Loading

அத்தியாயம் 6

“இவனை எப்படி நம்ம அட்டாக் பண்றது?” வாயில் வைத்த இட்லியை விழுங்க விடாமல் சோதிக்கிறாளே என்றிருந்தது கதிரவனுக்கு.

“நீ அவன் கை ரெண்டையும் பிடிச்சுக்க, நான் அவன் வயித்துல நங்குன்னு ஒரு குத்துக் குத்துறேன், சுருண்டுருவான்… வா வா, சீக்கிரம்… போயிடப் போறான்.” எனப் பரபரக்க, அவசரமாகக் கையைக் கழுவிய கதிரவன், “டேய்ய்ய்ய்!” எனக் கத்திக் கொண்டே யாஷ் பிரஜிதனின் கையைப் பின்னால் கட்டினான்.

நிதர்ஷனாவோ, அவனுக்கும் மேல் கத்திக் கொண்டு இரு கரத்தையும் இறுக்கி மூடி, ப்ரூஸ்லீ போல போஸ் கொடுத்து நின்றாள்.

“அடச்சீ… வேகமா அடி!” எனக் கதிரவன் சத்தம் கொடுக்க, யாஷின் இறுகிய தேகத்தில் ஓங்கி ஒரு குத்து விட்டாள்.

யாஷ் பிரஜிதன், இவர்களின் நாடகத்தை அசையாமல் பார்த்தபடி அவளது அடிக்கு எதிர்வினையாற்றாமல் தலையைச் சாய்த்துப் பார்க்க, “இவன் என்ன ரோபோ மாதிரி, உள்ள இரும்பு எதுவும் வச்சுருக்கானா?” என்றவள், மீண்டும் ஒரு குத்து விட, யாஷ் அசட்டையாக ஒரு காலை மேலே தூக்கி அவள் கையைக் காலால் வளைத்து, தனது காலுக்குக் கீழே வைத்து மிதித்தான்.

அவளோ வலியில் அலற, தனது கையைப் பிடித்திருந்த கதிரவனை ஒரே பிடியில் வளைத்துத் தள்ளியதில் கதிரவன் “ஐயோ அம்மா” என்று கத்தினான்.

“டேய் அரக்கா, கையை விடுடா வலிக்குது.” என்ற நிதர்ஷனாவிற்கு வலியில் கண் கலங்கி விட்டது.

சாவகாசமாக, அவள் கை மீதிருந்த பூட்ஸ் காலை எடுத்தவன், பத்தடி தூரம் தள்ளி விழுந்த கதிரவனை நோக்கிக் காலடி எடுத்து வைக்க, அவன் பயத்தில் எழுந்து தடதடவென மாடிக்கு ஓடி விட்டான்.

“ஆஆ…” கையைப் பிடித்துக் கொண்டு நிதர்ஷனா கத்திட, அவளருகில் ஒரு காலை மடக்கி அமர்ந்த யாஷ் பிரஜிதன், “ரொம்ப வலிக்குதா கடன்காரி…” எனப் பாவம் போலக் கேட்டான்.

“போய்யா போய்யா…” என ஒற்றைக் கையால் அவன் நெஞ்சில் படபடவென அடித்ததில், மற்றொரு கையையும் பிடித்தான்.

“என்னை அட்டாக் பண்ணிட்டுத் தப்பிச்சுப் போகணும்னு நினைக்கிறது ஒர்ஸ்ட் ஐடியா கடன்காரி!” என அனலடிக்கக் கூறியவனின் பிடி இறுக, “யோவ் யோவ், இதுக்கு மேல புடிச்சா கையி ஒடஞ்சுடும்…” எனும்போதே இன்னுமாக வளைத்தவன், “யோவ்?” என்று இரு புருவமும் உயர்த்த,

“இன்னாய்யா? புருஷன் பொண்டாட்டியா நடிக்கணும்னு சொன்னப்பறம், சார்னு கூப்பிட்டா நல்லாருக்காதே. நான்லாம் புருஷனுக்கு மரியாதை குடுத்தா அன்னியோன்யம் விட்டிரும்னு நெனைக்கிற ஆளு. உன்கூட பெர்பக்ட்டா நடிக்கணும்னா, எனக்கு கம்பர்ட்டா இருக்குற மாதிரி தான கூப்பிடனும்…” அவனை வலியில் கண்டமேனிக்குப் பேசி விட்டுச் சமாளிக்க என்னன்னவோ உளறினாள் நிதர்ஷனா.

