
ஆராதனாவின் வீடியோவை அழித்த தேவாவை முறைத்தவள், “நீ தான் ஏதோ வில்லன் மாதிரி பேசுன. அதான் நான் தப்பா நினைச்சேன்” என்றிட, அவன் அவள் பேசுவதை காதில் வாங்கவே இல்லை என்பது போல், சாலையில் கவனத்தை செலுத்தினான்.
அதில் கடுப்பானவள், ‘ரொம்ப தான் பண்றான்’ என்று திட்டிக்கொண்டு, ஜன்னல் வழியே வேடிக்கை பார்க்க,
அவன் அப்போது தான் அவளை திரும்பிப் பார்த்தான். விடியும் வேளையில், அவளை எழுப்ப வந்த தேவா, ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவளை எழுப்பத் தோன்றாமல் அவளுக்குப் போர்வையை மட்டும் போர்த்தி விட, அவள் சுகமாக அந்தப் போர்வையை கட்டிக்கொண்டு பழக்கத் தோஷத்தில் கட்டை விரலை வாயில் வைத்து உறங்கினாள்.
அவள் செய்கையில் மெலிதாய் புன்னகைத்தவன், விரலை மெதுவாக எடுத்து விட, அவள் மீண்டும் வாய்க்குள் வைத்துக்கொண்டாள். அதில் “கியூட்டி” எனத் தன்னையறியாமல் கொஞ்சியவன் சட்டென அதிர்ந்து, தலையை அழுந்தக் கோதினான்.
பின், ஏதோ தோன்ற அவள் அப்படி தூங்கும் அழகை வீடியோ எடுத்து விட்டவன், எத்தனை முறை அதனைப் பார்த்தான்? என்பது அவன் மட்டுமே அறிவான். அவள், அவன் சொல்வதை செய்யவில்லை என்றதும், அவளை ‘டீஸ்’ செய்வதற்காக வீடியோ என்று கேலி செய்தவன், அவள் திட்டிய பிறகே என்ன கோணத்தில் அதனைப் புரிந்து கொண்டாள் என்றே உணர்ந்தான். பெரிதாகப் பெண் தோழிகளோ, உறவுகளோ இல்லாததோடு, பெண்களிடம் பழகியே பழக்கம் இல்லாதவன் அவளைக் கிண்டல் செய்யும் நோக்கோடு தான் வீடியோ போடுவேன் என்று சொன்னானே தவிர, அவன் சொன்னதன் அர்த்தமே, அவள் கோபப்படும் போது தான் புரிந்தது.
உடனே, ‘தன்னை எப்படி இவள் இவ்வளவு கேவலமாக நினைக்கலாம்?’ எனக் கோபம் வேறு வர, இறுகிய முகத்தோடு காட்டை அடைந்தான்.
மயக்கத்தில் இருந்த நிஷிதாவை உள்ளே அழைத்து வரும்படி அவளுக்குப் பணித்தவனிடம், ஆரு, “வாட்? ஹே நான் என்ன உன் அடியாளா மேன்?” என்று திமிராகப் பார்த்தாள்.
தேவா அவளை முறைத்து கொண்டே, நிஷிதாவை தூக்கப் போக, அவள் சற்று நேரத்தில் பதறி விட்டாள். ஏன்? என்று அறியாமல், ஏதோ ஓர் பொறாமை உணர்வு தோன்றிட, “ஏய் எதுக்குடா அவளைத் தூக்குற? நான் அவளைக் கூட்டிட்டு வரேன். நீ போ” என்று நிஷிதாவை காரிலிருந்து கைத்தாங்கலாக அழைத்து வந்தவள், ஒரு அறையில் கட்டிலில் படுக்க வைக்க,
தேவா, “ஆமா! அவள் என்ன இங்க பிக்னிக் வந்துருக்காளா? அந்த சேர்ல உட்கார வச்சு கட்டிப்போடு டைட்டா?” என்று கயிறை கொடுத்தான்.
அவனை உறுத்து விழித்து அந்தக் கயிறை வாங்கி அவளைக் கட்டியவள், ‘எப்படியாவது அவளைத் தப்பிக்க வைக்க வேண்டும்’ என்று எண்ணி கயிற்றை லேசாகக் கட்டிவிட்டு, “நான் கட்டிட்டேன்” எனச் சிலுப்பிக்கொண்டு தேவாவை தாண்டி வெளியில் செல்லப் போக, தேவா, அவள் கையை பிடித்துச் சடாரென இழுத்தான்.
