Loading

அத்தியாயம் 7

ஒரு மாத காலம் பரபரப்பாகவே கழிந்தது.

செயற்கை நுண்ணறிவுக்கான கருவிகள் தயாரிக்கும் தொழிற்சாலையை வழக்கம் போலக் கவனித்துக் கொண்டிருந்தான் நிவேதன்.

கிட்டத்தட்ட 100 டன் அளவிலான உற்பத்திகளை முடிக்க வேண்டிய கட்டாயம்.

முதல் கட்டமாக உற்பத்திகள் தொடங்கி, அந்தக் கருவிகளை வாஷிங் மெஷினில் பொருத்திச் சோதித்தனர்.

நன்றாக வேலை செய்து கொண்டிருந்த கருவி, தனது வேலையை முடித்துக் கொள்ள கதிரவன் பீதியாகி விட்டான்.

“இன்னாடா, இது வேலை செய்யல…”

நிவேதனோ, சற்றே சிந்தித்து விட்டுச் சோதனை மேலாளர் ரவியிடம், “இது டாப் லோடுக்காக டிசைன் பண்ணுனது தான? இதை ஏன் ஃப்ரண்ட் லோட் வாஷிங் மெஷினுக்குப் போட்டிருக்கீங்க?” எனக் கேள்வி கேட்க, ரவியும் விழித்தான்.

அலுவலகத்தில் பல பேருக்கு நிதர்ஷனா, கண்மணியைத் தவிர மற்றவர்களைத் தெரியவில்லை. அதிலும் நிவேதனும் இறங்கி அலுவல் வேலையைச் செய்வதாலும், சாதாரண உடை அணிவதாலும் மற்றவர்களுக்குப் பெரிய அபிப்ராயம் இல்லை.

“தினமும் கோர்ட்டு சூட்டு போட்டுட்டு என்னால வேலை பார்க்க முடியாது. இந்த ப்ராஜெக்ட்டை நல்லபடியா முடிச்சுட்டு அப்புறம் கோர்ட்டு போட்டுக்குறேன்.” என அண்ணாமலை ரஜினி தோரணையில் சவால் விட்டவனை யாஷ் பிரஜிதன், “போய் தொலை!” என்ற ரீதியில் பார்த்திருந்தான்.

இப்போதோ அந்த மேலாளரிடம் கேள்வி கேட்ட நிவேதனிடம், “சார் எந்த டூலை எதுல போட்டு டெஸ்ட் பண்ணனும்னு எனக்குத் தெரியும். எனக்கு இங்க பத்து வருஷ எக்ஸ்பீரியன்ஸ் இருக்கு.” என்றான் குரலை உயர்த்தி.

இதற்கெல்லாம் கவுரவம் பார்க்காத நிவேதன், “இல்லைங்க சார்… இதை நீங்க டாப் லோட் வாஷிங் மெஷின்ல போட்டுப் பாருங்களேன். கண்டிப்பா வேலை செய்யும். ப்ரண்ட் லோடுக்கு வேற ஏதோ செட்டிங்ஸ் மாத்தி யூஸ் பண்ணனும்னு யாஷ் சார் சொல்லிருந்தாரு…” என்றவனும் அவனது தமிழ் மொழியில் ட்ரான்ஸ்லேட் செய்யப்பட்ட கோப்பை அறையில் விட்டு வந்திருந்தான்.

கதிரவன், “அந்த ஃபைலை எடுத்துட்டு வரவா நிவே…” எனக் கேட்க,

“சரி” எனத் தலையசைத்த நிவேதன் ரவியிடம் திரும்பி, “எனக்குக் குடுத்த ஃபைல்ல எல்லாமே தெளிவா இருந்துச்சு ரவி. நீங்க ஒரு தடவை கோ த்ரூ பண்ணுங்க…” என்றதில்,

“இதோ பாருங்க, நீங்க எனக்கு ஆர்டர் போடாதீங்க புரியுதா? இங்க டெஸ்டிங் டீம் மேனேஜர் நான் தான்…” என்றான் ரவி.

