Loading

9 – வலுசாறு இடையினில் 

 

“யோவ் ஜோசியரே .. நீ குடுத்தது எல்லாமே வெளிநாடு போற ஆளுங்களா இருக்கு .. பக்கத்துல பாரு யா .. இது எதுவும் வேணாம் “, என கூறிவிட்டு போட்டோக்களை திருப்பி கொடுத்தார். 

 

“ஐயா  .. எல்லாமே நல்ல ஜாதகம் .. நல்ல குடும்பம்.. கட்டி குடுத்தா உங்களுக்கு காலத்துக்கும் பிரச்சனை வராது “

 

“அது சரி.. வெளி நாட்டு மாப்பிள்ளைக்கு வரிசையும் அதிகமா செய்யணும்.. ஏற்கனவே பண பிரச்சனை வந்துட்டு இருக்கு. இருக்கற பணத்த வச்சு தான் கல்யாணம் பண்ணனும். அதுக்கு தகுந்தமாதிரி பாரு”

 

“உங்க வீட்டம்மா தீபம் போடறாங்களா ஐயா ?”

 

“போடறா போடறா …. அந்த கழுதையும் போடுது”, ஒரு வெறுப்புடன் கூறினார். 

 

“ஐயா .. கேக்கறேன்னு தப்பா எடுத்துக்காதீங்க .. உங்களுக்கு ஏன் உங்க பொண்ணு மேல இவ்ளோ வெறுப்பு ?”

 

“பொட்ட புள்ள மேல எதுக்கு விருப்பு வைக்கணும் ? இன்னொரு வீட்டுக்கு போற கழுதை தானு  அது .. செலவும் அவமானமும் மட்டும் தான் அதுனால வரும் ..”

 

இவரின் கூற்று தான் அந்த பகுதியில் வாழும் சுற்று ஊர்க்காரர்களின் கூற்றும். அங்கு இருப்பவர்கள் யாரும் பெண் பிள்ளைகளிடம் சிரித்து கூட பேச மாட்டார்கள். பெண் பிள்ளை பிறந்தாலே செலவு மட்டும் தான் வரும் என்ற எண்ணம். கிண்டல் கேலிகளும், அவமானமும் தான் பெண் பிள்ளை பெற்றவர்களுக்கு முதலில் அந்த சுற்று வாட்டரத்தில் கிடைக்கும்.. அதனாலேயே அப்பாமார்கள் பெண் பிள்ளைகளிடம் சிறிதும் அன்பு காட்டுவதில்லை.. 

 

“எங்க போனாலும் நீங்க பெத்த பொண்ணு தானே .. அது மாறாதே ஏகாம்பரம் ஐயா “

 

“அது மாத்த முடிஞ்சா இந்நேரம் அந்த கழுதை வீட்ல இருக்காது. செத்து இருவது வருஷம் ஆகி இருக்கும்”, கூறியவரின் கண்களில் அப்படி நடக்க வில்லையே என்கிற ஏக்கம் இருந்தது. 

 

“ஐயா .. பொண்ணுங்க-னால உங்களுக்கு செலவு வருதுன்னு தான் இவ்ளோ வெறுப்பா ?”

 

“இப்போ உனக்கு என்ன வேணும் ? பொண்ணு மேல என்ன வச்சா உனக்கு என்ன?”

 

“இவ்ளோ வெறுப்பு ஏன்னு தெறிஞ்சிக்கலாம்-ன்னு கேட்டேன்ங்க “

“அடுத்த வீட்டு சமாச்சாரம் உனக்கு எதுக்கு? நீ உனக்கு குடுத்த வேலைய மட்டும் பாரு.. இங்க சுத்து வட்டாரத்துலயே மாப்ளைய புடி.. எதுனாலும் ஃபோன் பண்ணு”, என எரிந்து விழுந்தார். 

 

“உங்க பொண்ணு மட்டும் தான் உங்கள எப்பவும் காப்பாத்தும்.. அத மட்டும் நியாபகம் வச்சிகோங்க.. “, என கூறிவிட்டு உள்ளே சென்றுவிட்டார் ஜோசியர். 

