Loading

     பலகணியில் நின்று எங்கோ வெறித்து பார்த்திருந்த அகவழகியின் பின் ராம்குமார் கவலை இழையோடும் முகத்தோடு வந்து நின்றான். 

 

     “அழகி!” என அவன் அழைத்தபோது தான் அவன் வந்திருப்பதையே உணர்ந்தாள். ஆனால் திரும்பாது வெறித்த பார்வையுடனே நின்றாள்.

 

    “அழகி! எனக்கு உன் கவலை புரியுது மா. எனக்கும் கதிர் பண்றதெல்லாம் பிடிக்கவேயில்ல. நானும் நீ எங்ககிட்ட வந்த ரெண்டு வருஷமா பார்த்துக்கிட்டு தான் இருக்கேன். அதிரனுக்கு எதோ பிரச்சனை இருக்கு அதை நீ சரி பண்ண முயற்சி பண்ணிக்கிட்டு தான் இருக்க. என்னனு கேட்டா எங்ககிட்டயும் சொல்ல மாட்டேங்கிற. கதிர் அவன் பிரச்சனைய சரி பண்ண ட்ரை பண்றான். அதனால தான் அமைதியா இருக்கேன். இல்லனா உனக்கு விருப்பம் இல்லனு தெரிஞ்சும் உன்னையும் அதிரனையும் தொந்தரவு பண்றதுக்கு நானே அவன அடிச்சு கைக்கால முறிச்சுருப்பேன். இன்னைக்கு அவன் பண்ண ஏற்பாடு உனக்கே தெரியாதுனு நீ வந்தப்போ உன் முகத்துல இருந்த அதிர்ச்சிய வச்சு தான்மா தெரிஞ்சுக்கிட்டேன். அப்படியிருந்தும் ஏன் நான் கதிர கண்டிக்காம இருந்தேன்னா அதிரன் அவ்வளோ சந்தோஷமா இருக்கான். அந்த ஒரு காரணத்துக்காக தான் அமைதியா இருந்துட்டேன். அதிரன இப்ப பார்க்கும்போது சீக்கிரமே அவன் சரியாகிடுவான்னு தோனுது. நீ கவலைப்படாம இரு அழகி! இது உன் வாழ்க்கை இதுல உன் விருப்பம் தான் முக்கியம். கதிர பத்தி நீ என்ன முடிவெடுத்தாலும் ஒரு அண்ணனா நான் உன் பக்கம் தான் இருப்பேன்றத மறந்துராத. நான் உன்னை வாய் வார்த்தைக்காக அண்ணனு கூப்பிட சொல்லல. உன் மேல உன் வாழ்க்கை மேல எனக்கு அக்கறை இருக்கு. நீ என்னை அண்ணனா நினைச்சாலும் நினைக்காட்டாலும் நீ என் தங்கச்சி தான். இந்த தங்கச்சிக்கு எப்பவுமே இந்த அண்ணனோட சப்போர்ட் இருக்கும் அழகி!” என வெகு நாட்களாக தான் அழகியிடம் கூற நினைத்ததை கூறினான்.

 

     அவன் கூறியதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்தவள் திரும்பி அவனை கண்ணீர் நில்லாமல் வழிந்துக் கொண்டிருந்த கண்களால் நன்றியோடு பார்த்தாள். அவளின் அழும் முகத்தை பார்க்க சகியாதவன் அவளின் கண்ணீரைத் துடைக்க, கண்ணீர் துடைத்த கையில் முகம் புதைத்து குலுங்கி குலுங்கி அழுதாள். அழும் அழகி ராம்குமாருக்கு முற்றிலும் புதியதாக தெரிந்தாள். அவளை அறிந்த இந்த இரண்டு ஆண்டுகளில் அவள் அழுது அவன் பார்த்ததே இல்லை. எப்பொழுதும் அவளிடமிருக்கும் துணிவு இப்பொழுது இல்லை. 

