Loading

தன்னெதிரில் விளக்கமாறுடன் நின்றிருந்த பரமேஸ்வரியைக் கண்டு சிந்தாமணிக்கு பேச்சே எழவில்லை.

காசிமேட்டில் கதிரவனின் தெருவினுள் நுழைந்ததும் “என்ன இவ்ளோ பேட் ஸ்மெல் வருது?” என மூக்கை மூடிக் கொண்டனர் கண்மணியும் சிந்தாமணியும்.

அவர்கள் கிளம்பும்போதே யாஷ் பிரஜிதன் அத்தனை தடுத்தான். “உங்களால அங்க ஃபைவ் மினிட்ஸ் கூட இருக்க முடியாது” என்று.

சுத்த சைவம் உண்ணுபவர்களுக்கு மீன் வாசம் கூட நாற்றமாகத் தானே தெரியும்!

ஆனால் சிந்தாமணியோ கொதித்தெழுந்து, “அப்போ நீங்க மட்டும் அக்காவைப் பார்க்க அங்க எப்படி போனீங்க?” என்றாள்.

“அது ஏதோ ஒரு ஆர்வக்கோளாறுல” என உதடு மடித்து கேலி செய்தபடி மனையாளை பார்வையால் சீண்ட, நிதர்ஷனாவோ கண்களில் ஒரு வண்டி நெருப்பை அள்ளி வீசினாள்.

“உன் பேச்சை மதிச்சு வீட்டுக்குப் போகாம இருக்கேன்ல நீ இதும் பேசுவ இன்னுமும் பேசுவ. நிவே நானும் வரேன்…” என்று சோபாவை விட்டு எழுந்தவளை சிரிப்பு மறைந்து அழுத்தமாய் ஏறிட்டவனின் பார்வையில் நிவேதனுக்கு தான் சர்வமும் அடங்கியது.

“எதுக்கு மச்சானை கோபப்படுத்தினு இருக்க” எனப் பதறி அவளை கழற்றி விட்டுச் சென்றான்.

கண்மணிக்கும் நிவேதனின் இருப்பிடத்தைப் பார்க்க ஓர் ஆர்வம்.

தெரு தான் கருவாட்டு நாற்றத்துடன் இருக்கிறதென்றால், பரமேஸ்வரியின் வாயில் இருந்து வந்த நல்ல வார்த்தைகளை காது கொடுத்து கேட்க இயலவில்லை.

“யம்மா யம்மா நா சொல்றத கேளுமா” என்ற கதிரவனின் பேச்சை மதியாத பரமேஸ்வரி,

“எம்மாம் தகிரியம் இருந்திருந்தா, அந்த சிறுக்கியோட ஊர் சுத்தினு வந்துருப்ப. எங்க அவ? மாடிக்கு ஓடிட்டாளா? அண்ணனையும் தங்கச்சியையும் இன்னைக்கு வூட்டை வுட்டு தொரத்துனா தான் எனக்கு நிம்மதி…” என்று ஆரவாரத்துடன் பேசியவரை யாராலும் தடுக்க இயலவில்லை.

நிவேதனோ எப்போதும் போல காதை பொத்திக் கொண்டு மாடிக்கு ஏறிவிட, கண்மணிக்கோ அங்கு நிற்கவே பயமாக இருந்ததில் நிவேதனுடன் சென்று விட்டாள்.

சிந்தாமணி தான், தானாக வந்து வலையில் விழுந்தவளாகிற்றே.

‘என்ன இந்த அம்மா இந்த பேச்சு பேசுது’ என நொந்து விட்டாள்.

“ஆமா இந்த சிறுக்கி யாரு? எவள இழுத்தாந்துருக்க?” என்று நாராசமாகக் கேட்க,

கதிரவனோ “இவ நிதாவோட ஃப்ரெண்டு” என்று கோர்த்து விட்டதில், பரமேஸ்வரிக்கு வந்ததே ஆத்திரம்.

நிதர்ஷனாவின் மீதிருக்கும் கோபத்தையும் சேர்த்து அவள் மீது கொட்டி விட்டார்.

இரண்டு மூன்று கெட்ட வார்த்தைகளை தானமாக வழங்கியவர், “உன் ஃப்ரெண்டுக்காரி ஒன்ன அனுப்பிட்டு வேவு பார்க்குறாளாக்கும். உன்னான்ட எவ்ளோ கடன் வாங்குனா. இல்ல நீயும் அவளை மாறிக்க ஊர சுத்தி கடனை வாங்கிட்டு இவன் தலைல மொளகா அரைக்கிறியா? பெரிய மகாராணி… வா’ன்னு கூப்புட முன்ன, தேமேனு உள்ள வந்து குந்திட்டுருக்க? எந்திரிடி” என்று கொண்டையை அள்ளி முடிந்து விட்டு கூறியபிறகே, அங்கிருந்த ஒரு மர நாற்காலியில் தான் அமர்ந்திருப்பதே உறைத்தது சிந்தாமணிக்கு.