 

“அது இந்த ஜென்மத்துல நடக்காது ஜோசியரே “, என கூறிவிட்டு சென்றார். 

 

யார் நினைப்பது நடக்கிறது என்பது காலம் மட்டுமே அறிந்த இரகசியம். அது வரை அனைவரும் காத்திருந்து தான் ஆகவேண்டும். 

 

இரத்தினம் தன் மகனுக்கு நங்கையை எப்படியாவது மணம் முடித்து வைத்து விட வேண்டும் என்கிற எண்ணத்தோடு இருந்தார். 

 

“அடியே கமலம்.. அந்த ஏகாம்பரம் பொண்ண எப்படியாவது கட்டி வச்சிட்டா உன் பையனும் நம்ம கூடவே இருக்க வந்துடுவான். நமக்கும் எந்த தொல்லையும் இருக்காது. அந்த ஆளு நல்லாவே சீரும் செய்வான் டி.. உன் பையன் கிட்ட பேசி ஒரு போட்டோ வாங்கு.. “, என தான் மனைவியிடம் கூறிக்கொண்டு இருந்தார். 

 

“நம்ம பையன் தான் அங்க யாரோ ஒரு புள்ளைய கட்டிகிட்டதா சொன்னானேங்க.. அப்பறம் எப்டி இந்த புள்ளைய கட்டிக்க சம்மதிப்பான் ?”

 

“அடியே கூறுக்கெட்டவளே மெல்ல பேசு டி.. அக்கம் பக்கம் எவன் காதுலயாவது விழுந்தா அவ்வளவு தான்..”, என சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு மனைவியை அடக்கினார். 

 

“அவன் அங்க எவள வேணா கட்டுவான் அதுக்கு நான் சரின்னு போகணுமா ? அப்பறம் இந்த ஊருல நம்ம இருக்க முடியாது .. நம்ம மானம் மரியாதை எல்லாமே போயிடும் டி.. அவன் அங்க எத்தன பேர வேணா கட்டி கூத்தடிக்கட்டும் .. இங்க நம்ம சாதில ஒரு புள்ளைய கட்டினா தான் நம்ம இந்த ஊருக்குள்ள மரியாதையா வாழ முடியும்.. இல்லைனா இந்த வர்மன் போதும் நம்மல ஊர விட்டு தள்ளி வைக்க”, இரத்தினம் பேச்சில் அக்மார்க் சாதி வெறியும், ஆண் என்கிற அகம்பாவமும் போட்டி போட்டு கொண்டன. 

 

“அவன் யாருங்க நம்மல ஊர விட்டு தள்ளி வைக்க? நம்ம புள்ள வாழ்க்கை இதுல வீண் ஆகிட கூடாதுங்க”

 

“அடியே பைத்தியக்காரி.. அவன் நல்லா இருந்து நம்மல நல்லா பாத்துப்பான்ன்னு நினைச்சத்தாள தான் கடன் வாங்கி படிக்க வச்சேன்.. அந்த கடனே போனா வருஷம் தான் முடிச்சேன்.. உன் பையன் வேலை கெடைச்சி ஆறு மாசத்துல வெளிநாட்டுக்கு போனான். இன்னும் வந்து நம்மல பாக்கல.. ரெண்டு வருஷம் ஆச்சி..”

 

“நம்ம பையன் பெரிய உத்தியோகத்துல இருக்கான்.. லீவு போட முடியாதுன்னு என்கிட்ட சொன்னான்”

 

“உனக்கு எத்தன தடவ சொன்னாலும் மண்டைல ஏறாது.. நான் சொல்றத மட்டும் நீ உன் பையன் கிட்ட சொல்லி இங்க வரவை . மொத நல்லதா ஒரு நாலு போட்டோ அனுப்பி வைக்க சொல்லு..”, என கூறிவிட்டு யாரையோ சந்திக்க சென்றார். 