“சரி தாங்க சார். ஆனா, இதுல மிஸ்டேக் இருக்குன்னு தான்…” நிவேதன் பேசும் முன்னே கதிரவன் ஓடிச் சென்று கோப்பை எடுத்து வந்திருந்தான்.

அதில் தமிழ் மொழியில் விவரங்கள் இருந்ததைக் கண்டு ரவியின் முகம் அஷ்ட கோணலாகியது.

“இது டாப் க்ளாஸ் ப்ராடக்ட். இதை இங்கிலீஷ்ல எக்ஸ்ப்ளெய்ன் பண்ணுனாலே புரிஞ்சுக்கறது கஷ்டம். இதுல தமிழ்ல அரைகுறையா படிச்சுட்டு வந்து என் டைமை வேஸ்ட் பண்ணாதீங்க…” என்று சீறிய ரவியை முறைத்தான் கதிரவன்.

“தேவையில்லாமல் பேசாதீங்க!” என்றவனுக்கும் நிவேதனை அவன் குறைவாய் நடத்தியது பிடிக்கவில்லை.

நிவேதனுக்கு இது பழகிப் போனது தான்.

அதனால் இந்த மரியாதையின்மையை அவன் தலையில் ஏற்றவில்லை.

“உங்க டைமை வீணாக்குறது என் எண்ணம் இல்ல சார். இது கரெக்ட்டா ஒர்க் ஆகணும். இல்லன்னா இந்த டூல் உற்பத்தி ஆக லேட் ஆகும்.” எனப் பொறுமையாய் விளக்கச் சற்று நேரத்தில் அந்த இடமே பரபரப்பானது.

“குட் மார்னிங் சார்…” என்ற குரல் அதிக அளவில் கேட்க, அழுத்த நடையுடன் புயல் வேகத்தில் அவர்களை நெருங்கி இருந்தான் யாஷ் பிரஜிதன்.

அவனைக் கண்டதும் ரவி பவ்யமாய், “குட் மார்னிங்” சொல்ல, அவனுக்குச் சிறு தலையசைப்பைக் கொடுத்தவன் “வாட் ஹேப்பண்ட்?” என்று நிவேதனை நோக்கிக் குளிரூட்டும் ஊடுருவலுடன் கேட்டான்.

நிவேதனுக்கு அவனது கடுமையில் முகம் வாடிப் போக, மெல்லமாய் நடந்ததை எடுத்துரைத்தவன், “ஆனா நான் படிச்ச வரையில ஃப்ரண்ட் லோட் மெஷினுக்கு வேற செட்டிங்ஸ் பண்ணனும் சார்…” என்றவன் மற்றவர் முன்பு அவனை சார் என அழைப்பதை வழக்கமாக்கி இருந்தான்.

பின் அவனே வேகமாய் அந்தக் கோப்பில் இருந்த விளக்கத்தைப் படித்து விட்டு ஏதோ வேலை செய்திட, அந்தக் கருவி வாஷிங் மெஷினில் அழகாய் செயல்பட்டது.

ரவியோ, “சார், இந்த செட்டிங்ஸ் ஒவ்வொண்ணையும் நம்ம கஸ்டமருக்குப் பண்ணச் சொல்ல முடியாது.” என ஆங்கிலத்தில் உரைக்க,

நிவேதனோ அது புரியாமல் விழித்தான்.

ரவி, நிவேதனை ஒரு பொருட்டாக மதியாமல் யாஷிடம், “இதைப் பத்தி முழுசா தெரிஞ்சவங்க ஹேண்டில் பண்ணுனா பெட்டரா இருக்கும் சார்…” என்று பணிவாய் கூறிட, கதிரவனுக்கு அவன் கூறியதைக் கேட்டு எரிச்சல் மண்டியது.

“ஓ! ஃபைன்” எனத் தாடையைத் தடவிய யாஷ் பிரஜிதன், “தென் யூ கேன் லீவ்” என எளிதாய் உரைத்து விட்டு நிவேதனிடம் தமிழில் உரைத்தான்.

“டெஸ்ட்டிங்ல என்ன என்ன ஃபால்ட் இருக்குனு ஒரு ஃபைல் ரெடி செஞ்சு எனக்குக் குடு நிவே… அதை கரெக்ட் செஞ்சு, மேற்கொண்டு ப்ராடக்ட் பண்ணிக்கலாம்.”