 

       ஆறுதலாக பற்ற ஒரு கரம் நீளாதா என ஏங்கும் மனம் எத்துணை திடமாக இருப்பினும் அக்கரம் கிட்டிய வேளையில் தாய் மடி கண்ட சேயாய் மாறிடும். அப்படி ஒரு நிலையில் தான் அகவழகி இருந்தாள். ராம்குமாரின் சொற்கள் இரண்டு ஆண்டுகளாய் கவனிப்பாரற்று இருந்த இரணத்தை ஆதுரமாக வருடிடவும் தனக்கு யாருமில்லை என்ற ஏக்கம் உடைந்து அழுகையாய் உருமாறியிருந்தது அகவழகிக்கு! 

 

      அவளது அழுகையே அகத்தின் துயரை எடுத்துரைக்க, வலி தீர அழட்டும் என்று மௌனமாக நின்றிருந்தான் ராம்குமார். சில நிமிடங்களில் அழுகை கேவலாக மாற, ராம்குமாரின் கை ஆதரவாக அவள் தலையை வருடின. அழுததினால் மனம் சற்று அமைதியடைய, தன்னை நிதானப்படுத்திய அழகி நிமிர்ந்து கண்ணீரை துடைத்தவாறே,

 

    “ரொம்ப நன்றி அண்ணா! உங்க வார்த்தை போதும். யாருமே இல்லாம தான் நானும் அதியும் இங்க வந்தோம். எங்களுக்கு இருக்க இடமும் பொழைக்க ஒரு வேலையும் தந்தீங்க. ஆனா இப்போ எங்களுக்கு ஒரு உறவா மாறி நிக்கிறீங்க அண்ணா! அண்ணி, அப்பா, கவி பாப்பா, நிரஞ்சன்னு நிறைய உறவு யாருமில்லாம வந்த எங்களுக்கு கிடைச்சுருக்காங்க. இதுல எங்களால எந்த சிக்கலும் குழப்பமும் வராம பார்த்துக்க வேண்டிய பொறுப்பு இருக்கு. அதை சரியா செய்வேன் அண்ணா!” என்றாள்.

 

    “நீ எதையுமே சரியா செய்வனு தெரியும் மா! ஆனா கதிரால நீ நிம்மதி இல்லாம இருக்க கூடாதுனு தான் நான் நினைக்கிறேன்.”, என ராம்குமார் கவலையாகக் கூறினான்.

 

    “கதிர எப்படி சமாளிக்கணும்னு எனக்கு தெரியும் அண்ணா! இப்போ கதிர் பிரச்சனை இல்லை. அதியோட இந்த மாற்றம் தான் எனக்கு பயம் தருது. அவன் பழைய மாதிரி மாற மாட்டானானு தான் இத்தனை நாள் ஏங்கிட்டு இருந்தேன். அவன் மாறி வர்ற இந்த நேரத்துல அதி கதிர்கிட்ட காட்ற நெருக்கம் தான் பயம் தருது.” என கூறும்போதே அவள் குரல் கமறியது.

 

    “எனக்கு புரியுது மா. அதிகிட்ட நாம இதை பேச முடியாது. கதிர்கிட்ட இதை பத்தி பேசுவோம். கதிருக்கு புரியும். கதிரையும் கண்டிச்ச மாதிரி இருக்கும்.”, என்ற ராம்குமாரின் முகத்தில் சிந்தனை ரேகைகள்.

 

    “கண்டிக்கறேன்னு கதிர சத்தம் போடாதீங்க அண்ணா! எனக்காக பேச போய் உங்களுக்குள்ள பிரச்சனை வந்துரக்கூடாது. முதல்ல நான் கதிர்கிட்ட பேசறேன். அது சரிவரலனா மட்டும் நீங்க பேசுங்க அண்ணா ப்ளீஸ்.”, என வேண்டுகோள் வைத்தாள்.

 

    “இல்லை மா…” என ராம்குமார் ஏதோ கூற வர,

 

    “அண்ணா! ப்ளீஸ் உங்க தங்கச்சியால இதை சரி பண்ண முடியும்னு நம்பிக்கை இருந்தா சரினு சொல்லுங்க. கதிர் உங்க மச்சான். எனக்காக நீங்க பேசப்போய் மாமன் மச்சான் உறவுல சிக்கல் வந்துரக்கூடாது. அப்படி எதுவும் நடந்தா அந்த குற்றவுணர்வ சமாளிக்கிற தெம்பும் தைரியமும் எனக்கு இல்லை அண்ணா!” என இடையிட்டு மனதிலிருக்கும் கவலையை அப்படியே சொற்களாக வெளிப்படுத்தினாள்.