 

இங்கே தோப்பில் இளவேணி வர்மன் முன் நின்று முறைத்துக் கொண்டிருந்தாள். 

 

“நான் ஏன் இங்க வரக்கூடாது மாமா ? எப்டி இருந்தாலும் என் அப்பா உங்களுக்கு தான் என்ன கட்டி குடுப்பாரு.. இப்போ இருந்து உங்க வேலை எல்லாம் நானும் கத்துகிட்டா உங்களுக்கும் வசதி தானே ?”, என வர்மன் அருகில் வந்து பாதி தலையை குனிந்தபடி பேசிவிட்டு அவன் முகத்தை பார்த்தாள். 

 

“டேய் வட்டி .. “, என வர்மன் போட்ட சத்தத்தில் பயந்து நான்கு அடி பின்னால் சென்றால் இளவேணி. 

 

“என்ன மச்சான்?”

 

“இனிமே இந்த புள்ள இங்க வரக்கூடாது.. நல்ல புத்தி சொல்லி வீட்டுக்கு அனுப்பி வை.. கண்ட எண்ணத்தோட இந்த பக்கம் வந்தா கன்னம் பிய்ஞ்சிடும்ன்னு சோளி அனுப்பு.. “, என அவன் பேசிய பேச்சில் இளவேணி கலங்கி நிற்பாள் என்று எதிர்பார்த்தால் அது தான் இல்லை. 

 

தாவணியை ஒரு பக்கம் சுழற்றியபடி வர்மன் அருகில் வந்து நின்று, 

“வட்டியண்ணே .. இவரு மனசுல என்ன நினைச்சிட்டு இப்படி பேசறாரு? அந்த கெழவி சொல்றது கேட்டு இவர் நடப்பாறா ? இல்ல ஒருத்தி கிட்ட சவால் விட்டு அவ அப்பனுக்கு கொடைச்சல் குடுத்துட்டு இருக்காரே அவள கட்டிப்பாறா? “, என அவள் கேட்ட கேள்வியில் வட்டியும், சிம்ம வர்மனும் அவளை கூர்மையாக பார்த்தனர். 

 

“என்ன அப்புடி பாக்கறீங்க ? இது எல்லாம் இவளுக்கு எப்படி தெரியும்னா ?”, என கூறிவிட்டு இருவைரையும் பார்த்தவள், வர்மன் அருகில் வந்து முகத்திற்கு முன் நின்று, “உங்கள பாக்கற வரைக்கும் உங்கள கட்டிக்கர ஆசை எனக்கு வரல .. இப்போ வந்துரிச்சி மாமா.. அதனால என் சிங்க மாமா எனக்கு மட்டும் தான்.. இது யாராலையும்     மாத்த முடியாதுன்னு பன்ச் எல்லாம் பேசமாட்டேன்.. நீ எனக்கு கிடைக்க என்ன என்ன பண்ண முடியுதோ அது எல்லாமே பண்ணுவேன்”, என கூறிவிட்டு திரும்பி நடந்தாள். 

 

“ஏய்.. என்கிட்ட சவால் ஆ ?”, வர்மன் மீசையை முறுக்கியபடி கேட்டான். 

 

“சவால் ஆ ? ஹா ஹா ஹா.. னே ஏன் மாமா பாக்கற பொண்ணுங்க கிட்ட எல்லாம் சவால் விடற ? சவால் அவளோ பிடிக்குமா என்ன ? “, என சிரித்தபடி கேட்டவள், “ உனக்கு அப்டி தோணினா அப்புடியே வச்சிக்க மாமா.. நாளைக்கு பாக்கலாம் “, என தாவணியை வீசி விளையாடியபடி அங்கிருந்து சென்றாள் இளவேணி. 

 

“என்ன மச்சான் இந்த புள்ள இப்புடி பேசிட்டு போகுது?”, வட்டி வேஷ்டியை பிரித்து கட்டியபடி வர்மன் அருகில் வந்து கேட்டான். 

 

“அவ அப்பன பாத்துட்டு வரலாம் வா.. “, என வர்மன் வண்டி எடுத்தான். 