விளக்கமாறை காட்டி மிரட்டியதில் பயந்து அமர்ந்திருக்கிறாள் போலும்!

கதிரவனுக்கோ சிரிப்பு பீறிட்டது. உள்ளுக்குள் சிறு வலியும்.

“இல்ல ஆண்ட்டி… அது… அது…” எதிர்த்து பேசி பழக்கப்பட்டவள் தான். ஆனால், இவரிடம் என்ன பேசினாலும் காது கொடுத்து கேட்க மாட்டாரோ என்ற பயத்திலும், அந்த சுற்றுப்புறத்தை பார்த்தாலே அடிவயிற்றில் எழுந்த பாதுகாப்பின்மையும் அவளை உருக்குலைத்தது.

——

வேக வேகமாய் வீட்டினுள் நுழைந்த நிவேதன், காதில் இரண்டு பஞ்சை வைத்து அடைத்து விட்டு, கண்மணிக்கும் கொடுக்க, அவளோ பாவமாக பார்த்தாள்.

“அந்த அம்மா அப்படி தான் கண்மணி. அதுக்கு என்னையும் நிதாவையும் கரிச்சு கொட்டலைன்னா தூக்கமே வராது…” சின்னதாய் சிரித்து வைத்தான்.

“உங்களுக்கு கோபம் வரலையா?”

“வருது தான். ஆனா கோபத்தை காட்டுற இடத்துல நம்ம இருக்கணும்ல…”

“இதுவரை இல்லாம இருக்கலாம். இப்போ அந்த இடத்துல இருக்கீங்க தான?”

“திடீர்னு பணமும் பங்களாவுக்கு வந்துட்டா மட்டும் மரத்து போன உணர்வுகள் திரும்பி வந்துடுமா?” சலனமின்றி கேட்டவனை அயர்ந்து பார்த்திருந்தாள் அவள்.

“எதுனா குடிக்கிறியா?” சட்டென பேச்சை மாற்றி விட்டவன் பின் அசடு வழிந்தான்.

“ஆனா ஒண்ணுமே இல்ல. நீ இரு. நான் கீழ போய் கூல் ட்ரிங்க்ஸ் வாங்கிட்டு வரேன்” எனக் கிளம்ப போக, அவளோ ‘என்னது மறுபடியும் கீழயா’ என மிரண்டு, “ஐயோ வேணாம் வேணாம்…” எனப் பதறியதில் நிவேதன் சிரிப்பை அடக்கிக்கொள்ள, அவளிடமும் அதே அசட்டுப்புன்னகை.

பீரோவில் இருந்த துணிமணிகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்த நிவேதனை பார்வையால் அளந்தவள், “அதான் இனி நீங்க இங்க இருக்க வேணாமே. ஒத்திக்குன்னு குடுத்த காசை வாங்கிட்டு நம்ம வீட்டுக்கு வந்துடலாம்ல…” என்றாள்.

அவளைக் கனிவாய் ஏறிட்டவன், “ம்ம்… மொதோ இந்த ப்ராஜக்ட் நல்லபடியா முடியட்டும் கண்மணி. அப்ப தான் எனக்கே என்மேல நம்பிக்கை வரும். கொஞ்ச காசை குடுத்துட்டு இத்தனை வருஷமா ஹவுஸ் ஓனர டபாய்ச்சுட்டு இருந்தாச்சு. அதுக்கான காசை குடுத்துட்டு தான் காலி பண்ணனும். அதும் இல்லாம இங்க பக்கத்துலயே தனியா ஒரு வூடு எடுக்கணும்…” என்றவனை முறைத்து வைத்தாள்.

“எதுக்கு எதுக்கு தனியா வீடு?” எகிறியவளைக் கண்டு திருதிருவென விழித்தவன்,

“என் ரெண்டு தங்கச்சிங்களுக்கும் பொறந்த வீடுன்னு ஒன்னு வேணும்ல?” என்றவனை கண்ணிமைக்காது பார்த்தாள் கண்மணி.

அவனது அதீத அன்பும் அவனை சீண்ட வைத்தது.

“ஆனா நிதா அண்ணிக்கு பொறந்த வீடு தஞ்சாவூர்ல இருக்கே!”

சட்டென நிவேதனின் முகம் இருளடைந்து விட்டது.

“ஆமால!” குரல் உள்ளே சென்று விட,

“அய்யயோ நான் சும்மா உங்களை கிண்டல் பண்ண சொன்னேன். அண்ணிக்கு நீங்க தான் முக்கியம்னு தெரியாதா உங்களுக்கு?” என்று இடுப்பில் கையூன்றிக்கொண்டாள்.

