அத்தியாயம் 8
கண்ணாடி முன் நின்று வேஷ்டியைக் கட்டிப்பார்த்துக் கொண்டிருந்தவனை வெறிக்க வெறிக்கப் பார்த்த நிதர்ஷனா, “கல்யாணம்னா, இந்த மஞ்சக் கயிறுலாம் கட்டுவாங்களே, அதுவா சார்… உண்மையாவேவா மஞ்சக்கயிறு கட்டப் போறீங்க?” என மிரட்சியுடன் கேட்டாள்.
“தமிழ் முறைப்படி தட் எல்லோ ரோப் தான டை பண்ணுவாங்க. அப்படித்தான் மேரேஜ் பண்ணிக்கப் போறோம்…” என்றவன் வேஷ்டியைக் கட்ட இயலாமல் திணறினான்.
“மெய்யாலுமே எதுக்குயா கல்யாணம்? உன் நாட்டுல பண்ற மாதிரி வேணும்னா ஒரு மோதிரம் போட்டு விடுயா…” அவள் எச்சிலை விழுங்கிக் கொண்டு கூற,
“நம்ம என்ன சர்ச்லயா கல்யாணம் பண்றோம்? டெம்பிள்ல பண்ணிக்கப் போறோம்.” என்றதும் அதற்கும் சேர்ந்து அதிர்ச்சியடைந்தாள்.
“சார், இந்த விபரீத விளையாட்டுக்கு நான் வரல. உங்களுக்கு என்ன கோவில்ல கல்யாணம் பண்றது அசால்ட்டா இருக்கா?” வீறு கொண்டு எழுந்ததில் எரிச்சல் மேலிட, அவளை முறைத்து வைத்தவன் வேஷ்டியைக் கீழே விட, “அய்யய்யோ!” எனத் திரும்பிக் கொண்டாள்.
“டிராக் பேண்ட் போட்ருக்கேன்!” முறைப்புடன் கூறி விட்டு, “உனக்கு எல்லாத்துக்கும் தௌசண்ட் டைம்ஸ் விளக்கம் சொல்லிட்டே இருக்க முடியாது கடன்காரி. உனக்கு வேற ஆப்ஷன் இல்ல, நான் சொல்றதைச் சொன்னபடி நீ கேட்டே ஆகணும்.” என்றான் தீர்மானமாக.
அதில் அவன் புறம் திரும்பிச் சண்டைக்கு வந்தவள், “கேட்கணும்னா? நீ என்ன வேணாலும் சொல்லுவ, எல்லாத்தையும் நான் கேக்க முடியுமா… இப்பக் கல்யாணம் பண்ணனும்னு சொல்லுவ, அப்பறமா ஒங்க அம்மா கொழந்தை பெத்துக் கேக்குறாங்கன்னு சொல்லுவ. நான் வயித்துல புள்ளையோட அலைய முடியுமாயா?” மூச்சிரைக்கஒ பொருமினாள் நிதர்ஷனா.
யாஷ் பிரஜிதனோ மெல்ல விழியுயர்த்தி, “டோன்ட் வொரி… அப்படி ஒரு சிட்டுவேஷன் வந்தா, உன் கூடப் பின்னிப் பிணைஞ்சு குழந்தை பெத்துக்குற ஐடியா எனக்கு இல்ல. ஐவிஎஃப் போயிடலாம்.” என அவளைப் பயமுறுத்திப் பார்த்தான்.
“ஓ! ஒங்களுக்கு எங்களை மாதிரிப் பொண்ணுங்களைத் தொடக் கூட அய்யரவா இருக்கும். ஆனா நாங்க பெத்துக் குடுக்குற கொழந்தை மட்டும் வேணுமாக்கும்?” சிடுசிடுப்பாய் கேட்டதில்,
“இப்ப உனக்குப் பிரச்சினை, குழந்தை பெத்துக்குறதா? இல்ல ஏன் தொடலைங்கறதா?” பேண்ட் பாக்கெட்டினுள் கையை நுழைத்து அமர்த்தலாக வினவியவனைப் பேயறைந்தது போலப் பார்த்தாள்.
‘இவனாண்ட என்னத்த ஒளறிட்டு இருக்கேன் நானு…’ எனத் தன்னைத் தானே திட்டிக் கொண்டவளின் முகம் வாடிப் போனது.