 

“டேய் வட்டி.. அவன போய் ஒண்ணும் பாக்க வேணாம்.. இவன் அவள கட்டிக்க மாட்டேன்ன்னு வாக்கு குடுக்க சொல்லு.. அவன நான் பாத்துக்கறேன்.. “, என கூறியபடி நீலாயதாட்சி அங்கே வந்தார். 

 

“நான் யார காட்டிக்க நினைக்கரனோ அவள தான் கட்டுவேன்.. யாரும் இந்த விஷயத்துல என்னைய கட்டாயப்படுத்த கூடாதுன்னு சொல்லு வட்டி.. “

 

“என் குடும்பத்துக்கு வாரவா யாருன்னு எனக்கு தெரியணும் டா.. யார வேணா என் வீட்டுக்குள்ளார என்னால விடமுடியாது.. இந்த குடும்பத்துக்குன்னு ஒரு மதிப்பும் மரியாதையும் இருக்கு.. அதை யாரும் கெடுக்கற மாதிரி நடந்தா நான் மனுஷியா இருக்கமாட்டேன் “, என ஆச்சியும் அவர் கோபத்தை காட்டினார். 

 

“இப்போ மட்டும் ரெண்டு பேரும் மனுஷ ஜென்மமாவா இருக்கீங்க ?”, என வட்டி முனகியது இருவரின் காதுகளிலும் விழுந்தது. 

 

“அதே குடும்பத்துல பொறந்த எனக்கும் யார வீட்டுக்குள்ள கொண்டு வரணும்னு தெரியும்ன்னு சொல்லு டா.. இந்த நாட்டாமை எல்லாம் அவங்க புருஷன் வரைக்கும் வச்சிக்க சொல்லு.. “

 

“அடி செருப்பால .. என் புருஷன எதுக்கு டா இழுக்கறான் இவன் ?”

 

“மச்சான் தாத்தா செத்து பல வருஷம் ஆச்சி டா.. போதும் அவராயவது நிம்மதியா இருக்க விடுங்க.. உங்க பஞ்சாயத்து முடிஞ்சதா ? நான் போய் சோத்தா தீங்கறேன் விடுங்க”, என வட்டி அங்கிருந்து நகர்ந்தான். 

 

ஆச்சி அவன் சட்டையை பற்றி இழுத்து, “சோறு கொண்டு வந்து இருக்கேன்.. கடை தொறக்க நல்ல நாள் பாக்க ஜோசியர போய் பாக்கணும் .. சீக்கிரம் சாப்பிட்டு வா “, என ஒரு கட்டடப்பையை கொடுத்துவிட்டு சென்றார். 

 

“இப்பவாது சோற கண்ணுல காட்டுனீங்களே .. வா மச்சான் .. ஆச்சி வெயிட் ஆ தான் குடுத்துட்டு போய் இருக்கு .. சாப்பிட்டு நான் ஆச்சி கூட போய்ட்டு வரேன்”, என சாப்பிட அழைத்தான். 

 

“அந்த ஆளுக்கும் நம்ம குடும்பத்துக்கும் என்ன பிரச்சனைன்னு அப்பிடியே கேளு..”, என கூறியவன்’கை கால் கழுவிகொண்டு வந்து சாப்பிட அமர்ந்தான். 

 

பாட்டியும் பேரனும் நேரடியாக பேசி ஐந்து வருடங்கள் ஆகிறது. ஆனால் ஒரு நாள் கூட வர்மன் வெளியே சாப்பிட ஆச்சி அனுமதித்தது இல்லை. தினம் அவன் இருக்கும் இடம் மூன்று வேலையும் சாப்பாடு சென்று விடும். 

 

அவனுக்கு பிடித்த உணவு வகைகளும் நிச்சயமாக இடம் பிடித்து இருக்கும். வட்டி சாப்பாட்டை இருவருக்கும் பரிமாறிக்கொண்டு இருந்தான். 