 

    தங்கள் உறவில் சிக்கல் வந்திடக்கூடாது என இவ்வளவு அக்கறை படும் அவளின் பயத்தையும் கவலையையும் போக்க ஒரு அண்ணனாய் ஒன்றும் செய்யமுடியாத தன் இயலாமையை எண்ணி உள்ளே நொந்தான். அவளால் இதை சமாளிக்க முடியும் என்ற தன் நம்பிக்கையை அவளுக்கு நிரூபிக்க வேண்டிய சூழலில் சிக்கியிருப்பதை உணர்ந்து மட்டுமே சரியென்றான்.

 

    ராம்குமாரின் சரியென்ற ஒற்றைச் சொல் அவளது முகத்தில் நிம்மதியை தோற்றுவித்திருந்தது.

 

     “ரொம்ப நன்றி அண்ணா! எல்லாரும் தேடுவாங்க. நீங்க முதல்ல கீழ போங்க அண்ணா! நான் ரெண்டு நிமிஷத்துல வரேன்.” என கூறியவளை கவலையாக பார்த்த ராம்குமாரால் பெருமூச்சு மட்டுமே விட முடிந்தது.

 

     “சரி மா! சீக்கிரம் வா!” என்று ராம்குமார் கீழே சென்ற சில நிமிடங்களில் அவளும் கீழே சென்றிருந்தாள்.

 

     நிரஞ்சனும் அதியும் விளையாடிக் கொண்டிருந்தனர். சக்கரவர்த்தி உறங்கச் சென்றிருந்தார். மிருதுளாவும் கதிரும் வீட்டின் வெளியே நின்றிருந்தனர். ராம்குமார் தன் கைப்பேசியில் எதையோ பார்த்துக் கொண்டிருந்தான். 

 

     அதி வாசலுக்கு ஓட, நிரஞ்சன் அவன் பின்னேயே ஓட, அவர்கள் பின்னே சென்ற அழகியின் “அதி குட்டி” என்ற கண்டிப்பான குரலில் இருவரும் தேங்கி நின்றிருந்தனர். 

 

    “மணி என்ன ஆச்சுனு பார்த்தியா? கேக் கட் பண்ணி சாப்பிட்டு விளையாடியாச்சுல்ல. இன்னும் எவ்வளோ நேரம் விளையாடுவ. வா வந்து தூங்கு.” என அதிரனை தூக்கிக் கொண்டு திரும்பினாள்.

 

     மிருதுளாவும் கதிரவனும் ஏதோ பேசிக் கொண்டிருப்பது தெரிந்தது. ஆனால் என்ன பேசினார்கள் என்பது கேட்கவில்லை. கதிரின் முகத்திலிருந்த தீவிரமும் மிருதுளாவின் முகத்திலிருந்த கோபமும் முக்கியமான ஏதோ ஒன்றை பற்றி உரையாடுகிறார்கள் என்ற தெளிவை மட்டும் தந்தது. ஒரு கணம் இருவரையும் கண்ட அகவழகி பின் அக்கா தம்பிக்குள் ஆயிரம் இருக்கும் என்று அதிரனை இடுப்பில் இடுக்கிக் கொண்டு உள்ளே வந்தாள்.

 

     “அப்பாடி! அவன தூக்கிட்டு போய் தூங்க வை அழகி முதல்ல. இந்த நேரத்துலயும் எவ்வளோ சுறுசுறுப்பா இருக்கான். இவனோட ஓடி ஓடி எனக்கு பசியெடுத்தது தான் மிச்சம். கேக்க தவிர சாப்பிட எதாச்சும் இருக்கா அழகி?” என பாவமாக கேட்ட நிரஞ்சனை கண்ட அகவழகியின் அதரங்களில் மென்முறுவல் பூத்தது.

 

     “ஃப்ரிட்ஜ்ல மிச்சமான சப்பாத்தியும் கோழி குழம்பும் இருக்கு. இரு நான் இவன தூங்க வச்சுட்டு வந்து சுட வச்சு தரேன்.”, என அழகி கூற,

 

     “ஆஹா! இது போதும் தெய்வமே! நீயும் போய் தூங்கு நான் சுட வச்சு சாப்பிட்டுக்கிறேன். இந்த கதிர் பய உள்ள வரதுக்குள்ள சாப்பிட்டரணும் இல்லனா எனக்கும் பங்கு குடுனு கேப்பான்.” என்றபடியே அடுக்களைக்குள் ஓடிய நிரஞ்சனை கண்டு அகவழகியின் மென்முறுவல் புன்சிரிப்பாய் மாற்றம் கொண்டது.