“ஓஹோ! ஓகே டி…” அவன் ‘டி’ போட்டுப் பேசியதில், முன்னொரு முறை ஏதோ ஃப்ளோவில் பேசி விட்டானென்று விட்டவள், இப்போது பொங்கினாள்.

“இந்த ‘டி’ போட்டுப் பேசுற வேலையெல்லாம் வாணாம் அரக்கா…” கண்களால் அவனைப் பஸ்பமாக்க முயல,

“நான் எல்லாம் ஒயிஃபை ‘டி’ போட்டுக் கூப்பிட்டா தான், வாட்ஸ் தட் வேர்ட்… ஹான்! அன்னியோன்யம் இருக்கும்னு நம்புற ஆள் கடன்காரி. புருஷன் பொண்டாட்டியா நடிக்கணும்னு சொன்னப்பறம் ‘டி’ போடலைன்னா நல்லாருக்காதே.” அவளைப் போலவே பாவையைச் சீண்டினான்.

உதட்டைக் குவித்துக் கோபத்தை அடக்கியவள், “சரி உங்களை சார்னே கூப்புடுறேன். நீங்களும் ‘டி’ ன்னு சொல்லாதீங்க. டீல் ஓகே வா…” என முணுமுணுவெனக் கேட்டாள்.

“நைஸ் டீல்…” என்றவன் எழுந்து விட்டு, அவள் எழுவதற்குக் கை கொடுக்க, அதனைப் புறக்கணித்தவள் தானாக எழுந்து கொள்ள முற்பட்டாள்.

அச்செயல் அவனை மெலிதாய் சீண்டியதில், அவளை எழ விடாதவாறு அவள் முன்னே குனிந்தான்.

அவனது திடீர் எதிர்வினையில் கால் வழுக்கி, அவள் மீண்டும் தரையில் அமர்ந்து விட, “டாஞ்சூர் போனதும், அப்போ அப்போ என் கையைப் பிடிக்க வேண்டியது வரும். கிஸ் பண்ண வேண்டியது வரும். ஹக் பண்ற சிட்டுவேஷனும் வரலாம். பழகிக்க…” என அமர்த்தலாகக் கூறியதில், நிதர்ஷனா வெகுண்டு எழுந்தாள்.

“இன்னா வெளையாடுறீங்களா? என் மூஞ்சப் பார்த்தா சொல்ல, ஒரே இரிடேட்டிங்கா இருக்குனு சொல்ட்டு, என்னன்னவோ பினாத்திட்டு இருக்கீங்க. உங்க சுண்டு விரல் கூட என்மேல படக்கூடாது!” என்றாள் மூச்சிரைக்க.

“இதே வீரத்தைக் காசிட்டக் காட்டிருக்க வேண்டியது தான?” சில நொடிகள் முன் வரை, தனது தாய் வீட்டார் முன்பு அவளுடன் இணக்கமாக இருக்க வேண்டுமென்ற எண்ணமெல்லாம் இல்லை. அவள் காட்டிய ஆட்டிடியூட், ஆடவனை வம்பிழுக்க வைத்தது.

“அந்தப் பரதேசிக்குக் காசு தான் எல்லாம். என்னாண்ட நெறயத் தபா செருப்படி வாங்கப் பாத்துருக்கு. என் கூடப் பொறந்த லூசு, அவனாண்ட போய் காச வாங்கி வச்சு, தானே தான் தலைல மண்ணள்ளிப் போட்டுக்குச்சு. அதுல அவன் ஆட்டம் அதிகமாகிடுச்சு. எல்லாம் கெடா மாடாட்டம் இருப்பானுங்க. அவனுங்களோட சண்ட போட்டுத் தப்பிக்கிறதுலாம் ஆகுற காரியமா சார். நானே எப்படிடா அவனுங்க கண்ணுல மண்ணத் தூவலாம்னு இருந்தேன். தெய்வம் மாறிக்கா வந்து என்னை அள்ளிட்டு வந்துட்டீங்க.