 

வர்மன் மனம் ஐந்து வருடங்களுக்கு முன் சென்றது. அன்று தான் அவன் தாத்தா இறந்து பதினாராம் நாள் காரியம் நடந்து கொண்டு இருந்தது. 

 

“அநியாயமா நம்ம ஐயாவ அவனுங்க கொண்ணுட்டாணுங்களே.. அம்மா .. நீலாம்மா .. நம்ம ஐயா வ கொன்னவன் வெளிய வந்துட்டான் மா.. “, என ஊர் பெரிய மனிதர்களில் ஒருவர் கூறினார். 

 

“முத்து.. இந்த சண்டைய இத்தோட நிறுத்திடுங்க .. உங்க வீராப்புக்கு கடைசியா தாலி அறுத்தவ நானா இருந்துட்டு போறேன்.. இன்னொரு பொட்டச்சி கழுத்துல இருக்க தாலி இதனால ஏறங்க கூடாது..”, என அவர் கூறிய சொல்லுக்கு அனைவரும் கட்டுபட்டு அமைதியாக நின்றனர். 

 

பருவ வயதில் இருக்கும் வர்மனுக்கு தன் தாத்தாவை கொன்றவன் இன்னும் உயிரோடு இருக்கிறான் என்பதே ஜீரணிக்க முடியவில்லை. இதில் அவன் சுதந்திரமாக வெளியே வந்து விட்டான் என்பது கேட்டதும் கோபம் தலைக்கு ஏறியது. 

 

இரவு வீட்டில் இருந்தவர்கள் அனைவரும் உறங்கிய பின்பு, சத்தம் எழுப்பாமல் அங்கிருந்து வெளியே வந்தான். 

 

நேராக மேலூர் சங்கரன் வீட்டிற்கு சென்றவன், குடி போதையில் விழுந்து கிடந்த சங்கரன் உடலில் இருந்து தலையை தனியாக வெட்டி எடுத்து கொண்டு காவல் நிலையம் சென்றுவிட்டான். 

 

விடியும் நேரம் வரமனை காணாமல் ஆச்சி எல்லா இடத்திலும்  தேட ஆட்களை அனுப்பினார். 

 

அப்போது, “ஆச்சி .. ஆச்சி .. நம்ம..  நம்ம .. “, என மூச்சு வாங்க ஓடி வந்து விஷயத்தை சொல்ல முடியாமல் திணறினான் வட்டி. 

 

“என்ன டா ? அவன் எங்க ?”, என உள்ளுக்குள் பதற்றம் எழுந்தாலும் சமன்படுத்தியபடி கேட்டார் ஆச்சி. 

 

“அந்த சங்கரன கொன்னுட்டு போலீஸ் ஸ்டேஷன் போயிட்டான் ஆச்சி.. நம்ம ஊர் பெரிய மனுஷங்க எல்லாம் வக்கீலோட அங்க போயிக்கிட்டு இருக்காங்க..”

 

“பாவி மவன்.. எவ்ளோ போராடி அவன வளத்தேன் கடைசில கொலகாரன் ஆகிட்டானே “, என ஆச்சி பெருங்குரலெடுத்து ஆழ ஆரம்பித்தார். 

 

அதற்கு பின் ஊர் பெரிய மனிதர்கள், அவனின் பங்காளிகள் என அனைவரும் சேர்ந்து அவன் செய்த கொலைக்கு இன்னொருவனை ஜெயிலுக்கு அனுப்பலாம் என்று கூறியதற்கு, “ நான் தான் கொன்னேன்.. நானே போறேன்.. டேய் வட்டி ஆச்சிய பாத்துக்க “, என கூறிவிட்டு ஜெயிலுக்கு சென்றான். 

 

“மச்சான் .. ஆச்சி உன் மேல பயங்கர கோவத்துல இருக்கு மச்சான்.. உனக்கு கம்மி தண்டனை காலம் குடுக்க ஏற்பாடு பண்றோம்.. நீ தான் ஆச்சி க்கு எல்லாமே .. அத மட்டும் மறந்துடாத மச்சான் .. “, என கண்ணீருடன் வட்டி பேசியது இன்றும் மனக்கண்ணில்  நின்றது. 

