹஸ்பண்ட் இல்ல” அவனும் கனலாய் கோபத்தைப் பொழிந்தான்.
“உங்க பிராக்டிஸ் அவ்ளோ தான்னா என்னை கதிர் இருக்குற இடத்துக்கு அனுப்புங்க. நான் போறேன்”
“உன் இஷ்டத்துக்கு எல்லாம் அனுப்ப முடியாது. கதிரவனை டாஞ்சூர்க்கு அனுப்பிட்டேன். நீ எனக்கு கோ ஆபரேட் பண்றதை பொறுத்து தான், அவன் பாதுகாப்பு இருக்கும்.”
“நான் கோ – ஆபரேட் பண்ணிட்டு தான இருக்கேன். அப்பறம் ஏன் அவனை இழுக்குறீங்க?” கண்ணில் குளம் கட்ட கேட்க, அவனோ அதை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.
“ஸீ… அழுகணும்னா எவ்ளோ நேரம் வேணாலும் அழுதுக்க. பேசணும்னா எலிசாவைக் கூப்பிட்டுப் பேசு. எனக்கு இம்பார்ட்டண்ட் மீட்டிங் இருக்கு. ஒன் அவர்க்கு இந்த இடத்தை விட்டு எங்கயும் நகர கூடாது அண்டர்ஸ்டான்ட்” எனக் கடுமையாய் கட்டளையிட்டவன், மற்றொரு அலுவலக அறைக்குச் சென்று வேலையில் மூழ்கினான்.
“எவ்ளோ நேரம் வேணாலும் அழுவலாமாமே… கொய்யால. நான் ஏன்டா அழுகணும்” எனக் கண்ணைத் துடைத்துக் கொண்டவள், “ஆலம்பனா ச்சீ எலிசா, உன் பாஸ் இஸ் லூசா?” எனக் கேட்க, எலிசாவோ கோபப்பட்டுக்கொண்டது.
“என் பாஸ். ரோபோடிக் எஞ்சினியர். வேர்ல்ட் வைட் அவரோட கண்டுபிடிப்பிற்கு வரவேற்பு உள்ளது”.
“ம்ம்க்கும் எது? இந்த வீடு தொடைக்கிறதும், கதவுல வெல்கம் ஸ்பீச் வைக்கிறதும் தான் உன் பாஸ் கண்டுபிடிச்சாராக்கும்” ஏளனமாக உடைந்த ஆங்கிலத்தில் நிதர்ஷனா கேட்க,
“அது மட்டும் இல்ல. ஏஐ மிரர், செல்ப் குக்கிங் ரோபோட், ப்ரிட்ஜ் ஏ. ஐ ரோபோட் என்று அது சொல்லிக்கொண்டே சென்று, இறுதியாக வீட்டு உபயோகப் பொருட்கள் மட்டுமில்ல, பூமிக்குத் தேவையான கண்டுபிடிப்பிலும் தீவிரமாக இருக்கிறார்” என்றதில், “நீ உன் பாஸ விட்டுக்கொடுப்பியா…” என்றாள் சலித்து.
“எனக்கு, உனக்கு வச்ச பேரும் பிடிக்கல எனக்கு வச்ச பேரும் பிடிக்கல…” எனப் புலம்பிட, எலிசா “சாரி ஐ டோன்ட் அண்டர்ஸ்டான்ட்” என்றது.
“ம்ம்க்கும் நீயும் உன் ரோபோ பாஸ் மாதிரி எது கேட்டாலும் புரியலைன்னு சொல்லு!” எனப் புலம்பும்போதே வாயிற்புறம் பார்த்தவள், அங்கு கையைக் கட்டிக்கொண்டு கதவில் சாய்ந்து யாஷ் பிரஜிதன் நிற்பதைக் கண்டு உறைந்து விட்டாள்.
“ஆத்தாடி…” என மெத்தையில் போர்வையைப் போர்த்தி படுத்து விட்டவள், கண்ணை மூடி தூங்குவது போல பாவனை செய்ய, அவளை முறைத்தபடியே தனது கப்போர்டில் இருந்து சிப் ஒன்றை எடுத்தான்.
“வந்து பாத்துக்குறேன் உன்னை…” எனக் கோபத்தை அடக்கிக்கொண்டு அங்கிருந்து செல்ல, “தூங்குடா கைப்புள்ள” என்று உண்மையில் அடுத்த ஒரு மணி நேரத்திற்கு உறங்கியே விட்டாள்.
அன்று முழுதும், தஞ்சாவூருக்குச் சென்றதும் எப்படி பேச வேண்டும், எப்படி நடந்துகொள்ள வேண்டுமென்று பெரும் பாடமே நடத்தினான் யாஷ் பிரஜிதன் இதெல்லாம் துளியளவும் அவளால் கடைபிடிக்க இயலாது எனப் புரியாதவனாய்.
முக்கியமாய் வளவள கொழகொழ வென பேசக்கூடாது என்றும், பேச்சில் ஒரு பணக்காரத்தணமும் திமிரும் இருக்க வேண்டுமென கூற, “சாரி பேசிக்காவே நான் ரொம்ப அடக்கமான பொண்ணு” என்றாள் பணிவாக.
அவனிடம் சிறு முறைப்பையும் பரிசாக பெற்றுக்கொண்டவள், “இந்த ரோபோ மனுஷன்கிட்ட இருந்து என்னை எப்ப தான் காப்பாத்துவ மகமாயி” என நொந்து போனாள்.