வந்ததுல இருந்து நீங்களும் ஒரு மார்க்கமா டார்ச்சர் பண்றீங்க தான். ஆனா, என்ன ஒரே ஆறுதல், காசிக்கு நான்தான் இலியானா மாறிக்காத் தெரியுவேன் போல. நீங்க இத்தாலில நெஜ இலியானாவையே பாத்துருப்பீங்க. எப்படியும் என்னாண்ட தப்பா நடந்தா அதை விட அசிங்கம் ஒங்களுக்கு வேற எதுமே இருக்காது…” எனத் தோளைக் குலுக்கிக் கூறிய தொனியில் இதழ் மீறிய புன்னகை யாஷ் பிரஜிதனைக் கொய்தது.

சற்றே சிரமப்பட்டு முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டவன், “கோ டூ பெட். நாளைக்கு முழுக்க உனக்கு பிராக்டிஸ் இருக்கு. தி டே ஆஃப்டர் டுமாரோ நமக்கு மேரேஜ்!” என்றதில்,

“ப்ராக்டிசா, எதுக்கு?” அங்கிருந்து நகர்ந்து வாசல் நோக்கிச் சென்றவனிடம் நிதர்ஷனா வினவ, அவனோ நில்லாமலே பதிலளித்தான்.

“என் ஒயிஃபா நடிக்கிறதுக்கு…”

“நாசமாப் போச்சு!” தலையில் கை வைத்துக் கொண்டே தனக்கு ஒதுக்கப்பட்ட அறைக்குச் சென்றாள்.

அங்குக் கதிரவன், யாஷ் வளைத்த கையைப் பிடித்து அமுக்கி விட்டுக் கொண்டே, “கொலைகாரி… அந்த அர்னால்டுட்ட இந்நேரம் நான் நரபலியாகி இருப்பேன்.” என முறைத்ததில், நல்ல பெண்ணாகப் போர்வையை இழுத்துப் போர்த்தி உறங்கி விட்டாள் நிதர்ஷனா.

தனது பங்களாவிற்குச் சென்ற யாஷ் பிரஜிதனுக்கு, இன்னும் சற்று நேரத்தில் கனடா நாட்டைச் சேர்ந்த முக்கிய அதிபருடன் நேர்முக மீட்டிங் இருந்தது.

அவனது தயாரிப்புகள் பற்றியும், அடுத்ததாக அவன் தயாரித்துக் கொண்டிருக்கும் புது நுட்பம் பற்றியும் கலந்து பேசிட ஏற்கெனவே தயாராகி இருந்தவன், ஏஐ கண்ணாடி முன் நின்று, நேர்த்தியான உடையைத் தயார் செய்யக் கட்டளையிட்டான்.

கூடவே, நிதர்ஷனா கூறிய ‘இலியானா’ வாசகம் காதில் எதிரொலிக்க, பக்கெனச் சிரித்து விட்டான்.

“சரியான அரை மெண்டலு!” எனத் தலையாட்டிக் கொள்ளும் போதே, ஏ. ஐ மிரர் சத்தம் கொடுத்தது.

“நியூ எமோஷன் டிடெக்டட்!” என்று…

பல வருடங்கள் கழித்துச் சிரிக்கிறான். அதுவும் மனமுவந்து! ஏ. ஐயை ஆச்சரியப்பட வைத்தவனின் முகம் மீண்டும் இறுகிப் போக, சலனமின்றி மீட்டிங்கை முடித்து விட்டு, ஏ. ஐ பெட் சிஸ்டம் அழகாக விரித்து வைத்திருந்த மெத்தை விரிப்பின் மீது தலை சாய்த்தான்.

அவன் படுத்ததும், அவனுக்கு ஏற்ற குளிர்நிலைக்கு ஏசியை செட் செய்த செயற்கை நுண்ணறிவு, விளக்கைக் குறைத்து மெல்லிய மஞ்சள் வெளிச்சத்தில் அறையை நிறைத்தது.

“குட் நைட் எலிசா!” கண்ணை மூடியபடி யாஷ் பிரஜிதன் கூற, “குட் நைட் பாஸ். ஹேவ் அ டைட் ஸ்லீப்” என எலிசா கூவியது.

கூடவே, “மார்னிங் 5 மணிக்கு முக்கிய மீட்டிங் இருக்கிறது, ஆறு மணிக்கு ஆதிசக்தி மாம், உங்களுக்கு அழைப்பு விடுப்பதாகக் குறுஞ்செய்தி அனுப்பி இருக்கிறார்கள்.” என நினைவுபடுத்த மூடிய ஆடவனின் விழிகளுக்குள் கருமணிகள் அங்கும் இங்கும் சுழன்று அவனைச் சுழற்றியடித்தது.