“பதில் வரல?” அதட்டும் தொனியில் யாஷ் கேட்க,
உள்ளே சென்ற குரலில், “நிஜக் கல்யாணம் வேணாம் சார்… இதுல்லாம் வெளில தெரிஞ்சா நாளைக்கு என்னை எவன் கட்டிப்பான்?” என்றாள் உர்ரென.
ஒரு கணம் அமைதி காத்தவன், “உனக்கு நல்ல பையனா உன் ஸ்லாங் பேசுறவனாய் பார்த்து, நானே கல்யாணம் பண்ணி வைக்கிறேன் போதுமா?” என்றான்.
“ஒன்னும் தேவை இல்ல…” தலையைச் சிலுப்பி அவள் மல்லுக்கு நிற்க,
“ப்ச், லுக் நிதர்ஷனா… இந்தக் கல்யாணம் நடக்கணும். தட்ஸ் இட்! அதுக்கு மேல நீ ப்ரெக்னன்ட் ஆகுற பெரிய வேலையெல்லாம் பார்க்கத் தேவை இல்ல. ஒயிஃப் மாதிரி நடிச்சாலே போதும். உன்னை வேற எந்த விதத்துலயும் ஃபோர்ஸ் பண்ற ஐடியா இப்ப வரை எனக்கு இல்ல. நீயே கிரியேட் பண்ண வைக்காத.” என்று அதிகாரமாய் கண்டிக்க, இவனை நம்புவதா வேண்டாமா என்றிருந்தது அவளுக்கு.
அவள் எண்ணம் புரிந்தவன் போல, “என்னை நம்புறதைத் தவிர உனக்கு வேற வழியே இல்ல.” என்று அழுத்தமாகக் கூறி விட்டு மீண்டும் கீழே இருந்த வேஷ்டியை எடுத்து, “எலிசா, ஹொவ் டூ வியர் தோட்டி” எனக் கேட்டான்.
அது பேசும் முன்னே நிதர்ஷனா, “ஏய் எலிசா, வாயை மூடு. நொய் நொய்னு நீ ஒரு பக்கத்துக்குப் பேசாத…” என்று இருக்கும் கோபத்தை ஏ. ஐ இடம் காட்டினாள்.
“அதான், இப்ப ஒட்டிக்கோ கட்டிக்கோ வேஷ்டி வந்துருச்சுல. அதை வாங்கி ஒட்ட வைக்க வேண்டியது தான?” எனச் சிடுசிடுத்தவள், அவன் வைத்திருந்த வேஷ்டியைப் பிடுங்கினாள்.
“என்ன பண்ற?” யாஷ் கடுமையாகக் கேட்க,
“வேட்டி கட்ட வேணாமா?” என்றவள், அவன் அருகில் நெருங்கி அவளே கட்டி விட்டாள்.
அவனோ, “நானே கட்டிப்பேன்!” என மறுக்க,
“ரொம்பப் பண்ணாத அரக்கா. உன்னை ப்ரெக்னன்ட் ஆக்குற ஐடியா எனக்கும் இல்ல!” என்று அவனை விழிக்க வைத்து விட்டு வேஷ்டியைக் கட்டி முடித்தாள்.
“நான் எப்படி ப்ரெக்னன்ட் ஆவேன்…” குழப்பமாய் அவன் கேட்க,
“அய்யய்யயோ! ஒன்னோட பேஜாரா இருக்குதுயா. ப்ளோல பேசுறதுக்குலாம் விளக்கம் கேக்குற.” என்றதில், “ஏய் கடன்காரி, மரியாதை ரொம்பத் தேயுதுடி!” என்றான் முறைப்புடன்.
“அத் தான்… நெசமாக் கல்யாணம் பண்ணப் போறியே, எனக்கு அடிமையா நடிக்கப் போற ஒனக்கு என்னையா மரியாதை வேண்டிக் கெடக்கு?”
“வாட்?” யாஷ் விழியில் கனலைக் கக்கினான்.