அவள், “ஆஆ! ஏண்டா எருமை இப்படி இழுக்குற?” என்று முகத்தைச் சுருக்கி கேட்க, அவன் நிஷிதாவை கண் காட்டினான். “அதான் நான் கட்டிப்போட்டுட்டேன்ல” என்றவளிடம்
தேவா, “இப்போ, நீ நல்லா கட்டல… அவ கூட சேர்ந்து உன்னையும் கட்டி போட்டு வச்சுடுவேன்! அப்பறம் இந்த ஜென்மத்தில நீ ரிசர்ச் பண்ண முடியாது!” என்று புருவத்தை உயர்த்தி சொன்னதும், அவனை மனதிற்குள்ளேயே திட்டி விட்டு நிஷிதாவை இறுக்கமாகக் கட்டினாள்.
பின் தேவா, “இவள் கண்ணு முழிச்சாலும், தப்பிச்சு போகாம பார்த்துக்க வேண்டியது உன் பொறுப்பு. அப்படி அவள் தப்பிச்சா…?” என மிரட்டி விட்டுச் சென்றதில், அவள் ‘டேய் பரங்கி தலையா! என்னைக்காவது நீ என்கிட்ட சிக்குவ அன்னைக்கு உன்னை உன்னை’ என்று கோபத்தில் கத்தினாள்.
காட்டினுள், மதியம் தாண்டியிருக்க விஷ்வா, “ரொம்ப நேரம் ஆச்சு… வாங்க திரும்பப் போகலாம்.” என்றிட, அம்மு, “ப்ச் இன்னும் ஒரு கிலோமீட்டர் கூட முடிக்கல… அதுக்குள்ள திரும்பிப் போகணும்னா எப்படி? இன்னும் கொஞ்ச நேரம் ஆகட்டும்.” என்று அவள் வேலையைத் தொடர,
அவன், “தேவா மதியம் ஆனதும் அங்க வந்துடணும்னு உன் முன்னாடி தான சொன்னான்…? எனக்கு என்ன அங்க உன் பிரென்ட் தான் அவன் கிட்ட மாட்டிருக்காள்” என்று அசட்டையாகக் கூறியவனை முறைத்தவள், ‘நாசமா போறவனுங்க, இவனுங்கல்லாம் உருப்படவே மாட்டானுங்க’ என்று சற்று சத்தமாகவே முணுமுணுத்தாள்.
விஷ்வா, அதெல்லாம் கண்டுகொள்ளாமல், உச்சி வெயிலில் அவள் நெற்றியில் கோர்த்திருந்த வியர்வை துளிகள் மினுமினுப்பதை ரசனையுடன் பார்த்திருக்க, தமி, “நீ எடுக்க வந்தது முள்ளு! ஓவரா விடாத ஜொல்லு!” என்று கேலி செய்திட,
விஷ்வா உடனே, “கடல்ல இருக்குது மீனு! இதுக்கு இல்ல அவ்ளோ சீனு!” என்று அம்முவை காட்டிச் சொல்ல, அவள், “டேய்ய்…” எனப் பல்லைக்கடித்தாள். தமியோ, “ஹா ஹா… நம்ம காட்டுக்கு வந்தோம் கிளம்பி! நீ ஒரு உண்மை விளம்பி!” என்று அவள் பங்கிற்கு அம்முவை கிண்டலடித்து விஷ்வாவுக்கு ஹை ஃபை கொடுத்துக்கொள்ள, அம்மு கோபத்தில் சிவந்தாள்.
அருண், “போதும் நிறுத்துறீங்களா?” என்று சற்று கடுப்பாகி தமியை முறைக்க, அவளுக்கு அவனின் கோபம் கண்டு மனம் சிலிர்த்தது.
வைஷுவும், நிஷாந்தும், ஒருவரை ஒருவர் பார்வையாலேயே தீண்டிக்கொண்டு அமைதியாகவே இருந்தனர்.