“இன்னும் தூங்கலையா ஆதி…” கணவனின் குரலில் அறையில் ஒளிர்ந்த மஞ்சள் விளக்கை வெறித்துக்கொண்டு மெத்தையில் படுத்திருந்த ஆதிசக்தி, கண்ணைச் சிமிட்டியபடி இளவேந்தனைப் பார்த்தார்.

வலுக்கட்டாயமாகச் சிறு புன்னகையைக் கொடுத்த ஆதிசக்தி, “தூங்கணும் மாமா, எங்க போன நீ?” எனக் கேட்டவருக்கு கம்பீரமான உடல்வாகு. மகனுக்கு இருக்கும் அழுத்தத்தில் தனக்கும் சற்றும் குறைவில்லை என்றதான இறுக்கம்.

“கண்மணி, பாடத்துல சந்தேகம் கேட்டுட்டு இருந்தா…” என்றபடி அவரருகில் படுத்துக் கொண்ட இளவேந்தனுக்கு மனையாளுக்கு எதிர்புறமாகக் கனிந்த முகம். அன்பான மனிதர்! ஆதிசக்தியின் மீதும் அளவுக்கதிகமான அன்பு கொட்டிக் கிடந்தது.

சிறு வயது முதலாக ஒன்றாக வளர்ந்தவர்கள். சொந்த அத்தை மகள். ஆகினும், அவருக்கு உற்ற தோழி போலானவர் ஆதிசக்தி.

“அப்பா என் மேல கோபமா இருக்காருல்ல.” ஆதிசக்தி வருத்தமாகக் கேட்க, அவரது தலையைத் தடவிக் கொடுத்த இளவேந்தன், “மாமாவைப் பத்தி உனக்கே தெரியும் தான. சரி ஆகிடுவாரும்மா” என்றார்.

“உனக்கு என்மேல கோபம் இல்லையா மாமா?” மனையாளின் விழிகளில் கண்ட தவிப்பில் உருகிப் போனவர், “என் ஆதி மேல எனக்குக் கோபம் வந்தா, அது சாமி குத்தமாகிடுமே.” எனக் கிண்டலாய் மொழிய அழுத்த இதழ்களை இளக விட்டே புன்னகைத்தார் ஆதிசக்தி.

திடீரென இருமல் வந்ததில், மூச்சிரைக்க இருமிய மனையாளை எழுந்து அமர வைத்தவர், “மெதுவா ஆதி… இந்தா, தண்ணி குடி” என்று நிதானப்படுத்தி நீர் அருந்த வைத்தார்.

“கண்டதை யோசிக்காத ஆதி. உன் உடம்பு இருக்குற கண்டிஷனுக்கு மனசையும் சந்தோஷமா வச்சுக்கணும். அதுக்குத் தான, உன் பையனை இங்க வர வைக்க, மாமாட்ட உனக்காகப் பேசுனேன்.” என்றவரின் ‘உன் பையன்’ என்ற வேறுபாட்டை உணர்ந்தவருக்குச் சுருக்கென இருந்தது தான்.

அறியாத வயதில், காதல் கண்ணை மறைக்கச் செய்த பிழை அவன்! அப்பிழையை ஏற்றுக்கொள்ள ஆதிசக்தியின் தகப்பனாரான மகேந்திரனுக்குத் துளியும் விருப்பமில்லை. அதன் விளைவே, அவனது தனிமை. அந்தக் கோபம் அவனிடத்தும் அளவுக்கு அதிகமாகவே இருந்தது.

ஆதிசக்தி, அந்தக் காலத்திலேயே படிப்பிலும், அறிவிலும் சிறந்து விளங்கியவர். ஐஐடியில் முதல் மாணவியாகத் தேர்ச்சி பெற்று, விருப்பப் பாடமாக ரோபோடிக்ஸ் பொறியியல் முடித்து, மேற்படிப்பிற்கு ஜெர்மனி செல்ல விரும்பினார்.

அதற்கு முதல் தடையாக இருந்தது மகேந்திரன் தான். “பொண்ணுங்களுக்குப் படிப்பு முக்கியம் தான். ஆனால், சாதிச்சே ஆகணும்னு வெறி வர்ற அளவு தேவை இல்ல. இளாவைக் கட்டிட்டு, அவன் வேலைக்குச் சேர்ந்துருக்குற காலேஜ்ல நீயும் லெக்சரரா சேர்ந்துடு.” என்று ஆணித்தரமாக உரைத்து விட்டார்.