“இன்னாயா ஒனக்கு விவரமே தெரியல. எங்க ஊர்ல கல்யாணம் கட்டுனா பையன் பொண்ணுக்கு அடிமை யா… தெனம் கை கால் அமுக்கி விடணும். தெனம் புடிச்ச இனிப்பு வாங்கிட்டு வரணும். பைப்புல தண்ணி அடிச்சா, நீ கொடத்தைத் தூக்கிட்டுப் போகணும். சமைக்கிறப்ப காய்கறி வெட்டித் தரணும். தெனம் பூ வாங்கித் தரணும். வீடு கழுவி விடுறப்ப, வாசல்ல நின்னு தண்ணியைத் தள்ளி விடணும், புதுப் புதுச் சேலை வாங்கித் தரணும், சம்பளக் காசை கரிக்ட்டா கையாண்ட தந்துடனும், இந்த மெஷினை வாங்குறேன், அந்த மெஷினை வாங்குறேன்னு சொம்மா இருக்குற காசைப் பூரா கரண்ட் பில்லுல ஏத்தக் கூடாது. சிக்கனமா குடும்பம் நடத்தணும். மாசத்துக்கு ஒருக்கா சினிமாக்குக் கூட்டிட்டுப் போகணும், வாரத்துக்கு ஒருக்கா கோவிலுக்குக் கூட்டிட்டுப் போகணும், நான் துணி அலசித் தந்தா நீ காயப் போடணும், முக்கியமா கருவாடு கூட இல்லாட்டி எனக்குத் துன்ன முடியாது. அதனால எனக்குப் புடிச்ச மாறிக்க தெனமும் நான்வெஜ் போடணும்.” என்று பேசி முடிக்கும் முன்னே அவளுக்கு முன்னே அவனுக்கு மூச்சு வாங்கியது.
“கேட்டுக்கிட்டியா… நான் எப்படி ஒனக்குப் பொண்டாட்டியா நடிக்கிறேனோ, அதே மாறிக்க நீ எனக்குப் புருஷனா நடிக்கணும்.” என்றாள் கட் அண்ட் ரைட்டாக.
“வாட் தி ஹெக்!” முகத்தை அருவருப்பாய்ச் சுளித்தான் யாஷ்.
“இந்த டீலிங் நீ எனக்கு ஒயிஃபா நடிக்கத்தான் கடன்காரி. நான் உனக்கு ஹஸ்பண்டா நடிக்க இல்ல. அண்ட் என்னால உன் பேரரா நடிக்கக் கூட முடியாது. இட்ஸ் டிஸ்கஸ்டிங்!”
“க்கும்! யாரோ ஒருத்திக்குப் புருஷனா நடிக்க ஒனக்கு மட்டும் டிஸ்கஸ்டிங்கா இருக்கும்போது, ஏதோ பாஷ தெரியாத நாட்டுல இருந்து வந்த உன்கூட நடிக்க, எனக்கு மட்டும் இனிக்குமாக்கும்…” வார்த்தைக்கு வார்த்தை அவனுடன் மல்லுக்கட்டியவளின், இரு கரத்தையும் பிடித்துப் பின்னால் வளைத்தான் ஆடவன்.
“உனக்கு என்னைப் பத்தித் தெரியல நிதர்ஷனா. திஸ் இஸ் தி லிமிட்! ஏதோ நடிக்கக் கூப்பிட்டனால தான், உன் கடனை அடைக்கிறேன்னு சொன்னேன். இல்லன்னா, உன்னை யூஸ் பண்ணிட்டு எங்கயாவது பொதைச்சுட்டுப் போயிட்டே இருப்பேன். அந்தக் காசிக்குக் கூட நீ பிரயோஜனப்பட மாட்ட. புதைக்கிறது உன்னை மட்டும் இல்ல, அந்தக் கதிரவனையும் தான்… உன் வாய் ஜாலத்தை எல்லாம் வேற யார் கிட்டயாவது வச்சுக்கோ, புரிஞ்சுதா?” என்று அடிக்குரலில் கர்ஜித்தான்.
அவனது உறுமலில் திருதிருவென விழித்தவள், “சும்மா உங்களாண்ட விளையாண்டேன், கலப்படக் கண்ணு சார்… நான் போய் ரெடி ஆகுறேன்.” என்று நழுவி அங்கிருந்து ஓடி விட்டாள்.
அவள் பேசியத்தைக் கேட்டுக் கேட்டு, ஒரு பக்கக் காதே ‘கொயிங்!’ என வலித்தது யாஷ் பிரஜிதனுக்கு.
‘ஓ காட்! இவளை வச்சுட்டு நான் எப்படி ஆறு மாசத்தை ஓட்டுறது?’ என நொந்தே போனான். அவளைப் பார்த்தாலே பற்றிக்கொண்டு வந்தது அவனுக்கு. அவள் பேச்சும், ஆட்டிடியூடும் சுத்தமாகப் பிடிக்கவே இல்லை.