“தெரியும் தான். ஆனா இப்ப வேற ஒருத்தர் ரொம்ப முக்கியமா போய்ட்டாரு” என முணுமுணுத்திட அது அவளுக்கும் கேட்டது.

“பின்ன, எல்லா பொண்ணுங்களுக்கும் கல்யாணத்துக்கு அப்பறம் ஹஸ்பண்ட் தான் ரொம்ப ரொம்ப முக்கியமா போவாங்க. மத்தவங்க ரெண்டாம் பட்சம் தான்… என் அம்மா, அப்பா கூட” என்றவள் அலெஸ்சாண்ட்ட்ரோவின் நினைவு வர சட்டென வாயை மூடிக்கொண்டாள்.

நொடியில் களையிழந்து போன கண்மணியின் முகம் அதை கையில் தாங்கிக்கொள்ள அவனது கரங்கள் கட்டளை பிறப்பிக்க ஒரு நொடி திடுக்கிட்டுப் போனான் நிவேதன்.

அவனது கூர்பார்வையில் அவளே, “எனக்கு அப்பான்னா எப்பவும் இளா அப்பா மட்டும் தான்” என்று முணுமுணுத்தாள். தன்னைப் பெற்றவன் தானே இந்த அன்புமிகு அண்ணன் தங்கையின் நிம்மதியை குழைத்தமைக்கு காரணமே!

அவளது மனநிலை புரிந்தது போல, “விடு கண்மணி… நீ எதுவும் நினைச்சுக்காத…” எனப் பெருமூச்சு விட்டான்.

“ம்ம்” எனத் தலையை உருட்டியவள், “காபி போட்டு தரட்டா?” எனக் கேட்டாள்.

அவனும் பேச்சை மாற்றியாக வேண்டிய நிலையில், “ம்ம் காபி பொடி அடுப்படில இருக்கும்னு நெனைக்கிறேன்…” என்று அடுக்களைக்கு வர, அங்கோ பாதி வெட்டப்பட்ட நிலையில் ப்ரூ காபியின் கவர் ஒட்டிக்கொண்டு பரிதாபமாய் காட்சியளித்தது.

“குடுங்க… இதை கட் பண்ணி பாக்குறேன். இன்னும் டேட் இருக்கு” என்றவள், அந்த காபி பொடியை வெளியில் எடுத்து, பிளாக் காபி தயாரிக்க முற்பட, “இரு கொடத்துல தண்ணி எடுத்துட்டு வரேன்…” என்று வேகமாக ஒரு குடத்தை எடுத்துக் கொண்டு வெளியேறினான் நிவேதன்.

அவனைக் கண்டு மென்முறுவல் பூத்தவளுக்கோ, இந்நாள் இப்படியே இதே இதத்துடன் தொடர வேண்டுமென மனம் அடித்துக் கொண்டது. இந்தச் சிறு இடம்… வசதியற்ற வீடு… டஜன் கணக்கில் அக்கறை கொள்ளும் ஒரு ஆடவன்!

அதே அக்கறை அவனிடமிருந்து காதலாய் கிடைத்தால், இதே இதம் நெஞ்சில் இனிக்க மீதி வாழ்க்கையை இனிமையாய் கழிக்கலாமே! எனக் கண் மூடி கனவில் மிதந்தவள், சட்டென கண் விழித்தாள்.

‘பைத்தியக்காரத்தனம் செய்யாத கண்மணி!’ தன்னைத் தானே நிந்தித்துக் கொண்டவள், ஆழ்ந்த மூச்சை எடுத்துக்கொண்டாள்.

கற்பனையில் கூட காதல் செய்யாதே என மனம் கொடுத்த அழுத்தத்தின் விளைவாய் அவள் விழிகளில் சிறு நீரலை.

குடத்தை தூக்கிக்கொண்டு வந்த நிவேதன், அவளது கண்கள் கலங்கி இருந்ததைக் கண்டு “என்னாச்சு கண்மணி… கண்ல எதுனா தூசி விழுந்துடுச்சா. ப்ச், வீடு ஒட்டடையா இருக்கு. நீ காராண்டா இரு கண்மணி. இங்க இருக்குறது உனக்கு செரமம்…” என சில நொடிகளில் பேசி முடித்து விட்டதில்,

“அதெல்லாம் இல்லை…” என மெதுவாய் உரைத்தவள், குடத்தை தானே தூக்கப் போக, “வேணா வேணா தூக்காத. இங்கயே எடுத்துக்கலாம்… பாத்திரம் எல்லாம் ரொம்ப நாளா கழுவாம இருக்கு. கழுவி தரேன்…” என்றான்.

“வேணாங்க. நீங்க வேணுன்றத எடுத்து வைங்க. நான் கழுவிக்கிறேன்” என்றதை காதில் வாங்காதவனாக, முற்றத்தில் கிளாஸ்களை கொண்டு வந்து கழுவி தந்தான்.