மிகப்பெரிய ரோபோட்ஸ் பற்றிய ஆராய்ச்சியைச் செய்ய வேண்டுமென்பது ஆதிசக்தியின் கனவு. தனது கனவு தகர்ந்ததை ஏற்றுக்கொள்ள இயலாதவர், இளவேந்தனைத் தூது அனுப்பி ஜெர்மனியில் இருந்து திரும்பி வந்ததும், இளவேந்தனைத் திருமணம் செய்து கொள்வதாக வாக்குக் கொடுத்து விட்டே ஜெர்மனிக்குச் சென்றார்.

அங்கும் அவரது அபாரமான திறமையைக் காட்டியதில், சக மாணவர்கள் மட்டுமல்ல, ஜெர்மனியின் புகழ்பெற்ற யூனிவர்சிட்டியின் தாளாளரின் மகனான அலெஸ்சாண்ட்ரோவும் கவரப்பட்டார்.

ஜெர்மனியில் படிப்பை முடித்து இந்தியாவிற்குச் செல்ல முற்பட்டபோது தனது காதலை உரைத்த அலெஸ்சாண்ட்ரோவை செய்வதறியாது பார்த்தார் ஆதிசக்தி. தன்னால் இக்காதலை ஏற்றுக்கொள்ள இயலாது என்று தஞ்சாவூர்க்குத் திரும்பி விட்டவருக்கோ அலெஸ்சாண்ட்ரோவின் நினைவு தான்.

அலெஸ்சாண்ட்ரோ, மறுப்பை ஏற்றுக் கொள்ளவில்லை. தனது இந்திய நண்பனான வரதராஜனின் துணையுடன் தஞ்சாவூருக்கே படையெடுத்து விட்டார்.

வரதராஜனும், ஆதிசக்தியும் ஒன்றாகப் படித்தவர்கள். வரதராஜன் பெரும் பணக்காரர். ஆதிசக்தியின் மூளையை உபயோகித்து மிகப்பெரும் தானியங்கி இயந்திரத் தொழில்நுட்ப நிறுவனத்தைத் தொடங்கப் பெரியதாய் முயன்றார். அதற்காக மகேந்திரனிடமும், இளவேந்தனிடமும் அனுமதி பெற முயல, மகேந்திரனோ “அவளைக் கட்டிக்கப் போறது இளா தான். இனி அவள் விஷயத்துல அவனே முடிவெடுக்கட்டும்.” என்று விட்டார்.

இளவேந்தன் தனது மனம் கவர்ந்தவளின் ஆசையை உணராமல் போவாரா? உடனடியாக அவள் வரதராஜனின் நிறுவனத்தில் இணையச் சொல்லி விட்டார். அவரது ஆசையை அறிந்த இளவேந்தன், பெண் மனதில் உள்ள காதலை அறியாமல் போனது தான் விந்தை!

மகேந்திரனின் கூற்று அலெஸ்சாண்ட்ரோவின் காதல் மனதை உடைத்தது. ஆகினும் தனது முயற்சியை விடவில்லை அவர்.

ஆதிசக்தியின் திறமையும், வரதராஜனின் பணமும், அலெஸ்சாண்ட்ரோவின் அயல்நாட்டுப் பலமும் இணைந்து உருவானதே தற்போது உலக நாடுகளைக் கலங்கடித்துக் கொண்டிருக்கும், ‘எலைட் ரோபோடிக்ஸ் நிறுவனம்’.

இதற்கிடையில், தொழில் அபரிமிதமாக விருத்தி அடைந்தது போல, அலெஸ்சாண்ட்ரோ மற்றும் ஆதிசக்தியின் காதல் வளர்ந்தது. வயிற்றில் குழந்தையாகவும்!

திருமணத்திற்கு முன்பே தான் கருவுற்றதில் ஆதிசக்திக்கு மனம் வலித்தாலும், தனது காதல் மீதிருந்த பெரும் நம்பிக்கையில், தந்தையையும், தன் மீது அதிக அளவு அன்பு சுமந்திருந்த தோழனையும், உதறித் தள்ளி விட்டு எலைட் நிறுவனத்தின் கிளையை இத்தாலி நாட்டில் உருவாக்கும் பொருட்டு இந்தியாவில் இருந்து பறந்தது காதல் கிளிகள்.