“ஆனா ப்ராடக்ட் ஸ்டாப் பண்ண வேணாமே சார். இது டாப் லோட்ல வேலை பார்க்குதே… ஃப்ரண்ட் லோடுக்கு மட்டும் நம்ம சின்ன ஆல்ட்ரேஷன் செஞ்சுக்கலாம்…” என விளக்கம் கொடுக்க, “ஓகே கன்டின்யூ பண்ணிக்கோ…” என்றவன் யாஷைத் திகைத்துப் பார்த்திருந்த ரவியிடம், “ஐ செட் யூ கேன் லீவ் ரைட் நொவ்…” என்றான் அழுத்தம் திருத்தமாக.

“சார் சார்… நான் என்ன பண்ணேன் சார்” என்று பதறித் தமிழில் பேச,

“ஓ! உனக்குத் தமிழ் தெரியுமா? ஃபைன்… நீ வேலையை விட்டுட்டுக் கிளம்பலாம்… த்ரீ மந்த்ஸ் சாலரி உனக்கு க்ரெடிட் ஆகிடும்.” என அசட்டையாய் கூற நிவேதன் திகைத்தான்.

ரவி தான், “ஆனா சார், நான் எதுவுமே பண்ணல.” எனப் பதறிட,

“தி கிரேட் எலைட் கம்பெனியோட ஒன் ஆஃப் தி ஃபியூச்சர் சேர்மனை மரியாதைக் குறைவா பேசுனதுக்குக் கிடைச்ச தண்டனை. டோன்ட் ஜட்ஜ் தி புக் பை இட்ஸ் கவர்…” எனக் குளிர் கண்ணாடியை மாட்டிக் கொண்டு விறுவிறுவென அங்கிருந்து நடந்தவனைத் தொழிற்சாலையில் இருந்த அனைவரும் உறைந்து பார்த்தனர்.

கூடவே நிவேதனைப் பார்த்த பார்வையில், மிரட்சியும் மரியாதையும் கூடி இருக்க ரவியோ நொந்து போனான்.

“சார், நீங்க யார்னு முன்னாடியே சொல்லிருக்கலாம்ல…” என அழுதே விட்டதில் நிவேதனுக்குச் சங்கடமாகிப் போனது.

“சாரி சார்… என்னால உங்களுக்குக் கஷ்டம்…”

“அய்யோ சார், நீங்க சாரி சொல்லி பிளாக் மார்க்கோட என்னை அனுப்பி வச்சுடாதீங்க.” என மிரண்டு சென்றவனைப் பரிதாபமாகப் பார்த்தான் நிவேதன்.

கதிரவனுக்கு மனத்தில் இருந்த பாரமே இறங்கிய நிலை.

இந்த விஷயம் அலுவலகம் முழுக்கக் காட்டுத் தீயாய் பரவிட, கண்மணிக்கும் குஷியாக இருந்தது.

மதிய உணவு வேளையில் ஐவரும் ஒரு அறையில் கூடி இருக்க, நிவேதன் புலம்பித் தள்ளினான்.

“உன் புருஷன்காரன் ஏன் இப்படி இருக்கான் நிதா… அசால்ட்டா வேலையை விட்டுத் தூக்குனா, அவங்க குடும்பம் எவ்ளோ கஷ்டப்படும்…” என வருந்திட,

நிதர்ஷனாவோ, “அதான் மூணு மாச சம்பளம் குடுத்து இருக்காருல நிவே. அவர் எது செஞ்சாலும் ஒரு காரணம் இருக்கும்.” எனத் தீர்க்கமாக கூறி விட்டு அங்கிருந்து நகர, கதிரவனும் வெளியே சென்றதில் அவனைப் பின் தொடர்ந்து சென்றாள் சிந்தாமணி.

அங்குக் கண்மணியும் நிவேதனும் மட்டுமே எஞ்சி இருக்க,

“உங்களை மரியாதை இல்லாமல் பேசுனதுனால தான, அண்ணா அப்படி செஞ்சாங்க…” என்றாள் கண்மணி.