“இங்க சிங்க் இல்ல. உனக்கு உக்காந்துட்டு கழுவ கஷ்டம்…”

தன்னிலை தெரியாமல், இவன் வேறு தன்னை நிலைகுலையச் செய்கிறான் என்ற கடுப்பு வேறு அவளுக்கு.

இருவருக்குமாக பிளாக் காபியை போட்டுக்கொண்டு வாசற்கதவை ஒட்டி இருந்த சிறு ஹாலில் தரையில் அமர்ந்து விட்டனர்.

“எனக்கு ஒரு சந்தேகங்க…” கண்மணி ஆரம்பிக்க, நிவேதன் என்னவென பார்த்தான்.

“அது… உங்களுக்கு ஹாலுசினேஷன் ஆனப்ப, எப்படி எங்க எல்லார் பேரும் சரியா சொன்னீங்க” கேட்கும்போதே அவள் முகம் லேசாய் சிவந்தது.

அச்சிவப்பில் ஆடவனின் கனிந்த மனம் உருகித்தவிக்க, தொண்டையை செருமிக்கொண்டவன், “சத்தியமா தெரியல கண்மணி” என்றான் சின்ன சிரிப்புடன்.

“ஏதாச்சு யோசிச்சு பாருங்களேன் நிவே…”

“நானும் தினமும் யோசிக்கிறேன் கண்மணி. எனக்கு போதை மருந்தை குடுத்தே வச்சுருந்தாங்க. எப்படி என்னன்னு ஒன்னும் புரியல. அப்போ அப்போ அந்த அலெஸ் யாராண்டயோ போன்ல பேசின்னே இருப்பான் கண்மணி. அப்போ நிறைய பேர் சொல்லுவான். போதைல இருந்தாலும் என் காதுல அவன் சொல்றது எல்லாம் விழும்.”

“ஓ! அப்போ போதைல இருக்கும்போது உங்க காதுல கேட்ட பேர் எல்லாம் வச்சு உங்களுக்கா ஒரு இமேஜினேஷன் ஆகியிருக்கு. அது தான் ஹாலுசினேஷன்லையும் இருந்துருக்குனு நினைக்கிறேன்.”

“உண்மை தான் கண்மணி. எனக்கு சுயநினைவு வந்தாலே அடுத்து மருந்து குடுத்துடுவானுங்க. நான் என்ன நினைச்சேன், என்ன பேசுனேன்… எதுவுமே எனக்கு ஞாபகம் இல்ல. எல்லாமே என்னை மீறி நடந்தது தான்… உன்னை ஏதும் கஷ்டப்படுத்தி இருந்தா மன்னிச்சுடு” என்றதும் அவள் தவித்துப் போனாள்.

தன் மனதில் பெரும்பாரத்தை இறக்கி வைத்து விட்டு, வெறும் மன்னிப்பை மட்டுமல்லவா வேண்டுகிறான்!

“என்ன நிவே பெரிய வார்த்தையெல்லாம் பேசிட்டு இருக்கீங்க. அதெல்லாம் ஒன்னும் இல்ல…” என்று துப்பட்டாவில் பொறித்திருந்த சிறு கற்களை சுரண்டிட, அவனது பார்வையோ திருட்டுத்தனமாய் பாவையை சுரண்டியது.

——-

பத்து நிமிடத்திற்கு மேலேயே சிந்தாமணியால் கதிரவனின் வீட்டில் இருக்க இயலவில்லை.

கதிரவன் எத்தனை விளக்கம் கொடுத்ததும் பரமேஸ்வரி அதனை ஏற்க முயலாது, “அவள் எவனை வளைச்சு போட இப்படி எல்லாம் கதை கட்டிட்டு இருக்கா. அது தெரியாம நீயும் கதையளந்துனு இருக்க” என்ற தாயை, “அம்மா!” என அதட்டினான்.

“என்னடா சத்தம் வருது?” என மீண்டும் விளக்கமாறால் அவனது காலில் அடிக்க, “என்னை என்ன வேணா அடி. சொம்மா நிதா பத்தி இல்லாததும் பொல்லாததும் பேசாத. அவளால எனக்கு இப்ப நல்ல வேல தான் கெடச்சுருக்கு” என்றவனிடம்,

“அடேயப்பா அவளால ஒனக்கு நல்ல வேலை கிடைச்சா இன்னாத்துக்கு ரெண்டு பேரும் மாடி வீட்டை காலி பண்ணாம வச்சுருக்காங்க. காசை குடுத்துட்டு பங்களால போய் இருக்க வேண்டியது தான.” என்றார் எகத்தாளமாக.

யாஷ் இப்போதைக்கு இந்த வீட்டை காலி செய்ய வேண்டாமென தீர்க்கமாக கூறி இருந்தான். ஏனென்ற காரணம் தான் புரியவில்லை.

