Loading

அத்தியாயம் 9

‘நாடு விட்டு நாடு கடத்திப் பார்த்திருக்கேன். ஊரு விட்டு ஊரு கடத்தி இப்பத்தான் பாக்குறேன்…’ தஞ்சாவூருக்கு யாஷ் பிரஜிதனின் பாடி கார்ட்ஸ் மூலமாகக் கடத்தி வரப்பட்ட கதிரவன் புலம்பித் தள்ளினான்.

சென்னையில் இருந்தது போலப் பெரியதாக இல்லையென்றாலும், குட்டி பங்களாவாக இருந்த வீட்டைச் சுற்றி முற்றிப் பார்த்தான். அங்கு இருந்ததை விட நவீனமான உள்வடிவமைப்பு. வீட்டு வேலை செய்ய அனைத்திற்கும் ஏ. ஐ ரோபோட்ஸ். ஆனால், அதெல்லாம் ரோபோட் என நம்ப இயலாத அளவு, அனைத்தும் வித்தியாசமான தனித்தன்மையுடன் இருக்க, அவ்வீட்டையே வெறிக்க வெறிக்க ஏறிட்டான் கதிரவன்.

அவன் தப்பித்துப் போகாமல் இருக்க, கூடவே இருவர் அவனுடனே இருந்தனர்.

“ஹெலோ பாஸ், இது எந்த ஊரு?” என ஒருவனிடம் கேட்க,

“டாஞ்சூர்!” என்றான்.

‘ஓ! ஏதோ நார்த் இந்தியா சைடு கூட்டிட்டு வந்துட்டானுங்க போல…’ என எண்ணிக் கொண்டவன், “ரெண்டு நாளா இதே வீட்ல அடைஞ்சுருக்கேன் பாஸ். கொஞ்சம் வெளில போயிட்டு வரட்டா?” எனப் பாவம் போலக் கேட்க, அவன் பேண்ட் பாக்கெட்டில் சொருகி வைத்திருந்த துப்பாக்கியைத் தொட்டுப் பார்த்தான்.

அதில் வெளிறிய கதிரவன், “சரி சரி, துப்பாக்கி அங்கனயே இருக்கட்டும். அட்லீஸ்ட் குளிச்சுட்டு வரட்டா…” எனக் கேட்க, பாடிகார்ட்ஸ் தலையாட்டி விட்டு அவனை அறையில் விட்டுச் சென்றனர்.

வசதியெல்லாம் பிரமாதமாகத் தான் இருந்தது. சமைக்கக் கூட மெஷின் வைத்திருந்தார்கள். ‘அப்படியே குளிக்க வைக்கவும் ஒரு ரோபோ செஞ்சுருக்கலாம்.’ எனப் புலம்பியபடி குளியலறைக்குள் புகுந்து பாத்டப்பில் நீரை நிரப்பி அதில் அமர்ந்தான்.

எங்கேயோ கிசுகிசுவெனச் சத்தம் கேட்டது. நீராடியபடியே உறங்கச் சென்றவனுக்கு அந்தச் சத்தம் தொந்தரவாக இருக்க, ‘எதுவும் பல்லித் தொல்லையா இருக்குமோ?’ என்ற சந்தேகம் எழ, மீண்டும் ஒரு முணுமுணுப்பு.

“என்னவா இருக்கும்?” என இடத்தைச் சுற்றி முற்றிப் பார்த்தவனுக்கு வெளிப்புறம் இருந்து சத்தம் கேட்க, அவசரமாகத் துவாலையை இடுப்பில் கட்டிக் கொண்டான்.

“ஹே சிந்தா… என்ன பண்ணிட்டு இருக்க? அப்பா பார்த்தா திட்டப் போறாரு…” காதோரம் ஜிமிக்கி ஆட, பச்சை வண்ணச் சுடிதாரில் அண்ணாந்து பார்த்து ஹஸ்கி குரலில் பேசினாள் கண்மணி. இளவேந்தன், ஆதிசக்தியின் தவப்புதல்வி.

அவளால் ‘சிந்தா’ என அழைக்கப்பட்ட சிந்தாமணியோ, தனது கருநீல நிறப் பாவாடை, தாவணியை இடுப்பில் சொருகியபடி, ஏணியில் ஏறிக் கொண்டிருந்தாள்.

“இருடி கண்மணி, வெளிநாட்டு மாமன்காரன் எப்படி இருக்கான்னு பார்க்க வேணாமா?” சிந்தாமணி தனது கொலுசோசை ஒலிக்க மெல்ல மெல்ல ஏறினாள்.

“அடியேய்! அண்ணே இன்னும் வரலைன்னு தான் அம்மா சொல்லுச்சு. நாளைக்குத்தான் வருதாம், அதுவும் அண்ணியோட…” கண்மணி தலையில் அடித்துக் கொள்ள,

“அவன் அண்ணியோட வரட்டும், டேங்கர் லாரித் தண்ணியோட கூட வரட்டும். எனக்கு முறைப்பையன் தான… அரைக்கிழமா இருந்தாலே நம்ம விடமாட்டோம். அயல் நாட்டுக்காரனை விடுவோமா? சைட்டு இஸ் மை ஃபர்ஸ்ட் ப்ரிபரன்ஸ்…” என்றபடி ஒரு ஜன்னலைத் திறக்க முயல முடியவில்லை.