“மரியாதை எல்லாம் நம்ம கேட்டு வாங்க முடியாது கண்மணி… அது தானா தான வரணும். தானா வர்ற மாதிரியான சூழ்நிலைல நான் வளரல… வெறும் வரதராஜனோட பையன்ற அடையாளம் எனக்கு வேணாம். அந்த மரியாதையும் எனக்கு வேணாம். எனக்குப் பிடிக்கல கண்மணி அவன் பண்றதே!” என்றவன் வசமாய் மறந்து போனான், யாஷ் பிரஜிதனின் மச்சான் என்ற உறவில் அவன் இருப்பதை.

“கேட்டு வாங்குறதுல என்ன தப்பு இருக்குங்க. அதுவும் நீங்க அந்த இடத்துல எல்லாம் சரியா பேசி இருக்கும்போது, அந்த மேனேஜர் உங்களை மட்டம் தட்டுறது தப்பு தான?”

“அதுக்காக வேலையை விட்டுத் தூக்கணும்னா, இந்த ஆபிஸ்ல முக்கால்வாசி பேரைத் தூக்கணும். நான் வச்சுருக்குற தமிழ் ஃபைலையும், என்னையும் கேவலமா பாக்குற ஆள்கள் தான் இங்க அதிகம் கண்மணி.”

“அப்படிப் பார்க்குறது தப்புன்னு தான அண்ணா அவரை வேலையை விட்டுத் தூக்குனாரு. இதே மாதிரி மத்தவங்க பண்ண மாட்டாங்கள்ல…”

“ம்ம்!” என்றவனுக்கு முழுச் சமாதானம் அடையவில்லை மனம்.

அவனது திடுக்கிடும் முடிவுகளை உள்வாங்கவே அவனுக்கு நேரம் தேவைப்பட்டது. அதில் கொட்டிக் கிடக்கும் அன்பை அவன் உணரும் காலமும் வருமென்று அறியாது போனான் நிவேதன்.

———

“ஹலோ கதிர்…” முன்னே சென்றவனைத் தடுத்து நிறுத்தியது சிந்தாமணியின் குரல்.

“வந்துட்டா…” என முணுமுணுத்தபடி திரும்பிய கதிரவன், ‘என்ன’ எனப் பார்க்க, “என்னை உங்க வீட்டுக்கு எப்ப கூட்டிட்டுப் போறீங்க?” எனக் கேட்டாள் புருவம் உயர்த்தி.

“நாளைக்கு சண்டே தான. நாளைக்கே போகலாம்…” வெகு கனிவாய் கூறியதில் சிந்தாமணிக்குக் குதூகலம் தாளவில்லை.

அப்போதிருந்தே மறுநாளைக்காகக் காத்திருக்கத் தொடங்கினாள்.

அன்று இரவு, யாஷ் பிரஜிதனின் பங்களா மொட்டை மாடியில், தண்ணீர் தொட்டிக்கு மேலே காலைத் தொங்கப் போட்டு அமர்ந்திருந்தனர் நிவேதன், கதிரவன், நிதர்ஷனா மூவரும்.

கதிரவன், “நிதா, நாளைக்கு நான் வீட்டுக்குப் போயிட்டு வரேன். என் அம்மா என்ன ஆட்டம் ஆடப் போகுதோ தெரியல…” எனப் பயத்துடன் உரைக்க,

நிவேதனும் தீவிரத்துடன், “யாஷ் குடுத்த கடனையும் அடைக்கணும்.” என்றான்.

அதில் கதிரவன் அவனை முறைக்க, “அதில்லடா… எனக்கு இது ஒரு உறுத்தலா இருக்கும். என் தங்கச்சியை முறைப்படி கல்யாணம் பண்ணிக் குடுக்கணும்ல!” என்றவன், “ஆமா இங்க வந்ததும் கோவில்ல கல்யாணம் வைக்கலாம் சொன்னாங்களே ஆதி அத்த… அது என்னாச்சு?” எனக் கேட்டான்.