இந்த மாதம் அவனுக்கும் நிவேதனுக்கும் சம்பளமே இலட்சங்களில் கொடுத்திருந்தான் யாஷ். அதை வைத்து தாயின் வாயை அடக்கி விடலாம் என்ற நட்பாசையில் தான் இருந்தான். ஆனால் முன்னரே கொடுத்து விட்டால், தாயும் அடங்கி விடுவார் சிந்தாமணியும் இணக்கமாகி விடுவாள் என்ற முன்னெச்செரிக்கையில் வாயை கட்டுப்படுத்திக் கொண்டான்.

அவர் பணத்தைக் கண்டதும் அமைதியாகி விடுவதை கண்டால், தானும் பணத்திற்காக தான் அவர்களுடன் இருப்பதாக தன்னை தவறாக எண்ணி விடுவாளோ என்ற பயமும் ஒரு காரணம் தான்.

சிந்தாமணிக்கோ அழுகையே வரும்போல இருந்தது.

அவளது முகத்தில் என்ன கண்டானோ, “நீ மாடிக்கு போய் இரு சிந்தா…: என்றிட, நொடியில் மாடிக்கு ஏறி சென்று விட்டதில், அவன் இதழ்களில் கசந்த முறுவல்.

————

அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்த நிதர்ஷனாவை மடிக்கணினியை உபயோகப்படுத்தியபடி நிமிர்ந்து பார்த்த யாஷ் பிரஜிதன், “என்னடி காலைல போக வேண்டிய வாக்கிங்க ‘மிட் டே’- ல போயிட்டு இருக்க?” எனக் கேட்க,

“பாவம் கதிரு. அவன் ஆத்தாக்காரியாண்ட எவ்ளோ அடி வாங்குறானோ. நான் போயிருந்தா கூட என்னை திட்டுற சாக்குல அவனை அடிக்க மறந்துருக்கும்” எனப் பாவப்பட்டாள்.

“ஒருவேளை அப்படி நடந்திருந்தா தட் லேடியை நெக்ஸ்ட் டைம் பாக்கும்போது ஊமையா தான் மாறியிருக்கும்” என அசட்டையாய் கூறியபடி மீண்டும் மடிக்கணினியில் புதைய, “அப்படி எதுனா செஞ்சு வுட்டுடுவன்ற பயத்துல தான நான் வீம்பு புடிச்சு போகல…” என நொடித்தாள்.

“ஹோ! அப்போ என் மேல இருக்குற பயத்துல நீ இங்க இருக்கல?” யாஷ் ஒற்றைப்புருவம் உயர்த்தி வினவ,

“ஹய்ய… ஒனக்கு ஓவர் கான்பிடென்ஸ் ஓவர் அரக்கா. நான் இன்னும் கொஞ்சம் அடம்பிடிச்சுருந்தா நீ வுட்டுருக்க மாட்டியாக்கும்…” என நாக்கைத் துருக்கியதில், ஆடவனின் நயனங்கள் ரசனையில் குளித்தது.

அவளும் அதே ரசிப்புடன் அவனை சைட் அடித்து விட்டு, “நான் கேட்கணும்னு நினச்சேன் யாஷ். நீலி மாமா பத்தி கதிரு அப்பாட்ட கேட்டா எதுனா தகவல் தெரியலாம்ல?” எனக் கேட்டதில், அவன் நெற்றியில் சிறு முடிச்சு.

“உன் பேரண்ட்ஸ் பத்தி கேள்விப்பட்டதுமே கதிர் பப்பாட்ட நான் விசாரிச்சேன் நிது. அந்த நேரத்துல வீட்டுக்காக வாங்குன கடனை அடைக்க, ஒத்திக்கு விட்டதா சொன்னாரு. தட் நீலகண்டன் ரெடி கேஷா குடுத்துனால பெருசா எதுவும் விசாரிக்கல. அதுக்கு அப்பறம் நீலகண்டனும் கதிர் அப்பாவும் ஓரளவு க்ளோசா இருந்தாலும் கூட, தன்னைப் பத்தி எதுவுமே சொன்னதில்லைனு சொன்னாரு…” எனத் தாடையைத் தடவினான்.

“தஞ்சாவூர்ல வீட்டு வேலை பார்த்துட்டு இருந்த அந்த நீலி மாமாவுக்கு எப்படி யாஷ் லட்சக்கணக்குல கைல காசு இருந்துருக்கும்?”

“மே பி உன்னையும் உன் அம்மாவையும் கொலை பண்ண குடுத்த பணமா இருந்துருக்கலாம். அப்டி தான் நான் நினைச்சேன் ஆலம்பனா. பட், என் பப்பாவோட ஓல்ட் அக்கவுண்ட் ஹிஸ்டரியை எல்லாம் தோண்டி எடுத்தப்ப தான் ஒரு விஷயம் தெரிஞ்சுது” எனும்போதே அவன் மடிக்கணினியை சோபாவின் மீது வைக்க, அவளும் வேகமாய் அவன் அருகில் அமர்ந்து கொண்டாள்.