“என்னடி, வெளில இருந்து பார்க்கையில திறக்க ஈசியா இருக்குற மாதிரி இருக்கு.” என மீண்டும் முயற்சிக்க, குளியலறை ஜன்னல் கிடுகிடுவென ஆடியதில், கதிரவனுக்கு அடிவயிற்றில் பயப்பந்து உருண்டது.

‘எதுவும் பேய் பிசாசா இருக்குமோ?’ என எச்சிலை விழுங்கியவனுக்கு, பார்த்த பேய் படங்களெல்லாம் நினைவிலாடிட, நடுங்கிய கைகளுடன் ஜன்னலை உள்ளிருந்து திறந்தான்.

அவன் ஜன்னலைத் திறந்ததும் அலாரம் போல ஏதோ ஒலி வர, “ஐயோ அம்மா…” எனக் கதிரவன் கத்தியதில், திடீரென ஜன்னலைத் திறந்து விட்டு ஒரு ஆடவன் கத்தியதில், மிரண்டு போன சிந்தாமணியும் “ஆ…” வென அலறினாள்.

அவள் ஆடியதில் ஏணி பின் பக்கமாய் சாய, கீழே விழப் போனவளின் கையை இறுக்கமாகப் பற்றிக் கொண்டான் கதிரவன்.

“யம்மா, யாரும்மா நீயி? இந்தக் கனம் கனக்குற?” என்றவனுக்கோ அவளைப் பிடிக்க இயலவில்லை. கண்மணி பயந்து, வேகமாக ஏணியை நேராக வைத்து விட்டு, “சிந்தா, சீக்கிரம் ஏணில காலை வச்சு இறங்கு. யாரும் வந்துடப் போறாங்க.” என்று பதறினாள்.

அதற்குள், குளியலறைக் கதவைத் திறந்து பாடிகார்ட்ஸ் உள்ளே வந்து விட, அதில் கதிரவன் “டேய்! என்னங்கடா, பாத்ரூம்ல கூடப் பாதுகாக்க வந்துட்டீங்களா?” என்றதில், “தப்பிச்சுப் போகப் பார்க்குறியா?” என்றான் ஒருவன்.

“அட நாசமாப் போனவனே, தப்பிச்சுப் போறவன் ஏன் இங்க அல்லாடிட்டு இருக்கேன். குனிஞ்சு பாருய்யா… ஒரு பொண்ணு என் கையைப் பிடிச்சு ஒடைச்சுட்டு இருக்கு.” என்றதுமே அவர்கள் ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தனர்.

அவர்கள் யாரென்று அறிந்ததும், பாடி கார்ட்ஸும் சேர்ந்து அவளைப் பிடிக்க, அவளோ பயந்து ஏணியில் காலை வைத்து மடமடவென இறங்கினாள்.

அவளும், கண்மணியும் பக்கத்து காம்பவுண்ட் சுவரில் குதித்து வீட்டிற்குச் சென்று விட, “அடிப்பாவிங்களா!” என வாயில் கை வைத்தான்.

இருவரும், பின்பக்கம் வழியாக வீட்டினுள் நுழைய, அங்கு வந்த இளவேந்தன் “என்னமா, யாரோ கத்துற சத்தம் கேட்டுச்சு.” எனக் கேட்டார் புருவம் சுருக்கி.

கண்மணி திணறிட, சிந்தாமணி தான் “அது தான் மாமா எங்களுக்கும் தெரியல. நாங்களும் ஏதோ சத்தம் கேட்டுச்சேன்னு பார்த்தோம்.” என்று அசடு வழிந்தாள்.

“சரி சரி, உள்ள போங்க!” என உத்தரவிட்டவர், பின் வாசல் வழியே தெரிந்த வீட்டை ஒரு முறை பார்த்து விட்டுக் கதவை அடைத்தார்.

தஞ்சாவூரின் மையப்பகுதியில், வெள்ளாற்றின் நதிக்கரையின் பின்பக்கம் அமைந்திருந்தது மகேந்திரனின் திண்ணை வீடு.

மகேந்திரனின் அப்பா காலத்தில் கட்டப்பட்ட வீடு. இன்றும் தனது உறுதி மாறாது சிற்பமாய் நிற்கிறது. வாசலில் இருபுறமும் திண்ணை அமைத்து, வீட்டினுள் நுழைந்ததும் கை கால் கழுவிடச் சிறு முற்றம் வைத்து, சீலிங்கை பல அடிகள் உயர்த்தி இருந்தனர்.

கீழே நான்கு அறைகளும், மாடியில் நான்கு அறைகளும் என அந்தக் காலத்தில் கட்டப்பட்ட பங்களா அது. அந்தக் கம்பீரத்திற்குக் கொஞ்சமும் குறையாமல் வீற்றிருந்தது, அதற்கு அருகிலேயே இருந்த மற்றொரு வீடு.