நிதர்ஷனாவோ, “ஏன்டா, ஆல்ரெடி எனக்கும் அந்த அரக்கனுக்கும் தான் கோவில்ல கல்யாணம் ஆகிடுச்சே. அதுவும் இல்லாம, எதுவா இருந்தாலும் அஞ்சு மாசம் போகட்டும்னு சொல்லிருக்காரு.” என்றாள்.

“ம்ம்… நாளைக்குக் கதிர் கூட நம்மளும் வீட்டுக்குப் போயிட்டு வருவோமா நிதா?” எனக் கேட்டதில், “போலாமே…” என்றாள் ஆர்வமாக.

கதிரவனோ மெல்லமாக, “சிந்தாவும் வரேன்னு சொன்னா…” என்றிட,

விஷயம் அறியாத நிதர்ஷனா, “சூப்பர்… அப்படியே கண்மணியையும் கூட்டிட்டுப் போலாம்.” என்றாள்.

நிவேதனோ, “அங்க எப்படிக் கூட்டிட்டுப் போறது?” எனத் தயங்கிட, அதனைக் கவனியாத நிதர்ஷனா தாவிக் குதித்து மொட்டை மாடியை அடைந்து கீழே இறங்கப் போக, படிக்கட்டின் வாசலில் யாஷ் நின்றிருந்தான்.

“ஏன், தண்ணித் தொட்டில இருந்து குதிக்கிற? அப்படியே கிரௌண்ட் ப்ளோர்க்கு குதிக்க வேண்டியது தான?” எனக் கொதித்து எழ,

அசடு வழிந்தவள், “உன்னைப் பார்க்க வந்தேனா, அதான் கண்ணு மண்ணு தெரியாம குதிச்சுட்டேன்.” எனக் குழைந்தாள்.

அவனது கோபம் நொடியில் மறைந்து விட்டாலும், குரங்கு போல அடுத்தடுத்துக் குதித்த நிவேதனையும், கதிரவனையும் கடுமையாய் முறைத்தவன், “டெரஸ்க்கு வர்றது இதான் லாஸ்ட்! ரூமுக்குப் போங்க” என்று அதட்டிட இருவரும் விழுந்து அடித்துக் கீழே இறங்கி விட்டனர்.

நிதர்ஷனா உர்ரென்ற முகத்துடன், “மொட்டை மாடிக்குக் கூட வரக் கூடாதாக்கும்.” என முணுமுணுக்க,

“அறிவிருக்கா? டாஞ்சூர்ல இப்படித் தான பால்கனில நின்னதுக்கே உன்னை ஷுட் பண்ண வந்தாங்க. அதே மாதிரி எந்த டெரஸ்ல எவன் கன்னோட நிக்கிறான்னு யாருக்குத் தெரியும்?” என்றான் கோபமாய்.

“ஆமால்ல…” எனக் கண்ணைச் சிமிட்டியவள், “ஆனா நீ இருக்கும்போது எவன் வரப் போறானாம்…” என்று அவனது கன்னம் தடவிட, அதில் புன்னகைக்கத் துடித்தது அவன் இதழ்கள்.

“ஐஸ் வைக்காம இந்தப் பாலைக் குடி!” என கிளாஸை நீட்ட, மீண்டும் கோபப்பட்டு விடுவானோ என்ற பதற்றத்தில் கேள்வி எழுப்பாமல் பாலைக் குடித்து விட்டாள்.

மேலுதட்டில் பாலின் நுரை தங்கி இருக்க, கட்டை விரலால் அதனை வருடி விட்டவன், முத்தத்தால் இதழைச் சுத்தம் செய்திடச் சிவந்து போனாள் நிதர்ஷனா.

“அரக்கா, நீ ரொம்ப டூ மச்சா போற?” அவள் சிணுங்கியதில், கண்ணோரம் சுருங்க நகைத்தான்.

“இப்படியே சிரிச்சே மயக்கிடு அரக்கா!” இடுப்பில் கையூன்றி முறைத்தவள், “கேட்கணும்னு நினைச்சேன் யாஷ். அந்த நாலாவது ஆள் பத்தி எதுவும் தெரிஞ்சுதா?” எனக் கேட்டாள்.

“தெரிஞ்சுடும் நிது!”