“என்ன தெரிஞ்சுது?”

“உன்னையும் உன் அம்மாவையும் கொலை பண்ண அவர் பேசுன பணமே வெறும் அம்பதாயிரம் தான்.”

“ப்ப்பூ… எங்க உசுரு இவ்ளோ சீப்பா?” என வெகுவாய் கவலை கொண்டவளைக் கண்டு முறுவலித்தவன், “அப்போ அந்த ஃபிஃப்டி தொளசண்ட் மதிப்பு அதிகம் தான ஆலம்பனா” என்றான்.

“ஹ்ம்ம் அதுவும் நீலி மாமா மாதிரி ஆளுங்களுக்கு அதிகம் தான். அப்போ கொலை பண்ண சொல்ல அமவுண்ட்டையும் உன் அப்பா அக்கவுண்ட்லயா அனுப்புனாரு. அப்போ நீலி மாமாவோட அக்கவுண்ட் செக் பண்ணி பார்த்தியா யாஷ்?” புரியாது வினவினாள்.

“ம்ம்! பண்ணனும்” என்று விட்டு எழுந்தவனை கைப்பிடித்து அமர வைத்தவள், “நீ எனக்கு தெரியாம என்ன செய்ற?” எனக் கேட்டாள் நேரடியாய்.

ஓர் கணம் துணுக்குற்றவன், “நான் எதுவும் செய்யலையே?” எனத் தடுமாற,

அதனைக் கவனியாத நிதர்ஷனா, “இல்ல நீ எனக்கு தெரியாம ஏதோ செய்ற! உன் அப்பனையும் என் அப்பனையும் கொன்னுட்டியா?” கண்ணை உருட்டிக் கேட்ட பிறகே, சற்றே நிம்மதியடைந்தவன் “அவ்ளோ சீக்கிரம் சாக விட மாட்டேன்டி. இந்த முடிச்சை அவுக்காம அவங்க உயிர் இங்க இருந்து போகாது” என்றான் தீர்க்கமாக.

“அப்போ என்கிட்ட ஏன் எதுவும் சொல்ல மாட்டேங்குற. நான் பேச வந்தா கூட கட் பண்ணி விடுற. போ! உன் பேச்சு கா…” என்று உதடு குவித்து கோபம் கொள்பவளிடம் என்னவென்று விளக்குவதென்று அவனுக்கும் தெரியவில்லையே.

இதழ்களை ஈரப்படுத்திக் கொண்டவனிடம், “எனக்குத் தெரியும்!” என அவள் கூறியதில் மீண்டும் அவன் இதயத்துடிப்பு பல மடங்கு ஆகியது.

“என்ன என்ன தெரியும்?” இறுகிய குரலில் கேட்டவனிடம்,

“என்கிட்ட எல்லா விஷயத்தையும் சொன்னா, நான் மறுபடியும் உன்னை மறந்துடுவேன்னு தான சொல்ல மாட்டுற?” என வேக மூச்சுகள் வாங்க, “ஃப்பூ” என மீண்டும் சமனடைந்தது அவன் மனம்.

“லூசு மாதிரி பேசாதடி. நீ என்னை மறுபடியும் மறக்கிறது எல்லாம் நடக்காத காரியம்” என்றான் அவள் கன்னம் கிள்ளி.

“ஓஹோ! அப்படி மறந்துட்டா என்ன செய்வியாம்?” குறுகுறுப்புடன் கேட்டவளிடம்,

“பேபி ப்ராசஸிங் தான்…” எனக் கண் சிமிட்டியதில் செங்கொழுந்தாய் சிவந்து போனாள்.

“நீ ரொம்ப மோசம் அரக்கா!” அவன் நெஞ்சில் முகம் புதைத்துக் கொண்டவள், சட்டென விலகி “ஏன் உன் ஹார்ட்டு இவ்ளோ ஸ்பீடா துடிக்குது?” என வினவிட, “நீ பக்கத்துல வரவும் என் மூட் மாறிடுச்சு. அதுனால இருக்கும்” என்றான் சட்டென தன்னை சமன்செய்து கொண்டு.

“மாறும் மாறும்… அப்படியே எஸ்கேப் ஆகாம நான் கேட்டதுக்கு பதில் சொல்லு கலப்படக்கண்ணுக்காரா!” என்று அவன் காதை திருகினாள்.

அவளுக்குத் தெரிய வேண்டியது தெரியாமல் இருந்தால் போதுமென்ற மனநிலையில், இதுவரையில் தான் கண்டுபிடித்த விஷயங்களை அடுக்கினான் யாஷ்.