 

அதற்கு பின் ஆச்சி தன்னிடம் பேசுவதையே நிறுத்தி கொண்டார். வட்டி தான் அன்று முதல் இன்று வரையிலும் தூது செல்வது. அவனும் இல்லையெனில் இவர்கள் நிலை கொஞ்சம் சிரமமாக தான் இருந்து இருக்கும். 

 

“ஏ நங்க .. நங்க.. ஒரு நிமிஷம் நில்லு “, என அழைத்தபடி வினிதா ஓடி வந்தாள் . 

 

“ஏன்டி இப்புடி ஓடி வர ? விழுந்து வாரினா என்ன ஆகறது ? “, நங்கை அவளை அன்புடன் கடிந்து கொண்டாள். 

 

“வாரினா கொட்டிக்கலாம்.. அந்த இரத்தினம் பையனுக்கு உன்ன கேட்டாங்களா?”

 

“எந்த இரத்தினம் ? “

 

“அதான் டி .. உன் அப்பா கிட்ட வட்டி குடுக்க ஒருத்தர் முன்ன வருவாருல .. பெரிய சந்தன போட்டு வச்சிக்கிட்டு “

 

“ஆமா .. அந்த ஆளு கேட்டானா இல்லையான்னு எனக்கு தெரியாது.. என்கிட்ட கேட்டா எல்லாம் நடக்குது ?”, என அவள் சொன்ன தொனியில் வலி புரிந்தது. 

 

“அந்த ஆளு பையனுக்கு கேட்டா நீ சரின்னு சொல்லாத.. அவனுக்கு ஏற்கனவே வெளி நாட்டுல கல்யாணம் ஆகிடிச்சாம் .. “

 

“வெளி நாட்டுக்கு என் அப்பா குடுக்க மாட்டாரு வினி.. நேத்து தான் வந்த எல்லா ஜாதகமும் வெளிநாட்டு மாப்ள அதனால வேணாம் ன்னு ஜோசியர் கிட்ட திருப்பி குடுத்துட்டு வந்துட்டாறாம்.. என் அம்மா சொன்னாங்க ..”

 

“அப்டினா சரி .. இருந்தாலும் ஜாக்கரதையா இருக்கணும்.. சரி இன்னிக்கு என்ன பாக்க பளிச்சுன்னு இருக்க .. என்ன சேதி ?”, வினிதா கண்ணடித்து கேட்டாள். 

 

“அப்பிடிலாம் ஒண்ணும் இல்ல .. எப்பயும் போல தான் இருக்கேன்”

 

“ஏதோ இருக்கு ? “, வினிதா கிண்டல் செய்தபடியே வர, நங்கை புன்னகை முகமாக நடந்து வந்து கொண்டிருந்தாள். 

 

அங்கே .. 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
8
+1
0
+1
0

  உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

  4 Comments

  1. Archana

   நங்கை கொஞ்சம் சிரிக்குறதுக்குள்ள ஏதாவது பிரச்சனை டின்னு கட்டிட்டு வருது 😒😒 ஆச்சியோட கோபம் நியாயமானது தானே, நங்கை அப்பாக்கு பெரிசா பட்டா தான் புத்தி வரும்.

  2. Janu Croos

   நங்கையோட அப்பாக்கு ஏதாவது பெரிய சம்பவம் நடந்தா தான் திருந்துவாரு பேலயே…இன்னும் அவள திட்டிட்யே இருக்காரு…என்ன மனுஷன் இந்த ஆளு…
   இதுல இந்த இளவேணி லூசு வேற ஒரு பக்கம் ….வெக்கமே இல்லாம அவன் திட்டும் போதா கூட அவன தான் கல்யாணம் பண்ணுவேன்னு சொல்லுது….நடக்காதத பேசிடுட்டு போதா லூசு…முதல்ல இதுக்கொரு பாயாசத்தை போடனும்….