“நீலி மாமா எதுக்காக என்னையும், நிவேவையும் தனியா தங்க வச்சாருன்னு காரணம் தெரிஞ்சுதா?”

“கூடிய சீக்கிரம் தெரிஞ்சுடும்!”

“ப்ச்… அடப் போ யாஷ். எவ்ளோ நாளைக்கு இப்படி மறைஞ்சு மறைஞ்சு ஸ்ட்ரிக்ட்டா இருக்குறது.”

“கொஞ்ச நாள் தான்டி. அப்புறம் நீ ஃப்ரீ பேர்டா, தண்ணித் தொட்டிக்கு மேல லேடர் போட்டு வானத்துல கூட ஏறிக்கோ!” எனக் குறும்பாய் கூறிட,

“கூடவே இந்த அரக்கனையும் கூட்டிட்டுப் போயிடுவேனே…” அவனது வயிற்றைக் கட்டிக் கொண்டு கூறியவளை அப்படியே தூக்கிக் கொண்டு கீழே சென்றான்.

இருவரது தேகமும் இடைவெளியின்றி உரசிக் கொள்ள, இறுகிய அணைப்பில் புதைந்தனர்.

பின் அவளே லேசாய் விலகி, “நாளைக்கு நான் என் வீட்டுக்குப் போயிட்டு வரட்டா நிவே கூட” என்றதும்,

“இது யார் வீடு அப்போ?” என ஒற்றைப் புருவம் உயர்த்தினான் ஆடவன்.

“இல்ல இல்ல… அது… பழைய வீட்டுக்கு.” என்றாள் வேகமாக.

“ஃபார் வாட்?” (எதுக்கு)

“சும்மா தான். அங்க போகவே இல்லைல. அங்க பொருள் எல்லாம் வீணாகிடும். கதிரு அம்மா வேற எங்களைக் காணாம கடுங்கோபத்தில இருக்கும். அதான்…”

“நோ நீட்! அங்க திங்ஸ் எதுவும் எடுக்கணும்னா, நிவேவை எடுத்துட்டு வரச் சொல்லு, ஓகே” என்று அவள் கன்னம் தட்டி விலகிட,

“நானும் போயிட்டு வர்றேனே யாஷ், ப்ளீஸ்!” எனக் கெஞ்சியதில், தனது ஐபாடில் புதைந்து கொண்டவன், “நோ ஆலம்பனா!” என மெதுவாய் மறுத்தான்.

“ப்ச்… நிவே கூடத்தான போறேன்.”

இம்முறை கனிவற்ற விழிகளை நிமிர்த்தியவன், “ஐ செட் நோ!” என்று அழுத்தம் திருத்தமாய் கூறியதில், அவளது மலர்முகம் கூம்பி விட்டது.

“உங்கிட்டப் பேச மாட்டேன் போ!” நொடித்துக் கொண்ட நிதர்ஷனா, “ஆலம்பனா…” என செயற்கை நுண்ணறிவை அழைக்க, அதுவோ அமைதியாய் காட்சியளித்தது.

“உன் ஆலம்பனாவையும் டென்சன் பண்ணிட்டியா அரக்கா? பேசாம இருக்கு.”

நிதர்ஷனாவின் கேள்வியில் குறுநகை சிந்தியவன், “என் ரூம்ல ஒரு ஆலம்பனா தான் இருக்கணுமாம். அது என் ஆலம்பனா’ஸ் விஷ்!” எனத் தலை சாய்த்துக் கூறியதில், சின்னக் கோபம் கூட விடைபெற்று நடைப் பயணம் மேற்கொள்ள, அவளது சின்னஞ்சிறு இதயத்தில் தினம் தினம் அழியாக் காதலாகிப் போனான் யாஷ் பிரஜிதன்.

கூடிய விரைவில் அவளே அழிக்கப் போகிறாளென்ற நிதர்சனம் அறியாதவளாய்!

அரக்கன் தொடரும்
மேகா

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 64

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
8
+1
60
+1
3
+1
2

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

3 Comments

  1. Nitha thalaila potta injection edho side effect aagiduchu pola..adhan yash avala rombha strict aa parthukkaran