“என் பப்பா நீலகண்டனுக்கு அனுப்புன பணம் உன் அம்மாவோட அக்கவுண்ட்க்கு தான் போயிருக்கு” நிதானமாய் அவன் கூறியதில் இருக்கையை விட்டே எழுந்து விட்டாள் நிதர்ஷனா.

“என்ன யாஷ் உளறுற?”

“சிட் ஆலம்பனா!” அவள் கைப்பிடித்து அமைதிபடுத்தியவன்,

அவள் தோள்மீது கைபோட்டு, “எஸ் அவங்க அக்கவுண்ட்ல பணம் வந்ததும், அன்னைக்கே அதை எடுத்து குடுத்து இருக்காங்க…” என்றான் தோளைக்குலுக்கி.

“அவங்களை கொலை பண்ண அவங்களே எப்படி பணம் வாங்குவாங்க யாஷ்?” நிதர்ஷனாவின் கேள்வியில்,

“இட் மேக் சென்ஸ் கடன்காரி. ஒருவேளை உன் மதர் ரீசன் தெரிஞ்சுக்காம இருந்திருக்கலாம்… அண்ட் மோர் ஓவர், க்ராண்ட்பாவோட பிரதர்ஸ் பேமிலி கூட தான் அந்த நீலகண்டன் அட்டாச்ட்டா இருந்ததா இளா அங்கிள் சொல்லிருக்காங்க. அண்ட், சில நேரம் அவங்க நீலகண்டனுக்கு பணம் குடுக்க, அமுதவல்லி அக்கவுண்டுக்கு அனுப்பி அவங்களை பணம் எடுத்து குடுக்க சொல்லுவாங்கன்னு இளா அங்கிள்கிட்ட கேட்டு தெரிஞ்சுகிட்டேன். மே பி, விஷயத்தை சொல்லாம ‘எனக்குப் பணம் வரும் எடுத்துகுடு’னு சொல்லி நீலகண்டன் கேட்டுருக்கலாம்.

வரதராஜன் ஏமாத்துன அதிர்ச்சில இருந்த அமுதவல்லியும் விஷயம் என்னனு தெரிஞ்சுக்காம பணத்தை எடுத்து குடுத்து இருக்கலாம். இது ஜஸ்ட் கெஸ்ஸிங் தான்” என்றான்.

“கரெக்ட்டா தான் அரக்கா. ஆனா வெளிநாட்டு அக்கவுண்ட்ல இருந்து வந்துருக்குனு தெரிஞ்சுருக்கும் தான அவங்களுக்கு?”

“தெரிஞ்சுருக்கலாம். ஒருவேளை தெரிஞ்சே பணத்தை எடுத்து குடுத்துருக்கலாம். உனக்கு பேர் வைக்கிற பங்க்ஷன் அப்போ தான், நீயும் உன் அம்மாவும் காணாம போனதா இளா அங்கிள் சொன்னாரு. அதுக்கு முதல் நாள் தான் பணம் நீலகண்டனுக்கு கிடைச்சிருக்கு. நீலகண்டன் செஞ்ச சதியால உன் அம்மா உன்னை கூட்டிட்டு அந்த ரெயில்வே டிராக்குக்கு போனாங்களா. இல்ல உன் அம்மா செஞ்ச சதியால நிவேதன் உங்கிட்ட வந்து சேர்ந்தானா? இது ஒரு கெஸ்ஸிங்” என இரு புருவம் உயர்த்தியதில் அவளுக்கு தலை சுற்றியது.

“என்ன பேசுற யாஷ். வாழ்க்கையே சூனியமா ஆகிடுச்சுனு இடிஞ்சு போய் இருந்தவங்க, என்னை கொலை பண்ண முயற்சி பண்றது தெரிஞ்சா அதை தடுத்துருப்பாங்க தான. அதே மாதிரி நிவேதனுக்கும் எப்படி கெட்டது நினைச்சுருப்பாங்க?” என்றாள் வருத்தமாக.

அவள் நெற்றி கேசத்தை வருடி விட்டவன், “நீ ஏன் நெகட்டிவா நினைக்கிற. அவங்க காப்பாத்தவே இப்படி செஞ்சுருக்கலாம் இல்லையா?” என்றதும் அவளிடம் மீண்டும் ஒரு குழப்பம்.

“ஆலம்பனா… ஒரு விஷயத்தை நல்லா யோசிச்சு பாரு. வரதராஜனுக்கு நீ உயிரோட இருக்க கூடாது. என் பப்பாவுக்கு நிவே உயிரோட இருக்க கூடாது. ஒரே கல்லுல ரெண்டு மங்கானு உன்னையும் அவனையும் சேர்த்தே கொலை பண்றது தான் மிஸ்டர் அலெஸ்சாண்ட்ரோவோட திட்டம்.