அதிலும், இத்தனை மிரட்டியும் சற்றும் பயப்படாதவளின் கண்கள் முற்றிலும் பிடிக்கவில்லை.
மணப்பெண் அலங்காரத்தில் ஜொலித்த நிதர்ஷனா, அங்கும் இங்கும் தன்னைத் திரும்பிப் பார்த்துக் கொண்டாள்.
அவள் பக்கத்து அறையில் தயாராகிக் கொண்டிருக்க, அவளுக்கு உதவவும், ஒப்பனை செய்யவும் இரு பெண்கள் இருந்தனர்.
நேரம் சென்றதில் அங்கு வந்த யாஷ் பிரஜிதன், “கிளம்பிட்டியா?” எனக் கேட்க, “ஓ கிளம்பிட்டேனே!” என்றாள் வேகமாக.
அவன் கண்ணைக் காட்டியதில் மற்ற இரு பெண்களும் அங்கிருந்து நகர்ந்து விட, “அரக்கன் சார்… இந்தச் சேலை எனக்கு நல்லாருக்குல்ல. உங்க போன்ல ஒரு செல்பி எடுத்துக்கட்டா? என் போனைத் தான் நீங்க வாங்கி வச்சுட்டீங்களே!” என்றவளை அமைதியாக முறைத்தான்.
“அட, என் நிஜக் கல்யாணத்துக்கு இவ்ளோ மேக்அப் போட்டு எல்லாம் ரெடியாக முடியாது சார். அதான் கேட்டேன், ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்!” எனக் கெஞ்ச முற்படத் தலையை ஆட்டிப் பெருமூச்சை வெளியிட்டவன்,
“ஆடாம நில்லு. முக்கியமா என்னை யாஷ்னு கூப்பிடு. அப்புறம் ஊருக்குப் போயும் இதே மாதிரி தான் வரும்.” என்று விட்டு அவனே அவனது அலைபேசியில் அவளைப் படம் பிடித்தான்.
அவள் தலையைச் சாய்த்துப் போஸ் கொடுக்க, அவனோ “நேரா நில்லு கடன்காரி… நீ ஆடுற ஆட்டத்துல ஃபோர்ஹெட் ஆர்னமெண்ட் (நெத்திச்சுட்டி) நேராவே இல்ல.” என்று கடிந்து கொண்டு அவளை அழகாகவே புகைப்படம் எடுத்திருந்தான்.
“வாவ்… கண்ணாடில பாக்குறதை விட போட்டோல இன்னும் அழகா இருக்கே, எப்படி யாஷ்?” அதிசயித்து அவள் வினவ,
“ஃபில்டர் போட்டிருக்கேன். கலர் இன்க்ரீஸ் பண்ணிருக்கேன்.” என்றதுமே, “எவ்ளோ கலர் கூட்டினாலும் உங்க கலருக்கு வராது. இவ்ளோ வெள்ளையா இருக்கீங்களே, உங்களை வெள்ளாவில வெளுத்தாங்களா அரக்கா…” என நக்கலடித்தாள் பவ்யமாக.
“உன்னைத்தான் இப்போ வெளுக்கப் போறேன். அமைதியா வா!” என்று அவளைப் பலியாடாக இழுத்துச் செல்ல, அவளுக்கோ பார்த்திபன் வடிவேலுவைப் பலி கொடுக்கக் குடை பிடித்து இழுத்துச் செல்வது போலத் தான் தோன்றியது.
‘எப்படி சிக்கி இருக்க பாத்தியா…’ எனத் தன்னை எண்ணித் தானே பரிதாபப்பட்டுக் கொண்டாள்.
கோவிலுக்குள் நுழைந்ததும், பயபக்தியாய் கன்னத்தில் போட்டுக் கொண்டவளை வித்தியாசமாகப் பார்த்தான்.
“என்ன யாஷ்… இங்க வந்து நெஞ்ச நிமிர்த்தி நடந்துகிட்டு இருக்கீங்க? உங்க ஸ்டிஃப்னஸைக் கம்மி பண்ணுங்க.” என்றதில் அவள் மீது தீப்பார்வை விழுக, “அட, கோவிலுக்குள்ள கோபம், ஆசை எல்லாத்தையும் துறந்துட்டு வரணும் யாஷ்!” என்றாள்.