ஆதிசக்திக்குச் சீதனம் கொடுப்பதற்காகத் தங்கள் வீடு போன்றே மகளுக்கும், அருகில் அதே போலான வடிவமைப்பில் வீடு கட்டி இருந்தார்.

ஆதிசக்தியும், இளவேந்தனும், கண்மணியுடன் அங்கு தான் இருந்தனர். அதுதான் அவர்கள் வாழ்வைத் தொடங்கிய இடமும் கூட.

மகேந்திரனுடன் பிறந்தது ஒரு தங்கை. அந்தத் தங்கையின் செல்வங்கள் தான் இளவேந்தனும், அமுதவல்லியும்.

பத்து வருடங்கள் மகேந்திரனுடனான நிறைவான வாழ்வில் நிம்மதியுற்ற அவரது மனைவி ஆண்டாள், தனது மகனையும் மகளையும் கணவரிடம் ஒப்படைத்து விட்டுக் கண் மூட, இருவரையும் வளர்த்துக் கொண்டு மனையாளின் நினைவில் மறுமணம் செய்யாது வாழ்ந்து வந்தவர்.

அவரது இரண்டாம் திருமணம் பற்றி மகேந்திரனிடம் உறவினர்கள் கேட்டதற்குக் கூட, சிறு சிரிப்பை உதிர்ப்பார்.

“என் ஆண்டாளோட அசரீரீ என்னைக்கு எனக்குக் கேட்காம இருக்கோ, அவளோட வாசத்தை எப்ப இந்த வீட்ல நான் உணராமல் போறேனோ, அப்பவே இன்னொரு பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்.” என்பார். வயது எழுபதை நெருங்குகிறது.

இப்போது வரையிலும், மனையாளின் இருப்பை அவ்வீட்டில் உணர்கிறார் அப்பெரியவர்.

மகேந்திரனின் மூத்த மகன் அழகேசன், இளையவள் தான் ஆதிசக்தி.

அழகேசனின் மனைவி கிருஷ்ணவேணி. ஒற்றைப் பெண் சிந்தாமணி.

தங்கை மீது அபரிமிதமான பாசம் வைத்திருப்பவர். அதே நேரம், அவர் மீது கோபத்தைக் காட்டுவதும் அவரே.

வெளிநாட்டுக்காரனைக் காதலித்த தங்கையை வெட்டிப் போடும் அளவு சினம் கொண்டதும் அவரே. சில தவிர்க்க இயலாத காரணங்களாலும், தனது மன அழுத்தத்தாலும், யாஷை அலெஸ்ஸாண்ட்ரோவிடம் ஒப்படைத்ததற்காக, இன்றளவும் வருத்தம் கொள்வதும் அவரே. ஆகினும், தந்தையின் மீதுள்ள மரியாதை காரணமாகத் தனது வருத்தத்தை மனத்திலேயே வைத்துக் கொண்டார்.

கிருஷ்ணவேணி, ஜாடிக்கு ஏத்த மூடி போல. கணவனைப் போலவே குடும்பத்தாரிடம் அதீத அன்புள்ளவர்.

“ஆதி… உன் மகனையும், மருமகளையும் இங்கயே தங்கச் சொல்லிருக்கலாமே?” சிவப்பு நிறக் காட்டன் புடவை அணிந்திருந்த கிருஷ்ணவேணி, ஆப்பிளை நறுக்கியபடியே ஆதிசக்தியிடம் வினவினார்.

மாடியில் அமைந்திருக்கும் தனது அறை ஜன்னலின் அருகே நின்று, சற்றுத் தூரத்தில் தெரியும் நதியில் மானசீகமாக நீந்திக் கொண்டிருந்தவர், அவன் என் கூடத் தங்க மாட்டேன்னு சொன்னதுனால தான அண்ணி, அவனுக்கும் ரித்திகாவுக்கும் நாங்க இருந்த வீட்டைக் குடுக்க ஏற்பாடு பண்ணிட்டு இங்க வந்துட்டோம். அவனுக்குன்னு தனி ஸ்பேஸ் வேணும்னு கேட்டான்… வெளில வீடு எடுத்துத் தங்கப் போறேன்னு நின்னவனை, நீ வீட்டை என்ன ஆல்ட்ரேஷன் வேணும்னாலும் செஞ்சுக்கன்னு சொல்லிக் குடுத்தப்பறம் தான் அமைதியா இருந்தான். ஆறு மாசத்துக்குப் பக்கத்துல இல்லைன்னாலும், அட்லீஸ்ட் பக்கத்து வீட்லயாவது இருக்கலாம்ல…” என்றார் உணர்வற்று.

அவர் கூறியதைக் கேட்டபடி ஆப்பிள் தட்டை நீட்டியவர், “இந்தா, பழத்தைச் சாப்பிடு. மாமியா மருமக சண்டையெல்லாம் போட வேண்டிய சூழ்நிலை வந்தால் தெம்பு வேணும்ல…” அவரது மனநிலை புரிந்து கேலி செய்தார்.