 

      அகவழகியும் அதிரனும் உறங்க மாடிக்குச் செல்ல, ராம்குமாரும் உறங்க எழுந்துச் சென்றான். அவர்கள் சென்று வெகு நேரம் கழித்தே மிருதுளாவும் கதிரும் உள்ளே வந்தனர். 

 

    மிருதுளா விறுவிறுவென்று ராம்குமார் இருந்த அறைக்குள் சென்றிட, கதிர் சிந்தனையோடு கூடத்தில் உறங்கும் நிரஞ்சனின் அருகில் வந்து அமர்ந்தான்.

 

    இரவெல்லாம் சிந்தித்த கதிரவன் விடியும் வேளையில் தான் துயில் கொண்டான்.

 

     கதிரவன் அனைவரின் உடைகளையும் முதல் நாளே அங்கு தருவித்திருந்ததால், அனைவரும் எழுந்து குளித்து தயாராகினர். அழகி அதிரனுக்கு எடுத்திருந்த சிவப்பு சட்டையையும் வேட்டியையும் கதிரவன் மறக்காது எடுத்து வந்திருந்ததால், அதிரனை எழுப்பி குளிப்பாட்டி அவனுக்கு அதனை அணிவித்து விட்டு கீழே அழைத்து வந்நாள் அகவழகி.

 

     அதிரனின் உடை அவனுக்கு அழகாக இருப்பதாக அனைவரும் கூற, அதிரனின் முகத்தில் மகிழ்ச்சி படர்ந்தது. அனைவரும் தயாராகிய பின்பே எழுந்த கதிரவனும் விரைவாக தயாராகி வந்திருக்க, அனைவரும் அந்த ரிசார்ட்டிற்குள்ளேயே இருந்த கோவிலுக்கு சென்றனர்.

 

     சாமி தரிசனம் முடித்து கோவிலிலிருந்து நேராக அங்கிருந்த உணவகத்தில் காலை உணவை முடித்துக் கொண்டு, அங்கிருக்கும் அருவிக்கு ட்ரெக்கிங் செல்ல தயாராகினர். அதிரன், கதிரவன் எடுத்துக் கொடுத்த உடையை மாற்றிக் கொள்ள, அழகியும் மிருதுளாவும் கூட புடவையிலிருந்து வேறு உடைக்கு மாறியிருந்தனர். அங்கிருந்து ஜீப் மூலம் அடிவாரம் வரை சென்றவர்கள் பின் மலையேறத் தொடங்கினர்.

 

     செல்லும் வழியெல்லாம் கதிரவன், அதிரன் அங்கிங்கு ஓடிடாதபடி பேச்சிலேயே தன்னருகேயே இருத்திக் கொண்டதையும் அவ்வப்போது அவனுக்கு உண்ணுவதற்கும் நீரும் கொடுத்து அக்கறையாய் கவனித்துக் கொண்டதையும் அகவழகி கவனித்துக் கொண்டே வந்தாள். கதிரவன் அவளை கண்டுக்கொண்டது போல் தெரியவில்லை. அதிரன் மட்டும் அவ்வப்பொழுது அழகியிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டே வந்தான். கதிரவன், அதிரன் இருவரின் நெருக்கம் அழகிக்கு கவலை தருமே என்று அவ்வப்பொழுது ராம்குமார் அழகியை கவனித்துக் கொண்டே வர, ஆனால் அவன் கவலை தேவையற்றது என்பது போல் அவளது முகம் அமைதி நிறைந்துக் காணப்பட்டது. 

 

     ஒரு மணித்தியாலம் நடைபயணத்தின் பலனாக வெள்ளியாய் விழுந்த அருவியை கண்டு அனைவரின் நெஞ்சமும் கவலைகள் துறந்து உற்சாகம் கொண்டது. சக்கரவர்த்தி பாறை திட்டின் மேல் அமர்ந்துக் கொள்ள, ஆண்கள் மூவரும் அதிரனை கூட்டிக் கொண்டு அருவியில் தலை நனைக்க, பெண்கள் இருவரும் கவியை கரையோரம் ஆழமில்லாத இடத்தில் குளிப்பாட்டி விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்தனர். 