ஆனால், ஆதிசக்தியின் காதல் வாழ்க்கை மணம் புரிந்த பின்னும் அதே மணத்தோடு மலரவில்லை. அந்நாட்டின் கலாச்சாரங்களில் அவருக்கு என்றும் ஈடுபாடு இருந்ததில்லை. தனது காதலன் தனக்கு மட்டுமே காதலனாக இருப்பாரென்று நம்பிய ஆதிசக்திக்குப் பெரும் இடியாக விழுந்தது அலெஸ்சாண்ட்ரோவின் முறையற்ற வாழ்வு.

எத்தனைப் பெண்களுடன் சல்லாபித்தாலும், தனது காதல் நீ மட்டுமே என்றவரின் கூற்றில் அருவருப்பை மட்டுமே உணர்ந்தார்.

சிறு வயது முதலே, விரும்பிய பெண்களுடன் டேட்டிங் செய்வது அவரது பொழுது போக்கு, எனவும் நாளடைவில் தான் தெரியவந்தது.

அதே போல தான் ஆதிசக்தியிடமும் நெருங்க முயன்றார் என்றாலும், அவரை விரும்பியது என்னவோ உண்மை தான். வெறும் ஒரு நாளைக்கான உறவாக இல்லாது, அவருடன் வாழ்நாள் முழுக்க வாழ ஆசைப்பட்டவருக்குத் தனது டேட்டிங் வாழ்க்கையையும் விட இயலவில்லை என்பதே நிதர்சனம்.

இதனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு, சண்டைகள் வெடிக்க, யாஷ் பிரஜிதனும் பிறந்து ஒரு வருடம் ஆகிற்று. அவனது பெயர் கூட மனைவியின் விருப்பமே, எனப் பெருந்தன்மையாய் ஒப்புக் கொண்டவரை எண்ணிக் கசந்த முறுவல் எழுந்தது ஆதிசக்திக்கு.

தொழில் ரீதியான வேலைப்பளு, குழந்தைப் பேறுக்குப் பின்னான மன அழுத்தம், காதல் வாழ்க்கையில் தோற்றுப்போன கையாலாகாத நிலை, அனைத்தும் சேர்ந்து ஆதிசக்தியை மீண்டும் தஞ்சாவூரில் தள்ளியது.

மகேந்திரன் மகளை ஒதுக்கித் தள்ளினார். ஆனால் இளவேந்தனின் காதல் நெஞ்சம் அவரை வெறுக்க அனுமதி தரவில்லை.

“அப்படி என்ன தப்புப் பண்ணிட்டா மாமா… மனசுக்குப் பிடிச்சவன் கூட வாழ நினைச்சது ஒன்னும் அவ்ளோ பெரிய குத்தம் இல்ல. நீங்க பார்த்து என் தங்கச்சிக்குக் கல்யாணம் பண்ணி வச்சீங்களே… என் தங்கச்சி நல்லாவா வாழ்ந்தா? புள்ளைங்களோட ரயில்ல தலையைக் குடுத்துச் செத்துட்டா” எனக் கண் கலங்கிட ஆதிசக்தி திகைத்தார்.

இளவேந்தனின் தங்கை அமுதவல்லி, தமையனைப் போலப் பொறுமையானவள் அல்ல. படுசுட்டி! மகேந்திரனையே வார்த்தையால் விளாசும் அளவிற்குத் தைரியமிக்கவள். அவளா தற்கொலை செய்து கொண்டாள்? என அதிர்ந்தே போனவர், “என்ன மாமா சொல்ற, அமுதா எங்க?” எனப் பதறிப்போக, “ப்ச்! தற்கொலை பண்ணிட்டா ஆதி…” என்றவரின் உள்ளம் குமுறியது.

அமுதவல்லியின் இழப்பில், ஏற்கெனவே குற்ற உணர்வில் இருந்த மகேந்திரனுக்கு மருமகனின் வார்த்தை தீயாகச் சுட்டது.

“மன்னிச்சுடுங்க மாமா. உங்களைக் காயப்படுத்தச் சொல்லல. எல்லாரோட முடிவும் எல்லா நேரமும் சரியா அமையாது மாமா. என் தங்கச்சி மாதிரி தப்பான முடிவை எடுக்காம இவளாவது திரும்பி வந்தாளேன்னு சந்தோஷப்படுங்க!” என்றதில் மகேந்திரனுக்கு வேறு வழி இல்லை.