அதில் தன்னை மீறி முறுவலித்த ஆதிசக்தி, “சண்டை போடுற அளவு ரெண்டு பேரும் என்கூடப் பேச்சு வார்த்தை வச்சுக்குறாங்களான்னு பார்க்கலாம்…” இறுதியில் கசந்த முறுவலாய் மாறியது.

“வர்றது, வரதா அண்ணாவோட பொண்ணு தான ஆதி?” கிருஷ்ணவேணி தயக்கத்துடன் கேட்க,

“ம்ம்… அதுவே இளா மாமாவுக்கு வருத்தம் தான். ஆனா நான், அவளைக் கல்யாணம் பண்ணிப்பான்னு எதிர்பார்க்கல அண்ணி…” என்றார் சற்றே தாங்கலாக.

“எல்லாம், நான் பெத்ததால வந்தது…” அப்போது தான் அறைக்குள் நுழைந்து ஆதிக்கு வெட்டி வைத்த ஆப்பிளை அபகரித்து உண்டு கொண்டிருந்த சிந்தாமணியை முறைக்க, அவளோ “நான் என்னமா செஞ்சேன்?” என்றாள் பாவமாக.

“ம்ம்க்கும்! வெளிநாட்டு மாமன்காரன் பார்க்க எப்படி இருப்பான்னு உன் தாத்தாகிட்டக் கேட்டு வச்சது நீ தான? ஏற்கெனவே வெளில இருந்த வந்த ஆம்பளைங்களால, வீட்ல ரெண்டு பொண்ணுங்க வாழ்க்கை சிக்கலாகிடுச்சேன்னு மருமகன் வர்றதுல விருப்பம் இல்லாம இருந்த மாமா, நீ கேட்ட ஒத்த வார்த்தையில அவனை வந்தா குடும்பத்தோட, பொண்டாட்டி சகிதம் வரச் சொல்லிட்டாரு. எங்க நீயே அவனைக் கூட்டிட்டுப் போய் தாலி கட்டிடுவியோன்னு மாமாவையே மிரள வச்சுட்டடி!”

“ஏன்மா… எனக்குன்னு சொல்லிக்கத் தஞ்சாவூர்லயே ஒரு மாமா மகனும் இல்ல. சரி பாரீன் ரிட்டர்ன் எப்படி இருப்பான்னு கேட்டுத் தெரிஞ்சுக்க நினைச்சது குத்தமா? அதுக்காக இப்படி என் சிங்கிள் மாமாவைக் கமிட்டட் ஆக்கி, என் வயித்துல ஆசிட் ஊத்திட்டீங்களே…” எனப் போலியாய் வருத்தம் கொள்ள, எப்போதும் போல அவளது குறும்பில் இரு பெண்களும் சிரித்தனர்.

“விடுங்க அண்ணி, எப்படியா இருந்தாலும் அப்பா ஏதாவது ஒரு டிவிஸ்ட் வச்சு இருப்பாரு. அது இந்த மாதிரி ஆகிடுச்சு. இதுக்காகப் போயிட்டு என் மருமகளைத் தப்புச் சொல்லிட்டு…” ஆதி சிந்தாமணியைக் காக்க,

“அப்படிச் சொல்லுங்க அத்தை… இந்தச் சுதந்திர நாட்டுல சொந்த அத்தை மகனை சைட் அடிக்க எனக்கு உரிமை இல்லையா? ஐயகோ!” எனும்போதே மகேந்திரன் வரும் அரவம் கேட்க, “என்ன சைட்டு?” எனக் கேட்டபடி உள்ளே வந்தார்.

‘ஆத்தாடி!’ என மிரண்டவள், “அது..வந்து தாத்தா, எனக்கு ஐ சைட்டு கொஞ்சம் கம்மியா இருக்குற மாதிரி இருக்கு. அதான் கண்ணாஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போகச் சொன்னேன்.” என்று சட்டெனப் பிளேட்டை மாற்ற, “எப்பப் பார்த்தாலும் போன் பார்த்துட்டே இருந்தா இந்தப் பிரச்சினை தான்.” என்றார் அக்மார்க் பெரியவராக.

“இனிப் பார்க்க மாட்டேன் தாத்தா…” என வேகமாகத் தலையாட்டி விட்டு அங்கிருந்து நழுவியவளைக் கண்டு, ஆதியும் கிருஷ்ணவேணியும் நமுட்டுச் சிரிப்புடன் பார்த்தனர்.

கோவிலில் இருந்து மீண்டும் தனது பங்களாவிற்குத் தனது புது நடிப்பு மனைவியை அழைத்து வந்தான் யாஷ் பிரஜிதன்.