பின் அனைவரும், மீண்டும் குடிலுக்குச் செல்ல, அங்கு புதிதாய் ஒரு பெண்ணைக் கட்டிப்போட்டிருப்பதையும், அவளுக்கு அருகில் இசை கன்னத்தில் கை வைத்து அமர்ந்து இருந்ததையும் கண்ட பெண்கள் திகைத்தனர்.
“இவனுங்க எதுக்கும் வொர்த் இல்லைன்னு பார்த்தா, இப்படி உண்மையிலேயே கடத்திட்டு வந்துட்டானுங்க… கடவுளே, இது எங்க போய் முடியுமோ?” என நால்வரும் நொந்து கொள்ள, வைஷு நிஷாந்தின் மேல் கொலைவெறியுடன் இருந்தாள். அவனிடம் தனியாகப் பேசத்தான் முடியவில்லை.
பின், அனைவரும் மதியம் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில், தமிக்கு போன் வந்ததில் அவள் “ஹாய் டார்லு, ஹவ் ஆர் யூ செல்லம்ஸ்?” என்று கொஞ்ச, அருண் அவளைக் காரமாய் முறைத்தான். எதிர்முனையில் போனை லௌட் ஸ்பீக்கரில் போடச் சொல்லி உத்தரவு வந்ததில், திரு திருவென விழித்தவள், ஆருவை பாவமாக பார்த்துக் கொண்டு லவுட் ஸ்பீக்கரில் போட்டாள்.
“ஏண்டி கூறு கெட்டவளே! ஊருக்குப் போனியே ஒரு போன் போட்டுச் சொல்லனும்னு கூறு இருக்கா கொஞ்சமாச்சும்? எதுக்குடி போனுண்ணு ஒன்னு வச்சிருக்க? அதுக்கு அடிச்சா ஏதோ பொண்ணு தான் ஏதோ பேசுது… ஏன் நீ எடுத்துப் பேசமாட்டியோ? வீட்டுக்கு வா! விளக்கமாத்தாலயே சாத்துறேன்…” என ஆராதனா ஊருக்கு வந்து சேர்ந்ததை போன் செய்து சொல்லவில்லை என்ற பதட்டத்தில் பர்வதம் அவளை வசவு பாட,
மற்றவர்கள் நமுட்டு சிரிப்புடன் பார்த்திருந்தனர். அருணுக்கு, அது ஆருவின் அம்மா என்று தெரிந்த பிறகு தான் இதயத்துடிப்பு சீரானது.
ஆருவோ காதைப் பொத்திக்கொண்டு, ‘ஹையோ இப்படி மானத்தை வாங்குதே இந்த அம்மா’ என்று நொந்தவள், “மா, என் போன் ஸ்விட்ச் ஆஃப்ல இருக்கு. அதான் பேச முடியல… இப்போ என்ன உனக்கு?” என்றிட, அவர், “எனக்கு ஒண்ணும் இல்ல. உன் அப்பா தான் புள்ளை போன் போடலைன்னு தவிச்சு போய்ட்டாக…” என்றார்.
“ஸ்ஸ் அப்பா எங்க மா?” என்று கேட்டவளிடம், பர்வதம், “ஆமா இப்ப வக்கணையா கேளு…” என மேலும் திட்டிட, பாண்டியன், “போதும் புள்ளைய வஞ்சுகிட்டே இருக்காத” என்று அதட்டிக் கொண்டு போனை வாங்கி பேசியதும், “சாரி பா… என் போன்ல சார்ஜ் இல்ல அதான்” என்று சமாளிக்க, “அட உனக்கு வேல கிடக்கும் புள்ள… அதான் நீ போன் போடலைன்னு சொன்னேன். உன் அம்மா தான் கேட்கல… நீ எப்படி இருக்கம்மா? அங்க எல்லாம் வசதியா இருக்கா?” என்று நலம் விசாரிக்கும்போதே, அவள் பாட்டி கண்ணம்மா போனை பிடுங்கி பேசினார்.
பின், அவளின் குடும்பத்திடமே கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் மாறி மாறிப் பேசிவிட்டு ‘அப்பாடா’ என்று போனை வைக்க, நிஷாந்தும், விஷ்வாவும் மனதில் தோன்றிய ஏக்கத்தை மறைத்துக்கொண்டு அங்கிருந்து சென்றனர்.