உன் அம்மா இதை கண்டுபிடிச்சு, இதை தடுக்கவே நீலகண்டன் மூலமா நிவேதனை கடத்தி உங்க ரெண்டு பேரையும் பாதுகாப்பா, சென்னைக்கு ஒரு ஸ்லம் ஏரியாவுக்கு ஏன் அனுப்பி இருக்க கூடாது.

நீலகண்டன் இருந்தவரைக்கும் உன்னைக் கூட பக்கத்துல ஒரு ஸ்கூல்ல சேர்த்துருக்காரு. ஆனா நிவேதனை அந்த தெரு தாண்டி எங்கயும் அனுப்பல. ஏன்னா, உன்னை யாரும் வலை வீசி தேடலை. பட் நிவேதனை வரதராஜன் ரொம்ப தீவிரமா தேடிட்டு இருந்தான். அதுனால தான் உன்னை படிக்க அனுப்புன நீலகண்டன் நிவேதனை அதே தெருவிலேயே இருக்குற ஒரு சின்ன துணிக்கடைக்கு வேலைக்கு அனுப்பி இருக்கான். ஸ்கூல் ரெகார்டஸ் மூலமா அவன் மாட்ட கூடாதுன்ற எண்ணமாவும் இருக்கலாம் தான?” என்றதும் அவள் கலங்கி விட்டாள்.

“எப்படி இவ்ளோ தெளிவா சொல்ற?”

“ஒரு சின்ன க்ளூ… அங்க பக்கத்துல இருக்குற ஒரு அடகு கடைல உன் அம்மாவோட தங்க வளையலும் அவங்க தாலி செயினும் வச்சு தான் மீதி பணத்தை புரட்டி லீஸ் பணம் குடுத்துருக்கான் நீலகண்டன்… அதுக்கான ரெகார்ட் இருக்கு.”

“நீ சொல்றதை எல்லாம் யோசிச்சு பாக்கும்போது என்னவோ சரினு தான் தோணுது யாஷ். ம்ம்… நீலி மாமா நிவேவை எங்கயும் அனுப்புனதே இல்ல. கதிரோட கூட விளையாட அனுப்ப மாட்டாருனு நிறைய தடவை சொல்லுவான் நிவே.

நீலி மாமா இறந்தப்பறம், நிவேவையும் ஸ்கூலுக்கு ஒரு நாள் கூப்பிட்ட ஞாபகம். அப்போ கூட அவன் ‘நீலி மாமா என்னை இந்த ஏரியா தாண்டியே போக கூடாதுனு சொன்னாரு. நம்மளை பத்திரமா பாத்துக்கிட்டவரு இப்போ இல்லை’னு சொல்லி அழுவான். நான் படிக்க கூப்பிட்டப்ப, அவன் மனநிலையே வேற மாதிரி ஆகிடுச்சு.

அவனுக்கு படிக்க ரொம்ப ஆர்வம் தான். ஆனா, மாமா இறந்ததுல இருந்து இப்ப வரைக்கும் எனக்காக மட்டும் தான் அவன் யோசிச்சான்” சொல்லும்போதே அவள் குரல் கமறியது.

கண்ணில் நீர் தேங்கி நிற்க, “நீ இருக்குற தைரியத்துல மட்டும் தான் இப்ப நான் நார்மலா இருக்கேன். ஆனா சில நேரம் இவ்ளோ எதிர்ப்பை மீறி ஆபிஸ்குள்ள அவன் இருக்குற ஒவ்வொரு செகண்டும் எனக்கு பதட்டமா தான் இருக்கு யாஷ். அவன்கிட்ட பேசுனா கூட அந்த பயத்தை காட்டிடுவேனோன்னு, இப்ப எல்லாம் நான் சரியா பேசுறது கூட இல்ல. எப்ப பாரு உன் புருஷன்காரன் பின்னாடியே அலையுறனு என்னைக் கிண்டல் கூட பண்ணுனான். அவனுக்குன்னு ஒரு கடந்த காலம் இருந்ததே இல்ல யாஷ். நிகழ்காலமும் எதிர்காலமும் அவனுக்கே அவனுக்கா கண்டிப்பா இருக்கணும்” என கணவனின் கையைப் பிடித்துக் கொண்டவள், “அவனுக்கு எதுவும் ஆக விட மாட்ட தான?” எனக் கேட்டாள் ஏக்கத்துடன்.

“நான் ஏற்கனவே சொல்லிருக்கேன் நிது. நீயும் அவனும் என் பொறுப்பு! ஐ மீன் இட்!” என்று அழுத்தம் திருத்தமாய் கூறியதில், அவன் கழுத்தை இறுக்கிக் கட்டிக்கொண்டாள் நிதர்ஷனா.

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 30

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
33
+1
0
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்