“நான் இதுவரை டெம்பிள்க்கு வந்தது இல்ல. திஸ் இஸ் தி பர்ஸ்ட் டைம்”
“ஓ! அப்போ சாமி கும்புட மாட்டீங்களா?”
“சர்ச் போவேன்!” என்ற பிறகே அவள் கவனித்தாள். அவன் அணிந்திருந்த வெள்ளைச் சட்டைக்கு நடுவே க்ராஸ் வடிவான டாலர் கொண்டு செயின் மிளிர்ந்ததை.
“நீங்க க்ரிஸ்டியனா? அப்போ பேர் ஹிந்து மாதிரி இருக்கு…” விழிகளை உருட்டி அவள் கேட்க,
“அப்பா க்ரிஸ்ட்டின்!” என்றான் அசுவாரஸ்யமாக.
“பாருடா, உங்க கண்ணுல தான் கலப்படம்னு பார்த்தா மதத்துலயும் கலப்படமா?” பெரிய காமெடி சொல்லி விட்டதைப் போல அவள் சிரிக்க, ஆடவனின் முகம் இறுகியது.
‘ஆத்தி, டென்சன் ஆவுறான். நல்ல காமெடி தான…’ எனத் தன்னைத் தானே கேட்டுக் கொண்டு முன்னே நடக்க, அங்கு மணமேடையில் ஐயர், போட்டோகிராபருடன் நின்றிருந்தான் ஆஹில்யன்.
“எவெரிதிங் இஸ் ஓகே?” யாஷ் கூர்மையுடன் வினவ,
“எஸ் பாஸ். மேரேஜ் முடிஞ்சுதுனா அந்த போட்டோஸை மீடியாக்கு ஷேர் பண்ணிடலாம்.” என்றபடி நிதர்ஷனாவைப் பார்த்தவன், “பாஸ்… டக்குனு பார்க்குறப்ப ரித்திகா மேமைப் பார்க்குற மாதிரி தான் இருக்கு. அவங்க மாதிரியே ஃபேஸ் மேக்கப் பண்ணிருக்கீங்க.” என்று புகழ, “ஐ நோ…” என்றான்.
“மீடியாவும் நம்பனும், நம்ம எதிரிகளும் நம்பனும்.” தீர்க்கமாய் யாஷ் உரைக்க, “அதெல்லாம் நம்பிடுவாங்க சார். உங்க அம்மா நம்புவாங்க தான?” என்றதும், திரும்பி நிதர்ஷனாவைப் பார்த்தான்.
அவள் போட்டோகிராபரிடம், தன்னைப் புகைப்படம் எடுக்கக் கூறி, வித வித போஸ்களைக் கொடுத்துக் கொண்டிருக்க, “இவள் நம்ப வைக்க டைம் எல்லாம் குடுக்க மாட்டா… பேசி அவங்க மூளையைக் கன்பியூஸ் பண்ணிடுவா…” என்னும் போதே அவனை மீறியும் சிறு இளக்கம் அவன் இதழ்களில்.
“ஓகே… லெட்ஸ் ஸ்டார்ட் தி ப்ரொசீஜர்ஸ்!” என மணமேடையில் அமர்ந்து கொள்ள, ஆஹில்யன் தனது முதலாளியை ரோபோ போலவே அசையாமல் வித்தியாசமாய் பார்த்திருந்தான்.
யாஷ் அமர்ந்த உடனே, “ஏய் கடன்காரி… நீ போஸ் குடுத்தது போதும்டி. வந்து உக்காரு. இட்ஸ் கெட்டிங் லேட்” என்றதும் லேசாய் அவனுக்கு மயக்கமே வந்தது.
“என்னை அழகா இருக்குற மொமெண்ட்டை கேப்ச்சர் பண்ண விட மாட்டியா அரக்கா…” சிலுப்பியபடி அவள் அவனருகில் அமர,
“அடுத்த ஆறு மாசத்துக்கு இதே அழகை மெயின்டெயின் பண்ண வைக்கிறேன். வித விதமா போட்டோ எடுத்துக்கோ…” என்றான் அவன்.