வந்ததும் உடையை மாற்றியவன், “இன்னைக்கு ஈவ்னிங் ட்ரிச்சிக்கு பிளைட். உனக்குத் தேவையான ட்ரெஸ் எல்லாம் ஊர்ல இருக்குற வார்ட்ரோப்ல செட் பண்ணியாச்சு. இங்க ரெண்டு ட்ரெஸ் மட்டும் இருக்கு. ட்ரையல் பார்த்துக்கோ… அதை மட்டும் ஹேண்ட் லக்கேஜா எடுத்துக்கோ. எனக்கு முக்கியமான வேலை இருக்கு, டோன்ட் டிஸ்டர்ப் மீ…” என்று அதிகாரமாய்க் கூறிவிட்டுத் தனது அலுவல் அறைக்குள் நுழைந்தான்.

90 சதவீதம் அவனாக உருவாக்கிய புது ஏ. ஐ சாதனத்தின் ஆராய்ச்சியை இத்தாலியில் விட்டுவிட்டு வந்து இத்துடன் ஒரு மாதம் ஆகிறது. அவன் வாழ்க்கையில் மிக மிக முக்கியமானது இந்தக் கண்டுபிடிப்பு. இனி எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவை எப்படித் தடுக்க இயலாதோ, அதே போல இவனது வானளாவிய வளர்ச்சியையும் தடுக்க இயலாது. அதனை 100 சதவீதம் முடிக்க வேண்டுமானால், தாயின் பல வருடத்திற்கு முன்னான கண்டுபிடிப்பின் சூட்சுமம் அவன் அறிய வேண்டும். அதற்காகவே, இத்தனை வருடங்களாக இறங்கி வராதவன், இப்போது பிடிவாதமாய் நிற்கிறான்.

ஆனால், இப்பயணம் அவனுக்குத் தரப் போகும் இன்ப, துன்ப அதிர்ச்சிகளை அறியாதவனாகத் தனது மடிக்கணினியில் மூழ்கி இருந்தான்.

சிறிது நேரத்தில் ஏதோ கருகும் வாசனை வர, முகத்தைச் சுருக்கியபடி அவசரமாய் வெளியில் வந்தவன், அடுக்களையில் நிதர்ஷனா செய்யும் காரியத்தில் திகைத்தான்.

அவனது ‘ஒன் செப்’ சமையல் செய்யும் இயந்திரத்தில், தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைத்துச் சூடு செய்து கொண்டிருந்தாள்.

அதற்கு மட்டும் தானாகப் பேசும் சக்தி இருந்திருந்தால், “யோவ் பாஸ்… என்னை விடச் சொல்லுயா…” என அவளைப் போலவே கத்தி இருக்கும்.

பரிதாபமாக அவளிட்ட தீயில் கருகிக் கொண்டிருந்தது.

“ஏய், மெண்டல்! மெண்டல்!” என அவசரமாக அடுப்பை அணைத்தவன், “இதை எதுக்குடி கேஸ் ஸ்டவ் மேல வச்ச?” எனக் காய்ந்தான் யாஷ் பிரஜிதன்.

“ஒரு காபி போடலாம்னு வந்தேன் யாஷ். இந்த மெஷின்ல தான நீங்க நேத்துக்குக் காபி கேட்டீங்க. நானும் அதே மாதிரிக் கேட்டேன். பச்சைத் தண்ணியைக் கூடக் கண்ணுல காட்டல. ஏதோ பேசிட்டே இருந்துச்சு, நான் பக்கத்துல வந்ததும்… அதுனால இதையே தூக்கி அடுப்புல வச்சேன். எப்படி என் க்ரெய்ன்…” என்றதும் யாஷ் பற்களைக் கடித்தபடி,

“இட்ஸ் ஏ. ஐ செல்ப் குக்கிங். சென்சார் இருக்கறதுனால ஹியூமன் பீயிங்கை டிடக்ட் பண்ணாலே அலெர்ட் குடுக்கும். அண்ட் இட் ஹேஸ் மை பேஸ் அண்ட் வாய்ஸ் மெமரி. நான் ஆர்டர் செஞ்சா தான் குக் பண்ணும், புரியுதா?” என்றான் அடக்கப்பட்ட எரிச்சலுடன்.

திருதிருவென விழித்தவள், “நானும் கம்ப்யூட்டர் ஸ்டூடன்ட் தான்!” எனப் பெருமையாய் சொல்லி விட்டுப் பின், “ஆனாப் பாருங்க, இதெல்லாம் என் சிலபஸ்ல இல்ல… அதனால புரியல.” என்றாள் பரிதாபமாக.

ஆடவன், தீப்பார்வையில் அவளைத் திணறடிக்க, “சரி, எனக்கு காபியே வேணாம்.” என அங்கிருந்து ஓடி விட்டாள்.

அன்று மாலை, இருவரும் திருச்சியை வந்தடைந்திட, விமான நிலையத்திலேயே பாவையின் கண்கள் அங்கும் இங்கும் அலைபாய்ந்தது. அங்கு அவன் ஆள்கள், ஏற்கெனவே ஏற்பாடு செய்திருந்த அதிநவீனக் காரை வாங்கிக் கொண்டு, தஞ்சாவூர் நோக்கிச் செல்லும் போதும் ஜன்னல் வழியே தேடிக் கொண்டே வந்தாள்.