அம்மு வேறு அமைதியாக இல்லாமல் அருணிடம், “ஆமா… உங்க வீட்டுல உங்களை எல்லாம் தேட மாட்டாங்களா?
உங்க அப்பா அம்மாவுக்கு நீங்க செய்ற கடத்தல் தொழில் தெரியுமா?” என்று சற்று நக்கலுடன் வினவ, ஆரு, “அதெப்படி தெரியாம இருக்கும் அம்மு… தெரிஞ்சு தான், தண்ணி தெளிச்சு அனுப்பிருப்பாங்க. யாருக்கு தெரியும்? அவங்களுக்கும் ஷேர் குடுத்தாலும் குடுப்பானுங்க” என்று கேலியுடன் நகைக்க, அருண் அமைதியாக எழுந்து சென்றான். தேவா அருகிலிருந்த சேரை காலால் எத்திவிட்டு, ஆராதானவை கடுமையாக முறைத்து விட்டு, உள்ளே சென்றான்.
வைஷு தான், “அறிவிருக்கா உங்களுக்கு? எதுவும் தெரியாம எதுக்கு ரெண்டு பேரும் இப்படி பேசிட்டு இருக்கீங்க?” என சீற, ஆரு அவளை விழி உயர்த்திப் பார்த்தாள். தமி, “உனக்குத் தெரியுமா அப்போ? என்ன இருந்தாலும் அவனுங்க பண்றது தப்பு தான…” என்றதும்,
வைஷு, “தப்பு தான். அதுக்கு எதுக்கு அவங்க அப்பா அம்மாவை இழுக்குறீங்க?” என்று காட்டமாகக் கேட்டதில், ஆரு, “ப்ச் அம்மு! அவனுங்க அப்பா அம்மாவைப் பத்தி பேசுனா இவளுக்கு என்ன?” என்று மறைமுகமாக அதட்ட, வைஷு, “இறந்து போனவங்களை பத்தி எதுக்கு பேசணும்? அவங்க இருந்திருந்தா, இவனுங்களும் ஒழுங்கா தான் இருந்துருப்பாங்க” என்றதும் மற்ற மூவரும் அதிர்ந்தனர்.
அம்மு, “என்ன சொல்ற நீ?” என்று புரியாம வினவியதும், வைஷு, “ஆமா நாலு பேரும் சின்ன வயசுல இருந்து அநாதை ஆஸ்ரமத்துல தான் வளர்ந்தாங்க. ரொம்ப கஷ்டப்பட்டு வளர்ந்த பசங்க. ரொம்ப நல்ல பசங்களும் கூட..
ஆனால், திடீர்னு ஏன் இப்படி பண்றானுங்கன்னு எனக்கும் புரியல! நமக்கு லைஃப்ல ஈஸியா கிடைச்ச சின்ன சின்ன சந்தோசம் கூட அவங்களோட பல நாள் கனவா இருக்கும். இதெல்லாம் புரியாம…” என்று வருத்தத்துடன் பேசிட அம்முவுக்கும் தமிக்கும் என்னவோ போல் ஆகி விட்டது.
ஆரு வைஷுவை நேராகப் பார்த்து, “இதெல்லாம் எப்படி உனக்குத் தெரியும்?” என கண்ணைச் சுருக்கி கேட்க, அவள் வெலவெலத்து விட்டாள். ஏதோ ஒரு உணர்ச்சி வேகத்தில் உளறி விட்டாலும், இப்போது பழைய கதையைப் பற்றிப் பேச அவள் தயாராக இல்லை.
என்ன சொல்வது என்றறியாமல் திணறியவள், “அது ஹான்! அவங்க மட்டும் நம்மளை பத்தி டீடைல்ஸ் கண்டுபிடிச்சானுங்கள்ல அதான், நானும் அவங்களை பத்தி விசாரிச்சேன். நம்மளுக்கு அவனுங்களை பத்தி தெரியனும்ல அதான்” என்று வாய்க்கு வந்ததை உளறிவிட்டு அறைக்குள் புகுந்து கொண்டாள்.
தமி அருண் சென்ற திசையை பாவமாகப் பார்க்க, ஆரு ஏதோ யோசனையில் ஆழ்ந்தாள். அன்றையபொழுது, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக உணர்ச்சிக் கலவையில் கழிய, மறுநாள் காட்டுப்பாதையில் இருக்கும் முள்ளை அகற்ற கிளம்பினர்.