ஆனால் ஆதிசக்தியை ஏற்றுக்கொண்ட யாருக்கும், அச்சு அசலாக அலெஸ்சாண்ட்ரோவின் தோற்றத்தை ஒத்த யாஷ் பிரஜிதனை ஏற்க மனம் வரவில்லை.

அவனது அதிகபட்ச சிவப்பு நிறமே, அவனுடன் ஒன்றத் தடையாக இருந்தது. பின் அந்த ஹேசல் நிறக்கண்களும்!

அலெஸ்சாண்ட்ரோவுக்குப் பழுப்பு நிறக்கண்கள் வித்தியாசமாய் இருக்கும். ஆனால், மகனுக்கு அதை விட வித்தியாசமாய் இருந்த கண்கள், ஆதிசக்தியின் மன அழுத்தத்திற்கு எடை சேர்த்தது.

தன்னை விட்டு மகனுடன் சென்ற மனைவியின் மீது, தீராக் கோபம் பிரவாகம் எடுத்தது அலெஸ்சாண்ட்ரோவிற்கு.

வரதராஜனுக்கோ இவர்களது பிரச்சினையில் தனது தொழில் படுத்து விடுமோ என்ற பயம் எழ, அதற்குத் தோதாய் ஆதிசக்தியும், வியாபாரத்தில் இருந்து விலகுவதாகக் கூறியதில் அரண்டு போனார்.

அலெஸ்சாண்ட்ரோ தனது மகனைத் தன்னிடம் கொடுக்குமாறு ஒரு பக்கம் அழுத்தம் கொடுக்க, வரதராஜன் “உன்னை வச்சு தான் நியூ தீம் எல்லாம் ரெடி பண்ணுனேன் ஆதி. இப்போ திடீர்னு விலகுறேன்னு சொன்னது நியாயமா? நீ விலகிட்டா, ஒத்த ரூபா கூடத் தரமாட்டேன்.” என்று சீறினார்.

“ப்ளீஸ் வரதா, என் மனநிலையைப் புரிஞ்சுக்கோ. ஒருமாதிரி டிப்ரெஷனா இருக்கு. இந்த நிலைல வேலை பார்த்தா, கண்டிப்பா எனக்குப் பைத்தியம் பிடிச்சுடும். அதான் அலெஸ் இருக்காரே, அவரும் நீயும் பிசினஸைப் பார்த்துக்கோங்க.” என்றார் கெஞ்சலாக.

“அவன் நம்ம கூட இருக்குறது பலம் தான். ஆனா இங்க உன் திறமை தான நம்மளை அடுத்த அடுத்த கட்டத்துக்குக் கூட்டிட்டுப் போகுது. உன்னோட கிரியேட்டிவிட்டி, பிற்காலத்துல வர்ற ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் பத்தி எல்லாம் ரிசர்ச் பண்ணிருக்குறது நீ தான். எனக்கு அதைப்பத்தி அரிச்சுவடி கூடத் தெரியாது. ப்ளீஸ், என்னை நட்டாத்துல விடாத…” இம்முறை மிரட்டல் வேலைக்காகாமல் அவரும் கெஞ்சினார்.

“நான் சர்ச் பண்ணது வரை எல்லாமே உனக்குத் தர்றேன் வரதா. என்னோட பெஸ்ட் ப்ரெண்ட் நீ. உனக்குத் தராம போயிடுவேனா? பியூச்சர்ல இந்த ஏ. ஐ யும் ரோபோடிக் மெஷினும் சேர்ந்து செய்யப்போற அற்புதங்கள் எல்லாம் வேற மாதிரி இருக்கும் வரதா. இப்போ நம்ம செஞ்சு வச்சுருக்கோமே, பெரிய பெரிய ரோபோஸ், அதெல்லாம் கூடத் தேவைப்படாது. இனி, எதிர்காலத்துல வர்ற செயற்கை நுண்ணறிவுக் கருவிகள் எல்லாம் கையடக்க பாக்கெட் சைஸ்லயே இருக்கும். நம்மளோட லேப்டாப் மாதிரி நம்ம கூடவே இருக்குறதுக்கான சாத்தியக் கூறுகள் அதிகம். அது மட்டும் இல்ல…” என்றவர் ஒரு முறை சுற்றி முற்றிப் பார்த்து விட்டு,

“இந்த ரோபோஸ் அண்ட் இனி வரப்போற ஏ. ஐ வச்சு…” என்றவர் அவரது கண்டுபிடிப்பிற்கான அடித்தளத்தைக் கூற, வரதராஜனின் கண்கள் மின்னியது. அவர் வழியே இதனை அறிந்த அலெஸ்சாண்ட்ரோவும் இதனை அறிந்து ஸ்தம்பித்து, மீண்டும் ஆதிசக்தியைத் தொழிலினுள் புக வைக்க முயன்று அதில் தோல்வியே கண்டார்.