சட்டென, “காரை நிறுத்துங்க, ஒரு நிமிஷம்! ஒரு நிமிஷம்!” என்று அவள் கத்தியதில் யாஷ் சற்றே ஓரமாகக் காரை நிறுத்தினான்.

எரிச்சல் மிக, “இடியட், எதுக்கு காரை நிறுத்தச் சொன்ன?” எனக் கேட்க, அவளோ கதவைத் திறக்க முயன்றாள்.

“கதவத் திறங்க யாஷ்!” அவள் அவசரமாகக் கேட்க, அவனோ அவளை சந்தேகமாகப் பார்த்தான்.

“ஐயோ, நான் ஓடிலாம் போகல…”

“நீ ஓடிப்போகணும்னு நினைச்சாலும் முடியாது. வெளில போனா காசி உன்னைத் தூக்குவான். நான் கதிரவனைத் தூக்குவேன்… தட்ஸ் இட்!” திருமணமானதும் வெகு அசட்டையாய் வந்தது அவனது வார்த்தைகள்.

“ஐயோ, நீ காசி கடனை அடைக்கிற வர, நானே உன்னை நிம்மதியா விட்டுப் போற ஐடியால இல்லையா அரக்கா… கதவைத் திற ப்ளீஸ்…” எனக் கெஞ்சத் தொடங்க, காரை அன்லாக் செய்தான்.

உடனே புயலாக இறங்கி ஓடியவளை அவள் அணிந்திருந்த ஹை ஹீல்ஸும், தரை வரை பரவிய மேக்சியும் தடுக்க, “இது வேற…” என மேக்சியைக் கைலி போல மடித்துக் கட்டிக் கொண்டவள், இரு செருப்பையும் கழற்றிக் கையில் வைத்துக்கொண்டு மறு சாலைக்கு ஓட, யாஷும் “ஏய், கடன்காரி எங்கடி ஓடுற…” என அவனும் அவள் பின்னால் சென்றான்.

வேகமாக ஒருவனின் அருகில் சென்றவள், சட்டென நின்று விட்டுத் திரும்பி யாஷை நோக்கியே வர, அவனோ வேகமாகச் சாலையைக் கடந்து வந்து அவளை ஓங்கி அறையப் போனான்.

உதடு பிதுக்கி அவள் பாவம்போல நிற்க, “அறிவிருக்கா… நடுரோட்டுல இறங்கி ஓடிட்டு இருக்க?” என்றவன் தனது லேசர் விழிகளால் அங்கும் இங்கும் அலசினான்.

“இட்ஸ் நாட் சேஃப் இடியட்!” என்றவனின் கூற்றை முழுதாய் கேளாமல்,

“அதில்ல யாஷ்… என் அண்ணன் திருச்சிக்கு வர்றதா தான் சொல்லிருந்தான். தூரத்துல இருந்து பாக்கைல அவனை மாறித் தெரிஞ்சுச்சு. அதான்… வந்தேன். இன்னையோட அவன் போய் ஆறு மாசத்துக்கு மேல ஆச்சு. காசு கிடைச்சுட்டா வந்துடுவான். என் போனுக்கு அவன் நம்பர்ல இருந்து கால் வந்துச்சா? என் போனை செக் பண்ணீங்களா?” எனக் கண்களை உருட்டிக் கேட்க, தமையனைக் காணாத ஏக்கமும் அதில் பொதிந்திருந்தது.

யாஷ் அவளை அமைதியாக ஏறிட்டு, “உனக்கு ஒரு நாளைக்குப் பத்து கால் வருது. அதுல கடனைக் கேட்டுக் கடன்காரங்க தான் கால் பண்றாங்க…” என நக்கலடித்தவன், “செருப்பைக் கீழ போடு… கால்ல ஸ்டோன் குத்தலையா உனக்கு? மொதோ ட்ரெஸ்ஸை ஒழுங்கா போடு.” என்று அதட்டினான்.

“இந்த ஹீல்ஸைப் போட்டுட்டு நடக்கவே முடியலையா…” எனக் குறை கூறியவள், இடுப்பில் தூக்கிக் கட்டி இருந்த மேக்சியை இறக்கி விட்டு, “காருக்குத் தான போறோம். செருப்பைக் கைல வச்சுட்டே வரேன்.” என்றதில் தலையில் அடித்துக் கொண்டான்.

இருவரும் தஞ்சாவூரை அடைந்த போது இருட்டி விட்டது.

இரவு உணவு தனது வீட்டில் உண்டு விடக் கூறி, முன்னரே ஆதிசக்தி மகனிடம் அனுமதி வாங்கி இருக்க, அவரது ஆசையின் படி தடபுடலாக விருந்து ஏற்பாடானது.

இரு வீடுகளும் ஒரே போலத் திண்ணை வைத்து அமைந்திருந்ததைக் கண்டு வாய் பிளந்த நிதர்ஷனா, “வீடு சூப்பரா இருக்குல்ல…” என்றாள்.