முந்தைய நாள் முழுதும் மயக்கத்தில் இருந்த நிஷிதா, அப்போது கண் விழித்துக் கத்த, தேவா அவள் அறைக்குச் சென்று அவளுக்கு மயக்க மருந்தைக் கொடுத்து விட்டு, வெளியில் வர, ஆரு அவனை ஒரு மாதிரியாகப் பார்த்தாள்.
அவன், அவளைக் கண்டு கொள்ளாது நிஷாந்திடம், “நீ இங்கயே இருந்து அவளை கேர்ஃபுல்லா பார்த்துக்கோ” என்றிட, அவன் வைஷுவுடன் செல்ல முடியாதேயென முகம் சுருங்கினான்.
அவனைப் பார்த்துக்கொண்டே வெளியில் சென்ற வைஷு, “ஸ்ஸ்ஸ் ஆ” என தலையைப் பிடித்துக்கொள்ள, அம்முவும் தமியும் பதறி, “என்னடி ஆச்சு” என்றனர். அவள் பதில் சொல்லும் முன், ஆரு “உங்க பிரென்ட்க்கு தலை வலிக்குது போல அம்மு, அவள் இன்னைக்கு வரலை ரெஸ்ட் எடுக்குறேன்னு சொல்லப்போறா.” என்றவளின், குரலில் என்ன இருந்தது என்று புரியாமல் வைஷு பேந்த பேந்த முழித்தாள்.
தமி, “அப்போ நீ ரெஸ்ட் எடுடி! நானும் கூட இருக்கவா?” என வெள்ளந்தியாய் கேட்க, வைஷு, “இல்ல வேணாம்…” என்று நெளிந்து கொண்டு ஆருவை பார்க்க, அவள் எகத்தாளமாகப் பார்த்தாள். அம்மு, “சரி நீ போ! நாங்க போய் வேலையைப் பார்த்துக்குறோம்.” என்று அவளை அனுப்பிட, மற்றவர்கள் முட்பாதையை நோக்கிச் சென்றனர்.
அந்த வீட்டினுள் நுழைந்த வைஷு, வேகமாக நிஷாந்தை தேடி அறைக்குள் சென்றாள். அவன் அங்கே இருந்த ஜன்னல் வழியே எங்கோ வெறித்துக் கொண்டிருப்பதை கண்டவள், அவன் செய்யும் வேலையைக் கண்டு ஏற்பட்ட கோபத்தை மறந்து, ஓடிச் சென்று அவனைப் பின்னிருந்து அணைத்துக்கொள்ள, முதலில் திகைத்தவன் பின், அது வைஷு என உணர்ந்து கொண்டு, திரும்பி அவளை நெஞ்சோடு இறுக்கிக்கொண்டான்.
இருவருக்கும் பேசுவதற்குக் கூட வார்த்தை வரவில்லை. எங்கே பேசினால்! இத்தவ நிலை கலைந்து விடுமோ? என அஞ்சி இருவரும் அந்தப் பேரமைதியை ரசித்தனர்.
இன்று தான் அந்த பாதையைக் கண்ட ஆரு, “மை காட். என்ன இது இப்படி இருக்கு?” என நொந்து கொண்டே வேலையைத் தொடர, கூடவே வைஷு பற்றிய சிந்தனையும் ஓடிக்கொண்டே இருந்தது. தமி மெதுவாக அருண் மற்றும் விஷ்வாவிடம், “சாரி நேத்து உங்க பேரெண்ட்ஸ் பத்தி பேசுனது தப்பு தான்.” என்றவள் விஷ்வாவிடம் “சாரி டி வி” என்றிட, அவன், “என்னது டிவி யா?” எனப் புரியாமல் கேட்டான்.
அவள், “ம்ம் நீ தான் டி ஆர் மாதிரி ரைமிங் ஆ பேசுரீல, அதான் டி ராஜேந்திரன் மாதிரி நீ டி விஷ்வா அதை சுருக்கி டி வி ஆக்கிட்டேன்…” என்றதும், அவன் மெலிதாக புன்னகைத்து கொண்டான்.