மனதளவில் அவருக்குக் கொடுத்த தொந்தரவைப் புரிந்து கொண்டவர், கணவனிடம் இருந்தும், தோழனிடம் இருந்தும் முழுதாய்ப் பிரிந்து, அலெஸ்சாண்ட்ரோவின் தொந்தரவில் தனது மகனையும் ஐந்து வயதளவில் கணவனிடமே கொடுத்து விட, யாஷ் அங்கிருந்து சென்ற பிறகே மகேந்திரனும் மகளிடம் இயல்பாகப் பேசினார்.

அனைத்தும் ஆதிசக்திக்கு மீண்டும் இயல்பானது. ஆதிசக்திக்கும், இளவேந்தனுக்கும் திருமணம் நிகழ, அதன்பிறகு தனது பழைய வாழ்க்கையை முற்றிலும் மறந்து, மீண்டும் ஒரு காதல் வாழ்க்கையில் பயணித்தவருக்குப் பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தை பிறந்தே போதே, யாஷின் நினைவு அதிகம் வாட்டியது அவருக்கு.

ஆனால், காலம் கடந்திருந்தது. அவன் இவரிடம் பேச விருப்பம் தெரிவிக்காதது சுள்ளென வலித்தது.

பல வருடம் கடந்து சமீபமாக அவருடன் உரையாடிய யாஷ், தனக்கு வேண்டியது அவரது அன்பல்ல, அவரது கண்டுபிடிப்பு! எனக் கேட்க, வெகுவாய் சுணங்கி விட்டார்.

—-

அதிகாலையிலேயே நிதர்ஷனாவைத் தனது பங்களாவிற்கு வரச் செய்திருந்தான் யாஷ் பிரஜிதன். வேலையாள்கள் அவளை வாசலிலேயே விட்டுச் செல்ல, அவளோ ‘பக்கத்து பங்களாவ விடப் படமா இருக்கே இது…’ என்றபடி உள்ளே நுழைந்தாள்.

“வெல்கம் மேம். கிரேட் டூ சீ யூ!” என்று கதவில் இருந்து சத்தம் வந்ததில், “ஐயோ அம்மா, நான் இல்ல…” எனப் பதறிக்கொண்டு வெளியே செல்லப் போனவளை ஆட்டோமேட்டிக் செயற்கை நுண்ணறிவு பொருத்தப்பட்டிருந்த வாயிற்கதவு, வெளியில் விட அனுமதிக்காமல் டொம்மென மூடியதில் அவள் மூக்கில் இடித்துக் கொண்டாள்.

“சாரி… எங்க பாஸ் அனுமதி இல்லாமல், நீங்க இங்க இருந்து போக முடியாது” என்று சத்தம் கொடுத்தது.

“ஆஆ..” என மூக்கைப் பிடித்துத் தேய்த்தவள், “யோவ் கலப்படக் கண்ணுக்காரா, எங்கயா இருக்க? அடேய் அரக்கா…” எனக் கத்திக்கொண்டு விறுவிறுவென முன்னே நடக்க, தரை துடைக்கும் இயந்திரம் அவள் காலில் இருந்த தூசியை உணர்ந்து தனது இடத்தில் இருந்து வெளியில் வந்து தரையைத் துடைக்க முற்பட்டு அவள் காலுக்கடியில் நிற்க, அரண்டு போன நிதர்ஷனா,

“ஐயோ அரக்கா, சீக்கிரம் வாய்யா… என்னமோ ஊர்ந்து வருது.” எனக் கத்தியதில், அத்தனை மாதங்களும் எஜமானனின் அமைதியான கட்டளைகளையே கண்டிருந்த ஏ. ஐ ரோபோடிக் சிஸ்டம் அனைத்தும், யாஷ் பிரஜிதன் போலவே அவளை எரிச்சலாய் பார்த்தது.

அன்பு இனிக்கும்
மேகா

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
34
+1
97
+1
5
+1
13

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்