“ரித்தி… நீ பணக்காரி! இந்த வீடுலாம் உனக்கு ஒரு விஷயமே கிடையாது. எல்லாத்துக்கும் ஷாக் அண்ட் சர்ப்ரைஸ் ஆகாம கேஷுவலா இரு…” என்று அவள் காதோரம் குனிந்து அடிக்குரலில் கடிந்தான் யாஷ்.

அவளும் அடக்கமாகச் சரியெனத் தலையசைத்திட, நெடுநெடுவென வளர்ந்திருந்த மகனைக் கண்டு ஆதியின் கண்கள் பூரித்துப் போனது.

தோற்றம் மட்டும் அலெஸ்ஸான்ட்ரோவின் சாயல். யாஷ் அவரை ஒரு பொருட்டாகவே எண்ணவில்லை.

“இட்ஸ் ஆல்ரெடி லேட் மாம்மா, வாட் நெக்ஸ்ட்?” என்றான் தோளைக் குலுக்கி.

பல வருடம் கழித்து அன்னையைப் பார்த்தும், தனக்குள் எந்தவித உணர்வும் எழவில்லை என்று சூசகமாகக் கூறி விட்டான்.

தொண்டையில் துக்கம் அடைத்தது. ஆகினும், தனது கம்பீரத்தை மீட்டுக் கொண்ட ஆதிசக்தி, நிதர்ஷனாவைப் பார்த்து “ரித்திகாவா?” எனக் கேட்க, “ம்ம்!” என்றான் யாஷ்.

“உள்ள வாங்க…” என இருவரையும் அழைக்க, கிருஷ்ணவேணி “ஒரு நிமிஷம் இருங்க… புதுசாக் கல்யாணம் ஆகி வர்றாங்க. ஆரத்தி எடுக்க வேணாமா அண்ணி…” என்று விட்டு மாமனாரின் முறைப்பைப் பரிசாகப் பெற்றுக் கொள்ள, தெளிவாக மாமனாரின் பார்வையைப் பாராது தவிர்த்தார்.

நிதர்ஷனா, ஒவ்வொருவரையும் ஆராய்ச்சி செய்தபடி முகத்தைப் பெருந்தன்மையாக வைத்திருந்தாள். பணக்காரி போல நடிக்கிறாளாம்!

கிருஷ்ணவேணி ஆரத்தி எடுத்து முடித்ததும், “இப்ப உள்ள போங்க…” என்றிட, இருவரும் வீட்டினுள் வந்தனர்.

கண்மணியும், சிந்தாமணியும், ஒரு தூணின் பின் நின்று யாஷை வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தனர்.

“ஆத்தாடி! இவர் என்னடி இவ்ளோ வெள்ளையா இருக்காரு. சைட் அடிக்கவே, நான் ஆத்தங்கரையில அம்பது சோப்பு போட்டுக் குளிக்கணும் போலவே!” எனச் சிந்தாமணி தாடையில் கை வைக்க, கண்மணியோ “இவள் ஒருத்தி…” என அங்கலாய்த்து விட்டு, “அண்ணே என்கிட்டப் பேசுமா, சிந்தா…” என்றாள் ஆர்வமாக.

“நீ போய்ப் பேசுடி! அதெல்லாம் பேசாம எங்க போயிடப் போறாரு…”

அழகேசன் தான், “உன்னைச் சின்ன வயசுல பார்த்தது. நல்லா வளர்ந்துட்டப்பா… தமிழ் புரியும் தான?” என அவராக வந்து பேசிட, “நல்லாவே பேசுவேன்…” என்றான்.

ஆதிசக்தியைத் தவிர, அங்கு யாரையுமே அவனுக்குத் தெரியவில்லை. மகேந்திரனை மட்டும் நினைவில் இருக்கிறது.

“இவர் உன் தாத்தா, யாஷ்” என்றதும், “ஓ! ஹாய் க்ராண்ட்பா…” என்று வயதிற்காக ஹாய் சொன்னதில் அவர் பேந்தப் பேந்த விழித்தார்.

நிதர்ஷனாவோ, அவரது பாவனையில் முட்டிக்கொண்டு வந்த சிரிப்பை அடக்கியபடி நிற்க, பின் அனைவரையும் அறிமுகப்படுத்திய ஆதிசக்தி, அமைதியாய் நின்றிருந்த கணவரைக் காட்டி, “இவரு… என் ஹஸ்பண்ட்!” என்றதும், “ம்ம்…” எனத் தலையாட்டிக் கொண்டான்.

‘இவங்க என்ன, அப்பான்னு சொல்லாம ஹஸ்பண்ட்னு சொல்றாங்க.’ என்று குழம்பினாள் நிதர்ஷனா.

பின் கண்மணியை அழைத்து, “இவள் உன் தங்கச்சி…” என அறிமுகப்படுத்த, அவளோ அவனிடம் பேச எத்தனிக்கும்போதே, “ம்ம்! ஓகே, தென்…” என அவளைக் கண்டு கொள்ளாது மற்றவர்களைப் போலவே நடத்த, நொடியில் கண்மணியின் முகம் வாடிப்போனது.