அருண், சாரி கேட்ட தமியையே பார்த்து, “நீ மட்டும் என்ன டி ஆர் க்கு தங்கச்சி மாதிரி தான் பேசுற… அப்போ உன் பேரை டி டி ன்னு மாத்திடலாமா?” எனக் கிண்டலடிக்க, அவள் நாக்கை துருத்தி அழகு காட்டினாள். அதில் ரசனையாகக் குறுநகையுடன் அவளைப் பார்த்தவன், அவள் ஏதோ ஒரு முள்ளைத் தொடப்போவதை கண்டு, “ஹே அதைத் தொடாத! அதுல ரொம்ப முள்ளா இருக்கு. கையில குத்திடும். நான் எடுக்குறேன்.” என்று அதனை அப்புறப்படுத்தப் போனான்.
“ஏற்கனவே உன் ஒரு கை டேமேஜ் ஆ தான் இருக்கு. எதுக்கு இந்த அட்வென்ச்சர்?” என்று நகைத்து விட்டு, முள்ளை எடுக்கப் போக சரியாக அது அவளின் கையைப் பதம் பார்த்தது.
அதில், “ஆஆ” என அலறியவளின் கையைப் பதட்டத்துடன் பிடித்தவன், “லூசு நான் தான் சொன்னேன்ல அதைத் தொடாதன்னு!” என்று விட்டு, பாதுகாப்புக்காகக் கொண்டு வந்த மருந்தையும் பேண்டேஜ்ஜையும் அவளுக்குப் போட்டு விட, ஆருவும் தேவாவும் அருணை ஒரு மார்க்கமாகப் பார்த்தனர்.
தமி அவளின் காயத்தைக் கண்டு பதறிய அருணின் பதட்டத்தில் உள்ளுக்குள் தோன்றிய ஒரு மின்சாரத்தை என்னவென்று, பிரித்தறிய இயலாமல் திணறினாள்.
பின், மேகம் வேறு கருக்க ஆரம்பிக்க, தேவா, “மழை வர்ற மாதிரி இருக்கு திரும்பப் போயிடலாம்…” என்றதும், ஆருவும், ‘இதுங்களை ஆராய்ச்சி பண்ண கூட்டிட்டு வந்தா என்ன பண்ணிகிட்டு இருக்குங்க?’ என்ற குழப்பத்தில் இருந்ததில் அதற்கு மறுப்பு சொல்லவில்லை.
பின்னால் மெதுவாக நடந்து வந்த அம்முவை ஒட்டி வந்த விஷ்வாவிடம் “நீ முன்னாடி போ! ஏன் என் கூட நடந்து வர்ற?” என்று முறைப்பாகக் கேட்டவள் மனதில் அவன் ஜொள்ளு என முத்திரை குத்தி இருக்க, விஷ்வா, “அமுதா… அன்னைக்கு நான் வளையல் கொண்டு வந்து குடுத்ததும், உன் முடி பத்தி பேசுனதும் தப்பு தான். ஆக்சுவலா என் அம்மாவுக்கு உன்னை மாதிரி நீள முடி இருக்குமா… அதான் நான் உன் முடியவே பார்த்துட்டு இருந்தேன். என் அம்மாவுக்கு நான் தான் வளையல் வாங்கி குடுப்பேன். நீ, நான் பார்த்ததும் வளையல் வாங்காம போயிட்டீயா… அதான், நான் எதுவும் யோசிக்காம அப்படி வந்து சட்டுன்னு வளையல் குடுத்துட்டேன். அப்பறம், என் ஃப்ரெண்ட்ஸ் தான் ஒரு பொண்ணு கிட்ட போய் வளையல் குடுத்தா, அவள் தப்பா நினைப்பான்னு சொன்னாங்க. அப்போ தான் எனக்கே புருஞ்சுது சாரி” என்று, கூற வேண்டும் என்று நினைத்ததை கூறி விட்டு, அவள் பதிலை எதிர்பாராமல் அவளைத் தாண்டி நடக்க, அம்மு அசையக் கூடத் தோன்றாமல், மனம் ஏன் இப்படி வலிக்கிறது? எனப் புரியாமல், அந்த இடத்திலேயே உறைந்து நின்றிருந்தாள். தேவா வேக வேகமாக நடக்க, ஆரு அவனின் வேகத்திற்கு ஈடு கொடுத்து நடந்து, “உனக்கு எப்படி எங்களைப் பத்தி தெரிஞ்சுது…? நீ சி ஐ டி யா?” எனக் கேட்டாள் குழப்பமாக. அதற்கு அவன் அவளை மேலும் கீழும் பார்த்து விட்டு, அமைதியாக நடக்க,
அவளோ விடாமல், “ஒரு வேளை, நீ போலீஸா? அண்டர் கவர் ஆபரேஷன்ல இருக்கியா? உன் கூட இருக்குறவனுங்க எல்லாம் உன் அசிஸ்டன்ட்டா?” என்று கேட்க, அவன் “என்னடி வேணும் உனக்கு இப்போ? மூடிக்கிட்டு நடடி” என்று கடுப்படித்தான்.