 

      சக்கரவர்த்தி கவியை வெகுநேரம் நீரில் குளிக்க வைக்க வேண்டாமென்று கூறவும் மிருதுளா கவியின் ஈரத்தை துவாலையால் துடைத்து வேற்றுடை மாற்றிவிட்டு சக்கரவர்த்தியிடம் கொடுத்துவிட்டு வர, அழகியும் மிருதுளாவும் அருவி விழும் இடத்தின் கீழ் போய் நின்றனர்.

 

      தலையில் விழும் நீரில் அனைத்தும் கரைந்தோடுவது போன்றதொரு உணர்வு அகவழகியின் முகத்தில் ஆர்பாட்டமில்லாத மகிழ்ச்சியை விதைத்திருந்தது. நீரில் நீந்தியபடி அவளை கண்ட கதிரவன் சில நிமிடங்கள் அவளை விழி அகற்றாது நோக்கினான். அவள் முகத்தில் தவழ்ந்த நிம்மதியும் மகிழ்வும் அவனின் இதற்கடையோரம் மென்னகையை மலர்வித்திருந்தன.

 

      போதும் போதும் எனும் வரை நீரில் விளையாடிவர்களுக்கு பசி வயிற்றைக் கிள்ளவும் தான் கரையேறினர். எடுத்து வந்திருந்த திண்பண்டங்கள் அவர்கள் பசியை போக்கத் தோற்றுப் போக, அனைவரும் மலைவிட்டு கீழிறங்கினர்.

      

     கீழே வந்ததும் உணவகத்தில் வயிறார உண்டுவிட்டு மரவீட்டிற்கு வந்து உடைமாற்றி உறங்கத் துவங்கியவர்கள் தான் மாலை தான் எழுந்தனர். மாலை மீண்டும் ஒருமுறை அதிரன் கேக் வெட்டினான். அப்பொழுது அதிரன், நிரஞ்சன் எடுத்து தந்த உடையை அணிந்திருந்தான். அன்றைய நாள் அவனுக்கு எவ்வளவு மகிழ்ச்சியை தந்திருந்தது என்பதனை அவனது முகமும் சிரிப்புமே கூறியிருந்தது. அதிரனுக்கு அது மறக்க முடியாத பிறந்தநாளாக மாறியிருந்தது. அகவழகிக்கும் தான்! 

 

      சிறிது நேரம் அங்கிருந்தவர்கள் தங்கள் உடைமைகளை எடுத்துக் கொண்டு மரவீட்டை காலி செய்துவிட்டு அங்கிருந்து கிளம்பினர். வழியிலேயே ஒரு உணவகத்தில் இரவு உணவை முடித்தனர். ராம்குமார், சக்கரவர்த்தி, மிருதுளா, கவி என நால்வரும் அவர்கள் இல்லத்திற்கு கிளம்ப, நிரஞ்சன் அவனது வாகனத்தில் புறப்பட்டான். கதிரவன் அழகியின் வண்டியை முன்பே ஆள் வைத்து அவள் வீட்டில் விட்டிருந்ததால் அவனே அகவழகியையும் அதிரனையும் அவளது இல்லத்தில் விட வந்தான். 

      

      வீட்டிற்கு வருவதற்குள் அன்றைய நாள் தந்த களைப்பில் அதிரன் உறங்கியிருக்க, அதிரனை மெத்தையில் கிடத்தி விட்டு வந்த அழகியிடம்,

      

     “நான் கிளம்பறேன் அழகி மா! எதாவது தேவைனா தயங்காம என்னை கூப்பிடு.” என்று கூறி கிளம்ப எத்தனித்தான் கதிரவன்.

 

     “ஒரு நிமிஷம் கதிர்! உன்கூட கொஞ்சம் பேசணும்.” என்ற அழகியின் சொற்களில் குறுஞ்சிரிப்போடு தேங்கி, திரும்பி அவளை நோக்கினான் கதிரவன்.

வருவாள்….

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்