“ஹலோ, கலப்படக் கண்ணுக்காரா… நான் நார்மலாவே அழகு தான். உங்க கண்ணு நொள்ளையா இருந்தா, அதுக்கு நான் என்ன செய்ய?” என நொடித்துக் கொள்ள, ஐயருக்கு இவர்களின் வாக்குவாதம் தலைவலியைக் கொடுத்தது போலும், “நாழியாகிடுச்சு, மாங்கல்யத்தை வாங்கிக்கோங்கோ…” என்று கொடுத்தார்.
“என்ன அய்யரே… மந்திரம்லாம் கரெக்ட்டா சொன்னீங்களா, இல்ல நீங்களும் மந்திரம் சொல்ற மாதிரி நடிக்க வந்தீங்களா?” எனக் கேட்டு அவருக்கு நெஞ்சுவலி வர வைத்ததில், யாஷ் பிரஜிதன் மறுபுறம் திரும்பி உதட்டை மடித்துச் சிரித்து விட்டான்.
அவ்வளவு தான். ஆஹில்யனுக்குத் துளித்துளியாய் வியர்த்து இதய வலி வருவதற்கான அறிகுறிகள் தெரிய, ‘உண்மையாவே நம்ம பாஸ் தானா? இல்ல… இவருக்கு இவரே க்ளோனிங் பண்ணிட்டாரா?’ என்ற புதிய சந்தேகம் எழுந்தது.
மற்றவருக்குத் தெரியும் வித்தியாசம், ஆடவனுக்குத் தெரியவில்லை போலும்.
தாலியைக் கையில் வாங்கியவன், “எப்படிக் கட்டணும்?” எனக் கேட்டு விட்டு மூன்று முடிச்சுப் போடச் சொன்னதில், ஒவ்வொரு முடிச்சையும் எண்ண, அவளுக்குச் சத்திய சோதனையாக இருந்தது.
“யோவ்… நடிக்கத்தான செய்யற? எத்தனை முடிச்சுப் போட்டா தான் என்னய்யா?”
நிதானமாய் மூன்று முடிச்சையும் போட்டு விட்டே நகர்ந்தவன், அய்யரின் உத்தரவில் அவளது நடு வகுட்டில் குங்குமமிட, அனைத்தும் புகைப்படங்களாக எடுக்கப்பட்டு, நொடி நேரத்தில் சமூக ஊடகங்களில் தீயாகப் பரவியது.
சரியாகத் திருமணம் நடந்து முடியும் நேரம், ரித்திகா அவனுக்கு அழைத்தாள்.
நிதர்ஷனாவுடன் அக்னியைச் சுற்றி வந்து நிற்கும் போதே, ஆஹில்யன் அவனிடம் அலைபேசியைக் கொடுக்க, உடனே அழைப்பை ஏற்றான் யாஷ்.
“ஹாய் ரித்தி, எஸ்! எவெரிதிங் இஸ் கோயிங் வெல். நீ பார்த்துக்கோ. ம்ம்… ஓகே ரித்தி, பை லவ் யூ!” என்று அழைப்பைத் துண்டித்ததும் நிதர்ஷனா நெஞ்சில் கை வைத்தாள்.
“அட அரக்கா… கல்யாணம் பண்ணுன அடுத்த செகண்டே வேற எவளுக்கோ ஐ லவ் யூ சொல்றியே, நடிப்பா இருந்தாலும் ஒரு டெடிகேஷன் வேணாமா ஒனக்கு…” என அதிர,
“ஷீ இஸ் மை கேர்ள் பிரென்ட்!” என்றான் அசட்டையாக.
“எதே… அதான் உனக்கே கேர்ள் பிரென்ட் இருக்கே, அப்புறம் ஏன்யா என்னைக் கல்யாணம் பண்ணுன?” எனத் திகைப்பாகக் கேட்க,
அவளை மேலிருந்து கீழ் வரை ஒரு முறை பார்த்தவன், நக்கல் புன்னகையுடன் “வெல், இப்பவே சொன்னா நீ ஓடிடுவ… வா, வந்து இதே காஸ்டியூம்ல இன்னும் நாலு போட்டோ எடுத்துக்க.” என்று அவள் தோள் மீது கை போட்டு போட்டோவிற்கு போஸ் கொடுக்க, ‘எப்படி வந்து சிக்கி இருக்க பார்த்தியா?’ என மீண்டும் ஒரு முறை தன்னையே நொந்தாள் நிதர்ஷனா.
அன்பு இனிக்கும்
மேகா