அவள் சிறிது நேரம் மௌனமாக இருந்து விட்டு, “ஹான் நீ இன்டெலிஜெண்ட் பியூரோ தான?” என்று எதையோ கண்டுபிடித்த மிதப்பில் கேட்க, “இல்ல, இரும்பு பீரோ… பேசாம வந்துரு” என பல்லைக்கடித்துக் கொண்டு சொல்லி விட்டு நடந்தவனிடம்,
அவள் “ப்ச், இப்போ நீ சொல்லப் போறியா இல்லையா? எனக்குத் தெரிஞ்சே ஆகணும்” என்று உறுதியாக நின்றாள்.
“இப்போ என்ன? நான் யாருன்னு தெரியணும் அவ்ளோ தான? என்றவன், அவன் ஷோல்டர் பேகில் இருந்த ஒரு பேப்பரை எடுத்து அவளிடம் காட்டி, “போலீஸ் தேடுற வான்டெட் லிஸ்ட்ல நான் இருக்கேன்… என்னை எல்லாரும் வலை வீசித் தேடிகிட்டு இருக்காங்க போதுமா?” என்று விட்டு,
“இந்நேரம் உன்னை நான் கடத்தி ஏதாவது பண்ணிருந்தா இந்த டவுட் வந்துருக்காதுல உனக்கு? உன்னை சும்மா விட்டுருக்கேன்ல என்னை சொல்லணும். உடனே போலீசாம் சிஐடி யாம்?” என்றதும்,
அவள், “சே உண்மையிலேயே நீ அக்கியூஸ்ட் தானா? உன்னை போய்ப் பெரிய ஆபிசர்ன்னு நினைச்ச என் புத்தியை செருப்பாலேயே அடிக்கணும்.” என்று நொந்து விட, “உன் கால்ல இருக்குல்ல எடுத்து அடிச்சுக்க” என்று நக்கலாகச் சொன்னதில், அவனைத் தீயாக முறைத்தவள், விறுவிறுவென நடக்க ஆரம்பித்தாள்.
“மாமா, என்னால தான , உனக்கு அவ்ளோ கஷ்டம், அவமானம் எல்லாம்? சாரி மாமா” எனக் கலங்கிய குரலில் வைஷு பேச, அவளின் ‘மாமா’ என்ற அழைப்பில் தீச்சுட்டாற்போல் அவளிடமிருந்து விலகியவன், “என்னை அப்படி கூப்பிடாத. நான் உனக்கு மாமா இல்ல” என்றவனை பார்த்து, “என் மேல கோபமா மாமா?” எனக் கேட்டாள் பாவமாக.
அவன் “கோபம் தான் வைஷு. என் மேலயே எனக்குக் கோபம். நான் செஞ்ச பாவம் தான் என்னை இன்னும் நிம்மதியா தூங்க விட மாட்டேங்குது. நான் பட்டது வரை போதும் வைஷு. என்னோட சேர்த்து என் பிரெண்ட்ஸையும் தினம் தினம் கஷ்டப்படுத்திட்டு இருக்கேன். இன்னும், அவங்களுக்கு அவமானத்தைத் தேடி தர நான் விரும்பல…
நீ என் லைஃப் ல இருந்து எப்போவோ போய்ட்ட வைஷு, அப்படியே போய்டு.” என்று கண் கலங்க சொன்னவனின் கன்னத்தில் ஆருவின் ஐந்து விரல்களும் பதிந்தது அவள் பளாரென அறைந்ததில்.