“ப்ரெஷ் ஆகிட்டு வாங்க, சாப்பிடலாம்…” என்று ஆதி ஒரு அறையைக் காட்ட, அதனுள் நுழைந்தவன் அத்தனை நேரம் இழுத்துப் பிடித்த மூச்சை வெளியிட்டான். அதில் இறுக்கமும் நிறைந்திருக்க, அவனது உணர்வற்ற முகத்திலிருந்து ஒன்றையும் கண்டறிய இயலாது, நிதர்ஷனாவும் வாய் வழியே பெரிய மூச்சொன்றை வெளியிட்டாள்.

“யப்பா, இந்தப் பணக்காரத்தன்மையா பேசாம இருக்க ரொம்பச் செரமமா இருக்குங்க யாஷ்…” என்றிட, அவளை முறைத்தான்.

“சரி, கதிரு இங்க தான இருக்கான். அவனையும் கூப்பிடுங்களேன். அந்தப் பயலைப் பாக்காம என்னவோ போல இருக்கு…” என்றாள் பாவமாக.

சட்டென ஏற்பட்ட குடும்பச் சூழ்நிலையோ, அல்லது அவளுக்காக அங்கு யாருமில்லா திடீர் வெற்றிடமோ, மனம் தமையனையும், தோழனையும் தேடியது.

“அவன் பக்கத்து வீட்ல தான் இருக்கான். அவனை எல்லாம் கூப்பிட முடியாது. இவ்ளோ நேரம் இருந்த மாதிரி வாயை மூடிட்டுச் சாப்பிட்டுக் கிளம்பு. நம்ம பக்கத்துல தான் தங்கப் போறோம்.” எனக் கடுகடுப்புடன் பொரிந்து விட்டு முகம் கழுவி விட்டு வந்தான்.

அவள் நிற்கும் நிலையை மாற்றாது, துப்பட்டாவில் இருந்த நூலை ஒரு விரலில் சுற்றிக் கொண்டிருந்தாள். முகத்தில் இதுவரை காணாத வாட்டம்.

யாஷ் வந்ததும், அவளும் குளியலறைக்குச் சென்று வர, இருவரும் உண்ண அமர்ந்தனர்.

அந்நேரம், தனது ஆள்கள் மூலம் கதிரவனையும், அங்கு அழைத்து வரச் செய்திருந்தான் யாஷ் பிரஜிதன்.

“கதிரு…” நிதர்ஷனா விழி விரிக்க, அவனோ தோழியின் மாற்றம் கண்டு ஏதோ பேச வர, யாஷ் எச்சரிக்கையுடன் பார்த்ததில், “ஹாய் ரித்தி…” என்றான் அனைத்துப் பற்களையும் காட்டி. அவனுக்கும், அனைத்தும் கற்றுவிக்கப் பட்டிருக்கிறது எனப் புரிந்து கொண்டவள், அங்கு இருப்பவர்களிடம், என் ப்ரெண்டு என்று கர்வத்துடன் அறிமுகப்படுத்தினாள்.

சிந்தாமணியைக் கண்டதும், ‘இந்தப் பொண்ணு தான, காலைல என் கையை ஒடைச்சுச்சு.’ என்ற ரீதியில் பார்த்தவனை, ஆதிசக்தி உண்ண அழைத்தார். உண்ணும் போதே அவனுக்கும் அனைவரும் அறிமுகமாக, இரு பெண்களும், தங்களைப் போட்டுக் கொடுத்து விடுவானோ என்ற ரீதியில் மிரண்டனர்.

சிந்தாமணி, கண்ணாலேயே கதிரவனிடம் கெஞ்ச, அது புரிந்தது போல அவனும் அமைதியானான்.

அவனும் யாஷிற்கு அருகிலேயே அமர்ந்து கொள்ள, சிந்தாமணியோ “மாமாவுக்கு நான்தான் பரிமாறுவேன்.” எனத் தாயிடம் ரகசியமாய் பேசி விட்டு யாஷிற்குப் பரிமாற, அவள் முகத்தில் டன் கணக்கில் ஜொள்ளு வழிந்தது.

நிதர்ஷனாவிற்கு அவளது வழிசல்கள் அத்துப்படி. இருந்தும் அமைதியாய் பார்த்துக் கொண்டாள்.

கதிரவனுக்குச் சாம்பாரை ஊற்றும் போதும் திருட்டுத்தனமாய் யாஷை சைட் அடித்துக் கொண்டிருந்த சிந்தாமணி, சாம்பாரைக் கதிரவனின் கையிலும் ஊற்றி வைக்க, அவனோ ‘ஒரு வேளைச் சோற்றுக்காக, என்னவெல்லாம் பாக்க வேண்டியது இருக்கு.’ என நொந்து, “யம்மா சிந்தாமணி, கொஞ்சம் சிந்தாம ஊத்துமா…” என்றதில், நிதர்ஷனா ‘கிளுக்’ எனச் சிரித்தாள்.

அன்பு இனிக்கும்
மேகா

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
23
+1
113
+1
5
+1
5

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்