“உன் கையை குடு!” யாஷ் பிரஜிதன் கையை நீட்டிக் கேட்க, ‘இப்ப என்ன குறளி வித்தைக் காட்டப்போறானோ’ எனக் கடுப்படித்தபடி கையை நீட்டினாள்.
“அப்போ அப்போ உன் கையைப் பிடிச்சுப்பேன். வியர்டா பிஹேவ் பண்ண கூடாது” என்ற நிபந்தனையுடன் அவளது உள்ளங்கையைப் பிடித்து விட்டு சில நொடிகளில் “அவுச்” எனக் கையை எடுத்துக்கொண்டான்.
“என்ன ஆச்சு? நான் குடுக்க வேண்டிய ரியாக்ஷனை நீங்க குடுத்துட்டு இருக்கீங்க அரக்கன் சார்… இல்ல இல்ல யாஷ்!” எனத் திருத்தினாள்.
“வாட் தி ஹெல். உன் கை என்ன இவ்ளோ ரஃப்பா இருக்கு?” என முகத்தைச் சுளித்தான்.
“ஹா… தேங்கா நார வச்சு தேய்ச்சு தேய்ச்சு தேஞ்சு போன கையி. அப்படி தான் இருக்கும்” என நொடித்துக் கொள்ள,
“ப்ச், உனக்கு மெடிக்கியூர் பெடிகியூர் எல்லாம் பண்ண சொல்லிருக்கணும்” என்றபடி ஆள்களை வரச் சொல்ல முயல, “ஐய… என் கையை யாரு அங்க பாக்க போறா. இதுக்கு மேல பாடி தாங்காது” என்றாள் பரிதாபமாக.
“ஏற்கனவே காலைல இருந்து ஒன்னியும் துன்னல” என கவலை வேறு.
“இப்ப தான் ஜூஸ், ப்ரூட்ஸ் எல்லாம் சாப்பிட?” யாஷ் முறைத்திட,
“சோறு சாப்ட்டா தான் எனக்கு துன்ன பீலே இருக்கும். கெழுத்தி மீன் கெடைச்சுதான்னு வேற தெரியல” என்ற கவலையில் மூழ்கிட, பற்களை நறநறவென கடித்தவன், முதல் வேலையாக கையை சானிடைசர் ஊற்றி துடைத்துக் கொண்டான்.
“யோவ் ஓவரா பண்ணாதயா. நாலாம் கொரோனா வந்தப்ப கூட சானிடைசர் போட்டது இல்ல. நான் என்ன நோயாளியா?” என சண்டைக்கு வர,
“யாரைத் தொட்டாலும் சானிடைசர் போடுறது என் பழக்கம்!” என்றவனை எரிக்கும் சக்தி இருந்தால் எரித்தே பஸ்பமாக்கி இருப்பாள் நிதர்ஷனா.
“பொண்ணுங்க கைன்னா சாப்ட்டா தான இருக்கனும்” யாஷ் மேலும் எரிச்சலடைய,
“நெறய பொண்ணுங்க கையை புடுச்சுருப்பீங்க போலயே” என ஒற்றைப்புருவம் உயர்த்தி கேட்டாள்.
அந்தப் பாவனையை ஒரு நொடிக்கும் மேலாக ஊடுருவியவனின் காந்த விழிகள், அக்கேள்விக்கு பதிலேதும் உரைக்கவில்லை.
அன்று அவளை தனது அறையிலேயே தங்க வைக்க, அவளோ “இந்த மெத்தையெல்லாம் எனக்கு சரிப்படாது. நான் தரையில படுத்துக்குறேன்” என்று தரையில் போர்வையை விரித்துப் படுத்துக்கொண்டாள்.
“டாஞ்சூர் போனதும், ஒரே பெட்ல தான் படுக்கணும்” என்ற கட்டளையுடன் உறங்கிப்போனவன்,
மறுநாள் காலையில் சிவப்பு ஜரிகை கொண்ட பட்டுப்புடவையை அவளிடம் நீட்டினான்.
“ஹை… எனக்குப் புடுச்ச கலரு சார்” என்றவளிடம் “யாஷ்!” என்று அடிக்குரலில் கடிந்தான்.
“ஹி ஹி. ஆமா தஞ்சாவூருக்கு பட்டுப் புடவை கட்டிட்டா வரப்போறேன் யாஷ்” எனக் கேட்டதில், “நோப்… இது வெட்டிங்கு. சீக்கிரம் ரெடி ஆகு. உனக்கு ஹெல்ப் பண்ண பியூட்டீஷியன் வருவாங்க” என்றான் மடமடவென.
அவளோ திருவிழாவில் காணாமல் போன குழந்தையாக விழித்தாள்.
“நடிக்க தான் கூப்டீங்க? கல்யாணம் எதுக்கு?”
“நடிப்பு கூட ஒரிஜினலா இருக்கும்னு சொன்னேன் தான? சோ பொய்ய உண்மைன்னு நம்ப வைக்க, உண்மையான கல்யாணம் அவசியம்” என்று திட்டவட்டமாக உரைத்து விட்டு,
“காஷ்… இந்த வேஷ்டியை எப்படி கட்டுறதுன்னு தெரியல” என உதவிக்கு எலிசாவிடம் பேசியபடி கண்ணாடி முன் நின்று பேண்ட் மேலே வைத்தே கட்டிப் பார்த்துக் கொண்டிருந்தவனை, “அட அரைக்கிறுக்கு அரக்கனே” எனச் சிலை போல பார்த்திருந்தாள் நிதர்ஷனா.
அன்பு இனிக்கும்
மேகா